Monday, May 24, 2010

தேவதைகள் இல்லாத ஊர்

ஒரு சமூக அறிவியல் வகுப்பில்,
கடைசி பென்ச்சில் அமர்ந்து
எங்கள் ஊரின் தேவதைகள் பட்டியலை
உருவாக்கினோம்.

எங்கள் ஊரின் முதல் தேவதை
காணாமல் போனபோது,
நாங்கள் பத்தாம் வகுப்பு பொதுதேர்வு
எழுதிக்கொண்டு இருந்தோம்.

சங்கர் "எனக்கு அப்பொழுதே தெரியும்,
ஒரு நாள் கடற்கரையில்
ஜோடியாக பார்த்தேன்" என்றான்.

எங்கள் ஊரின் இரண்டாவது தேவதை
காணாமல் போனபோது,
எங்கள் கணித வாத்தியாரும்
காணாமல் போய் இருந்தார்.

பனிரெண்டாம் வகுப்பில்
கணிதத்தில் மதிப்பெண் குறைந்ததற்க்கு
இதுதான் காரணம் என்று
அனைவரையும் நம்ப வைத்தோம்.

எங்கள் ஊரின் முன்றாவது, நான்காவது தேவதைகள்
காணாமல் போனது,
கல்லூரி விடுதியில் தங்கி படித்துக்கொண்டு
இருந்த எனக்கு சில நாட்கள் கழித்தே தெரிந்தது,

இதன் பின்னர் தேவதைகள் யாரும்
காணாமல் போகவில்லை.
ஆனால், எங்கள் ஊர் தேவதைகள் கடத்தப்பட்டார்கள்.

"தேவதைகள் கடத்தப்படுகிறார்கள்"
என்று நாங்கள் கூச்சலிட்டதை ஊர்மக்கள்
யாருமே கண்டுகொள்ளவில்லை.
மாறாக பூக்கள் தூவி தேவதைகளை
வழியனுப்பினார்கள்.

எங்கள் ஊரின் கடைசி தேவதை அகல்யா
முதிர்கன்னியாக சென்ற மாதம்
தற்கொலை செய்துகொண்ட போது,
அவள் வயது 34.

இப்பொழுது தேவதைகள் இல்லாத ஊரில்,
தேவதைகளை பற்றி
எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

Friday, May 14, 2010

உறவுகள்

"தான் நேசிக்குமளவு தன்னை மகள் நேசிக்கிறாளா என்ற கேள்வி எல்லா அப்பாக்களின் மனதிலும் இருந்து கொண்டேயிருக்கிறது போலும். உண்மையில் இது ஒரு ஆதங்கம். தன்னை போல வேறு ஒருவர் தன் மகளை நேசிக்க முடியாது என்ற உரிமை கொண்டாடுவது. அது முழுமையான நிஜமில்லை என்று தெரிந்த போதும் அந்த மனவலி தாங்க முடியாதது. ஆயிரம் வருசத்திற்கும் மேலாக இருந்து வரும் அப்பா மகள் உறவின் பிணைப்பு எளிய சொற்களால் புரிந்து கொள்ள முடியாதது" - எஸ். ராமகிருஷ்ணன்.

முழு கட்டுரை : http://www.sramakrishnan.com/view.asp?id=405&PS=1

இந்த கட்டுரையில் எஸ்.ரா, தந்தைக்கும் மகளுக்கு உள்ள உறவை பற்றி பேசுகிறார்.

ஒரு தந்தைக்கு மகளுக்கு உள்ள உறவு, விசித்திரமானது. அது யாராலும் எளிதாக விவரிக்க முடியாது.

எனது அக்கா, அப்பாவின்தோளில் கைப்போட்டு தெருவில் நடந்து சென்ற நாட்கள், என் நினைவில் எப்பொழுதும் இருக்கிறது. அவர்கள் நண்பர்களை போல்தான் பழகினார்கள். ஆனால் அதே மகள், "தான் ஒருவரை விரும்புகிறேன், அவரைதான் திருமணம் செய்வேன்" என்று சொல்லியபோது, என் அப்பாவால் அதை தாங்கி கொள்ள முடியவில்லை. கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார். எப்படியும் தன் மகள், தன் பேச்சைதான் கேட்பாள் என்று நினைத்தார், அக்காவின் மனதை மாற்ற எவ்வளவோ பேசி பார்த்தார்.

தன்னைவிட யாராலும் தன் மகள் மீது இந்தளவு அன்பு செலுத்த முடியாது என்று எண்ணிக்கொண்டு இருந்த என் அப்பாவிற்கு, அது ஒரு பெரிய எமாற்றம்தான். கடைசியில் என் அக்காவே ஜெயித்தாள். அவர்கள் திருமணம் என் அப்பாவின் சம்மதத்தோடு இனிதே நடைப்பெற்றது. உண்மையில் சொல்ல போனால், இது என் அப்பாவின் வெற்றியே.

திருமணம் முடிந்து, கணவர் வீட்டுக்கு அக்கா செல்லும் போது, என் அப்பாவும் அக்காவும், கட்டிப்பிடித்து அழுத காட்சி ஒன்றே போதும், அவர்களின் பாசத்தையும் உறவையும் சொல்வதற்க்கு.

தன் மகளுக்குகாக தன்னுடைய கொள்கையை மாற்றிக்கொண்டார். தன்னையே மாற்றிக்கொண்டார். இதன் காரணமாகவே நான் என் அப்பா மீது வைத்து இருந்த மரியாதை பலமடங்கு உயர்ந்தது.

தந்தைக்கும் மகளுக்மான உறவு எல்லா காலங்களிலும், எல்லா தேசங்களிலும் ஒரே மாதிரிதான் இருந்து இருக்கிறது, இருந்துகொண்டும் இருக்கிறது. இதை எஸ்.ரா, தன் "லியரின் மகள்" கட்டுரையில் தெளிவாக சொல்கிறார்.

Thursday, May 13, 2010

ஒரு எதிரி உருவான கதை

உங்களால் மட்டுமே எனக்கு
உதவ முடியும்
என்று நம்பிக்கொண்டு இருந்தேன்.

எங்கள் முதல் சந்திப்பில்,
முதல் பேச்சில்,
முதல் புன்னகையில்,
முதல் சண்டையில்,
முதல் பேச்சுவார்த்தையில்,
எல்லாவற்றிலும் நீங்களும்
இருந்தீர்கள்.

பல நேரம் அமைதியாக பார்த்துக்கொண்டு
இருந்தீர்கள்,
சில நேரம் உள்ளே புகுந்து
உங்களால் ஆனவற்றை
நடித்து காட்டிக்கொண்டு இருந்தீர்கள்.

எப்பொழுதும் என்னுடனே இருந்த உங்களுக்கு,
ஒரு நொடிகூடவா தோன்றவில்லை
"எனக்கு உதவி தேவை" என்று.

கடைசியாக,
நீங்களே எனக்கு வில்லனாக மாறியதை
இன்னும் என்னால்
நம்ப முடியவில்லை.

கேட்காத உதவிகளும் எதிரிகளை
உருவாக்கும் என்பதை
இப்பொழுது புரிந்து கொண்டேன்.

Friday, May 7, 2010

So what?

இப்பொழுது எல்லாம் அசோக்கிற்க்கு எதைப் பற்றி பதிவு எழுதுவது என்றே தெரியவில்லை. "இனிமேல், சொந்த அனுபவங்களை பதிவாக எழுத மாட்டேன்" என்று அவளிடம் சத்தியம் செய்ததில் இருந்துதான் இந்த பிரச்சனை. நமது வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மட்டுமே புனைவுகளாக எழுத முடியும் என்று நம்புகின்றவன் அசோக். அவன் போய் இப்படி ஒரு சத்தியம் செயதால், பின் எப்படி அவனால் பதிவுகள் எழுத முடியும்.

கற்பனை கதைகளை எழுத அசோக் முயற்சி செய்தான், சிலவற்றை பதிவும் செய்தான். அவை எல்லாம் சுறா திரைப்படதை விட கேவலமான தோல்வியில் முடிந்தது. எஸ்.ராவின் "நகுலன் வீட்டில் யாரும் இல்லை" என்ற புத்தகதை படித்து முடித்த அன்றே அவன் எழுதிய கதைதான் "எது கற்பனை". அந்த கதையை எழுதி முடித்த பிறகு, அதை எஸ்.ராவிற்க்கு மெயில் அனுப்பலாம் என்று நினைத்தான். அந்த அசம்பாவிதம் மட்டும் நடந்து இருந்தால், எஸ்.ரா தற்கொலைக்கு முயற்சி செய்து இருப்பார். அசோக்கின் நண்பன் பேரின்பா எப்பொழுது சொல்வான், "நீ, மற்றவர்களின் பாதிப்பு டா". அது உண்மைதான் போல.

