Sunday, August 28, 2011

மங்காத்தா டா...

எனக்கு பிடித்த இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபுவும், நமக்கு பிடித்த நடிகரான அஜீத்தும் இனைந்து வழங்கும் மங்காத்தா வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அஜீத்தின் மீது நம்பிக்கை கம்மிதான் என்றாலும், வெங்கட் பிரவுவை கொஞ்சம் அதிகமாகவே நம்புகிறேன். பார்ப்போம்.


நான் ஒத்துக்கொள்கிறேன்

நான் ஒத்துக்கொள்கிறேன், எனக்கு உங்களைப் போல் பேச தெரியாது என்பதை. நீங்கள் பேசுவதை பார்க்கும் போது எனக்கு உங்கள் மீது பொறாமைதான் வருகிறது. கண நேரத்தில் உங்களால் சிரித்தும் பேச முடிகிறது, சோகமாகவும் பேச முடிகிறது. நீங்கள் பேசும் போது உங்கள் முக மாற்றத்தை தான் நான் முதலில் கவனிக்கிறேன். அந்த முகத்தில் தான் எத்தனை பொழிவு. உங்கள் பேச்சைக் கூட கேட்க தோன்றவில்லை, உங்கள் முகத்தையே பார்த்துக்கொண்டு இருக்கலாம் போல் இருக்கும். அழும் குழந்தையை உங்களால் சிரிக்க வைக்க முடிகிறது, ஒரு குழந்தையை சிரிக்க வைப்பது எவ்வளவு கஷ்டமான காரியம் என்பது எனக்கும் தெரியும். அதில் பலமுறை தோற்றுப்போனவன் நான். இதுவரை நீங்கள் யாரிடமும் சண்டையிட்டு நான் பார்த்ததில்லை.

ஒருவன் அவனின் மகிழ்ச்சியை உங்களிடம் பகிரும் போது, உங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியை போல் உங்களாலும் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. ஒருவன் அவனின் கவலையைச் சொல்லி அழும்போது, நீங்களும் அவனுக்காக கவலைப்படுகிறீர்கள். நீங்கள் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் உங்களை தேடி வந்து பேசும் பலரை நான் பார்த்திருக்கிறேன். உண்மையாகவே சில நேரங்களில் எனக்கு உங்கள் மீது பொறாமையாக தான் இருக்கிறது.

நான் ஒத்துக்கொள்கிறேன், எனக்கு உங்களைப் போல் முடிவுகள் எடுக்க தெரியாது என்பதை. எந்த ஒரு பிரச்சனைக்கும் சுலபமான முடிவுகளை எடுக்கும் நீங்களும், ஒரு சின்ன பிரச்சனைக்கு கூட முடிவு எடுக்க முடியாமல் திணறும் நானும் ஏணி வைத்தாலும் ஒன்றாக முடியாது என்பதை. நீங்கள் எத்தனையோ பிரச்சனைகளை எதிர்கொண்ட போது நான் உங்கள் அருகில் நின்று அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்திருக்கிறேன். என்னால் செய்ய முடிந்தது அது மட்டுமே.

உங்களுக்கு கிடைக்கும் மரியாதைகள், எப்பொழுதும் எனக்கு கிடைக்க போவதில்லை. உங்கள் கழுத்தில் விழும் மாலைகளின் கனத்தை கூட என்னால் ஒருபொழுதும் தாங்க முடியாது.

நான் தெருவில் நடக்கும் போது என்னைப்பார்த்து யாரோ இருவர் வணக்கம் சொல்லுகிறார்கள் என்றால், அதற்கு காரணம் நான் உங்கள் அருகில் நின்று கொண்டிருப்பதால் மட்டுமே. நான் ஒத்துக்கொள்கிறேன், எனக்கு நீங்கள்தான் ரோல் மாடல் என்பதை. நான் செய்யும் சிறு அசைவு கூட உங்களின் பாதிப்புதான் என்பதை.

ஆனால், அன்று நான் கொஞ்சம் பதறிதான் போனேன், மாடியில் இருக்கும் கிழக்கு பக்க அறையில் நீங்கள் தனியாக உட்கார்ந்து அழுதுக்கொண்டிருப்பதைப் பார்த்தபோது. நான் ஒத்துக்கொள்கிறேன், என்னால் ஒருபொழுதும் உங்களுக்கு நல்ல மகனாக இருக்க முடிந்ததில்லை என்பதை. நான் இதுவரை எந்த வீதத்திலும் உங்களை சந்தோஷப் படுத்தியதில்லை என்பதை. அன்று அந்த அறையில் நீங்கள் அழுததற்கு நான் தான் காரணம் என்பதை. என்னை மன்னித்துவிடுங்கள்.

இதற்கு மேலும் என்னை நம்பாதீர்கள். என்னை மன்னித்துவிடுங்கள்.

Saturday, August 27, 2011

அன்புள்ள வாசகர் சார் அவர்களுக்கு

அன்புள்ள வாசகர் சார் அவர்களுக்கு,

நலம், நலம் அறிய ஆவல். இது வாசகர் கடிதம் எழுதும் மாதம் என்று நினைக்கிறேன். எந்த வலைப்பதிவை திறந்தாலும் வாசகர் கடிதமாக நிறம்பி வழிகிறது. என்னால் அப்படி ஒன்றும் எழுத முடியவில்லையே என்று ரொம்ப நாட்களாகவே வருத்தம். என்னுடைய நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற உதவிய உங்களுக்கு முதலில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் சார்.

உங்கள் வாசகர் கடிதத்தில் ஒரு குறை, நீங்கள் எங்கேயுமே சார் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தவில்லை. இது சார்களின் காலம் சார். உங்கள் குழந்தையைக் கூட நீங்கள் சார் போட்டுதான் கூப்பிட வேண்டும் சார், அது பெண் குழந்தையாக இல்லாத பட்சத்தில்.  நான் கூட முதலில் சினிமா துறையில் மட்டும்தான் இந்த சார் கலாச்சாரம் உள்ளது என்று நினைத்திருந்தேன், போன வாரம் ஒரு புத்தகக் கண்காட்சிக்கு போகும் வரை. நான் சென்ற போது, கண்காட்சியில் எழுத்தாளர்கள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அதில் எல்லாருமே எல்லாரையும் சார் போட்டுதான் கூப்பிட்டார்கள். கூட்டம் நடைப்பெற்று கொண்டு இருந்த போது, யாரோ ஒருவர் யாரையோ சார் என்று மிகவும் மெதுவாக கூப்பிட்டுவிட்டார், அவ்வளவுதான் அதுவரை அவரவர்கள் டீ போப்பையில் மூழ்கியிருந்த மொத்த கூட்டமும் அவர் பக்கம் திரும்பி தன்னைதான் கூப்பிட்டாரா என்று  ஒருமுறை சரிபார்த்து கொண்டது.

இதையெல்லாம் எதற்கு நான் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நீங்கள் சந்தேகம் கொள்ளலாம். எனக்கு கடிதம் எழுதிய ஒரே வாசகர் சார் என்ற முறையில் உங்களிடம் இவற்றையெல்லாம் பகிர்ந்துக்கொள்ள எனக்கு முழு உரிமை இருக்கிறது என்றே கருதுகிறேன்.

முக்கியமாக நான் உங்களிடம் சொல்ல வந்ததே வேறு சார். நீங்கள் எழுதிய அந்த இரண்டு வரி வாசகர் கடிதத்தில், என்னுடைய "காக்கைகள்" கதையை அல்பேனியன் மொழியில் மொழி பெயர்த்து  அட்டாச்மென்டில் அனுப்பியிருந்தீர்கள்.  இது வரை அல்பேனியா மொழி எப்படி இருக்கும் என்று கூட பார்த்திராத எனக்கு, என்னுடைய காக்கைகள் கதையை அல்பேனியா மொழியில் பார்த்தது கட்டுக்கடங்கா சந்தோஷத்தை தந்தது சார், அந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆகவே இங்கு ஒரு பத்து பதினைந்து ஸ்மைலிகளை சேர்த்துக்கொள்ளவும்.

