வார்த்தைகளோடு அலைபவன்
5.கால இயந்திரம்
வார்த்தைகளோடு அலைபவனிடம் , காலத்தைப் பின்னோக்கிச் செலுத்தும் ஒரு இயந்திரம் இருந்தது. அதை அவன் கழுத்தில் எப்போதும் அணிந்திருந்தான். அது, அவன் பிறந்தது முதல் இன்று வரை நடந்த அவனுடைய அனைத்து நிகழ்வுகளையும் பாதுகாத்து வைத்திருந்தது. அதை அவன் அப்பா, ஒரு அரபு வணிகரிடம் பத்து ஷையர் இனக் குதிரைகளையும், நான்கு ஆப்ரிக்க யானைகளையும் கொடுத்து வாங்கியிருந்தார். அவன் பிறந்தவுடனேயே அதை அவன் கழுத்தில் அணிவித்துவிட்டார்.
அந்த இயந்திரத்தின் மூலம், அவன் ஏற்கனவே கடந்துவந்த காலத்திற்குச் செல்ல முடியும். ஆனால் அங்கு சென்று அவனால் வெறுமனே வேடிக்கை பார்க்க மட்டுமே முடியும்; எந்த ஒரு நிகழ்வையும் மாற்ற முடியாது. அதுவே அந்த இயந்திரத்தின் வரமும் மிகப்பெரிய சாபமும் — அது கடந்த காலத்தை காட்டும், ஆனால் எந்த ஒரு நினைவிலிருந்தும் அவனை காப்பாற்றாது.
ஏழு வயதில், அவன் தொலைத்துப் போன ஒரு மரப்பொம்மையை நாள் முழுவதும் தேடி களைத்துப் போயிருந்தான். அப்போதுதான் அவன் அப்பா அந்த இயந்திரத்தைப் பற்றி முழுமையாகச் சொன்னார். தேவையின் போது மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும் என்ற கட்டளையையும் இட்டிருந்தார். இவ்வளவு அரிய இயந்திரத்தை, வெறும் யானைகளுக்கும் குதிரைகளுக்கும் பதிலாக அந்த அரபு வணிகன் ஏன் கொடுக்க வேண்டும் என்ற சந்தேகம் அவருக்குள் இருந்துக்கொண்டே இருந்தது.
முதலில் அவன் அந்த இயந்திரத்தை சாதாரண விஷயங்களுக்காகவே பயன்படுத்தினான். தொலைத்துப் போன பொருட்களை கண்டுபிடிக்க. தனது அம்மாவின் குரலை மீண்டும் கேட்க. முதல் முறையாக கதை சொன்ன நாளில் மக்கள் எப்படி அவனைப் பார்த்தார்கள் என்பதை அறிந்துகொள்ள.
ஆனால் மெதுவாக, அந்த இயந்திரம் அவனுக்கு ஒரு பழக்கமாக மாறத் தொடங்கியது. சில வருடங்களுக்குப் பிறகு அவன் ஒரு விஷயத்தை கவனித்தான்.
அவன் கடந்த காலத்துக்குள் செல்லும் ஒவ்வொரு முறையும், அங்கே இருக்கும் பழைய “அவன்” ஒருசில நொடிகள் அமைதியாக நின்று, எதையோ உணர்வது போல திரும்பிப் பார்ப்பான்.
முதலில் அது அவனுடைய கற்பனை என்று நினைத்தான்.
ஒருமுறை, தனது பத்தாவது வயதில் அம்மா இறந்த நாளின் நினைவுக்குள் அவன் சென்றான். மழையில் நின்றுகொண்டிருந்த சிறுவனான அவன், திடீரென்று வெறுமையான வானத்தைப் பார்த்து இப்படிச் சொன்னான்:
> “நீ மீண்டும் வந்துவிட்டாயா?”
அந்த நொடியில்தான் வார்த்தைகளோடு அலைபவன் முதல் முறையாக பயந்தான்.
அதன் பின்னர் பல நாட்கள் அவனால் தூங்க முடியவில்லை. அந்த இயந்திரம் வெறும் நினைவுகளை மட்டும் பாதுகாக்கவில்லை; நினைவுகளும் அவனை நினைவில் வைத்துக்கொண்டிருக்கின்றன என்ற பயம் அவனுக்குள் வளரத் தொடங்கியது.
அதன் பிறகு அவன் அந்த இயந்திரத்தை பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டான். அப்பாவின் விருப்பத்திற்காக மட்டும் அதை கழுத்தில் அணிந்திருந்தான்.
