Sunday, November 29, 2009

புரியாத கதைகள்

கண்டிப்பாக விரைவில் அவள் என்னிடம் காதலை சொல்லிவிடுவாள். சில நாட்களாகவே அவள் பேச்சில் எதோ ஒரு மாற்றம் தெரிந்தது. ஒவ்வொரு முறையும் எதோ ஒன்றை என்னிடம் சொல்ல நினைத்து, பின் அதை மறைத்துவிடுகிறாள். விரைவில் அவள் என்னிடம் காதலை சொல்லிவிடுவாள். அவள் காதலை சொல்லும் பொழுது எப்படி நான் பதில் அளிக்க வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை ஒத்திகை பார்க்க தொடங்கினேன்.அவள் முகத்தை பார்த்துத்தான் பேச வேண்டும். " எனக்கு இந்த காதல் மீது எல்லாம் நம்பிக்கை இல்லை" என்றுதான் பேச தொடங்க வேண்டும்.

சசி எப்பொழுதும் என்னிடம் சொல்வான் " இந்த காதல், கவிதை எழுதுவதற்க்கு வேண்டுமானால் உதவியாக இருக்கும், மற்றபடி எதற்க்கும் இது உதவி செய்யாது. அவள் எங்கே சென்றாலும் பின்னாடியே சென்று, அவள் கேட்பதை எல்லாம் வாங்கிதந்து, அது ஒரு நாய் பிழைப்பு ".

கண்டிப்பாக அவள் காதலை ஒத்துக்கொள்ள கூடாது. அவள் முகத்தை அலட்சியமாக பார்க்க வேண்டும். நான் அவளிடம் பேசுவதை போல் மனக்கண்ணில் ஓட்டி பார்த்தேன். நான் காதலை மறுத்தவுடன் , அவள் அழுதுக்கொண்டு இருந்தாள். " இந்த அழுகைக்கு எல்லாம் எமாந்தவன் நான் இல்லை ".

காட்சி 1:
----------

அசோக் எதிர்பார்த்ததை போல், அவள் காதலை உடனே சொல்லவில்லை. ஒரு மாதம் சென்றுவிட்டது. ஆனால், அவள் பேச்சில் எதோ ஒரு மாற்றம் தெரிந்தது. அசோக், ஒவ்வொரு நாளும் அவன் பேச வேண்டியதை நடித்து பார்த்து கொண்டே இருந்தான். சில வாக்கியங்களை குறைத்தும், சில வாக்கியங்களை கூட்டியும் பல மாற்றங்கள் செய்துவிட்டான்.

அவன் எதிர்பார்த்ததை போல அந்த நாளும் வந்தது. சாந்தி காலணி Creamy inn'ல் உட்கார்ந்து இருக்கும் போது அவள் சொன்னாள் " அசோக், நான் உன்னை காதலிக்கிறேன் என்று நினைக்கிறேன். நாம் இருவரும் கடைசி வரை சேர்ந்து வாழ்ந்தால் என்ன??".

இப்படி காதலை கொஞ்சம் கூட கவிநயம் இல்லாமல், தட்டையாக சொன்னது அசோக்கிற்க்கு கோபத்தை உண்டு பண்ணியது. தான் எழுதி வைத்து இருப்பதை அவளிடம் சொல்ல தயாரானான். முதலில் அவள் முகத்தை பார்த்து பேச வேண்டும்.

அசோக் அவள் முகத்தை நேராக பார்த்தான். அவன் என்ன பதில் சொல்ல போறான் என்ற ஏக்கம் அவள் கண்ணில் தெரிந்தது. " இதுவரை அசோக் அசோக் என்று சிரித்துக்கொண்டு இருந்தவளை அழ வைப்பதா, இவள் மனது தாங்குமா??. ஒரு நாய்குட்டி ரோட்டில் அடிபட்டதை பார்ததற்கே அழுதவள் ஆயிற்றே இவள் ". பக்கத்து டேபிளில் அமர்ந்து இருந்த குழந்தையின் மீது கவனத்தை குவித்தான்.

"அசோக், யோசித்தது போதும். எனக்கு எதோ மாதிரி இருக்கு. பதிலை சீக்கிரம் சொல்லு" என்று மவுனத்தை கலைத்தாள்

அசோக்கிற்க்கு எழுதிவைத்தது எல்லாம் மறந்துவிட்டது. அவனை அறியாமலயே " இதை எப்படி சொல்வது என்று தெரியாமல்தான், இத்தனை நாள் நானும் காத்துக்கொண்டு இருந்தேன். Me too Love you " என்றான். தூரத்தில் Akon'ன் "Lonely" பாடல் ஒலித்துக்கொண்டு இருந்தது.

காட்சி 2:
-----------

அசோக் இவ்வளவு சீக்கிரம இது நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை, அசோக் ஒத்திகை பார்த்த அடுத்த நாளே இது நடந்தது. " அசோக், உன்னிடம் கொஞ்சம் தனியாக பேசவேண்டும். காபி குடிச்சுக்கிட்டே பேசலாமா ? " என்று அவள் அழைத்தபோது தான் எழுதி வைத்ததை மீண்டும் ஒரு முறை ஒத்திகை பார்த்துக்கொண்டான்.

கேண்டினில், இரண்டு நிமிட அமைதிக்கு பிறகு அவள் பேச தொடங்கினாள். "உன்னிடம் முன்னாடியே சொல்லலாம் என்று இருந்தேன். ஆனால் எப்படி சொல்றதுனு தெரியல, அதான் சொல்லல. அந்த தேவ் இருக்கான்'ல, அவன் எனக்கு propose பண்ணினான். நான் " எங்க வீட்ல இதுலாம் ஒத்துக்க மாட்டாங்கள் " அப்படி எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்க மாட்டேங்கிறான். நானே வந்து வீட்ல பேசுறேன் அப்படினு இப்படினு சொல்றான். எனக்கு கோபமா பேசவும் பயமா இருக்கு, செத்து போயிடுவேனு பயமுறுத்துறான். எனக்கு என்ன பண்றதுனே தெரியல " என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்.

அசோக்கிற்க்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவனுடைய கற்பனை கோட்டை முற்றிலும் உடைந்தது போல தோன்றியது.

" தேவ்'யை உனக்கு எத்தனை நாளா தெரியும், சும்மா இப்படிதான் பயமுறுத்துவான். முடியாதுனு சொல்லிடு" என்றான்.

"இல்ல, தேவ் நல்ல பையந்தான். அவன் அப்பா அம்மாவை பார்த்து இருக்கேன். நல்லவங்கதான்".

"அப்பறம் என்ன?, சரினு சொல்லிடு".

"வீட்ல அம்மா அப்பாவை நினைத்தால்தான் பயமா இருக்கு"

"இதோ பாரு, இன்னும் கொஞ்ச நாள் நல்லா யோசிச்சு பாரு. உனக்கு எது சரினு தோணுதோ அதை மட்டும் செய். எனக்கு என்னமோ இந்த " தற்கொலை செய்துக்கொள்வேன் " என்று சொல்ற பசங்களை நம்ப கூடாதுனு தோணுது,"

"ம்..."

"உன் வாழ்க்கை, நீதான் தீர்மாணிக்க வேண்டும். நல்லா யோசி, ஒரு நல்ல முடிவு கிடைக்கும். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, நான் இப்ப கிளம்புறேன். சாரி, இதைபத்தி அப்புறமா நாம் பேசுவோம்" என்று சொல்லிவிட்டு அசோக் விரைவாக அந்த இடத்தைவிட்டு சென்றுவிட்டான்.

அன்று இரவு, அசோக்கும் சசியும் தண்ணியடிக்கும் போது, " இந்த பொண்ணுகளயே நம்ப கூடாது மச்சான். எல்லாமே பச்ச dash'டா " என்று அசோக் புலம்பிக்கொண்டே இருந்தான். பக்கத்தில் இருந்த ஸ்பிக்கரில் Eminem ஒரு பாட்டில் F'ல் அரம்பிக்கும் கெட்ட வார்த்தையால் யாரையோ திட்டிக்கொண்டு இருந்தான்.

1 comment:

Subramania Athithan said...

entha ponnugale ipdithan ejaman :) but the main reason for the problem is our mind than saga. waste of blaming cute gals. cha good gals :)