Sunday, August 28, 2022

.

முத்தம் என்பது ஒரு பெயர் சொல்.
முத்தம் என்பது நாம் ஒருவர் மீது
செலுத்தும் வன்முறை.

முத்தம் என்பது ஒருவர் மீது நமது இருப்பை நினைநாட்ட நாம் செலுத்தும்
ஒரு ஏகாபத்திய செயல், அல்லது
நான் உனக்காக இருக்கிறேன் என்று நம்ப வைக்கும் ஒரு நாடகம்.

முத்தம் என்பது எப்பொழுதோ நடக்க போகும் ஒரு கொலைக்கான ஆரம்பம்.
முத்தம் என்பது அடுத்த நொடி நடக்கயிருந்த ஒரு தற்கொலைக்கான முடிவு.

கவிதா ஒருமுறை என்னிடம் சொன்னது போல் "முத்தத்தை வேறும் முத்தமாக மட்டும் பார்ப்பவர்களின் வாழ்க்கை அந்தளவு Complicated'ஆக இல்லை" தான்.

Thursday, May 12, 2022

.

வாழ்க்கையில் கவலையே இல்லாதவன் ஒரு காதல் கவிதை எழுதுகிறான்.

வாழ்க்கையில் கவலையே இல்லாதவன் அந்த காதல் கவிதையை படித்து, ஒரு காதலியை தேடுகிறான். ஒரு கட்டத்தில் ஏமாற்றத்தால் கதறி அழுகிறான்.

பல நாட்களுக்கு பின், முன்னவனும் பின்னவனும் ஒரு மதுபான வீடுதியில் சந்திக்க நேர்ந்தது.  நம்மை போலவே அவர்களுக்கும் யார் முன்னவன், யார் பின்னவன் என்ற குழப்பம் ஏற்பட, ஒரு நிம்மதியுடன் இருவருமாக, ரயிலே வராத தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து உறங்கினர்.

Tuesday, February 8, 2022

.

திருமணமான ஒருவன் தனது 35வது வயதில் முதல் முறையாக காதல் கவிதை எழுதிய போது, இந்த சமூகம் அவன் மீது முதல் சந்தேக பார்வையை வைத்தது.

முதலில் அவனுக்கு ஒரு காதலி இருப்பதாக சொல்லப்பட்டது. பின்னர் அவளுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாக கோர்க்கப்பட்டது. அவன் தனது பத்தாவது காதல் கவிதை எழுதிய போது, அவள் அவனுடைய பழைய கல்லூரி காதலி என்றும், அவள் கணவன் இரண்டு வருடங்களுக்கு முன்னர் விபத்தில் இறந்து விட்டதாகவும் ஒரு உபக்கதை சேர்க்கப்பட்டது.

யாரோ ஒருவன் எழுதும் கவிதையால் யாரோ ஒருத்தியின் தனிப்பட்ட வாழ்க்கை விவாதத்துக்கு உட்படுவதை எண்ணி, இந்த சமூகத்தை சபித்துக்கொண்டே டாஸ்மாக் பாரில் அன்றைய காதல் கவிதையை எழுதி முடித்தான். பின்னர், "வீட்டுக்கு வரும் போது அண்ணாச்சி கடையில் ஒரு பாக்கெட் தோசை மாவு வாங்கி வர வேண்டும்" என்று மனைவி சொன்னதை மீண்டும் ஒருமுறை நினைவில் நிறுத்திக்கொண்டான்.