Thursday, May 16, 2024

எரிந்து போன டைரி குறிப்புகள் ( எனது நினைவிலிருந்து)

நாம் ஏன் மற்றவர்களுக்காக நடிக்க வேண்டும் ?

நமது நடிப்பின் மூலம் ஒருவரின் தற்கொலை ஒரு நாள் தள்ளிபோகும் என்றால், கண்டிப்பாக நடிக்கலாம் தவறே இல்லை.

நமது நடிப்பின் மூலன் ஒருவரின் முகத்தில் ஒரு கணநேரம் சிரிப்பு வரும் என்றால், ஒருவரின் அந்த கணநேர மகிழ்ச்சிக்காக நமது சுயத்தை மறைத்து நாம் நடிக்கலாமா?? தேவையே இல்லை.

அதே நேரம் அந்த ஒருவர் யார் என்பதும் இங்கே முக்கியம் இல்லையா. அந்த ஒருவர் நாம் நேசிப்பவராக இருக்கலாம், அல்லது நாம் வெறுப்பவராக  அல்லது அவர் நம்மை நேசிப்பவராக, இப்படி ஏதோ ஒருவராக.. 

ஆனால் அவரின் மகிழ்ச்சிக்காக நாம் நமது சுயத்தை விட்டு தரக்கூடாது என்று நினைப்பதும் ஒருவகையான சுயநலம் இல்லையா??

நமக்கான சுய பிம்பத்தை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்வது, அது ஒரு வீதமான ஆணவம். என்னை பார், நான் யாருக்காகவும் எப்பொழுதும் என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று நிருபிக்க துடிக்கும் ஆணவம். நாம் நிருபித்து இங்கு எதை சாதிக்க போகிறோம்.

இருக்கும் ஒரு பிறவியை மற்றவர்களுக்காக வாழ்ந்து விட்டு செல்வோமே.

Saturday, January 28, 2023

Hindenburg நிறுவனத்தின் அதானி ரிப்போர்ட்

 காக்கா அமர்ந்து மரக்கிளை சாய்ந்த கதையாக, நான் கடந்த 21’ஆம் தேதி அதானி குழுமத்தை பற்றி எழுத, 24’ஆம் தேதி Hindenburg நிறுவனம் அதானி குழுமத்தில் தில்லுமுல்லுகளை 88 பாய்ண்ட்’களாக ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது. அதானி குழுமத்தில் அனைத்து பங்குகளும் கடந்த இரண்டு நாட்களில் 20-30% சதவீதம் குறைந்து உள்ளன, இன்னும் எவ்வளவு குறையும் என்று தெரியவில்லை.  இதற்கிடையில் அதானி Enterprises FPO கடந்த 27’ஆம் தேதி தொடங்கிஉள்ளது.  FPO’வில்  அதானி Enterprises விலை 3112 ரூபாய், Open Market’யில் கடந்த வெள்ளியன்று (27-1-2023) அதானி விலை 2761. கண்டிப்பாக இந்த FPO தோல்விதான் என்று அனைவரும் சொல்லிக்கொண்டு இருக்க, அதானி நிறுவனமோ கண்டிப்பாக இந்த FPO நடைப்பெறும் என்று அறிவித்து உள்ளது. அதற்கான மறைமுக ஏற்பாடுகளை இந்நேரம் அந்த நிறுவனம் தொடங்கியிருக்கும். வரும் திங்களன்று அதானி ஷேர் மீண்டும் 3000 ரூபாய் தொடும் என்று எதிர்பார்க்கலாம்.


 


Hindenburg நிறுவனம் தந்த ரிப்போர்ட் சில ஆரோக்கியாமான விவாதங்களுக்கு வழிவகுத்து உள்ளது. இந்தியாவில் அனைத்து துறைகளிலும் Monopoly’யாக உருவாகிவரும் அதானி நிறுவனத்துக்கு இது கண்டிப்பாக ஒரு முட்டுக்கட்டை.

ஒரு சிலர், ஒரு அமெரிக்கன் கம்பெனியின் ரிப்போர்டை நாம் ஏன் நம்ப வேண்டும் ?? என்கிறார்கள். மோடியை பற்றிய பிபிசி டாக்குமெண்டருக்கும் இதைதான் சொன்னார்கள். அவர்களிடம் பேசி ஒரு பிரயோசனமும் இல்லை.

கடைசியாக ஒன்று, ஷேர் மார்க்கெட்’க்கு புதிதாக வருபவர்களுக்கு மற்றும் கற்றுக்கொள்ள நினைப்பவர்கள் இது ஒரு  நல்ல வாய்ப்பு. அந்த Hindenburg நிறுவனம் ரிப்போர்ட்டை புரியுதோ இல்லையோ முழுவதுமாக படியுங்கள்.மேலும் இதன் தொடர்ச்சியாக அடுத்து அடுத்து நடக்க போகும் விவாதங்கள் மற்றும் மாற்றங்களை தொடர்ந்து வாசியுங்கள், அடுத்து மார்க்கெட்டில் நடக்க போவதை முன் கூட்டியே அனுமானித்து அதன் படி நடக்கிறதா என்று சரி பாருங்கள். ஒரே செய்தி நிறுவனத்தின் செய்தியை மட்டும் படித்து முடிவு செய்யாதீர்கள். முக்கியமாக டிவி சேனலை பார்க்காமல் செய்திதாள்களை படியுங்கள். இப்பொழுதைக்கு பணத்தை முதலீடு செய்யாமல் இருப்பதே நல்லது.

  Hindenburg நிறுவனத்தின் அதானி ரிப்போர்ட் Link : https://hindenburgresearch.com/adani/

 

Saturday, January 21, 2023

துணிவு திரைப்படமும், Yes bank AT1 Bond, LIC மற்றும் அதானி ஷேர்களும்....

“துணிவு திரைப்படத்தில் வருவது போல் Mutual Fund Scam'க்கு வாய்ப்பு உள்ளதா?” என்று ஒரு விவாதம் ஓடிக்கொண்டு இருக்கிறபோதுதான், நேற்று உயர்நீதிமன்றம் Yes Bank AT1 Bond Write off செல்லாது என்று தீர்ப்பு அளித்து உள்ளது. இதன் மதிப்பு கிட்டதட்ட 8000 கோடி ரூபாய்.

போதுவாக எல்லா Financial Scam'களும் எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பது இல்லை, "இதற்கு முன்னாடி இது மாதிரி நிறைய தடவை நடந்து உள்ளது, ஆனால் இதுதான் First Time" என்ற வாக்கியம் Financial Scam'களுக்கு சுலபமாக பொருந்தும்.

முன்று வருடங்களுக்கு முன்னால், யெஸ் பேங்க் திவாலாகிய நிலைமையில் இருந்தது. உடனே மத்திய அரசும், ஆர்பிஐ'யும் யெஸ் பேங்கை காப்பாற்ற சில மூக்கிய முடிவுகளை எடுத்தனர். அதில் ஒன்றுதான் இந்த யெஸ் பேங்க் AT1 Bond write-off, அதாவது இந்த பாண்ட் வாங்கியவர்கள் யாருக்கும் பணம் தரதேவையில்லை. AT1 Bond'யை பொது மக்களும் வாங்கலாம், ஆனால் பெரிய கம்பேனிகள், Pension Scheme மற்றும் mutual fund நிறுவனத்தினர் தான் அதிகம் வாங்குவார்கள். இந்த write-off'யில் அனில் அம்பானியின் Reliance Mutual Fund'க்கு (புதிய பெயர் Nippon Mutual Fund) மட்டும் 2500 கோடி ரூபாய் வரை நஷ்டம். Mutual Fund'க்கு நஷ்டம் என்றால் அது அவர்களின் நஷ்டம் இல்லை, அந்த Mutual Fund வாங்கிய பொதுமக்களுக்கு நஷ்டம். இந்த write-off காரணமாக Debt Mutual Fund Scheme'கள் பல அந்த வருடம் Negative Returns தந்தன.

இந்த யெஸ் பேங்கில் மட்டும் "இதுதான் First Time" என்ற வகை Financial Scam'கள் இதுவரை பல நடந்து உள்ளன.அதில் இன்னொன்று, பத்து ரூபாய்க்கு யெஸ் பேங்க் ஷேரினை SBI மற்றும் ஏழு தனியார் வங்கிகளுக்கு ஒதுக்கினார்கள். அவர்கள் அதை 40 ரூபாய்க்கு மார்க்கெட்டில் விற்று லாபம் பார்த்தார்கள். இதைப்பற்றி பின்னர் ஒரு முறை பொருமையாக பார்ப்போம்.