அவன் அப்பா நண்பர்களால் வஞ்சிக்கப்பட்டு, அவர் தந்த வார்த்தைகளை மூட்டையாக கட்டிக்கொண்டு ஊர் ஊராக கதை சொல்லத் தொடங்கிய பிறகும், அந்த இயந்திரத்தை அவன் கழுத்தில் அணிந்திருந்தான்.
ஒருமுறை ஒரு ஊரில், ஒரு புதிய கதையை அவன் சொல்லிக்கொண்டிருந்தான். தினமும் தனது பழைய நினைவுகளுக்குள் சென்று வாழ்ந்துகொண்டே இருப்பதால், மெதுவாக நிகழ்காலத்தில் இருந்து அழிந்து போகும் ஒரு மனிதனைப் பற்றிய கதை அது.
அந்தக் கதையை கேட்ட ஒரு முதியவன் கூட்டத்தில் எழுந்து நின்று கேட்டான்:
> “நினைவுகளுக்குள் அதிக நேரம் வாழ்ந்தவர்கள், இறுதியில் யாருடைய நினைவாக மாறுவார்கள்?”
அந்தக் கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை. ஆனால் அந்தக் கேள்வி மீண்டும் மீண்டும் அவன் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
இத்தனை நாள் இதைப் பற்றி ஏன் சிந்திக்கவில்லை என்று அவன் தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்.
அன்று இரவுதான், பல வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் அந்த இயந்திரத்தை இயக்கினான்.
இந்த முறை அவன் மிகவும் பின்னோக்கிச் சென்றான்.
தன் பிறப்புக்கு முன்னால்.
அப்போது அவன் அம்மா அவனை கருவுற்றிருந்தாள்.
அவன் அப்பா இன்னும் செல்வந்தராக இருந்த நாட்கள் அவை.
பத்து ஷையர் இனக் குதிரைகளையும், நான்கு ஆப்ரிக்க யானைகளையும் அழைத்துக்கொண்டு, பாலைவனத்தின் நடுவே இருந்த ஒரு கருப்பு கூடாரத்துக்குள் அவன் அப்பாவும் அம்மாவும் செல்வதை அவன் பார்த்தான்.
அந்த கூடாரத்திற்குள் இருந்த அரபு வணிகனின் முகம் முழுவதும் கருப்பு துணியால் மூடப்பட்டிருந்தது.
அவன் அப்பா அந்த இயந்திரத்தை வாங்கியபோது, அந்த வணிகன் அதை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு சில நொடிகள் கண்களை மூடியபடி நின்றான். பின்னர் மெதுவாக இப்படிச் சொன்னான்:
> “இது கடந்த காலத்தை மட்டும் காட்டும் கருவி அல்ல. இது ஒருநாள் உன்னை, உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் மனிதனாக மாற்றிவிடும்.”
அவன் அப்பா அதைப் புரிந்துகொள்ளவில்லை.
ஆனால் வார்த்தைகளோடு அலைபவனுக்கு அந்த வார்த்தைகள் உடனே புரிந்துவிட்டன. ஏனென்றால் அந்த வணிகரின் குரல், அவனுடைய குரலைப் போலவே இருந்தது.
அவன் அதிர்ச்சியோடு அந்த வணிகரின் கைகளைப் பார்த்தான். அந்தக் கைகளில், சிறுவயதில் மரத்தில் இருந்து விழுந்தபோது அவனுக்கு ஏற்பட்ட அதே காயத்தழும்பு இருந்தது.
அந்த இயந்திரம் மனிதர்களை கடந்த காலத்துக்கு அழைத்துச் செல்லவில்லை. மெதுவாக அவர்களை கடந்த காலத்தின் மனிதர்களாக மாற்றிக்கொண்டிருந்தது என்பதை அவன் புரிந்துகொண்டான்.
அன்றே அவன் அந்த இயந்திரத்தை ஒரு ஆற்றில் தூக்கி எறிந்தான். அதன் பிறகு, மகிழ்ச்சியாக அடுத்த ஊருக்குக் கதை சொல்லப் பயணத்தைத் தொடங்கினான்.
அன்று அவன் சொன்ன கதை, வானளவு சந்தோஷத்தையும் நம்பிக்கையையும் தந்ததாக ஊர் மக்கள் சொன்னார்கள். நோய்வாய்ப்பட்டவர்கள் அவன் கதையை கேட்டால் நோய் நிவர்த்தி அடைகிறார்கள் என்ற செய்தியும் அன்றிலிருந்துதான் பரவ ஆரம்பித்தது.
No comments:
Post a Comment