Saturday, November 1, 2008

அசோக்கின் ரகசியங்கள் - சிறுகதை

( இது சோதனை முயற்சி தான். தயவு செய்து தவறுகள் இருந்தால் சொல்லவும், என்னை திருத்திக்கொள்கிறேன் )


அசோக் இப்பொழுது DVD'ல் "Jaane Tu Ya Jaane Na" திரைப்படம் பார்த்துக் கொண்டு இருக்கிறான். விடுமுறையில் ஊருக்கு வந்த இந்த ஒரு வாரத்தில் அந்த திரைப்படத்தை ஏழு, எட்டு முறையாவது பார்த்து இருப்பான். நாம் நினைப்பது போல் அந்த " Kabhi Kabhi Aditi Zindagi" பாடலுக்காகவோ அல்லது நட்பும் காதல் ரசமும் சொட்டுகின்ற காட்சிகளுக்காகவோ அசோக் அந்த திரைப்படத்தை பார்க்கவில்லை. சொல்லபோனால் அசோக் அந்த படத்தை ஒரு முறைக் கூட முழுமையாக பார்த்தது கிடையாது. அவனுக்கு அந்த திரைப்படத்தில் பிடித்தது எல்லாம் 58வது நிமிடத்தில் வரும் அந்தக் காட்சி மட்டும் தான்.

அந்தக் காட்சியில் ஜெனிலியாவும் அவள் தம்பியும் மனம் விட்டு பேசிக் கொள்வார்கள். சிறுவயதில் தங்களுக்குள் இருந்த நட்பு எப்படி காணாமல் போனது என்பது பற்றி. அவள் தம்பி ஐந்தாம் வகுப்பில் ஜெனிலியா கூடப் படித்த நண்பர்களின் பெயர்களைக் கூறி, அவர்களை பற்றி விரிவாக சொல்லிக் கொண்டே போவான். பிறகு ஜெனிலியாவிடம் தன்னுடன் படித்த நண்பர்களின் பெயர் எதையாவது ஒன்று மட்டும் கூறும்மாறு சொல்வான். ஆனால் ஜெனிலியாவாள் ஒரு பெயரைக் கூட ஞாபகபடுத்த முடியாது. அதற்கு ஜெனிலியா தம்பி கூறும் பதில் " எனக்கு இருந்த ஒரே நண்பன் நீ மட்டும் தான் ".

இது தான் அசோக்கிற்கு அந்த திரைப்படத்தில் பிடித்த காட்சி. அசோக் சிறுவயதில் படித்தது எல்லாம் தஞ்சையில் தான். வீட்டில் அவனுக்கு அம்மா,அப்பாவிடம் செல்லம் அதிகம், இருந்தாலும் அவனை " நல்லா படி, நல்லா படி" என்று சொல்லிக் கொண்டே இருப்பதால் அவனுக்கு அம்மா,அப்பாவை பார்க்கவே பயமாக இருக்கும். அதனால் அசோக் வீட்டில் அதிகம் பேசுவது என்றால் அது அவன் அக்காவிடம் தான். அசோக் தொடர்ந்து அக்காவிடம் எதாவது பேசிக் கொண்டே இருப்பான், அக்கா அதை பொருமையாக கேட்டுக் கொண்டே இருப்பாள். அம்மாவே பலமுறை " அக்காவும் தம்பியும் அப்படி என்ன தான் ரகசியம் பேசுவீங்களோ?? " என்று கேட்டு இருக்கிறாள். அசோக் தினமும் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன், பள்ளியில் நடந்த விசயங்களை அனைத்தையும் ஒன்று விடாமல் அப்படியே அக்காவிடம் சொல்வான். அவன் முக்கியமாக கூறுவது அவனுக்கு மட்டும் தெரிந்த ரகசியங்களை. " நாளை english sir வரமாட்டார்", " வரும் சனிக்கிழமை school off-day" என்பது போன்ற ரகசியங்களை. இவனுக்கு மட்டும் எப்படி இது எல்லாம் தெரியும் என்று அக்காவே பலமுறை வியந்து இருக்கிறாள். அசோக் அந்த வியப்புக்காகவே பல ரகசியங்களை சேகரித்து அக்காவிடம் சொல்வான்.

நாட்கள் கடந்தன. பள்ளிப் படிப்பை முடித்து மதுரையில் உள்ள பொறியியல் கல்லூரியில் சேர்ந்தாள் அசோக்கின் அக்கா. மாதத்திற்கு ஒருமுறை மட்டும் வரும் அக்காவிடம் சொல்வதற்காக ரகசியங்களை சேகரிக்க தொடங்கினான் அசோக். தான் யாரிடமும் பேசாத ஒவ்வொரு வார்த்தையும் ரகசியம் என்று நம்பினான். மற்றவர்களிடம் பேசுவதை குறைத்துக் கொண்டான். மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறாமல், அந்த கேள்விக்கான பதிலை ரகசியமாய் பாதுகாக்க தொடங்கினான். இப்படி பாதுகாத்த அனைத்து ரகசியத்தையும் விடுமுறையில் வரும் அக்காவிடம் கூறுவான். ஆனால் அசோக்கின் அக்காவோ, அவன் பேச்சு முழுவதையும் கேட்காமல் செல்போனை எடுத்துக் கொண்டு வீட்டில் எங்காவது உட்கார்ந்து கொண்டு செல்போனில் பேச தொடங்கிவிடுவாள்.

இப்படி தான் அசோக்கிற்கும் அவன் அக்காவிற்கும் முதல் இடைவெளி தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக அசோக்கும் அவன் அக்காவும் பேசி கொள்வது குறைந்தது. அவனும் அவன் அக்காவும் பிரியக் காரணமாக இருந்த செல்போனை அவன் வெறுத்தான்.

ஆனால் அவன் ரகசியங்களை சேமிப்பதை நிறுத்தவே இல்லை. அவன் ரகசியங்களை கேட்க ஆட்கள் இல்லாததை பற்றி அவன் வருத்தபடவே இல்லை. அசோக் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்த பிறகும் இந்த பழக்கத்தை நிறுத்தவில்லை. கல்லூரியில் கண்டிப்பாக மற்றவர்களிடம் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டது, அந்த நேரங்களில் அவன் பொய் சொல்ல தொடங்கினான். தான் மறைத்த ஒவ்வொரு உண்மையும் ஓர் ரகசியம் என்று நம்பினான். இன்னும் இரண்டு மாதத்தில் அசோக்கின் அக்கா திருமணம் ஆகி அமெரிக்கா சென்று விடுவாள். ஆனால் அசோக்கின் ரகசியங்கள் ???.....

2 comments:

Ree_mathi said...

good one ....

Shakthee said...

நல்ல பதிவு....!!!!!
ரகசியங்கள் மேலும் தொடர வாழ்த்துக்கள்...!!!!