கடைசியாக, இப்பொழுது நடந்து கொண்டு இருக்கும் ஒரு Financial Scam'யை பற்றியும் ஒரு வார்த்தை சொல்லிவிடுகிறேன்.

அதானி குழுமத்தின் அனைத்து பங்குகளும் கடந்த ஆறு வருடங்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. அதானி Enterprises ஷேரின் விலை மட்டும் 7700% உயர்ந்து உள்ளது, அதாவது 2016'யில் ஒரு லட்சம் ரூபாய் போட்டு இருந்தால், இப்பொழுது 78 லட்சம் ரூபாய். கடந்து இரண்டு வருடங்களாக LIC நிறுவனம் அதானி குழுமம் ஷேர்களை தொடர்ந்து வாங்கி வருகிறது, இப்பொழுது அதானி குழுமத்தின் 5 சதவீத அதிக பங்குகள் LIC'யிடம் தான் உள்ளது. எதற்காக எற்கனவே விலை அதிகம் உள்ள அதானி ஷேர்களை LIC தொடர்ந்து வாங்கவேண்டும். யார் சொல்லி வாங்குகிறார்கள் ?. இதற்கிடையில் அடுத்த வாரம் அதானி நிறுவனம் FPO மூலம் இன்னும் அதிக ஷேர்களை சந்தைக்கு கொண்டு வருகிறார்கள். அதையும் இந்த LIC'தான் வாங்குவார்கள். எல்லாம் நன்றாக நடக்கும் வரை எந்த Financial Scam'மும் வெளியில் தெரியாது. எங்காவது பிரச்சனையென்றால் தான் இந்த மீடியாக்கள் பக்கம் பக்கமாக எழுதுவார்கள்.

சரி நேரமாகி விட்டது, நானும் எனது மகனும் அடுத்து தேவி திரையரங்கில் “வாரிசு” மேட்னி ஷோக்கு செல்ல வேண்டும். நன்றி வணக்கம்.

Sunday, August 28, 2022

.

முத்தம் என்பது ஒரு பெயர் சொல்.
முத்தம் என்பது நாம் ஒருவர் மீது
செலுத்தும் வன்முறை.

முத்தம் என்பது ஒருவர் மீது நமது இருப்பை நினைநாட்ட நாம் செலுத்தும்
ஒரு ஏகாபத்திய செயல், அல்லது
நான் உனக்காக இருக்கிறேன் என்று நம்ப வைக்கும் ஒரு நாடகம்.

முத்தம் என்பது எப்பொழுதோ நடக்க போகும் ஒரு கொலைக்கான ஆரம்பம்.
முத்தம் என்பது அடுத்த நொடி நடக்கயிருந்த ஒரு தற்கொலைக்கான முடிவு.

கவிதா ஒருமுறை என்னிடம் சொன்னது போல் "முத்தத்தை வேறும் முத்தமாக மட்டும் பார்ப்பவர்களின் வாழ்க்கை அந்தளவு Complicated'ஆக இல்லை" தான்.

Thursday, May 12, 2022

.

வாழ்க்கையில் கவலையே இல்லாதவன் ஒரு காதல் கவிதை எழுதுகிறான்.

வாழ்க்கையில் கவலையே இல்லாதவன் அந்த காதல் கவிதையை படித்து, ஒரு காதலியை தேடுகிறான். ஒரு கட்டத்தில் ஏமாற்றத்தால் கதறி அழுகிறான்.

பல நாட்களுக்கு பின், முன்னவனும் பின்னவனும் ஒரு மதுபான வீடுதியில் சந்திக்க நேர்ந்தது.  நம்மை போலவே அவர்களுக்கும் யார் முன்னவன், யார் பின்னவன் என்ற குழப்பம் ஏற்பட, ஒரு நிம்மதியுடன் இருவருமாக, ரயிலே வராத தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து உறங்கினர்.

Tuesday, February 8, 2022

.

திருமணமான ஒருவன் தனது 35வது வயதில் முதல் முறையாக காதல் கவிதை எழுதிய போது, இந்த சமூகம் அவன் மீது முதல் சந்தேக பார்வையை வைத்தது.

முதலில் அவனுக்கு ஒரு காதலி இருப்பதாக சொல்லப்பட்டது. பின்னர் அவளுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாக கோர்க்கப்பட்டது. அவன் தனது பத்தாவது காதல் கவிதை எழுதிய போது, அவள் அவனுடைய பழைய கல்லூரி காதலி என்றும், அவள் கணவன் இரண்டு வருடங்களுக்கு முன்னர் விபத்தில் இறந்து விட்டதாகவும் ஒரு உபக்கதை சேர்க்கப்பட்டது.

யாரோ ஒருவன் எழுதும் கவிதையால் யாரோ ஒருத்தியின் தனிப்பட்ட வாழ்க்கை விவாதத்துக்கு உட்படுவதை எண்ணி, இந்த சமூகத்தை சபித்துக்கொண்டே டாஸ்மாக் பாரில் அன்றைய காதல் கவிதையை எழுதி முடித்தான். பின்னர், "வீட்டுக்கு வரும் போது அண்ணாச்சி கடையில் ஒரு பாக்கெட் தோசை மாவு வாங்கி வர வேண்டும்" என்று மனைவி சொன்னதை மீண்டும் ஒருமுறை நினைவில் நிறுத்திக்கொண்டான்.

Sunday, September 29, 2013

மீண்டும் சினிமாவைப் பற்றி ஒரு பதிவு

இரண்டு நாட்களுக்கு முன்னால் நண்பனிடம் டெலிபோனில் பேச நேர்ந்தது. இயக்குநர் ராமின் தீவிர பக்தன் அவன். கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ஆனந்த விகடன் "தங்க மீன்கள்" திரைப்படத்திற்கு மார்க் குறைவாக போட்ட போது, இரவு இரண்டு மணிக்கு போன் செயது ஒரு மணி நேரம் அழுது தீர்த்தவன். நல்லவேளையாக ஒரு மணிநேரத்தில் போன் லைன் தானாகவே கட்டாகி விட்டது. போனில் பேட்டரி தீர்ந்துவிட்டதா அல்லது போதை தீர்ந்துவிட்டதா என்று தெரியவில்லை. இயேசுவின் பெயருக்கு நன்றிகள் சொல்லிவிட்டு நானும் தூங்கிவிட்டேன். அடுத்த நாள் காலையில் எழுந்தவுடனேயே மனைவியிடம் வந்த முதல் கேள்வி " நைட் இரண்டு மணிக்கு போனில் பேசுகிறளவுக்கு, அப்படி என்ன முக்கிய விசயம்??"

மீண்டும் அதே  நண்பனிடமிருந்து போன் வந்தவுடனேயே, ஒரு விசயத்தை மட்டும் மனதில் உறுதியாக நிலை நிறுத்திக்கொண்டேன், "இந்த முறை சினிமாவைப் பற்றி மட்டும் ஒன்றுமே பேசிவிட கூடாது".

ஆனால், இந்த பாழாய் போன நாக்கு எங்கே நாம் சொன்ன பேச்சை கேட்கிறது. வழக்கம் போல் சனியன், நாக்கில் வந்து ஸ்டூல் போட்டு உட்கார்ந்துக்கொண்டு என்னைப்பார்த்து கேலியாக சிரித்தது. என்னையும் அறியாமல் என் நாக்கிலிருந்து ஒருகேள்வி எழுந்தது,

"மச்சி, மூடர்கூடம் சூப்பரா இருக்காமே. பார்த்தியா?? நம்ப ஊருல இரண்டே நாளில் தூக்கிவிட்டான். என்னால் பார்க்க முடியாம போச்சு" என்றேன்.




இந்த கேள்விக்காக காத்திருந்தவன் போல், கடகடவென்று பேச தொடங்கிவிட்டான்.

"மூடர்கூடம் ஒரு ஆங்கில திரைப்படத்தின் காப்பி. அதற்கு ஆனந்த விகடனின் 50 மார்க் போட்டு உள்ளார்கள். ஆனால் தங்கமீன்கள் திரைப்படத்திற்கு 44 மார்க் தான். காப்பியடித்த திரைப்படத்திற்கு அதிக மார்க், ஆனால் ஒரிஜினலாக எடுத்தால் மரியாதை இல்ல"

இப்படி அரை மணிநேரம் புழம்பினான். அவனை ஒருவழியாக சமாதானம் செய்து போனை கட் செய்தேன்.

உண்மையை சொல்லவேண்டும் என்றால், இப்படி இயக்குனர் ராமின் மீது பைத்தியமாக இருக்கும் நண்பர்கள் பலரை எனக்கு தெரியும் (என்னையும் சேர்த்து). எங்கள் நண்பர் வட்டத்தில் இயக்குனர் ராமை எப்பொழுதுமே "எங்கள் இயக்குநர்" என்றுதான் அழைப்போம்.  எங்கள் அனைவருக்குமே "கற்றது தமிழ்" திரைப்படம் மீதும் இயக்குநர் ராமின் மீதும், ஏன்? அப்படி ஒரு பைத்தியம் என்று யோசித்து பார்த்த போது, எனக்கு தோன்றியது

"கற்றது தமிழ்" திரைப்படம் வந்தசமயம், நாங்கள் கல்லூரி முடித்து வேலைக்காக தீவிரமாக அழைந்துக்கொண்டு இருந்தோம். தொடர்ந்து எல்லா கம்பெனிகளில் இருந்தும் நிராகரிக்கப்பட்டு கொண்டு இருந்தோம். கல்லூரி காதல்கள் ஒவ்வொன்றாக 'குட் பை' சொல்லி பிரிந்துக்கொண்டு இருந்தது. இன்னும் எத்தனை நாட்களுக்கு அப்பாவிடமிருந்து பணம் கேட்பது என்று பயம். "கற்றது தமிழ்" திரைப்படத்தின் பிரபாகரன் கதாபாத்திரத்தை எங்களின் ஒருவனாக பார்த்தோம். அவன் தோல்வியை பார்த்து நாங்களும் அழுந்தோம். அவனைப் போலவே மரணம் ஒன்றுதான் சரியானது என்று நாங்களும் நம்ப தொடங்கினோம். (என் நண்பன் ஒருவன் பூட்டிய அறைக்குள் மர்மமான முறையில் தற்கொலை செய்துக்கொண்டதும் இதே காலத்தில்தான் நடந்தது).

படித்து பட்டம் முடித்துவிட்டு வேலைக்காக சென்னை வீதிகளில் அழைந்துக்கொண்டு இருக்கும் இன்றைய இஞைர்கள் கூட "கற்றது தமிழ்" திரைப்படத்தைப் பார்த்தால், பிரபாகரனை தங்களின் ஒருவனாக உணர்வார்கள். அதுவே எங்கள் இயக்குநரின் வெற்றி.

"தங்க மீன்கள்" திரைப்படமும் அப்படிப்பட்ட திரைப்படம் தான். குழ்ந்தைகளை பெற்ற எல்லா அப்பாக்களும் தங்களையும் எதாவது ஒரு சந்தர்பத்தில் கண்டிப்பாக கல்யாணியாக உணர்வார்கள். "தங்க மீன்கள்" திரைப்படத்தைப் பற்றி பலர் தெளிவாக எழுதிவிட்டதால் இந்த பதிவை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

குறிப்பு:
********
"ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" திரைப்படத்தைப் பற்றி எழுதுவதற்காகதான் இந்த பதிவினை எழுத தொடங்கினேன். ஆனால் எழுதி ரொம்ப நாட்களாகி விட்டதால், சொல்ல வந்த விசயத்தையே மறந்து எங்கோ சென்று விட்டேன்.

"ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம், இன்னும் மூடர்கூடம் திரைப்படம் பார்க்கவில்லை, ஆனால் எனக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

Thursday, July 11, 2013

கேள்வி-பதில்

கேள்வி:

"Gitanjali Gems ஷேரின் விலை தொடர்ந்து 20 நாட்களாக குறைந்துக்கொண்டே வருகிறதே, என்ன காரணம்?? இப்பொழுது இந்த ஷேரினை வாங்கினால், ஒரே மாதத்தில் நல்ல லாபம் பார்க்கலாம் என்று நண்பன் சொல்கிறான், நம்பி வாங்கலாமா??" -  கதிரேசன், விருதுநகர்

பதில்:

அன்பும், ஷேர்கள் வாங்க பணமும் உள்ள கதிரேசன் அவர்களுக்கு வணக்கம்.

மின்னஞ்சலில் நீங்கள் அனுப்பிய கேள்வியை பார்த்தவுடனேயே எனக்கு ஒரு அதிர்ச்சி, நீங்கள் எதற்காக இந்த கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள் என்று. இதற்கு இரண்டே காரணங்கள்தான் இருக்கக்கூடும. அவை,

1) ஒருவேளை நேற்று நான் எழுதிய MMTC'யை பற்றிய பதிவின் தலைப்பை மட்டும் நீங்கள் படித்து இருக்கலாம். ஆகவே என்னை நீங்கள் ஒரு பங்குசந்தை நிபுணர் என்று கருதி இந்த கேள்வியை கேட்டு இருக்கலாம். இதுதான் காரணமாக இருப்பின் தயவு செய்து அந்த பதிவினை முழுமையாக படிக்கவும். அதன் பின் நீங்களே இந்த மெயிலை Recall செய்துவிடுவீர்கள்.

அல்லது

2) இரண்டாவது காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை மீண்டும் நீங்கள் மெயில் செய்தால் அந்த காரணத்தை சொல்லிவிடவும். நானும் என்னை திருத்திக்கொள்ள வசதியாக இருக்கும்.

இனி உங்கள் கேள்விக்கான பதில்.

முதலில் Gitanjali Gems ஷேரின் விலை குறைய காரணம். வேறு என்ன அகலகால் தான். 2000 ஆண்டுகளுக்கு முன்னால் நம் வள்ளுவர் ஒரு குறளில் சொன்னாரே (நானும் படித்ததில்லை ஆனால் கண்டிப்பாக 1330 குறள்களில் எதாவது ஒன்றில் சொல்லி இருப்பார்) , அதன்படி நடந்து இருந்தால் இப்பொழுது பிரச்சனையே வந்திருக்காது. Gitanjali Gems நிறுவனம் கடனில் தந்தளித்துக்கொண்டு இருக்கிறது. யாரிடமோ வாங்கிய ஒரு பெரிய கடனை இன்னும் ஒரு மாதத்தில் அது கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்த கடன் 500 கோடிக்கு அருகில் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த கடன்களை கொடுப்பதற்காக Gitanjali Gems நிறுவனம் 1 வருட, 2 வருட, 3 வருட Deposit'களை வாங்க தொடங்கிஉள்ளது. அந்த Deposit'களுக்கு வட்டி விகிதங்கள் முறையே  11.5%, 12%, 12.5%. இது கூட்டுவட்டி முறை என்பதால், நீங்கள் 3 வருடம் Deposit செய்தால் உங்களுக்கு கிடைக்கும் வட்டி விகிதம் 14.89% என்று இருக்கும். இதை எதற்காக இப்பொழுது சொல்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம், எனக்கு தெரிந்தவைகளை யாரிடம் சொல்வது?? என் மனைவியிடமா சொல்ல முடியும்??



சரி, Gitanjali Gems ஷேரினை இப்பொழுது வாங்கலாமா என்று கேட்கிறீர்கள், நானும் ஒரே வார்த்தையில் வேண்டாம் என்று சொல்லிவிட முடியும். ஆனால் அப்படி சொன்னால் நன்றாகவா இருக்கும்? ஆகவே "வேண்டாம்" என்பதை இப்பொழுது நான் சுற்றிவளைத்து சொல்ல போகிறேன்.

கதிரேசன் அவர்களே, நீங்கள் விருதுநகரிலிருந்து இந்த கேள்வியை கேட்கிறீர்கள். ஆகவே நீங்கள் கண்டிப்பாக எதாவது ஒன்றை மொத்த விற்பனையாளராக இருக்க வேண்டும். ஏனென்றால் விருதுநகரில் அவர்கள்தான் அதிகம். நீங்கள் சொல்லும் அந்த நண்பர் உங்கள் தொழில் Partner'ராக இருக்ககூடும். அல்லது உங்கள் கல்லூரி நண்பர், பள்ளி நண்பர், பக்கத்து வீட்டுகாரர், எதிர்வீட்டுகாரர் என்று இப்படி யாராவது ஒருவராக இருக்கலாம். எதிர்வீட்டுகாராக இருக்க வாய்ப்பு குறைவுதான். எனக்கும் ஒரு எதிர்வீட்டுகாரர் இருக்கிறார். வருடத்துக்கு இரண்டு கார்கள் மாற்றுவார். என்னை தவிர எல்லோரிடமும் சிரித்துதான் பேசுவார். என் மனைவியிடம் இதைப்பற்றி ஒருமுறை சொன்ன போது, அவள் சொன்னது "எல்லா எதிர்வீட்டுகாரர்களும் இப்படிதான்". உண்மைதானா??

