சிறுசேரியில் உள்ள அப்துலின் அபார்ட்மெண்ட் சென்று கொஞ்சம் refresh செய்துகொண்டு, பின்னர் அவனையும் அழைத்துக்கொண்டு பாண்டிச்சேரி செல்வதாக முடிவு செய்தார்கள். சிவா அப்துலுக்குப் போன் செய்து பார்த்தான். அவன் எடுக்கவில்லை.
“ஒருவேளை தூங்கிக்கொண்டிருப்பான். நாம் நேரே சென்று எழுப்பிக்கொள்ளலாம்,” என்றான் சிவா.
அப்துலின் அபார்ட்மெண்ட் அமைந்திருந்தது ஒரு gated community'ல். அப்துலின் சொந்த ஊர் வாணியம்பாடி. அப்துலின் அண்ணன் வாங்கிய வீடு அது. அவர் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார். இங்கு அப்துல் மட்டும் தனியாக வசித்து வருகிறான். வீடு 12-வது மாடியில் அமைந்திருந்தது. இதுவரை அசோக் அங்குச் சென்றதில்லை.
“Balcony'லிருந்து பார்த்தா கடற்கரை தெரியும்,” என்றான் வெங்கட்.
அபார்ட்மெண்ட் உள்ளே நுழைந்ததும் சிவாவைப் பார்த்து watchman ஒரு பெரிய salute வைத்தார்.
“என்ன தம்பி, ரொம்ப நாளாச்சு உன்னை பார்த்து. எங்க வெளிநாடு போயிட்டியோனு நினைத்தேன்,” என்றார். இருவரும் ரொம்ப நாள் நண்பர்கள் போல பேசிக்கொண்டிருந்தார்கள். இதுதான் சிவாவின் plus point. அனைவரையும் நண்பர்களாக்கி விடுவான். அவன் இருக்கும் இடமே கலகலப்பாகி விடும். அசோக்கும் வெங்கட்டும் மட்டும் entry book'ல் கையெழுத்து போட்டார்கள்.
“அப்துல் தம்பி காலையிலேயே வண்டி எடுத்துக்கிட்டு எங்கேயோ போன மாதிரி இருந்தது. அதான் உங்ககிட்ட ஒரு சாவி இருக்குமே, போய் பாருங்க,” என்றார் watchman சிவாவிடம்.
மீண்டும் அப்துலுக்குப் போன் செய்தபோதும் அவன் எடுக்கவில்லை.
“சிவா… உன் கிட்ட சாவி இருக்கா?” என்றான் வெங்கட்.
“வெளியே ஒரு blue color shoe rack'க்குள் தான் எப்பவும் அவன் சாவி வைப்பான். போய் எடுத்துக்கலாம். ஒன்றும் பிரச்சனை இல்லை,” என்றான் சிவா.
அசோக்குக்கு அங்கு எல்லா வீடுகளும் ஒரே மாதிரியாகத் தெரிந்தன. உள்ளேயே ஒரு badminton court'டும் ஒரு நீச்சல் குளமும் இருந்தன. அசோக்குக்கு ஊரில் சொந்தமாக வீடு இருந்தாலும், இந்த gated community விதிகளையும், மெயின்டனன்ஸ்’ என்ற பெயரில் வாங்கும் தொகையையும் புரிந்துகொள்வதில் இன்னும் சிக்கல் இருந்தது.
இரவு முழுவதும் production deployment'காக கண் விழித்திருந்ததால் அசோக் கொஞ்சம் அரை மயக்கத்தில் இருந்தான்.
“சே... இன்னைக்கு நாய்க்கு பால் வைக்கல. பாவம்,” என்றான் வெங்கட்.
“டேய், அது தெரு நாய் தானே. நீ தரலனா வேறு யாராவது தரப்போறாங்க. அமைதியா வா,” என்றான் சிவா.
லிப்ட்டில் 12-வது மாடிக்குச் சென்று அப்துல் வீட்டின் calling bell'ஐ அடித்தார்கள். சிறிது நேரம் கழித்து T-shirt'டும் drawer'மும் அணிந்த இளம் பெண்ணொருத்தி வந்து கதவைத் திறந்தாள். மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
அதுவரை முன்னால் நின்றுக்கொண்டிருந்த வெங்கட் இரண்டு அடி பின்னாடி சென்று, அசோக்கிடம்: “டேய்… வீடு மாறி போச்சு போல…” என்று கிசுகிசுத்தான்.
சிவா உடனே சுதாரித்துக்கொண்டு: “ஹாய் ரேகா,” என்றான்.
அவளும்: “ஹாய் சிவா… உள்ளே வாங்க. என்ன காலையிலேயே? என்றாள்.
சிவா எல்லோரையும் intro செய்து வைத்தான்.
“இவங்க ரேகா. அப்துல் friend. இப்ப பெங்களூர்ல இருக்காங்க,” என்றான்.
நேற்றுதான் வந்ததாகவும், சென்னையில் ஒரு conference இருப்பதாகவும், இன்னும் இரண்டு நாளில் கிளம்பிவிடுவேன் என்றும் சொன்னாள். அப்துல் கடைக்குப் போய் இருப்பதாகச் சொன்னாள். உடனே அப்துலுக்குப் போன் செய்து, அவர்கள் வந்திருக்கும் செய்தியைச் சொல்லி, வரும்போது பால் packet வாங்கி வரச் சொன்னாள். சிவா பலமுறை போன் செய்தும் எடுக்காத அப்துல், ரேகாவின் முதல் ring'க்கே எடுத்துவிட்டான்.
வெங்கட் அசோக்கின் காதில்: “நம்ம போனை இப்படி எடுத்திருந்தா நாம இங்க வந்திருக்கவே தேவையில்லை…” என்றான்.
ஹாலில் அமர்ந்து ஒரு ஐந்து நிமிடம் பேசிக்கொண்டிருந்தார்கள்.அதற்குள் அப்துல் வந்துவிட்டான்.அவன் முகத்தில் எந்தவொரு பதற்றமும் இல்லை.
“என்னப்பா அசோக்… ஒருவழியா library file'யை வச்சு ஒரு படம் காட்டின போல? அந்த ஷியாம் கேள்வியா கேட்டு கொன்னுட்டானாமே?” என்றான்.
“அதற்குள் உனக்கு news வந்திருச்சா? யார் சொன்னா?” என்றான் அசோக். ரேகா பால் packet'ஐ வாங்கிக்கொண்டு உள்ளே சென்றாள்.
“போன தடவை meet செய்தபோது, ரேகா உன் junior'ன்னு சொன்ன. அவ architect'னு சொல்றா. நீ எப்ப architect படிச்ச?” என்றான் சிவா.
“அமைதியா இருப்பா…” என்றான் அப்துல்.
வெங்கட் அசோக்கை அழைத்துக்கொண்டு balcony'க்குச் சென்றான். அங்கிருந்து உண்மையாகவே கடல் தெரிந்தது. சூரியனின் காலை வெயில் அழகாகக் கடல் தண்ணீரில் பிரதிபலித்தது.
அசோக் அவன் ஊரில் வாரம் ஒருமுறையாவது நண்பர்களுடன் கடற்கரைக்குச் சென்றுவிடுவான். ஆனால், அப்படித் தரையிலிருந்து பார்க்கும் கடலுக்கும், 12-வது மாடியிலிருந்து பார்க்கும் கடலுக்கும் நிறைய வித்தியாசம் தெரிந்தது.