Sunday, July 25, 2010

புரிந்தும் புரியாமலும்

"ஸ ஏவ ஸர்வம் யத்பூதம் யச்ச பவ்யம் ஸனாதனம்
ஞாத்வா தம் ம்ருத்யு மத்யேதி நான்ய: பந்தா விமுக்தயே"

இதுவேதான் அவன், இப்போதும் முன்பும், வருங்காலத்திலும், நிரந்தரமானவன் - அவனைத்தெரிந்துகொள்பவன் மரணத்தை வெல்கிறான்! மோக்ஷத்துக்கு வழி இதைத் தவிர வேறெதுவுமில்லை.
1
இந்த புரளி, புரளி சொல்வாங்களே, அதை இன்றுதான் நேரில் பார்த்தேன். "இந்த யோகா வகுப்புல சேரலாம்னு இருக்கேன். அசைவம்'லாம் இப்ப சாப்பிடுறது இல்லை". இவ்வளவுதான் நான் காலையில் சொன்னது. மாலைக்குள் இதுவரை நான்கு பேர் போன் செய்துவிட்டார்கள். "என்னடா, சாமியார் ஆகப்போறியாமே!!!!!!!!!" என்று. நல்லவேலை யாரும் "என்ன, இமயமலை'ல இருக்கியா??" என்று கேட்கவில்லை. அதுவரை எனக்கு சந்தோஷமே.

2
எனக்கு அருணை அறிமுகம் செய்துவைத்தது என் அறை நண்பன்தான். இருவரும் ஒரே கம்பேனியில் வேலை பார்க்கிறார்கள். சில பேரின் முகம், முதல் தடவை பார்த்தவுடனே நம் நினைவில் அப்படியே நின்றுவிடும். அப்படி ஒரு முகம் அருணுக்கு . அவன் முகத்தில் சோம்பலை பார்க்கவே முடியாது. கம்ப்யூட்டர் அறிவில் அவனை அடித்துக்கொள்ள யாராலும் முடியாது. "Informatica,Unix,Pherl" என்று எல்லாவற்றையும் தெரிந்து வைத்து இருந்தான். எதை பற்றி கேட்டாலும் பொருமையாக சொல்லித் தருவான்.

3
கொஞ்ச நாட்களாக'வே சசியின் நடவடிக்கைகள் மாறிக்கொண்டு இருப்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக அறையில் ஒன்றாக தங்கியிருக்கிறார்கள். கடந்த இரண்டு மாதங்களாக சசியின் நடவடிக்கை எதுவுமே சரி இல்லை. முதலில் ஈஷா'வில் ஏதோ யோகா வகுப்பு என்று சொல்லி சனி, ஞாயிறு மட்டும் போய்க் கொண்டு இருந்தான். பின்னர், ஒரு தடவை கோவையில் உள்ள கோயில் ஒன்றுக்கு சென்றான். அதில் இருந்துதான் இந்த மாற்றம். திடீர், திடீர் என்று மணிக்கணக்கில் அறையிலேயே தியானம் செய்ய தொடங்கி விட்டான்.

4
அவனுக்கு உள்ள பிரச்சனையை பற்றி ஒரு நாள் என்னிடம் சொன்னான். "அதிகமாக அவன் யோசிக்க கூடாதாம். அப்படி செய்தால், மூளையில் உள்ள நரம்பு ஒன்றில் இரத்தம் பாய்வது நின்றுவிடும். அதை அப்பொழுதே சரி செய்யாவிட்டால், அவன் உயிருக்கே ஆபத்து" என்றான். இதை ஒரு நாள் நேரிலேயே பார்த்தேன். ரூபிக் கியூப்'யை கையில் வைத்து விளையாடி கொண்டு இருக்கும் போதே, அருணின் முகம் முழுவதும் சிகப்பு நிறமாக மாறியது. நானும் நண்பனும் அவனை பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தோம். மூன்று நாட்கள் அவன் மருத்துவமனையில் இருந்தான், அதன் பிறகே அவனுக்கு சரியானது.

5
தியானம் முடித்த பிறகு சசியின் முகத்தைப் பார்க்க வேண்டுமே. அப்படி ஒரு பிரகாசமாக இருக்கும். எதையோ சாதித்த மகிழ்ச்சி அந்த முகத்தில் தெரியும். ஒரு வெள்ளிக்கிழமை இரவு, "சசி தொடர்ந்து ஆறு மணிநேரம் தியானம் செய்ததாக" அறை நண்பன் ராகுல் செல்வாவிடம் சொன்னான். சசிக்குள் ஏதோ ஒரு மாற்றம் எற்பட்டுவிட்டது என்பதுமட்டும் அவர்களுக்கு நன்றாக தெரிந்தது.

6
இது எல்லாவற்றுக்கும் காரணம் இந்த செல்வாதான். என் மீது அவனுக்கு அப்படி என்ன கொலைவெறி என்று தெரியவில்லை. இதைபோல் அவன் எனக்கு செய்வது, இது இரண்டாவது முறை. அந்த "சாமியார்" என்ற வார்த்தையை இன்னும் என்னால் சீரணிக்க முடியவில்லை. எனக்கு போன் செய்த நான்கு பேரில், ஆனந்தும் ஒருவன். "ஏதோ புக்ஸ் படிக்கிற, ப்ளாக்'லாம் எழுதறேன் பார்த்தா, இப்படி மாறிட்டியே'டா" என்றான். அடப்பாவிங்களா, "புக் படிக்கிறவன் எல்லாம் சாமியாரா??". இப்பொழுது நான் படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம் "சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும்". இந்த புத்தகத்தின் ஏதாவது ஒரு பக்கத்தை மட்டும் ஆனந்த் படித்து இருந்தால் " ஏன்டா, இப்படி போர்னோ அடிக்ட்'டாக மாறிவிட்டாய்" என்று கேட்டு இருப்பான் போல.

7
சசி ஒரு நாள் தன் வேலையை விட்டுவிட்டதாக சொன்னான். செல்வாவும் ராகுலும் அதை முதலில் நம்பவே இல்லை. சசி ஏதோ ஏதோ புத்தகங்கள் படித்தான். அவை தமிழ் புத்தகங்களா? என்பதே செல்வாவிறகு சந்தேகம். அந்த காலத்து பழந்தமிழில் கிறுக்கப்பட்ட புத்தகங்கள். "நான்தான் சிவன், எனக்கான அறம் காத்துக்கொண்டு இருக்கிறது, நான் விரைவில் செல்ல வேண்டும்" என்று ஒருநாள் சசி சொன்னபோதுதான், இது வேறு எங்கேயோ போய் கொண்டு இருப்பதை செல்வாவும் ராகுலும் உணர்ந்தார்கள். அடுத்த நாள் காலையில் இருந்தே சசி'யை காணவில்லை. கடந்த ஒரு வாரமாக செல்வா, ராகுல், சசியின் பெற்றோர் என அனைவரும் அவனைத் தேடிக்கொண்டு இருக்கிறார்கள், ஆனால் சசி கிடைக்கவே இல்லை.

8
செல்வா மீது எனக்கு சரியான கோபம். போன் செய்தே கேட்டுவிட்டேன் " நான் எப்படா, சாமியாரா போகப்போறேனு சொன்னேன்". அவன் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் "நீதான சொன்ன, ஈஷா'ல சேர போறேன்னு. ஏற்கனவே நண்பன் ஒருவன் இப்படி சொல்லித்தான் சாமியாரா மாறிட்டான்" என்றான்.

9
மீண்டும் ஒரு வாரம் கழித்து அவன் முகத்தில் அதே பிரகாசம். அருணுக்கு இந்த பிரச்சனை சின்ன வயதில் இருந்தே இருப்பதாக சொன்னான். இதை முழுமையாக குணப்படுத்த மருந்து எதுவும் இல்லை என்றான். சின்ன வயதில் இருந்தே அவன் தியானம் செய்வதாகவும், அதன் காரணமாகவே அவனால் இந்த வியாதியில் இருந்து தப்பித்து வாழ முடிகிறது என்றான். பின்னர், அவன் தியானத்தை பற்றியும், ஈஷா வகுப்புகள் பற்றியும் அரை மணிநேரம் பேசினான். என்னையும் என் நண்பனையும் அந்த தியான வகுப்பில் சேர சொன்னான். அவன் பேசிக்கொண்டு இருந்த போது, எனக்கு அவனின் சிகப்பு நிற முகமே நினைவில் வந்துக்கொண்டு இருந்தது.

பின்குறிப்பு:
---------------
"இந்த கதையை 168357249 என்று படித்தால் புரியலாம். இல்லை என்றால், 329172564 என்று கூட படிக்கலாம். யாருக்கு தெரியும்."

Sunday, July 18, 2010

சத்தியமாக, இது ஒரு காதல் தோல்வியின் கதை

"எல்லாமே விளையாட்டு தான் அவளுக்கு.அதனால் தான் உன்னைப் பற்றியும் , என் காதல் பற்றியும் நான் சொல்லியதை ஒரு போதும் நம்பியதேயில்லை அவள். மிகவும் பிரயாசைப் பட்டு உன் பெயரை நான் உச்சரிக்கும் தருணம் தான் என் நடிப்பின் உச்சம் என்பாள்.அவளைப் போலவே இருப்பதால் தான் என்னவோ , உனக்கும் என் காதல் தெரிவதே இல்லையா ?" - ரெஜோ ("அம்மாவும் நீயும்" பதிவில்)


எனது இருபத்தி நான்கு வருட அரசியல் வரலாற்றில் இப்பொழுதுதான் ஒரு பெண்ணுக்கு ப்ரொபோஸ் செய்து இருக்கிறேன். உண்மையாகவே அந்த பெண்ணை மிகவும் தீவிரமாகவே காதலித்தேன். என் அம்மாவிடம் "நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன், அவளைதான் கல்யாணம் செய்வேன்" என்று சொல்லிய பின்தான், அவளிடமே சொன்னேன். ஆனால் அந்த பெண்ணோ, என்னைப் பற்றி தவறாக புரிந்துக்கொண்டாள். "மாதம் ஒரு பெண்ணை காதலிப்பவன் இவன்" என்று. அவளை சொல்லியும் குற்றம் இல்லை, பழகிய ஒரே மாதத்தில் காதலை சொன்னால், இப்படித்தான் எல்லா பெண்களும் நினைப்பார்கள்!!!.

இது'ல என்ன காமெடி என்றால், என் அம்மாவும், நான் காதலிப்பதை நம்பவே இல்லை "உனக்கு இதுவே வேலையா போச்சு, ஒவ்வொரு தடவை ஊருக்கு வரும்போதும் எப்படி என் கூட சண்டை போடலாம் என்று யோசிப்பியா?? " என்று கேட்டாள். அந்த பொண்ணும், இதே கேள்வியை பலமுறை என்னிடம் கேட்டு இருக்கிறாள்."டேய் அசோக், ஏன்டா எப்பப்பாரு என் கூட சண்டை போட்டுக்கிட்டே இருக்க??"

நான் எந்தளவு அவளை காதலித்தேன் என்று உங்களிடம் எனக்கு சொல்ல தெரியவில்லை. ஏற்கனவே பேசும் போது, எனக்கு வார்த்தைகளில் பஞ்சம் ஏற்படும், எனக்கு மட்டும் நன்றாக பேச தெரிந்து இருந்தால், எப்பொழுதோ அந்த பெண்ணிடம் காதலை சொல்லி இருப்பேன். எப்படி எப்படியோ பேசி, அந்த பெண்ணை சம்மதிக்க வைத்து இருக்கலாம். அவள் சொன்ன அந்த கடைசி வார்த்தை, இன்னும் என் பின்மண்டையில் கேட்டு கொண்டே இருக்கிறது "A Huge Thanks For Everything".

இந்த "Everything" என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று கேட்கிறீர்களா??. போன வாரம் சத்தியம் திரையரங்கில் "களவாணி" படம் பார்க்கும் போது "Caramel Popcorn" இரண்டு பாக்கெட் சாப்பிட்டுவிட்டு, "என் தம்பிக்கும் ரொம்ப பிடிக்கும்" என்று சொல்லி இரண்டு பாக்கெட் பார்சல் வேறு எடுத்துக்கொண்டு போனாளே, அதுவாகக்கூட இருக்கலாம். ஒரு பாக்கெட்டின் விலை 80 ருபாய். கணக்கில் "ஒரு large Pepsi, மற்றும் இரண்டு Online டிக்கெட்" இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

என்ன "யாரு பணம்??" என்றா கேட்டீர்கள். இதுவரை எந்த பெண்கூடவும் சேர்ந்து திரைப்படம் பார்க்காத உங்களை நினைக்கும்போது பாவமாக இருக்கிறது. நீங்கள் எதாவது ஒரு பெண்கூட சேர்ந்து திரைப்படம் பார்த்து இருந்தால் கண்டிப்பாக இந்த கேள்வியை கேட்டு இருக்க மாட்டீர்கள். அந்த Everything என்ற வார்த்தைக்கு இன்னும் பல அர்த்தம் இருக்கிறது. ஆனால், நான் அவளை உண்மையாக காதலிக்கிறேன் என்ற ஒரே காரணத்தால், அவற்றை எல்லாம் சொல்ல முடியவில்லை. Chit Chat'ல் அவளுக்கு பிடித்த "Hot Chocolate Role" கணக்குகளை கேட்டால் நீங்கள் மயங்கி விடுவீர்கள். வேண்டாம், என் வாயில் இருந்து வார்த்தைகளை பிடுங்காதீர்கள். நான் அவளை, ஒவ்வொரு நொடியும் காதலிக்கிறேன்.(அவளுக்காக என்னால் எழுத முடிந்த அதிகபட்ச கவிதை இதுதான்)

"இதுக்கே இப்படி சலிச்சுக்கிறாயே, அவனவன் காதலிக்காக என்னனமோ செய்கிறான்" என்று சொல்பவர்கள், கொஞ்சம் நில்லுங்கள். அது காதலிப்பவர்களுக்கு,. அவள்தான் என்னை காதலிக்கவே இல்லை என்று சொல்லிவிட்டாளே. அவள்தான் என்னை ஒரு மனிதனாக கூட மதிக்கவில்லையே. அவள் மட்டும் என்னை காதலிக்கிறேன் என்று சொல்லியிருந்தாள், "அவளுக்கு தாஜ்மஹாலை வாங்கி கொடுத்து இருப்பேன்!!!!!!!!!!"

இந்தமுறை ஊருக்கு போகும் போது அம்மாவே கேட்டாள்,

"போன தடவை வந்தபோது, ஏதோ ஒரு பெண்னை கல்யாணம் செய்ய போறேன் சொன்ன.. என்னடா ஆச்சு ???" என்றாள். அவளை போலவே அம்மாவுக்கும் எல்லாவற்றிலும் கிண்டல்.

"அவள் வேற பையனை காதலிக்கிறாளாம்"

'அதுனால என்ன, இப்ப புதுசா ஒரு தனுஷ் படம் வந்துச்சுல, அது மாதிரி நீயும் லவ் பண்ணு" என்றாள்.

"அம்மா, ஏற்கனேவே பயங்கர Feeling'ல இருக்கேன், அமைதியா இரு மா"

"நீ ஒரு பெண்ணை லவ் பண்ணுகிறாய் என்பதே பொய்.. இதுல Feelings வேறயா???. பேசாம அமைதியா கொஞ்ச நாள் இரு, நானே அப்பாட்ட சொல்லி ஒரு நல்ல பெண்னை பார்க்க சொல்றேன்" என்றாள் என் அம்மாவுக்கே உரிய கோபம் மட்டும் கிண்டலுடன். இல்லை இல்லை, அவளுக்கும் உரிய கோபம் மட்டும் கிண்டலுடன்.

Saturday, July 17, 2010

களவாணி - ரவுசு

தமிழில் கிராமத்து திரைப்படம் என்றால், அது தூத்துக்குடி அல்லது மதுரையை மையப்படுத்தியே இருக்கும். அதை உடைத்து இந்த முறை, எங்க ஊர் பக்கம் வந்து இருக்கிறார்கள். அதாங்க, " தஞ்சாவூர், திருவாரூர்" பக்கம் வந்து இருக்காங்க. எங்க ஊர்பக்கம் எல்லா பேச்சுவழக்கிலும், எங்கேயாவது நையாண்டி இருந்துகொண்டே இருக்கும். அது திரைப்படம் முழுவதும் இருக்கிறது.

படம் ஆரம்பித்தது முதல், இறுதிவரை அந்த சிரிப்பொலி அடங்கவே இல்லை. திரைப்படம் முழுவதும் எத்தனையோ ப்ளஸ்'களை சொல்லிக்கொண்டே போகலாம். இதை ஒரு சாதாரண கமர்ஸியல் திரைப்படம் என்று கண்டிப்பாக சொல்லிவிட முடியாது. சின்ன சின்ன விசயங்களை கூட யோசித்து செய்து இருக்கிறார் டைரக்டர் சற்குணம். கண்டிப்பாக இவரும் தஞ்சாவூர் பக்கமாகத்தான் இருக்க வேண்டும். படத்தில் சின்ன சின்ன காட்சிகளில் கூட கிராமத்து நெடி வீசிக்கொண்டே இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் சண்டைக்காட்சிகள் இல்லை, ஹீரோ மரத்துக்கு மரம் தாவவில்லை, ஹீரோயின் டூ பீஸில் ஒட வில்லை. அந்த வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி போட்டு கொண்டு விமல் விடுகின்ற ரவுசு இருக்கே. சான்ஸே இல்லை. கஞ்சா கருப்பு, சரண்யா, கதாநாயகி ஓவியா என்று படத்தில் நடித்த எல்லாரையும் பாராட்டிக்கொண்டே போகலாம்.

திரைப்படம் முடிந்து, திரையரங்கில் இருந்து வந்த அனைவரும் முகத்திலும் ஒரு மகிழ்ச்சி தெரிந்ததே, அதான்யா ஒரு திரைப்படத்தின் உண்மையான வெற்றி.

சற்குணம், உங்களின் அடுத்த திரைப்படத்துக்கு ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறேன்.

பின்குறிப்பு:

இந்த திரைப்படம் வெளிவந்த கொஞ்ச நாட்களில், அந்த பெரிய பேனரின் திரைப்படமும் வெளிவந்தது. அந்த so called பெரிய மனிதர்கள், பல திரையரங்குகளில் "களவாணி" திரைப்படத்தை தூக்க சொல்லிவிட்டு அவர்கள் படத்தை திரையிட சொன்னதாக கேள்வி. பெரிய பேனர்களின் காரணமாகத்தான் தமிழ் திரைப்படங்கள் உலகளவில் செல்ல முடியும் என்ற மாயை எல்லாம் இனி செல்லாது.

Thursday, July 8, 2010

நீங்கள் அவனை கடவுள் என்பீர்கள் - II

நீங்கள் கண்டிப்பாக நம்ப போவது இல்லை. இருந்தாலும் சொல்லிதான் ஆகவேண்டும். நேற்று என் கனவில் கடவுள் வந்தான். ஆம், வந்தவன் தன் பெயரை கடவுள் என்றுதான் சொன்னான். லீவைஸ் ஜீன்ஸும், லீ டீஷர்ட்டும் அணிந்து இருந்தான். காலில் ரீபக் ஷூ. கையில் 'எக்னாமிக் டைம்ஸ்' பேப்பரும் இருந்தது. எங்கேயோ பார்த்த முகம். ராவணன் திரைப்படத்தில், விக்ரம் தம்பியாக வந்து ஒருவன் இறந்துபோவானே, அந்த முகம். நன்றாக வெள்ளையாக இருந்தான். கடவுள்தானா?? என்று யாரும் சந்தேகபடக் கூடாது என்று தினமும் முகத்துக்கு 'பேசியல்' பண்ணுவான் போல. அவனுடைய வெண்மையான முகம், எனக்கு ஒரு வித வெறுப்பை தந்தது. இப்பொழுது எல்லாம் வெள்ளையாக இருக்கும் யாரை பார்த்தாலும் வெறுப்பாக இருக்கிறது.

"நீ தான் கடவுள் என்பதற்கு என்ன ஆதாரம்??" என்று கேட்டேன். அவனுடைய Driving licence'யை காட்டினான். கனரக வாகனம் ஒட்டுவதற்கு, அமெரிக்க அரசாங்கத்தால் தரப்பட்டது. பெயர் "கடவுள்" என்று எழுதப்பட்டு இருந்தது. அமெரிக்க லைசன்ஸ், கண்டிப்பாக இவன் ஏமாற்றவில்லை என்று நம்பிக்கை பிறந்தது.

கடந்த ஒருவாரமாக நான் தூங்குவதே இரண்டு மணிநேரம் தான், அதில் இவன் வேற வந்துவிட்டான். அவனுடன் நான் ரொம்ப நேரம் பேசவிரும்பவில்லை.

அவன்தான் ஆரம்பித்தான், "எதற்கு என் மீது இவ்வளவு கோபம்??"

நான் எதிர்பார்த்த கேள்விதான், "எனக்கு என் மீதே கோபம்" என்றேன்.

"நான் யாருக்கும் வஞ்சனை செய்யவில்லை, எல்லாருக்கும் ஒரே மாதிரிதான் வாழ்க்கை கொடுத்தேன். நீ தவறாக புரிந்துகொண்டு உள்ளாய்" என்ற அப்பட்டமான பொய்யை கூறினான்.

"நான் உன்னுடன் வாக்குவாதம் செய்யவிரும்பவில்லை, நீ போய்விடு" என்றேன்.

அவன் போவதாக இல்லை. ஏதோ ஏதோ காரணங்கள் சொன்னான். IIM'ல் M.B.A படித்து இருப்பான் போல, ஒவ்வொன்றுக்கும் ஒரு கதைசொன்னான். அவன் நல்லவன் என்பதைப் பத்து கதைகள் மூலம் விளக்கினான்.

என் அமைதி அவனை கொஞ்சம் கோபப்படுத்தி இருக்கவேண்டும. பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட்'யை எடுத்து பற்ற வைத்தான்.

"உன்னை இங்கே அனைவரும் கடவுள் என்கிறார்கள்" என்றேன். நான் பேசியதை ஒரு நோட்டில் குறிப்பு எடுத்துகொண்டான்.

"எல்லோரும் சொல்கிறார்கள். ஆகவே அதுவே உண்மையாக இருக்கும்" என்றான்.

"நீ கடவுள் என்றால் எனக்கு ஒரு வரத்தை கொடு. நான் இந்த உலகத்தில் இதுவரை வாழ்ந்ததுக்கு'கான எல்லா தடயங்களையும் அழித்துவிடு" என்றேன்.

அது முடியவே முடியாது என்றான். வாழ்க்கை ஒரு Butterfly Effect'யை போலவாம். ஒருவனின் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டு பண்ணினால், அது எல்லாருடைய வாழ்க்கையிலும் மாற்றத்தை எற்படுத்தும் என்றான்.

"சரி, எனக்கு மரணத்தைகொடு" என்றேன்.

அதுவும் முடியாது என்றான். ஒருவன் பிறக்கும் போதே அவன் மரணமும் முடிவு செய்யப்படுகிறதாம். அதையும் யாராலும் மாற்றமுடியாது என்றான்.

"உண்மையாகவே எந்த கடவுளாளும் வரங்கள் கொடுக்கமுடியாது என்றால், இந்த உலகத்தில் எதையும் உன்னால் மாற்ற முடியாது என்றால், எதற்கு நீ. நீ ஒரு மலை உச்சியில் கல்லாகவே இருந்துவிடு" என்றேன். நான் பேசியதை மீண்டும் குறிப்பு எடுத்துகொண்டான்.

இப்பொழுது நான் பேசிக்கொண்டு இருந்தேன். அவன் அமைதியாக கேட்டு கொண்டு இருந்தான். அந்த அமைதி என்னை கோபப்படுத்தியது.

"எனக்கு வேற வரங்கள் வேண்டாம், நீயும் வேண்டாம். போய்விடு" என்று கத்தினேன்.

விடைபெற தயாராகும் முன் அவன் மீண்டும் சொன்னான் "நான் யாருக்கும் வஞ்சனை செய்யவில்லை, எல்லாருக்கும் ஒரே மாதிரிதான் வாழ்க்கை கொடுத்தேன். நீ தவறாக புரிந்துகொண்டு உள்ளாய்"

நானும் மீண்டும் பதிலளித்தேன் "உன்னை இங்கே அனைவரும் கடவுள் என்கிறார்கள்".

டிரைவரை வண்டியை எடுக்கசொல்லிவிட்டு, மீண்டும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்தான்.