Wednesday, March 17, 2010

இதோ, இதோ, அவள் எனை பதம் பார்க்கிறாள்

"அசோக், தண்ணி எடுத்துகிட்டு வந்துரேன்" என்று சொல்லிவிட்டு அவள் போனாள். அவள் போவதை பார்க்க கூடாது என்றுதான் நினைத்தேன், முடியவில்லை. அவள் நடந்து சென்றுக்கொண்டு இருந்தாள். இறுக்கமான சுடிதார், அந்த வளைவுகள் நெளிவுகள் எதோ செய்தன. அவளே சொல்லி இருக்கிறாள் "எனக்கு இந்த Jeans, T-Shirt’லாம் பிடிக்காது. அவை ரொம்ப expose பண்ணும்". Jean, T-Shirt’ல எப்படி இருப்பாள் என்று கற்பனை செய்து பார்த்தேன். இப்படிதான் இப்பொழுது எல்லாம் எதோ எதோ எண்ணங்கள் வந்துக்கொண்டே இருக்கின்றன. அவளே இன்று கேட்டுவிட்டாள் "அசோக், இப்பொழுதுலாம் நீ என்னை பார்த்தே பேச மாட்டேங்கிற !!".

இரண்டு டம்ளரில் தண்ணி எடுத்துக்கொண்டு எதிரே வந்து அமர்ந்து இருந்தாள். "நாளைக்கும் உன் கூடவே பைக்'ல வந்துரேன். Cab’ல வந்தா, அரை மணிநேரம் முன்னாடியே கிளம்ப வேண்டியதா இருக்கு".

நான் இதுவரை எந்த பெண்னையும் பைக்கில் அழைத்து சென்றது கிடையாது. முதல் முறை இவளை அழைத்து செல்லும் போதே ஒரு மாதிரி கூச்சமாகதான் இருந்தது. அதன்பின் பலமுறை அவளை அழைத்து சென்று இருக்கிறேன். ஆனால் அவை எல்லாம் மாலை நேரம்தான்.

இன்று Morning Shift என்பதால், காலை 5 மணிக்குகே எழுந்து குளித்துக்கொண்டு இருந்தேன். அப்பொழுதுதான் அவளிடம் இருந்து போன் வந்தது, "அசோக், இப்பதான் எழுந்தேன், அனேகமாக Cab Miss ஆயிடும்னு நினைக்கிறேன். நான் உன்கூட பைக்ல வந்துறேன்" என்றாள். அவள் என்னிடம் அனுமதிகூட கேட்கவில்லை. இந்தளவு உரிமையுடன் பேசுபவளிடம் எப்படி முடியாது என்பது. நானும் "சரி, ரெடியா இரு. நான் ஒரு இருபது நிமிடத்தில் வந்துவிடுவேன்" என்றேன்.

மார்கழி குளிரில், காலை ஆறு மணிக்கு, ஒரு பெண்னை பின்னாடி உட்கார வைத்துக்கொண்டு OMR ரோட்டில் போனால், எப்படி இருக்கும். நான் வைத்து இருப்பது கரிஸ்மா பைக். அதில் பின்சீட் 60 டிகிரியில் இருக்கும். பிரேக் போடும்போது பின்னாடி உட்கார்ந்து இருப்பவர்கள், வண்டி ஒட்டுபவர் மீது சாய்ந்தால் மட்டுமே கீழே விழாமல் தப்பிக்க முடியும். கரிஸ்மாவில் ஒரு பக்கம் மட்டும் காலை போட்டு உட்காரவும் முடியாது. அந்த OMR ரோட்டில், டோல்கேட்டுக்கு பக்கத்தில் ஒரு Speed-Breaker இருக்கிறது. Thermometer’யை அந்த நேரம் மட்டும் வைத்து பார்த்து இருந்தால், கண்டிப்பாக் நூற்றி ஜந்துக்கு மேல் காட்டி இருக்கும். அதுவும் அந்த டாம் பாய் perfume, அவளை ஆபிஸில் இறக்கிவிட்ட பிறகும் என் கூடவே வந்துக்கொண்டு இருப்பது போல் தோன்றியது.

இதுல நாளைக்கும் பைக்'ல வராளாம். எனக்கு இப்பொழுதே ஜன்னி வந்தது போல, உடம்பு எல்லாம் நடுக்கம் கண்டது.

நாளைக்கு என்ன பொய் சொல்லி அவளிடம் இருந்து தப்பிப்பது என்று, எனது கேபினில் அமர்ந்து யோசித்துக்கொண்டு இருந்தேன். "என்ன மச்சி, செட் ஆயிடுச்சு போல?" என்று சிரித்துக்கொண்டே குமார் கேட்டான்.

