Wednesday, June 22, 2011

குப்பை

எனது அறையில் குப்பைகள் அதிகரித்துவிட்டன,
எதற்காகக் குப்பையை வெளியேற்ற வேண்டும்,
நான்தான் வெளியேறிருக்க வேண்டும்,
எப்பொழுதோ.

Friday, June 17, 2011

வார்த்தைகளோடு அலைபவன்

பல யுகங்களுக்கு முன்னால், ஊர் ஊராகச் சென்று கதை சொல்லும் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் புகழ் நாடு முழுவதும் பரவியிருந்தது. அவன் எப்பொழுதும் வார்த்தைகளை மூட்டையில் கட்டி, அவன் செல்லும் ஊர்களுக்கெல்லாம் எடுத்துச் செல்வான். அவன் எந்தக் கதையையும் திட்டமிட்டுச் சொல்வதில்லை; மூட்டையைப் பிரித்து, அதில் கிடைக்கும் முதல் வார்த்தையிலிருந்து கதை சொல்லத் தொடங்குவான். அவன் ஊரில் நுழைந்தவுடனேயே கதைகள் சொல்ல ஆரம்பிப்பதில்லை. முதலில், அந்த ஊர் முழுவதையும் சுற்றிப் பார்ப்பான்; பின்னர் அந்த ஊர் மக்களைக் கூர்ந்து கவனித்து, அவர்களின் வாழ்க்கை முறையைத் தெரிந்துகொள்வான். ஒரு வார்த்தை கூட யாரிடமும் பேச மாட்டான். ஊரில் உள்ள அனைவரும் அவன் எப்பொழுது கதை சொல்லத் தொடங்குவான் என்று ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். அதன் பின்னர்தான் கதை சொல்லத் தொடங்குவான்.

​அவன் எந்த நேரத்திலும் கதை சொல்லத் தொடங்குவான் என்பதை ஊர் மக்களும் அறிந்தே இருந்தார்கள். எனவே, அவனை இருபத்தி நான்கு மணி நேரமும் ஊர் மக்கள் கண்காணித்துக்கொண்டே இருந்தனர். சில ஊர்களில், ஒரு மாதம் வரைகூடக் கதை சொல்லாமல் ஊரைச் சுற்றி இருக்கிறான்; ஆனால் அதற்காக ஊர்மக்கள் யாரும் அவனைக் குற்றம் சொல்வதில்லை.

​ஊர்மக்கள் வீட்டுக்கு ஒருவர் வீதம் தினமும் அவனைக் கண்காணிப்பார்கள். கண்காணிப்பாளன் தயாராக எப்பொழுதும் கையில் ஒரு மணியை வைத்திருந்தான். அவன் கதை சொல்ல ஆரம்பித்தவுடனேயே கண்காணிப்பாளன் அந்த மணியை அடித்து, ஊரில் உள்ள அனைவருக்கும் தெரிவித்துவிடுவான். சில நிமிடங்களிலேயே அந்த இடம் மக்கள் வெள்ளத்தில் மூழ்கிவிடும். தான் வைத்திருக்கும் மூட்டையிலிருந்து ஒவ்வொரு வார்த்தையாகக் கோர்த்து, கதையைச் சொல்லிக்கொண்டே போவான். சில கதைகள் இரண்டு நாள் வரை போகும்; சில கதைகள் ஒரு மணி நேரத்தில் முடிந்துவிடும். அவன் சொல்லும் கதைகளில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று யாரும் கிடையாது; "நல்லவன், கெட்டவனை" பார்வையாளன்தான் முடிவு செய்ய வேண்டும்.

​கதை சொல்லி முடித்த அடுத்த நொடியே, அவன் தான் உபயோகப்படுத்திய எல்லா வார்த்தைகளையும் மீண்டும் மூட்டை கட்டி, அந்த ஊரை விட்டுப் புறப்பட்டுவிடுவான். அவன் அடுத்து எந்த ஊருக்குப் போகிறான் என்பது யாருக்கும் தெரியாது. அவன் போய் ஆறு மாதங்கள் ஆன பின்பும், அந்த ஊரில் அவன் சொன்ன கதையைப் பற்றி விவாதித்துக்கொண்டிருப்பார்கள்.

​அவன் சொந்த ஊர், அவனுடைய குடும்பம் இதைப் பற்றி யாருக்குமே தெளிவாகத் தெரியாது. ஆனால், அவனைப் பற்றிச் சில மர்மமான கதைகள் மக்களிடையே பரவியிருந்தன. அவனுடைய அப்பா வடக்குப் பகுதியில் உள்ள ஊரின் பெரிய செல்வந்தர். அவருடைய நண்பன் ஒருவனால் வஞ்சிக்கப்பட்டு, தனது செல்வங்கள் முழுவதையும் இழந்துவிட்டார். கடைசியாக அவரிடம் மிஞ்சியது வார்த்தைகள்தான். தன் மகனுக்குத் தன்னால் எந்தவொரு சொத்தையும் தர முடியவில்லையே என்று வருத்தப்பட்ட அவர், தன்னிடம் கடைசியாக மிஞ்சிய வார்த்தைகளையெல்லாம் ஒரு மூட்டையில் கட்டி, அதைத் தனது மகனுக்குத் தந்துவிட்டு இறந்துவிட்டார். அன்று முதல் இவன் வார்த்தைகளைத் தூக்கிக்கொண்டு ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டிருக்கிறான்.

​அவன் இதுவரை எந்தவொரு வார்த்தையையும் தொலைத்தது இல்லை. அதே போல், இதுவரை எந்தவொரு வார்த்தையையும் புதிதாக அந்த மூட்டையில் சேர்த்ததும் இல்லை. அவனுடைய எல்லாக் கதைகளிலும் அதே வார்த்தைகள்தான் மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருந்தன. வார்த்தைகள்தான் மீண்டும் மீண்டும் வருமே தவிர, அவனுடைய கதைகளெல்லாம் வித்தியாசமாகவே இருக்கும். ஒருமுறை சொன்ன கதையை மீண்டும் அவன் சொல்வதில்லை.

​அப்படி அவன் சொன்ன பல கதைகள் இன்னும் எங்கள் ஊரில் பிரபலம். முடிந்தால் உங்களுக்கு அவற்றைச் சொல்கிறேன்.

Sunday, June 12, 2011

ஆரண்ய காண்டம் - A must Watch Movie


நாமதான் சினிமா பைத்தியம் முதல் நாளே திரைப்படத்தை பார்க்கிறோம் என்றால், நமக்கு முன்னாலேயே சிலர் திரைப்படத்தை பார்த்துவிடுகிறார்கள். அப்படிதான் "ஆரண்ய காண்டம்" திரைப்படத்தை ஒருநாள் முன்னாலேயே பிரிவியூ  ஷோவில் பார்த்துவிட்டு நண்பன் என்னிடம் சொன்னது "தமிழில் முதல் முறையாக ஒரு neo-noir வகை  திரைப்படம்" என்று

இந்த neo-nair என்ற வார்த்தையையே இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். அவனிடமே neo-nair என்றால் என்னவென்று விளக்கம் கேட்டததற்க்கு, "ஒருவகையான Thriller Movie" என்று சொல்லிமுடித்து விட்டான்அவன் எப்பொழுதுமே இப்படிதான். ஒன்று யாருக்குமே புரியாத வார்த்தையில் பேசுவான் அல்லது எப்படி சொன்னால் ஒருவனுக்கு ஒரே வார்த்தையில் புரியுமோ, அப்படி சொல்லி முடித்துவிடுவான். நானும் விக்கிபீடியாவில் neo-nair பற்றி படித்து பார்த்தேன். பக்கம் பக்கமாக போட்டு இருந்தார்கள்.





neo-nair என்ற வார்த்தைக்கு அர்த்தம் அறிவதற்க்காகவே "ஆரண்ய காண்டம்திரைப்படத்தை பார்க்கப் போனேன். தமிழில் ஒரு வித்தியாசமான திரைப்படத்தை  பார்க்க  போகிறோம் என்பதை  அப்பொழுது நான் அறிந்திருக்கவில்லைதிரைப்படத்தின் ஆரமபத்தில் வரும் வாக்கியங்கள்

"எது தர்மம்?"


"எது தேவையோ, அதுவே தர்மம்"

இதுதான் திரைப்படத்தின் கதையும் கூட. கேங்ஸ்டர் வாழ்க்கையின் ஒருநாள்தான் கதையின் கரு. வானம் திரைப்படம் போலவே  நான்கு விதமான கதைகள், ஆனால், இங்கு அந்த நான்கு கதைகளும் திரைப்படத்தின் முடிவில் ஒன்று சேரவில்லை. நான்கு கதைகளும் படத்தின் ஆரம்பத்திலிருந்தே ஒன்றோடு ஒன்று பின்னப்படுகிறது.


படத்தை  இயக்கி இருப்பவர் புதுமுக இயக்குநர் "தியாகராஜன் குமாராஜா". படத்தில் எங்கேயுமே பார்வையாளர்களின் சட்டையை  பிடித்துநீ  கண்டிப்பாக சிரிக்க வேண்டும், நீ கண்டிப்பாக இந்த காட்சிக்கு அழ வேண்டும்என்று கட்டாயப்படுத்தவில்லை. அதைப்போல் திரைப்படத்தின் பின்னனி இசையும் அற்புதமாக உள்ளது. சிலர் வழக்கம்போ, யுவன் இந்த இசையை இந்த மொழியிலிருந்து காப்பியடித்து விட்டார் என்று சாட்சியுடன் சொல்லலாம், அது அவர்களின் பிரச்சனை.


திரைப்படத்தின் எல்லா  கதாபாத்திரமும் அற்புதமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
 

கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். தமிழ் சினிமாவை  உலகளவில் எடுத்து செல்ல "அழகர்சாமியின் குதிரைபோன்ற திரைப்படங்களால் மட்டுமே முடியாது. அதற்க்கு கண்டிப்பாக "ஆரண்ய காண்டம்" போன்ற ஸ்டைலான திரைப்படங்களின் உதவியும் தேவை.


இந்த திரைப்படத்தைப் பார்த்துவிட்டு இப்பொழுது டைப் செய்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட neo-nair என்ற வார்த்தையைப் பற்றி குழப்பம்  இருந்துக்கொண்டேயிருக்கிறது.




Thursday, June 9, 2011

பின்லாடன் கொல்லப்பட்டார்

பின்லாடன் கொல்லப்பட்டார். இது நடந்து ஒரு மாதம் மேல் ஆகப்போகிறது. அப்பொழுதே எழுதவேண்டியது, நாளை நாளை என்று தள்ளிப்போய், கடைசியாக இன்றுதான் ஒரு விடிவுகிடைக்கிறது. சிலர், எப்பொழுதோ இறந்ததாக சொல்லப்படும் காந்தியைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கும் போது,  போன  மாதம் இறந்த பின்லாடன் பற்றி எழுதலாம், தவறே இல்லை.

பின்லாடன் கொல்லப்பட்டு, அவரின் உடல் கடலில் தூக்கிப் போடப்பட்டது. இதை  நம்பலாமா?? வேண்டாமா??. நம்பிதான் ஆகவேண்டும், எனென்றால், இதைச் சொல்வது அமெரிக்கா. சதாமை  உயிரோடு  பிடித்த அமெரிக்காவால்,  ஏன், பின்லாடனை  உயிரோடு பிடிக்க முடியவில்லை??. ஒருவேளை  பின்லாடனை எப்பொழுதோ கொன்றுவிட்டு, பாகிஸ்தான் மீது பழி போடுவதற்க்கு அமெரிக்கா நடத்து நாடகமாக கூட இது இருக்கலாம.

இன்னும் கொஞ்ச நாள் சென்றிருந்தால் அவரே இறந்திருப்பார். கடைசி காலத்தில் அவரை  கொன்று நல்ல பெயரை  தேடிக்கொள்கிறது அமெரிக்கா அரசு. பின்லாடனை கொன்றதால் இப்பொழுது தீவிரவாதம் முற்றிலும் அழிந்துவிட்டதா?? உலகம் முழுவதும் நடக்கும் எல்லா குண்டு வெடிப்புக்கும் பின்லாடன் மட்டும்தான் பொருப்பா?? அப்படிப்பட்ட பிம்பத்தைதான் இப்பொழுது அமெரிக்கா அரசு கொண்டுவர முயற்சிக்கிறது. இரண்டாம் உலகம் போருக்கு எல்லா காரணமும் இந்த ஹிட்லர்தான் என்று சொல்லி எல்லா உலக நாடுகளும் தப்பித்தது போல் உள்ளது இது.

இந்த கட்டுரை  எழுதுவதற்க்கு காரணம் பின்லாடனை கொன்றதால் அல்ல. அது நடந்த இடத்தால். பாகிஸ்தான் மீது போர் தொடுக்க நல்ல சந்தர்ப்பம அமெரிக்காவுக்கு கிடைத்திருக்கிறது, பின்லாடன் பாகிஸ்தானில் வாழ்ந்தார், இந்த ஒரு காரணமே அமெரிக்காவுக்கு போதும் உலக நாடுகளை  நம்ப  வைப்பதற்க்கு. என்ன கொடுமை என்றால், எந்த உலக நாடுமே இதை எதிர்க்கவில்லை.

ஒரு தீவிரவாதி ஒரு நாட்டில் இருந்தால், அந்த நாட்டின் மீதே போர் எடுக்க வேண்டுமா?? ஆம் ஏனெனில்,  முதலில் அமெரிக்கா தன் மீதே குண்டுகளை  வீசிக்கொள்ள வேண்டும். அங்குதான் அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற  உலகின் மிக பெரிய தீவிரவாதி ஒருவனும்,  அவனுடைய சகாக்கள் பலரும் வாழ்த்துக்கொண்டிருக்கிறார்கள். 

பாகிஸ்தானின் உளவு அமைப்பு மீது தடை விதிக்க வேண்டுமாம். அடப்பாவிங்களா, மற்ற நாட்டின் அரசியலில் மறைமுகமாக மூக்கை  நுழைப்பதாக வீக்கிலீக்ஸ் அம்பலப்படுத்திய அமெரிக்கா உளவுத்துறையை  என்ன செய்வது??

அமெரிக்கா  எப்பொழுது பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் என்று பலரும் எதிர்ப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதில் என் நண்பர்கள் பலரும்  உண்டு. பாகிஸ்தான் மக்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று தெரியவில்லை. உலகக் கோப்பை கிரிக்கெட் தோல்விக்கு பின் பாகிஸ்தான் கேப்டன் அப்ரிடி சொன்ன ஒரு வாக்கியம்தான் நினைவுக்கு வருகிறது "I want to say sorry to my nation".

Tuesday, May 31, 2011

ஒரு குறுஞ்செய்தி

Keep the end very short otherwise memories will burn you
its true, i am burning by life.

மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தேன். சங்கரிடமிருந்து வந்த குறுஞ்செய்தி அது. சங்கர் எனக்கு குறுஞ்செய்தி அனுப்புவது மிகவும் அரிது. சொல்லப்போனால், அவன் யாருக்குமே  குறுஞ்செய்தி அனுப்புவதில்லை. "ஏன்டா, யாருக்கும் SMS அனுப்புவதில்லை" என்று கேட்டால், "அது உனக்கு சொன்னாலும் புரியாது" என்பான்.

தற்பொழுது மணி இரவு ஒன்று. இன்னொருமுறை அந்த குறுஞ்செய்தியைப் படித்துப் பார்த்தேன். இந்நேரத்தில், ஏன்? இதை அவன் நமக்கு அனுப்பவேண்டும். அந்த இரண்டு வரிகளில் உள்ள அர்த்தம் என்னை  ஏதோ செய்தது. அந்த கடைசி வரி "its true, i am burning by life", அங்கு "burning myself" என்றல்லவா வந்திருக்க வேண்டும். ஆனால், இதுவும் நன்றாகதான் இருந்தது "burning by life".

எனக்கு சங்கரை  சின்ன வயதிலிருந்தே நன்றாக தெரியும். நானும் அவனும் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை  ஒன்றாகப் படித்தோம். அவன் வீடு முதலில் மஞ்சக்கொல்லையில்தான் இருந்தது, அவன் அம்மா கிணற்றில் விழுந்து இறந்த பின், அவன் அப்பா அவனையும் அவன் தங்கையும் அழைத்துக்கொண்டு எங்கள் ஊரிலிருக்க்கும் புதியக் கடற்கரை சாலைக்கு வந்துவிட்டார்.

