Monday, October 12, 2026

அக்கப்போர் அப்பாதுரை

எங்க ஊரிலிருந்து வேளாங்கண்ணிக்கும் நாகூருக்கும் வழி கேட்டால், ஊர்க்காரர்கள் சில நேரங்களில் தடுமாறுவார்கள். ஆனால், அக்கப்போர் அப்பாதுரையின் வீட்டுக்கு வழி கேட்டால் மட்டும், எங்க ஊரில் பால் குடிக்கும் குழந்தைகூட விரல் நீட்டிச் சொல்லிவிடும்.

“மணிக்கூண்டு அருகில், வலது பக்கம் திரும்பி, மூன்றாவது வீட்டில் ஒரு பழைய யமஹா பைக் நிற்குமே, அந்த வீடு!”

அந்த வீட்டுக்கு முன்னால் பழைய யமஹா பைக் நிற்பதுதான் அடையாளம். அந்த பைக் யாருடையது என்று கேட்டால், அதற்கு ஒரு தனிப் பஞ்சாயத்து நடத்த வேண்டியிருக்கும்.

வீடு என்றவுடன், ஏதோ அப்பாதுரை தன்னுடைய சொந்தப் பணத்தில் கட்டிய மாளிகை என்று நினைத்துவிடாதீர்கள். அது ஐந்து வருடங்களுக்கு முன்னால் வாடகைக்கு எடுக்கப்பட்டு, தற்போது அப்பாதுரையால் ஆட்டையைப் போடப்பட்ட வீடு.

ஊரில் ஒரு பிரச்சினை என்றால் பத்து பேர் சேர்ந்து தீர்வு காண்பார்கள். ஆனால், அந்தப் பத்து பேரில் அக்கப்போர் அப்பாதுரை ஒருவர் இருந்தால், தீர்வாக இருந்த பிரச்சினைகூடத் திரும்பவும் பிரச்சினையாக மாறிவிடும்! நமது அப்பாதுரை, ஒரு தெருவில் நாய் குரைத்தால், அது ஏன் குரைத்தது என்று விசாரிப்பார். அடுத்த தெருவில் பூனை ஓடினால், அது எதைப் பார்த்து ஓடியது என்று ஆய்வு செய்வார். ஊரில் யாராவது சந்தோஷமாக இருந்தால், அந்தச் சந்தோஷத்துக்குப் பின்னால் ஏதோ சதி இருக்கிறது என்று சந்தேகப்படுவார்.

பிரச்சினை இல்லாத இடத்தில் பிரச்சினையைக் கண்டுபிடிப்பதும், பிரச்சினை தீர்ந்த பிறகு அதை மீண்டும் உயிர்ப்பிப்பதும் இவருக்குக் கைவந்த கலை.

அதனால்தான் ஊர் மக்கள் அவருக்கு அன்பாக ஒரு பட்டம் கொடுத்தார்கள்:

“அக்கப்போர் அப்பாதுரை!”

இன்னும் அப்பாதுரையைப் பற்றி தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், தற்போது அவர் குடியிருக்கும் வாடகை வீட்டின் பேரில் காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு புகாரைப் பற்றிச் சொல்லலாம். புகார் தந்தது வீட்டு ஓனர் அல்ல; நமது அக்கப்போர் அப்பாதுரைதான்! வீட்டு ஓனர் வாடகை கேட்கிறார் என்று புகார் கொடுத்திருக்கிறார்.

பாவப்பட்ட வீட்டு உரிமையாளர் முதலில் அன்பாக அப்பாதுரையிடம் வாடகை கேட்டுப் பார்த்தார்.

“அப்பாதுரை, ஐந்து மாத வாடகை பாக்கி இருக்கு. கொஞ்சம் கொடுங்க.”

“ஐந்து மாதமா? என்னங்க சொல்றீங்க? காலம் எவ்வளவு வேகமா ஓடுது பாருங்க! நேத்து வந்த மாதிரி இருக்கு!”

வீட்டு உரிமையாளர் அதிர்ச்சியுடன் பார்த்தார்.

“நேத்தா? வந்து ஐந்து மாதம் ஆகுது!”

“அதைத்தான் சொல்றேன். காலம் ஓடுது. மனுஷங்கதான் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்யாம இருக்காங்க!”

வாடகை கேட்டவர், வாடகை கொடுக்க வேண்டியவரிடமே வாழ்க்கைப் பாடம் கேட்டுக்கொண்டு திரும்பினார்.

அதற்குப் பிறகு வீட்டு உரிமையாளர் கொஞ்சம் கடுமையாகப் பேச ஆரம்பித்தார்.

“வாடகையும் தர மாட்டீங்க, வீட்டையும் காலி பண்ண மாட்டீங்க. என்னதான் முடிவு பண்ணியிருக்கீங்க?”

அப்பாதுரை அமைதியாகச் சொன்னார்:

“நீங்க என்னை மிரட்டுறீங்க! இதை நான் சும்மா விட மாட்டேன்!”

அடுத்த வாரமே காவல் நிலையத்தில் அக்கப்போர் அப்பாதுரை ஒரு புகார் மனு கொடுத்தார். புகாரைப் படித்த புதிதாக மாற்றலாகி வந்த காவலர், அப்பாதுரையை ஒருமுறை பார்த்தார். புகாரை இன்னொரு முறை படித்தார். பிறகு அவரையே மீண்டும் பார்த்தார்.

“அவர் வீட்டு உரிமையாளர் தானே?”

“ஆமாம்!”

“அவருடைய வீட்டில் நீங்கதானே குடியிருக்கீங்க?”

“ஆமாம்!”

“அப்போ அவர் வாடகை கேட்கத்தானே செய்வார்?”

அப்பாதுரை உடனே நிமிர்ந்து உட்கார்ந்தார்.

“சார், நீங்களும் இப்படிப் பேசினால் நான் யாரிடம்தான் நியாயம் கேட்பது?”

அப்போதுதான் காவலருக்குப் புரிந்தது, அப்பாதுரை காவல் நிலையத்துக்குள் நுழைந்த உடனேயே மற்ற காவலர்கள் ஏன் மிகவும் பிஸியாக இருப்பதுபோல் நடித்தார்கள் என்பது.

அந்தப் புதிய காவலர் புகார் மனுவைத் திருப்பி அப்பாதுரையிடமே கொடுத்துவிட்டார்.

ஆனால், அப்பாதுரை சாதாரண ஆளா?

காவல் நிலையத்தில் கதவு மூடப்பட்டதால், அடுத்ததாக ஐ.ஜி. அலுவலகத்தில் மனு கொடுத்தார். அங்கிருந்தும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. உடனே சி.எம். செல்லுக்குப் புகார் அனுப்பினார்.

அப்பாதுரையின் புகார் பயணம் மட்டும் நிற்கவே இல்லை.

கடைசியில், அந்தப் புகாரை என்ன செய்வது என்று தெரியாமல், காவல் நிலையத்தில் அதைக் கிடப்பில் போட்டுவிட்டார்கள்.

அப்பாதுரை மட்டும் அதைத் தன்னுடைய வெற்றியாகக் கருதினார்.

“பார்த்தீங்களா? என்னுடைய புகாரை அவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியல!”

பாவம், வீட்டு உரிமையாளர் கொஞ்ச நாட்கள் காவல் நிலையத்துக்கு அலைந்துவிட்டு, அவரும் அந்த விஷயத்தைக் கிடப்பில் போட்டுவிட்டார்.

இதுபோல, அக்கப்போர் அப்பாதுரை பக்கத்துத் தெருவில் இருக்கும் ஒரு பல் மருத்துவர் மீது, நல்லா இருந்த பல்லில் வலி ஏற்படுத்தியதாகப் புகார் கொடுத்துள்ளார். ஊரின் மிகச் சிறந்த ஹோட்டலில் பரோட்டாவில் மைதா மாவு அதிகம் கலப்பதாகவும், அடகுக் கடை ஒன்றில் நான்கு வருடங்களுக்கு முன்னால் அவரிடம் அதிக வட்டி வாங்கிவிட்டதாகவும், துணிக்கடையில் வாங்கிய வெள்ளை வேட்டி ஒரு வாரத்தில் நிறம் மாறியதாகவும், பஸ் கண்டக்டர் சில்லறை தரவில்லை என்றும் இப்படிப் பல புகார்களைக் கொடுத்துள்ளார்.

இப்படி அப்பாதுரை தந்த புகார்கள் பத்துக்கும் மேல் காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பதாக ஊரில் ஒரு பேச்சு உள்ளது.

காவல் நிலையம் மட்டுமல்ல, நகராட்சி அலுவலகம், தாசில்தார் அலுவலகம், வருவாய்த் துறை அலுவலகம், இந்தியன் வங்கி என எல்லா அலுவலகங்களிலும் அப்பாதுரை உள்ளே நுழைவதைப் பார்த்தாலே, ஊழியர்கள் தங்கள் இருக்கைகளிலிருந்து நழுவிவிடுவார்கள்.

அப்பாதுரையின் வாழ்க்கையில் இன்னொரு விசேஷம் உண்டு. அவர் எந்தப் பிரச்சினைக்கும் போராடத் தயாராக இருப்பார். ஆனால், அந்தப் போராட்டத்துக்கு ஒரு பைசாகூடச் செலவு செய்ய மாட்டார்.

இலவசமாகப் புகார் கொடுக்க இடம் இருக்கிறதா? உடனே புறப்பட்டுவிடுவார்.

இலவசமாக மனு அனுப்ப வழி இருக்கிறதா? இரவு முழுவதும் விழித்திருந்து மனு எழுதுவார்.

ஆனால், யாராவது,

“அப்பாதுரை, இதைச் சரி செய்யணும்னா கோர்ட்டுக்குப் போக வேண்டியிருக்கும்!”

என்று சொன்னால் மட்டும், அவருடைய முகத்தில் ஒரு பெரிய மாற்றம் தெரியும்.

“அதுக்கு எவ்வளவு செலவாகும்?”

“அது வழக்கைப் பொறுத்தது.”

“அப்போ வழக்கே வேண்டாம்!”

அவ்வளவுதான். நியாயத்துக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்தவர், செலவு என்ற வார்த்தையைக் கேட்டதும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பின்வாங்கிவிடுவார்.

அடுத்த நிமிடமே வேறு யாராவது,

“அப்பாதுரை, ஒரு இலவசப் புகார் மனு கொடுக்கலாம். அதுக்கு எந்தச் செலவும் இல்லை!”

என்று சொன்னால் போதும்.

“அப்படியா? வண்டியை எடுப்பா! இப்பவே போகலாம்!”

அவருடைய நீதிப் பயணத்துக்கு பெட்ரோல் செலவு மட்டும் சில நேரங்களில் ஏற்படும். அதையும் முடிந்தவரை வேறொருவரின் வண்டியில் ஏறிச் சமாளித்துவிடுவார்.

ஆனால், அக்கப்போர் அப்பாதுரையிடம் சந்தேகம் கேட்பதற்கும் ஊரில் ஒரு கூட்டம் எப்போதும் தயாராக இருந்தது.

“அப்பாதுரை அண்ணே, எங்க வீட்டில் தண்ணீர் வரல!”

“மனு போடு!”

“எங்க தெருவில் குப்பை அள்ளல!”

“மனு போடு!”

இவ்வளவு அக்கப்போர் செய்யும் அப்பாதுரை, வீட்டில் மட்டும் மிகவும் அமைதியாகவே இருப்பார். அதற்குக் காரணம், ஆசிரியர் வேலைக்குச் செல்லும் அவருடைய மனைவி.

எந்த வேலைக்கும் செல்லாமல் அப்பாதுரை இப்படி அக்கப்போர் செய்வதற்கு, அவருடைய மனைவியின் சம்பளம்தான் உதவுகிறது. வெளியில் அப்பாதுரை செய்யும் அக்கப்போர்கள் அனைத்தும் அவருடைய மனைவிக்குத் தெரிந்திருந்தாலும், வீட்டில் அவர் அமைதியாக இருப்பதால், அவருடைய மனைவியும் அவரைக் கண்டிப்பதில்லை.

 அக்கப்போர் தொடரும்.... 

No comments: