Thursday, June 30, 2011

படித்ததில் பிடித்தது

இந்த மாத உயிர்மையில் மனுஷ்ய புத்திரன் கவிதைகளைப் படித்தீர்களா??. முக்கியமாக "புத்தகம் எரிப்பதன் பலன்கள்" மற்றும் "மூக்குத்தி அணிந்த பெண்கள்". இரண்டுமே மிகவும் அற்புதமான கவிதைகள். மனுஷ்ய புத்திரனால் மட்டுமே எழுதக் கூடிய கவிதைகள்.

அந்த கவிதைளை இங்கு பதிவிட ஆசை, ஆனால் கைவசம் தற்பொழுது புத்தகம் இல்லை. புத்தகம் இருந்த சமயம் கணினி இல்லை. ஒருவேளை இரண்டு இருந்திருந்தால், இணையம் இருந்திருக்காது. அடுத்த முறை கண்டிப்பாக அந்த கவிதைகளை இங்கு பதிவிடுகிறேன்.

"படித்ததில் பிடித்தது" எனற தலைப்பில் எழுத ஆரம்பித்தால், மனுஷ்ய புத்திரனின் எல்லா கவிதைகளையுமே இங்கு பதிவிட வேண்டும். அதே இந்த மாத உயிர்மை புத்தத்தில் "சேனல் 4" என்ற தலைப்பில் ஒர் கவிதை எழுதியுள்ளார், இரண்டு பக்கம் மேல் செல்லும் கவிதை அது. சேனல் 4 தற்பொழுது வெளியிட்ட ஈழத்தமிழர்கள் வீடியோ சம்மந்தப்பட்ட கவிதை, கண்டிப்பாக அந்த கவிதைக்கு பாராட்டுகள் குவியும் என்பது உறுதி.

உங்களுக்கு "மூக்குத்தி அணிந்த பெண்கள்" கவிதையைப் பிடிக்க, முக்கியமாக ஒரு விசயம் நடந்திருக்க வேண்டும். அது "மூக்குத்தி அணிந்த பெண்" யாராவது உங்களை பாதித்திருக்க வேண்டும். கண்டிப்பாக அது காதலியாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எனக்கு இன்னும் நியாபகம் இருக்கிறது, எனது சிறுவயதில் எங்க எதிர்வீட்டு அக்கா முதல் முறையாக மூக்குத்தி அணிந்தக்கொண்டு "எப்படி'டா இருக்கு" என்று என்னிடம் கேட்ட சம்பவம்.

அதே போல் "புத்தகம் எரிப்பதன் பலன்கள்" கவிதைக்கு, "புத்தகம் படிப்பதன் மூலம் எனக்கு தெளிவு பிறக்கிறது, எனக்கு உலகம் தெரிகிறது" என்று மட்டும் சொல்லிக்கொண்டு அலையாமல், "புத்தகம் படிப்பதால் அடையும் மனதளவு மாற்றங்கள்ப் பற்றி நீங்கள் சிந்தித்திருக்க வேண்டும்". 

"எதற்க்காக புத்தகங்களைப் படிக்க தொடங்கினோம்" என்று எப்பொழுதாவது மனதளவில் நீங்கள் வருத்தப்பட்டு இருந்தால், "புத்தகம் எரிப்பதன் பலன்கள்" கவிதை கண்டிப்பாக உங்களைப் பற்றிய கவிதை.

இதற்க்குமேல் இந்த கவிதைகள்ப் பற்றி விமர்சிக்க விரும்பவில்லை. கவிதைகளை நாமே படித்து அனுபவித்து புரிந்துக்கொள்ள வேண்டுமே தவிர மற்றவர்கள் சொல்லியல்ல, என்று நம்புகிறவன் நான்.

புத்தகம் படிப்பதால் அடையும் மனதளவு மாற்றங்கள் பற்றி, நானும் எழுதி ஒரு பதிவை தயார் செய்து வைத்திருந்தேன். இனி அந்த பதிவு தேவையில்லை. ஒரு கவிதையின் மூலம் அதை மிகவும் தெளிவாக சொல்ல முடியும் போது, எதற்க்கு தேவையில்லாமல் அவ்வளவு பெரிய யாருக்கும் புரியாத பதிவு. சரிதானே..

Friday, June 24, 2011

வார்த்தைகளோடு அலைபவன் பிறப்பைப் பற்றி சில குறிப்புகள்

வார்த்தைகளோடு அலைபவன்

2.வார்த்தைகளோடு அலைபவன் பிறப்பைப் பற்றி சில குறிப்புகள்

வார்த்தைகளோடு அலைபவன் பிறந்த நாட்டில், ஒரு வருடத்துக்கு பதினான்கு மாதங்கள் இருந்தன. அந்தந்த மாதங்களில் பூக்கும் பூக்களைக் கொண்டே அந்த மாதங்களை அழைத்தனர். ஒவ்வொரு மாதமும் நாற்பத்து நான்கு நாட்களைக் கொண்டிருந்தது. வார்த்தைகளோடு அலைபவனின் பிறப்பு, செம்பருத்தி மாதத்தின் நாற்பத்தி இரண்டாம் தேதி நடந்தது. அந்த நாட்டில், செம்பருத்தி ஆறுபது வருடங்களுக்கு ஒருமுறையே பூக்கும் பூ என்பதால், அந்த மாதத்தில் பிறந்தவர்களைப் பார்ப்பது அறிது. செம்பருத்தி மாதத்தில் பிறந்த அனைவருமே எதாவது ஒரு துறையில் வல்லுனர்களாக இருந்தனர். கனவுகளை  உருவாக்குபவன், கண நேரத்தில் பொருள்களை  மறைய செய்பவன், தண்ணீரின் சூத்திரத்தை முதலில் கண்டுபிடித்தவன், மலைகளை ஒரே கையில் தூக்கி சுமப்பவன் இப்படி பலரும் பிறந்தது செம்பருத்தி மாதத்தில்தான்.

வார்த்தைகளோடு அலைபவன் பிறந்த அதே நாளில் சுமார் ஆறுபது வருடங்களுக்கு முன்னால், ஒருவரின் தலையனை வைத்தே அவர்களின் எதிர்க்காலத்தை சொல்பவன் ஒருவன் இறந்து போனான். அவன் இறந்த பின்னால் எதிர்காலத்தை யாராலும் சரியாக கணிக்க முடியவில்லை. எதிர்காலத்தை அறிந்துக்கொள்ள முடியாமல் மக்கள் மிகவும் கவலைக்கொண்டனர். எதிர்காலத்தை அறிந்துக்கொள்வதற்க்காக மக்களும் பல வழிகளைக் கையாண்டனர்.

நட்சத்திரங்களைப் பார்ப்பது, தாயத்தை உருத்துவது, கிளிகளைக் கூண்டில் அடைத்து ஓவியங்களில் ஒன்றை எடுக்கச் செய்வது.  இப்படி எத்தனையோ வழிகளின் மூலம் எதிர்காலத்தை யூகித்தனர். ஆனால், அவர்களின் யூகங்கள் அனைத்தும் பொய்யாகியது. எதிர்காலத்தை அறிந்துக்கொள்ள முடியாத மக்கள், மிகவும் விரக்தியில் இருந்தனர். செம்பருத்தி மாதம் நாற்பத்தி இரண்டாம் தேதி ஒருவன் பிறந்து உள்ளான் என்ற செய்தி அறிந்த மக்கள், கண்டிப்பாக அவன் எதிர்க்காலத்தை யூகித்து சொல்ல கூடியவன் என்று நம்பினர்.

வார்த்தைகளோடு அலைபவன், அவனது மூன்றாவது வயதில் தனது முதல் கதையைச் சொல்லத்தொடங்கினான். அதன் பின்னர் மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக "இவன் எதிர்க்காலத்தை யூகித்து சொல்லக்கூடியவன்" என்ற நம்பிக்கை குறையத்தொடங்கியது. இருந்தாலும், "கதைகள் மூலம் இவன் எதிர்க்காலத்தை குறிப்பாக உணர்த்துகிறான்" என்று இன்னும் சிலர் நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

வார்த்தைகளோடு அலைபவனின் கதைகளையும், அவனைப் பற்றிய தொகுப்புகளை வைத்திருக்கும் லில்லி மாதத்தில் பிறந்த ஒருவன், வார்த்தைகளின் அலைபவனின் பிறப்பைப் பற்றி அவனுடைய குறிப்பு புத்தகத்தில் கீழ்க் கண்டவாறு எழுதியுள்ளான்
"அவனின் பிறப்பை பற்றி நமக்கு எதுவும் சரியாக தெரியாத நிலையில், மற்றவர்கள் சொல்லும் கதைகளை வைத்து இப்படி ஒரு முடிவுக்கு நாம் வர நேருகிறது. அதன் படி,  வார்த்தைகளோடு அலைபவன் செம்பருத்தி மாதம் நாற்பத்தி இரண்டாம் தேதி பிறந்துள்ளான். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், நம் கிரகத்திலிருந்து சுமார் 1988 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும் மனிதர்கள் வாழும் ஒரு கிரகத்தில் "மீட்பர்" மறைந்து 1956 ஆண்டுகள் கழித்து வார்த்தைகளோடு அலைபவன் பிறந்து உள்ளான். தண்ணீரின் சூத்திரத்தை  கண்டுபிடித்தவன், சமீபத்தில் உருவாகிய சூத்திரத்தை வைத்து பார்க்கும் போது, நமது கிரகத்திலிருந்து அந்த கிரகத்துக்கு செல்ல வேண்டும் என்றால் 1988 ஓலி ஆண்டுகள் நாம் பின்னோக்கி போக வேண்டும். அப்படி சென்றால் மீட்பர் சிலுவையில் அறைந்த நாளுக்கு சென்று விடலாம். மீட்பர் 32 ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்தார். ஆகவே நாம் இன்னும் 32 ஆண்டுகள் பின்னோக்கி சென்றால், அவரின் பிறந்த வருடத்துக்கு சென்று விடலாம். அன்றுதான் நமது கிரகத்தில் வார்த்தைகளோடு அலைபவனும் பிறந்து உள்ளான்"

லில்லி மாதத்தில் பிறந்தவன் எழுதிய குறிப்புகளைப் படித்த பலர் "அவன் தன்னுடைய அறிவுதிறனையும், தான் எல்லாம் தெரிந்தவன் என்பதையும் காட்டுவதற்காகவே இந்த குறிப்பை எழுதியுள்ளான்" என்று புகார் கூறினர். ஆனால்,  வார்த்தைகளோடு அலைபவன் பற்றி முழுமையாக அறிந்தவர்கள் வேறுயாரும் இல்லாததால் லில்லி மாதத்தில் பிறந்தவன் எழுதிய குறிப்புகளையே நாம் நம்ப வேண்டிய கட்டாயம் ஏற்ப்படுகிறது.   

Wednesday, June 22, 2011

குப்பை

எனது அறையில் குப்பைகள் அதிகரித்துவிட்டன,
எதற்காகக் குப்பையை வெளியேற்ற வேண்டும்,
நான்தான் வெளியேறிருக்க வேண்டும்,
எப்பொழுதோ.

Friday, June 17, 2011

வார்த்தைகளோடு அலைபவன்

பல யுகங்களுக்கு முன்னால், ஊர் ஊராக சென்று கதை சொல்லும் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் புகழ் நாடு முழுவதும் பரவியிருந்தது. அவன் எப்பொழுதும் வார்த்தைகளை மூட்டையில் கட்டி அவன் செல்லும் ஊர்களுக்கு எல்லாம் எடுத்து செல்வான். அவன் எந்த கதையையும் திட்டமிட்டு சொல்வதில்லை, மூட்டையை  பிரிந்து அதில்  கிடைக்கும் முதல் வார்த்தையிலிருந்து கதை  சொல்ல தொடங்குவான். அவன் ஊரில் நுழைந்தவுடனேயே கதைகள் சொல்ல ஆரம்பிப்பதில்லை. முதலில், அந்த ஊர் முழுவதையும் சுற்றி பார்ப்பான, பின்னர் அந்த ஊர் மக்களை கூர்ந்து கவனித்து  அவர்களின் வாழ்க்கை  முறையை  தெரிந்துக்கொள்வான். ஒரு வார்த்தை கூட யாரிடமும் பேச மாட்டான். ஊரில் உள்ள அனைவரும் அவன் எப்பொழுது கதை சொல்ல தொடங்குவான் என்று ஆவலுடன் எதிர்ப்பார்ப்பார்கள்.  அதன் பின்னர்தான் கதை  சொல்ல தொடங்குவான்.