அடுத்து அவன் எழுதிய "இதோ, ஒதோ" கதையும் நூறு சதவீதம் கற்பனை கதைதான்.ஆனால், பலர் அதை நம்ப மறுத்து விட்டார்கள். ராகுல் மட்டும்தான் சரியா கண்டுபிடித்தான் "machi, ur girl is missing da" என்றான்.

இந்த அசோக்கிற்க்கு எப்பொழுதும் ஒரு பிரச்சனை உண்டு, தான் சொல்ல நினைப்பதை சரியாக சொல்ல தெரியாது. இந்த மொக்கை பதிவை இவ்வளவு நேரம் படிக்கும் உங்களுக்கே இது நன்றாக தெரிந்து இருக்கும். எதை பற்றி சொல்ல நினைக்கிறானோ, அதை தவிர்த்து மற்ற அனைத்தை பற்றியும் பேசுவான் என்று. இப்பொழுது கூட பாருங்கள் அவன் சொல்ல வந்தது அந்த nikkle'யை பற்றிதான். அசோக்கின் வலைபதிவை ஒருவர் பொறுமையாக படிப்பதே பெரிய விசயம், அதிலும் படித்துவிட்டு ஒருவர் பின்னூடம் எழுதியிருந்தால் அவர் எந்தளவு பொறுமைசாலியாக இருப்பார். nikkle'னின் பின்னூடத்திற்க்கு பதில் அளிக்கிறேன் என்று சொல்லி அந்த பொறுமைசாலியை tension ஆக்கிட்டான் இந்த அசோக். நல்லவேளை இப்பொழுது இருவருமே சமாதானம் அடைந்து நண்பர்களாக மாறிவிட்டார்கள்.

இந்த பின்னூடம் பற்றி சொல்லும் போது, இந்த சுப்புரமணியை பற்றி சொல்லியே ஆகவேண்டும். அசோக்கின் எல்லா பதிவுக்கும் பின்னூடம் அளிக்கும் ஒரே மனிதன் இந்த சுப்புரமணி மட்டும்தான். அசோக், அந்த சத்தியத்திற்க்கு பின் எதை பற்றி எழுதுவது என்று தெரியாமல் ஒரு பாடலின் வரிகளை பதிவாக போட்டான். அந்த பதிவுக்குகூட சுப்புரமணி பின்னூடம் போட்டு "super" என்றான். அப்படிபட்ட நல்ல உள்ளம் படைத்தவன் சுப்புரமணி. அசோக் சொஞ்ச நாட்களுக்கு முன்னால் தன் வலைபதிவில் இருந்து எல்லா பதிவுகளையும் அழித்த போது, அசோக்கைவிட சுப்புரமணி ரொம்ப வருத்தப்பட்டான். எனென்றால் "அவனுடைய எல்லா பின்னூடங்களும் அழிந்து விட்டதாம்."

நம்ம அசோக் அவளிடம் சத்தியம் செய்த பிறகு, வலைப்பதிவில் என்ன எழுதுவது என்று தெரியாமல், இரவு 10 மணி அளவில் குப்புறபடுத்து யோசனை செய்து கொண்டு இருந்தான். மின்சாரம் நின்று விட்டது. மீண்டும் 11க்கு தான் வரும். சென்னையிலாவது பாராவாயில்லை, தினமும் இரண்டு மணிநேரம்தான் மின்சாரம் கட், நீடாமங்கலம் பக்கம் வந்து பாருங்கள். இரண்டு மணிநேரம்தான் மின்சாரம் இருக்கும். சட்டசபையில் தாத்தா சொல்கிறார் "தமிழக்கத்தில் மின்சார பஞ்சமே இல்லையாம்". அரசியல் இங்கே வேண்டாம் பாஸ். நாம் அசோக்கின் கதைக்கே போவோம் என்கிறீர்களா??. கதையா, அவ்வளவுதான் கதை முடிந்துவிட்டது. இதைதான் அசோக் இந்த வாரம் வலைபதிவில் எழுத போகிறான். என்ன தலைப்புதான் கிடைக்கவில்லையாம்.

பின் அந்த சத்தியம் என்ன ஆச்சு?? என்கிறீர்களா. நானும் அதைதான் அவனிடம் கேட்டேன். அதற்க்கு அசோக் சொன்ன பதில் " so what ??". கடைசியாக தலைப்பும் கிடைச்சாச்சு.