"Keep the end very short" என்று இவன் எதைச் சொல்கிறான்??. நம் மனித வாழ்க்கையைப் பற்றி சொல்கிறானா?? சங்கர் கவிதைகள் எழுத கூடியவன் அல்ல, தான் சொல்லவருவதை எப்பொழுதும் நேராகச் சொல்லியே பழக்கப்பட்டவன். எது சரி என்று படுகிறதோ அதை தைரியமாக செய்பவன். அவனால் எப்படி இதை  எழுதமுடிந்தது???..Opera Mini பிரவுசரை ஓபன் செய்து,  கூகுள் உதவியுடன் அந்த வாக்கியங்களைத்  தேடிப்பார்த்தேன். அந்த வாக்கியத்தை எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவனே எழுதியதுதான், அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

அவனுக்கு நான் குறுஞ்செய்தி அனுப்பினேன். "என்ன இது??" என்று. பத்து நிமிடங்கள் காத்திருந்தும் அவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. எனக்கு தெரியும் அவன் கண்டிப்பாகப் பதில் அனுப்பமாட்டான் என்று. அவன் பதில் அனுப்பியிருந்தால்தான் ஆச்சரியம். இதற்க்குமேலும் காத்திருப்பது முட்டாள்தனம் என்று கருதி,  அவனுக்கு போன் செய்தேன். கடைசி ரிங் அடித்து முடிக்கும்போதுதான் எடுத்தான். நன்றாக தூங்கியிருப்பான் போல்,  தூக்கக்கலக்கத்தில் பேசினான். "ஒண்ணுமில்லை, சும்மாதான் போன் செய்தேன், நாளை  போன் செய்கிறேன்" என்று சொல்லி போனை  வைத்துவிட்டேன்.

என்னால் அந்த குறுஞ்செய்தியிலிருந்து வெளிவர முடியவில்லை. "Otherwise Memories Will Burn You" அற்புதமான வரிகள், நினைவுகள்தான் நம்முடைய முதல் எதிரி,  நாம் எதை  மறக்க நினைக்கிறோமோ அவை மீண்டும் மீண்டும் நம் நினைவில் வந்துக்கொண்டேயிருக்கும். "நீ  எதை  மறக்க நினைக்கிறாய்??" என்று யாராவது என்னிடம் கேட்டால், நான் சொல்வேன் "எல்லாவற்றையும்". ஆம் எல்லாவற்றையும். நினைவுகள் இல்லை  என்றால் நமக்கு எந்த ஒரு கவலையும் இல்லை.

எதற்க்காக அவன் இந்த குறுஞ்செய்தியை எனக்கு அனுப்பவேண்டும். ஒரு சொல்லமுடியாத ஒரு துக்கம் அந்த இரண்டு வரிகள் இருக்கிறது. சென்ற  வாரம் நான் அவனை ஊரில் சந்தித்தப்போது கூட மிகவும் உற்சாகமாகதான் இருந்தான். "ஜெ, கருணாநிதி,  சீமான், சிதம்பரம், ராம், வெற்றிமாறன், பின்லேடன் மற்றும் எங்கள் பள்ளி நாட்கள்" என்று எல்லாவற்றைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். 
கல்லூரியில் ஒரு பெண்ணை காதலித்ததாக சொல்வானே அவளை நினைத்து அனுப்பியிருப்பானா?? எப்பொழுதோ இறந்த அம்மாவை  நினைத்து அனுப்பினானா??.

ஒருவேளை  வேலையில் எதாவது பிரச்சனையா?? அதற்க்கு வாய்ப்பே இல்லை, அண்ணாமலை கல்லூரியில் வாத்தியார் வேலை. வாத்தியார் வேலையில் கூட பிரச்சனைகள் வருமா என்ன?? அதுவும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில். பின் எதற்க்காக அந்த குறுஞ்செய்தியை எனக்கு அனுப்ப வேண்டும். சென்றமுறை நாங்கள் சந்தித்தப் போது, நாற்பது வருடங்கள் முன்னால் கருணாநிதிக்கு அண்ணாமலை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியதாகவும், அதை  எதிர்த்த மாணவர்களில் ஒருவன் மர்மமான முறையில் இறந்ததாகவும் சொன்னான். அவன் அடுத்து சொன்னதுதான் என்னை தூக்கிப்போட்டது, "அந்த மாணவனின் அப்பாவே இறந்த மகனின் உடலைப்பார்த்து அது தன் மகன் இல்லை  என்று வாக்குமூலம் அளித்தார்" அவன் அந்த கடைசி வாக்கியத்தை  சொன்னபோது, அவன்  கண்கள் சிவப்பாகியிருந்தது. ஏற்கனவே ஆறு அடி உயரம் இருக்கும் அவன். தோள்களை தூக்கிக்கொண்டு இதை சொன்னப்போது எங்கள் ஊர் விஷ்வரூப விநாயகர் போல் காட்சியளித்தான்.

மீண்டும் படித்தேன்.

Keep the end very short otherwise memories will burn you
its true, i am burning by life.


ஒருவேளை  அவன் என்னைப்பற்றி எதாவது சொல்ல நினைக்கிறானா?? எனது கைகள் தானாகவே கொஞ்சம் நடுங்க தொடங்கியது. எனக்கு வியர்க்க ஆரம்பித்தது. என்னுடைய பிரச்சனைகள் அவனுக்கு தெரியும் என்கிறானா?? அவனுக்கு ஆறாவது அறிவு மிகவும் அதிகம், யாரின் முகத்தை  பார்த்தே அவர்களின்  பிரச்சனை  அனைத்தையும் சொல்லிவிடுவான். என்னை ஊரில் பார்க்கும் போதெல்லாம் சொல்வான் "ஏன் மச்சி?டல்லாக இருக்கே??" "இல்லை ,இல்லை" என்று எத்தனை முறை சொன்னாலும் கேட்கமாட்டான். இதற்க்காகவே அவனை  பார்க்கும் போதெல்லாம் தேவையில்லாமல், இயல்பாக இருப்பது போல் நான் நடிக்க தொடங்கினேன்.