மிகவும் அற்புதமாக மொழிபெயர்த்து இருந்தீர்கள் சார். அல்பேனியா மொழியில் எனது காக்கைகள் கதையை பார்த்தபோது, ஏதோ உயிர் உள்ள காக்கைகள் பறப்பது போல் இருந்தது. அந்தளவு அந்த கதையில் உயிர் இருந்தது. ஒரு கதையை படிக்க அதன் மொழி தேவையில்லை என்பது இது மூலம் தெரிகிறது.

இதைதான் சீனாவில் தனக்கு வாசகர் அதிகம் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் ஒரு பிரபல எழுத்தாளர் கூட சமீபத்தில் சொல்லியிருப்பார். போன மாதம் சீனாவில் ஒரு சொற்பொலிவுக்கு அவர் போக நேர்ந்தது. சீனாவின் வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்கள் பற்றிய நிகழ்ச்சி அது. அவர் மேடையில் ஏறி தமிழில் பேச, அருகில் இருந்தவர் அதை சீன மொழியில் மொழி பெயர்த்து கொண்டிருந்தாராம். இரண்டு வரிகள்தான் பேசியிருப்பாராம். "நீங்கள் பேசுவதை மொழி பெயர்க்க தேவையில்லை. உங்கள் பேச்சிலேயே நீங்கள் சொல்லும் கருத்து இங்கு அனைவருக்கும்  புரிகிறது" என்று சொல்லி அந்த மொழிபெயர்ப்பாளர் சென்று விட்டாராம். உடனே நம்ப எழுத்தாளர் சார், உணர்ச்சி வசப்பட்டு இரண்டு மணிநேரம் விடாமல் தொடர்ந்து தமிழில் பேசியிருக்கிறார். கூட்டத்திலிருந்து ஒரு சத்தம் கூட வரவில்லையாம். பாவம் கண்களை மூடிக்கொண்டே பேசியிருப்பார் போல.

சரி விடுங்க சார், நமக்கு ஏன் மற்றவர்கள் பிரச்சனை. நான் இப்பொழுதுதான் அல்பேனியன் மொழியைப் பற்றி இணையத்தில் தேடிப்படித்தேன். மொத்தம் 7.6 மில்லியன் மக்கள் இந்த மொழியை பேசுவதாக விக்கி சொல்கிறது. விக்கி சொன்னால் சரியாகதான் இருக்கும். அந்த 7.6 மில்லியன் மக்களுக்கு எனது கதை சென்றதைய போகிறது என்று நினைக்கும் போது இப்பொழுதே எனக்கு தலை சுற்றுகிறது சார். இரண்டு மெடாசின் மாத்திரைகள் போட வேண்டும். 7.6 மில்லியன் அல்பேனியன் மக்களுக்கு மெடாசின் கிடைக்குமா என்று தெரியவில்லை, பாரசிடமால் மாத்திரைகள் கூடவா கிடைக்காமல் போகும்??

இந்த கடிதத்தை முடிக்கும் முன்னர், மீண்டும் ஒரு நன்றி சார். இந்த கடிதத்துக்கு நீங்கள் ஒரு பதில் கடிதம் அனுப்பிவீர்கள் என்ற நம்பிக்கையில் இப்பொழுதே இரண்டு பக்கக் கடிதத்தை டைப் செய்ய தொடங்கிவிட்டேன்.

இப்படிக்கு உங்கள்,
அசோக்

Sunday, August 21, 2011

நான் எதற்காக உங்கள் அன்னா ஹாசாரேயை ஆதரிக்க வேண்டும்

பேசி பல நாட்களான தோழியிடமிருந்து நேற்று வந்த ஒரு குறுஞ்செய்தி "Pls Support Anna Hazare". ஒரு பழைய தோழியின் நட்பை புதுபிக்க உதவினார் என்ற முறையில் அன்னா ஹாசாரேவுக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன். 

