Sunday, May 10, 2026

ஹலோ

மன்னியுங்கள்…
உங்கள் கொண்டாட்டங்களின் நடுவில்
என்னால் கைதட்ட முடியவில்லை.
உங்கள் முகங்களில் தெரியும் மகிழ்ச்சி,
என் மனதில் மட்டும்
ஒரு கனமான அமைதியை விட்டுச் செல்கிறது.

நீங்கள் இதை வெற்றி என அழைக்கிறீர்கள்;
நான் இதை
வரலாறு தவறாக திரும்பும் தருணம் என பார்க்கிறேன்.
உண்மைகள் தோற்கும் போது,
பிம்பங்கள் அரியணை ஏறும் போது,
கூட்டத்தின் சத்தம் கூட
உங்களுக்கு பாடலாகவே கேட்கிறது.

இன்று ஏற்றப்பட்ட இந்த விளக்குகள்
நாளை எதை எரிக்கப் போகின்றன என்று தெரியவில்லை.
எதையும் எரிக்காமல் இருக்கவே
நானும் விரும்புகிறேன்.

ஆனால்
நமது விருப்பப்படி எல்லாம் நடந்திருந்தால்,
இந்த பதிவு எழுத வேண்டிய அவசியமே
இருந்திருக்காது அல்லவா?

உண்மையாகவே எது அரசியல்?

கல்லூரி காலங்களில் அவன் அரசியலை புத்தகங்களின் வழியாக புரிந்துகொள்ள முயன்றான். லெனினும் கார்ல் மார்க்ஸும் சொன்ன சமத்துவக் கருத்துகளே உலகத்தை மாற்றும் சக்தி என்று நம்பினான். தொழிலாளியின் வலி, ஏழையின் பசி, முதலாளித்துவத்தின் ஆதிக்கம் — இவையெல்லாம் அவனுக்குள் ஒரு கோபத்தையும் புரட்சிக் கனவையும் உருவாக்கின. அந்த நாட்களில் அவனுக்கு பிடித்த நிறம் சிகப்பு. அது ஒரு நிறமல்ல, ஒரு உணர்ச்சி என்று எண்ணினான்.

காலம் நகர்ந்தது. பின்னர் காந்தியின் எழுத்துகளும் அஹிம்சை கொள்கையும் அவனை ஈர்த்தன. வன்முறையால் எதையும் மாற்ற முடியாது, மனிதநேயம் தான் உண்மையான அரசியல் என்று நம்ப ஆரம்பித்தான். காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ் மீது தீராத கோபத்தோடும் பழியோடும் சில ஆண்டுகள் திரிந்தான்.

வேலைக்கு சென்று, வெளி உலகத்தின் உண்மைகளை பார்த்தபோது, சாதி, பணம், அதிகாரம் ஆகியவை மனிதர்களை எப்படி பிரிக்கின்றன என்பதை உணர்ந்தான். அப்போது “இங்கு அனைவரும் சமம்” என்ற பெரியாரின் சிந்தனைகள் அவனுக்கு நெருக்கமானதாக தோன்றின. சமூக நீதி, சுயமரியாதை, பகுத்தறிவு — இவையே உண்மையான அரசியல் என்று நம்பினான்.

பின்னர் வாழ்க்கையில் குடும்பம் வந்தது. பொறுப்புகள் வந்தன. அப்போது “நாங்கள் எல்லாம் திராவிட குடும்பம்” என்று சொல்லிக்கொண்டு வாழ ஆரம்பித்தான். ஆனால் அவனுக்குள் ஒரு கேள்வி மட்டும் தொடர்ந்து இருந்தது — இவையெல்லாம் உண்மையான அரசியலா, இல்லை ஒவ்வொரு காலத்திலும் மனிதன் பிடித்துக் கொள்ளும் அடையாளங்களா?

இப்படி பல அரசியல் கோட்பாடுகளிலும் சிந்தனைகளிலும் சிக்கி, குழம்பிப் போய் நடந்தான் அவன். அந்த நேரத்தில் எதிரில் ஒருவன் வந்தான். அரசியல் பற்றி ஆழமாக ஒன்றும் தெரியாமலேயே பெரிய வார்த்தைகள் பேசினான். மக்கள் மனதை கவரும் வசனங்களை சொன்னான். அவனைச் சுற்றி ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். சிந்தனையை விட பிம்பத்தையும் உண்மையை விட உணர்ச்சியையும் நம்பும் அந்த கூட்டத்தை பார்த்தபோது, அவனுக்குள் இருந்த நம்பிக்கையே உடைந்தது.

“இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்,” என்று உரக்கச் சொல்லிவிட்டு, திரும்பிப் பார்க்காமல் அவன் நடந்தான்.