நான் அவனை குழப்பத்தோடு பார்த்தேன். அவனே "இன்னைக்கு காலை’ல பார்த்தேன், பைக்’ல இரண்டு பேரும் ஜோடியா வந்திங்க?"

"நீ வேற, Cab Miss ஆயிடுச்சாம். அதான் அழைத்து வந்தேன்".

"பார்த்து மச்சி, எல்லாமே இப்படிதான் ஆரம்பிக்கும்" என்றான்.

குமாரை பற்றி இங்கு கண்டிப்பாக சொல்லி ஆக வேண்டும். எனக்கு ஆபிஸில் நண்பர்கள் அதிகம் கிடையாது, நான் எல்லா விஷயங்களை பகிர்ந்து கொள்வது என்றால் அது குமாரிடம் மட்டும்தான். இவன் ஒருமுறை கூட என்னிடம் பொய் சொல்லியது கிடையாது. எனக்கே இது வியப்பாக இருந்தது. நான் எதாவது பொய் சொன்னாலும், "ஏன், மச்சி பொய் சொல்ற?" என்று சொல்லிவிட்டு அலட்டிக்கொள்ளாமல் போய் விடுவான். அவனிடம் பழகி பழகி கொஞ்ச நாட்களாக நானும் உண்மை மட்டும்தான் பேசி வருகிறேன். அந்தளவு என்னுள் மாற்றத்தை எற்படுத்தியவன் குமார்.

அடுத்தநாள், அவளை அழைக்க சென்ற போது, "தம்பி, உள்ளே வந்து காப்பி சாப்பிட்டு போகலாம்’ல?" என்று அவள் அப்பா உரிமையுடன் அழைத்தார். இதுவே எங்க ஊராக இருந்து இருந்தாள் "என்ன நடந்து இருக்கும்" என்று கற்பனை செய்து பார்த்தேன். பின்னாடி கொலைவெறியோடு ஒரு கும்பல் என்னை துரத்திக்கொண்டு வந்தது.

நானும் அவளும் உள்ளே நுழைவதற்கும், குமார் வருவதற்கும் சரியாக இருந்தது. "என்ன மச்சி, இன்னைக்கும் Cab miss ஆயிடுச்சா" என்று நக்கலாக கேட்டான்.

இந்த குமாரை பற்றி இன்னொரு விஷயம் உங்களிடம் சொல்லியாக வேண்டும். பெண்களின் பின்நவீனத்துவும் பற்றி ஒரு புத்தகம் எழுதும் அளவிற்கு பேசுவான். "பெண்கள் இப்படி கோணலாக நடப்பதற்கு காரணமே எல்லோரும் தன்னை பார்க்கவேண்டும் என்பதற்குதான். வலது காலை லேசாக Cross'ஆக வைத்து நடந்தால், எல்லாருக்கும் நடை நேராகவரும், அப்படிதான் நடக்க வேண்டும். ஆனால், இந்த பெண்கள் வேண்டும் என்றே இரண்டு காலையும் நேராக வைத்து நடக்கிறார்கள், அப்பொழுதுதான் பின்னழகு கூடுமாம்". இதை போல் பல விஷயங்களை குமார் சொல்வான், அவற்றை இங்கு எழுதினால், பின் இது போர்னோ கதையாக மாறிவிடும்.

சரி, கதைக்கு வருவோம்.

அடுத்த ஆறு மாதங்களில் சத்தியம், மாயாஜால், வி.ஜி.பி, மெரினா என்று சென்னையில் அனைத்து இடங்களையும் ஒன்றாக சுற்றினோம். இந்த ஆறு மாதங்களில், எங்கள் இருபத்தைந்து வருட வாழ்கை கதைகள் எல்லாவற்றையும் பேசி முடித்துவிட்டோம். சில நாட்களின் முடிவில் இனி பேசுவுதற்கு ஒன்றுமே இல்லாதது போல தோன்றும், ஆனால் அடுத்த நாள் காலையிலேயே அவளிடம் சொல்வதற்கு ஓராயிரம் கதைகள் காத்துக்கொண்டு இருக்கும். "உனக்கு பொது அறிவு அதிகம்" என்று அவள் பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறாள்.

இதைபோல் எனக்கு எல்லாமே தெரியும் என்று நம்பிக்கொண்டு இருக்கும் இன்னொருவன் குமார். அவன் எதை செய்வதற்கு முன்னாலும் என்னிடம் கருத்து கேட்காமல் செய்ய மாட்டான். நானும் எதாவது அவனிடம் பேசி சாமாளித்துவிடுவேன். "மச்சி 5800 மாடல் போன் வாங்கலாமா?, அந்த கம்பெனி சேர் வாங்கலாமா?, அந்த கம்பெனிக்கு resume அனுப்பலாமா?" என்று என்னிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பான். இது எல்லாம் பரவாயில்லை, போன வாரம் அவன் தோழிக்கு Dress வாங்க வேண்டுமாம், "எங்க வாங்குறது, என்ன கலர் வாங்கலாம்?" என்று எல்லாவற்றையும் என்னிடம் கேட்கிறான்.

சே, எனக்கு காதலிக்கதான் தெரியவில்லை என்று நினைத்தால், காதல் கதை எழுதுவதற்கு தெரியவில்லை. இந்த கதையில் இப்பொழுது இந்த குமாரை பற்றி ஏன் பேசவேண்டும். அவன் ஒரு மூனா கேனா, இனி அவனை பற்றி பேசவேண்டாம்.

மறந்தே போய்விட்டேன் இன்னும் அரைமணிநேரத்தில் அண்ணா நகர் diva'வில் அவள் எனக்காக காத்துக்கொண்டு இருப்பாள். நான் போக வேண்டும். நேற்று சத்தியம் தியேட்டரில் பத்து நிமிடம் காக்க வைத்தற்கே ஒரு மணிநேரம் திட்டினாள். அவள் திட்டிய அந்த ஒரு மணிநேரமும் அவள் டிரஸை தான் பார்த்துக்கொண்டு இருந்தேன். நேற்று அவள் Ghagra Dress போட்டு இருந்தாள். என்ன அழகு, நான் டிரஸை'யை சொல்லவில்லை, அவளை சொல்கிறேன்.

இப்பொழுது அதை போல், Ghagra Dress வாங்கதான் Diva போகிறோம். சரி நேரம் ஆயிடுச்சு. Bye bye.

Wednesday, March 10, 2010

பின்நவீனத்துவம் - ஒரு பார்வை

இப்பொழுது எல்லாம் எதாவது பேசும்பொழுது பின்நவீனத்துவம் என்ற வார்த்தையை நடுவில் சேர்த்தால்தான் நமக்கு நாலு விசயம் தெரியும் என்று நம்புகிறார்கள்.

பின்நவீனத்துவம் என்பதை ஆங்கிலத்தில் எப்படி உச்சரிக்கவேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. சிலர் "post-modernism" என்றும், சிலர் "existentialism" என்றும் சொல்கிறார்கள். எது சரியான வார்த்தை என்று என்னிடம் யாராவது சொன்னால் அவர்களுக்கு புண்ணியமாக போகும்.

பின்நவீனத்துவத்தை பற்றி சகா ஒருவன் எழுத சொன்னவுடனே, எனக்கு செம சந்தோஷம். நமக்கும் நாலு விசயம் தெரியும் என்று ஒருவன் நம்புகிறானே என்று.

எப்படியாவது எல்லாருக்கும் புரிவதை போல எழுதிவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதை எழுத தொடங்கினேன். உங்களுக்கு புரிகிறதா?? இல்லையா?? என்பதை படித்த பிறகு நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

முதலில் நவீனத்துவம் என்றால் என்ன??. தற்பொழுதைய காலத்திற்க்கு ஏற்றவாறு, நாம் மாற்றம் அடைவது நவீனத்துவம். இந்த மாற்றம் அறிவியல், தோற்றம், எண்ணங்கள் என்று ஏது சம்மந்தமாகவும் இருக்கலாம். இந்த மாற்றங்களால், எற்படும் பாதிப்புகளை பற்றி மிகவும் விரிவாக பார்பதே பின்நவீனத்துவம். அந்த பாதிப்புகளை பற்றி ஒரு வாக்கியத்தில் சொல்லாமல், மிகவும் ஆளமாக அதை பற்றி எடுத்து சொல்வதே பின்நவீனத்துவம. இது ஒரு எடுத்துக்காட்டு மட்டும்தான். மற்றவர்களிடம இருந்து மாறுப்பட்டு சிந்திப்பது என்று கூட சொல்லாம். அல்லது இப்படிகூட சொல்லலாம், ஒரு மாற்றத்தால் எற்படும் நன்மைகளை பற்றி சொல்வது நவீனத்துவம், அந்த மாற்றத்தால் எற்படும் பாதிப்புகளை பற்றி தீவிரமாக ஆராய்வது பின்நவீனத்துவம்.

பின்நவீனத்துவம் பற்றி சிந்திப்பவர்கள் pessimist என்றால் அது முற்றிலும் தவறு. உலகத்தில் உள்ள மக்கள் அனைவராலும் ஏற்றுகொள்ளபட்ட கருத்துக்கள் என்று எதுவும் இல்லை. பெரும்பாண்மையான மக்களால் ஏற்று கொள்ளபட்ட கருத்துகளே சரியான கருத்துகள் என்ற ஒரு மாயை உருவாகியிருக்கிறது. எதனால் அந்த கருத்துக்களை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, என்று யோசிப்பது இல்லை. இந்த மாற்று கருத்துகளைப் பற்றி விரிவாக அலசுவதும் பின்நவீனத்துவம்தான்.

அதற்காக மாறுபட்டு சிந்திக்கபடும் அனைத்துமே பின்நவீனத்துவம் என்று சொல்லிவிட முடியாது.

"ஜே ஜே சில குறிப்புகள், ஜீரோ டிகிரி" ஆகிய இரண்டும் தமிழின் மிக சிறந்த பின்நவீனத்துவ புத்தகங்கள். " ராஸலீலா, கோபாலபுர கிராமம், உபபாண்டவம்" போன்றவை மாறுபட்ட எழுத்து நடையை கொண்டாலும், அவை பின்நவீனத்துவ புத்தகங்கள் அல்ல.

எஸ்.ராவின் "கடவுளின் குரலில் பேசி" என்ற சிறுகதை எனக்கு மிகவும் பிடித்த பின்நவீனத்துவ சிறுகதை. அந்த சிறுகதையை இங்கே படிக்கலாம்.

http://www.moderntamilworld.com/illakiyam/story_ramakrishnan.asp

"ஆயிரத்தில் ஒருவன்" வித்தியாசமான கதை கொண்ட திரைப்படம் என்றாலும், அந்த ஒரு சில வித்தியாசமான காட்சிகளை வைத்து அது பின்நவீனத்துவ திரைப்படம் என்று சொல்லிவிட முடியாது. குத்துப்பாட்டு, ஹீரோயிஸம், ஓவர் பில்டப் கொண்ட ஒரு கமர்ஸியல் திரைப்படம் என்பதே சரி. "கற்றது தமிழ்" ஒரு பின்நவீனத்துவ திரைப்படம். இந்த திரைப்படத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை நவீனம் என்ற மாயத்தால் ஒரு மனிதன் அடையும் இன்னல்களை தெளிவாக சொல்லி இருப்பார்கள்.

ஆங்கிலத்தில் பின்நவீனத்துவ புத்தகங்கள் பல உள்ளன. ஆங்கில புத்தகங்களை நானே குத்துமதிப்பாகவே அர்த்தம் புரிந்து படிப்பதால், அதை பற்றி இங்கு பேசவேண்டாம். இத்துடன் பின்நவீனத்துவ கட்டுரை முடிவு பெறுகிறது. இது கடந்த இரண்டு வருடங்களாக நான் படித்து புரிந்துகொண்டது.

இது தவறு, இது பின்நவீனத்துவம் அல்ல என்று யாராவது சொன்னால், அவர்கள் சொல்வதையும் கேட்பதற்க்கு தயாராக இருக்கிறேன். பின்நவீனத்துவம் பற்றி படித்தும், அதை பற்றி விவாதிக்கும் போதுதான் அதன் சரியான அர்த்தம் நமக்கு புலப்படும். ஏனென்றால் பின்நவீனத்துவம் என்பது ஒரு feelings. புரிகிறதோ இல்லையோ, தொடர்ந்து அதை பற்றி படியுங்கள், தொடந்து விவாதியுங்கள், கண்டிப்பாக ஒருநாள் நமக்கு அந்த feelings கிடைக்கும். எனக்கு லா.சா.ரா சொன்ன ஒன்று நினைவில் வருகிறது

"புரிந்தது, புரியாதது இந்த இரண்டு நிலைகளுக்கும் உண்மையிலேயே என்ன வித்தியாசம் இருக்கிறது? இரண்டுமே தற்காலிக நிலைகள். ஒருவருக்கு ஒருவிதமாகப்படுவது, அடுத்தவருக்கு வேறு விதமாகப்படுகிறது. அதே ஆளுக்கே வேறு சமயத்தில் வேறு விதமாகப்புரிகிறது. அட, கடைசிவரை புரியாமல் இருந்தால்தான் என்ன? இருந்துவிட்டுப் போகட்டுமே".

**************************************

எப்படியாவது என் சொந்த அனுபவங்கள் எதுவும் இல்லாம ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று நினைத்தால், அதற்க்கு வாய்ப்பே இல்லை போல. இந்த கட்டுரையில் பாருங்கள் எத்தனை இடங்களில் சொந்த அனுபவங்கள் புகுந்து விளையாடுகின்றன என்று. ஆங்கில புத்தகங்களை நானே குத்துமதிப்பாக அர்த்தம் புரிந்து படிப்பதாக சொன்னேன் அல்லவா, அப்படிதான் ஒரு புத்தகதில் பல இடங்களில் "I Have Lust On You" என்ற வாக்கியம் வந்தது. அதுவும் ஒரு வயதான கிழவி, ஒரு பதினைந்து வயது பையனிடம் சொல்வாள். கதை கொஞ்சம் Decent'ஆக இருந்ததால், அந்த வாக்கியத்துக்கு அர்த்தம் ஏதோ "ஒரு வித ஈர்ப்பு" என்று நானே யூகித்து கொண்டேன். அடுத்த நாள் ஒரு பெண்ணுக்கு எனது ஆங்கில புழமையை காட்டுவதற்காக "I Have Lust On You" என்று SMS அனுப்பிவிட்டேன். அடுத்த இரண்டு நாட்கள் அவள் என்னிடம் சரியாக பேசவில்லை. வேற எதோ பிரச்சனையால்தான் பேச மாட்டேங்கிறாள் என்று நினைத்தேனே தவிர, அந்த SMS'யை சுத்தமாக மறந்துவிட்டேன். பின்னர் அவள் சொல்லிதான் அதன் அர்த்தம் எனக்கு புரிந்தது. நல்லவேளை அடுத்தமுறை ஒரு கட்டுரையில் dildos'யை பற்றி நானே எதுவும் யூகிக்காமல், , Googleல் அர்த்தம் பார்த்துவிட்டேன்.

Saturday, March 6, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா - "i am crazy about you"

காதல், காதல், காதல் இதை தவிர இந்த திரைப்படத்தில் வேறு ஒன்றுமே இல்லை. காதல் படம் என்றாலே அதில் சண்டைக்காட்சிகள் , ஒரு குத்துபாட்டு, ஹீரோவுக்கு நண்பனாக ஒரு காமெடியன், இப்படி இவை எல்லாம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் தமிழ்சினிமாவில் உருவாகிவிட்டது. இதை கெளதம் இந்த திரைப்படத்தில் உடைத்துவிட்டார்.

திரைப்படம் முடிந்தவுடன், "மச்சி, இதே மாதிரி எனக்கும் நடந்து இருக்குடா!!" என்று என் நண்பன ஒருவன் சொன்னான். நீங்கள் இதுவரை யாரையாவது காதலித்து இருந்தாள், கண்டிப்பாக இந்த திரைப்படம் "உங்களின் உண்மை கதை".

"இந்த உலகத்துல எவ்வளவோ பொண்ணுங்க இருக்கும் போது நான் ஏன் ஜெசிய லவ் பண்ணேன்...??".

இதில் ஜெசிக்கு பதிலா உங்கள் காதலியின் பெயரை போட்டால் இது உங்கள் கதை.

படம் முழுவதும் சிம்புவும், த்ரிஷாவும் மட்டுமே ஆக்கிரமித்து இருக்கிறார்கள். ஒரு தெளிந்த நீரோடை போல படம், மிகவும் மெதுவாக செல்கிறது. ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை கதை எங்கும் திரும்பாமல், காதல் என்ற ஒரே கோட்டில் செல்கிறது. இதை போல் Slow moving movies தமிழுக்கு புதியது, ஆகவே பலருக்கு இந்த திரைப்படம் பிடிக்காமல் போகலாம்.

சிம்பு திரைப்படத்தின் ஆரம்பத்தில் பேசும் வசனம்

" காதல் என்பது, அதுவா நமக்கு நடக்கனும்.. நம்மளப் போட்டு தாக்கனும்... நம்மள அப்படியே தலகீழா திருப்பி போடனும்...அது எனக்கு நடந்துச்சு ".

அதே போலவே இந்த திரைப்படம் முதல் அரைமணி நேரத்திலேயே நம்மை போட்டு தாக்கிவிடுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை படத்திற்க்கு இன்னொரு ப்ளஸ்.

நவயுக காதல் எல்லாம் உடலை மையபடுத்தியே வருகின்ற என்பதை நாசுக்காக சொல்லியிருக்கிறார்கள்

----------------------------------------------------------------------------

இப்பொழுது எல்லாம் தமிழ் திரைப்படம் பற்றி கருத்து சொல்லவே பயமாக இருக்கிறது. இப்படிதான் நண்பன் ஒருவன் "ஆயிரத்தில் ஒருவன்" பற்றி கருத்து கேட்டான். நான் படம் ரொம்ப மோசம், சுத்தமாக பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டேன். அதற்க்கு அவன் ஒரு மணிநேரம் அட்வைஸ் கொடுத்தான். " உங்களை போன்றவர்களுக்கு வேட்டைக்காரன் போன்ற திரைப்படங்கள்தான் பிடிக்கும். இதனால்தான் தமிழ் சினிமா ரொம்பவும் பின்னோக்கி இருக்கிறது. செல்வராகவன் எப்படி ஒரு மாஸ்டர் பீஸை உருவாக்கியிருக்கிறார்". இப்படி அவன் பேசிக்கொண்டே போனான்.

என்னை பொருத்தவரை, ஆயிரத்தில் ஒருவன் ஒரு மசாலா திரைப்படம் மட்டுமே. சோழர்களை இந்தளவு இழிவாக சித்தரிக்க காரணம் என்ன என்பது எனக்கு கடைசிவரை புரியவே இல்லை.

சிலர் இது தமிழின் "முதல் பின்நவீனத்துவ திரைப்படம்" என்று சொல்கிறார்கள். நான் இதுவரை பார்த்து உள்ள ஒரே தமிழ் பின்நவீனத்துவ திரைப்படம் "கற்றது தமிழ்" மட்டுமே.

Thursday, March 4, 2010

இது கற்பனை அல்ல

பூமியில் இருந்து 100 ஒளி ஆண்டுகள் தூரத்தில் ஒரு கிரகம் இருக்கிறது. அங்கும் மனிதர்களை போன்றவர்களே வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களை மனிதர்கள் என்று ஒருபொழுதும் சொல்லிக்கொள்வது இல்லை. தாங்கள் யார் என்று அறிந்து கொள்வதற்கும் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை.

அங்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசத்தை உடல் அளவிலேயே கண்டார்கள். அவர்கள் தங்கள் உடல்களை எதை கொண்டும் மூடவில்லை, எனவே அங்கு யாரும் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகவில்லை.

யாரும் யாருக்கும் கட்டளைகள் இடவில்லை, இதனால் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற பிரச்சனை எழவில்லை. தங்களுக்குள் கருத்துகளை பரிமாறி கொள்ள அவர்கள் நினைத்தது இல்லை, இதனால், மொழிகளின் தேவை அவர்களுக்கு சுத்தமாகவே இல்லாமல் போனது.

மொழிகள் இல்லாததால், காவியங்கள், கவிதைகள், கதைகள் என்று எதுவும் தோன்றவில்லை. கவிதைகள் தோன்றாததால், அவர்கள் மனது குழப்பம் அடைவது இல்லை. கதைகள் இல்லாததால், அங்கு பொய்களுக்கு இடமே இல்லை.

அவர்கள் நெருப்பை கண்டார்கள், தண்ணிரை கண்டார்கள், மரத்தை கண்டார்கள், பெண்களை கண்டார்கள், ஆனால் அவற்றின் மூலத்தை அறிந்துகொள்ள அவர்கள் விரும்பியது இல்லை.

நிலத்தை பார்த்தார்கள், ஆகாயத்தை பார்த்தார்கள், நட்சத்திரதை பார்த்தார்கள், எரிகல்களை பார்த்தார்கள், ஆனால் அவைகளை உரிமையாக்கிகொள்ள அவர்கள் எண்ணவே இல்லை.

இயேசு, நெப்போலியன், லெனின், ஐன்ஸ்டைன், ஹிட்லர் போன்றவர்கள் அங்கேயும் நிறைய தோன்றினார்கள். ஆனால், தங்களை நீருபித்து கொள்ள அவர்களுக்கு எந்த ஒரு கட்டாயமும் எற்படவில்லை. இதனால் புகழ்ச்சி, புரட்சி என்ற வார்த்தைகள் தோன்றவே இல்லை.

அங்கு சுவர்களே இல்லை, எனவே அவர்கள் மற்றவர்களிடம் எதையும் மறைக்கவில்லை. அவர்கள் இருளை பார்த்து பயப்படவில்லை. எனவே அவர்களுக்கு நெருப்பும், ஒளியும் தேவைபடவில்லை. அவர்கள் இறப்பை நம்பவே இல்லை. ஆகவே, அவர்களுக்கு பயமே இல்லை.

அவர்கள் சந்தோஷமாகவே வாழ்ந்தார்கள். உங்களையும் என்னையும் விட பல மடங்கு சந்தோஷமாகவே வாழ்ந்தார்கள்.

இந்த கிரகம் கற்பனை கிரகம் அல்ல. ஏனென்றால், அங்கு கற்பனையில் இருந்து உருவாக்கபட்ட எந்த பொருளும் இல்லை.

நாம் வாழ்வதுதான் கற்பனை உலகில். "மொழி, நடை, உடை" என்று நம்மோடு இருக்கும் எல்லாமே, கற்பனையில் இருந்து தோன்றிய உலகில்.

