Tuesday, May 31, 2011

ஒரு குறுஞ்செய்தி

Keep the end very short otherwise memories will burn you
its true, i am burning by life.

மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தேன். சங்கரிடமிருந்து வந்த குறுஞ்செய்தி அது. சங்கர் எனக்கு குறுஞ்செய்தி அனுப்புவது மிகவும் அரிது. சொல்லப்போனால், அவன் யாருக்குமே  குறுஞ்செய்தி அனுப்புவதில்லை. "ஏன்டா, யாருக்கும் SMS அனுப்புவதில்லை" என்று கேட்டால், "அது உனக்கு சொன்னாலும் புரியாது" என்பான்.

தற்பொழுது மணி இரவு ஒன்று. இன்னொருமுறை அந்த குறுஞ்செய்தியைப் படித்துப் பார்த்தேன். இந்நேரத்தில், ஏன்? இதை அவன் நமக்கு அனுப்பவேண்டும். அந்த இரண்டு வரிகளில் உள்ள அர்த்தம் என்னை  ஏதோ செய்தது. அந்த கடைசி வரி "its true, i am burning by life", அங்கு "burning myself" என்றல்லவா வந்திருக்க வேண்டும். ஆனால், இதுவும் நன்றாகதான் இருந்தது "burning by life".

எனக்கு சங்கரை  சின்ன வயதிலிருந்தே நன்றாக தெரியும். நானும் அவனும் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை  ஒன்றாகப் படித்தோம். அவன் வீடு முதலில் மஞ்சக்கொல்லையில்தான் இருந்தது, அவன் அம்மா கிணற்றில் விழுந்து இறந்த பின், அவன் அப்பா அவனையும் அவன் தங்கையும் அழைத்துக்கொண்டு எங்கள் ஊரிலிருக்க்கும் புதியக் கடற்கரை சாலைக்கு வந்துவிட்டார்.

"Keep the end very short" என்று இவன் எதைச் சொல்கிறான்??. நம் மனித வாழ்க்கையைப் பற்றி சொல்கிறானா?? சங்கர் கவிதைகள் எழுத கூடியவன் அல்ல, தான் சொல்லவருவதை எப்பொழுதும் நேராகச் சொல்லியே பழக்கப்பட்டவன். எது சரி என்று படுகிறதோ அதை தைரியமாக செய்பவன். அவனால் எப்படி இதை  எழுதமுடிந்தது???..Opera Mini பிரவுசரை ஓபன் செய்து,  கூகுள் உதவியுடன் அந்த வாக்கியங்களைத்  தேடிப்பார்த்தேன். அந்த வாக்கியத்தை எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவனே எழுதியதுதான், அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

அவனுக்கு நான் குறுஞ்செய்தி அனுப்பினேன். "என்ன இது??" என்று. பத்து நிமிடங்கள் காத்திருந்தும் அவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. எனக்கு தெரியும் அவன் கண்டிப்பாகப் பதில் அனுப்பமாட்டான் என்று. அவன் பதில் அனுப்பியிருந்தால்தான் ஆச்சரியம். இதற்க்குமேலும் காத்திருப்பது முட்டாள்தனம் என்று கருதி,  அவனுக்கு போன் செய்தேன். கடைசி ரிங் அடித்து முடிக்கும்போதுதான் எடுத்தான். நன்றாக தூங்கியிருப்பான் போல்,  தூக்கக்கலக்கத்தில் பேசினான். "ஒண்ணுமில்லை, சும்மாதான் போன் செய்தேன், நாளை  போன் செய்கிறேன்" என்று சொல்லி போனை  வைத்துவிட்டேன்.

