Saturday, November 26, 2011

ஒரு அறிமுகம்


வார்த்தைகளோடு அலைபவன்
3.ஒரு அறிமுகம்

சொற்களுக்கும் வார்த்தைகளுக்கும்
என்ன வித்தியாசம் என்றாய்.
சொற்களுக்கு அர்த்தம் உண்டு
வார்த்தைகளுக்கு இல்லை என்றேன்,
புரிந்தவளாய் தலையாட்டினாய்.

உன்னுடைய பயம் எனக்கு புரிகிறது. நீ பயப்படுகின்றளவு இன்னும் எதுவும் எனக்கு மோசமாக நடந்து விடவில்லை. ஒரு சிறிய வித்தியாசமான முயற்சி அவ்வளவு தான். உனக்கு புரிகிறதா?? கண்டிப்பாக உனக்கு புரியும். எனக்கு இதைச் சொல்லி கொடுத்தவளே நீ தானே. எத்தனை முறை என் கண்களை உன் புடவையால் கட்டிவிட்டு இந்த உலகத்தைப் பார்க்க கற்றுக்கொடுத்திருக்கிறாய்.

முதலில் எனக்கு காதலியாக அறிமுகமாகி, பின்னர் என் தோழியாக மாறி, வரும் காலத்தில் யாருக்கோ மனைவியாக மாறப் போகும் நீ தானே, என் எழுத்துக்கு காரணம். என்னுள் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறாய். பாரதியின் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் "யாதுமாகி நின்றாய்"

நம்முடைய முதல் சந்திப்பு ஏதோ  ஒரு திரையரங்கில், ஏதோ ஒரு கோயிலில், ஏதோ ஒரு கடற்கரையில்,  ஏதோ ஒரு பேருந்து நிறுத்ததில், ஏதோ ஒரு இணைய அரட்டையில் நடந்ததாக தானே நீ நம்பிக்கொண்டிருக்கிறாய். கண்டிப்பாக இல்லை.  நம்முடைய முதல் சந்திப்பு எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது அது ரமேஷ்-பிரேம் எழுதிய "சொல் என்றொரு சொல்" என்ற புத்தகத்தில் நடந்தது.

முதல் பக்கத்திலிருந்து எண்ணினாலும், கடைசி பக்கத்திலிருந்து எண்ணினாலும் பக்க எண்கள் ஒன்றாக இருக்கும் ஒரு பக்கத்தில்தான் நமது முதல் சந்திப்பு நடந்தது. அந்த புத்தகத்தை முதல் முதலாக படித்த நான், ஏதோ ஒரு பக்கத்தில் ஏதோ ஒரு கதாபாத்திரம் வழியாக புத்தகத்தில் காணாமல் போய் இருந்தேன். அப்பொழுது நீ தானே வந்து என்னைக் காப்பாற்றினாய். நீ மட்டும் இல்லை என்றால், அந்த இருள் நகரத்தில் ஒரு தெருவில் இன்னும் நான் அழைந்துக்கொண்டிருந்து இருப்பேன்.

நம்முடைய முதல் சந்திப்பைப் பற்றி நான் உன்னிடம் சொல்லும் போதெல்லாம் நீ என்னைப் பார்த்து சிரிக்கிறாய். நீ நம்புவதாக இல்லை. எனது கற்பனை திறனைப் பாராட்டுகிறாய்.

நம்முடைய இரண்டாம் சந்திப்பு நகுலன் எழுதிய ஒரு புத்தகத்தில் தான் நடந்து என்பதை நான் சொன்ன போது, நீ அதை ஒரு மிக புனைவு என்கிறாய். நகுலன் புத்தகத்தில் ஏதோ ஒரு சுசீலாவின் வழியாக காணாமல் போக இருந்த உன்னை, நான் தானே மீட்டுக்கொண்டு வந்தேன் என்பதைக் கூடவா மறந்து விட்டாய்??

எது எப்படியிருந்தாலும் இந்த "வார்த்தைகளோடு அழைபவன்" கதைகளை உனக்கே சமர்ப்பிக்கிறேன். நீ என்னுடனோ அல்லது உன் நினைவுகள் என்னுடனோ இருக்கும்வரை இந்த பைத்தியக்காரத்தனங்கள் தொடரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.  

No comments: