Friday, January 1, 2010
அங்காடித்தெரு - பொங்கலுக்கு வருகிறது.
அங்காடித்தெரு பொங்கலுக்கு வெளிவருகிறது. ( கண்டிப்பாக வெளிவரும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்).
வசந்தபாலனின் "ஆல்பம், வெயில்" ஆகிய இரண்டு படங்களுக்கு அடுத்து வெளிவரும் மூன்றாவது படம். வெயில் திரைக்குவந்தது 2006'ம் ஆண்டில். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு அடுத்து, அடுத்த படம் வெளிவருகிறது. ஜெயமோகன் இந்த படத்திற்கு வசனம் எழுதி உள்ளார்.
வெயில் ஒரு வெற்றிப்படம்தான். பின், ஏன் அடுத்த படத்திற்க்கு தாமதம் என்றால், அங்காடித்தெருவில் சொல்லபடுகின்ற கதைதான். இது ஒரு சராசரி மனிதனின் கதை. இதுவே இந்த படம் வெளிவருவதற்க்கு முட்டுக்கட்டை.
இந்த படத்தின் கதாநாயகன் ஒரு ரவுடியாகவோ, போலீஸாகவோ இருந்து இருந்தால், அங்காடி தெரு 2008'ம் ஆண்டே வெளிவந்து இருக்கும். எத்தனையோ கோடி செலவு செய்து "வேட்டைக்காரன், கந்தசாமி, யோகி" என்று தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், "அங்காடி தெரு" போன்ற திரைப்படங்களை தயாரிக்க தயங்குகிறார்கள். இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் நிலை.
எனக்கு பிடித்த படங்களில் வெயிலும் ஒன்று. கல்லூரியில் படித்த சமயத்தில், நானும் நண்பர்கள் மூன்று பேரும் அந்த படத்திற்க்கு சென்று இருந்தோம்.
பசுபதி இருபது வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு போவான். தான் யார் என்று தெரியாமல், தன் தம்பியே தன்னிடம் " டீ சாப்பிட காசு வேணுமாண்ணே??" என்று கேட்கும்போதும், வீட்டுவாசலில் நின்றுக்கொண்டு "அப்பா" என்று சொல்லுபோதும் பசுபதியின் நடிப்பும், முகபாவனையும் அற்புதமாக இருக்கும். என் நண்பன் அதை பார்த்து அழுதே விட்டான். அதுதான் அந்த படத்தின் வெற்றி.
வாழ்கையில் தோல்வியை மட்டுமே சந்தித்த ஒருவனின் கதைதான் வெயில். வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையை மட்டுமே சொல்லிகொண்டு இருந்த தமிழ் சினிமாவில் இது ஒரு துணிச்சலான முயற்சி.
"அங்காடித்தெரு" பொங்கலுக்கு வெளிவந்து தமிழ் சினிமாவில் ஒரு மாற்றத்தை எற்படுத்த என் வாழ்த்துகள்.
குறிப்புகள்:
---------------
1) அங்காடித் தெருவை போலவே மிஷ்கினின் நந்தலாலாவும் இரண்டு வருடங்களாக வெளிவராமால் இருக்கிறது. இந்த ஆண்டுக்குள் நந்தலாலாவும் வெளி வந்தால் நன்றாக இருக்கும்.
2) " அவள் அப்படி ஒன்றும் அழகில்லை", "உன் பெயரை சொல்லும் போதே" ஆகிய பாடல்களை, ஏன் எந்த F.M ரேடியோவிலும் ஒளிபரப்புவது இல்லை?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment