Tuesday, June 9, 2009

உயிரோசையில் அருண்

அருணின் " வெள்ளைக்கார பச்சைத் தமிழர்: பெர்னார்ட் " என்ற கட்டுரை இந்த வார உயிரோசையில் வெளிவந்து உள்ளது. அதன் முகவரி http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=1508 .

அருணின் வலைப்பதிவு முகவரி http://perinba.wordpress.com/ .

வாழ்த்துக்கள் அருண்.

Monday, June 8, 2009

கனவு

கடந்த மூனறு நாட்களாக ஓரே கனவு மீண்டும் மீண்டும் வந்துக்கொண்டு இருக்கிறது. முதல் நாள் கனவில் நான் இருட்டில் நடந்து வந்துக்கொண்டு இருக்கிறேன், எதிரில் ஒரு உருவம் என்னை நோக்கி வந்துக்கொண்டு இருக்கிறது. நாங்கள் இருவரும் எதிரெதிரே நடந்து வந்தாலும், எங்களுக்குள் இருந்த இடைவெளி குறையவேயில்லை. கடைசிவரை அந்த உருவத்தை முழுமையாக பார்க்க முடியவில்லை.

இரண்டாம் நாள் கனவில் நான் நடந்து சென்று கொண்டு இருக்கிறேன். என்னை பின்னால் ஒரு உருவம் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. நான் திரும்பி அந்த உருவத்தை பார்க்கிறேன், இருட்டில் முகத்தை முழுமையாக பார்க்க முடியவில்லை.

மூன்றாம் நாள் கனவில், நான் அந்த உருவத்தை பின் தொடர்ந்து செல்கிறேன். எப்படியாவது முகத்தை பார்த்துவிடும் எண்ணத்தில், நான் வேகமாக நடந்தால் அந்த உருவமும் வேகமாக நடக்கிறது. கடைசிவரை எனக்கு அந்த உருவத்திற்க்கும் இடைவெளி குறையவேயில்லை.

எனோ இந்த கனவுகள் என்னை எதோ ஒரு விதத்தில் பாதித்தது. எப்பொழுதும் அந்த உருவத்தின் பற்றிய எண்ணமாகவே இருந்தது. சிவாவிடம் இந்த கனவுகளை பற்றி சொன்னவுடன் அவன் கேட்ட முதல் கேள்வி " அது ஆணா, பெண்ணா ??" . மேலும் கனவுகளை தொடர்ந்து ஏழு நாட்கள் ஒரு டைரியில் எழுதிவந்தால் கனவுகளே வராது என்றான்.

எப்படியும் அந்த உருவத்தை பார்த்துவிடுவது என்று முடிவுசெய்து, கொஞ்சம் விரைவாகவே அன்று படுக்கசென்றேன். படுக்கை அருகில் பேனாவும், ஒரு டைரியும் வைத்து இருந்தேன், கனவில் இருந்து விழித்தவுடன் அதனை பற்றி எழுதுவதற்கு.

மீண்டும் கனவில் அந்த உருவம் வந்தது. ஆனால் இப்பொழுது இருள் அல்ல, பனி விழும் ஒரு அதிகாலை பொழுது. நானும் அந்த உருவமும் ஒன்றாக நடந்துக்கொண்டு இருக்கிறோம். எனக்கு நிமிர்ந்து அந்த உருவத்தை பார்க்க பயம். " என் முகத்தை பார்க்க பயமா ?" என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது. நான் நிமிர்ந்து பார்க்கிறேன், அது ஒரு பெண்ணின் முகம். அழகான முகம், எங்கேயோ பார்த்த முகம், இல்லை இல்லை நான் எப்பொழுதும் அருகில் பார்க்கும் ஒரு முகம். ஆனால் அது யாரின் முகம் என்று சரியாக சொல்லமுடியவில்லை.

தைரியத்தை வரவழைத்துக்கொண்டு " நீ யார் ?" என்றேன். " நான்தான் உன் காதல் ' என்றாள் அந்த பெண். " கடந்த நான்கு நாட்களாக நான் உன் கூடவே வந்துக்கொண்டு இருக்கிறேன், ஏன் என்னிடம் நீ பேசவில்லை " என்று உரிமையுடன் கேட்டாள். என் கையில் இருந்த பேனாவையும், டைரியையும் பார்த்தாள்.

" இனியும் நான் உன்னை தொடர்வதாக இல்லை, இப்பொழுதே நான் உன்னைவிட்டு பிரிந்து போகிறேன் " என்று சொல்லிவிட்டு உடனே மறைந்து போனாள். கனவும் கலைந்தது.

இப்பொழுது எல்லாம் கனவுகள் வருவது இல்லை. ஆனால் நான் எப்பொழுதும் படுக்கை அருகில் பேனாவும், டைரியும் வைத்து உள்ளேன், கனவுகளை எழுதுவதற்க்கு,

Friday, June 5, 2009

அன்புள்ள நண்பனுக்கு

அன்புள்ள நண்பனுக்கு,

வணக்கம், இதை படிக்கும் நீ யார் என்று எனக்கு தெரியாது. நீ ஆணா, பெண்ணா என்று எனக்கு தெரியாது. கடிதங்கள் மூலமாக மட்டுமே நம்முடைய உண்மையான ஏக்கங்கள், ஆசைகள் ஆகியவற்றை பகிர்ந்துக்கொள்ள முடியும் என்று நம்புவதால் உனக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன். நீ கண்டிப்பாக இதை படித்துவிட்டு எனக்கு பதில் எழுதவேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் நீ பதில் எழுதினால் நான் கண்டிப்பாக சந்தோஷம் அடைவேன். குறைந்தபட்சம் இந்த கடிதத்தை முழுமையாக படித்துப்பார் (நீ விரும்பினால் மட்டும், நான் இதுவரை யாரையும் கட்டாயபடுத்தியது இல்லை).

நான் கடைசியாக எழுதிய கடிதம், என் நண்பனுக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் போது, இப்பொழுது எட்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் கடிதம் எழுதுகிறேன்.

"உனது ஆசைகள் பேராசையாக இருந்தால், உனது ஆசைகள் நிறைவேறும்" , "அனைத்துக்கும் ஆசைபடு". இவை எல்லாம் ஆனந்த விகடனில் எப்பயோ படித்தது. எத்தனையோ வாக்கியங்கள் படித்தாலும் நம் வாழ்வோடு சம்பந்தம் உள்ள சிலவை மட்டும் நம் நினைவில் அப்படியே நின்றுவிடும். அப்படி நின்றவைதான் நான் மேலே சொன்ன இரண்டு வாக்கியங்கள்.

எனக்கு எப்பவுமே ஒரு எண்ணம் உண்டு, "நான் ஆசைபட்டால் அது கண்டிப்பாக நட்க்காது". ஒரு சின்ன பென்சிலில் இருந்து Apple Ipod வரை இதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுக்களை சொல்லலாம். ஆனால் நான் தொடர்ந்து ஆசைபட்டு கொண்டுத்தான் இருக்கிறேன். இவை எதுவுமே நடக்காது என்று தெரிந்தும் ஆசைபடுகிறேன்.

உனக்கு தோல்விக்கும் வெற்றிக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா? " என்ன கேள்வி இது, தோல்விக்கும் வெற்றிக்கும் வித்தியாசம் தெரியாமல் யாராவது இருப்பார்களா? " என்றுதானே நீ கேட்கிறாய். எனக்கு தோல்விக்கும் வெற்றிக்கும் வித்தியாசம் தெரியாது, என்னென்றால் எனக்கு தோல்வி எது வெற்றி எது என்றே புரியவில்லை. சில நேரங்களில் நான் வாழ்க்கையில் தோல்வியே அடைந்தது இல்லை என்று எண்ணுகிறேன், சில நேரங்களில் நான் வாழ்க்கையில் வெற்றியை பார்த்ததே இல்லை என்று நினைக்கிறேன்.

உண்மையில் நான் வெற்றி அடைகிறேன் என்று நினைத்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் தோல்வி அடைந்துக்கொண்டு இருக்கிறேன். சந்தோஷ் சுப்பிரமணியத்தில் ஒரு வாக்கியம்வரும் " கேட்டதை விட அதிகமாக் கிடைக்கும் போது வருகின்ற சந்தோஷத்தை விட, கேட்டது கிடைக்கும்போது வருகின்ற சந்தோஷம்'தான்பா உண்மை".
அதைபோலத்தான் எனக்கும், எனக்கு எப்பொழுதும் கேட்பதைவிட அதிகமாக கிடைத்துக்கொண்டு இருக்கிறது.

எனக்கு இப்பொழுது எல்லாம் தீடிர் என்று ஒரு பயம், "நம்மால் சிறு தோல்வியைக்கூட தாங்கிகொள்ள முடியாமல் போய்விடுமோ" என்று. இதற்காகவே நான் எனக்கு நானே தோல்விகளை உருவாக்குகிறேன். ஆனால் அந்த தோல்விகள் எல்லாம், மீண்டும் எனக்கு நானே உருவாக்குகின்ற வெற்றிகளைக்போல காட்சியளிக்கிறது.

நான் இன்னும் உன்னிடம் பலவற்றை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் அவைகளை எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை, நான் சொல்லவருவதை தவறான அர்த்தத்தில் சொல்லி, எங்கே நம் முதல் சந்திப்பே கடைசி சந்திப்பாக மாறிவிடுமோ என்று பயமாக இருக்கிறது.

இதுவரை இதை பொறுமையாக படித்ததற்கு நன்றி. முடிந்தால் நீ எனக்கு பதில் கடிதம் எழுது, என் முகவரி saravana338@gmail.com. எனக்கு கடிதங்களை எப்படி முடிப்பது என்று தெரியவில்லை, அதனால் கடிதத்தை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

இப்படிக்கு நட்புடன்,
அசோக்.

Monday, May 18, 2009

என்னை பார்த்தால் பாவமாய் இல்ல???

அசோக் வேலைக்கு சேர்ந்த புதிது. மொத்தம் இருபது பேர் அவனுடம் வேலைக்கு சேர்ந்து இருந்தார்கள். அனைவருமே Freshers. சேர்ந்த முதல் வாரத்திலேயே அசோக்கிற்கு ஒரு நண்பர் கூட்டம் கிடைத்துவிட்டது. அசோக், நரேன், ராஜா, மதன், விமலா, கீதா என்று ஆறு பேர் அந்த கூட்டணியில். இவர்கள் அனைவரும் ஒரே கல்லூரி என்ற போதிலும், கல்லூரியில் ஒருமுறைக் கூட பேசிக்கொண்டது இல்லை.

அடுத்த சில வாரங்களில் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பெசன்ட் நகர், சத்தியம் சினிமாஸ், சிட்டி செண்டர், ஸ்பென்சர் என்று சுற்ற ஆரம்பித்தனர். ஞாயிறு மாலை வேளைகளில் கண்டிப்பாக இவர்களை பெசன்ட் நகர் கடற்கரையில் சந்திக்கலாம். மதனிடம் மட்டும் அப்பொழுது பைக் இருந்தது. அவனுக்கு பைக் என்றால் உயிர்.

இந்த விமலாவிற்கு ஊர் சற்றுவது மிகவும் பிடித்த பொழுதுப்போக்கு. இதற்காகவே அவளுக்கு அவள் அப்பா ஒரு மாருதி 800 வாங்கி தந்து இருந்தார். அடுத்த இரண்டு மாதங்கள் சம்பளத்தை சேமித்து Loan’ல புதிதாக Santro வாங்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வாள்.

அன்று கடற்கரையில் அரட்டை அடித்துக்கொண்டு இருந்த போது, விமலா மதனிடம் கேட்டால் “ டேய் வாடா, பைக்’ல ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வரலாம்”. இப்படி விமலா கேட்பது முதல்முறை அல்ல. க்டற்கரைக்கு வரும் ஒவ்வொரு முறையும் விமலா மதனிடம் கேட்பது இதைத்தான். மதன் உடனே O.K சொல்லமாட்டான் மாட்டான். மதன் கொஞ்சம் யோசனை செய்ய தொடங்கியவுடன் விமலா முகத்தை சோகமாய் வைத்துக்கொண்டு ” என்னை பார்த்தால் பாவமாய் இல்ல??” என்பாள்.

அன்றும் அப்படித்தான் மதன் முடியாது என்றான். விமலா ” என்னை பார்த்தால் பாவமாய் இல்ல??” என்றாள். இப்பொழுது அவள் முகத்தை பார்த்து முடியாது என்று சொல்பவன் கண்டிப்பாக கல் நெஞ்சக் காரனாகத்தான் இருப்பான்.

விமலாவும், மதனும் பைக்கில் சென்றவுடன் அவர்கள் தங்கள் அரட்டையை தொடர்ந்தார்கள். அனைவருக்குமே தெரியும், கண்டிப்பாக சென்றவர்கள் இப்பொழுது திரும்பமாட்டாட்கள் என்று.

விமலா “ நான் பாவம்’ல், நான் பாவம்’ல “ என்று சொல்லியே E.C.R Tollgate வரைக்கும் அவனை அழைத்து சென்றுவிடுவாள்.

தினமும் ஒரு பாக்கெட் சிகரட் பிடிக்கும் மதனுக்கும், விமலாவிற்கும் ஒரு பந்தயம் “ ஒரு வாரத்திற்கு மதன் சிகரட் பிடிக்காமல் இருந்தால் ஒரு Temptation Chocolate”. இதில் முதல் இரண்டு வாரம் மதன் வெற்றியும் பெற்றுவிட்டான். பேசாமல் நாமும் சிக்ரெட் பிடிக்க கற்றுக்கொள்ளலாம் என்று அசோக்கும், நரேனும் பேசிக்கொண்டார்கள்.

ஒரு வருடத்தில் விமலா வேறு கம்பெனியில் வேலை கிடைத்து சென்றுவிட்டால், இருந்தாலும் ஞாயிறு சந்திப்பு மட்டும் மாறவே இல்லை ஆனால்,.கடந்த இரண்டு மாதமாக மதனும், விமலாவும் கடற்கரைக்கு வராமல் எதோ காரணம் சொல்லிக்கொண்டு இருந்தனர்.

கீதா சொன்னால் “போன வாரம் Ascendas Food Court'ல இவர்கள் மூவரும் சந்தித்து பேசிய போது கூட மதனும், விமலாவும் பேசிக்கொள்ளவில்லையாம். கீதா எத்தனையோ முறை உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டும், அவர்கள் ஒன்றும் சொல்லவில்லையாம்”

தீடிரென மதன், போன வாரம் சத்தியம்’ல அனைவருக்கும் ’அயன்’ டிக்கேட் புக் செய்தான். விமலாவும் வருகிறாள் என்றான்.

சத்தியம் திரையரங்கு வெளியில் அவர்கள் அனைவரும் விமலாவிற்க்கு காத்துக்கொண்டு இருக்க, அவள் “ முக்கியமான Meeting இருப்பதால் தன்னால் வர முடியாது ” என்று மதனிடம் போனில் சொல்லிக்கொண்டு இருந்தாள்.

மதன் போனில் “ என்னை பார்த்தால் பாவமாய் இல்லயா??? “ என்று கேட்டுக்கொண்டு இருந்தான். அப்பொழுது மதனை பார்க்க உண்மையாகவே பாவமாய் இருந்தது.

பின்குறிப்பு:
===========

என்னுடைய அனைத்து கதைகளை போலவே இந்த கதையும் கற்பனைத்தான்.

நம்புங்க பா.. “ என்னை பார்த்தால் பாவமாய் இல்ல??? “

சென்ற மாத உயிர்மை இதழில் மனுஷ்யபுத்திரன் எழுதிய ”சிநேகிதிகளின் கணவர்கள்” என்ற கவிதையின கடைசி வரிகள்,


நான் குழப்பமடைவதெல்லாம்
சிநேகிதியை பெயர் சொல்லாமல்
எப்படி அழைப்பது என்று

அல்லது பெயர்களை
வெறும் பெயர்களாக மட்டும்
எப்படி உச்சரிப்பது என்று

ஒரு சிநேகிதியை
‘ சிஸ்டர்’ என்று அழைக்கும்
ஒரு ஆபாச கலாச்சாரத்திலிருந்து
எப்படித் தப்பிச் செல்வது என்று

- மனுஷ்ய புத்திரன்

என் நாடும் என் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்

நேற்று நண்பன் கனடாவில் இருந்து போன் செய்து “ பிரபாகரன் செத்து போய்விட்டார் என்று CNN-IBN Website’ல வந்துயிருக்கிறது. செய்தி உண்மையா?? “ என்றான். நானும் CNN-IBN Website'ல செய்தியை பார்த்து உறுதி செய்துவிட்டு தொலைக்காட்சியில் ஒவ்வொரு செய்தி சேனலாக மாற்ற ஆரம்பித்தேன்.

எல்லா செய்தி சேனல்களிலும் புதிய மக்களவையில் யார் யாருக்கு என்ன அமைச்சர் பதவி என்பதை பற்றிதான் செய்திகள் வெளியிட்டுக்கொண்டு இருந்தனர். அவர்களுக்கு நமது அண்டை நாட்டில் நடுக்கும் பிரச்சனைகள் பற்றி அக்கறை இல்லை. ஏன் என்றால் இப்பொழுது மக்களவை செய்திக்குத்தான் விளம்பரம் கிடைக்கும்.

ஆங்கில செய்தியாவது பரவாயில்லை, கலைஞர் மற்றும் சன்’னில் ” திமுக கூட்டணிக்கு கிடைத்த் வெற்றி தமிழ்மக்களுக்கு கிடைத்த வெற்றி “ என்று ஒவ்வொரு தலைவர்களும் பேட்டி தந்துக்கொண்டு இருந்தனர்.

பாவம் அவர்கள் அனைவருக்கும் இலங்கை தமிழர் என்ற வார்த்தையே மறந்துவிட்டது. சீமானை நினைக்கும் போது பாவமாய் இருந்தது. தமிழக மக்கள் தி.மு.க கூட்டணிக்கு 28 இடங்களில் வெற்றி வாங்கித்தந்து இருக்கிறார்கள். நம் தமிழனுக்கு தனது சகோதரன் இலங்கையில் துயரம் அடைவது பற்றி சிறிதும் வருத்தம் கிடையாது, தன் ஒட்டுக்கு பணம் வந்தால் போதும். கற்றது தமிழ் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி “இன்னைக்கு நாற்பது ஆயிரம் பணத்திற்காக பெயரை மாற்றுவாய், நாளைக்கு 5 லட்சம் பணம் தந்தால்...”

வேறு என்ன நான் சொல்ல “ என் நாடும் என் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் ”

Sunday, May 17, 2009

கடவுளே கணபதி

மஞ்சள் வெயில்
-------------------

எளிய மனிதர்களுக்கு
எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது

எளிய முறையில்
எளிய தீர்வுகளை நோக்கிச் செல்கிறார்கள்

அவர்களுக்குப்
புரியவேயில்லை
நகரம் மஞ்சள் வெய்யிலில்
குளித்துக்கொண்டிருந்த
ஓரு மாலையில்
ஓரு மனிதனுக்கு
தீடிரென ஏன்
பைத்தியம் பிடிக்கிறதென்று

- மனுஷ்ய புத்திரன் (12.10.2002)
மணலின் கதை புத்தகம்


பின்குறிப்பு:
===========

சில காரணங்களால் இங்கு இருந்த கதை நீக்கப்பட்டுவிட்டது.

Monday, April 6, 2009

அயன்


எல்லா திரைப்படங்களை போல Disco'வில் ஒரு பெண் நடனம் ஆடிக்கொண்டு இருக்கிறாள். Backround'ல பாடல் ஒலிக்கிறது. வில்லன் ஒரு பதினாறு வயதுமிக்க ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு வருகிறான். அவளுக்கு Pepsi'யில் மயக்கமருந்து கலந்துக்கொடுக்கிறான். இதை எல்லாம் தொலைவில் இருந்து நம் ஹீரோ பார்க்கிறான். இப்பொழுது நம் ஹீரோ என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள், ஹீரோ அந்த பெண்ணை காப்பாத்த வேண்டும். இது தானே நம் திரைப்பட கலாச்சாரத்தின் பண்பாடு. ஆனால் நம் ஹீரோ அதை செய்யவில்லை, வில்லன் அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதை நம் ஹீரோ வீடியோ படம் எடுத்து, அதை CD'யில் அந்த பெண்ணின் அப்பாவிற்கே காண்பிக்கிறான். இதன் காரணமாக அந்த அப்பா மனம் திருந்தி (!!!!) அந்த வில்லனுக்கு எதிராக கோர்ட்டில் சாட்சி சொல்ல சம்மதிக்கிறார்.

மேலே உள்ளது எதோ ஒரு ஆங்கில படம் என்று நினைக்கவேண்டாம். அயன் படத்தில் வரும் ஒரு காட்சித்தான் அது. ( இப்பொழுது உள்ள முக்கால்வாசி பெண்கள் சூர்யாவின் ரசிகைகள் என்பதை அவர் மறந்துவிட்டார் போல ). அடுத்த காட்சியில் நம் ஹீரோ வில்லனை அடித்து நொருக்குகிறார், உடனே திரையரங்கில் விசில் சத்தம் பறக்கிறது. நம் தமிழ்நாட்டு மக்களின் திரைப்பட ரசனை எந்த அளவு மட்டமாக சென்றுக்கொண்டு இருக்கிறது என்பதற்க்கு இது ஒரு உதாரணம்.

கே.வி.ஆனந்த் பல திரைப்படங்களின் DVD'யில் இருந்து ஒவ்வொரு காட்சியாய் எடுத்து இந்த அயன் படத்தை எடுத்து இருக்கிறார். ம்... அப்புறம், நம் சூர்யா நன்றாக நடிக்கிறார், நன்றாக சண்டை செய்கிறார், நன்றாக dance செய்கிறார், நன்றாக Romance செய்கிறார். ஆனால் எனக்கு ஏனோ இந்த திரைப்படம் பிடிக்கவில்லை.

Thursday, March 26, 2009

சோகக் கதை

நேற்று இரவு போதையில் அருண் என்னிடம் சொன்னது " நீ என்னத்தான் சொன்னாலும் உன்னால் சோகமான கதை எதையும் எழுத முடியாது டா. நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விசயம்தான் எழுத்தாக வெளிவருகிறது. உன்னை பொருத்தவரை உனக்கு அதிகபட்சம் கவலை தரக்கூடிய அல்லது வருத்தப்பட வைப்பது என்றால் அது "எதாவது ஒரு பெண் உன்னை பார்த்து சிரிக்கவில்லை என்பதுதான்". இதை உன் blog'ல எழுதுனா கண்டிப்பாக அது படிப்பவர்களுக்கு சோகக் கதை இல்லை, அது நகைச்சுவை கதை. துக்கம் என்பது நாம் எழுதுகிற எழுத்து ஒவ்வொன்றிலும் கூடவே வரவேண்டும்." என்று அருண் சொல்லிக்கொண்டே போனான். அருண் இன்னைக்கு அடித்த சரக்குக்கு நான் உருகாய் போல் மாட்டிக்கொண்டேன். இந்த மாதிரி குடிமகனிடம் இருந்து தப்பித்து கொள்வதற்காவது தினமுன் நானும் சரக்கு அடிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

அருண் தொடர்ந்து பேசிக்கொண்டே போனான் " ஒரு தகப்பன் மகளை இழந்த சோகமும், ஒரு கணவன் மனைவியை இழந்த சோகமும் கண்டிப்பாக ஒன்று அல்ல. அதை எழுதிகின்ற போது மரண சோகம் என்று ஒரே வரியில் எழுதலாம், ஆனால் அப்படி எழுதக்கூடாது. ஒரு துக்கமான விசயத்தை படிக்கும் போது அதை படிப்பவனும் கண்டிப்பாக அழ வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அந்த துக்கத்தின் ஆழமாவது தெரியவேண்டும்"

எனது வாய் சும்மா இல்லாமல் நடுவில் பேசியது " நீ சொல்கின்ற மாதிரி நானும் ஒரு சோகமானக் கதை எழுதுறேன் டா" என்றேன்.

"சோகம்'னா எதைப் பற்றி எழுதபோற"

"ம்... இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி"

"இலங்கை தமிழர் பற்றி எழுதுனா அது கதை இல்ல, ஒரு உண்மை சம்பவம் பற்றிய கட்டுரை". என்றான் அருண்.

"சரி, வேற எதை பற்றி எழுதுவது அதை நீயே சொல்"

"கதை எனபது நம் வாழ்க்கையில் நடந்த ஒன்றாக இருக்க வேண்டும், அப்பொழுதுதான் நன்றாக இருக்கும். நீ கடைசியாக எப்பொழுது அழுதாய் அதை கதையாக எழுது"

நான் கடைசியாக அழுதது எப்பொழுது சிறிது நேரம் யோசித்தேன். ஆம் போன வாரம் விடுமுறையில் வீட்டில் இருந்த போது, அம்மா வெங்காயம் வெட்டிக்கொண்டு இருந்தாள். அதை அருகில் இருந்து பார்த்த எனக்கு கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

இந்த கண்ணீர் கதையை அருணிடம் சொல்வதற்குள் அவன் போதை மயக்கத்தில் தூங்கி போனான்.

பின்குறிப்பு:
----------

மேலே உள்ள சோகக் கதையை ஒரு கையால் வெங்காயத்தை உரித்துக்கொண்டே படிக்கவும், அப்பொழுதுதான் அருண் சொன்னது போல் படிக்கும்போது feelings வரும்.

Friday, March 20, 2009

யாருப்பா அது!!!!!

இனி அசோக் blog எழுதக் கூடாது என்று முடிவு எடுத்து இருக்கிறான். அவன் தனது வலைப்பதிவில் " அசோக்கின் அத்தைமகள் " என்ற பெயரில் சமீபத்தில் ஒரு கதை எழுதியிருந்தான். அதை படித்தவர்கள் அனைவரிடமும் சத்தியமாய் அது கதைதாங்க என்று அசோக் சொல்லியும் யாரும் நம்புவதாக இல்லை. அது அசோக்கின் உண்மை கதை என்று அனைவரும் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் அசோக்கிற்கு இன்னொரு பிரச்சனை. Orkut'ல அசோக்கும் ஒரு account வைத்து உள்ளான். அவனுடைய profile'ல தனது வலைப்பதிவு முகவரியையும் இனைத்து இருக்கிறான்.

அசோக்கின் உண்மையான அத்தை மகள் லலிதா Orkut'ல எப்படியோ இவனை தேடி கண்டுபிடித்து, வலைப்பதிவையும் படித்துவிட்டாள். உண்மையில் லலிதா இப்பொழுது மதுரையில உள்ள கலைக்கல்லூரி ஒன்றில் Bsc. Computer Science இரண்டாம் ஆண்டு படித்துவருகிறாள்.

வலைப்பதிவை படித்தவுடன் அசோக்கிற்கு போன் செய்த லலிதா " டேய், அந்த அத்தை பெண் நான் இல்லைல?? யாருப்பா அந்த கவிதா?? எப்பல இருந்து இது நடந்துக்கொண்டு இருக்கிறது. சத்தியம் சினிமாவுக்கு பையன் கூட போனியா, இல்ல கவிதா கூட போனியா?? அது என்னப்பா பாட்டியாலா டிரஸ், நீ தான் வாங்கிகொடுத்தியா?? மாமாவுக்கு இந்த matter எல்லாம் தெரியுமா, உன்னை ரொம்ப நல்ல பையன் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். உங்க அம்மாவுக்கு போன் செய்து கவிதாவை பற்றி விசாரிக்க சொல்றேன்." என்று அவள் பேசிக் கொண்டே போனாள்.

சொந்தகார பையன் குமாருடன் லலிதா மதுரையை சுற்றிக்கொண்டு இருப்பதாக நண்பன் ஒருவன் சொன்னதை, அசோக் லலிதாவிடம் கேட்க நினைத்து பின் எதற்காக பிரச்சனை என்று கேட்காமலே போனை வைத்துவிட்டான்.

Tuesday, March 3, 2009

நானும் செய்தித்தாளும்

இப்பொழுது எல்லாம் Newspaper மன்னிக்கவும் செய்தித்தாள்களை படிக்கவே வெறுப்பாக இருக்கிறது. எந்த செய்தித்தாள்களை பிரித்தாலும் எழுத்துக்கள் கொட்டிக்கிடப்பது போல் ஒரு தோற்றத்தைத்தான் தருகின்றன. படிக்கவே பிடிக்கவில்லை. இந்த எண்ணம் எல்லாம் கடந்த ஒரு மாதமாகதான்.

எனக்கு செய்தித்தாளுக்கும் உள்ள பந்தம் மிகவும் பெரியது. நான் செய்தித்தாள்களை படிக்க ஆரம்பித்தது எனது ஜந்தாம் வகுப்பில் இருந்துத்தான். எனது ஐந்தாம் வகுப்பு ஆசிரியை பெயர் சரியாக ஞாபகம் இல்லை. காலையில் முதல் வகுப்பு ஆரம்பித்தவுடனே மாணவர்கள் அனைவரும் ஸ்கூல் டைரியை அந்த ஆசிரியரிடம் காட்ட வேண்டும். ஸ்கூல் டைரியில் அன்றைய பாடத்தை பையன் வீட்டில் படித்தான் என்பதற்கு சான்றாக பெற்றோர்களின் கையெழுத்தும், அன்றைய செய்தித்தாள்களின் முக்கிய செய்திகளும் இருக்க வேண்டும். பெற்றோர்களின் கையெழுத்து இல்லை என்றால் கூட அந்த ஆசிரியர் விட்டுவிடுவார், ஆனால் முக்கிய செய்திகளை அதில் எழுதவில்லை என்றால் அந்த மாணவன் செத்தான்.

என்ககு இப்படித்தான் செய்தித்தாள்கள் படிக்கும் ( முதல் பக்கத்தை மட்டும் ) பழக்கம் ஆரம்பித்தது . எனக்கு அப்பொழுது எல்லாம் செய்திகளின் தீவிரம் தெரியாது. தினமலர் முதல் பக்கத்தில் உள்ளதை அப்படியே பார்த்து எழுதிக் கொண்டு போவேன்.

