ரொம்ப நாட்களுக்கு பிறகு அசோக் போன் செய்தான். எனது கடைசி பதிவில் நிறைய தவறு இருப்பதாக சொன்னான்.
“அது crontab -t இல்ல சார்…” என்றான்.
அவன் இன்னும் அதே மாதிரிதான் பேசுகிறான். எவ்வளவு வருடங்கள் ஆனாலும் technical விஷயங்களை correct பண்ணும்போது மட்டும் அவன் குரலில் ஒரு seriousness வந்துவிடும். மற்ற எல்லா விஷயங்களிலும் தோல்வியடைந்த மனிதன் போல பேசும் அசோக், Unix பற்றி பேசும்போது மட்டும் இன்னும் உலகத்தை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் பேசுவான்.
“crontab'லிருக்கும் ஒரு script'க்கு முன்னால் time command சேர்க்கணும் சார். எடுத்துக்காட்டுக்கு,
time ./scriptname.sh
அப்படி run பண்ணா போதும். அந்த script மொத்தம் எவ்வளவு நேரம் எடுத்துச்சுன்னு சொல்லிடும். அதோட output'யை >> use பண்ணி ஒரு file'ல dump பண்ணி வச்சுட்டா, எப்ப வேண்டுமானாலும் போய் check பண்ணிக்கலாம். Log file'க்கும் இதுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு. Log file, script'ல் ஏதாவது பிரச்சனை அல்லது running results மட்டும் தான் update செய்யும். ஆனால் time command மொத்த running time'யை காட்டும்.”
அவன் இதை சொல்லும்போது கூட keyboard தட்டிக்கொண்டே பேசுவது போல கேட்டது.
“அப்போ அந்த டீம்ல நான் மட்டும் தான் Unix Build Admin சார். மத்தவங்க எல்லாரும் developers அல்லது testers. நான் மட்டும் தனியா விடப்பட்ட மாதிரி இருக்கும்.”
அசோக் இந்த “தனியா விடப்பட்ட மாதிரி” என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவான். கல்லூரியில் இருந்தபோதும் அப்படித்தான். Office'ல இருந்தபோதும் அப்படித்தான். இப்பொழுதும் அப்படி இருக்கலாம்.
ஆனால் உண்மையாகவே அந்த பழைய வேலையை விட்டு இந்த புது கம்பெனிக்கு வந்ததே தனியாக இருக்கத்தான் என்பது எனக்கு நன்றாக தெரியும். அவன் காதல் தோல்வி என்று நம்பிக்கொண்டு இருக்கும் ஒன்று உண்மையில் இல்லவே இல்லை என்பதும் எனக்கு தெரியும்.
“ஒரு மூணு interlinked script'கள் அந்த server crontab'ல ஓடிக்கிட்டு இருந்துச்சு. Server-உடன் application connect ஆகி data download பண்ண அந்த script'கள் help பண்ணும். ரொம்ப வருஷமா நல்லாதான் போயிட்டு இருந்துச்சு. ஆனா ஒரு இரண்டு மூணு மாதமா random'ஆ மக்கர் பண்ண ஆரம்பிச்சுது.
யாருக்கும் root cause தெரியல. Developers database'யை blame பண்ணினாங்க. DBA network'யை blame பண்ணினான். Network team storage'யை blame பண்ணுச்சு. வழக்கம்போல production issue'க்கு எல்லாரும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துட்டு இருந்தாங்க சார்…”
அவன் சிரித்தான்.
“நான் தான் அந்த script execution time fluctuate ஆகுது notice பண்ணேன். அதான் அந்த time command use பண்ணி output log எடுத்தேன். அதுக்கப்புறம்தான் issue எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சேன்.”
“அதுக்கப்புறம்தான் டீம்ல எனக்கு மரியாதை வந்துச்சு. நான், சிவா, அப்துல், வெங்கட் எல்லாரும் ஒரு group மாதிரி set ஆனோம்.”
இன்னும் சில விஷயங்களை பேசிவிட்டு போனை cut செய்தான்.
ஆனால் நமது கதை இனிமேல்தான் ஆரம்பிக்கிறது.
அன்று மாலை office முழுக்க அசோக்குக்கு பாராட்டு மழை. அந்த மாதிரி சூழ்நிலைகளை அசோக் handle பண்ண தெரியாது. யாராவது appreciation கொடுத்தால் உடனே monitor'யை பார்த்துக்கொண்டு busy'ஆ நடிக்க ஆரம்பித்துவிடுவான்.
அவனுக்கு onsite'லிருந்து ஒரு appreciation mail வந்திருந்தது.
“Thanks for identifying the exact issue”
என்று இருந்தது. Onsite'யிலிருந்து வரும் மெயில்களில் பெயர் வராது. ID மட்டும் தான் தெரியும். கீழே Regards, கிருபா என்று சுறுக்கமாக இருந்தது.
எதற்கு thank you என்று யோசித்துக்கொண்டிருந்தபோதுதான், சிவா chair'யை இழுத்துக்கொண்டு அவன் அருகில் வந்தான்.
“மச்சி… அந்த script'யை எழுதியதே கிருபாதான்.”
“அந்த script காரணமாத்தான் கிருபாவுக்கு onsite opportunity கிடைச்சது. செம brain. எல்லா developers'க்கும் கிருபா என்றா ஒரு இது…”
“என்ன இது?”
“அதான் டா… dangerous category.”
சிவா சிரித்தான்.
பின்னர் அவனே அசோக்கின் Messenger app'ஐ open பண்ணி, Krupa'வின் ID'யை search செய்து “Hi” என்று type செய்தான்.
அப்போதுதான் அசோக் அவளது முழுப் பெயரை சரியாக படித்தான்.
கிருபா நாயர்.
பக்கத்தில் அவள் photo இருந்தது.
Click செய்து பார்த்தான்.
பார்க்க அழகாகத்தான் இருந்தாள். ஆனால் கண்டிப்பாக கேரளா பெண் மாதிரி தெரியவில்லை. Corporate office'களில் இருக்கும் அந்த generic smart face. Straightened hair. ID card. Half smile.
சிவா laptop screen'ஐ பார்த்துவிட்டு கேட்டான்:
“என்ன மச்சி… ஆளு எப்படி?”
“இல்ல… நாயர் போட்டு இருக்கு. ஆனா கேரளா மாதிரி தெரியல.”
“செம்மடா நீ… முகத்தை பார்த்தே கண்டுபிடிக்கிற level'க்கு போயிட்டியா?”
“Native சென்னைதான். ஒரு வருஷம் முன்னாடி வரைக்கும் நீ உட்கார்ந்திருக்கும் இதே cubicle'லதான் அவளும் உட்கார்ந்திருந்தா. கொஞ்சம் head weight. யார்கிட்டயும் ரொம்ப பேச மாட்டா. நம்ம அப்துல் எவ்வளவோ try பண்ணான். ஆனா set ஆகல.”
அதற்குள் Messenger window blink ஆனது.
Kirupa: “Finally we got a Unix System Admin for our team.”
சில நேரங்களில் வாழ்க்கை முழுக்க மாறப்போகும் விஷயங்கள் எல்லாம் இப்படித்தான் ஆரம்பிக்கின்றன சார்.
ஒரு blinking cursor.
ஒரு “Hi”.
அல்லது ஒரு Unix script.
No comments:
Post a Comment