Thursday, March 29, 2012

உங்களுக்கு இதைப்போல் இன்னும் எத்தனையோ கவிதைகள் கிடைக்கலாம்


தோழிகள் அவர்களின் காதலர்களைப் பற்றி பேசும்போது
எந்தவிதமான முகபாவனைகளை நான் தருவது என்று
கொஞ்சம் குழம்பிதான் போகிறேன்.

வாசகர்களே, கொஞ்சம் பொறுங்கள்
ஒரு கவிதைக்கான முதல் வரி கிடைத்ததுபோல் தெரிகிறது
இந்த வரிகளை வைத்துக்கொண்டு, ஒரு முழு கவிதையை எழுதுவதற்காக
எனது இரண்டு தோழிகளை இந்த கவிதையில் இணைக்கிறேன்.

ஒருத்தி அவளின் கணவனைப் பற்றியும்
மற்றொருத்தி அவளின் காதலனைப் பற்றியும்
என்னிடம் பேசுவாள் என்று சொல்லும் போதே
ஒரு தோழிக்கு திருமணம் முடிந்துவிட்டதை
குறிப்பால் வாசக்ர்களுக்கு உணர்த்துகிறேன்.

அந்த இரண்டு தோழிகளில்
ஒருத்தியை நான் மிகவும் தீவிரமாக நேசித்தேன். என்பதின் மூலம்
நான் காதலித்தவளுக்கு திருமணம் முடிந்துவிட்டதா? என்ற குழப்பத்தை
வாசகர்களாகிய உங்களுக்கு எற்படுத்துகிறேன்.

அதில் ஒரு தோழியின் பெயர் கவிதா என்று எழுதுகிறேன்.
இதை படித்தவுடன் எனது நெடுநாளைய வாசகர்கள் முகத்தில்
ஒரு சிறு புன்னகையையும்
புதிய வாசகர்களுக்கு இது ஒரு கதையின் தொடர்ச்சி என்ற மாயத்தையும்
உருவாக்குகிறேன்.

இதற்குமேல் இந்த கவிதையை எப்படி தொடர்வது என்று தெரியவில்லை
வாசகர்களின் வாசிப்பு இன்பத்திற்காக
எந்த ஒரு விபரீத முடிவையும் இப்பொழுது எடுக்கபோவதில்லை.

உங்களுக்கு இதைப்போல் இன்னும் எத்தனையோ கவிதைகள் கிடைக்கலாம்
ஆனால், எனக்கு அப்படியல்ல.