Thursday, March 26, 2009

சோகக் கதை

நேற்று இரவு போதையில் அருண் என்னிடம் சொன்னது " நீ என்னத்தான் சொன்னாலும் உன்னால் சோகமான கதை எதையும் எழுத முடியாது டா. நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விசயம்தான் எழுத்தாக வெளிவருகிறது. உன்னை பொருத்தவரை உனக்கு அதிகபட்சம் கவலை தரக்கூடிய அல்லது வருத்தப்பட வைப்பது என்றால் அது "எதாவது ஒரு பெண் உன்னை பார்த்து சிரிக்கவில்லை என்பதுதான்". இதை உன் blog'ல எழுதுனா கண்டிப்பாக அது படிப்பவர்களுக்கு சோகக் கதை இல்லை, அது நகைச்சுவை கதை. துக்கம் என்பது நாம் எழுதுகிற எழுத்து ஒவ்வொன்றிலும் கூடவே வரவேண்டும்." என்று அருண் சொல்லிக்கொண்டே போனான். அருண் இன்னைக்கு அடித்த சரக்குக்கு நான் உருகாய் போல் மாட்டிக்கொண்டேன். இந்த மாதிரி குடிமகனிடம் இருந்து தப்பித்து கொள்வதற்காவது தினமுன் நானும் சரக்கு அடிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

அருண் தொடர்ந்து பேசிக்கொண்டே போனான் " ஒரு தகப்பன் மகளை இழந்த சோகமும், ஒரு கணவன் மனைவியை இழந்த சோகமும் கண்டிப்பாக ஒன்று அல்ல. அதை எழுதிகின்ற போது மரண சோகம் என்று ஒரே வரியில் எழுதலாம், ஆனால் அப்படி எழுதக்கூடாது. ஒரு துக்கமான விசயத்தை படிக்கும் போது அதை படிப்பவனும் கண்டிப்பாக அழ வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அந்த துக்கத்தின் ஆழமாவது தெரியவேண்டும்"

எனது வாய் சும்மா இல்லாமல் நடுவில் பேசியது " நீ சொல்கின்ற மாதிரி நானும் ஒரு சோகமானக் கதை எழுதுறேன் டா" என்றேன்.

"சோகம்'னா எதைப் பற்றி எழுதபோற"

"ம்... இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி"

"இலங்கை தமிழர் பற்றி எழுதுனா அது கதை இல்ல, ஒரு உண்மை சம்பவம் பற்றிய கட்டுரை". என்றான் அருண்.

"சரி, வேற எதை பற்றி எழுதுவது அதை நீயே சொல்"

"கதை எனபது நம் வாழ்க்கையில் நடந்த ஒன்றாக இருக்க வேண்டும், அப்பொழுதுதான் நன்றாக இருக்கும். நீ கடைசியாக எப்பொழுது அழுதாய் அதை கதையாக எழுது"

நான் கடைசியாக அழுதது எப்பொழுது சிறிது நேரம் யோசித்தேன். ஆம் போன வாரம் விடுமுறையில் வீட்டில் இருந்த போது, அம்மா வெங்காயம் வெட்டிக்கொண்டு இருந்தாள். அதை அருகில் இருந்து பார்த்த எனக்கு கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

இந்த கண்ணீர் கதையை அருணிடம் சொல்வதற்குள் அவன் போதை மயக்கத்தில் தூங்கி போனான்.

பின்குறிப்பு:
----------

மேலே உள்ள சோகக் கதையை ஒரு கையால் வெங்காயத்தை உரித்துக்கொண்டே படிக்கவும், அப்பொழுதுதான் அருண் சொன்னது போல் படிக்கும்போது feelings வரும்.

Friday, March 20, 2009

யாருப்பா அது!!!!!

இனி அசோக் blog எழுதக் கூடாது என்று முடிவு எடுத்து இருக்கிறான். அவன் தனது வலைப்பதிவில் " அசோக்கின் அத்தைமகள் " என்ற பெயரில் சமீபத்தில் ஒரு கதை எழுதியிருந்தான். அதை படித்தவர்கள் அனைவரிடமும் சத்தியமாய் அது கதைதாங்க என்று அசோக் சொல்லியும் யாரும் நம்புவதாக இல்லை. அது அசோக்கின் உண்மை கதை என்று அனைவரும் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் அசோக்கிற்கு இன்னொரு பிரச்சனை. Orkut'ல அசோக்கும் ஒரு account வைத்து உள்ளான். அவனுடைய profile'ல தனது வலைப்பதிவு முகவரியையும் இனைத்து இருக்கிறான்.

அசோக்கின் உண்மையான அத்தை மகள் லலிதா Orkut'ல எப்படியோ இவனை தேடி கண்டுபிடித்து, வலைப்பதிவையும் படித்துவிட்டாள். உண்மையில் லலிதா இப்பொழுது மதுரையில உள்ள கலைக்கல்லூரி ஒன்றில் Bsc. Computer Science இரண்டாம் ஆண்டு படித்துவருகிறாள்.

வலைப்பதிவை படித்தவுடன் அசோக்கிற்கு போன் செய்த லலிதா " டேய், அந்த அத்தை பெண் நான் இல்லைல?? யாருப்பா அந்த கவிதா?? எப்பல இருந்து இது நடந்துக்கொண்டு இருக்கிறது. சத்தியம் சினிமாவுக்கு பையன் கூட போனியா, இல்ல கவிதா கூட போனியா?? அது என்னப்பா பாட்டியாலா டிரஸ், நீ தான் வாங்கிகொடுத்தியா?? மாமாவுக்கு இந்த matter எல்லாம் தெரியுமா, உன்னை ரொம்ப நல்ல பையன் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். உங்க அம்மாவுக்கு போன் செய்து கவிதாவை பற்றி விசாரிக்க சொல்றேன்." என்று அவள் பேசிக் கொண்டே போனாள்.

சொந்தகார பையன் குமாருடன் லலிதா மதுரையை சுற்றிக்கொண்டு இருப்பதாக நண்பன் ஒருவன் சொன்னதை, அசோக் லலிதாவிடம் கேட்க நினைத்து பின் எதற்காக பிரச்சனை என்று கேட்காமலே போனை வைத்துவிட்டான்.

Tuesday, March 3, 2009

நானும் செய்தித்தாளும்

இப்பொழுது எல்லாம் Newspaper மன்னிக்கவும் செய்தித்தாள்களை படிக்கவே வெறுப்பாக இருக்கிறது. எந்த செய்தித்தாள்களை பிரித்தாலும் எழுத்துக்கள் கொட்டிக்கிடப்பது போல் ஒரு தோற்றத்தைத்தான் தருகின்றன. படிக்கவே பிடிக்கவில்லை. இந்த எண்ணம் எல்லாம் கடந்த ஒரு மாதமாகதான்.

எனக்கு செய்தித்தாளுக்கும் உள்ள பந்தம் மிகவும் பெரியது. நான் செய்தித்தாள்களை படிக்க ஆரம்பித்தது எனது ஜந்தாம் வகுப்பில் இருந்துத்தான். எனது ஐந்தாம் வகுப்பு ஆசிரியை பெயர் சரியாக ஞாபகம் இல்லை. காலையில் முதல் வகுப்பு ஆரம்பித்தவுடனே மாணவர்கள் அனைவரும் ஸ்கூல் டைரியை அந்த ஆசிரியரிடம் காட்ட வேண்டும். ஸ்கூல் டைரியில் அன்றைய பாடத்தை பையன் வீட்டில் படித்தான் என்பதற்கு சான்றாக பெற்றோர்களின் கையெழுத்தும், அன்றைய செய்தித்தாள்களின் முக்கிய செய்திகளும் இருக்க வேண்டும். பெற்றோர்களின் கையெழுத்து இல்லை என்றால் கூட அந்த ஆசிரியர் விட்டுவிடுவார், ஆனால் முக்கிய செய்திகளை அதில் எழுதவில்லை என்றால் அந்த மாணவன் செத்தான்.

என்ககு இப்படித்தான் செய்தித்தாள்கள் படிக்கும் ( முதல் பக்கத்தை மட்டும் ) பழக்கம் ஆரம்பித்தது . எனக்கு அப்பொழுது எல்லாம் செய்திகளின் தீவிரம் தெரியாது. தினமலர் முதல் பக்கத்தில் உள்ளதை அப்படியே பார்த்து எழுதிக் கொண்டு போவேன்.

ஆறாம் வகுப்பு வேறு பள்ளியில் சேர்ந்தவுடன் தினமும் செய்தித்தாள் படிக்கும் பழக்கம் நின்றுவிட்டது. எங்கள் வீட்டில் காலையில் எழுந்தவுடன் என் அப்பா " பேப்பர் வந்துருச்சா??" என்று கேட்டுக் கொண்டே வீட்டு வாசலுக்கு போவதும், ஒரு கையில் பேப்பரும் மறுகையில் காபியும் வைத்துக்கொண்டு ஸ்டைலாக பேப்பர் படிப்பது இன்னும் என் நினைவில் இருக்கிறது. இது தான் என்னை மீண்டும் செய்தித்தாள்ளை படிக்க தூண்டியது. நானும் அப்பாவை போல் கையில் காபியுடம் செய்திதாள்களை எடுத்து படம் பார்த்துக்கொண்டு இருப்பேன். நான் படம் மட்டும்தான் பார்க்கிறேன் என்று தெரிந்தும், என்னிடம் இருந்து பேப்பரை என் அப்பா வாங்க மாட்டார். நானே தரும்வரை காத்துக்கொண்டு இருப்பார்.

டெய்லர் மாமாவின் கடை, மூடி வெட்டும் சலூன் கடை என்று எங்கு சென்றாலும் நான் உடனே எடுத்து படிப்பது "சிந்துப்பாத்" படக்கதையைதான். சிந்துப்பாத கதையை ஒரு வருடம் இடைவெளி விட்டு படித்தாலும், கதை நாம் விட்டுச் சென்ற இடத்தில் இருப்பது போலதான் இருக்கும். இது தான் சிந்துப்பாத் கதையில் சிறப்பு..:)

ஒன்பதாம் வகுப்பில் இருந்துதான் செய்திகளை தீவிரமாக படிக்க தொடங்கினேன் என்று ஞாபகம். பள்ளி வகுப்பில் நானும் பிரகாஷும் தினமும் அன்றைய செய்திகளை பற்றி விவாதிப்போம். பிரகாஷுக்கு என்னை விட ஞாபகசக்தி அதிகம். எல்லா செய்திகளையும் துள்ளியமாக சொல்வான். எனக்கோ பிரிட்டனின் புதிய ஜனாதிபதி பெயரை எத்தனை முறை படித்தாலும் நினைவில் தங்காது.

கல்லூரி விடுதியில் சேர்ந்தவுடனே நான் பார்த்த முதல் நண்பன் " The Hindu " செய்தித்தாள்தான். பின்னர் Bonny'யுடன், இந்த Bonny'யை பற்றி தனியாக பதிவே போடலாம் அந்த அளவு வித்தியாசமானவன். என்னுடைய Role-Model அவன். எங்கே விட்டேன்,,ம், பின்னர் Bonny'யுடன் எற்பட்ட பழக்கத்தினால் New Indian Express, Economic Times என்று படிக்கும் செய்தித்தாள்களின் எண்ணிக்கை அதிகரித்தது. Bonny'யில் ரூமில் எப்பொழுதும் கண்டிப்பாக மூன்று விதமான செய்தித்தாள்களாவது இருக்கும். அவன் எப்பொழுது அதை எல்லாம் படிப்பான், அல்லது எற்கனவே படித்து முடித்து விட்டானா என்பது யாருக்குமே தெரியாது. ஆனால் எல்லாம் செய்திகளையும் புட்டுப் புட்டு வைப்பான்.

இப்படி எனக்கும் செய்தித்தாளுக்கும் உள்ள உறவை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் திடீர் என்று கடந்த ஒரு மாதமாக செய்தித்தாள்களை பார்க்கவே வெறுப்பாக இருக்கிறது. செய்தித்தாள் என்று இல்லை, எவை எல்லாம் முன்னால் பிடித்ததோ அவை எல்லாம் எனக்கு இப்பொழுது வெறுப்பை தருகின்றன். ஒரு வேளை ஒரு பெண் என் மனதை டிஸ்டர்ப் செய்வது தான், இதற்கு எல்லாம் காரணம் என்று நினைக்கிறேன்.

பின்குறிப்பு:
============

" என்னடா இந்த பதிவில் பெண் என்ற வார்த்தையே இல்லையே " என்று நண்பன் கேட்டதால் கடைசியில் அந்த வரியை சேர்க்க வேண்டியதாய் போயிற்று. நம்புங்க பா....