Showing posts with label நீங்கள் அவனை கடவுள் என்பீர்கள். Show all posts
Showing posts with label நீங்கள் அவனை கடவுள் என்பீர்கள். Show all posts

Saturday, September 3, 2011

கடவுளின் கோரிக்கை (நீங்கள் அவனை கடவுள் என்பீர்கள் - IV)

இந்த முறை கடவுள் ஒரு கோரிக்கையுடன் என் முன்னால் வந்து நின்றான். கோரிக்கையுடன் இதுவரை எந்தக் கடவுளையும் நான் பார்த்ததில்லை என்பதால், நான் கொஞ்சம் விக்கித்தான் போனேன். பிறகு சுதாரித்துக்கொண்டு, அவன் கோரிக்கையை நான் திட்டவட்டமாக மறுத்தேன்.

கடவுளின் கோரிக்கை மிகவும் சுலபமான ஒன்றுதான். அது, "நான் அவனுக்காக ஒரு கதை எழுதி தர வேண்டும்." இதுவரை எனக்காக எதுவும் செய்யாத கடவுளிடம் எனக்கு ஒருவித பகைமை உணர்வு ஏற்பட்டது உண்மையே. அதுவே அவன் கோரிக்கையை நான் நிராகரித்ததற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.

அவன் பிடிவாதமாக இருந்தான். அவன் கோரிக்கையை ஏற்கும் வரை, எனது அறையை விட்டு வெளியேறப் போவதில்லை என்றான். இன்னும் சிறிது நேரத்தில் எனது தோழி வரும் நேரம் அது. அவள் வரும்போது இவன் இங்கு இருந்தால், அது தேவையில்லாத பல பிரச்சினைகளை உருவாக்கும். நான் பல பொய்களை அவளிடம் சொல்ல நேரிடும். ஆகவே, அவள் வருகையின்போது இவனின் இருப்பை நான் விரும்பவில்லை.

எனது பெட்டியில் பல நாட்களாக உறங்கும் கதை ஒன்றை அவனுக்குத் தர சம்மதித்தேன். என்னுடைய காதல் தோல்வியின் முதல் நாளில் எழுதிய நான்கு பக்கக் கதை அது. நான்கு பக்கங்களில் ஒரு பக்கம் முழுவதும் அவளின் பெயர் மட்டுமே இருக்கும்.

ஆனால், பழைய கதைகளை அவன் விரும்பவில்லை. ஒரு புதிய கதையை உடனே தனக்கு எழுதி தரும்படி வற்புறுத்தினான். கதைகளை உடனே எழுதிவிட முடியாது என்றும், அதற்கு பல நாட்கள் ஆகலாம் என்றும் விளக்கினேன். பரவாயில்லை, அதுவரை எனது அறையிலேயே காத்திருப்பதாகக் கூறினான். அவன் கட்டளையிடும் தோரணையில் சொல்லவில்லை. அவனுக்கு தெரியும், என்னைக் கட்டளைகள் மூலம் அடிபணிய வைக்க முடியாது என்று.

நான் எவ்வளவு சொல்லியும் அவன் எனது அறையை விட்டு வெளியேறுவதாக இல்லை. இப்போது இவனை எனது அறையிலிருந்து வெளியேற்றுவது மிகவும் முக்கியமான ஒன்று. அவனிடம் எனது தோழியின் வருகையைப் பற்றி கூறினேன். இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்ய நான் பல நாட்கள் போராட வேண்டியிருந்தது என்றேன்.

அவன் அமைதியாக என்னைப் பார்த்துச் சிரித்தான். என்னைத் திருத்தவே முடியாது என்றான். என்னுடைய கவலை புரிகிறது என்றான். ஆனால், ஒரு சிற்றிதழ் ஆசிரியருக்கு கதையுடன் வருவதாக வாக்கு அளித்ததாகவும், இந்த அறையை விட்டு வெளியேறுவது என்பது, அது கதையுடன் மட்டுமே சாத்தியம் என்றான். கடவுள்களின் விதி 1810-ன் கீழ், கோரிக்கைகளுடன் போகும் எந்தக் கடவுளும், கோரிக்கை நிறைவேறும் வரை திரும்பக் கூடாது என்பதை மீண்டும் ஒரு முறை எனக்கு நினைவுப்படுத்தினான்.

கடைசியில் அவன் விருப்பத்திற்கு ஏற்ப அவனுக்காக ஒரு கதை எழுதத் தொடங்கினேன். அது இப்படி தொடங்கியது.

"இந்த முறை கடவுள் ஒரு கோரிக்கையுடன் என் முன்னால் வந்து நின்றான். கோரிக்கையுடன் இதுவரை எந்தக் கடவுளையும் நான் பார்த்ததில்லை என்பதால், நான் கொஞ்சம் விக்கித்தான் போனேன். பிறகு சுதாரித்துக்கொண்டு, அவன் கோரிக்கையை நான் திட்டவட்டமாக மறுத்தேன்..."

குறிப்பு:

விதி எண் 183 என்பதிலிருந்து 1810 என்று மாற்றப்பட்டுள்ளது.

Saturday, May 28, 2011

நீங்கள் அவனை கடவுள் என்பீர்கள் - III

நான்காவது சந்திப்பு

எனக்கும் கடவுளுக்குமான நான்காவது சந்திப்பு இன்று அதிகாலை சாந்தி காலனி சாலையில் நடந்தது. இதற்கு முன்னர் நடந்த எல்லா சந்திப்புகளிலும் அவன் தன்னை கடவுள் என்று அறிமுகம் செய்துகொண்டதால், நானும் அவனை கடவுள் என்றே அழைக்கத் தொடங்கினேன். எங்கள் பழைய சந்திப்புகள் நடந்த இடங்கள் எதுவும் எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. நான் மறைமலை நகரில் வசித்தபோது, ஒருமுறை எனது அறையைத் தட்டாமல் அவன் உள்ளே நுழைந்ததாக ஞாபகம். ஆனால் தெளிவாகத் தெரியவில்லை.

அவனுடைய வருகையின் போதெல்லாம் நான் சோகத்தில் மட்டுமே இருந்திருக்கிறேன். ஆனால் இந்த முறை அப்படியில்லை. அவனுடைய தற்போதைய வருகை எனக்கு ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் தந்தது.

வழக்கம் போல், இந்தச் சந்திப்பும் அமைதியாகத்தான் ஆரம்பித்தது. அந்த அதிகாலையில் நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்த யாருமே எங்களைக் கண்டுகொள்ளவில்லை. அவனுடைய முதல் வார்த்தைக்காக நானும், என்னுடைய முதல் வார்த்தைக்காக அவனும் காத்துக்கொண்டிருந்தோம். அவன்தான் முதலில் ஆரம்பித்தான்.

"உன்னை இங்கு நான் எதிர்பார்க்கவில்லை," என்றான்.

"நானும் தான்," என்றேன்.

"இன்னும் நான் கடவுள் என்பதில் உனக்கு சந்தேகம் இருக்கிறதா?" என்றான்.

அவனுக்கு நன்கு தெரிந்திருந்தது, எந்த மாதிரியான கேள்விகளுக்கு நான் பதில் சொல்லத் தயங்குவேன் என்று. நான் பேச்சை மாற்றும் நோக்கில், "இப்போதெல்லாம் நடைப்பயிற்சி செய்ய நிறைய பேர் வருகிறார்கள்," என்றேன். நாங்கள் இருவரும் பேசிக்கொண்டே இரண்டாவது அவென்யூ நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

என்னிடம் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே போனான். என்னைப் பற்றி எல்லாம் தெரிந்தவன் என்பதை அவன் நிரூபிக்க விரும்பினான். தற்போது நான் காதலிக்கும் என்னுடைய நான்காவது காதலியைப் பற்றி விசாரித்தான்.

"நீ மீண்டும் ஏமாறப்போகிறாய். எனக்கு உன்னுடைய எல்லாக் காதல் கதைகளும் தெரியும்," என்றான்.