அவன் கதை எழுதுகிறான்

Writing is the only thing that, when I do it, I don't feel I should be doing something else - Gloria Steinem

எப்பொழுதும் எல்லாராலும் தவறாகவே புரிந்துகொள்ளப்படும் ஒரு மனிதன், ஒரு கதை எழுதுகிறான். அவனுக்கு நன்றாகவே தெரியும் அந்த கதையும் தவறாகவே புரிந்துகொள்ளப்படும் என்று.

அவன் முன்னர் போல் இப்பொழுது எல்லாம் ஒரு கதையை முன்னரே யோசித்து எழுதுவது கிடையாது. கதை எழுதும்பொழுது தோன்றும் வார்த்தைகளை வைத்தே கதைகளை உருவாக்குகிறான். அவன் என்னதான் எழுதினாலும், படிப்பவர்கள் தங்களுக்கு தேவையான வார்த்தைகளை மட்டுமே தேடிக் கண்டுபிடிக்கிறார்கள். அந்த வார்த்தைகளே அவனைப் பற்றி தவறாக புரிந்துகொள்வதற்க்கு போதுமான ஆதாரமாக உள்ளது.

தன்னைப் பற்றி தவறாக புரிந்துகொண்டவர்களிடம், தன்னைப் பற்றி புரியவைப்பதற்காக அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகள், ஒருமுறைகூட இதுவரை வெற்றி பெற்றது இல்லை. இருந்தாலும் அவன் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறான். அப்படி அவன் கடைசியாக முயன்ற ஒரு முயற்சியிலும் தோல்வி அடைந்த விரக்தியில், தன் பதிவுகளை எல்லாம் அழித்துவிட்டான். இப்படி இவன் அழிப்பது இது இரண்டாவது முறை. ஆனால், சென்ற முறையை போல் இந்தமுறை அவன் நகல் எடுவும் வைத்துக்கொள்ளவில்லை.

எல்லா பதிவுகளும் அழிக்கபட்ட இந்த இரண்டுவார காலத்தில் யாருமே இதைப்பற்றி அவனிடம் விசாரிக்காதது அவனுக்கு எந்த விதத்திலும் வியப்பை தரவில்லை. மற்றவர்களை பற்றிதான் புரிந்து வைத்துக்கொண்டதற்கான வெற்றியாகவே இதை கருதினான்.

எப்பொழுது இருந்து தான் தவறாக புரிந்துகொள்ளப்பட்டோம் என்று ஒரு முறை அவன் நினைத்து பார்க்கிறான். தன் சிறுவயது முதலே இவ்வாறுதான் அவன் தவறாகவே புரிந்துகொள்ளபடுகிறான். அவன் தங்கைகள் அவனைப்பற்றி தவறாக புரிந்துகொண்ட போது தான் வித்தியாசமானவன் என்பதை நிருபித்து விட்டதாகவே கருதினான். கல்லூரியில், அவன் முதல் காதலி இவனை தவறாக புரிந்துகொண்ட போது, அது ஒரு ஆரமபம் என்பது அவனுக்கு தெரியவில்லை. கடைசியில் தன் நண்பர்களே அவனை தவறாக புரிந்துகொண்டபோதுதான் அவனுக்கு அவனைப்பற்றியே சந்தேகம் வரத்தொடங்கியது.

முதலில் எழுத்தின் மூலம் தன் சந்தேகங்களை தீர்த்துகொள்ளலாம் என்று அவன் நினைத்தான். கதைகள் எழுதினான், கவிதைகள் எழுதினான், தன்னை பற்றி எழுதினான், தன் காதல்களை பற்றி எழுதினான். ஆனால் இவை அவனுக்கு மேலும் சந்தேகங்களைதான் எற்படுத்தியது. இப்பொழுதும் ஒரு சந்தேகத்தோடு அவன் அந்த கதையை எழுதிக்கொண்டு இருக்கிறான். ஆனால், அந்த சந்தேகம் எதைப்பற்றியது என்று அவனுக்கே விளங்கவில்லை.

Wednesday, March 3, 2010

சாரு, நித்யா, நான்

"இப்பொழுது சாருவுக்கு தேவை, அவருடைய காயங்களுக்கு மருந்து அளிக்கும் வார்த்தைகள்தான். உங்களால் மருந்தை தரமுடியாவிட்டாலும் பரவாயில்லை, தயவுசெய்து அவர் காயத்தை அதிகரிக்காதீர்கள்."

இனிமேல் உயிரே போனாலும் இந்த வலைப்பதிவு பக்கமே வர கூடாது என்று நினைத்து இருந்தேன். ஆனால் இப்பொழுது நான் அமைதியாக இருந்தால் பின் எப்பொழுதும் என்னால் இதைப்பற்றி எழுத முடியாது.

நான் எனது பதிவுகள் அனைத்தையும் அழித்து இரண்டுமாதங்கள் ஆக போகிறது. "ஏன் எழுதுவது இல்லை??" என்று யாரும் என்னிடம் கேட்கவும் இல்லை. இப்படிபட்ட so called fans இருக்கின்ற என்னாலயே எதையும் வெளிப்படையாக எழுத முடியவில்லை என்றால், சாரு போன்ற எழுத்தாளர்கள் நிலைமையை கொஞ்சம் நினைத்து பாருங்கள்.

எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் முதலில் இருப்பவர் சாரு. அதைபோல் எனக்கு பிடிக்காத எழுத்தாளர்களில் முதலில் இருப்பதும் சாருதான். எனென்றால் சாருவால் இரண்டுவித extreme'லயும் எழுத முடியும். கதைளை தேடி அவர் எங்கும் போவது இல்லை. அவர் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களையே கதையாக எழுதுகிறார். "காமரூப கதைகள்" காரணமாக அவர் தற்கொலை வரை சென்றுஇருக்கிறார் என்றால், அவர் எந்தளவு வெளிப்படையாக எழுதுகிறார் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். செக்ஸ், காமம் என்று நாம் பேசவே அச்சபடும் வார்த்தைகளை, அவரால் சுலபமாக தனது வாழ்க்கையில் நடக்கும் விசயங்களுடன் வெளிப்படையாக எழுத முடிகிறது. மற்றவர்கள் மனதை காயப்படுத்தும் வார்த்தைகள் மட்டுமே கெட்ட வார்த்தைகள் என்று எனக்கு புரியவைத்தவர் சாரு. சாருதான் என் மனதிலும், தோன்றத்திலும் பல மாற்றங்களை எற்படுத்தியவர் என்பதை பலரிடம் பெருமையுடன் சொல்லி இருக்கிறேன்.

மனதில் உள்ளதை வெளிப்படையாக எழுதுவதால் எற்படும் பிரச்சனைகளை, சாரு தொடர்ந்து சந்தித்து கொண்டுதான் வந்தார்.

சாருவின் எழுத்தை கடந்த இரண்டு வருடங்களாகவே தொடர்ந்து படித்து வருகிறேன். கடைசி நான்கு மாதங்களாக அவர் நித்யானந்தாவை புகழ்ந்து கட்டுரைகள் எழுதிக்கொண்டு வந்தார். இவைதான் இப்பொழுதைய பிரச்சனை.

"சன் பிக்சர்ஸ்" பெருமையுடன் வழங்கிய அந்த சீன் படத்தை பார்த்து தமிழகமே அதிர்ச்சியில் உள்ளது. இத்தனை நாட்களாக தாங்கள எமாற்றபட்டு உள்ளோம் என்பதை விட, "ஆர்" என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் அந்த நடிகையில் பெயர் என்னவாக இருக்கும் என்பதை பற்றிதான் மிகவும் தீவிரமாக பேசிக்கொண்டனர்.

எல்லாரும் எமாந்ததை போலவே சாருவும் எமாந்து இருக்கிறார். அனைவரையும் உடனே நம்பிவிடும் சாரு, நித்யானந்தாவிடம் கொஞ்சம் அதிகமாகவே எமாந்துவிட்டார், மிகவும் அதிகமாகவே அவரை பற்றி புகழ்ந்தும் எழுதிவிட்டார். நித்யானந்தா செய்த துரோகத்தை சாருவால் கண்டிப்பாக தாங்கி கொள்ளமுடியாது. இதை பற்றி கண்டிப்பாக சாரு தற்பொழுது வருத்தபட்டுக்கொண்டு இருப்பார்.

இப்பொழுது சாருவுக்கு தேவை, அவருடைய காயங்களுக்கு மருந்து அளிக்கும் வார்த்தைகள்தான். உங்களால் மருந்தை தரமுடியாவிட்டாலும் பரவாயில்லை, தயவுசெய்து அவர் காயத்தை அதிகரிக்காதீர்கள்.

ஒரு எழுத்தாளனை பற்றி சாரு சொன்னது நினைவில் வருகிறது. "என்னுடைய எமாற்றங்கள் மற்றும் தனிமையை நான் எழுத்தால் கடந்துவிட்டேன், பாவம் அவனுக்கு எழுத்தால் கடக்க முடியவில்லை, தற்கொலை செய்துக்கொண்டு விட்டான்." நித்யானந்தாவின் துரோகத்தின் காரணமாக சாரு எழுத்தின் தீவிரம் இன்னும் அதிகமாகும் என்று நம்புவோம்.