Tuesday, November 29, 2011

பார்க்கிங் செய்த டூ-வீலரை கண்டுபிடித்தது எப்படி..

குறிப்பு: வாசகர்களின் விருப்பபடி "பார்க்கிங் செய்த டூ-வீலரை கண்டுபிடிப்பது எப்படி??" என்ற தலைப்பு "பார்க்கிங் செய்த டூ-வீலரை கண்டுபிடித்தது எப்படி" என்று மாற்றப்பட்டுள்ளது.


கொஞ்ச நாட்களாகவே நான் எழுதுவது எதுவும் புரியவில்லை என்று பலர் வருத்தப்படுகிறார்கள். எழுத்து புரியாத காரணத்தினால், என் வலைப்பதிவுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துக்கொண்டே போகிறது. Google analytics'ம் இதை உறுதிப்படுத்துகிறது. Visitors எண்ணிக்கை குறைய ஒருவேளை இந்த வலைப்பதிவை பலர் Google Reader'ல் படிக்கத்தொடங்கி இருப்பது  கூட காரணமாக இருக்கலாம். எது எப்படி இருந்தாலும், என்னுடைய சமீபத்திய எழுத்து புரிவதில்லை என்று புகார் சொன்னவர்களுக்காக அனைவருக்கும் புரியும் படி , "பார்க்கிங் செய்த டூ-வீலரை கண்டுபிடிப்பது எப்படி??" என்ற இந்தப் பதிவை எழுத முடிவு செய்துள்ளேன். மேலும் கொஞ்ச நாட்களாக நான் இழந்த பழைய வாசகர்களையும் இந்த பதிவின் மூலம் மீண்டும் பிடித்துவிடலாம் என்று நினைக்கிறேன்.

சென்னையில் உள்ள பெரிய பிரச்சனைகளில் பார்க்கிங் பிரச்சனையும் ஒன்று. டூ-வீலரை கூட நீங்கள் எதாவது ஒரு சந்து கிடைத்தால் பார்க்கிங் செய்துவிடலாம், ஆனால் காரை பார்க்கிங் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் செத்தீர்கள். டி.நகரில் காரை பார்க்கிங் செய்பவர்கள் எல்லாம், காலை ஆறு மணிக்கே வந்து காரை பார்க்கிங் செய்துவிட்ட பின்னர்தான் வீட்டுக்கு குளிக்க செல்வார்கள் என்று நினைக்கிறேன்.  என்னிடம் இருப்பது டூ-வீலர் மட்டும்தான் என்பதால், கார் வைத்திருப்பவர்கள் எப்படியாவது நாசமாய் போகட்டும் என்று சொல்லிவிட்டு, இங்கு டூ-வீலர் பார்க்கிங்கை மட்டும் பேசுவோம்.

இப்பொழுது புதிதாகக் கட்டப்பட்டு இருக்கும்  EA மாலில் பார்க்கிங் செய்வதற்கு என்றே தனியாக "அன்டர் கிரவுண்ட்" இடம் இருப்பதால் பார்க்கிங்குக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால், பார்க்கிங் கட்டணத்தை கேட்டால் நாம் தலைச்சுற்றி மயங்கி கிழே விழுவது நிச்சயம். மூன்று மணிநேரம் திரைப்படம் பார்க்க EA'வில் டிக்கெட் கட்டணம் ரூபாய் 120, அதே மூன்று மணிநேரத்திற்கு பார்க்கிங் கட்டணம் குறைந்தது 50 ரூபாய். சனி, ஞாயிறு என்றால் கட்டணம் இரண்டு மடங்காகும்.

இப்படிபட்ட கொள்ளையர்கள் ரூம் போட்டு வசிக்கும் EA'வுக்குதான் போன சனி அன்று டூ-வீலரில் "மயக்கம் என்ன" திரைப்படம் பார்க்க போனேன். ராக்கியிலும், தேவி கருமாரியிலுமே திரைப்படம் பார்த்து பழக்கப்பட்ட நான், EA'வுக்கு போனதிலும் ஒரு காரணம் இருக்கிறது. எனது அலுவலக தோழி ஒருத்தியும் திரைப்படம் பார்க்க வந்திருந்தாள். அவள் தீவிர செல்வராகவன் ரசிகையாம். இங்கே தோழி என்ற வார்த்தையை கேட்டவுடனே நீங்கள் என் மீது பொறாமை கொள்ள தொடங்கியிருப்பீர்கள். இப்பொழுது உங்களுக்கு தெரிகிறதா, நான் எதனால் யாருக்கும் புரியாத மாதிரியே எழுதுகிறேன் என்று??

திரைப்படம் ஆரம்பிக்கும் வரை நன்றாக பேசிக்கொண்டு இருந்தவள், திரைப்படம் ஆரம்பித்த பின் ஒரு வார்த்தை பேசவில்லை. இந்த மவுனம் திரைப்படம் முடியும் வரை தொடர்ந்தது. இடைவேளையில் மட்டும் ஒரு முறை வாயை திறந்து "One Coke and Black Forest Cake" என்றாள். செல்வராகவனின் ரசிகைகள் கூட செல்வராகவன் திரைப்படத்தின் கதாநாயகிகள் போலவே தான் இருக்கிறார்கள். திரைப்படம் முடிந்தவுடனேயே, அவளுடைய அப்பா வெளியில் அவளுக்காக வெயிட் செய்வதாக சொல்லி அவள்  சென்றுவிட்டாள்.

இனிமேல் தான் பிரச்சனையே. இந்த பதிவின் தலைப்புக்கு இப்பொழுதுதான் வரப்போகிறோம். எனது டூ-வீலரை எடுக்க பார்க்கிங் ஏரியாவுக்கு வந்தால், நான் வண்டியை பார்க்கிங் செய்த இடம் மறந்துவிட்டது. எனக்கு ஞாபக மறதி அதிகம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்தது தான் என்றாலும், என்னுடைய ஞாபக மறதியை எடுத்துக்காட்டுடன் சொல்லவேண்டும் என்றால், என்னுடைய வண்டி நம்பர் எனக்கே ஞாபகம் இருக்காது.

ஒருவழியாக வண்டி நம்பரை ஞாபகம் செய்து, வண்டியை தேடினால் எங்கேயும் காணோம். தூரத்திலிருந்து பார்க்கும் போது நமது வண்டியை போல இருக்கும், ஆனால் பக்கத்தில் போனால், வண்டி நம்பர் வேறாக இருக்கும். நானும் எனது தோழியும் ஒன்றாகதான் வந்தோம் என்பதால், அவளுக்கு போன் செய்து கேட்கலாம் என்று பார்த்தால், அவளும் போனை எடுக்கவில்லை.

ஒருவழியாக இருபது நிமிடம் கழித்து அவள் போன் செய்து சொன்னபின்தான் தெரிந்தது " EA'வில்  B1, B2, B3 என்று மூன்று அடுக்கு இருப்பதாகவும், நான் வண்டியை நிறுத்தி இருப்பது B3'ல், நான் இப்பொழுது தேடிக்கொண்டு இருப்பது B2'வில்" என்று. கடைசியில் டூ-வீலரை எடுத்துக்கொண்டு வாயிலுக்கு செல்கையில் அங்கே இருவர் தயாராக நின்றுக்கொண்டு இருந்தனர், எனக்கான கட்டணத்தை சொல்ல.

இப்பொழுது என்னுடைய சந்தேகங்கள் எல்லாம்,
1) அவள் என்னுடன் வந்ததால்தான் நான் பார்க்கிங் செய்த இடத்தை மறந்துவிட்டேனா??
2) எதற்காக எனக்கு மட்டும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை எதாவது ஒரு பெண் மூலம் பிரச்சனை வந்துக்கொண்டே இருக்கிறது??
3) இந்த பெண்னை எப்பொழுது காதலிக்க தொடங்கினேன்??

Saturday, November 26, 2011

ஒரு அறிமுகம்


வார்த்தைகளோடு அலைபவன்
3.ஒரு அறிமுகம்

சொற்களுக்கும் வார்த்தைகளுக்கும்
என்ன வித்தியாசம் என்றாய்.
சொற்களுக்கு அர்த்தம் உண்டு
வார்த்தைகளுக்கு இல்லை என்றேன்,
புரிந்தவளாய் தலையாட்டினாய்.

உன்னுடைய பயம் எனக்கு புரிகிறது. நீ பயப்படுகின்றளவு இன்னும் எதுவும் எனக்கு மோசமாக நடந்து விடவில்லை. ஒரு சிறிய வித்தியாசமான முயற்சி அவ்வளவு தான். உனக்கு புரிகிறதா?? கண்டிப்பாக உனக்கு புரியும். எனக்கு இதைச் சொல்லி கொடுத்தவளே நீ தானே. எத்தனை முறை என் கண்களை உன் புடவையால் கட்டிவிட்டு இந்த உலகத்தைப் பார்க்க கற்றுக்கொடுத்திருக்கிறாய்.