அன்னா ஹாசாரேயின் உண்ணாவிரதத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு கூடிக்கொண்டே போகிறது. அன்னாவை ஆதரிப்பது இப்பொழுது ஒரு Trend. இப்படி ஆதரவு தெரிவிக்கும் பலரிடமும் எதற்காக இந்த உண்ணாவிரதம் என்று கேட்டால், அவர்கள் சொல்லும் ஒரே பதில் "ஊழலுக்கு எதிராக". இதற்கு மேல் அவர்களுக்கு வேறு எதுவும் சொல்ல தேவையில்லை. லோக்பால் மசோதா வந்தால் நமது நாட்டில் ஊழல் குறைந்துவிடும் இதுதான் அவர்கள் நினைப்பது. சரி, ஒருவேளை இந்த மக்கள் எழுச்சியின் காரணமாக லோக்பால் மசோதா (மன்னிக்கவும்) ஜன் லோக்பால் மசோதா வந்துட்டது என்று வைத்துக்கொள்வோம். அதன் பின் இந்தியாவில் மொத்தமாக ஊழல் அழிந்து விடுமா??? அல்லது குறைந்து விடுமா??. அப்படி குறையவில்லை என்றால், மக்கள் விரக்தியில் அன்னா ஹாசாரேவுக்கு எதிராக கருத்து சொல்ல நேரிடும். இதை அன்னா ஹாசாரேயும் தெரிந்துதான் வைத்திருப்பார் என்று நினைக்கிறேன், அதற்காக தான் அவர் ஆதரவாளர்கள், ஜன் லோக்பால் பற்றி ஒரு P.P.T தயார் செய்து அனைவருக்கும் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அதை எத்தனை பேர் படித்தார்கள் என்பது கேள்வி குறி..

ஜன் லோக்பால் வந்தால், ஊழல் முற்றிலுமாக அழிந்துவிடாது என்பதை மக்களுக்கு முதலில் உணர்த்த வேண்டும். இந்த ஜன் லோக்பால் அமைப்பின் படி, ஏழு பேர் கொண்ட குழு கூடி அனைத்து ஊழல் வழக்குகளையும் விசாரிக்கும். ஏழு பேர் கொண்ட குழுவால் எத்தனை வழக்குகளை விசாரிக்க முடியும். இப்பொழுது நடந்துக்கொண்டிருக்கும் 2G வழக்கில் இதுவரை எனக்கு தெரிந்து கிட்டத்தட்ட 20000 பக்கங்களுக்கு மேல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஏழு பேர் கொண்ட குழுவால் எத்தனை நாட்களில் இந்த குற்றப்பத்திரிக்கையைப் படிக்க முடியும்???

முன்னால் நடந்த அன்னாவின் உண்ணாவிரதத்துக்கும் தற்பொழுது நடக்கும் உண்ணாவிரதத்துக்கும் எத்தனை வித்தியாசங்கள். அன்னா, அவருக்கே தெரியாமல் மீடியாவின் மாய வலையில் விழ்ந்துவிட்டார் என்றே நினைக்கிறேன். அவர் ஓடி வந்து அமர்ந்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்து வைத்த காட்சி எனக்கு விஜயின் திரைப்படங்களைதான் நினைவு படுத்தியது.

நான் அன்னா ஹாசாரேயின் போராட்டத்தை முற்றிலும் எதிர்க்கவில்லை. இப்பொழுது நடக்கும் உண்ணவிரதம் ஊழல் முற்றிலும் அழிப்பதற்காக இல்லை. ஊழல் செய்பவர்களுக்கு தண்டனை தருவதற்காக மட்டுமே என்பது என் கருத்து. சொல்லபோனால் அன்னாவிடம் கேட்டால் கூட இதை தான் சொல்வார்.

ஊழலை முற்றிலுமாக அழிக்க இது போன்ற போராட்டங்களால் மட்டும் முடியாது. ஒவ்வொரு தனிமனிதனும் நினைத்தால் மட்டுமே முடியும். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், படிப்பிற்க்காக டோனேஷன் என்ற பெயரில் லஞ்சம் தர தயாராக இருக்கிறோம். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புரோக்கருக்கு லஞ்சம் தர தயாராக இருக்கிறோம். நேர்மையாக ஒருவனுக்கு கிடைக்கும் வாய்ப்பை நாம் தட்டிப்பறிக்க லஞ்சத்துடன் தயாராகயிருக்கிறோம். ஒரு சின்ன விசயத்துக்கு கூட லஞ்சத்துடன் தயாராக நின்றுக்கொண்டு இருக்கிறோம். நம்புங்கள் நாம்தான் லஞ்சத்துக்கு எதிராக பேசுகிறோம்.

