இப்பொழுது எல்லாம் வாரத்துக்கு பத்து IPO-கள் வருகின்றன. என்னென்னவோ கம்பெனி பெயர்கள். கம்பெனி பெயர்கள் அடுத்த வாரத்துக்குள் நமக்கு மறந்தும் விடுகின்றன. இதில் SME IPO தனி.
இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்னால், ஒரே ஒரு Yamaha Showroom வைத்திருந்த ஒரு கம்பெனி SME IPO-வில் list ஆகி, பெரும் பேசுபொருளானது. இதேபோல் இன்னொரு SME கம்பெனி, “scrap business” என்று சொல்லி list செய்தார்கள். ஆனால் Google Map-ல் அவர்கள் சொன்ன இடத்தைப் பார்த்தால், ஒரு பழைய இரும்புக் கடை மட்டுமே உள்ளது.
நாம்தான் உஷாராக நல்ல IPO-களைப் பார்த்து Apply செய்ய வேண்டும்.
இவ்வளவு சொல்வதைப் பார்த்து, நான் என்னமோ பெரிய Share Market IPO புலி என்று நினைத்துவிட வேண்டாம். என்னிடமே பழைய இரும்புக் கடை போல் இரண்டு SME IPO Share'கள் இருக்கின்றன.
அதில் ஒன்று சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த உணவுப் பொருட்களைப் பதப்படுத்தி விற்கும் ஒரு SME கம்பெனி. “நம்ம மடிப்பாக்கம் கம்பெனி தானே!” என்று ஒரு local sentiment-ல் வாங்கிவிட்டேன். IPO வந்த புதிதில், நான் நேரிலேயே சென்று கம்பெனி அலுவலகத்தை வெளியிலிருந்து பார்த்து உறுதி செய்தேன். அலுவலகமும் பார்க்க நன்றாகத்தான் இருந்தது.
“அலுவலகம் இருக்கிறது… Building இருக்கிறது… சரி, கம்பெனி உண்மையிலேயே இருக்கிறது” என்று மனதிற்குள் ஒரு பெரிய forensic investigation முடித்து ஷேர்களை வாங்கினேன்.
ஆனால், இப்போது ஒரு வருடம் கழித்து, மடிப்பாக்கத்தில் அந்த இடத்திற்குச் சென்று பார்த்தால், அந்த கம்பெனி அங்கு இருந்ததற்கான அத்தாட்சியே இல்லை.
நான் இப்போது சொல்ல வந்தது, நான் ஏமாந்த கதையைப் பற்றி அல்ல. இப்போது புதிதாக வந்திருக்கும் Elevate Campuses என்ற கம்பெனியின் IPO பற்றித்தான்.
இதன் IPO நாளை (25/09/2026) முடிவடைகிறது. மொத்தம் ₹2,100 கோடி Issue.
இந்தக் கம்பெனியின் Business கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது. கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு Hostel வசதி செய்து தரும் நிறுவனம். இதுபோல் ஒரு Business இருப்பதே எனக்கு இப்போதுதான் தெரியும். இந்த நிறுவனம் இந்தியாவில் ஐந்து கல்லூரிகளுக்கும், அமெரிக்காவில் ஒரு கல்லூரிக்கும் என மொத்தம் ஆறு கல்லூரிகளுக்கு இந்தச் சேவையைச் செய்து வருகிறது. இப்போது கிடைக்கும் ₹2,100 கோடியை வைத்து, இதன் network-ஐ இன்னும் விரிவுபடுத்தப் போகிறது. IIT Madras கல்லூரியும் இதன் வாடிக்கையாளராக இருப்பது இன்னொரு ஆச்சரியம்.
இதன் business model-ல் முக்கிய அம்சம்:
கல்வி + Real Estate + Long-term Operations. அதாவது, கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர் accommodation-க்குத் தேவையான கட்டிடங்களை manage செய்து, நீண்டகால வருமானம் பெறும் மாதிரியான business. கொஞ்சம் வித்தியாசமான, கேள்விப்படாத Business தான்.
ஆனால், என்னுடைய சந்தேகம் எல்லாம், எப்படி ஒரு கல்லூரி Hostel-ஐ ஒரு MNC கம்பெனியால் நிர்வகிக்க முடியும் என்பதுதான்.
நானும் கல்லூரிக் காலங்களில் Hostel-ல் தங்கியவன் என்ற முறையில், இதன் நடைமுறை சாத்தியங்கள் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன். பல கல்லூரிகள் Hostel கட்டணம் என்ற பெயரில் இப்போதே ₹1.5 லட்சம் வரை வாங்குகிறார்கள். அது இல்லாமல் Mess கட்டணம் தனி. அப்படியென்றால், இவர்களைப் போன்ற MNC கம்பெனிகள் உள்ளே வந்தால், Hostel கட்டணம் கல்லூரிக் கட்டணத்தைவிட அதிகமாகிவிடுமோ?
பல கல்லூரிகள் ஊரைத் தாண்டி காட்டுப் பகுதிகளில் இருப்பதால், Hostel-ல்தான் மாணவர்கள் தங்கிப் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதனால், Business point of view-ல் பார்த்தால், மாணவர்கள் இருக்கும் வரை Hostel தேவை இருக்கும். மாணவர்கள் இருக்கும் வரை room தேவை. Room இருக்கும் வரை rent வரும்.
அதனால் Business model புரிகிறது. ஆனால், இது elite colleges-க்கு மட்டும்தான் நன்றாகப் பொருந்துமோ என்று நினைக்கிறேன்.
அதிலும் IIT Madras எப்படி இதில் வருகிறது என்பதுதான் எனக்குப் புரியவில்லை. இணையத்தில் தேடியபோது, IIT Madras – Elevate Campuses ஒப்பந்தம் பற்றிய சில தகவல்கள் கிடைத்தன.
2026 ஜூன் மாதம் ₹400 கோடி மதிப்பில் PPP (Public-Private Partnership) student accommodation project தொடங்கப்பட்டுள்ளது.
இதில்:
IIT Madras → 3.5 ஏக்கர் நிலத்தை வழங்குகிறது.
Elevate Campuses → பணத்தை முதலீடு செய்து கட்டிடத்தைக் கட்டுகிறது.
Elevate → Hostel-ஐ design, build, finance, maintain மற்றும் operate செய்யும்.
சுமார் 1,800 PhD students மற்றும் project staff தங்கும் வகையில் இரண்டு blocks கட்டப்படுகின்றன.
திட்டம் 2028-ல் முடிக்கப்பட உள்ளது.
Elevate இந்த facility-ஐ 30 ஆண்டுகள் operate செய்யும்.
அந்த concession period முடிந்த பிறகு, asset-ஐ IIT Madras-க்கு இலவசமாக transfer செய்ய வேண்டும்.
ஆனால், Hostel கட்டணம் போன்ற விவரங்கள் எங்கும் இல்லை. Hostel கட்டணம் எவ்வளவு? மாணவர்களிடம் எவ்வளவு வசூலிப்பார்கள்? இது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரி என்பதால், அரசாங்கம் எவ்வளவு தரும்? ஒரு வருடத்திற்கு எவ்வளவு வருமானம்?
இதெல்லாம் தெரிந்தால்தான் இந்த Business Model உண்மையில் எவ்வளவு பெரிய Business என்று நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.
இப்போது நான் “இதன் IPO' வை வாங்குங்கள், வாங்காதீர்கள்” என்று சொல்ல வரவில்லை. ஏற்கனவே என்னிடம் இரண்டு SME IPO-க்களில் என் சொந்த “மடிப்பாக்கம் research” experience இருக்கிறது. அதனால், மற்றவர்களுக்கு IPO advice கொடுக்க நான் இன்னும் கொஞ்சம் தூரம் செல்ல வேண்டும்!
இந்த Business Model வெற்றி பெறுகிறதா, அல்லது ஒருநாள் Google Map-ல் address மட்டும் இருந்து, கம்பெனியைத் தேடிக்கொண்டு நாம் அலைகிறோமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment