நீங்கள் கண்டிப்பாக நம்பப் போவது இல்லை. இருந்தாலும் சொல்லித்தான் ஆக வேண்டும். நேற்று என் கனவில் கடவுள் வந்தான். ஆம், வந்தவன் தன் பெயரை கடவுள் என்றுதான் சொன்னான். லீவைஸ் ஜீன்ஸும், லீ டி-ஷர்ட்டும் அணிந்திருந்தான். காலில் ரீபக் ஷூ. கையில் 'எக்னாமிக் டைம்ஸ்' பேப்பரும் இருந்தது. எங்கேயோ பார்த்த முகம். ராவணன் திரைப்படத்தில், விக்ரமின் தம்பியாக வந்து ஒருவன் இறந்துபோவானே, அந்த முகம். நன்றாக வெள்ளையாக இருந்தான். கடவுள்தானா என்று யாரும் சந்தேகப்படக் கூடாது என்பதற்காக தினமும் முகத்துக்கு 'பேசியல்' பண்ணுவான் போல. அவனுடைய வெண்மையான முகம் எனக்கு ஒரு வித வெறுப்பைத் தந்தது. இப்போதெல்லாம் வெள்ளையாக இருக்கும் யாரைப் பார்த்தாலும் வெறுப்பாக இருக்கிறது.
"நீதான் கடவுள் என்பதற்கு என்ன ஆதாரம்?" என்று கேட்டேன். அவனுடைய Driving Licence-ஐ காட்டினான். கனரக வாகனம் ஓட்டுவதற்கு அமெரிக்க அரசாங்கத்தால் தரப்பட்டது. பெயர் "கடவுள்" என்று எழுதப்பட்டிருந்தது. அமெரிக்க லைசன்ஸ் என்பதால், கண்டிப்பாக இவன் ஏமாற்றவில்லை என்ற நம்பிக்கை பிறந்தது.
கடந்த ஒரு வாரமாக நான் தூங்குவதே இரண்டு மணி நேரம்தான். அதில் இவன் வேறு வந்துவிட்டான். அவனுடன் நான் ரொம்ப நேரம் பேச விரும்பவில்லை.
அவன்தான் ஆரம்பித்தான்.
"எதற்கு என் மீது இவ்வளவு கோபம்?" என்றான்.
நான் எதிர்பார்த்த கேள்விதான்.
"எனக்கு என் மீதே கோபம்," என்றேன்.
"நான் யாருக்கும் வஞ்சனை செய்யவில்லை. எல்லாருக்கும் ஒரே மாதிரிதான் வாழ்க்கை கொடுத்தேன். நீ தவறாகப் புரிந்துகொண்டுள்ளாய்," என்ற அப்பட்டமான பொய்யைக் கூறினான்.
"நான் உன்னுடன் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை. நீ போய்விடு," என்றேன்.
அவன் போவதாக இல்லை. ஏதோ ஏதோ காரணங்கள் சொன்னான். IIM-ல் M.B.A. படித்திருப்பான் போல, ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை சொன்னான். அவன் நல்லவன் என்பதைப் பத்து கதைகள் மூலம் விளக்கினான்.
என் அமைதி அவனைக் கொஞ்சம் கோபப்படுத்தியிருக்க வேண்டும். பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்.
"உன்னை இங்கே அனைவரும் கடவுள் என்கிறார்கள்," என்றேன்.
நான் பேசியதை ஒரு நோட்டில் குறிப்பு எடுத்துக்கொண்டான்.
"எல்லோரும் சொல்கிறார்கள். ஆகவே அதுவே உண்மையாக இருக்கும்," என்றான்.
"நீ கடவுள் என்றால் எனக்கு ஒரு வரத்தைக் கொடு. நான் இந்த உலகத்தில் இதுவரை வாழ்ந்ததற்கான எல்லா தடயங்களையும் அழித்துவிடு," என்றேன்.
அது முடியவே முடியாது என்றான். வாழ்க்கை ஒரு Butterfly Effect-ஐப் போலவாம். ஒருவனின் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டுபண்ணினால், அது எல்லாருடைய வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றான்.
"சரி, எனக்கு மரணத்தைக் கொடு," என்றேன்.
அதுவும் முடியாது என்றான். ஒருவன் பிறக்கும்போதே அவன் மரணமும் முடிவு செய்யப்படுகிறதாம். அதையும் யாராலும் மாற்ற முடியாது என்றான்.
"உண்மையாகவே எந்தக் கடவுளாலும் வரங்கள் கொடுக்க முடியாது என்றால், இந்த உலகத்தில் எதையும் உன்னால் மாற்ற முடியாது என்றால், எதற்கு நீ? நீ ஒரு மலை உச்சியில் கல்லாகவே இருந்துவிடு," என்றேன்.
நான் பேசியதை மீண்டும் குறிப்பு எடுத்துக்கொண்டான்.
இப்போது நான் பேசிக்கொண்டிருந்தேன். அவன் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான். அந்த அமைதி என்னைக் கோபப்படுத்தியது.
"எனக்கு வேறு வரங்கள் வேண்டாம். நீயும் வேண்டாம். போய்விடு," என்று கத்தினேன்.
விடைபெறத் தயாராகும் முன் அவன் மீண்டும் சொன்னான்.
"நான் யாருக்கும் வஞ்சனை செய்யவில்லை. எல்லாருக்கும் ஒரே மாதிரிதான் வாழ்க்கை கொடுத்தேன். நீ தவறாகப் புரிந்துகொண்டுள்ளாய்."
நானும் மீண்டும் பதிலளித்தேன்.
"உன்னை இங்கே அனைவரும் கடவுள் என்கிறார்கள்."
டிரைவரை வண்டியை எடுக்கச் சொல்லிவிட்டு, மீண்டும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்தான்.
2 comments:
"அமெரிக்க லைசன்ஸ், கண்டிப்பாக இவன் ஏமாற்றவில்லை என்று நம்பிக்கை பிறந்தது." ultimate saga:) mmm hidden potentials coming up. keep going :)
நன்றி நண்பா....
Post a Comment