என்னால் அந்த குறுஞ்செய்தியிலிருந்து வெளிவர முடியவில்லை. "Otherwise Memories Will Burn You" அற்புதமான வரிகள், நினைவுகள்தான் நம்முடைய முதல் எதிரி,  நாம் எதை  மறக்க நினைக்கிறோமோ அவை மீண்டும் மீண்டும் நம் நினைவில் வந்துக்கொண்டேயிருக்கும். "நீ  எதை  மறக்க நினைக்கிறாய்??" என்று யாராவது என்னிடம் கேட்டால், நான் சொல்வேன் "எல்லாவற்றையும்". ஆம் எல்லாவற்றையும். நினைவுகள் இல்லை  என்றால் நமக்கு எந்த ஒரு கவலையும் இல்லை.

எதற்க்காக அவன் இந்த குறுஞ்செய்தியை எனக்கு அனுப்பவேண்டும். ஒரு சொல்லமுடியாத ஒரு துக்கம் அந்த இரண்டு வரிகள் இருக்கிறது. சென்ற  வாரம் நான் அவனை ஊரில் சந்தித்தப்போது கூட மிகவும் உற்சாகமாகதான் இருந்தான். "ஜெ, கருணாநிதி,  சீமான், சிதம்பரம், ராம், வெற்றிமாறன், பின்லேடன் மற்றும் எங்கள் பள்ளி நாட்கள்" என்று எல்லாவற்றைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். 
கல்லூரியில் ஒரு பெண்ணை காதலித்ததாக சொல்வானே அவளை நினைத்து அனுப்பியிருப்பானா?? எப்பொழுதோ இறந்த அம்மாவை  நினைத்து அனுப்பினானா??.

ஒருவேளை  வேலையில் எதாவது பிரச்சனையா?? அதற்க்கு வாய்ப்பே இல்லை, அண்ணாமலை கல்லூரியில் வாத்தியார் வேலை. வாத்தியார் வேலையில் கூட பிரச்சனைகள் வருமா என்ன?? அதுவும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில். பின் எதற்க்காக அந்த குறுஞ்செய்தியை எனக்கு அனுப்ப வேண்டும். சென்றமுறை நாங்கள் சந்தித்தப் போது, நாற்பது வருடங்கள் முன்னால் கருணாநிதிக்கு அண்ணாமலை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியதாகவும், அதை  எதிர்த்த மாணவர்களில் ஒருவன் மர்மமான முறையில் இறந்ததாகவும் சொன்னான். அவன் அடுத்து சொன்னதுதான் என்னை தூக்கிப்போட்டது, "அந்த மாணவனின் அப்பாவே இறந்த மகனின் உடலைப்பார்த்து அது தன் மகன் இல்லை  என்று வாக்குமூலம் அளித்தார்" அவன் அந்த கடைசி வாக்கியத்தை  சொன்னபோது, அவன்  கண்கள் சிவப்பாகியிருந்தது. ஏற்கனவே ஆறு அடி உயரம் இருக்கும் அவன். தோள்களை தூக்கிக்கொண்டு இதை சொன்னப்போது எங்கள் ஊர் விஷ்வரூப விநாயகர் போல் காட்சியளித்தான்.

மீண்டும் படித்தேன்.

Keep the end very short otherwise memories will burn you
its true, i am burning by life.


ஒருவேளை  அவன் என்னைப்பற்றி எதாவது சொல்ல நினைக்கிறானா?? எனது கைகள் தானாகவே கொஞ்சம் நடுங்க தொடங்கியது. எனக்கு வியர்க்க ஆரம்பித்தது. என்னுடைய பிரச்சனைகள் அவனுக்கு தெரியும் என்கிறானா?? அவனுக்கு ஆறாவது அறிவு மிகவும் அதிகம், யாரின் முகத்தை  பார்த்தே அவர்களின்  பிரச்சனை  அனைத்தையும் சொல்லிவிடுவான். என்னை ஊரில் பார்க்கும் போதெல்லாம் சொல்வான் "ஏன் மச்சி?டல்லாக இருக்கே??" "இல்லை ,இல்லை" என்று எத்தனை முறை சொன்னாலும் கேட்கமாட்டான். இதற்க்காகவே அவனை  பார்க்கும் போதெல்லாம் தேவையில்லாமல், இயல்பாக இருப்பது போல் நான் நடிக்க தொடங்கினேன்.

அவனிடம் சொல்லும் அளவுக்கு எந்த ஒரு பிரச்சனையும் எனக்கு இல்லை என்பதுதான் உண்மை. இந்த இரவில், தேவையில்லாமல் ஒரு குற்றவுணர்ச்சி மனதில்  ஓடத் தொடங்கியது. எப்பொழுது தூங்கினேன் என்றே தெரியவில்லை.

இரண்டு மாதங்கள் கழித்து ஊரில் நானும் சங்கரும் சந்தித்தபோது அந்த குறுஞ்செய்தியைப் பற்றி அவனிடம் கேட்க நான் மறந்துப்போனேன் அல்லது அப்படி நினைத்துக்கொண்டேன். அவன் எதற்காக அந்த குறுஞ்செய்தியை  எனக்கு அனுப்பினான் என்பது இன்னும் எனக்கு புதிராகவே உள்ளது.

Monday, May 30, 2011

படித்ததில் பிடித்தது

சமீபத்தில் Facebook'ல் மனுஷ்ய புத்திரன் எழுதியது...
*****************************************************

ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ

பாரதியின் இந்த வரிகளைப் படிக்கும்போதெல்லாம் அவர் மனித மனதின் விசித்திரமான ஒரு இயல்பை எவ்வளவு நுட்பமாக சொல்கிறார் என்ற வியப்பு மேலிடுகிறது. நம் வாழ்கையில் சில நிமிடங்கள் பழகிய ஒருவரின் முகம் பிறகு எப்போதோ துல்லியமாக நினைவுக்கு வருகிறது. ஆனால் நம்மோடு பலவருடங்கள் நெருங்கி வாழ்ந்த ஒருவரின் முகத்தை சட்டெனெ நினைத்துக்கொண்டால் மூட்டமான காட்சிதான் மிஞ்சுகிறது. 2 ஆம் வகுப்பில் என்னோடு படித்த ஒரு பையனின் முகம் இவ்வளவு வருடங்களுக்கு பிறகும் நினைவில் இருக்கிறது. ஆனால் எனது 20 ஆம் வயதில் இறந்துபோன அம்மாவின் முகத்தை எவ்வளவு நினைவுபடுத்திப் பார்த்தாலும் ஏதோ ஒரு சாயல்தான் மனதில் தோன்றுகிறதே தவிர அந்த முகத்தை மீட்க முடியவில்லை. ’நேசம் மறக்கவில்லை எனில் நினைவு முகம் மறக்கலாமோ? என்ற பாரதியின் கேள்வியில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. நம் மனம் தீவிரமான அன்பையோ காதலையோ அடையும்போது மனித உடல் மறைந்து அது வேறொரு ரூபத்தில் நமக்குள் உருக்கொண்டு விடுகிறது. அதனால்தான் ஆசை முகம் நினைவுக்கு வர மறுக்கிறது. நினைவும் மறதியும்தான் நம் வாழ்க்கையின் மொத்த சாரமுமே இல்லையா?.
 

Saturday, May 28, 2011

நீங்கள் அவனை கடவுள் என்பீர்கள் - III

நான்காவது சந்திப்பு 

எனக்கும் கடவுளுக்குமான நான்காவது சந்திப்பு இன்று அதிகாலை சாந்தி காலனி சாலையில் நடந்தது. இதற்க்கு முன்னர் நடந்த எல்லா சந்திப்புகளிலும் அவன் தன்னை கடவுள் என்று  அறிமுகம் செய்துக்கொண்டதால், நானும் அவனை கடவுள் என்றே அழைக்கத் தொடங்கினேன். எங்கள் பழைய சந்திப்புகள் நடந்த இடங்கள் எதுவும், எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. நான்  மறைமலை நகரில் வசித்தபோது, ஒருமுறை எனது அறையை தட்டாமல் அவன் உள்ளே நுழைந்ததாக ஞாபகம். ஆனால் தெளிவாகத் தெரியவில்லை.

அவனுடைய வருகையின் போதெல்லாம் நான் சோகத்தில் மட்டுமே இருந்திருக்கிறேன். ஆனால் இந்தமுறை அப்படியில்லை. அவனின் தற்பொழுதைய வருகை எனக்கு ஆச்சரியத்தையும், சந்தேகத்தையும் தந்தது.

வழக்கம் போல், இந்த சந்திப்பும் அமைதியாகதான் ஆரம்பித்தது. அந்த அதிகாலையில், நடைப்பயிற்சி செய்துக்கொண்டிருந்த யாருமே எங்களைக் கண்டுக்கொள்ளவில்லை. அவனின் முதல் வார்த்தைக்காக நானும்,  என்னுடைய முதல் வார்த்தைக்காக அவனும் காத்துக்கொண்டிருந்தோம். அவன்தான் முதலில் ஆரம்பித்தான்,

"உன்னை இங்கு நான் எதிர்ப்பார்க்கவில்லை" என்றான்.

"நானும் தான்"  என்றேன்.

"இன்னும் நான் கடவுள் என்பதில் உனக்கு சந்தேகம் இருக்கிறதா??" என்றான்.

அவனுக்கு நன்கு தெரிந்திருந்தது, "எந்த மாதிரி கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல தயங்குவேன் என்று". நான் பேச்சை  மாற்றும் நோக்கில் "இப்பொழுதுலாம் நடைப்பயிற்சி செய்ய நிறைய பேர் வருவதாக சொன்னேன்". நாங்கள் இருவரும் பேசிக்கொண்டே இரண்டாவது அவென்யூ நோக்கி நடக்க தொடங்கினோம்.

என்னிடம் கேள்விகளை  அடிக்கிக்கொண்டே  போனான். என்னைப் பற்றி எல்லாம் தெரிந்தவன் என்பதை அவன் நிரூபிக்க விரும்பினான். தற்பொழுது நான் காதலிக்கும் என்னுடைய  நான்காவது காதலியைப் பற்றி விசாரித்தான். "நீ மீண்டும் ஏமாறப்போகிறாய். எனக்கு உன்னுடைய எல்லா காதல்கதைகளும் தெரியும்" என்றான். "இதில் என்ன விஷேசம் இருக்கிறது, என்னுடைய வலைப்பதிவைப் படிப்பவர்கள் அனைவருக்குமே என்னுடைய எல்லாக் காதல் கதைகளும் தெரியும்" என்றேன்.

"சென்ற வாரம் நாகூரில் நீ சந்தித்த அந்த எழுத்தாளர் உன்னை எந்தளவு பாதித்து உள்ளார் என்பதும் எனக்கு நன்கு தெரியும்" என்றான். "அவன் எழுத்தாளனே இல்லை, அவன் ஒரு ஏமாற்றுக்காரன்" என்றேன்.

ஒரு பெட்டிக்கடையில் சாய்பாபா படம் கொண்ட ஒரு தினசரி விளம்பரம் தொங்கிக்கொண்டிருந்தது.

அவனிடம் "சென்ற மாதம் ஒரு சாமியார் செத்தாரே  அது நீ இல்லையா??" என்றேன். அவன் சிறிது யோசித்தான். இப்பொழுது என் நேரம், இனி அவனை நான் கேள்விகளால் துழைக்கவேண்டும்.

மீண்டும் கேட்டேன் "அவன் இறந்தது உனக்கு தெரியும் தானே??"

"எனக்கு தெரியாது"

"எல்லா செய்திதாள்களிலும் போட்டு இருந்தார்களே"

"நான் செய்திகள் படிப்பதில்லை"

"முதலில் இறந்தது நீ தான், என்று நினைத்துவிட்டேன்"

"எனக்கு மரணம் இல்லை"

"அவனும் இதைதான் சொன்னான்" என்றேன்.

அவனுடைய செல்போன் சிணுங்கியது. Galaxy மாடல் போன், அவனுடைய உள்ளங்கையை விட பெரிதாக இருந்தது.

"நேரமாகி விட்டது, இன்று நான் கார் கொண்டு வரவில்லை, விரைவாகப் போகவேண்டும், காத்துக்கொண்டிருக்கிறாள். மீண்டும் உன்னை சந்திக்கிறேன்" என்று சொல்லி எனக்கு எதிர்ப்புறம் நடக்க தொடங்கினான்.

சிறிது நேரம் கழித்து நான் திரும்பி பார்க்கையில் ஒரு பெண்ணொருத்தி'யுடன் அவன் கைக்கோர்த்து நடந்துக்கொண்டிருந்தான். தொலைவிலிருந்து பார்க்கும் போது, அவள் எனது பழைய காதலிகளில் ஒருத்தியைப் போல் இருந்தாள்.

Monday, May 23, 2011

Push, Pull மற்றும் சில தமிழ் திரைப்படங்கள்

இந்தமுறை தமிழ் திரைப்படங்களுக்கு 13 தேசியவிருதுகள். அதில் சன் பிக்சர்ஸ் தயாரித்த "ஆடுகளம்" திரைப்படத்திற்க்கு மட்டும் ஆறு விருதுகள். அதே நிறுவனம் தயாரித்த சென்ற ஆண்டின் மாபெரும் திரைப்படத்திற்க்கு இரண்டு தேசியவிருது. தேசிய விருது வாங்க எல்லாவித தகுதியும் "ஆடுகளம்" திரைப்படத்திற்க்கு இருக்கிறது. சன் பிக்சர்ஸ் யாரையும் மிரட்டியோ, பணம் கொடுத்தோ வாங்கியிருக்க தேவையில்லை. ஒருவேளை  அப்படி செய்திருந்தால் அது இந்தத் திரைப்படத்திற்க்குதான் கேவலம். என்ன செய்ய?? இப்பொழுது எல்லாவற்றையும் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. 

தேசியவிருதுகள் பெற்ற "தென்மேற்க்கு பருவ காற்று" மற்றும் "நம்ம கிராமம்" திரைப்படங்களைப் இன்னும் பார்க்கவில்லை. எல்லா  திரைப்படங்களையும் DVDயில் வைத்திருக்கும் நண்பன் ஒருவனிடம் சொல்லி வைத்திருக்கிறேன். ஷாஜி இரண்டு மாதங்களுக்கு முன்னால் "தென்மேற்க்கு பருவகாற்று" திரைப்படத்தைப் பாராட்டி உயிர்மையில் ஒரு கட்டுரை  எழுதியிருந்தார். அப்பொழுதே அந்த திரைப்படத்தை  பார்க்க நினைத்தேன், பின் வரிசையாக தமிழில் வெளிவந்த சில சூப்பர் ஹீட் திரைப்படங்கள் காரணமாக அதை மறந்துவிட்டேன்.




எங்க தலைவர் மிஷ்கினின் "நந்தலாலா"  திரைப்படத்திற்க்கு ஒரு விருதும் கிடைக்கவில்லை. அதை நினைத்து எனக்கு கொஞ்சம் வருத்தமே. கண்டிப்பாக அடுத்த வருடம் "யுத்தம் செய்" திரைப்படத்திற்க்கு கிடைக்கும். நம்புவோம்.

நான் சிம்புவின் ரசிகனாக மாறிக்கொண்டிருக்கிறேனா?? என்று பயமாகயிருக்கிறது. ஏனென்றால், எனக்கு "வானம்" திரைப்படம் பிடித்திருந்தது.  அந்த கடைசி இருபது நிமிடங்களைத் தவிர்த்துப் பார்த்தால் வானம் ஒரு நல்ல திரைப்படம். 

கடன் தொல்லையிருந்து மீண்டு குழுந்தையைப்  படிக்கவைக்க ஒரு குடும்பத்துக்கு நாற்பது ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. இன்னொரு பக்கம், தன் காதலியுடன் புதுவருட இரவை  கொண்டாட ஒருவனுக்கு நாற்பது ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது.  மற்றொரு பக்கம், புது வருடத்திலிருந்து சொந்தமாக விபச்சார தொழில் செய்யபோகிறாள் ஒருவள், அன்றைய இரவின் விலை  நாற்பது ஆயிரம் ரூபாய். "Economic inequality"க்கு இது ஒரு சிறந்த உதாரணம். இதைதான் சமீபத்தில் நமது சுப்ரீம் கோர்ட்டும் சொல்லியது "பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா, ஏழைகளுக்கு ஒரு இந்தியா என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று. வானம் திரைப்படத்தில் சிம்பு, அனுஷ்கா இருவரின் நடிப்பும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இன்னும் இதே போல் இரண்டு படங்கள் சிம்பு நடித்தால் அவரின் ரசிகனாக நான் மாறுவது உறுதி.




"எவன்டி உன்னை பெத்தான்" பாடலை  சிம்புவே எழுதி உள்ளார். அதில் வரும் சில வரிகள்

என் Facebook Statusசும் நீதான்,
என் Tweeter Twitting நீதான்,
.........................
என் BBMமும் நீதான், என் Facetimeமும் நீதான்...

எப்படி சிம்பு சார்?? எப்படி??.. தயவுசெய்து "வள்ளவன், மன்மதன்" போல் எந்த திரைப்படமும் இனி எடுக்காமல் இருங்கள்.. நீங்கள் எங்கேயோ போலாம் சிம்பு சார்.

"எவன்டி உன்னை பெத்தான்" பாடலை  தொடர்ந்து சிம்புவின் அடுத்த அமர்க்களம் "போடா போடி" திரைப்படத்தில் வரும் "லவ் பண்ணலாமா?? வேண்டாமா??" இதுதான் இப்பொழுது என்னுடைய Favourite. (பாடல் கீழே)

வானம் திரைப்பட ஆரம்பத்தில் முஸ்லீமாக வாழ்வதால் எற்படும் பிரச்சனைகளைப் பற்றி அருமையாகச் சொல்லியிருந்தாலும், கடைசி இருபது நிமிடங்களில் சொதப்பிவிடுகிறார்கள். முஸ்லீம்களுக்கு மட்டும்தான் வெடிக்குண்டு தயாரிக்க தெரியுமா என்ன??. கோ, வானம் இந்த இரண்டு திரைப்படங்களும் சொல்லும் ஒரு கருத்து, தீவிரவாதி = மூஸ்லிம் & நக்சலைட் = ஹிந்து. கிறிஸ்துவர்கள் யார் என்று இதைப் படிக்கும் நீங்கள் கேட்கலாம். அவர்கள் வழக்கம் போல் அப்பாவிகள்.

இந்த மாதத்தில் நான் பார்த்த இன்னும் இரண்டு திரைப்படம் "அழகர்சாமியின் குதிரை மற்றும் எங்கேயும் காதல்" அழகர்சாமியின் குதிரை  நல்ல திரைப்படம்தான் என்றாலும் எந்த காட்சியும் மனதில் நிக்கவில்லை, எங்கேயும் அழுத்தமும் இல்லை. இதாவது பராவாயில்லை, மற்றொரு திரைப்படமான "எங்கேயும் காதல்" திரைப்படமே இல்லை.

முன்னர் எல்லாம் ஹரிஸ் ஜெயராஜ் சார், இரண்டு படங்களுக்கு இடையே அதிக இடைவெளி தருவார். குறைந்தது ஆறு மாதங்களாவது இருக்கும். அந்த ஆறு மாதங்கள் புதிய ட்யூன்களைத் தேடுவதற்க்காகயில்லை, அவரின் பழைய டியூன்களை மக்கள் மறப்பதற்க்காக என்பது நாம் அனைவருக்கும் அறிந்ததே. அவரின் கோ மற்றும் எங்கேயும் காதல் அடுத்தடுத்து வந்ததால், எந்த பாடல் எந்த திரைப்படம் என்பதை  கண்டுபிடிக்க மிகவும் கடினமாக உள்ளது. எனக்கு Pushக்கும் Pullக்கும் எப்பொழுதும் குழப்பம் இருந்து கொண்டேயிருக்கும். தள்ள வேண்டிய இடத்தில் இழுப்பதும், இழுக்கும் இடத்தில் தள்ளுவதும் நான் செய்யும் அன்றாட வேலைகளில் ஒன்று. ஆனால், இப்பொழுது "Push, Pull"யை விட "கோ மற்றும் எங்கேயும் காதல்" பாடல்கள்தான் என்னை அதிகம் குழப்புகிறது.

"என்ன வாழ்க்கடா இது"

Sunday, May 1, 2011

கோ



”கே.வி.ஆனந்த் சார், தயவு செய்து இனி திரைப்படங்கள் எதுவும் நீங்கள் எடுக்க வேண்டாம்”. கோ திரைப்படம் பார்த்தவுடனே இப்படிதான் எழுத நினைத்தேன். ஆனால் கொஞ்சம் யோசித்து பார்த்ததில் தமிழில் எத்தனையோ இயக்குநர்கள் எப்படி எப்படியோ கண்றாவியாகத் திரைப்படம் எடுக்கும் போது, நீங்கள் எடுக்கலாம் தவறே இல்லை. ஆனால், கொஞ்சம் யோசித்து நல்ல திரைப்படமாக எடுக்கவும்.

பத்திரிக்கை துறையில் வேலை பார்த்ததாக சொல்லபடும் கே.வி ஆனந்த் சாரும், சுபா சாரும் நக்சல்கள் பற்றி ஒன்றுமே தெரியாமல் எடுத்திருக்கும் திரைப்படம்தான், “கோ”. எதுக்கு சார் நக்சல்களை இவ்வளவு கேவலப்டுத்த வேண்டும். நீங்கள் சொல்லும் நக்சல்களுக்கான இலக்கணம் மிகவும் புதியதாக உள்ளது. நக்சல்கள் உங்கள் மீது மான நஷ்ட வழக்கு போட்டாலும் ஆச்சர்யம் அடைவதற்கில்லை.

கே.வி சார்,  ”கோ” திரைப்படம் பார்வையாளர்களிடம் ஒரு சிறிய எழுச்சியை எற்படுத்துகிறது. நம் தமிழ்மக்கள் எப்பவும் உண்ர்ச்சிகளுக்கு கட்டுப்பட்டவர்கள். அதைப்போல் மறதியும் உடையவர்கள். திரைப்படத்தை பார்த்துவிட்டு வரும் சிலர், இதைப் போல் எதாவது சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் வீட்டுக்கு வந்து, ஏர்டெல் சூப்பர் சிங்கர் பார்த்தவுடனயே பழையதை மறந்துவிட்டு, தானும் ஒரு சூப்பர் சிங்கராக மாற வேண்டும் என்று கனவுகானத் தொடங்கிவிடுவார்கள். கே.வி சார்,  நீங்கள் சொன்னதை இன்னும் நன்றாக சொல்லியிருந்தால், அந்த மறதியை  குறைத்திருக்கலாம். ஒருவேளை நீங்கள் ஒரு சாதாரண பொழுதுப்போக்கு படத்தைதான் எடுக்க விரும்பினீர்களா??.

கே.வி சார் ஏற்கனவே பத்திரிக்கை துறையை சேர்ந்தவர் என்பதால், பத்திரிக்கை சம்மந்தமான காட்சிக்கள் நன்றாக வந்துள்ளது. ஆனால் கல்லூரி காட்சிகள்??? ஒருவேளை கே.வி சார் கல்லூரியில் படிக்கவில்லை  போல, எப்படி ஒரே கல்லூரியில் படித்த மாணவர்கள் பின் நாட்களில் ”டாக்டர், இன்ஜினியர்” என்று இரு வேறு தொழிலுக்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. நக்சல்வாதிகள் என்றாலே ஜோல்னா பை'தான் வைத்திருக்க வேண்டுமா??. அதுவும் ஜோல்னா பை'யை கொலை செய்யும் இடத்துக்கும் கொண்டுவர வேண்டுமா  கே.வி சார்??.

ஜீவா தன் கல்லூரி நாட்களை சொல்லும்போது, ஒரு ப்ளாஸ்பேக் காட்சி வருகிறது. சரி, எதோ பெரிய மேட்டர் இருக்கு போல என்று எதிர்பார்த்தால், ஒரே ஒரு பாடல் காட்சியோடு அந்த ப்ளாஸ்பேக் முடிந்துவிடுகிறது. ப்ளாஸ்பேக்கை ஒரே வார்த்தையில் சொல்லியிருக்கலாமே சார்??. தோழி இறந்து விடுகிறாள், அதுவும் கொலை செய்யப்படுகிறாள். காதலியின் அறையின் ஒருவன் புகுந்ததால் அவளும் பயந்து இருக்கிறாள். இந்த இடத்தில் ஒரு டூயட் பாடல் தேவைதானா, கே.வி சார்??. உங்களில் பழைய படத்திலும் இதைப்போன்ற தவறைதான் செய்திருந்தீர்கள்.




திரைப்படத்தின் முதல் பகுதி முழுவதும் மீடியாவைப் பற்றியே சொல்லப்படுகிறது. அது எப்படி என்று தெரியவில்லை எங்கே பிரச்சனை என்றாலும் ஜீவா அங்கே ஆஜராகிவிடுகிறார்.

கோ - புரட்சியைப் பற்றி பேசும் திரைப்படம்.  புரட்சியை இதுவரை  டி.வி.களிலும், புத்தகங்களிலும் மட்டுமே படித்த நாம் புரட்சிக்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம். அதை திரைப்படத்தில் பார்த்தவுடன் சில நொடிகள் உணர்ச்சி வசப்படுவது உண்மையே. ஆனால், புரட்சியால் எதுவும் சாதிக்க முடியாது என்பதுதான் உண்மை. அதுதான் இந்த திரைப்படத்தின் கதையும் கூட. ஆனால், இந்த திரைப்படத்தில் அதை சொல்லியவிதம் தவறு.

ஒரு புரட்சியை உருவாக்குவது இவ்வளவு சுலபம் இல்லை,கே.வி சார். அது மிகவும் கடினம். நீங்கள் முதல் அமைச்சர் அளவுக்கு சென்றுவிட்டீர்கள். ஒரு தொகுதியில் வேட்பாளராக  போட்டி போடுவதே எவ்வளவு கடினம் என்பது உங்களுக்கு தெரியுமா??.

மொத்தத்தில் “கோ” மிகவும் சாதாரண ஒரு கமர்ஷியல் திரைப்படம், இந்த திரைப்படத்தை பார்த்தெல்லாம் நாம் உணர்ச்சி வசப்பட வேண்டிய அவசியமில்லை.

பின் குறிப்பு:


தமிழ்சினிமாவின் மரபின் படி, கே.வி சார் பெயரைக் குறிப்பிடும் போதெல்லாம், கே.வி சார் என்று ”சார்” போட்டே எழுதியுள்ளேன்.