Sunday, May 31, 2026

வார்த்தைகளோடு அலைபவன் - தனவந்தனின் மூன்றாவது மகன்

 வார்த்தைகளோடு அலைபவன்

6.தனவந்தனின் மூன்றாவது மகன் 

வார்த்தைகளோடு அலைபவன் புதிதாக கதை சொல்ல வந்த ஊரில், ஒரு தனவந்தன் இருந்தான்.

அவனிடம் நூறு வேலையாட்கள் இருந்தார்கள். அவனுக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள்.அவனுக்கு சொந்தமாக நிலங்கள் இருந்தன. கடைகள் இருந்தன. குதிரைகள் இருந்தன. அவனிடம் வேலை செய்தவர்களில் சிலர், தங்கள் தாத்தாவின் தாத்தா காலத்திலிருந்தே அந்த குடும்பத்திற்கு வேலை செய்து வந்ததாகச் சொல்வர்.அவனுடைய மூன்றாவது மகன் இறக்கும் வரை, அவனுடைய வாழ்க்கையில் எந்த ஒரு குறையும் இல்லை என்று அந்த ஊர் மக்கள் சொல்வார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்னால், ஆறு வயதே ஆன அவனுடைய மூன்றாவது மகன் காய்ச்சல் கண்டு இறந்துவிட்டான்.அந்த காய்ச்சல் எப்படி வந்தது என்பது யாருக்கும் சரியாகத் தெரியாது. சிலர் அது வடக்குப் பகுதியில் இருந்து வந்த ஒரு நோய் என்றார்கள். இன்னும் சிலர் அது சாதாரண காய்ச்சல்தான் என்றார்கள். அந்தக் குழந்தையைப் பார்த்த வைத்தியன் ஒருவன் மட்டும், "இந்தக் குழந்தை நோயால் இறக்கவில்லை" என்று சொன்னதாக ஒரு வதந்தியும் உண்டு. ஆனால் அவன் எதனால் இறந்தான் என்பதை அந்த வைத்தியன் கடைசி வரை யாரிடமும் சொல்லவில்லை.

அதன் பிறகுதான் தனவந்தனின் நோய் தொடங்கியது.முதலில் அவனுக்கே அது தெரியவில்லை.இல்லாத தனது மூன்றாவது மகனை கற்பனையில் உருவாக்கி அவனிடம் பேசத் தொடங்கினான்.

இதை முதலில் கவனித்தது அவனுடைய மூத்த மகன்தான்.ஒருநாள் மதிய நேரத்தில், வீட்டின் பின்புறத் தோட்டத்தில் நின்றுகொண்டு தனவந்தன் யாரோ ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தான்.ஆனால் அங்கு யாரும் இல்லை.அவன் மூத்த மகன் அமைதியாக நின்று கேட்டுக்கொண்டிருந்தான்.
"இன்று பாடம் படித்தாயா?"
என்று தனவந்தன் கேட்டான்.
சிறிது நேரம் அமைதியாக நின்றான். பிறகு,
"பொய் சொல்லாதே. உன் கண்களைப் பார்த்தாலே தெரிகிறது."
என்று சிரித்தான். அன்று இரவு அந்த விஷயத்தை தனது அம்மாவிடம் மூத்த மகன் சொன்னான்.

புத்திரப் பிரிவில் தனது கணவர் வாடுவதால், சில நாட்களில் சரியாகிவிடும் என்று அவள் நினைத்தாள். ஆனால் நாளாக நாளாக அவனுடைய இந்தப் பிரச்சனை அதிகமாகிக்கொண்டே போனது.

காலையில் எழுந்தவுடனே தனது மூன்றாவது மகனை எழுப்புவது போல பேசுவான்.சாப்பிட உட்கார்ந்தால் அவனுக்கும் ஒரு தட்டு வைக்கச் சொல்வான்.வெளியே செல்லும்போது அவனையும் அழைத்துக்கொண்டு வருவது போல கதவைத் திறந்து பிடித்துக்கொண்டு நிற்பான். இதையெல்லாம் பார்த்த அவன் மனைவி,
"அவன் இறந்து ரொம்ப நாட்களாகிவிட்டதே"
என்று சொன்னவுடன்,
"அய்யோ, மறந்துவிட்டேன்"
என்று சொல்லிவிடுவான்.

ஆனால் அந்த மறதி பத்து நிமிடங்களுக்குக் கூட நீடிக்காது.மீண்டும் மகனிடம் பேசத் தொடங்கிவிடுவான்.அப்போது மீண்டும் அவன் மனைவி வந்து நினைவூட்ட வேண்டும்.இது நாள் முழுவதும் தொடர்ந்தது. வணிகம் செய்ய வெளியே செல்லும்போதும் அவன் இப்படித்தான் நடந்துகொள்வதாக அவனுடைய வேலையாட்கள் வந்து அவன் மனைவியிடம் தெரிவித்தார்கள்.

அடுத்த நாளிலிருந்து, அவன் இப்படிச் செய்யும் போதெல்லாம் அவனுக்கு மகனின் மரணத்தை நினைவூட்டுவதற்காக, வேலையாட்களில் ஒருவரை அவன் மனைவி நியமித்தாள். அந்த தனவந்தனுக்கும் இல்லாத மகனிடம்தான் பேசுகிறோம் என்பது தெரிந்தே இருந்தது. ஆனால் அவனால் அதைத் தடுக்க முடியவில்லை.ஆகவே, அருகில் ஒரு வேலையாள் இருந்து அதை நினைவூட்டிக்கொண்டே இருப்பதும் நல்லது என்று அவனும் எண்ணினான். ஆனால் இந்த வியாதி நாட்கள் செல்லச் செல்ல இன்னும் மோசமாகிக்கொண்டே வந்தது. 

முதலில் அந்த வேலையாள் ஒரு நாளில் நான்கு அல்லது ஐந்து முறை மட்டுமே அவனுக்கு மகனின் மரணத்தை நினைவூட்ட வேண்டியிருந்தது.ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை நினைவூட்டுமளவு சென்றது. இறுதியில், ஒரு மணிநேரத்திற்கு ஒரு வேலையாள் என்ற கணக்கில் மொத்தம் ஆறு வேலையாட்கள் இதற்காகவே வேலை பார்த்தார்கள்.அவன் வெளியூர் செல்லும்போதும் அந்த ஆறு பேரையும் அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காகவே அவன் வெளியூர் வணிகப் பயணங்களைத் தவிர்த்தான்.

அவனுடைய இந்த நிலையைப் பார்த்த ஊரில் சிலர்,
"அவன் மகனின் ஆத்மா இன்னும் அவனைச் சுற்றிக்கொண்டிருப்பதால் தான் இப்படிச் செய்கிறான்"
என்றார்கள்.
இன்னும் சிலர்,
"இது ஒரு மனநோய். இதற்கு வைத்தியரிடம் செல்ல வேண்டும்"
என்றார்கள்.

அவனும் மாந்திரீகர்களிடமும், வைத்தியர்களிடமும் சென்றான். ஆனால் இந்த வியாதி நின்றபாடில்லை. இன்னும் சிலர் சொன்னபடி, இதைவிட பெரிய மாந்திரீகர்களையும் பெரிய வைத்தியர்களையும் தேடிச் சென்றான். அதன் பின்னர் அவனுடைய வாழ்க்கை, ஒரு மாந்திரீகரிடமிருந்து இன்னொரு மாந்திரீகரிடமும், ஒரு வைத்தியரிடமிருந்து இன்னொரு வைத்தியரிடமும் அலைந்து திரிவதிலேயே கழிந்தது.

அந்த ஊரில் சிலர் இதைப் பார்த்து சிரித்தார்கள்.சிலர் பயந்தார்கள்.சிலர் இரக்கம் கொண்டார்கள்.ஆனால் அனைவரும் அவனைப் பற்றிப் பேசினார்கள்.அவனுடைய மகனைப் பற்றியும் பேசினார்கள்.அந்தக் குழந்தை உயிரோடு இருந்த காலத்தை விட, இறந்த பிறகுதான் அந்த ஊரில் அதிகம் பேசப்பட்டது.

இப்படியாக இரண்டு வருடங்கள் கடந்தன.இப்போது எல்லாம் அவன் வெளியே அதிகம் செல்வதில்லை.முகத்தில் ஒரு களைப்பு எப்போதும் இருந்தது.யாரிடமும் அதிகம் பேசுவதும் இல்லை.பேசினாலும் மகனிடம்தான் பேசுவான்.அதைத் தடுக்க அவனுடைய வேலையாள் எப்போதும் அவன் பக்கத்தில் நின்றுகொண்டிருப்பான். 
வணிக நிர்வாகத்தை அவன் மூத்த மகன் திறம்பட கவனித்துக்கொண்டிருந்ததால், செல்வம் மட்டும் குறையவில்லை; மாறாக இன்னும் பெருகிக்கொண்டே இருந்தது.

வார்த்தைகளோடு அலைபவனின் கதைகள் வியாதிகளைக் குணப்படுத்தும் என்ற செய்தியை அறிந்த அவன் மனைவி, தனது கணவரையும் அழைத்துக்கொண்டு வார்த்தைகளோடு அலைபவனைப் பார்க்கச் சென்றாள். கூடவே சில பொற்காசுகளையும் எடுத்துச் சென்றாள். இதில் சற்றும் நம்பிக்கையில்லாத அந்த தனவந்தன், தனது மனைவியின் விருப்பத்திற்காக மட்டுமே அவளுடன் சென்றான்.

No comments: