Thursday, December 29, 2011

இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் - V

 ஒரு கதையை எங்கே ஆரம்பிப்பது என்பதில் எனக்கு எப்பொழுதும் குழப்பம் இருந்துக்கொண்டேதான் இருக்கிறது. அந்த சூட்சமத்தை தெரிந்துக்கொள்ள எத்தனையோ கதைகள் படித்தாகிவிட்டது. ஆனால், இன்னும் கதைகளின் ஆரம்பத்தை என்னால் சரியான முறையில் யூகிக்க முடியவில்லை. நீங்கள் நினைப்பது போல் ஒரு கதையை அதன் முடிவிலிருந்தே ஆரம்பிப்பது சரியான யுக்திதான். நானும் அப்படிதான் சில கதைகளை ஆரம்பித்தேன், சில மாதங்களுக்கு முன்னால், ஒரு காதல் கதையை, அந்த கதையின் முடிவான காதலனின் தற்கொலையிலிருந்து ஆரம்பித்தேன். படித்தவர்கள் அனைவரும் அது ஒரு தன்னிரக்க கதை என்கிறார்கள். இதாவது பரவாயில்லை, ஒரு ஆணுக்கு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் நட்பைப் பற்றிய கதையை நான் ஆரம்பித்த இடம், படுக்கையறை. இந்த கதையைப் படித்தவர்கள் என்னை ஒரு கேவலமான பார்வையில் பார்க்கிறார்கள். அவர்களிடம் "எனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை, இது கதை மாந்தர்களின் இயல்பு" என்று விளக்கம் சொல்லவும் முடியாது. ஏனென்றால், என்னிடம் இருப்பதே நான்கு கதாபாத்திரம்தான், அவர்களையும் குற்றம் சொல்லிவிட்டால் பின்னர் யாரை வைத்து நான் கதைகளை எழுதுவது??

ஒரு கட்டத்தில் கதையை அதன் முடிவிலிருந்து ஆரம்பிப்பது என்ற யுக்தியை கைவிட்டேன். அதன் பின்னர்தான், கதையை நடுவிலிருந்து ஆரம்பிப்பது என்று முடிவு செய்தேன். ஆனால் அதிலும் சில பிரச்சனைகள் வந்தன. நடுவிலிருந்து ஆரம்பிக்கும் கதையை முன்னோக்கி நகர்த்துவதா இல்லை பின்னோக்கி நகர்த்துவதா என்ற குழப்பம். ஒருவேளை கதையை முன்னோக்கி நகர்த்தினால், அதற்கு முன்னால் நடந்தவற்றை குறிப்பாக சொல்லலாம். ஆனால் அப்படி சொல்வதால், நான் ஒரு பக்கமே எழுதும் கதைகள் இன்னும் சுருங்கி அரைப் பக்கம் வந்து நின்றன. பின்னர் எப்படிதான் ஒரு கதையை ஆரம்பிப்பது???

கடைசியாக நான் இன்னொரு யுக்தியை கையில் எடுத்தேன், ஒரு கதையை கட்டுரை மாதிரி தொடங்கி, பின்னர் நடுவில் எங்காவது கதையை நுழைத்து விடுவது. இப்பொழுது கூட பாருங்கள், இது அசோக்கைப் பற்றிய ஒரு கதைதான், ஆனால் படிப்பவர்கள் இதை ஒரு கட்டுரை என்றே நினைப்பார்கள்.

1 comment:

rishvan said...

நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com