ஆறாம் வகுப்பு வேறு பள்ளியில் சேர்ந்தவுடன் தினமும் செய்தித்தாள் படிக்கும் பழக்கம் நின்றுவிட்டது. எங்கள் வீட்டில் காலையில் எழுந்தவுடன் என் அப்பா " பேப்பர் வந்துருச்சா??" என்று கேட்டுக் கொண்டே வீட்டு வாசலுக்கு போவதும், ஒரு கையில் பேப்பரும் மறுகையில் காபியும் வைத்துக்கொண்டு ஸ்டைலாக பேப்பர் படிப்பது இன்னும் என் நினைவில் இருக்கிறது. இது தான் என்னை மீண்டும் செய்தித்தாள்ளை படிக்க தூண்டியது. நானும் அப்பாவை போல் கையில் காபியுடம் செய்திதாள்களை எடுத்து படம் பார்த்துக்கொண்டு இருப்பேன். நான் படம் மட்டும்தான் பார்க்கிறேன் என்று தெரிந்தும், என்னிடம் இருந்து பேப்பரை என் அப்பா வாங்க மாட்டார். நானே தரும்வரை காத்துக்கொண்டு இருப்பார்.

டெய்லர் மாமாவின் கடை, மூடி வெட்டும் சலூன் கடை என்று எங்கு சென்றாலும் நான் உடனே எடுத்து படிப்பது "சிந்துப்பாத்" படக்கதையைதான். சிந்துப்பாத கதையை ஒரு வருடம் இடைவெளி விட்டு படித்தாலும், கதை நாம் விட்டுச் சென்ற இடத்தில் இருப்பது போலதான் இருக்கும். இது தான் சிந்துப்பாத் கதையில் சிறப்பு..:)

ஒன்பதாம் வகுப்பில் இருந்துதான் செய்திகளை தீவிரமாக படிக்க தொடங்கினேன் என்று ஞாபகம். பள்ளி வகுப்பில் நானும் பிரகாஷும் தினமும் அன்றைய செய்திகளை பற்றி விவாதிப்போம். பிரகாஷுக்கு என்னை விட ஞாபகசக்தி அதிகம். எல்லா செய்திகளையும் துள்ளியமாக சொல்வான். எனக்கோ பிரிட்டனின் புதிய ஜனாதிபதி பெயரை எத்தனை முறை படித்தாலும் நினைவில் தங்காது.

கல்லூரி விடுதியில் சேர்ந்தவுடனே நான் பார்த்த முதல் நண்பன் " The Hindu " செய்தித்தாள்தான். பின்னர் Bonny'யுடன், இந்த Bonny'யை பற்றி தனியாக பதிவே போடலாம் அந்த அளவு வித்தியாசமானவன். என்னுடைய Role-Model அவன். எங்கே விட்டேன்,,ம், பின்னர் Bonny'யுடன் எற்பட்ட பழக்கத்தினால் New Indian Express, Economic Times என்று படிக்கும் செய்தித்தாள்களின் எண்ணிக்கை அதிகரித்தது. Bonny'யில் ரூமில் எப்பொழுதும் கண்டிப்பாக மூன்று விதமான செய்தித்தாள்களாவது இருக்கும். அவன் எப்பொழுது அதை எல்லாம் படிப்பான், அல்லது எற்கனவே படித்து முடித்து விட்டானா என்பது யாருக்குமே தெரியாது. ஆனால் எல்லாம் செய்திகளையும் புட்டுப் புட்டு வைப்பான்.

இப்படி எனக்கும் செய்தித்தாளுக்கும் உள்ள உறவை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் திடீர் என்று கடந்த ஒரு மாதமாக செய்தித்தாள்களை பார்க்கவே வெறுப்பாக இருக்கிறது. செய்தித்தாள் என்று இல்லை, எவை எல்லாம் முன்னால் பிடித்ததோ அவை எல்லாம் எனக்கு இப்பொழுது வெறுப்பை தருகின்றன். ஒரு வேளை ஒரு பெண் என் மனதை டிஸ்டர்ப் செய்வது தான், இதற்கு எல்லாம் காரணம் என்று நினைக்கிறேன்.

பின்குறிப்பு:
============

" என்னடா இந்த பதிவில் பெண் என்ற வார்த்தையே இல்லையே " என்று நண்பன் கேட்டதால் கடைசியில் அந்த வரியை சேர்க்க வேண்டியதாய் போயிற்று. நம்புங்க பா....