Showing posts with label NSE. Show all posts
Showing posts with label NSE. Show all posts

Saturday, January 28, 2023

Hindenburg நிறுவனத்தின் அதானி ரிப்போர்ட்

காக்கா அமர்ந்து மரக்கிளை சாய்ந்த கதையாக, நான் கடந்த 21-ஆம் தேதி அதானி குழுமத்தைப் பற்றி எழுத, 24-ஆம் தேதி Hindenburg நிறுவனம் அதானி குழுமத்தின் முறைகேடுகள் குறித்து 88 அம்சங்களைக் கொண்ட அறிக்கையை ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது.

அதானி குழுமத்தின் அனைத்து பங்குகளும் கடந்த இரண்டு நாட்களில் 20–30 சதவீதம் வரை சரிந்துள்ளன. இன்னும் எவ்வளவு குறையும் என்று தெரியவில்லை. இதற்கிடையில், அதானி Enterprises நிறுவனத்தின் FPO கடந்த 27-ஆம் தேதி தொடங்கியுள்ளது.

FPO-வில் அதானி Enterprises பங்கின் விலை ரூ.3112. ஆனால் திறந்த சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை (27-01-2023) அதானி பங்கின் விலை ரூ.2761 ஆக இருந்தது. கண்டிப்பாக இந்த FPO தோல்வியடையும் என்று அனைவரும் கூறிக்கொண்டிருக்க, அதானி நிறுவனமோ இந்த FPO வெற்றிகரமாக நடைபெறும் என்று அறிவித்துள்ளது. அதற்கான மறைமுக ஏற்பாடுகளை இந்நேரம் அந்த நிறுவனம் தொடங்கியிருக்கலாம்.

வரும் திங்களன்று அதானி பங்கு மீண்டும் ரூ.3000-ஐத் தொடும் என்று எதிர்பார்க்கலாம்.

Hindenburg நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை சில ஆரோக்கியமான விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. இந்தியாவில் பல துறைகளில் ஏகபோக ஆதிக்கமாக (Monopoly) உருவாகிவரும் அதானி நிறுவனத்திற்கு இது கண்டிப்பாக ஒரு முட்டுக்கட்டையாக அமையும்.

சிலர், “ஒரு அமெரிக்க நிறுவனத்தின் அறிக்கையை நாம் ஏன் நம்ப வேண்டும்?” என்று கேட்கிறார்கள். மோடியைப் பற்றிய பிபிசி ஆவணப்படத்திற்கும் இதைத்தான் சொன்னார்கள். அவர்களிடம் பேசி எந்தப் பயனும் இல்லை.

 

கடைசியாக ஒன்று. பங்குச் சந்தைக்கு புதிதாக வருபவர்களுக்கும், அதைப் பற்றி கற்றுக்கொள்ள நினைப்பவர்களுக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு. அந்த Hindenburg நிறுவனத்தின் அறிக்கையை முழுமையாகப் படியுங்கள்; புரிந்தாலும் சரி, புரியாவிட்டாலும் சரி.

மேலும், இதன் தொடர்ச்சியாக அடுத்து நடக்கப் போகும் விவாதங்கள் மற்றும் மாற்றங்களை தொடர்ந்து கவனியுங்கள். சந்தையில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று முன்கூட்டியே அனுமானித்து, அதன் படி நடக்கிறதா என்று சரிபாருங்கள்.

ஒரே செய்தி நிறுவனத்தின் செய்தியை மட்டும் படித்து முடிவு செய்யாதீர்கள். முக்கியமாக, தொலைக்காட்சி சேனல்களை மட்டுமே நம்பாமல் செய்தித்தாள்களையும் படியுங்கள்.

இப்போதைக்கு பணத்தை முதலீடு செய்யாமல் இருப்பதே நல்லது.

Hindenburg நிறுவனத்தின் அதானி அறிக்கை:
https://hindenburgresearch.com/adani/



 



Saturday, January 21, 2023

துணிவு திரைப்படமும், Yes bank AT1 Bond, LIC மற்றும் அதானி ஷேர்களும்....