இன்று டிராபிக் போலிஸுக்கு 100 ரூபாய் லஞ்சம் கொடுத்தேன். இப்பொழுது சொல்லுங்கள் நான் எதற்காக உங்கள் அன்னா ஹாசாரேயை ஆதரிக்க வேண்டும்.

Saturday, August 20, 2011

சில இடைவெளிகள்

"எதற்க்காக இப்பொழுது வலைப்பதிவு அதிகம் எழுத மாட்டேங்கிறாய்??" இப்படி யாரும் என்னிடம் கேட்கவில்லை. அப்படி கேட்டால் எந்தமாதிரி பதில் சொல்வது என்று அப்பொழுது யோசிக்க கூடாது என்பதற்காக, இப்பொழுதே யோசித்து எழுதிவிடுகிறேன்.

இப்பொழுதுலாம், வலைப்பதிவு எழுதுவதை விட, Facebook' ல் Status எழுதவும் , twitter'ல் ட்விட் செய்யவும்தான் அதிகம் பிடிக்கிறது. காரணம் சரியாக தெரியவில்லை. நமது வலைப்பதிவை யார் படிக்கிறார்கள் என்ற எண்ணமாக கூட இருக்கலாம்.

முன்னர் எல்லாம், வலைப்பதிவில் ஒரு பதிவை எழுதிவிட்டு ஒரு மணிநேரத்துக்கு ஒரு தடவை எதாவது கமெண்ட் வந்து உள்ளதா என்று பார்த்துக்கொண்டே இருப்பேன். இரண்டு நாள்கள் கழித்து இரண்டு சுப்புரமணிகளில் யாராவது ஒருவர் கமெண்ட் போட்டு இருப்பார்கள். அதை பார்த்தவுடன் வரும் சந்தோசம் இருக்கிறதே, அப்பப்பா...

இதனால், வலைப்பதிவில் ஒரு கடலில் தனியாக பயணிப்பது போல் எண்ணம், தனியாக நிச்சல் அடிப்பது ஆபத்தானது,, சிலர் நம்மை பைத்தியம் என்று நினைக்கக் கூடும்.

எனக்கு பாராட்டுகள் மீது அதிகம் நம்பிகையில்லைதான். ஆபிஸில் நான் செய்யும் வேலைக்கு யாரவது பாராட்டும் போது, எனக்கு லஜ்ஜையை உண்டு பண்ண கூடியவை இந்த பாராட்டுக்கள். பிறருக்கு நான் செய்த உதவியை யாராவது பொது இடத்தில் சொன்னால், அங்கேயிருந்து தப்பிக்கவே நினைப்பேன். ஆனால், யாராவது எனது வலைப்பதிவை புகழ்ந்து சொல்லும் போது, எனக்கு வரும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடிவதில்லை.

Facebook' ல் Status போட்டவுடன் உடனே ஒரு பத்து லைக் வருகிறது, குறைந்தது இருவராவது எதாவது கமெண்ட் சொல்கிறார்கள். ட்விட்டரில் நமது wavelength'ல் சிலர் நம்முடம் பயணிப்பது போல் எண்ணம். அதனால் தான், Facebook' ல் Status எழுதவும் , twitter'ல் ட்விட் செய்யவும் அதிகம் விரும்புகிறேன் என்று நினைக்கிறேன்.

எனக்கே தெரியாமல் Facebook மற்றும் ட்விட்டருக்கு அடிமையாகி விட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து தப்பி, இந்த வலைப்பதிவிற்க்கு மீண்டும் வருவேன் என்ற நம்பிக்கையில், தற்பொழுது வணக்கம் சொல்லி விடை பெற்றுக்கொள்கிறேன்.

Friday, August 5, 2011

பார்த்ததில் பிடித்தது

நடிப்பு என்பது உண்மையாகவே எப்படிதான் இருக்க வேண்டும்???