முதலில் எனக்கு காதலியாக அறிமுகமாகி, பின்னர் என் தோழியாக மாறி, வரும் காலத்தில் யாருக்கோ மனைவியாக மாறப் போகும் நீ தானே, என் எழுத்துக்கு காரணம். என்னுள் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறாய். பாரதியின் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் "யாதுமாகி நின்றாய்"

நம்முடைய முதல் சந்திப்பு ஏதோ  ஒரு திரையரங்கில், ஏதோ ஒரு கோயிலில், ஏதோ ஒரு கடற்கரையில்,  ஏதோ ஒரு பேருந்து நிறுத்ததில், ஏதோ ஒரு இணைய அரட்டையில் நடந்ததாக தானே நீ நம்பிக்கொண்டிருக்கிறாய். கண்டிப்பாக இல்லை.  நம்முடைய முதல் சந்திப்பு எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது அது ரமேஷ்-பிரேம் எழுதிய "சொல் என்றொரு சொல்" என்ற புத்தகத்தில் நடந்தது.

முதல் பக்கத்திலிருந்து எண்ணினாலும், கடைசி பக்கத்திலிருந்து எண்ணினாலும் பக்க எண்கள் ஒன்றாக இருக்கும் ஒரு பக்கத்தில்தான் நமது முதல் சந்திப்பு நடந்தது. அந்த புத்தகத்தை முதல் முதலாக படித்த நான், ஏதோ ஒரு பக்கத்தில் ஏதோ ஒரு கதாபாத்திரம் வழியாக புத்தகத்தில் காணாமல் போய் இருந்தேன். அப்பொழுது நீ தானே வந்து என்னைக் காப்பாற்றினாய். நீ மட்டும் இல்லை என்றால், அந்த இருள் நகரத்தில் ஒரு தெருவில் இன்னும் நான் அழைந்துக்கொண்டிருந்து இருப்பேன்.

நம்முடைய முதல் சந்திப்பைப் பற்றி நான் உன்னிடம் சொல்லும் போதெல்லாம் நீ என்னைப் பார்த்து சிரிக்கிறாய். நீ நம்புவதாக இல்லை. எனது கற்பனை திறனைப் பாராட்டுகிறாய்.

நம்முடைய இரண்டாம் சந்திப்பு நகுலன் எழுதிய ஒரு புத்தகத்தில் தான் நடந்து என்பதை நான் சொன்ன போது, நீ அதை ஒரு மிக புனைவு என்கிறாய். நகுலன் புத்தகத்தில் ஏதோ ஒரு சுசீலாவின் வழியாக காணாமல் போக இருந்த உன்னை, நான் தானே மீட்டுக்கொண்டு வந்தேன் என்பதைக் கூடவா மறந்து விட்டாய்??

எது எப்படியிருந்தாலும் இந்த "வார்த்தைகளோடு அழைபவன்" கதைகளை உனக்கே சமர்ப்பிக்கிறேன். நீ என்னுடனோ அல்லது உன் நினைவுகள் என்னுடனோ இருக்கும்வரை இந்த பைத்தியக்காரத்தனங்கள் தொடரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.  

Friday, November 25, 2011

முகநூல் கதைகள்

நான் சிறுவனாக இருந்த போது வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் என்னிடம் கேட்கும் கேள்விகள் இப்படியாகதான் இருக்கும். " பெயர் என்ன??" "எத்தனாவது படிக்கிற??" "நல்லா படிக்கிறீயா??". கொஞ்சம் நெருங்கிய சொந்தம், மற்றும் குழந்தைகளை பிடிக்கும் என்றால் இன்னொரு கேள்வியும் சேர்ந்து வரும், அது " உனக்கு எத்தனை பிரண்ட்ஸு??". இப்பொழுது என்னிடம் யாராவது இந்த கேள்வியை கேட்டால் நான் "291" என்று பதில் சொல்லியிருப்பேன். இது என்னுடைய முகநூல் (Facebook) நண்பர்களின் எண்ணிக்கை. நீங்கள் இதைப் படித்துக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் அந்த எண்ணிக்கையில் சில மாற்றங்கள் நடந்திருக்கலாம். நானாவது பரவாயில்லை, எனக்கு தெரிந்த எங்க ஊர் பெண்ணொருத்தி, முகநூலில் இருக்கிறாள், அவளின் நண்பர்களின் எண்ணிக்கை 1266. இன்னும் சில நாட்களில் அவளின் நண்பர்களின் எண்ணிக்கையை பவரில் தான் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன், 2 பவர் 8 என்று சொல்வோமே அப்படி. அவள் இப்பொழுதுதான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறாள் என்பது இங்கு கூடுதல் செய்தி.

முகநூலில் பல நன்மைகளும் இருக்கதான் செய்கிறது. எடுத்துக்காட்டுக்கு பல வருடங்களாக நாம் தேடிக்கொன்டு இருக்கும் நண்பர்களை சுலபமாக கண்டுபிடித்துவிடலாம். பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள் என்று அனைவரையும். என்னுடைய பள்ளி நண்பர்களை தேடி நான் முகநூல் வரைக்கும் போக வேண்டிய அவசியம் இல்லை. நாகையில் இருப்பதே நான்கு தெருக்கள்தான் என்பதால், ஊருக்கு போகும் போது அவர்களை நேரிலேயே சந்தித்துவிடலாம். கல்லூரி நண்பர்களை கண்டுபிடிக்கதான் முகநூல் எனக்கு ரொம்ப உதவியது. நான் மூதலாம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்த போது என்னுடன் கல்லூரியில் மூதலாம் ஆண்டு சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 1500 அருகில். நான் படித்த எலக்ட்ரானிக்ஸுக்கு மட்டும் ஏ, பி, சி, என்று மொத்தம் ஒன்பது வகுப்புகள், ஒரு வகுப்புக்கு 60 மாணவர்கள் என்றால், மொத்தமாக எலக்டிரானிக்ஸ் படித்தவர்களின் எண்ணிக்கை 500'யை தொடும். நான்கு ஆண்டு கல்லூரி படிப்பு முடித்தப்பின் கூட அந்த 500'ல் பாதி பேரிடம்தான் எனக்கு பழக்கம் எற்பட்டு இருந்தது.

அந்த 500'ல் ஒருவனிடம் இருந்துதான் சமீபத்தில் எனக்கு Friend Request வந்திருந்தது. நான் அவனிடம் கல்லூரியிலேயே நான்கு முறைக்கு மேல் பேசியிருக்கமாட்டேன். சரி சும்மா கொடுத்து இருப்பான் போல, நானும் என்னுடைய நண்பர்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடுமே என்று முடிவு செய்து, எனது நண்பர்கள் பட்டியலில் சேர்த்துக்கொண்டேன்.

அடுத்த நாளே அவனிடமிருந்து முகநூலில் எனக்கு ஒரு செய்தி வந்திருந்தது. "Hi Machi, How r u??. காலையிலேயே அனுப்பி இருப்பான் போல், நான் மாலையில்தான் அந்த செய்தியை படித்தேன்.  "நலம்" என்று நானும் ஒரு செய்தியை அனுப்பினேன். பின்னர் எனக்கும் அவனுக்கும் நடந்த முகநூல் உரையாடல் கீழே,

"How is ur Class mates da?? still in Touch??"

"Yes Machi, every one fine"

"hey, i lost ur contact number, can u pls msg me from ur number. My New number: 98213######"

இனி எனக்கும் அவனுக்கும் நடந்த செல்போன் குறுஞ்செய்தி உரையாடல்..

"Ashok here. It's my Number"

"Thanks Machi"

அடுத்து அவனிடமிருந்து வந்த குறுஞ்செய்திதான் இந்த பதிவுக்கு காரணம்,

"Machi, are you having ur classmate gowri phone number??"
 
என்னுடய கேள்வி எல்லாம், ஆறுபது பேர் படித்த எங்கள் வகுப்பில் என்னிடம் மட்டும் அவன் இந்த கேள்வியை கேட்க காரணம் என்ன??. உண்மையாகவே இவர்களாம் என்னைப்பற்றி என்னதான் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்???

"Sorry Da, i dont have. She is in facebook"

"ok machi..np"


Thursday, November 10, 2011

.


என்னால் இதுவரைப் பாதுகாக்கப்பட்ட ரகசியம் ஒன்று,
என் கண் முன்னே, தெரு நடுவில் நடக்க கண்டேன்.

பாதசாரிகள்
வாகன ஓட்டிகள்
பிச்சைகாரர்கள்
நண்பர்கள்
உறவினர்கள்
என்று
யாராலும் அதை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

வழக்கம் போல் என் கண்களை மூடிக்கொண்டேன்
ரகசியம் பாதுகாக்கப்பட்டுவிட்டது என்ற நம்பிக்கையில்.


"ஒரு ரகசியம் உருவாகியது" கிறுக்கலின் தொடர்ச்சி