ரொம்ப நாட்களுக்கு பிறகு குடும்பத்தோடு ஒரு திரைப்படத்திற்கு சென்றோம். ஊரிலிருந்து அக்கா, தங்கை மற்றும் அவர்கள் பசங்களும் வந்திருந்தார்கள். ஆகவே ஒரு பெரிய கூட்டமாகத்தான் சென்றோம். மொத்தமாக ஒரு பத்து டிக்கெட் சேர்ந்திருக்கும். கூட அம்மாவும் வந்தாள்.
குடும்பமாக திரைப்படத்திற்கு சென்றால் யார் எங்கே உட்கார வேண்டும், யாருக்கு பாப்கார்ன் வேண்டும், யாருக்கு பெப்சி, யாருக்கு ரெஸ்ட் ரூம் என்பதிலேயே பாதி நேரம் போய்விடுகிறது.
அம்மாவுக்கு தியேட்டரில் சினிமா பார்ப்பது என்றால் சின்ன வயதிலிருந்தே பிடிக்கும். ஸ்டார் தியேட்டரில் நான், அம்மா, அக்கா முதல் வரிசையில் அமர்ந்து அர்ஜீன் நடித்த “கர்ணா” திரைப்படம் பார்த்த ஞாபகம் இன்னும் நினைவில் இருக்கிறது. அப்பொழுது எனக்கு பத்து வயது இருக்கும்.
அதேபோல் சின்ன வயதில் அம்மாவின் ஊருக்கு சென்றால், தாத்தா எல்லாரையும் டூரிங் டாக்கீஸுக்கு அழைத்து செல்வார். மண்ணில் அமர்ந்து படம் பார்க்க வேண்டும். படம் ஆரம்பிக்கும் முன் ஓலி பெருக்கியில் பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும்.சில நேரங்களில் ரீல் அறுந்து படம் நின்றுவிடும். யாரும் கோபப்பட மாட்டார்கள். எல்லாரும் அமைதியாக, சரி செய்யும் வரை காத்திருப்பார்கள். இன்றோ, YouTube இரண்டு நோடி buffering ஆனாலே செல்போனை அடித்து உடைக்க தயாராக இருக்கிறோம். அந்த டூரிங் டாக்கீஸ் இருந்த இடத்திற்கு அருகில்தான் இப்பொழுது கீழடி அகழாய்வு மையம் அமைந்துள்ளது.
பள்ளி முழு ஆண்டு விடுமுறை என்றால் பரமக்குடியிலிருக்கும் பெரியம்மா வீட்டுக்கு அம்மாவுடன் சென்று விடுவோம். பெரியப்பா பரமக்குடியில் இருக்கும் எல்லா திரையரங்கங்களுக்கும் எங்களை அழைத்து சென்று விடுவார்.
ஓம் சண்முகா, ரவி, சாந்தி, கிருஷ்ணா என பல தியேட்டர்கள் இருந்தன. பெரியப்பா அலுவலகம் முடித்து எப்பொழுதும் இரவு காட்சிக்குத்தான் அழைத்து செல்வார்.
இரவில் படம் முடிந்து வரும் போது மற்ற தியேட்டர்களிலிருந்தும் மக்கள் படம் முடிந்து வருவார்கள். தெருவே திருவிழா போல கூட்டமாக இருக்கும். சிலர் படம் பற்றி சண்டை போட்டுக்கொண்டே நடந்து செல்வார்கள்.
அத்தனை தியேட்டர்கள் இருந்த பரமக்குடியில் இப்பொழுது ஒரு தியேட்டர் கூட இல்லை.
நாங்கள் நேற்று சென்ற திரைப்படம் ரீல்ஸ்களின் ஒரு மொத்த கலவை போல இருந்தது. நீங்கள் படத்தை முழுமையாக பார்க்க தேவையில்லை. ரீல்ஸைப் போல ஐந்து ஐந்து நிமிடங்களாக பிரித்து பார்த்தாலும் படம் புரிந்துவிடும். புரியுமளவுக்கு படத்தில் கதையும் இல்லை.
ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு பில்டப், தேவையே இல்லாத ஒரு பாடல். அந்த பாட்டுக்குள் ஒரு fight. திடீரென்று ஹீரோ கத்துவார், அதற்கு theatre'ல யாராவது whistle அடிப்பார்கள். படம் முழுவதும் இந்த pattern திரும்ப திரும்ப வந்துக்கொண்டு இருந்தது. அம்மா திரைப்படம் பார்க்கும் போதே தூங்கிவிட்டாள். நான்தான் இடைவேளையின் போது எழுப்பிவிட்டேன்.
ஆனால் பசங்களுக்கு படம் பிடித்திருந்தது போல தோன்றியது. அவர்கள் theatre'லிருந்து வெளியே வந்த பிறகும் அந்தப் படத்தில் வந்த dialogue'களை சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.
படம் முடிந்து வரும் போது மகன் என்னிடம் நாலு தடவையாவது கேட்டிருப்பான்:
“படம் நல்லாதானேப்பா இருந்துச்சு?” நான் ஒவ்வொரு தடவையும், “நல்லாத்தான் இருந்துச்சு…” என்றேன்.
சொல்ல முடியாது, இன்று அவனுக்கு கிடைத்த திரைப்பட அனுபவம், பின்னாட்களில் எனக்கு இப்போது நினைவில் வருவது போல அவனுக்கும் நினைவில் வரலாம்.
No comments:
Post a Comment