அவன் எந்த நேரத்திலும் கதை சொல்ல தொடங்குவான், என்பதை ஊர் மக்களும் அறிந்தே இருந்தார்கள், எனவே அவனை  இருபத்தி நான்கு மணிநேரமும்  ஊர் மக்கள் கண்காணித்துக்கொண்டே இருந்தனர். சில ஊர்களில், ஒரு மாதம் வரைகூட  கதை சொல்லாமல் ஊரை  சுற்றி இருக்கிறான், ஆனால் அதற்க்காக ஊர்மக்கள் யாரும் அவனைக்  குற்றம் சொல்வதில்லை. 
 
ஊர்மக்கள் வீட்டுக்கு ஒருவர் வீதம் தினமும் அவனைக்  கண்காணிப்பார்கள். கண்காணிப்பாளன் தயாராக எப்பொழுதும் கையில் ஒரு மணியை வைத்திருந்தான். அவன் கதை  சொல்ல ஆரம்பித்தவுடனேயே கண்காணிப்பாளன் அந்த மணியை அடித்து ஊரில் உள்ள அனைவருக்கும் தெரிவித்துவிடுவான. சில நிமிடங்களிலேயே அந்த இடம் மக்கள் வெள்ளத்தில் மூழ்கிவிடும். தான் வைத்திருக்கும் மூட்டையிலிருந்து ஒவ்வொரு வார்த்தையாக கோர்த்து, கதையை சொல்லிக்கொண்டே போவான்.  சில கதைகள் இரண்டு நாள் வரை  போகும், சில கதைகள் ஒரு மணிநேரத்தில் முடிந்துவிடும். அவன் சொல்லும் கதைகளில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று யாரும் கிடையாது, "நல்லவன், கெட்டவனை"  பார்வையாளன்தான் முடிவு செய்ய வேண்டும்.

கதை சொல்லிமுடித்த அடுத்த நொடியே, அவன் தான் உபயோகப்படுத்திய எல்லா வார்த்தைகளை மீண்டும் மூட்டைக்கட்டி அந்த ஊரை  விட்டு  கிளம்பிவிடுவான். அவன் அடுத்து எந்த ஊருக்கு போகிறான் என்பது யாருக்கும் தெரியாது.  அவன் போய் ஆறு மாதங்கள் ஆன பின்பும், அந்த ஊரில் அவன் சொன்ன கதையைப் பற்றி விவாதித்துக்கொண்டிருப்பார்கள்.

அவன் சொந்த ஊர், அவனுடைய குடும்பம் இதைப் பற்றி யாருக்குமே தெளிவாக தெரியாது. ஆனால், அவனைப் பற்றி சில மர்மமான கதைகள் மக்களிடைய பரவியிருந்ததன. அவனுடைய அப்பா வடக்கு பகுதியில் உள்ள ஊரின் பெரிய செல்வந்தர். அவருடைய நண்பன் ஒருவனால் வஞ்சிக்கப்பட்டு, தனது செல்வங்கள் முழுவதையும் இழந்துவிட்டார். கடைசியாக அவரிடம் மிஞ்சியது வார்த்தைகள்தான். தன் மகனுக்கு தன்னால் எந்த ஒரு சொத்தையும் தரமுடியவில்லையே என்று வருத்தப்பட்ட அவர், தன்னிடம் கடைசியாக மிஞ்சிய வார்த்தைகளை  எல்லாம் ஒரு மூட்டையில் கட்டி அதை தனது மகனுக்கு தந்துவிட்டு இறந்துவிட்டார். அன்று முதல் இவன் வார்த்தைகளை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருக்கிறான்.

அவன் இதுவரை எந்த ஒரு வார்த்தையையும் தொழைத்தது இல்லை. அதே போல், இதுவரை  எந்த ஒரு வார்த்தையையும் புதிதாக அந்த மூட்டையில் சேர்த்ததும் இல்லை. அவனுடைய எல்லா கதைகளிலும் அதே வார்த்தைகள்தான் மீண்டும் மீண்டும் வந்துக்கொண்டிருந்தன. வார்த்தைகள்தான் மீண்டும் மீண்டும் வருமே தவிர அவனுடைய கதைகள் எல்லாம் வித்தியாசமாகவே இருக்கும். ஒருமுறை சொன்ன கதையை மீண்டும் அவன் சொல்வதில்லை.

அப்படி அவன் சொன்ன பல கதைகளை இன்னும் எங்கள்  ஊரில் பிரபலம். முடிந்தால் உங்களுக்கு அதைச் சொல்கிறேன்.

Sunday, June 12, 2011

ஆரண்ய காண்டம் - A must Watch Movie


நாமதான் சினிமா பைத்தியம் முதல் நாளே திரைப்படத்தை பார்க்கிறோம் என்றால், நமக்கு முன்னாலேயே சிலர் திரைப்படத்தை பார்த்துவிடுகிறார்கள். அப்படிதான் "ஆரண்ய காண்டம்" திரைப்படத்தை ஒருநாள் முன்னாலேயே பிரிவியூ  ஷோவில் பார்த்துவிட்டு நண்பன் என்னிடம் சொன்னது "தமிழில் முதல் முறையாக ஒரு neo-noir வகை  திரைப்படம்" என்று

இந்த neo-nair என்ற வார்த்தையையே இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். அவனிடமே neo-nair என்றால் என்னவென்று விளக்கம் கேட்டததற்க்கு, "ஒருவகையான Thriller Movie" என்று சொல்லிமுடித்து விட்டான்அவன் எப்பொழுதுமே இப்படிதான். ஒன்று யாருக்குமே புரியாத வார்த்தையில் பேசுவான் அல்லது எப்படி சொன்னால் ஒருவனுக்கு ஒரே வார்த்தையில் புரியுமோ, அப்படி சொல்லி முடித்துவிடுவான். நானும் விக்கிபீடியாவில் neo-nair பற்றி படித்து பார்த்தேன். பக்கம் பக்கமாக போட்டு இருந்தார்கள்.





neo-nair என்ற வார்த்தைக்கு அர்த்தம் அறிவதற்க்காகவே "ஆரண்ய காண்டம்திரைப்படத்தை பார்க்கப் போனேன். தமிழில் ஒரு வித்தியாசமான திரைப்படத்தை  பார்க்க  போகிறோம் என்பதை  அப்பொழுது நான் அறிந்திருக்கவில்லைதிரைப்படத்தின் ஆரமபத்தில் வரும் வாக்கியங்கள்

"எது தர்மம்?"


"எது தேவையோ, அதுவே தர்மம்"

இதுதான் திரைப்படத்தின் கதையும் கூட. கேங்ஸ்டர் வாழ்க்கையின் ஒருநாள்தான் கதையின் கரு. வானம் திரைப்படம் போலவே  நான்கு விதமான கதைகள், ஆனால், இங்கு அந்த நான்கு கதைகளும் திரைப்படத்தின் முடிவில் ஒன்று சேரவில்லை. நான்கு கதைகளும் படத்தின் ஆரம்பத்திலிருந்தே ஒன்றோடு ஒன்று பின்னப்படுகிறது.


படத்தை  இயக்கி இருப்பவர் புதுமுக இயக்குநர் "தியாகராஜன் குமாராஜா". படத்தில் எங்கேயுமே பார்வையாளர்களின் சட்டையை  பிடித்துநீ  கண்டிப்பாக சிரிக்க வேண்டும், நீ கண்டிப்பாக இந்த காட்சிக்கு அழ வேண்டும்என்று கட்டாயப்படுத்தவில்லை. அதைப்போல் திரைப்படத்தின் பின்னனி இசையும் அற்புதமாக உள்ளது. சிலர் வழக்கம்போ, யுவன் இந்த இசையை இந்த மொழியிலிருந்து காப்பியடித்து விட்டார் என்று சாட்சியுடன் சொல்லலாம், அது அவர்களின் பிரச்சனை.


திரைப்படத்தின் எல்லா  கதாபாத்திரமும் அற்புதமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
 

கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். தமிழ் சினிமாவை  உலகளவில் எடுத்து செல்ல "அழகர்சாமியின் குதிரைபோன்ற திரைப்படங்களால் மட்டுமே முடியாது. அதற்க்கு கண்டிப்பாக "ஆரண்ய காண்டம்" போன்ற ஸ்டைலான திரைப்படங்களின் உதவியும் தேவை.


இந்த திரைப்படத்தைப் பார்த்துவிட்டு இப்பொழுது டைப் செய்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட neo-nair என்ற வார்த்தையைப் பற்றி குழப்பம்  இருந்துக்கொண்டேயிருக்கிறது.




Thursday, June 9, 2011

பின்லாடன் கொல்லப்பட்டார்

பின்லாடன் கொல்லப்பட்டார். இது நடந்து ஒரு மாதம் மேல் ஆகப்போகிறது. அப்பொழுதே எழுதவேண்டியது, நாளை நாளை என்று தள்ளிப்போய், கடைசியாக இன்றுதான் ஒரு விடிவுகிடைக்கிறது. சிலர், எப்பொழுதோ இறந்ததாக சொல்லப்படும் காந்தியைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கும் போது,  போன  மாதம் இறந்த பின்லாடன் பற்றி எழுதலாம், தவறே இல்லை.

பின்லாடன் கொல்லப்பட்டு, அவரின் உடல் கடலில் தூக்கிப் போடப்பட்டது. இதை  நம்பலாமா?? வேண்டாமா??. நம்பிதான் ஆகவேண்டும், எனென்றால், இதைச் சொல்வது அமெரிக்கா. சதாமை  உயிரோடு  பிடித்த அமெரிக்காவால்,  ஏன், பின்லாடனை  உயிரோடு பிடிக்க முடியவில்லை??. ஒருவேளை  பின்லாடனை எப்பொழுதோ கொன்றுவிட்டு, பாகிஸ்தான் மீது பழி போடுவதற்க்கு அமெரிக்கா நடத்து நாடகமாக கூட இது இருக்கலாம.

இன்னும் கொஞ்ச நாள் சென்றிருந்தால் அவரே இறந்திருப்பார். கடைசி காலத்தில் அவரை  கொன்று நல்ல பெயரை  தேடிக்கொள்கிறது அமெரிக்கா அரசு. பின்லாடனை கொன்றதால் இப்பொழுது தீவிரவாதம் முற்றிலும் அழிந்துவிட்டதா?? உலகம் முழுவதும் நடக்கும் எல்லா குண்டு வெடிப்புக்கும் பின்லாடன் மட்டும்தான் பொருப்பா?? அப்படிப்பட்ட பிம்பத்தைதான் இப்பொழுது அமெரிக்கா அரசு கொண்டுவர முயற்சிக்கிறது. இரண்டாம் உலகம் போருக்கு எல்லா காரணமும் இந்த ஹிட்லர்தான் என்று சொல்லி எல்லா உலக நாடுகளும் தப்பித்தது போல் உள்ளது இது.

இந்த கட்டுரை  எழுதுவதற்க்கு காரணம் பின்லாடனை கொன்றதால் அல்ல. அது நடந்த இடத்தால். பாகிஸ்தான் மீது போர் தொடுக்க நல்ல சந்தர்ப்பம அமெரிக்காவுக்கு கிடைத்திருக்கிறது, பின்லாடன் பாகிஸ்தானில் வாழ்ந்தார், இந்த ஒரு காரணமே அமெரிக்காவுக்கு போதும் உலக நாடுகளை  நம்ப  வைப்பதற்க்கு. என்ன கொடுமை என்றால், எந்த உலக நாடுமே இதை எதிர்க்கவில்லை.

ஒரு தீவிரவாதி ஒரு நாட்டில் இருந்தால், அந்த நாட்டின் மீதே போர் எடுக்க வேண்டுமா?? ஆம் ஏனெனில்,  முதலில் அமெரிக்கா தன் மீதே குண்டுகளை  வீசிக்கொள்ள வேண்டும். அங்குதான் அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற  உலகின் மிக பெரிய தீவிரவாதி ஒருவனும்,  அவனுடைய சகாக்கள் பலரும் வாழ்த்துக்கொண்டிருக்கிறார்கள். 

பாகிஸ்தானின் உளவு அமைப்பு மீது தடை விதிக்க வேண்டுமாம். அடப்பாவிங்களா, மற்ற நாட்டின் அரசியலில் மறைமுகமாக மூக்கை  நுழைப்பதாக வீக்கிலீக்ஸ் அம்பலப்படுத்திய அமெரிக்கா உளவுத்துறையை  என்ன செய்வது??

அமெரிக்கா  எப்பொழுது பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் என்று பலரும் எதிர்ப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதில் என் நண்பர்கள் பலரும்  உண்டு. பாகிஸ்தான் மக்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று தெரியவில்லை. உலகக் கோப்பை கிரிக்கெட் தோல்விக்கு பின் பாகிஸ்தான் கேப்டன் அப்ரிடி சொன்ன ஒரு வாக்கியம்தான் நினைவுக்கு வருகிறது "I want to say sorry to my nation".