என் வாழ்நாளின் வசந்தகாலத்தில் வாழத்தொடங்கி இருக்கிறேன். இந்த வசந்தகாலத்தில் என் ஜன்னலோரத்தில் எனக்காக மட்டுமே, எப்பொழுதும் எனது மழைச்சாரல் பொழிந்துக்கொண்டே இருகிறது. அதன் சாரலில் பனித்துளிகள் உருவாகி என் முகத்தினை தடவி என் தூக்கத்தை கலைக்கின்றது. என் தூக்கத்தை கலைக்கும் இந்த பனித்துளியின் மீது எனக்கு எந்தவீதத்திலும் கோபம் ஏற்படுவதில்லை, மாறாக அதன் மீது ஒருவீத காதலே எற்படுகிறது. வசந்தகாலத்தில் உருவாகும் பனித்துளிகளின் முரணினை யோசித்துக்கொண்டே சாலைகளில் நடக்க தொடங்குகிறேன். நான் சாலையில் பார்த்த முதல் நபரே என்னைப் பார்த்து புன்னகைக்கிறார். அந்த புன்னகைக்கு பதிலாக என்னுள் நேற்று இரவிலிருந்தே ஒட்டிக்கொண்டு இருக்கும் சந்தோஷ கீற்றுக்களில் சிலவற்றை அவரிடம் தந்துவிட்டு மீண்டும் நடக்க தொடங்குகிறேன். ஒரு இளம் வெயிலும் என்னை பின் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது.
இந்த வசந்தகாலத்தில், எனக்கு உண்டான சந்தோஷத்தை சாலையில் போவோரிடம் எல்லாம் பகிர்ந்துக்கொள்கிறேன். அவர்களுக்கும் வசந்தகாலத்தின் மீது ஒருவீத காதல் வந்துவிடுகிறது. தேவையில்லாமல், ஒரு குழந்தையை தூக்கி கொஞ்சுகிறேன், ஒரு முதியவருக்கு சாலையினை கடக்க உதவுகிறேன், எப்பொழுதுதோ இறந்து போன் கணவனைப் பற்றி ஒரு மூதாட்டியிடம் விசாரிக்கிறேன், என்னைப் பார்த்து புன்னகைக்கும் என் அலுவலக பெண் ஒருத்திக்கு ரோஜாப்பூ ஒன்றினை பரிசாக தருகிறேன்.
இந்த வசந்தகாலத்தில் கவிதைகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. என் கவிதைகளில் என்னையறியாமல் வந்துவிடும் சாம்பல் நிற பூனைகளைப் பற்றி இப்பொழுதெல்லாம் அதிகம் கவலைப்படுவதில்லை. அந்த பூனைகளை அதன் போக்குக்கு விட்டுவிடுகிறேன். அவை, எனது கவிதைகளின் ஆரம்ப வரி முதல் இறுதி வரை ஆட்டம் போடுகின்றன. வசந்த காலத்தில் என்னுள் புகுந்துக்கொண்ட ஆனந்தத்தை பகிர்ந்துக்கொள்ள யாரும் இல்லாத போது, இந்த பூனைகளிடம் பேசத்தொடங்குகிறேன். எத்தனை யுகங்கள் ஆனாலும் இந்த கவிதைகளுக்குள் அழியாமல் இருக்க போகும் இந்த பூனைகள், அந்த கவிதையில் உள்ள வார்த்தைகளை உண்டே உயிர் வாழ்வதாக சொல்லுகின்றன. அதனிடம் சில நேரங்களில் நகுலன் வீட்டு பூனைகளைப் பற்றியும் விசாரிக்கிறேன். என்னுடைய வசந்தகால இன்பம் அவைகளுக்கும் தொற்றிக்கொள்கிறது, ஒரு பூனை எப்பொழுதோ படித்த பாரதியின் கவிதை ஒன்றை மிகவும் சத்தமாக வாசிக்கிறது.
பின்னர், எனக்காக மட்டுமே எழுதிக்கொண்டு இருக்கும் ஒரு எழுத்தாளனை சந்தித்தேன். அவனுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. அவனுடைய ஒரே வாசகன் நான்தான் என்று சொல்லி அவனின் வசந்தகாலத்தினை அழிக்க விரும்பாததால், தவறான முகவரிக்கு வந்துவிட்டதாக சொல்லி சென்றேன்.
இந்த வசந்தகாலத்தில், என் புனைவு உலகிற்கு எப்படி நுழைவது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த பெண்ணொருத்தியை, அரைப் பக்கமே எழுதிய ஒரு பத்திக் கதை அல்லது கட்டுரை மூலம் என் கதை உலகிற்கு அழைத்துவந்தேன். இந்த வசந்தகாலத்தில் ஒரு அபலை பெண்ணுக்கு வாழ்வு கொடுத்தது என் வசந்தகாலத்தை இன்னும் மகிழ்ச்சிப்படுத்தியது.
இரவினூடே வந்து சென்ற ஒரு ரயிலின் உதவியுடன், என் கனவுலகிற்கு பயணப்பட்டேன். அங்கு எனக்கு மிகவும் பிடித்த என் பள்ளிக்கால பெண்ணை சந்திக்க நேர்ந்தது. அவள், அவளின் கணவனையும், குழந்தையையும் அறிமுகம் செய்தாள். அவளின் கணவனுடன் தேநீர் அருந்தும் போது, அவனும் ஒரு ரயில் மூலமாகவே இந்த கனவுலகிற்கு வந்ததாகச் சொன்னான். நாங்கள் தேநீர் அருந்திக்கொண்டிருப்பது அவன் கனவினால். அல்லது என் கனவினால் என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போதே - இந்த வசந்தகாலத்தில் என் ஜன்னலோரத்தில் எனக்காக மட்டுமே பொழியும் மழைச்சாரலால் உருவான பனித்துளிகள் என் முகத்தினை தடவ, நான் தூக்கத்திலிருந்து எழுந்தேன்.