Thursday, January 26, 2012

படித்ததில் பிடித்தது

குழந்தைகள் பற்றி பேயோன் எழுதிய ஒரு கவிதை:

குட்டி இளவரசன்

கொஞ்ச வருபவர்களையெல்லாம் திட்டுகிறான்
பிரிய பொம்மைகளை வீசியெறிகிறான்
அதட்டுபவர்களையும் அப்படியே
இந்தக் குழந்தைக்கு ஏன் இவ்வளவு குரோதம்
என யாருக்கும் கேட்கத் தோன்றவில்லை
குழந்தைதானே என்கிறார்கள்
உரிமம் தருகிறார்கள்
ஒரு கையால் கும்மாங்குத்து குத்தினாலும்
இன்னொரு கையால் நம்மை கெட்டியாகப்
பிடித்துக்கொண்டுதானே இருக்கிறது என்கிறார்கள்
குழந்தைக்குக் கொஞ்சல்களும் கைதட்டல்களும்
தேவைப்படும் வரை தொடரும் நமக்கு தர்ம அடிகள்.

பேயோனின் இணையத்தளத்தில் படிக்க:
http://www.writerpayon.com/2012/01/26/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/

Tuesday, January 24, 2012

பெண்னை மயக்கி காதலிப்பது எப்படி?

ப்ளாக்கரில் உள்ள Stats'யை பயன்படுத்தி, எனது வலைப்பதிவுக்கு வந்தவர்கள், போனவர்கள் பட்டியலை நோட்டமிடுவது எனக்கு மிகவும் பிடித்தமான செயல்களில் ஒன்று. இந்த Stats மூலம் அறிந்துக்கொண்டது, எனது வலைப்பதிவை என்னை தவிர இன்னும் பத்து பேர் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய அதிசயம்?? இதைவிட அதிசயமான ஒன்று ஐ-பேட் மூலமாக கூட எனது வலைப்பதிவை சிலர் படிக்கிறார்கள்.

சரி, இதைலாம் விடுங்கள். இந்த Stats'யில் மிகவும் குஜாலான பகுதி எது தெரியுமா?? எந்தந்த வார்த்தைகளை தேடி, நமது வலைப்பதிவுக்கு வருகிறார்கள் என்பதை பார்ப்பதுதான்.

நேற்று, கூகுளில் யாரோ ஒருவர் "பெண்னை மயக்கி காதலிப்பது எப்படி" என்று தேடி, அதன் மூலம் எனது வலைப்பதிவுக்கு வந்துள்ளார். பாவம் அவர், எத்தனை எதிர்பார்பில் வந்து இருப்பார்.

ஒருவேளை, "பெண்னை மயக்கி காதலிப்பது எப்படி" என்ற கேள்விக்கான பதிலை இன்னும் அவர் கண்டுபிடிக்காமல், மீண்டும் கூகுளில் தேடி எனது வலைப்பதிவுக்கு அவர் வர நேர்ந்தால், அவருக்கு ஒன்றே ஒன்றை மட்டும் நான் சொல்லிக்கொள்ளுகிறேன், "பெண்னை மயக்கி காதலிப்பது எப்படி? என்று எனக்கு தெரிந்திருந்தால், நான் எதற்காக சார் இந்த பதிவை மாங்கு மாங்கு என்று டைப் செய்துக்கொண்டு இருக்கிறேன்?"


Monday, January 23, 2012

வார்த்தைகளோடு அலைபவன் சொல்லும் கதைகள்


4.தலையணை கதைகள்

உங்களுக்கு எற்கனவே தெரிந்திருக்கும், நீங்களும் முன்னரே கேள்விப்பட்டு இருப்பீர்கள். "ஒருவன் தலையணைக்கும் அவன் கனவுகளுக்கும் சம்மந்தம் உள்ளது" என்பதை, "அழுக்கான தலையணைகள்" துர்கனவுகளை உருவாக்கும் என்பதை.

அவன் அறையில் அவன் உபயோகப்படுத்துவதற்காகவே மூன்று தலையணைகளை வைத்துள்ளான். அந்த தலையணைகளை உபயோகப்படுத்த வேறு யாரையும் இதுவரை அவன் அனுமதித்தது இல்லை. அவன் நண்பன் ஒருவன் மூன்று நாள் தூக்கமில்லா பயணத்தில் அவனைப் பார்க்க வந்த ஒரு இரவில, நண்பன் உறங்குவதற்கு அவன் தலையணைகளை எதையும் தரவில்லை, கடைசியில் அவன் நண்பன் கைகளை உபயோகித்து தான் தூங்கினான்.

அவனுடைய மூன்று தலையணைகளும் மூன்று விதமான கனவினை தர கூடியவை. உங்களை போல்தான் அவனும் இதை முதலில் நம்பவில்லை,  நூறு நாட்கள் சோதனையின் பின்தான் அவன் இதை நம்பத் தொடங்கினான். தலையணைகளின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக கனவுகளின் விதங்களும் அதிகமாகும் என்பதாலும் மேலும் இந்த மூன்று விதமான கனவுகளுக்கே அவன் அடிமையாகிவிட்டான் என்பதாலும் மேலும் நான்காவதாக ஒரு தலையணை வாங்க முடிவு செய்யும் நாட்களில் வரும் கனவுகளில் எல்லாம்  "நான்காவதாக வாங்கிய தலையணையில் உள்ள பஞ்சுகள் தனி தனியாக பிரிந்து பல கோடி எறும்புகளாக மாறி அவன் உடலை அரித்து கொல்வது போல் கனவு கண்டதாலும்", நான்காவது தலையணை வாங்கும் எண்ணத்தை அவன் கைவிட்டான்.

மூன்று விதமான தலையணைகளை தரும் மூன்று விதமான கனவினை அவன் சோதனை செய்த அந்த நூறு நாட்களில், ஒவ்வொருநாளும் தூக்கம் கலைந்து எழுந்தவுடன், அன்றைக்கு அவன் பார்த்த கனவினை நினைவில் கொண்டுவர முயற்சிப்பான். கனவுகள் நினைவுக்கு வந்தவுடன் அந்த கனவினை அந்த தலையணைகளுக்கான டைரியில் எழுதிவிடுவான், இதற்காகவே மூன்று வண்ணங்களில் டைரிகள் வைத்திருந்தான். சிவப்பு, ஊதா, பச்சை என்ற மூன்று வண்ணங்களில் இருந்த மூன்று தலையணைகளுக்கு மூன்று விதமான டைரிகள். பல நேரங்களில் அந்த கனவுகள் உடனே நினைவுக்கு வராது, அன்றைய நாள் முழுவதும் அந்த கனவினைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருப்பான். கடைசிவரை நினைவுக்கு வராத கனவுகளும் உண்டு. நாற்பத்தி ஐந்து நாட்களில் முடிய வேண்டிய சோதனை இதன் காரணமாகவே நூறு நாட்கள் நீடித்தது. இப்படி நூறு நாட்களுக்கு அவன் செய்த சோதனைக்கு பின்னரே அவனுடைய மூன்று தலையணைகள் மூன்று விதமாக கனவினை தருகிறது என்பதை நம்ப தொடங்கினான்.

அதன் படி,

சிவப்பு நிற தலையணை, தற்கொலை கனவுகளை தர கூடியது
ஊதா நிற தலையணை, கடவுளைப் பற்றிய் கனவினை தர கூடியது
பச்சை நிற தலையணை, அவன் கதைகளைப் பற்றிய கனவினை தர கூடியது

இனி அவன் தலையணைப் பற்றியும், அவன் கனவினைப் பற்றியும் இங்கே பார்ப்போம்.Saturday, January 21, 2012

புத்தகப் பட்டியல்* துருக்கிக்தொப்பி - கீரனூர் ஜாகிர்ராஜா
* உப பாண்டவம் - எஸ்.ரா
* ஆத்மநாம் படைப்புகள் - ஆத்மநாம்
* கணையாழி கடைசிப் பக்கங்கள் - சுஜாதா
* ஸ்ரீரங்கத்து தேவதைகள் - சுஜாதா
* Notes from the Underground - Fyodor Dostoyevsky
* சிலுவையின் பெயரால் - ஜெயமோகன்
* திசை காட்டிப் பறவை - பேயோன்
* என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் - மனுஷ்ய புத்திரன்
* கரிசல் காட்டுக் கடுதாசி - கி.ரா
* ஜே.ஜே. சில குறிப்புகள் - சு.ரா
* The Trial - Kafka
* பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா
* தோட்டியின் மகன் - சு.ரா
* எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் பேன்சி பனியனும் - சாரு நிவேதிதா
* ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா

இவை எல்லாம் புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் அல்ல. என்னிடமிருந்து நண்பர்கள் கடனாக வாங்கி இது வரை என் கைக்கு திரும்பி வராத புத்தகங்களின் பட்டியல். இது ஒரு பகுதி மட்டுமே. கடனாக தந்த பல புத்தகங்களின் பெயர்களை மறந்து விட்டதால், என்னால் முழுமையான பட்டியலை தயார் செய்ய முடியவில்லை.

"அப்பாடி, நான் கடனாக வாங்கிய புத்தகம் தப்பியது" என்று நண்பர்கள் யாரும் சந்தோஷமாகயிருந்து விட வேண்டாம். ஏனென்றால், நான் கடனாக கொடுத்த புத்தகங்களின் பெயர்கள் நினைவில் வர வர இந்த பதிவில் அந்த புத்தகங்களின் பெயர்களை சேர்த்துக் கொண்டேயிருக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

இந்த பதிவை எழுதி பதிவிடும் போது, ஏழு புத்தகங்களே இருந்தது, இப்பொழுது எத்தனை புத்தகங்கள் உள்ளது என்பதை நீங்களே ஒரு முறை எண்ணி சரி பார்த்துக்கொள்ளவும். உங்களுக்கு நான் கடனாகக் கொடுத்த புத்தகத்தின் பெயர் கூட, ஒருநாள் இந்த பட்டியலில் சேரலாம். ஆகவே, என் வலைப்பதிவில் உள்ள இந்த பதிவை மட்டும் தொடர்ந்து சரி பார்த்துக்கொண்டேயிருக்கவும். ஒருவேளை உங்களுக்கு நான் கடனாகக் கொடுத்த புத்தகத்தின் பெயரைக் கடைசி வரை என்னால் நினைவில் கொண்டு வர முடியவில்லை என்றால், உங்கள் மனசாட்சியின் படி நீங்களே அந்த புத்தகத்தை என்னிடம் திரும்ப கொடுத்துவிடவும்.

நண்பன் ஒருவனுக்கு போன் செய்து நான் கடனாக கொடுத்த புத்தகங்களைப் பற்றி கேட்ட போது, " அய்யோ, மறந்துவிட்டேன் மச்சி.. இப்பொழுதே பார்சலில் உனது வீட்டுக்கு அனுப்பிவிடுகிறேன்" என்றான். ஆகவே அவனுக்கு கடனாக தந்த நான்கு புத்தகங்களின் பெயர்களை இங்கே சேர்க்கவில்லை. அவன் சொல்லி ஒரு மாதம் முடிய போகிறது, நேரிலேயே ஒருமுறை சந்தித்தும் விட்டோம். இன்னும் புத்தகங்கள் கைக்கு வந்த வழியைக்கானோம்.

நானும் பலரிடமிருந்து புத்தகங்களை கடனாக வாங்கி மீண்டும் அவர்களிடம் கொடுக்காமல் சமாளிப்பு போடுபவன் என்ற முறையில், ஒன்றை மட்டும் என்னால் தெளிவாக சொல்ல முடியும். "அவன் தான் இந்த புத்தகத்தை படித்துவிட்டானே, பின் எதற்கு அவனுக்கு மீண்டும் தர வேண்டும்" என்ற எண்ணமே பலரும் புத்தகத்தை திரும்பக் கொடுக்காமல் இருக்க காரணம். இந்த காரணம் எனக்கும் சேர்த்துதான்.

(நண்பர்களுக்கு முக்கிய அறிவிப்பு: "இந்தந்த புத்தகம் இந்தந்த நண்பரால் கடனாகப் பெறப்பட்டு இன்னும் திரும்ப தராமல் நிலுவையில் உள்ளது" என்ற பட்டியலை விரைவில் எனது வலைப்பதிவில் வெளியிட முடிவு செய்துள்ளேன்) 

Wednesday, January 18, 2012

ஒரு ஆட்டோகிராப் ப்ளிஸ்

புத்தகக் கண்காட்சியில் புதுப்புனல் பதிப்பகத்தில் எம்.ஜி.சுரேஷ் எழுதிய இரண்டு நாவலை வாங்கினேன். "அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேனீரும்" மற்றும் "அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்" ஆகிய இரண்டு நாவல்கள். இதன் மொத்த விலை ரூபாய் 365 (115+ 250). இதே புத்தகங்களின் புதிய பதிப்பு அடையாளம் பதிப்பகத்தில் கிடைப்பதால், ஸ்டாக் காலி செய்வதாக சொல்லி ரூபாய் 110'க்கு தந்தார்கள். மேலும், என்னைப் பார்த்தால் அவர்களுக்கு கல்லூரி மாணவன் போல் தோன்றியிருக்கும் போல, "கல்லூரி நண்பர்களுக்கும் சொல்லவும். எம்.ஜி.சுரேஷின் அனைத்து புத்தகங்களும் குறைந்த விலைக்கு தருகிறோம்" என்றார்கள்.

இப்பொழுது அது அல்ல பிரச்சனை. சொல்ல போனால் பிரச்சனை என்று எதுவும் இல்லைதான்.

"அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேனீரும்" புத்தகத்தை வீட்டில் வந்து பிரித்து முதல் பக்கத்தைப் பார்த்த போது,  எம்.ஜி.சுரேஷ் கையெழுத்து போட்டு சொக்கலிங்கம் என்பவருக்கு இந்த புத்தகத்தை தந்திருப்பது தெரியவந்தது. கையெழுத்து போட்ட தேதி 16.02.2000. ஆனால் புத்தகம் புதியது போலதான் உள்ளது. போல அல்ல, புதியதே தான். ஒருவேளை கையெழுத்து போட்டபின் புத்தகத்தை சொக்கலிங்கம் வாங்கமால் திரும்ப கொடுத்து இருக்கலாம். இந்த கையெழுதுக்கு பின்னால் கண்டிப்பாக எதாவது ஒரு கதை இருக்கும். அந்த கதை என்னவாகயிருக்கும் என்பதைப் பற்றிதான் இப்பொழுது யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.


Tuesday, January 10, 2012

வசந்தகாலத்தில் ஒருநாள்

என் வாழ்நாளின் வசந்தகாலத்தில் வாழத்தொடங்கி இருக்கிறேன்.  இந்த வசந்தகாலத்தில் என் ஜன்னலோரத்தில் எனக்காக மட்டுமே, எப்பொழுதும் எனது மழைச்சாரல் பொழிந்துக்கொண்டே இருகிறது. அதன் சாரலில் பனித்துளிகள் உருவாகி என் முகத்தினை தடவி என் தூக்கத்தை கலைக்கின்றது. என் தூக்கத்தை கலைக்கும் இந்த பனித்துளியின் மீது எனக்கு எந்தவீதத்திலும் கோபம் ஏற்படுவதில்லை, மாறாக அதன் மீது ஒருவீத காதலே எற்படுகிறது. வசந்தகாலத்தில் உருவாகும் பனித்துளிகளின் முரணினை யோசித்துக்கொண்டே சாலைகளில் நடக்க தொடங்குகிறேன். நான் சாலையில் பார்த்த முதல் நபரே என்னைப் பார்த்து புன்னகைக்கிறார். அந்த புன்னகைக்கு பதிலாக என்னுள் நேற்று இரவிலிருந்தே ஒட்டிக்கொண்டு இருக்கும் சந்தோஷ கீற்றுக்களில் சிலவற்றை அவரிடம் தந்துவிட்டு மீண்டும் நடக்க தொடங்குகிறேன். ஒரு இளம் வெயிலும் என்னை பின் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது.

இந்த வசந்தகாலத்தில், எனக்கு உண்டான சந்தோஷத்தை சாலையில் போவோரிடம் எல்லாம் பகிர்ந்துக்கொள்கிறேன். அவர்களுக்கும் வசந்தகாலத்தின் மீது ஒருவீத காதல் வந்துவிடுகிறது. தேவையில்லாமல், ஒரு குழந்தையை தூக்கி கொஞ்சுகிறேன், ஒரு முதியவருக்கு சாலையினை கடக்க உதவுகிறேன், எப்பொழுதுதோ இறந்து போன் கணவனைப் பற்றி ஒரு மூதாட்டியிடம் விசாரிக்கிறேன், என்னைப் பார்த்து புன்னகைக்கும் என் அலுவலக பெண் ஒருத்திக்கு ரோஜாப்பூ ஒன்றினை பரிசாக தருகிறேன்.

இந்த வசந்தகாலத்தில் கவிதைகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. என் கவிதைகளில் என்னையறியாமல் வந்துவிடும் சாம்பல் நிற பூனைகளைப் பற்றி இப்பொழுதெல்லாம் அதிகம் கவலைப்படுவதில்லை. அந்த பூனைகளை அதன் போக்குக்கு விட்டுவிடுகிறேன். அவை, எனது கவிதைகளின் ஆரம்ப வரி முதல் இறுதி வரை ஆட்டம் போடுகின்றன. வசந்த காலத்தில் என்னுள் புகுந்துக்கொண்ட ஆனந்தத்தை பகிர்ந்துக்கொள்ள யாரும் இல்லாத போது, இந்த பூனைகளிடம் பேசத்தொடங்குகிறேன். எத்தனை யுகங்கள் ஆனாலும் இந்த கவிதைகளுக்குள் அழியாமல் இருக்க போகும் இந்த பூனைகள், அந்த கவிதையில் உள்ள வார்த்தைகளை உண்டே உயிர் வாழ்வதாக சொல்லுகின்றன. அதனிடம் சில நேரங்களில் நகுலன் வீட்டு பூனைகளைப் பற்றியும் விசாரிக்கிறேன். என்னுடைய வசந்தகால இன்பம் அவைகளுக்கும் தொற்றிக்கொள்கிறது, ஒரு பூனை எப்பொழுதோ படித்த பாரதியின் கவிதை ஒன்றை மிகவும் சத்தமாக வாசிக்கிறது.

பின்னர், எனக்காக மட்டுமே எழுதிக்கொண்டு இருக்கும் ஒரு எழுத்தாளனை சந்தித்தேன். அவனுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. அவனுடைய ஒரே வாசகன் நான்தான் என்று சொல்லி அவனின் வசந்தகாலத்தினை அழிக்க விரும்பாததால், தவறான முகவரிக்கு வந்துவிட்டதாக சொல்லி சென்றேன்.

இந்த வசந்தகாலத்தில், என் புனைவு உலகிற்கு எப்படி நுழைவது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த பெண்ணொருத்தியை, அரைப் பக்கமே எழுதிய ஒரு பத்திக் கதை அல்லது கட்டுரை மூலம் என் கதை உலகிற்கு அழைத்துவந்தேன். இந்த வசந்தகாலத்தில் ஒரு அபலை பெண்ணுக்கு வாழ்வு கொடுத்தது என் வசந்தகாலத்தை இன்னும் மகிழ்ச்சிப்படுத்தியது.

இரவினூடே வந்து சென்ற ஒரு ரயிலின் உதவியுடன், என் கனவுலகிற்கு பயணப்பட்டேன். அங்கு எனக்கு மிகவும் பிடித்த என் பள்ளிக்கால பெண்ணை சந்திக்க நேர்ந்தது. அவள், அவளின் கணவனையும், குழந்தையையும் அறிமுகம் செய்தாள். அவளின் கணவனுடன் தேநீர் அருந்தும் போது, அவனும் ஒரு ரயில் மூலமாகவே இந்த கனவுலகிற்கு வந்ததாகச் சொன்னான். நாங்கள் தேநீர் அருந்திக்கொண்டிருப்பது அவன் கனவினால். அல்லது என் கனவினால் என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போதே - இந்த வசந்தகாலத்தில் என் ஜன்னலோரத்தில் எனக்காக மட்டுமே பொழியும் மழைச்சாரலால் உருவான பனித்துளிகள் என் முகத்தினை தடவ, நான் தூக்கத்திலிருந்து எழுந்தேன்.

Tuesday, January 3, 2012

ஒரு பின்னூட்டம்

எனது பழையப் பதிவுகளை புதிய டெம்ப்ளேட்டில் பார்த்தால் எப்படி இருக்கும் என்ற ஆசையில், பழையப் பதிவுகளை மேய்ந்துக்கொண்டு இருந்தேன். அப்பொழுது பேரின்பா எனது பதிவு ஒன்றுக்கு எழுதிய ஒரு பின்னூட்டத்தை படிக்க நேர்ந்தது. 

பேரின்பாவின் பின்னூட்டம் கீழே.....
என் வரையில் கவிதையை நான் ரகம் பிரிப்பதில்லை. அது நல்லது அல்லது லாயக்கற்றது என்பதை அடுத்த கவிதை எழுதும் போதுதான் தீர்மானிக்கிறேன். எழுத்துப்பிழை இல்லாமல் இருப்பதில்லை. கவிதையை அதுபாட்டுக்கு நடை பழகவிட்டுவிடுவதே என் வழக்கம். “இந்த கவிதை புரியவேயில்லை” என்பது, “அவனுக்கு கோர்வையாக பேசத்தெரியாது“ என்பதைப் போன்றது.

வார்த்தைகளை கைபிடி அளவே பயன்படுத்துவது கவிதையின் அடிநாதம். ஒருவன் சொல்லவந்த விஷயத்தை அவன் பார்வைக்கே சென்று பார்ப்பது மேலோங்கிய ரசனை. எழுதிய அத்தனை கவிதைகளும் அனைவருக்கும் புரிவதில்லை. ‘இதுதான் என் கவிதையின் சாரம்‘ என பிரச்சார வார்த்தைகளைக் கொண்டு புனைவது கவிதையாகாது என்பது என் சார்பு.

என்றோ நான் பார்த்த என் அம்மாயி வீட்டின் திண்ணையை நான் கவிதையாய் சொல்லும்போது அது காட்சி விவரிப்பில் அம்சமானதாக இருப்பினும் , வாசிப்பவர் மனது என்றோ தான் பார்த்த அழுக்கு கிராமத்துத் திண்ணையை ஞாபகப்படுத்திக்கொள்ளும். நான் பார்த்த திண்ணை இப்படித்தான் இருந்தது என்பதை விவரிக்கிறேன். அவர்கள் கற்பனையில் அது வேறு ஒரு திண்ணை. வேறுபாடு வந்தேதீரும். அதை எற்றுக்கொள்ளும் மனம் என்னிடமுண்டு.

-பேரின்பா