"இதில் என்ன விசேஷம் இருக்கிறது? என்னுடைய வலைப்பதிவைப் படிப்பவர்கள் அனைவருக்குமே என்னுடைய எல்லாக் காதல் கதைகளும் தெரியும்," என்றேன்.

"சென்ற வாரம் நாகூரில் நீ சந்தித்த அந்த எழுத்தாளர் உன்னை எந்த அளவுக்கு பாதித்துள்ளார் என்பதும் எனக்கு நன்கு தெரியும்," என்றான்.

"அவன் எழுத்தாளனே இல்லை. அவன் ஒரு ஏமாற்றுக்காரன்," என்றேன்.

ஒரு பெட்டிக்கடையில் சாய்பாபா படம் கொண்ட ஒரு தினசரி விளம்பரம் தொங்கிக்கொண்டிருந்தது.

அவனிடம், "சென்ற மாதம் ஒரு சாமியார் செத்தாரே... அது நீ இல்லையா?" என்றேன்.

அவன் சிறிது யோசித்தான். இப்போது என் நேரம். இனி அவனை நான் கேள்விகளால் துளைக்க வேண்டும்.

மீண்டும் கேட்டேன்.

"அவன் இறந்தது உனக்குத் தெரியும்தானே?"

"எனக்குத் தெரியாது."

"எல்லா செய்தித்தாள்களிலும் போட்டிருந்தார்களே."

"நான் செய்திகள் படிப்பதில்லை."

"முதலில் இறந்தது நீதான் என்று நினைத்துவிட்டேன்."

"எனக்கு மரணம் இல்லை."

"அவனும் இதைத்தான் சொன்னான்," என்றேன்.

அவனுடைய செல்போன் சிணுங்கியது. Galaxy மாடல் போன். அவனுடைய உள்ளங்கையைவிட பெரிதாக இருந்தது.

"நேரமாகிவிட்டது. இன்று நான் கார் கொண்டு வரவில்லை. விரைவாகப் போக வேண்டும். காத்துக்கொண்டிருக்கிறாள். மீண்டும் உன்னைச் சந்திக்கிறேன்," என்று சொல்லிவிட்டு எனக்கு எதிர்ப்புறமாக நடக்கத் தொடங்கினான்.

சிறிது நேரம் கழித்து நான் திரும்பிப் பார்க்கையில், ஒரு பெண்ணொருத்தியுடன் அவன் கைக்கோர்த்து நடந்துகொண்டிருந்தான். தொலைவிலிருந்து பார்க்கும்போது, அவள் எனது பழைய காதலிகளில் ஒருத்தியைப் போல் இருந்தாள்.

Thursday, July 8, 2010

நீங்கள் அவனை கடவுள் என்பீர்கள் - II

நீங்கள் கண்டிப்பாக நம்பப் போவது இல்லை. இருந்தாலும் சொல்லித்தான் ஆக வேண்டும். நேற்று என் கனவில் கடவுள் வந்தான். ஆம், வந்தவன் தன் பெயரை கடவுள் என்றுதான் சொன்னான். லீவைஸ் ஜீன்ஸும், லீ டி-ஷர்ட்டும் அணிந்திருந்தான். காலில் ரீபக் ஷூ. கையில் 'எக்னாமிக் டைம்ஸ்' பேப்பரும் இருந்தது. எங்கேயோ பார்த்த முகம். ராவணன் திரைப்படத்தில், விக்ரமின் தம்பியாக வந்து ஒருவன் இறந்துபோவானே, அந்த முகம். நன்றாக வெள்ளையாக இருந்தான். கடவுள்தானா என்று யாரும் சந்தேகப்படக் கூடாது என்பதற்காக தினமும் முகத்துக்கு 'பேசியல்' பண்ணுவான் போல. அவனுடைய வெண்மையான முகம் எனக்கு ஒரு வித வெறுப்பைத் தந்தது. இப்போதெல்லாம் வெள்ளையாக இருக்கும் யாரைப் பார்த்தாலும் வெறுப்பாக இருக்கிறது.

"நீதான் கடவுள் என்பதற்கு என்ன ஆதாரம்?" என்று கேட்டேன். அவனுடைய Driving Licence-ஐ காட்டினான். கனரக வாகனம் ஓட்டுவதற்கு அமெரிக்க அரசாங்கத்தால் தரப்பட்டது. பெயர் "கடவுள்" என்று எழுதப்பட்டிருந்தது. அமெரிக்க லைசன்ஸ் என்பதால், கண்டிப்பாக இவன் ஏமாற்றவில்லை என்ற நம்பிக்கை பிறந்தது.

கடந்த ஒரு வாரமாக நான் தூங்குவதே இரண்டு மணி நேரம்தான். அதில் இவன் வேறு வந்துவிட்டான். அவனுடன் நான் ரொம்ப நேரம் பேச விரும்பவில்லை.

அவன்தான் ஆரம்பித்தான்.

"எதற்கு என் மீது இவ்வளவு கோபம்?" என்றான்.

நான் எதிர்பார்த்த கேள்விதான்.

"எனக்கு என் மீதே கோபம்," என்றேன்.

"நான் யாருக்கும் வஞ்சனை செய்யவில்லை. எல்லாருக்கும் ஒரே மாதிரிதான் வாழ்க்கை கொடுத்தேன். நீ தவறாகப் புரிந்துகொண்டுள்ளாய்," என்ற அப்பட்டமான பொய்யைக் கூறினான்.

"நான் உன்னுடன் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை. நீ போய்விடு," என்றேன்.

அவன் போவதாக இல்லை. ஏதோ ஏதோ காரணங்கள் சொன்னான். IIM-ல் M.B.A. படித்திருப்பான் போல, ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை சொன்னான். அவன் நல்லவன் என்பதைப் பத்து கதைகள் மூலம் விளக்கினான்.

என் அமைதி அவனைக் கொஞ்சம் கோபப்படுத்தியிருக்க வேண்டும். பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்.

"உன்னை இங்கே அனைவரும் கடவுள் என்கிறார்கள்," என்றேன்.

நான் பேசியதை ஒரு நோட்டில் குறிப்பு எடுத்துக்கொண்டான்.

"எல்லோரும் சொல்கிறார்கள். ஆகவே அதுவே உண்மையாக இருக்கும்," என்றான்.

"நீ கடவுள் என்றால் எனக்கு ஒரு வரத்தைக் கொடு. நான் இந்த உலகத்தில் இதுவரை வாழ்ந்ததற்கான எல்லா தடயங்களையும் அழித்துவிடு," என்றேன்.

அது முடியவே முடியாது என்றான். வாழ்க்கை ஒரு Butterfly Effect-ஐப் போலவாம். ஒருவனின் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டுபண்ணினால், அது எல்லாருடைய வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றான்.

"சரி, எனக்கு மரணத்தைக் கொடு," என்றேன்.

அதுவும் முடியாது என்றான். ஒருவன் பிறக்கும்போதே அவன் மரணமும் முடிவு செய்யப்படுகிறதாம். அதையும் யாராலும் மாற்ற முடியாது என்றான்.

"உண்மையாகவே எந்தக் கடவுளாலும் வரங்கள் கொடுக்க முடியாது என்றால், இந்த உலகத்தில் எதையும் உன்னால் மாற்ற முடியாது என்றால், எதற்கு நீ? நீ ஒரு மலை உச்சியில் கல்லாகவே இருந்துவிடு," என்றேன்.

நான் பேசியதை மீண்டும் குறிப்பு எடுத்துக்கொண்டான்.

இப்போது நான் பேசிக்கொண்டிருந்தேன். அவன் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான். அந்த அமைதி என்னைக் கோபப்படுத்தியது.

"எனக்கு வேறு வரங்கள் வேண்டாம். நீயும் வேண்டாம். போய்விடு," என்று கத்தினேன்.

விடைபெறத் தயாராகும் முன் அவன் மீண்டும் சொன்னான்.

"நான் யாருக்கும் வஞ்சனை செய்யவில்லை. எல்லாருக்கும் ஒரே மாதிரிதான் வாழ்க்கை கொடுத்தேன். நீ தவறாகப் புரிந்துகொண்டுள்ளாய்."

நானும் மீண்டும் பதிலளித்தேன்.

"உன்னை இங்கே அனைவரும் கடவுள் என்கிறார்கள்."

டிரைவரை வண்டியை எடுக்கச் சொல்லிவிட்டு, மீண்டும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்தான்.

Wednesday, June 30, 2010

நீங்கள் அவனை கடவுள் என்பீர்கள்

இந்த உலகத்தில் எதிரிகள் இல்லாதவன் அதிர்ஷ்டம் இல்லாதவன். அவனுக்கான எதிரிகளை அவனே உருவாக்கிக்கொள்ள வேண்டும். எனக்கு எதிரி என்று ஒருவன் இருக்கிறான். அவன் எப்பொழுதும் எனக்கான எல்லா கதவுகளையும் மூடியே வைத்திருக்கிறான். ஒரு கரிய இருளில் என்னை அடைத்து வைத்திருக்கிறான். அந்த இருட்டில் என்னால் கதவுகளின் சாவித் துவாரங்களைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. நான் ஒவ்வொரு முறையும் கதவு என்று நினைத்து சுவர்களில் முட்டிக்கொண்டு கீழே விழும்போதெல்லாம், அவன் என்னைப் பார்த்துச் சிரிக்கிறான். மற்றவர்களையும் என்னைப் பார்த்துச் சிரிக்க வைக்கிறான். கடவுள் அதைத்தான் விரும்புகிறான்.

மனுஷ்யபுத்திரனின் கவிதை ஒன்றில் வரும் வரிகள்:

"எனக்கான நேரம் வரும்போது மட்டும், கடவுள் கொஞ்சமாகவே புன்னகைக்கிறான்."

அந்த வரிகள் எனக்கு முற்றிலும் பொருந்தும். இதுவரை அவன் எனக்கு எதையும் கொடுத்ததில்லை. ஒரே ஒரு முறை ஒரு கதவைத் திறந்து ஒளியைக் காட்டினான். ஆனால், அதில் நான் வெளியேறும் முன்பே கதவை அடைத்துக்கொண்டான்.

நான் கடவுளின் இருப்பைப் பலமுறை சந்தேகப்பட்டிருக்கிறேன். அந்த சந்தேகம் அதிகமாகும் போதெல்லாம், அவன் சிறு ஒளியைக் காட்டிவிட்டு ஒளிந்துகொள்கிறான். கண்ணில் தெரியாத ஒருவனிடம் எப்படி சண்டையிடுவது என்று எனக்குத் தெரியவில்லை.

அவனை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால், என் தோல்வியை அவனிடம் ஒத்துக்கொள்ள வேண்டும். அவனுக்கு என் மீது இன்னும் சிறிதளவாவது கருணை இருந்தால், என் மனதில் நீங்காமல் இருக்கும் தோல்வியின் நினைவுகளை அழிக்கச் சொல்ல வேண்டும்.

இல்லை, இல்லை.

அவனை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால், அவன் எனக்குச் செய்த அநீதிகளுக்கு நியாயம் கேட்க வேண்டும். என் கனவுகளுக்கு இடையூறு தருவதால் அவனுக்கு அப்படி என்ன இன்பம் என்று கேட்க வேண்டும். அவனின் அன்பு, பாசம், கருணை இவை எப்பொழுதுமே எனக்குத் தேவையில்லை என்று சூளுரைக்க வேண்டும். எத்தனை தோல்விகள் கண்டாலும் எழுந்து நிற்கும் என்னைப் பார்த்து அவன் பொறாமை கொள்ள வேண்டும்.

கொஞ்சம் பொறுங்கள், ஏதோ ஒரு கதவு திறக்கப்படும் ஓசை கேட்கிறது. அது எனக்கான கதவா? என்று பார்த்துவிட்டு வருகிறேன்.