அவனிடம் சொல்லும் அளவுக்கு எந்த ஒரு பிரச்சனையும் எனக்கு இல்லை என்பதுதான் உண்மை. இந்த இரவில், தேவையில்லாமல் ஒரு குற்றவுணர்ச்சி மனதில்  ஓடத் தொடங்கியது. எப்பொழுது தூங்கினேன் என்றே தெரியவில்லை.

இரண்டு மாதங்கள் கழித்து ஊரில் நானும் சங்கரும் சந்தித்தபோது அந்த குறுஞ்செய்தியைப் பற்றி அவனிடம் கேட்க நான் மறந்துப்போனேன் அல்லது அப்படி நினைத்துக்கொண்டேன். அவன் எதற்காக அந்த குறுஞ்செய்தியை  எனக்கு அனுப்பினான் என்பது இன்னும் எனக்கு புதிராகவே உள்ளது.

Monday, May 30, 2011

படித்ததில் பிடித்தது

சமீபத்தில் Facebook'ல் மனுஷ்ய புத்திரன் எழுதியது...
*****************************************************

ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ

பாரதியின் இந்த வரிகளைப் படிக்கும்போதெல்லாம் அவர் மனித மனதின் விசித்திரமான ஒரு இயல்பை எவ்வளவு நுட்பமாக சொல்கிறார் என்ற வியப்பு மேலிடுகிறது. நம் வாழ்கையில் சில நிமிடங்கள் பழகிய ஒருவரின் முகம் பிறகு எப்போதோ துல்லியமாக நினைவுக்கு வருகிறது. ஆனால் நம்மோடு பலவருடங்கள் நெருங்கி வாழ்ந்த ஒருவரின் முகத்தை சட்டெனெ நினைத்துக்கொண்டால் மூட்டமான காட்சிதான் மிஞ்சுகிறது. 2 ஆம் வகுப்பில் என்னோடு படித்த ஒரு பையனின் முகம் இவ்வளவு வருடங்களுக்கு பிறகும் நினைவில் இருக்கிறது. ஆனால் எனது 20 ஆம் வயதில் இறந்துபோன அம்மாவின் முகத்தை எவ்வளவு நினைவுபடுத்திப் பார்த்தாலும் ஏதோ ஒரு சாயல்தான் மனதில் தோன்றுகிறதே தவிர அந்த முகத்தை மீட்க முடியவில்லை. ’நேசம் மறக்கவில்லை எனில் நினைவு முகம் மறக்கலாமோ? என்ற பாரதியின் கேள்வியில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. நம் மனம் தீவிரமான அன்பையோ காதலையோ அடையும்போது மனித உடல் மறைந்து அது வேறொரு ரூபத்தில் நமக்குள் உருக்கொண்டு விடுகிறது. அதனால்தான் ஆசை முகம் நினைவுக்கு வர மறுக்கிறது. நினைவும் மறதியும்தான் நம் வாழ்க்கையின் மொத்த சாரமுமே இல்லையா?.
 

Saturday, May 28, 2011

நீங்கள் அவனை கடவுள் என்பீர்கள் - III

நான்காவது சந்திப்பு 

எனக்கும் கடவுளுக்குமான நான்காவது சந்திப்பு இன்று அதிகாலை சாந்தி காலனி சாலையில் நடந்தது. இதற்க்கு முன்னர் நடந்த எல்லா சந்திப்புகளிலும் அவன் தன்னை கடவுள் என்று  அறிமுகம் செய்துக்கொண்டதால், நானும் அவனை கடவுள் என்றே அழைக்கத் தொடங்கினேன். எங்கள் பழைய சந்திப்புகள் நடந்த இடங்கள் எதுவும், எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. நான்  மறைமலை நகரில் வசித்தபோது, ஒருமுறை எனது அறையை தட்டாமல் அவன் உள்ளே நுழைந்ததாக ஞாபகம். ஆனால் தெளிவாகத் தெரியவில்லை.

அவனுடைய வருகையின் போதெல்லாம் நான் சோகத்தில் மட்டுமே இருந்திருக்கிறேன். ஆனால் இந்தமுறை அப்படியில்லை. அவனின் தற்பொழுதைய வருகை எனக்கு ஆச்சரியத்தையும், சந்தேகத்தையும் தந்தது.

வழக்கம் போல், இந்த சந்திப்பும் அமைதியாகதான் ஆரம்பித்தது. அந்த அதிகாலையில், நடைப்பயிற்சி செய்துக்கொண்டிருந்த யாருமே எங்களைக் கண்டுக்கொள்ளவில்லை. அவனின் முதல் வார்த்தைக்காக நானும்,  என்னுடைய முதல் வார்த்தைக்காக அவனும் காத்துக்கொண்டிருந்தோம். அவன்தான் முதலில் ஆரம்பித்தான்,

"உன்னை இங்கு நான் எதிர்ப்பார்க்கவில்லை" என்றான்.

"நானும் தான்"  என்றேன்.

"இன்னும் நான் கடவுள் என்பதில் உனக்கு சந்தேகம் இருக்கிறதா??" என்றான்.

அவனுக்கு நன்கு தெரிந்திருந்தது, "எந்த மாதிரி கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல தயங்குவேன் என்று". நான் பேச்சை  மாற்றும் நோக்கில் "இப்பொழுதுலாம் நடைப்பயிற்சி செய்ய நிறைய பேர் வருவதாக சொன்னேன்". நாங்கள் இருவரும் பேசிக்கொண்டே இரண்டாவது அவென்யூ நோக்கி நடக்க தொடங்கினோம்.

என்னிடம் கேள்விகளை  அடிக்கிக்கொண்டே  போனான். என்னைப் பற்றி எல்லாம் தெரிந்தவன் என்பதை அவன் நிரூபிக்க விரும்பினான். தற்பொழுது நான் காதலிக்கும் என்னுடைய  நான்காவது காதலியைப் பற்றி விசாரித்தான். "நீ மீண்டும் ஏமாறப்போகிறாய். எனக்கு உன்னுடைய எல்லா காதல்கதைகளும் தெரியும்" என்றான். "இதில் என்ன விஷேசம் இருக்கிறது, என்னுடைய வலைப்பதிவைப் படிப்பவர்கள் அனைவருக்குமே என்னுடைய எல்லாக் காதல் கதைகளும் தெரியும்" என்றேன்.

"சென்ற வாரம் நாகூரில் நீ சந்தித்த அந்த எழுத்தாளர் உன்னை எந்தளவு பாதித்து உள்ளார் என்பதும் எனக்கு நன்கு தெரியும்" என்றான். "அவன் எழுத்தாளனே இல்லை, அவன் ஒரு ஏமாற்றுக்காரன்" என்றேன்.

ஒரு பெட்டிக்கடையில் சாய்பாபா படம் கொண்ட ஒரு தினசரி விளம்பரம் தொங்கிக்கொண்டிருந்தது.

அவனிடம் "சென்ற மாதம் ஒரு சாமியார் செத்தாரே  அது நீ இல்லையா??" என்றேன். அவன் சிறிது யோசித்தான். இப்பொழுது என் நேரம், இனி அவனை நான் கேள்விகளால் துழைக்கவேண்டும்.

மீண்டும் கேட்டேன் "அவன் இறந்தது உனக்கு தெரியும் தானே??"

"எனக்கு தெரியாது"

"எல்லா செய்திதாள்களிலும் போட்டு இருந்தார்களே"

"நான் செய்திகள் படிப்பதில்லை"

"முதலில் இறந்தது நீ தான், என்று நினைத்துவிட்டேன்"

"எனக்கு மரணம் இல்லை"

"அவனும் இதைதான் சொன்னான்" என்றேன்.

அவனுடைய செல்போன் சிணுங்கியது. Galaxy மாடல் போன், அவனுடைய உள்ளங்கையை விட பெரிதாக இருந்தது.

"நேரமாகி விட்டது, இன்று நான் கார் கொண்டு வரவில்லை, விரைவாகப் போகவேண்டும், காத்துக்கொண்டிருக்கிறாள். மீண்டும் உன்னை சந்திக்கிறேன்" என்று சொல்லி எனக்கு எதிர்ப்புறம் நடக்க தொடங்கினான்.

சிறிது நேரம் கழித்து நான் திரும்பி பார்க்கையில் ஒரு பெண்ணொருத்தி'யுடன் அவன் கைக்கோர்த்து நடந்துக்கொண்டிருந்தான். தொலைவிலிருந்து பார்க்கும் போது, அவள் எனது பழைய காதலிகளில் ஒருத்தியைப் போல் இருந்தாள்.

Monday, May 23, 2011

Push, Pull மற்றும் சில தமிழ் திரைப்படங்கள்

இந்தமுறை தமிழ் திரைப்படங்களுக்கு 13 தேசியவிருதுகள். அதில் சன் பிக்சர்ஸ் தயாரித்த "ஆடுகளம்" திரைப்படத்திற்க்கு மட்டும் ஆறு விருதுகள். அதே நிறுவனம் தயாரித்த சென்ற ஆண்டின் மாபெரும் திரைப்படத்திற்க்கு இரண்டு தேசியவிருது. தேசிய விருது வாங்க எல்லாவித தகுதியும் "ஆடுகளம்" திரைப்படத்திற்க்கு இருக்கிறது. சன் பிக்சர்ஸ் யாரையும் மிரட்டியோ, பணம் கொடுத்தோ வாங்கியிருக்க தேவையில்லை. ஒருவேளை  அப்படி செய்திருந்தால் அது இந்தத் திரைப்படத்திற்க்குதான் கேவலம். என்ன செய்ய?? இப்பொழுது எல்லாவற்றையும் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. 

தேசியவிருதுகள் பெற்ற "தென்மேற்க்கு பருவ காற்று" மற்றும் "நம்ம கிராமம்" திரைப்படங்களைப் இன்னும் பார்க்கவில்லை. எல்லா  திரைப்படங்களையும் DVDயில் வைத்திருக்கும் நண்பன் ஒருவனிடம் சொல்லி வைத்திருக்கிறேன். ஷாஜி இரண்டு மாதங்களுக்கு முன்னால் "தென்மேற்க்கு பருவகாற்று" திரைப்படத்தைப் பாராட்டி உயிர்மையில் ஒரு கட்டுரை  எழுதியிருந்தார். அப்பொழுதே அந்த திரைப்படத்தை  பார்க்க நினைத்தேன், பின் வரிசையாக தமிழில் வெளிவந்த சில சூப்பர் ஹீட் திரைப்படங்கள் காரணமாக அதை மறந்துவிட்டேன்.




எங்க தலைவர் மிஷ்கினின் "நந்தலாலா"  திரைப்படத்திற்க்கு ஒரு விருதும் கிடைக்கவில்லை. அதை நினைத்து எனக்கு கொஞ்சம் வருத்தமே. கண்டிப்பாக அடுத்த வருடம் "யுத்தம் செய்" திரைப்படத்திற்க்கு கிடைக்கும். நம்புவோம்.

நான் சிம்புவின் ரசிகனாக மாறிக்கொண்டிருக்கிறேனா?? என்று பயமாகயிருக்கிறது. ஏனென்றால், எனக்கு "வானம்" திரைப்படம் பிடித்திருந்தது.  அந்த கடைசி இருபது நிமிடங்களைத் தவிர்த்துப் பார்த்தால் வானம் ஒரு நல்ல திரைப்படம். 

கடன் தொல்லையிருந்து மீண்டு குழுந்தையைப்  படிக்கவைக்க ஒரு குடும்பத்துக்கு நாற்பது ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. இன்னொரு பக்கம், தன் காதலியுடன் புதுவருட இரவை  கொண்டாட ஒருவனுக்கு நாற்பது ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது.  மற்றொரு பக்கம், புது வருடத்திலிருந்து சொந்தமாக விபச்சார தொழில் செய்யபோகிறாள் ஒருவள், அன்றைய இரவின் விலை  நாற்பது ஆயிரம் ரூபாய். "Economic inequality"க்கு இது ஒரு சிறந்த உதாரணம். இதைதான் சமீபத்தில் நமது சுப்ரீம் கோர்ட்டும் சொல்லியது "பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா, ஏழைகளுக்கு ஒரு இந்தியா என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று. வானம் திரைப்படத்தில் சிம்பு, அனுஷ்கா இருவரின் நடிப்பும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இன்னும் இதே போல் இரண்டு படங்கள் சிம்பு நடித்தால் அவரின் ரசிகனாக நான் மாறுவது உறுதி.




"எவன்டி உன்னை பெத்தான்" பாடலை  சிம்புவே எழுதி உள்ளார். அதில் வரும் சில வரிகள்

என் Facebook Statusசும் நீதான்,
என் Tweeter Twitting நீதான்,
.........................
என் BBMமும் நீதான், என் Facetimeமும் நீதான்...

எப்படி சிம்பு சார்?? எப்படி??.. தயவுசெய்து "வள்ளவன், மன்மதன்" போல் எந்த திரைப்படமும் இனி எடுக்காமல் இருங்கள்.. நீங்கள் எங்கேயோ போலாம் சிம்பு சார்.

"எவன்டி உன்னை பெத்தான்" பாடலை  தொடர்ந்து சிம்புவின் அடுத்த அமர்க்களம் "போடா போடி" திரைப்படத்தில் வரும் "லவ் பண்ணலாமா?? வேண்டாமா??" இதுதான் இப்பொழுது என்னுடைய Favourite. (பாடல் கீழே)

வானம் திரைப்பட ஆரம்பத்தில் முஸ்லீமாக வாழ்வதால் எற்படும் பிரச்சனைகளைப் பற்றி அருமையாகச் சொல்லியிருந்தாலும், கடைசி இருபது நிமிடங்களில் சொதப்பிவிடுகிறார்கள். முஸ்லீம்களுக்கு மட்டும்தான் வெடிக்குண்டு தயாரிக்க தெரியுமா என்ன??. கோ, வானம் இந்த இரண்டு திரைப்படங்களும் சொல்லும் ஒரு கருத்து, தீவிரவாதி = மூஸ்லிம் & நக்சலைட் = ஹிந்து. கிறிஸ்துவர்கள் யார் என்று இதைப் படிக்கும் நீங்கள் கேட்கலாம். அவர்கள் வழக்கம் போல் அப்பாவிகள்.

இந்த மாதத்தில் நான் பார்த்த இன்னும் இரண்டு திரைப்படம் "அழகர்சாமியின் குதிரை மற்றும் எங்கேயும் காதல்" அழகர்சாமியின் குதிரை  நல்ல திரைப்படம்தான் என்றாலும் எந்த காட்சியும் மனதில் நிக்கவில்லை, எங்கேயும் அழுத்தமும் இல்லை. இதாவது பராவாயில்லை, மற்றொரு திரைப்படமான "எங்கேயும் காதல்" திரைப்படமே இல்லை.

முன்னர் எல்லாம் ஹரிஸ் ஜெயராஜ் சார், இரண்டு படங்களுக்கு இடையே அதிக இடைவெளி தருவார். குறைந்தது ஆறு மாதங்களாவது இருக்கும். அந்த ஆறு மாதங்கள் புதிய ட்யூன்களைத் தேடுவதற்க்காகயில்லை, அவரின் பழைய டியூன்களை மக்கள் மறப்பதற்க்காக என்பது நாம் அனைவருக்கும் அறிந்ததே. அவரின் கோ மற்றும் எங்கேயும் காதல் அடுத்தடுத்து வந்ததால், எந்த பாடல் எந்த திரைப்படம் என்பதை  கண்டுபிடிக்க மிகவும் கடினமாக உள்ளது. எனக்கு Pushக்கும் Pullக்கும் எப்பொழுதும் குழப்பம் இருந்து கொண்டேயிருக்கும். தள்ள வேண்டிய இடத்தில் இழுப்பதும், இழுக்கும் இடத்தில் தள்ளுவதும் நான் செய்யும் அன்றாட வேலைகளில் ஒன்று. ஆனால், இப்பொழுது "Push, Pull"யை விட "கோ மற்றும் எங்கேயும் காதல்" பாடல்கள்தான் என்னை அதிகம் குழப்புகிறது.

"என்ன வாழ்க்கடா இது"

Sunday, May 1, 2011

கோ



”கே.வி.ஆனந்த் சார், தயவு செய்து இனி திரைப்படங்கள் எதுவும் நீங்கள் எடுக்க வேண்டாம்”. கோ திரைப்படம் பார்த்தவுடனே இப்படிதான் எழுத நினைத்தேன். ஆனால் கொஞ்சம் யோசித்து பார்த்ததில் தமிழில் எத்தனையோ இயக்குநர்கள் எப்படி எப்படியோ கண்றாவியாகத் திரைப்படம் எடுக்கும் போது, நீங்கள் எடுக்கலாம் தவறே இல்லை. ஆனால், கொஞ்சம் யோசித்து நல்ல திரைப்படமாக எடுக்கவும்.

பத்திரிக்கை துறையில் வேலை பார்த்ததாக சொல்லபடும் கே.வி ஆனந்த் சாரும், சுபா சாரும் நக்சல்கள் பற்றி ஒன்றுமே தெரியாமல் எடுத்திருக்கும் திரைப்படம்தான், “கோ”. எதுக்கு சார் நக்சல்களை இவ்வளவு கேவலப்டுத்த வேண்டும். நீங்கள் சொல்லும் நக்சல்களுக்கான இலக்கணம் மிகவும் புதியதாக உள்ளது. நக்சல்கள் உங்கள் மீது மான நஷ்ட வழக்கு போட்டாலும் ஆச்சர்யம் அடைவதற்கில்லை.

கே.வி சார்,  ”கோ” திரைப்படம் பார்வையாளர்களிடம் ஒரு சிறிய எழுச்சியை எற்படுத்துகிறது. நம் தமிழ்மக்கள் எப்பவும் உண்ர்ச்சிகளுக்கு கட்டுப்பட்டவர்கள். அதைப்போல் மறதியும் உடையவர்கள். திரைப்படத்தை பார்த்துவிட்டு வரும் சிலர், இதைப் போல் எதாவது சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் வீட்டுக்கு வந்து, ஏர்டெல் சூப்பர் சிங்கர் பார்த்தவுடனயே பழையதை மறந்துவிட்டு, தானும் ஒரு சூப்பர் சிங்கராக மாற வேண்டும் என்று கனவுகானத் தொடங்கிவிடுவார்கள். கே.வி சார்,  நீங்கள் சொன்னதை இன்னும் நன்றாக சொல்லியிருந்தால், அந்த மறதியை  குறைத்திருக்கலாம். ஒருவேளை நீங்கள் ஒரு சாதாரண பொழுதுப்போக்கு படத்தைதான் எடுக்க விரும்பினீர்களா??.

கே.வி சார் ஏற்கனவே பத்திரிக்கை துறையை சேர்ந்தவர் என்பதால், பத்திரிக்கை சம்மந்தமான காட்சிக்கள் நன்றாக வந்துள்ளது. ஆனால் கல்லூரி காட்சிகள்??? ஒருவேளை கே.வி சார் கல்லூரியில் படிக்கவில்லை  போல, எப்படி ஒரே கல்லூரியில் படித்த மாணவர்கள் பின் நாட்களில் ”டாக்டர், இன்ஜினியர்” என்று இரு வேறு தொழிலுக்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. நக்சல்வாதிகள் என்றாலே ஜோல்னா பை'தான் வைத்திருக்க வேண்டுமா??. அதுவும் ஜோல்னா பை'யை கொலை செய்யும் இடத்துக்கும் கொண்டுவர வேண்டுமா  கே.வி சார்??.

ஜீவா தன் கல்லூரி நாட்களை சொல்லும்போது, ஒரு ப்ளாஸ்பேக் காட்சி வருகிறது. சரி, எதோ பெரிய மேட்டர் இருக்கு போல என்று எதிர்பார்த்தால், ஒரே ஒரு பாடல் காட்சியோடு அந்த ப்ளாஸ்பேக் முடிந்துவிடுகிறது. ப்ளாஸ்பேக்கை ஒரே வார்த்தையில் சொல்லியிருக்கலாமே சார்??. தோழி இறந்து விடுகிறாள், அதுவும் கொலை செய்யப்படுகிறாள். காதலியின் அறையின் ஒருவன் புகுந்ததால் அவளும் பயந்து இருக்கிறாள். இந்த இடத்தில் ஒரு டூயட் பாடல் தேவைதானா, கே.வி சார்??. உங்களில் பழைய படத்திலும் இதைப்போன்ற தவறைதான் செய்திருந்தீர்கள்.




திரைப்படத்தின் முதல் பகுதி முழுவதும் மீடியாவைப் பற்றியே சொல்லப்படுகிறது. அது எப்படி என்று தெரியவில்லை எங்கே பிரச்சனை என்றாலும் ஜீவா அங்கே ஆஜராகிவிடுகிறார்.

கோ - புரட்சியைப் பற்றி பேசும் திரைப்படம்.  புரட்சியை இதுவரை  டி.வி.களிலும், புத்தகங்களிலும் மட்டுமே படித்த நாம் புரட்சிக்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம். அதை திரைப்படத்தில் பார்த்தவுடன் சில நொடிகள் உணர்ச்சி வசப்படுவது உண்மையே. ஆனால், புரட்சியால் எதுவும் சாதிக்க முடியாது என்பதுதான் உண்மை. அதுதான் இந்த திரைப்படத்தின் கதையும் கூட. ஆனால், இந்த திரைப்படத்தில் அதை சொல்லியவிதம் தவறு.

ஒரு புரட்சியை உருவாக்குவது இவ்வளவு சுலபம் இல்லை,கே.வி சார். அது மிகவும் கடினம். நீங்கள் முதல் அமைச்சர் அளவுக்கு சென்றுவிட்டீர்கள். ஒரு தொகுதியில் வேட்பாளராக  போட்டி போடுவதே எவ்வளவு கடினம் என்பது உங்களுக்கு தெரியுமா??.

மொத்தத்தில் “கோ” மிகவும் சாதாரண ஒரு கமர்ஷியல் திரைப்படம், இந்த திரைப்படத்தை பார்த்தெல்லாம் நாம் உணர்ச்சி வசப்பட வேண்டிய அவசியமில்லை.

பின் குறிப்பு:


தமிழ்சினிமாவின் மரபின் படி, கே.வி சார் பெயரைக் குறிப்பிடும் போதெல்லாம், கே.வி சார் என்று ”சார்” போட்டே எழுதியுள்ளேன்.

Wednesday, April 27, 2011

தெளிவு

தெளியப்போவதில்லை
என்று
தெரிந்தும்
தெளிந்துக்கொண்டு தான்
இருக்கிறேன்,
தெளிவில்லா உன் நினைவுகளிலிருந்து.