என் முகத்தை கண்ணாடியில் பார்க்கும்போது, எனக்கே வெறுப்பாக இருந்தது. அறையில் இப்பொழுது யாருமே இல்லை, இந்த தனிமை என்னை மிகவும் பாதித்தது. செல்வா,அருண்,சசி,நரேன் எல்லாரும் எங்கே போனார்கள்??. ஒரு புதிய திரைப்படத்திற்க்கு போக போவதாக நேற்று செல்வா சொன்னது நினைவில் வந்தது. பேசாமல் நானும் சென்று இருக்கலாம். "தீடிர் என்று தற்கொலை செய்துக்கொள்ளலாமா??" என்ற எண்ணம் வந்தது. செல்போன் ஒலித்துக்கொண்டே இருக்கிறது, நான் எடுக்கவில்லை. கண்டிப்பாக அது அவள்தான். இப்பொழுது எனக்குள் என்ன நடந்துக்கொண்டுயிருக்கிறது என்று எனக்கே தெரியவில்லை.
இன்னும் சிறிது நேரம் இங்கு இருந்தால், கண்டிப்பாக தற்கொலை செய்துக்கொள்வேன் என்று தோன்றியது. அறையை பூட்டிவிட்டு வெளியில் வந்தேன். இந்த இரவு நேரத்தில் எங்கே போவது. அருகில் இருக்கும் பூங்கா நினைவில் வந்தது. நானும் நரேனும் ஒரு ஆறு மாதங்கள் முன்னால் இதே பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தது ஞாபகம் வருகிறது. வசந்தமான நாட்கள் அவை.
பூங்கா பூட்டியிருந்தது. ஒரு வாட்ச்மேன் மட்டும் வெளியில் தூங்கிக்கொண்டு இருந்தான். மீண்டும் அறைக்கே திரும்ப எண்ணி, பின் ஏதோ ஒரு தைரியத்தில் பூங்கா சுவர் ஏறி உள்ளே குதித்தேன். நானும் நரேனும் அமர்ந்து இருந்த அதே பெஞ்சில் அமர்ந்தேன்.
எண்ணங்கள் எங்கெங்கோ அலைந்துக்கொண்டு இருந்தது. "சாய்ந்துக்கொள்ள தோள்கள் இல்லாத மனிதன் பைத்தியமாகிறான்" என்ன உண்மையான வரிகள் இவை. நான் சாய்ந்துக்கொள்ள தோள்கள் பல உள்ளன், ஆனால் எனக்குத்தான் சாய்ந்துக்கொள்ள தெரியவில்லை.
எனக்கு எதிரே ஒரு செடி ஆடிக்கொண்டு இருந்தது. என்ன செடி என்று பெயர் சரியாக தெரியவில்லை. அந்த செடி என்னிடம் பேசுவது போல இருந்தது. இல்லை இல்லை, அந்த செடி என்னிடம் தான் பேசுகிறது. அந்த பச்சை இழைகள் என்னை நோக்கி திரும்புகின்றன். "நான் உன்னிடம் பேசவில்லை, காற்றுடன் பேசிக்கொண்டு இருக்கிறேன்" என்றது அந்த செடி.
"காற்றுக்கு பேச தெரியுமா??" என்றேன்.
"ஏன், செடிகள் உன்னிடம் பேசும் பொழுது, காற்று எங்களிடம் பேசக்கூடாதா??" என்றது அந்த செடி.
"உன் பெயர் என்ன??"
"உன்னைபோல் மனிதர்கள்தான் தங்களுக்குள் பெயர்வைத்து தங்களை பிரித்துக்கொள்வார்கள். உங்கள் பிரிவினையே இந்த பெயர்களில் இருந்துதான் அரம்பிக்கிறது." என்றது.
சிறிது நேரம் செடி அமைதியாக இருந்தது.
"என்ன, மாநாட்டில் பேசுவது போல் ஆரம்பித்த உன் பேச்சை உடனே நிறுத்துவிட்டாய்" என்றேன்.
"நான் உன் அமைதியை கெடுப்பதாக இந்த காற்று சொல்கிறது"
"அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால் காற்றின் பேச்சை என்னால் கேட்க முடியவில்லையே"
"அதற்க்கு நீ செடியாக மாற வேண்டும்"
உடல் எங்கும் ஒரு குளிர்ச்சி பரவியது. உடல் எங்கும் பச்சைவண்ணாம் அப்பிக்கொண்டது. நரம்புகள் வேர்களை போல வளர்ந்து மண்ணை பற்றிக்கொண்டது. நான் இப்பொழுது செடியாக மாறிவிட்டேன்.
"நான் செடியாக மாறிவிட்டேன்" என்று உரக்க கட்டினேன்.
"என் கத்துகிறாய், அருகில் காவல்காரன் தூங்கிக்கொண்டுயிருக்கிறான்" என்று காற்று என் காது அருகில் சொல்லிசென்றது. அந்த குரலில் அப்படி ஒரு இனிமை.
"இப்பொழுது நீ காற்றின் குரலை கேட்க முடிகிறதா??" என்றது அந்த செடி.
"ஆம், மிகவும் இனிமையான குரல். அந்த காற்றை கூப்பிடு, மீண்டும் பேசலாம்"
"அந்த காற்று சென்றுவிட்டது. நம்மால் மீண்டும் அதோடு பேச முடியாது."
"அது பறந்துவிட்டது, என்னிடம் பேசுங்கள்" என்றது இப்பொழுது வந்த காற்று. ஆனால் அந்த பழைய காற்றின் இனிமையான குரல் இதனிடம் இல்லை.
"அந்த காற்றின் குரல் இனிமையாக இருந்தது" என்றேன்.
"ஆம், இனிமையாகத்தான் இருந்தது. நானும் இப்படி ஒரு குரலை இதுவரை கேட்டதுயில்லை. நீ வரும் வரை அதனிடம்தான் பேசிக்கொண்டுயிருந்தேன். உன் முகம் வாடிப்போய் இருப்பதாக அது என்னிடம் கூறியது" என்று செடி என்னை பார்ர்த்து பேசியது.
"அப்படி என்றால், அந்த காற்றை கூப்பிடு நாம் பேசுவோம்" என்றேன்.
"காற்று எப்பொழுதும் ஒரே இடத்தில் நிற்காது. அது பறந்துக்கொண்டே இருக்கும். அதுதான் அதன் சுபாவம். நம்முடைய நலனுக்காக அதை தடுத்து நிறுத்த நினைப்பது தவறு".
திடுக்கிட்டு எழுந்தேன். காலை வெயில் ஜன்னல் வழியாக அறைக்குள் நுழைந்துக்கொண்டு இருந்தது. அருகில் நரேன், செல்வா தூங்கிக்கொண்டு இருந்தார்கள்.
அருகில் இருந்த செல்போனை எடுத்தேன். அவளிடம் இருந்து "GM" என்று ஒரு SMS வந்துயிருந்தது.
1 comment:
காற்றுதான் காதலியோ :)
Post a Comment