முன்னரே சொன்னதுபோல், Gitanjali Gems ஷேரினை வாங்க வேண்டாம். அதன் விலை இன்னும் குறையும் என்று எல்லா டிவி, பேப்பரிலும் சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் பேச்சை எப்பொழுதும் நம்ப கூடாது. இரண்டு மாதங்களுக்கு முன்னால் Gitanjali Gems ஷேரின் டார்கெட் 800 ரூபாய் என்று சொன்னார்கள்.


கடைசியாக என்னுடைய பெரிய வேண்டுகோள், இந்த ஷேர் மார்க்கெட் பக்கம் போக வேண்டாம். அப்படி உங்களிடம் பணம் நிறையாக இருப்பீன் என்னிடம் கொஞ்சம் தரவும். வருடத்துக்கு 18 சதவீதம் வட்டி தருகிறேன். இன்றைக்குதான் KVB வங்கியில் 20 லட்சத்துக்கு பிஸினஸ் லோன் அப்ளை செய்து இருக்கிறேன். ஒருவேளை லோன் கிடைத்தல், லோன் கிடைத்த அடுத்த நாளே உங்களின் அசலை கொடுத்து விடுவேன். அப்படி லோன் கிடைக்கவில்லை என்றால் இருக்கவே இருக்கு  Gitanjali Gems நிறுவனத்தின் 1 வருட, 2 வருட, 3 வருட Deposit ஸ்கீம்கள்.

நன்றி,
வாழ்க வளமுடன்,
அசோக்.

(பின்குறிப்பு:
பேயோனின் கடிதம் பதிவுகளை படித்தபின் எழுதியது. பேயோனின் "கடிதம்" பதிவுகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும் )

Wednesday, July 10, 2013

MMTC'யும் 16,000 கோடி ரூபாயும்.

முதலில் ஒரு விசயம், இந்தியாவின் Dis-Investment Policy சரியா, தப்பா என்பதைப் பற்றியது அல்ல இந்த குறிப்பு. எண்களைப் பற்றிய ஒரு சின்ன விளையாட்டு அவ்வளவே.

சென்ற ஆண்டு செபி ஆணையிட்டப்படி பங்குசந்தையில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் குறைந்தது 25% சதவீத பங்கினையாவது பொதுசந்தையில் ( பொதுசந்தை என்பது பொதுமக்கள், மியூசுவல் பண்ட், நிதி நிறுவனங்கள் என்று எதாக வேண்டுமானாலும் இருக்கலாம்) விற்று இருக்க வேண்டும். அதாவது அந்த நிறுவனத்தின் ஓனர்களுக்கு 75% சதவீத பங்குகள் மட்டுமே இருக்க வேண்டும். இந்த ஆணை அரசு நிறுவனங்களுக்கும் பொருந்தும். ஆனால் அரசு நிறுவனங்கள் என்றால் இந்த சதவீத எண்கள் 10%, 90%. இப்பொழுது நெய்வேலியில் நடந்துக்கொண்டு இருக்கும் போராட்டத்துக்கும் இது தான் காரணம்.

இந்த ஆணையை செயல் முறைக்கு கொண்டுவர ஏதுவாக ஏற்கனவே லிஸ்ட் செய்யப்பட்டு உள்ள நிறுவனங்கள் OFS மூலம் புதிய ஷேர்களை விற்கலாம் என்று செபி சொன்னது.

OFS என்றால் என்ன?? ஏதற்காக 75% , 25 %?? ஏதற்காக இப்படி ஒரு ஆணை? இதனால் யாருக்கு பயன்?? என்ற கேள்விகளுக்கு பதில் தேடிக்கொண்டு போனால், பின்னர் இந்த பதிவு கன்னி தீவு போல் நீண்டுவிடும். ஆகவே மேட்டருக்கு வருவோம்.

பங்குசந்தையில் உள்ள அனைவருக்குமே MMTC'யைப் பற்றி தெரிந்து இருக்கும். MMTC ஒரு அரசு நிறுவனம். ஒரு காலத்தில் இதன் ஷேர் 18,000 ரூபாய் வரை விற்கப்பட்டது. பின்னர் Spliting மூலம் 1000 ரூபாய்க்கு வந்தது. இது பழைய கதை, இப்பொழுது

MMTC'யை Dis-Investment Policy காரணமாக OFS மூலம் அதன் ஷேர்களை கடந்த மாதம் விற்றார்கள். OFS'யில் ஒரு ஷேரின் விலை 60 ரூபாய் என்று நிர்ணயம் செய்தார்கள்.

இந்த விற்பனை மூலம் இந்திய அரசாங்கத்துக்கு கிடைத்த பணம் 560 கோடி ரூபாய். இந்த விற்பனை நடந்த போது MMTC'யின் ஒரு ஷேர் 200 ரூபாய்க்கு பங்குசந்தையில் விற்றுக்கொண்டு இருந்தது.





200 ரூபாய்க்கு விற்ற ஷேரினை அரசாங்கம் 60 ரூபாய்க்கு விற்றதால், MMTC நிறுவன பங்கின் விலை கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து குறைய தொடங்கியது. இன்றைக்கு NSE'யில் அதன் விலை 67.80.

அதாவது MMTC ஷேரினை விற்பனை செய்ததுமூலம் அரசாங்கத்துக்கு லாபம் 560 கோடி ரூபாய். ஆனால் MMTC கம்பெனியில் மதிப்பு 16,000 கோடி கம்மியாகி உள்ளது. இதுவே MMTC ஒரு தனியார் நிறுவனம் என்றால் இப்படி நடந்து இருக்குமா?? MMTC நிறுவனத்தை Dis-Investment செய்யாமல், de-list செய்திருந்தால் இந்த சரிவை மிகவும் சுலபமாக தடுத்து இருக்கலாம்.

இல்லை, Dis-Investment மூலம் liquidity அதிகமாகும். MMTC நிறுவனத்தின் உண்மையான மதிப்பு இதுதான் என்கிறார்கள். சரி, அப்படியே இருந்துவிட்டு போகட்டுமே. இப்பொழுது MMTC'யின் மதிப்பை அதிகமாக காட்டுவதால் யாருக்கு என்ன நஷ்டம்.

எது எப்படியோ, நான் MMTC ஷேர் எதையும் வாங்கவில்லை. MMTC ஷேர் வாங்காமயே எனது Portfolio 70% சதவீத நஷ்டத்தில்தான் போய்க்கொண்டு இருக்கிறது.


Sunday, June 23, 2013

மோடி Vs மோதி

நம் வருங்கால வல்லரசு இந்தியாவின் வருங்கால பிரதமர் என்று எண்ணப்படும், மோடி (என்கின்ற) மோதி'யைப் பற்றி ரொம்ப நாட்களாகவே ஒரு பதிவு எழுத ஆசை. சரி, அந்த ஆசையை நிறைவேற்றி விடுவோம் என்று உட்கார்ந்தால், மனதில் ஒரு சின்ன சந்தேகம். மோதி'யா அல்லது மோடி'யா என்று.

சற்று முன் பார்த்த "புதிய தலைமுறை" தொலைக்காட்சியில் மோதி என்றுதான் சொன்னார்கள். ஆனால், உள்ளதை உள்ளப்படி சொல்லும் ஒரே நாளிதழ் என்று என் அப்பா நம்பும் "தினமலர்" செய்திதாளில் மோடி என்றுதான் போடுகிறார்கள்.

இப்பொழுது நான் நம் வருங்கால பிரதமரை எப்படி அழைப்பது " மோடி"யா அல்லது "மோதி"யா??. ஒருவேளை நான் அவர் பெயரை தப்பாக எழுத போய், நாம் அனைவரும் நினைப்பது போல் அவர் பிரதமராகி, இந்த பெயர் பிரச்சனை அவருக்கு தெரிய வந்தால்!! என் நிலைமை என்னவாவது??.

அவ்வளவு பெரிய கலவரத்தையே, நம் இந்திய மக்கள் நினைவிலிருந்து அழிக்க செய்தவர் ஆயிற்றே??. இப்பொழுது கூட நான் அந்த கலவரத்தின் பெயரையும், ஆண்டையும் நினைவில் கொண்டு வர முயற்சிக்கிறேன், ஆனால் முடியவில்லை. அப்படிப்பட்டவரின் பெயரை நான் தவறாக எழுதினால் நன்றாக இருக்குமா??



ஆகவே, மோடி என்கின்ற மோதியை பற்றியோ அல்லது மோதி என்கின்ற மோடியைப் பற்றியோ இப்பொழுதைக்கு எந்த ஒரு பதிவும் எழுதும் எண்ணம் இல்லை.

வாழ்க பாரதம்.