Tuesday, December 27, 2011

அசோக்கும் புத்தகக் கண்காட்சியும்

அசோக்கின் அறையில் படித்து முடிக்காத புத்தகங்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது. "ஒரு புத்தகத்தை முழுவதுமாக படித்த பின்னர்தான் அடுத்த புத்தகத்தை வாங்குவது" என்ற நல்ல கொள்கைகள் எதுவும் இல்லாதவன் அசோக். பேரின்பா கூட பல முறை கேட்டு இருக்கிறான் "ஏன்டா, வீட்டுல எதாச்சும் நூலகம் வைக்க போறீயா??".

ஞாபகம் மறதி அதிகம் உள்ள அசோக்குக்கு தான் எந்தந்த புத்தகங்களை படித்து இருக்கிறோம், எந்தந்த புத்தகங்களைப் படிக்கவில்லை என்பது கூட மறந்துவிடும். படித்த புத்தகத்தையே மீண்டும் படித்து, எதாவது ஒரு பக்கத்தின் நடுவில் இந்த கதையை எங்கேயோ படித்திருக்கிறோமே?? என்று தலையை பியித்துக்கொள்ளும் சம்பவங்களும் பல முறை நடந்து உள்ளது.

போன வருடம் நடந்த (அல்லது இந்த வருட ஆரம்பத்தில் நடந்த) புத்தகக் கண்காட்சியில், குறைந்தது இருபது புத்தகங்களாவது அசோக் வாங்கியிருப்பான். அந்த இருபதில் ஆறு புத்தகங்கள் நகுலன் எழுதியது, அதைப் பற்றி அவன் வலைப்பதிவில் தனியாக ஒரு பதிவே எழுதியிருக்கிறான். இப்பொழுது அடுத்த புத்தகக் கண்காட்சி வந்துவிட்டது. இந்த முறை என்னென்ன புத்தகங்கள் வாங்க வேண்டும் என்பதைப் பற்றி ஒரு பெரிய பட்டியலே வைத்துள்ளான்.

'எம்.ஜி.சுரேஷ், அ.மார்க்ஸ், பிரேம்-ரமேஷ், தமிழவன்' இவர்களின் புத்தகம் எது கிடைத்தாலும் அதை உடனே வாங்குவது என்ற முடிவோடு அசோக் இருக்கிறான்.

அசோக் புதிய புத்தகங்கள் வாங்குவதுப் பற்றி எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, ஆனால் போன புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களே இன்னும் படித்து முடிக்காத நிலையில் புதிய புத்தகங்கள் வாங்குவது அவசியம்தானா??

சென்ற கண்காட்சியில் வாங்கிய "புயலிலே ஒரு தோணி" புத்தகத்தை ஏன் இன்னும் படிக்காமல் வைத்துள்ளாய் என்று அசோக்கிடம் கேட்டால் "அந்த புத்தகத்தை எப்பொழுது படிக்க தொடங்கினாலும் தூக்கம்தான் வருகிறது" என்கிறான்.

தஸ்தாயெவ்ஸ்கியின் மூன்று ஆங்கில புத்தகம் வேறு ரொம்ப நாட்களாக பரணில் தூங்கிக்கொண்டு இருக்கிறது. பேயோனின் மொழிபெயர்ப்பில் தஸ்தாயெவ்ஸ்கியின் நூல் ஒன்று இந்த கண்காட்சிக்கு வருகிறது, அதையும் இவன் வாங்குவது உறுதி.

சரி, இந்த புத்தகக் கண்காட்சியில் அசோக் எத்தனை புத்தகம் வாங்குகிறான் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்,

குறிப்பு:

இந்த கட்டுரையில் அசோக் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது, கண்காட்சியை தவிர்த்து இந்த வருடம் மட்டும் தனியாக இருபது புத்தகங்களாவது வாங்கியிருப்பான். அதில் "யாமம்" நாவலை தவிர மற்ற புத்தகங்கள் அனைத்தையும் படித்துவிட்டான் என்பது ஒரு உலக மகா அதிசயச் செய்தி.  இந்த இருபது புத்தகங்களில் போன வாரம் வெளிவந்த சாருவின் எக்ஸைல் புத்தகமும் ஒன்று. எக்ஸைல் பற்றி அசோக்கிடம் கருத்து கேட்டதற்கு, அவன் கருத்து சொல்ல மறுத்துவிட்டான். அசோக்கிடம் கடன் வாங்கி எக்ஸைல் புத்தகத்தை நானும் படித்திருக்கிறேன் என்ற வகையில், நான் சாருவிடம் கேட்க விரும்பும் ஒரே கேள்வி "எதற்காக உங்கள் பழைய புத்தகத்தையே மீண்டும் வேறு பெயரில் வெளியீட்டு உள்ளீர்கள்??" என்பதே

2 comments:

Santhosh Kumar said...

இந்த அசோக்குக்கும் எனக்கு தெரிஞ்ச ஒரு பையனுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கு. யாருன்னு உங்களுக்கு தெரியுதா?

சரவண வடிவேல்.வே said...

தெரியாமலா...எல்லாம் நமக்கு தெரிஞ்ச பையன்தான்...

கஷ்டப்பட்டு கண்டுபிடித்து, என் கதைகளில் நடிக்க வைத்துள்ளேன்...