Saturday, May 23, 2026

crontab -time - Version 6 Deployment Day

 அசோக் மீண்டும் சிவாவிடம் கேட்டான்: “மச்சி… வேலையை விட்டுத் தூக்கிட மாட்டாங்கல?”

“உடனே தூக்க மாட்டாங்கடா. முதல்ல மானம் போகும், அப்புறம் அசிங்கப்படுத்துவாங்க… இதையெல்லாம் தாங்கி நீ உயிரோட இருந்தா மட்டும்தான் கடைசியா தூக்குவாங்க…” என்றான் சிவா.

“Kirupa is typing…” இன்னும் அப்படியே இருந்தது.

“டேய்… அவ பெரிய மெயிலா  எல்லாருக்கும் அனுப்பப் போறா. அதுக்கு முன்னாடி நீ மேனேஜருக்குச் போன்'ல சொல்லிடு…” என்றான் சிவா.

அதற்குள் கிருபா மெசேஜ் அனுப்பி இருந்தாள்.

Kirupa: “I checked with Unix Team Seema. She said there is already one package installation scheduled in our server within the next one hour. CR is already raised for that. If we add our library file to the same CR, they can install our library as well. Since it is just a small library file, no reboot is required. Inform your manager and get the CR updated. Send mail to Change Request Team also.”

அசோக் உடனே: “Thanks a lot” என்று ரிப்ளை செய்தான். அந்த “Thanks a lot” கூட அவன் மூன்று தடவை டைப் செய்து, டெலீட் பண்ணிய பிறகுதான் அனுப்பப்பட்டது. முதலில்: “Thanks” என்று மட்டும் டைப் செய்தான். அது ரொம்ப dry'யா இருக்கிற மாதிரி தோன்றியது. பிறகு: “Thanks Kirupa” என்று டைப் செய்தான். அது தேவையில்லாமல் close'ஆ போகிற மாதிரி தோன்றியது.

கடைசியில்: “Thanks a lot” என்று அனுப்பிவிட்டான்.

மேனேஜருக்குப் போன் செய்து அனைத்தையும் விளக்கினான்.

“என்ன அசோக்… இவ்வளவு careless'ஆ இருக்கலாமா?” என்றார். வேறு ஒன்றும் சொல்லவில்லை.

உடனே Change Request Team'க்கும் Unix Admin Team'க்கும் conf call போடச் சொன்னார். யூனிக்ஸ் டீம் உடனே சரி என்றார்கள். அவர்களுக்கு இதெல்லாம் சாதாரண விஷயம் போல. ஆனால், சேஞ்ச் ரெக்வெஸ்ட் டீமிலிருந்த ஷியாம் ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டார்.

“எதுக்காக முன்னாடியே அந்த CR'யில் இதைச் சேர்க்கவில்லை?”

“UAT Server'யில் அந்த library'யை எப்போது install செய்தீர்கள்?”

“அதன் VR number என்ன?”

“ஏதாவது பிரச்சினை வந்தால் உடனே rollback செய்ய முடியுமா?”

இப்படி நிறைய கேள்விகள். அனைத்திற்கும் அசோக்கின் மேனேஜர் பொறுமையாகப் பதிலளித்தார். சில டெக்னிக்கல் கேள்விகளுக்கு மட்டும் அசோக்கைப் பதில் சொல்லச் சொன்னார். கடைசியாக ஷியாம் "Client email approval" கேட்டார். "பின்னர் ஏதாவது பிரச்சினை என்றால் எங்களைத்தான் கேள்வி கேட்பார்கள்" என்றார்.

அசோக் மேனேஜர், சேஞ்ச் ரெக்வெஸ்ட் டீம் மேனேஜருக்குக் கான்பரன்ஸ் கால் போட்டு, அவர் எப்படியோ அப்ரூவல் வாங்கித் தர, கடைசியில் அந்த CR'ரில் லைப்ரரி ஃபைல் சேர்க்கப்பட்டது.

உடனே கிருபாவுக்கு மெசேஜ் செய்து லைப்ரரி ஃபைல் சேர்க்கப்பட்ட விவரத்தைச் சொல்லி, இன்னொரு முறை நன்றி தெரிவித்தான் அசோக்.

அவளும் பதிலுக்கு: “Okay” என்று மட்டும் அனுப்பினாள்.

கிருபாவும், அவன் மேனேஜரும் இந்தச் Situation'ஐ கையாண்ட விதத்தைப் பார்த்து அசோக்குக்கு ஆச்சரியமாக இருந்தது. இருவருமே அவனை ஒரு வார்த்தைகூடக் குறை சொல்லவில்லை.

சேஞ்ச் ரெக்வெஸ்ட் டீமிலிருந்த ஷியாம் மட்டும்தான் கான்பரன்ஸ் காலில்:

“Ashok… it’s all your mistake…” என்று இரண்டு மூன்று தடவை சொன்னான்.

ஒருவழியாக அன்று Production Deployment சிறப்பாக முடிக்கப்பட்டது.  அந்த last mail வந்த நேரம் இந்திய நேரப்படி காலை நான்கு மணி இருக்கும். “Deployment completed successfully.”

மெயிலைப் பார்த்ததும் சிஸ்டத்தை off செய்தான். பக்கத்து கியூபிக்கலில் Chair'லேயே படுத்திருந்த சிவாவையும் வெங்கட்டையும் எழுப்பினான். சிவா headset'ஐ கழுத்தில் போட்டபடியே தூங்கிக்கொண்டிருந்தான். Monitor இன்னும் on'லேயே இருந்தது. Screen'ல் ஒரு Excel file open ஆகி இருந்தது. .வெங்கட் மட்டும் chair'ஐ இரண்டு cubicle தள்ளி இழுத்துக்கொண்டு போய், இரண்டு chair'களை சேர்த்து proper bed மாதிரி மாற்றி தூங்கிக்கொண்டிருந்தான்.

“டேய்… deployment முடிஞ்சுடுச்சு…” என்றான் அசோக்.

வெங்கட் கண் திறக்காமலேயே:
 “Success ஆ? இல்ல bridge call இன்னும் தொடருதா?”
என்றான்.

“Success டா…” என்றதும் உடனே எழுந்து உட்கார்ந்தான்.

வெங்கட்: "மச்சி... உசுரு தப்பிச்சது! இனிமேலாவது கான்பரன்ஸ் கால்ல மியூட் போட்டுட்டு காபி குடிக்கப் போவாத," என்று கியூபிக்கலிலேயே சத்தமாகச் சிரித்துக் கிண்டல் செய்தான்.

மறுநாள் சனிக்கிழமை விடுமுறை என்பதால், பைக்கில் பாண்டிச்சேரி போகலாமா என்று வெங்கட் ஐடியா தந்தான். சிவாவும் சரி சொல்ல, அசோக் கண் எரிச்சலுடன், "நான் வர்றேன், ஆனா அங்கே போய் நல்லா தூங்கிடுவேன். யாரும் disturb செய்யக் கூடாது," என்றான். போகும் வழியில் அப்துல் அறைக்கு சென்று அவனையும் அழைத்து செல்வோம் என்று முடிவானது.

காலை ஆறு மணிக்கு ஆபீஸை விட்டு வெளியே வந்து, சோழிங்கநல்லூர் சாலையோரக் கடையில் அந்த விடியற்காலைக் குளிரில் மூவரும் குடித்த இஞ்சி டீயின் சுவை அசோக்குக்கு இன்னும் மறக்கவில்லை.

அன்று நடந்ததை இப்போது நினைத்தாலும் அசோக்கின் முகத்தில் தானாகவே ஒரு சிறிய புன்னகை வந்துவிடும்.

No comments: