சென்ற பதிவுடன் Crontab Session பதிவுகள் முடிகின்றன. இன்னும் இரண்டு பதிவுகள் எழுதி வைத்துள்ளேன். ஆனால் அதன் கதைப்போக்கு வேறு எங்கோ செல்கிறது. இதுவரை office cubicle'யிலேயே இருந்த அசோக், அந்த இரண்டு பதிவுகளில் வெளியே வருகிறான். சில தத்துவங்களும் அரசியலும் பேசுகிறான். ஆகவே, Crontab'யை இத்துடன் முடித்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளேன். எழுதிய இரண்டு பதிவுகளையும் வீணாக்கக் கூடாது. சில tinkering work செய்து வேறு தலைப்பில் வெளிவரும்.
இந்த முடிவுரை கூட தேவையில்லாத ஒன்றுதான். ஆனால் வாசகர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் விட்டால், இந்த உலகம் பின்நாட்களில் நம்மை காறித் துப்பாதா?
ஆகவே இதோ Crontab Series'யின் முடிவுரை. ஒரு வாசகர் கடிதத்துடன்.
ரொம்ப வருடங்களுக்கு பிறகு எனக்கு வந்த வாசகர் கடிதம் அது. மீண்டும் அனுப்பியவரின் email id'யை படித்தேன். கேள்விப்பட்ட மாதிரியே இல்லை. ஒருவேளை கவிதாவாக இருக்குமோ? தெரியவில்லை.
அந்த வாசகர் மெயில்:
“என்ன, பத்து பதினைந்து வருடம் கழித்து திடீரென்று அசோக்கை உள்ளே கொண்டு வருகிறீர்கள்? அப்படியென்றால் இத்தனை வருடம் அசோக் என்ன செய்துகொண்டிருந்தான்? எழுத்தாளன் இல்லாமல் ஒரு கதாபாத்திரம் இத்தனை நாள் உயிர் வாழ முடியுமா? இல்லை அசோக் என்கிற கதாபாத்திரமே பொய்யா?”
ஆங்கிலத்தில் introspective memoir என்று ஒரு வார்த்தை உண்டு. அதாவது ஒரு குறிப்பிட்ட வாசகர்களுக்காக மட்டும் எழுதும் எழுத்தாளர்கள். ஆனால் நான் இன்னும் கொஞ்சம் மேல்.ஒரு குறிப்பிட்ட வாசகர்களுக்காக எழுதாமல், ஒரே ஒரு வாசகருக்காக மட்டும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். அந்த ஒரே ஒரு வாசகர் நான்தான்.இதற்கு ஆங்கிலத்தில் என்ன வார்த்தை என்று தெரியவில்லை.இப்போது நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்கு புரிகிறது அல்லவா? நிற்க.
அசோக் உண்மையாகவே இத்தனை நாட்கள் என்ன செய்துகொண்டு இருந்தான் என்பது எனக்கு முழுமையாக தெரியாது. ஆனால் இப்போது என்ன செய்துகொண்டு இருக்கிறான் என்பது தெரியும்.
IT field'லிருந்து முழுமையாக வெளியே வந்துவிட்டான்.
ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத இரண்டு வியாபாரங்களை கவனித்துக்கொண்டு இருக்கிறான். இங்கு “கவனித்துக்கொண்டு இருக்கிறான்” என்பதுதான் சரியான வார்த்தை. ஏனென்றால் அந்த தொழில்களை அவன் ஆரம்பிக்கவும் இல்லை, அவன் நடத்தவும் இல்லை, கவனித்து மட்டும் கொண்டு இருக்கிறான்.
இரண்டு தொழில்களில் ஒன்று அவன் தந்தையுடையது. மற்றொன்று அவன் மாமனாருடையது. ஒன்று தங்க நகை சம்பந்தப்பட்ட தொழில். மற்றொன்று உணவு தொழில் சம்பந்தப்பட்டது. அவனுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஒரு மனைவியும் தான். அசோக்கின் மனைவி மட்டும் இல்லையென்றால், இந்நேரம் அசோக் சட்டை பிய்த்துக்கொண்டு பைத்தியமாக தெருக்களில் அலைந்துகொண்டு இருப்பான். இதை அவன் சொல்லவில்லை. அசோக்கின் மனைவிதான் பார்ப்பவர்களிடம் இதை எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறாள். நிற்க.
சில நேரங்களில் பழைய குறிப்புகளை படிக்கும்போது, இதை உண்மையில் நான்தான் எழுதினேனா என்ற சந்தேகம் வருகிறது. அந்த காலத்தில் இருந்த நான் வேறு. இப்போது இந்த வரிகளை எழுதிக்கொண்டிருக்கும் நான் வேறு.
அப்படியிருக்க, அந்த கதைகளில் வந்த “அசோக்” மட்டும் எப்படி ஒரே மனிதனாக இருக்க முடியும்?
அசோக் உண்மையில் இருந்தானா என்று கேட்டால், என்னால் உடனே “ஆம்” என்று சொல்ல முடியவில்லை.
“இல்லை” என்றும் சொல்ல முடியவில்லை.
ஏனென்றால் சில மனிதர்கள் நிஜத்தில் வாழ்ந்த காலத்தை விட, நம் நினைவில் வாழும் காலம்தான் அதிகம்.
சில நேரங்களில் நான் அசோக்கைப் பற்றி எழுதுகிறேனா, இல்லை அசோக் என்னைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறானா என்பதே புரியவில்லை. அதிலும் விசித்திரம் என்னவென்றால், நான் அசோக்கை மறந்துவிட்டேன் என்று நினைக்கும் ஒவ்வொரு முறையும், எங்கிருந்தோ அவன் மீண்டும் வந்துவிடுகிறான்.
தற்போது அசோக்கிடம் நிறைய மாற்றங்கள் இருக்கின்றன. எப்போதாவது தான் சிரிக்கிறான். வெளி நண்பர்களிடம் பேசியே ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. வியாபாரம் சம்பந்தமான ஆட்களிடம் தொடர்பு நிறைய இருந்தாலும், யாரையும் இவன் “நண்பர்கள்” என்ற எல்லைக்குள் கொண்டு வரவில்லை. அதை அவன் அப்பாதான் சொல்லிக்கொடுத்தார்.
“வியாபாரத்தில் சொந்தங்கள், நண்பர்கள் என்று பார்க்கக்கூடாது…”
இப்போது அசோக்கின் அந்த இறுகிய முகத்தை நீங்களே கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள். அசோக்கின் முதல் பையன் சொல்லும் timing comedy'க்குக்கூட அசோக் இப்போது சிரிப்பதில்லை. சில நேரங்களில் அவன் வீட்டில் இருப்பதை பார்த்தால், அங்கு ஒருவன் வாழ்ந்துகொண்டு இருப்பது போலவே தெரியாது.
காலையில் கடை திறக்க வேண்டும். பிறகு phone'ல் மற்ற கடைகளிலும் factory'யிலும் நடப்பவற்றை CCTV'யில் தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும். எங்காவது வேலை சரியாக நடக்கவில்லை என்றால், உடனே phone செய்து இரண்டு dose விட்டு, அசோக் தனது இருப்பை காட்ட வேண்டும். பிறகு accounts பார்க்க வேண்டும். பிறகு இரவு phone calls, அந்த கடைகளின் அன்றைய வியாபாரத்தை பற்றி.
.
இதற்கிடையில் யாராவது “எப்படி இருக்கீங்க?” என்று கேட்டால் மட்டும், ஒரு இரண்டு நொடிகள் யோசித்துவிட்டு “நல்லா இருக்கேன்…” என்பான்.
அந்த “நல்லா இருக்கேன்” என்பதில்தான் பிரச்சனை.
அவன் உண்மையில் நல்லா இருக்கிறானா, இல்லை அந்த பதிலை பல வருடங்களாக பழக்கத்தால் சொல்லிக்கொண்டிருக்கிறானா என்பது அவனுக்கே தெரியாது. சில மனிதர்கள் சோகமாக இருப்பதில்லை. ஆனால் சந்தோஷமாகவும் இருப்பதில்லை. அவர்கள் வாழ்க்கையை வாழ்வதில்லை.வாழ்க்கை அவர்களை பயன்படுத்திக்கொண்டு போய்க்கொண்டிருக்கும். அசோக் இப்போது அந்த stage'ல் இருக்கிறான் என்று நினைக்கிறேன்.
ஒரு காலத்தில் இரவு இரண்டு மணி வரை office'ல் இருந்து deployment முடித்து, நண்பர்களோடு tea குடிக்க கிளம்பியவன், இப்போது இரவு பத்து மணிக்கே குழந்தைகளோடு தூங்கச் சென்று விடுகிறான்.ஆனால் தூக்கம்தான் வர மாட்டேன் என்கிறது. இதற்கிடையில் சில மாத்திரைகள் வேறு. Lamotrigine மாத்திரை போட்டால்தான் அவனால் அன்றைய இரவில் தூங்க முடியும். இல்லையென்றால் அதிகாலை வரை சும்மாவே படுத்து இருக்க வேண்டியதுதான்.
அவனிடம் இன்னும் பழைய laptop இருக்கிறதாம். வேலை செய்யாத laptop.
அதை ஏன் இன்னும் வைத்திருக்கிறான் என்று அவன் மனைவி பலமுறை கேட்டிருக்கிறாளாம். அவன் ஒவ்வொரு முறையும் “பழைய files இருக்கு…” என்று மட்டும் சொல்லிவிடுகிறான். ஆனால் அந்த laptop'ல் files மட்டும் இல்லை என்று எனக்கு தெரியும்.அவனின் ஒரு decade காலம் முழுக்க அங்கே இருக்கிறது.
சில conference call recordings, சில screenshots, சில mails. யாரோ அனுப்பிய “Thanks Ashok” என்ற இரண்டு வார்த்தைகள். இப்போது இல்லாத சில மனிதர்களின் chat history.
ஒருவேளை, இப்போது இல்லாத அவனுடைய பழைய version கூட அங்கேயே இருக்கலாம்.அதனால்தான் இன்னும் அதை delete செய்யாமல் வைத்திருக்கிறானோ என்னவோ.
இதுதான் அசோக்கின் இன்றைய நிலைமை.அதற்கு மேல் சொல்வதற்கும் ஒன்றுமில்லை. அல்லது, இன்னும் சொல்லக்கூடாத ஏதோ ஒன்று இருக்கலாம்.
No comments:
Post a Comment