“துணிவு” திரைப்படத்தில் வருவது போல் Mutual Fund Scam-க்கு வாய்ப்பு உள்ளதா?” என்று ஒரு விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறபோதுதான், நேற்று உயர்நீதிமன்றம் Yes Bank AT1 Bond Write-off செல்லாது என்று தீர்ப்பு அளித்துள்ளது. இதன் மதிப்பு கிட்டத்தட்ட 8000 கோடி ரூபாய்.

பொதுவாக எல்லா Financial Scam-களும் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. “இதற்கு முன்னாடி இதுபோல் நிறைய தடவை நடந்துள்ளது; ஆனால் இதுதான் First Time” என்ற வாக்கியம் Financial Scam-களுக்கு சுலபமாகப் பொருந்தும்.

மூன்று வருடங்களுக்கு முன்னால், Yes Bank திவாலாகும் நிலைமையில் இருந்தது. உடனே மத்திய அரசும், RBI-யும் Yes Bank-ஐ காப்பாற்ற சில முக்கியமான முடிவுகளை எடுத்தனர். அதில் ஒன்றுதான் இந்த Yes Bank AT1 Bond Write-off. அதாவது, இந்த Bond-ஐ வாங்கியவர்களுக்கு பணம் திருப்பித் தரத் தேவையில்லை.

AT1 Bond-ஐ பொதுமக்களும் வாங்கலாம். ஆனால் பெரிய நிறுவனங்கள், Pension Scheme-கள் மற்றும் Mutual Fund நிறுவனங்கள்தான் அதிகமாக வாங்குவார்கள். இந்த Write-off-ல் அனில் அம்பானியின் Reliance Mutual Fund-க்கு (புதிய பெயர் Nippon Mutual Fund) மட்டும் 2500 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது.

Mutual Fund-க்கு நஷ்டம் என்றால் அது அவர்களின் நஷ்டம் இல்லை; அந்த Mutual Fund-ல் முதலீடு செய்த பொதுமக்களின் நஷ்டம். இந்த Write-off காரணமாக பல Debt Mutual Fund Scheme-கள் அந்த வருடம் Negative Returns கொடுத்தன.

இந்த Yes Bank விவகாரத்தில் மட்டும் “இதுதான் First Time” வகையைச் சேர்ந்த Financial Scam-கள் பல நடந்துள்ளன. அதில் இன்னொன்று, பத்து ரூபாய்க்கு Yes Bank பங்குகளை SBI மற்றும் ஏழு தனியார் வங்கிகளுக்கு ஒதுக்கியது. அவர்கள் அதை 40 ரூபாய்க்கு சந்தையில் விற்று லாபம் பார்த்தார்கள். இதைப்பற்றி பின்னர் ஒரு முறை பொறுமையாகப் பார்ப்போம்.

கடைசியாக, இப்போது நடந்துகொண்டிருக்கும் ஒரு Financial Scam-ஐ பற்றியும் ஒரு வார்த்தை சொல்லிவிடுகிறேன்.

அதானி குழுமத்தின் அனைத்து பங்குகளும் கடந்த ஆறு வருடங்களாக உயர்ந்துகொண்டே வருகின்றன. அதானி Enterprises பங்கின் விலை மட்டும் 7700% உயர்ந்துள்ளது. அதாவது, 2016-ல் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இப்போது அது 78 லட்சம் ரூபாயாக மாறியிருக்கும்.

கடந்த இரண்டு வருடங்களாக LIC நிறுவனம் அதானி குழுமத்தின் பங்குகளை தொடர்ந்து வாங்கி வருகிறது. தற்போது அதானி குழுமத்தின் 5 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகள் LIC-யிடம்தான் உள்ளன.

ஏற்கனவே அதிக விலையில் இருக்கும் அதானி பங்குகளை LIC ஏன் தொடர்ந்து வாங்க வேண்டும்? யார் சொல்லி வாங்குகிறார்கள்?

இதற்கிடையில், அடுத்த வாரம் அதானி நிறுவனம் FPO மூலம் இன்னும் அதிக பங்குகளை சந்தைக்கு கொண்டு வரவுள்ளது. அதையும் இந்த LIC-தான் வாங்கும் என்று பலர் கருதுகிறார்கள்.

எல்லாம் நன்றாக நடக்கும் வரை எந்த Financial Scam-மும் வெளியில் தெரியாது. எங்காவது பிரச்சனை ஏற்பட்டால்தான் இந்த மீடியாக்கள் பக்கம் பக்கமாக எழுதுவார்கள்.

சரி, நேரமாகிவிட்டது. நானும் எனது மகனும் அடுத்து தேவி திரையரங்கில் “வாரிசு” மேட்னி ஷோவுக்குச் செல்ல வேண்டும்.

நன்றி. வணக்கம்.

Thursday, July 11, 2013

கேள்வி-பதில்

கேள்வி:

"Gitanjali Gems ஷேரின் விலை தொடர்ந்து 20 நாட்களாகக் குறைந்துகொண்டே வருகிறதே, என்ன காரணம்? இப்போது இந்த ஷேரை வாங்கினால் ஒரே மாதத்தில் நல்ல லாபம் பார்க்கலாம் என்று நண்பன் சொல்கிறான். நம்பி வாங்கலாமா?" – கதிரேசன், விருதுநகர்

பதில்:

அன்பும், ஷேர்கள் வாங்கப் பணமும் உள்ள கதிரேசன் அவர்களுக்கு வணக்கம்.

மின்னஞ்சலில் நீங்கள் அனுப்பிய கேள்வியைப் பார்த்தவுடனேயே எனக்கு ஒரு அதிர்ச்சி. நீங்கள் எதற்காக இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள் என்று. இதற்கு இரண்டே காரணங்கள்தான் இருக்கக்கூடும். அவை:

1) ஒருவேளை நேற்று நான் எழுதிய MMTC பற்றிய பதிவின் தலைப்பை மட்டும் நீங்கள் படித்திருக்கலாம். ஆகவே, என்னை நீங்கள் ஒரு பங்குச்சந்தை நிபுணர் என்று கருதி இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கலாம். இதுதான் காரணமாக இருப்பின், தயவுசெய்து அந்தப் பதிவை முழுமையாகப் படிக்கவும். அதன் பின் நீங்களே இந்த மின்னஞ்சலை Recall செய்துவிடுவீர்கள்.

அல்லது

2) இரண்டாவது காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை மீண்டும் நீங்கள் மின்னஞ்சல் செய்தால் அந்தக் காரணத்தைச் சொல்லிவிடவும். நானும் என்னைத் திருத்திக்கொள்ள வசதியாக இருக்கும்.

இனி உங்கள் கேள்விக்கான பதில்.

முதலில் Gitanjali Gems ஷேரின் விலை குறையக் காரணம். வேறு என்ன? அகலக் கால்தான்.

2000 ஆண்டுகளுக்கு முன்னால் நம் வள்ளுவர் ஒரு குறளில் சொன்னாரே (நானும் படித்ததில்லை; ஆனால் கண்டிப்பாக 1330 குறள்களில் ஏதாவது ஒன்றில் சொல்லியிருப்பார்), அதன்படி நடந்து இருந்தால் இப்போது பிரச்சனையே வந்திருக்காது.

Gitanjali Gems நிறுவனம் கடனில் தத்தளித்துக்கொண்டு இருக்கிறது. யாரிடமோ வாங்கிய ஒரு பெரிய கடனை இன்னும் ஒரு மாதத்தில் அது திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்தக் கடன் 500 கோடிக்கு அருகில் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்தக் கடன்களைச் சமாளிப்பதற்காக Gitanjali Gems நிறுவனம் 1 வருட, 2 வருட, 3 வருட Deposit-களை வாங்கத் தொடங்கியுள்ளது. அந்த Deposit-களுக்கான வட்டி விகிதங்கள் முறையே 11.5%, 12%, 12.5%.

இது கூட்டுவட்டி முறை என்பதால், நீங்கள் 3 வருடம் Deposit செய்தால் உங்களுக்குக் கிடைக்கும் வட்டி விகிதம் 14.89% என்று இருக்கும்.

இதை எதற்காக இப்போது சொல்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். எனக்குத் தெரிந்தவற்றை யாரிடமாவது சொல்ல வேண்டாமா? என் மனைவியிடமா சொல்ல முடியும்?

சரி, Gitanjali Gems ஷேரை இப்போது வாங்கலாமா என்று கேட்கிறீர்கள். நானும் ஒரே வார்த்தையில் "வேண்டாம்" என்று சொல்லிவிட முடியும். ஆனால் அப்படிச் சொன்னால் நன்றாகவா இருக்கும்? ஆகவே, "வேண்டாம்" என்பதை இப்போது நான் சுற்றிவளைத்துச் சொல்லப் போகிறேன்.

கதிரேசன் அவர்களே, நீங்கள் விருதுநகரிலிருந்து இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள். ஆகவே, நீங்கள் கண்டிப்பாக ஏதாவது ஒன்றின் மொத்த விற்பனையாளராக இருக்க வேண்டும். ஏனென்றால் விருதுநகரில் அவர்கள்தான் அதிகம்.

நீங்கள் சொல்லும் அந்த நண்பர் உங்கள் தொழில் Partner-ஆக இருக்கக்கூடும். அல்லது உங்கள் கல்லூரி நண்பர், பள்ளி நண்பர், பக்கத்து வீட்டுக்காரர், எதிர்வீட்டுக்காரர் என்று இப்படி யாராவது ஒருவராக இருக்கலாம்.

எதிர்வீட்டுக்காரராக இருக்க வாய்ப்பு குறைவுதான். எனக்கும் ஒரு எதிர்வீட்டுக்காரர் இருக்கிறார். வருடத்திற்கு இரண்டு கார்கள் மாற்றுவார். என்னைத் தவிர எல்லோரிடமும் சிரித்துத்தான் பேசுவார்.

என் மனைவியிடம் இதைப்பற்றி ஒருமுறை சொன்னபோது, அவள் சொன்னது:

"எல்லா எதிர்வீட்டுக்காரர்களும் இப்படித்தான்."

உண்மைதானா?

முன்னரே சொன்னதுபோல், Gitanjali Gems ஷேரை வாங்க வேண்டாம். அதன் விலை இன்னும் குறையும் என்று எல்லா டிவி, பேப்பர்களிலும் சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் பேச்சை எப்போதும் நம்பக் கூடாது.

இரண்டு மாதங்களுக்கு முன்னால் Gitanjali Gems ஷேரின் டார்கெட் 800 ரூபாய் என்று சொன்னார்கள்.

கடைசியாக என்னுடைய பெரிய வேண்டுகோள். இந்த ஷேர் மார்க்கெட் பக்கம் போக வேண்டாம்.

அப்படி உங்களிடம் பணம் நிறைய இருப்பின், என்னிடம் கொஞ்சம் தரவும். வருடத்திற்கு 18 சதவீதம் வட்டி தருகிறேன்.

இன்றைக்குத்தான் KVB வங்கியில் 20 லட்சத்திற்கு பிசினஸ் லோன் அப்ளை செய்திருக்கிறேன். ஒருவேளை லோன் கிடைத்தால், லோன் கிடைத்த அடுத்த நாளே உங்களின் அசலைக் கொடுத்துவிடுவேன்.

அப்படி லோன் கிடைக்கவில்லை என்றால், இருக்கவே இருக்கின்றன Gitanjali Gems நிறுவனத்தின் 1 வருட, 2 வருட, 3 வருட Deposit ஸ்கீம்கள்.

நன்றி,

வாழ்க வளமுடன்,

அசோக்.

(பின்குறிப்பு:

பேயோனின் "கடிதம்" பதிவுகளைப் படித்த பின் எழுதியது. பேயோனின் "கடிதம்" பதிவுகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.)










Wednesday, July 10, 2013

MMTC'யும் 16,000 கோடி ரூபாயும்.

முதலில் ஒரு விஷயம். இந்தியாவின் Dis-Investment Policy சரியா, தப்பா என்பதைப் பற்றியது அல்ல இந்தக் குறிப்பு. எண்களைப் பற்றிய ஒரு சின்ன விளையாட்டு, அவ்வளவே.

சென்ற ஆண்டு செபி ஆணையிட்டபடி, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் குறைந்தது 25% பங்குகளையாவது பொதுச் சந்தையில் (பொதுமக்கள், மியூச்சுவல் பண்டுகள், நிதி நிறுவனங்கள் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்) விற்றிருக்க வேண்டும். அதாவது, அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களிடம் 75% பங்குகள் மட்டுமே இருக்க வேண்டும்.

இந்த ஆணை அரசு நிறுவனங்களுக்கும் பொருந்தும். ஆனால் அரசு நிறுவனங்களைப் பொறுத்தவரை இந்த சதவீத எண்கள் 10% மற்றும் 90%.

இப்போது நெய்வேலியில் நடந்துகொண்டிருக்கும் போராட்டத்திற்கும் இதுதான் காரணம்.

இந்த ஆணையைச் செயல்முறைக்குக் கொண்டுவர ஏதுவாக, ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் OFS மூலம் புதிய பங்குகளை விற்கலாம் என்று செபி அறிவித்தது.

OFS என்றால் என்ன? எதற்காக 75% - 25%? எதற்காக இப்படி ஒரு ஆணை? இதனால் யாருக்குப் பயன்?

என்ற கேள்விகளுக்குப் பதில் தேடிக்கொண்டு போனால், இந்தப் பதிவு கன்னித் தீவு போல நீண்டுவிடும். ஆகவே, மேட்டருக்கு வருவோம்.

பங்குச்சந்தையில் உள்ள அனைவருக்குமே MMTC-யைப் பற்றித் தெரிந்திருக்கும். MMTC ஒரு அரசு நிறுவனம். ஒரு காலத்தில் இதன் பங்கு 18,000 ரூபாய் வரை விற்கப்பட்டது. பின்னர் Split மூலம் 1000 ரூபாய்க்கு வந்தது.

இது பழைய கதை.

இப்போது MMTC-யை Dis-Investment Policy காரணமாக OFS மூலம் அதன் பங்குகளை கடந்த மாதம் விற்றார்கள். OFS-ல் ஒரு பங்கின் விலை 60 ரூபாய் என்று நிர்ணயம் செய்தார்கள்.

இந்த விற்பனை மூலம் இந்திய அரசாங்கத்துக்குக் கிடைத்த பணம் 560 கோடி ரூபாய்.

இந்த விற்பனை நடந்தபோது MMTC-யின் ஒரு பங்கு 200 ரூபாய்க்கு பங்குச்சந்தையில் விற்றுக்கொண்டு இருந்தது.

200 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்த பங்கினை அரசாங்கம் 60 ரூபாய்க்கு விற்றதால், MMTC நிறுவனப் பங்கின் விலை கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து குறையத் தொடங்கியது.

இன்றைக்கு NSE-யில் அதன் விலை 67.80.

அதாவது, MMTC பங்கினை விற்பனை செய்ததன் மூலம் அரசாங்கத்துக்கு லாபம் 560 கோடி ரூபாய்.

ஆனால் MMTC நிறுவனத்தின் சந்தை மதிப்பில் 16,000 கோடி ரூபாய் குறைந்துள்ளது.

இதுவே MMTC ஒரு தனியார் நிறுவனமாக இருந்தால் இப்படி நடந்திருக்குமா?

MMTC நிறுவனத்தை Dis-Investment செய்யாமல் De-list செய்திருந்தால், இந்தச் சரிவை மிகவும் சுலபமாகத் தடுத்திருக்கலாம்.

இல்லை, Dis-Investment மூலம் Liquidity அதிகமாகும். MMTC நிறுவனத்தின் உண்மையான மதிப்பு இதுதான் என்கிறார்கள்.

சரி, அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே.

இப்போது MMTC-யின் மதிப்பை அதிகமாகக் காட்டுவதால் யாருக்கு என்ன நஷ்டம்?

எது எப்படியோ, நான் MMTC பங்கு எதையும் வாங்கவில்லை.

MMTC பங்கு வாங்காமலேயே எனது Portfolio 70% நஷ்டத்தில்தான் போய்க்கொண்டு இருக்கிறது.