Monday, August 1, 2011

அன்புள்ள செல்வாவுக்கு

அன்புள்ள செல்வாவுக்கு,

நலம், நலம் அறிய ஆவல். சென்னை வழக்கம் போல் உள்ளது. துபாய் எப்படி உள்ளது என்பதை உன் மூலம் அறிந்துக்கொள்ள ஆவல். நம் செல்போன் உரையாடலில் மற்றவற்றை பேசிக்கொள்ளலாம்.

முதலில் உன்னிடம் ஒரு மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். "தெய்வத்திருமகள்" பற்றி நீ என்னிடம் பதிவு எழுத சொல்லி கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் முடியப் போகிறது. நானும் பதிவு எழுத கடந்த மூன்று வாரங்களும் முயற்சித்து கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் என்ன எழுதுவது என்று குழப்பம். நல்ல படம் என்றா??, அற்புதமான திரைப்படம் என்றா??, இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம் என்றா??. ஆனால், இப்படி இதை எழுதினாலும் அதற்கு காரணம் வேண்டும், அந்த காரணங்களைதான் கடந்த மூன்று வாரங்களாக தேடிக்கொண்டு இருக்கிறேன்.


இருப்பதிலேயே மிகவும்  கஷ்டமன விசயங்களில் ஒன்று திரைப்படம் அல்லது புத்தகங்களைப் பற்றி கருத்து சொல்வது. ஒரு புனைவுகதையை எப்படி வேண்டுமானாலும் தொடங்கி, நமக்கு தோடாவதுப் போல் முடித்துக்கொள்ளலாம, ஆனால் ஒரு திரைப்படத்தைப் பற்றியோ ஒரு புத்தகத்தைப் பற்றியோ அவ்வளவு எளிதில் சொல்லிவிட கூடாது. சிலருக்கு இது ஒரு சென்சிடிவ் விசயம். நாம் சொல்லும் சில தவறானக் கருத்தால் அவர்கள் மனது பாதிக்க வாய்ப்புகள் அதிகம்.



இப்படி நான் குழப்பம் அடைவது, எனக்கு இது முதல் தடவை அல்ல. இதே போல் பல திரைப்படங்களுக்கு குழப்பம் அடைந்திருக்கிறேன். அந்த மாதிரி நேரங்களில், அந்த திரைப்படத்தைப் பற்றி எதுவுமே எழுதாமல் தப்பித்து விடுவேன். ஆனால், இந்த முறை நீ விருப்பப்பட்டு இரண்டாவது முறையும் கேட்ததால், இதை எழுத வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

கடந்த மூன்று வாரங்களாக இணையத்தில் தமிழ் மக்களால் அதிகம் பேசப்பட்ட திரைப்படம் எது என்பது உனக்கு தெரியுமா?? அது "I am Sam". நான் இன்னும் "I am Sam" திரைப்படத்தை பார்க்கவில்லை, டவுன்லோட் செய்து வைத்திருக்கிறேன், இனிமேல்தான் பார்க்க வேண்டும்.

"தெய்வத்திருமகள்" - "I am Sam" திரைப்படத்தின் காப்பி என்கிறார்கள் சிலர்.அப்படியே காப்பியாக இருந்தால்தான் இப்பொழுது என்ன??. எவ்வளவு அற்புதமாக தமிழில் எடுத்து இருக்கிறார் விஜய். நண்பா உனக்கு தெரிந்திருக்கும், அமீர் நடித்த 'யோகி' திரைப்படம் பற்றி, அது ''Tsosti" என்ற தென் ஆப்பிரிக்கா திரைப்படத்தின் காப்பி என்று. 'Tsosti' இயக்குநர் மட்டும் யோகியைப் பார்த்து இருந்தால், கண்டிப்பாக தூக்கு மாட்டி தொங்கியிருப்பார். அந்த வகையில் விஜய்'யை நாம் கோயில் கட்டிக் கும்பிடலாம்.

ஒரு ஆங்கிலத் திரைப்படத்தை காப்பி செய்து தமிழில் எதுக்க கூடாதா, நண்பா?? அதில் என்ன தவறு இருக்கிறது. "இல்லை இது தவறுதான்" என்று சொல்கிறான் நமது  நண்பன் அருண்.  இவர்கள் எதை தவறு என்று சொல்கிறார்கள் என்பதைதான் என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. சரி அப்படி காப்பி அடித்தால், டைட்டில் கார்டில் நன்றிகள் என்று அந்த ஆங்கிலப் திரைப்படத்தின் பெயரையும் போட வேண்டுமாம். கொஞ்சம் நினைத்துப்பார் நண்பா, நாம் நன்றிகள் என்று போட்டு அதை ஒருவேளை அந்த ஆங்கிலப் பட நிறுவனம் பார்த்தால், காப்பிரைட் என்ற பெயரில் எத்தனை கோடிகளை நாம் அவர்களுக்கு தர நேரிடும். அதை வைத்து பல எந்திரன் திரைப்படங்களை நாம் எடுத்துவிடலாம்.

சமீபத்தில் பாரபாஸ் என்ற புத்தகம் படிக்க நேர்ந்தது. பாரபாஸ் யார் என்று உனக்கு தெரிந்திருக்கும், இவருக்கு பதிலாகதான் இயேசு சிலுவையில் ஏற்றப்பட்டார். அந்த பாரபாஸ் பற்றிய புத்தகம் அது. இயேசுவை நம்பலாமா?/, அவர் உண்னையாகவே கடவுளின் குழந்தையா?? என்று தன் வாழ்நாள் முழுவதும் பாரபாஸ் குழம்பியதாக அந்த  புத்தகத்தில் சொல்கிறார்கள். அற்புதமான புத்தகம்,  இந்த புத்தகம் 1950'களில் நோபல் பரிசு வாங்கியுள்ளது, இது ஒரு சுவீடிஷ் மொழி நாவல். இதை க.நா.சு தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவர்கள் சொல்வது போல், காப்பியடிப்பது தவறு என்றால் இப்படிப்பட்ட ஒரு நல்ல நாவல் தமிழில் வந்தேயிருக்காது.

சரி, மொழிபெயர்ப்பு வேறு காப்பியடிப்பது வேறு என்று கூட சிலர் சொல்லக்கூடும். மொழிபெயர்ப்பு என்பதை சினிமாவில் டப்பிங் என்று வைத்துக்கொள்வோம். சமீபத்தில் அப்படி ஒரு டப்பிங் திரைப்படத்தை சன்'டிவியில் சில வாரங்களுக்கு முன்னால் பார்க்க நேர்ந்தது. அந்த படத்தின் பெயர் ""The Shawshank Redemption". என்ன அற்புதமாக டப்பிங்  செய்திருந்தார்கள் தெரியுமா?? கண்டிப்பாக ரஜினியின் பாட்டு எங்காவது நடுவில் வரும் என்று எதிர்ப்பார்தேன். அந்தளவு அற்புதமாக இருந்தது நண்பா.

"தெய்வத்திருமகள், நந்தலாலா" போன்ற திரைப்படங்கள் எந்த ஆங்கிலத் திரைப்படத்தின் காப்பியாக இருந்தாலும் சரி. நிச்சயமாக தமிழில் வரவேற்க வேண்டிய திரைப்படங்கள் என்றே நான் நினைக்கிறேன்.

எங்கோ ஆரம்பித்து எங்கோ சென்று விட்டேன், நண்பா. "தெய்வத்திருமகள்" உண்மையாகவே நல்ல திரைப்படம், கண்டிப்பாக ஆனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம். இது இப்பொழுது அனைவருக்கும் தெரிந்த ஒன்றும் கூட. இந்த வார ஆனந்த விகடனில் சாராவை பேட்டி எடுத்திருந்தார்கள். நீ கூடப் படித்திருக்கலாம் நண்பா. என்னுடைய இப்பொழுதைய கவலை எல்லாம் சாராவை இது போல அபத்தங்களிலிருது காக்க வேண்டும் என்பதுதான்.

மீண்டும் சந்திப்போம் நண்பா.

இப்படிக்கு,
சரவண வடிவேல்.வே