வார்த்தைகளோடு அலைபவன் பிறந்த நாட்டில், ஒரு வருடத்திற்குப் பதினான்கு மாதங்கள் இருந்தன. அந்தந்த மாதங்களில் பூக்கும் பூக்களைக் கொண்டே அந்த மாதங்களை அழைத்தனர். ஒவ்வொரு மாதமும் நாற்பத்து நான்கு நாட்களைக் கொண்டிருந்தது. வார்த்தைகளோடு அலைபவனின் பிறப்பு, செம்பருத்தி மாதத்தின் நாற்பத்தி இரண்டாம் தேதி நடந்தது. அந்த நாட்டில், செம்பருத்தி அறுபது வருடங்களுக்கு ஒருமுறையே பூக்கும் பூ என்பதால், அந்த மாதத்தில் பிறந்தவர்களைப் பார்ப்பது அரிது. செம்பருத்தி மாதத்தில் பிறந்த அனைவருமே ஏதாவது ஒரு துறையில் வல்லுநர்களாக இருந்தனர். கனவுகளை உருவாக்குபவன், கணநேரத்தில் பொருள்களை மறையச் செய்பவன், தண்ணீரின் சூத்திரத்தை முதலில் கண்டுபிடித்தவன், மலைகளை ஒரே கையில் தூக்கிச் சுமப்பவன் இப்படிப் பலரும் பிறந்தது செம்பருத்தி மாதத்தில்தான்.
வார்த்தைகளோடு அலைபவன் பிறந்த அதே நாளில் சுமார் அறுபது வருடங்களுக்கு முன்னால், ஒருவரின் தலையணையை வைத்தே அவர்களின் எதிர்காலத்தைச் சொல்பவன் ஒருவன் இறந்துபோனான். அவன் இறந்த பின்னால் எதிர்காலத்தை யாராலும் சரியாகக் கணிக்க முடியவில்லை. எதிர்காலத்தை அறிந்துகொள்ள முடியாமல் மக்கள் மிகவும் கவலைகொண்டனர். எதிர்காலத்தை அறிந்துகொள்வதற்காக மக்களும் பல வழிகளைக் கையாண்டனர்.
நட்சத்திரங்களைப் பார்ப்பது, தாயத்தை உருட்டுவது, கிளிகளைக் கூண்டில் அடைத்து ஓவியங்களில் ஒன்றை எடுக்கச் செய்வது என இப்படி எத்தனையோ வழிகளின் மூலம் எதிர்காலத்தை யூகித்தனர். ஆனால், அவர்களின் யூகங்கள் அனைத்தும் பொய்யாகின. எதிர்காலத்தை அறிந்துகொள்ள முடியாத மக்கள், மிகவும் விரக்தியில் இருந்தனர். செம்பருத்தி மாதம் நாற்பத்தி இரண்டாம் தேதி ஒருவன் பிறந்துள்ளான் என்ற செய்தி அறிந்த மக்கள், கண்டிப்பாக அவன் எதிர்காலத்தை யூகித்துச் சொல்லக்கூடியவன் என்று நம்பினர்.
வார்த்தைகளோடு அலைபவன், அவனது மூன்றாவது வயதில் தனது முதல் கதையைச் சொல்லத் தொடங்கினான். அதன் பின்னர் மக்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக, "இவன் எதிர்காலத்தை யூகித்துச் சொல்லக்கூடியவன்" என்ற நம்பிக்கை குறையத் தொடங்கியது. இருந்தாலும், "கதைகள் மூலம் இவன் எதிர்காலத்தைக் குறிப்பாக உணர்த்துகிறான்" என்று இன்னும் சிலர் நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
வார்த்தைகளோடு அலைபவனின் கதைகளையும், அவனைப் பற்றிய தொகுப்புகளையும் வைத்திருக்கும் லில்லி மாதத்தில் பிறந்த ஒருவன், வார்த்தைகளோடு அலைபவனின் பிறப்பைப் பற்றி அவனுடைய குறிப்புப் புத்தகத்தில் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளான்:
"அவனின் பிறப்பைப் பற்றி நமக்கு எதுவும் சரியாகத் தெரியாத நிலையில், மற்றவர்கள் சொல்லும் கதைகளை வைத்து இப்படி ஒரு முடிவுக்கு நாம் வர நேரிடுகிறது. அதன்படி, வார்த்தைகளோடு அலைபவன் செம்பருத்தி மாதம் நாற்பத்தி இரண்டாம் தேதி பிறந்துள்ளான். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், நம் கிரகத்திலிருந்து சுமார் 1988 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும் மனிதர்கள் வாழும் ஒரு கிரகத்தில் 'மீட்பர்' மறைந்து 1956 ஆண்டுகள் கழித்து வார்த்தைகளோடு அலைபவன் பிறந்துள்ளான். தண்ணீரின் சூத்திரத்தைக் கண்டுபிடித்தவன் சமீபத்தில் உருவாக்கிய சூத்திரத்தை வைத்துப் பார்க்கும்போது, நமது கிரகத்திலிருந்து அந்தப் புதிய கிரகத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் 1988 ஒளி ஆண்டுகள் நாம் பின்னோக்கிப் போக வேண்டும். அப்படிச் சென்றால் மீட்பரைச் சிலுவையில் அறைந்த நாளுக்குச் சென்றுவிடலாம். மீட்பர் 32 ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்தார். ஆகவே, நாம் இன்னும் 32 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றால், அவரின் பிறந்த வருடத்திற்குச் சென்றுவிடலாம். அன்றுதான் நமது கிரகத்தில் வார்த்தைகளோடு அலைபவனும் பிறந்துள்ளான்."
லில்லி மாதத்தில் பிறந்தவன் எழுதிய குறிப்புகளைப் படித்த பலர், "அவன் தன்னுடைய அறிவுத்திறனையும், தான் எல்லாம் தெரிந்தவன் என்பதையும் காட்டுவதற்காகவே இந்தக் குறிப்பை எழுதியுள்ளான்" என்று புகார் கூறினர். ஆனால், வார்த்தைகளோடு அலைபவன் பற்றி முழுமையாக அறிந்தவர்கள் வேறு யாரும் இல்லாததால், லில்லி மாதத்தில் பிறந்தவன் எழுதிய குறிப்புகளையே நாம் நம்ப வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.




