Friday, May 14, 2010

உறவுகள்

"தான் நேசிக்குமளவு தன்னை மகள் நேசிக்கிறாளா என்ற கேள்வி எல்லா அப்பாக்களின் மனதிலும் இருந்து கொண்டேயிருக்கிறது போலும். உண்மையில் இது ஒரு ஆதங்கம். தன்னை போல வேறு ஒருவர் தன் மகளை நேசிக்க முடியாது என்ற உரிமை கொண்டாடுவது. அது முழுமையான நிஜமில்லை என்று தெரிந்த போதும் அந்த மனவலி தாங்க முடியாதது. ஆயிரம் வருசத்திற்கும் மேலாக இருந்து வரும் அப்பா மகள் உறவின் பிணைப்பு எளிய சொற்களால் புரிந்து கொள்ள முடியாதது" - எஸ். ராமகிருஷ்ணன்.

முழு கட்டுரை : http://www.sramakrishnan.com/view.asp?id=405&PS=1

இந்த கட்டுரையில் எஸ்.ரா, தந்தைக்கும் மகளுக்கு உள்ள உறவை பற்றி பேசுகிறார்.

ஒரு தந்தைக்கு மகளுக்கு உள்ள உறவு, விசித்திரமானது. அது யாராலும் எளிதாக விவரிக்க முடியாது.

எனது அக்கா, அப்பாவின்தோளில் கைப்போட்டு தெருவில் நடந்து சென்ற நாட்கள், என் நினைவில் எப்பொழுதும் இருக்கிறது. அவர்கள் நண்பர்களை போல்தான் பழகினார்கள். ஆனால் அதே மகள், "தான் ஒருவரை விரும்புகிறேன், அவரைதான் திருமணம் செய்வேன்" என்று சொல்லியபோது, என் அப்பாவால் அதை தாங்கி கொள்ள முடியவில்லை. கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார். எப்படியும் தன் மகள், தன் பேச்சைதான் கேட்பாள் என்று நினைத்தார், அக்காவின் மனதை மாற்ற எவ்வளவோ பேசி பார்த்தார்.

தன்னைவிட யாராலும் தன் மகள் மீது இந்தளவு அன்பு செலுத்த முடியாது என்று எண்ணிக்கொண்டு இருந்த என் அப்பாவிற்கு, அது ஒரு பெரிய எமாற்றம்தான். கடைசியில் என் அக்காவே ஜெயித்தாள். அவர்கள் திருமணம் என் அப்பாவின் சம்மதத்தோடு இனிதே நடைப்பெற்றது. உண்மையில் சொல்ல போனால், இது என் அப்பாவின் வெற்றியே.

திருமணம் முடிந்து, கணவர் வீட்டுக்கு அக்கா செல்லும் போது, என் அப்பாவும் அக்காவும், கட்டிப்பிடித்து அழுத காட்சி ஒன்றே போதும், அவர்களின் பாசத்தையும் உறவையும் சொல்வதற்க்கு.

தன் மகளுக்குகாக தன்னுடைய கொள்கையை மாற்றிக்கொண்டார். தன்னையே மாற்றிக்கொண்டார். இதன் காரணமாகவே நான் என் அப்பா மீது வைத்து இருந்த மரியாதை பலமடங்கு உயர்ந்தது.

தந்தைக்கும் மகளுக்மான உறவு எல்லா காலங்களிலும், எல்லா தேசங்களிலும் ஒரே மாதிரிதான் இருந்து இருக்கிறது, இருந்துகொண்டும் இருக்கிறது. இதை எஸ்.ரா, தன் "லியரின் மகள்" கட்டுரையில் தெளிவாக சொல்கிறார்.