Thursday, September 29, 2011

எதற்கும் உங்கள் மனதை தயார் படுத்திக்கொள்ளுங்கள்

சினிமாக்களைப் பற்றி எழுதவே கூடாது என்று நினைத்தாலும், மீண்டும் மீண்டும் அங்கேயே வந்து நிற்கிறேன். தமிழகத்தில் சினிமாவை தவிற்று பேச வேறு எதாவது இருக்கிறதா என்ன??

இந்தமுறை இந்த பதிவு "எங்கேயும் எப்போதும்" திரைப்படம் பற்றி. வழக்கம் போல் இந்த படத்தையும் முதல் நாளே பார்த்தாகிவிட்டது.  பார்த்த இடம் எங்க ஊரில் இருக்கும் தேவி திரையரங்கம். கொஞ்ச பேருக்கு ஸ்டார் தியேட்டர் என்றால்தான் தெரியும். அவர்களாம் நாகைக்கு வந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் மேலானவர்களாக இருக்ககூடும். காரைக்கால், திருவாரூர், நாகை இந்த மூன்று ஊர்களில் இருப்பதிலேயே சிறந்த தியேட்டர் தேவிதான் என்று தினேஷ் சொல்கிறான், அது உண்மையா என்று தெரியவில்லை.

திரைப்படத்தை பார்த்து இரண்டு வாரங்கள் கழித்து இந்த பதிவை எழுத காரணம், "அன்று திரைப்படத்தைப் பார்த்த போது அந்தளவு முக்கியமான திரைப்படமாக எனக்கு தோன்றவில்லை". ஆனால், இப்பொழுது திரைப்படத்திற்கு வரும் பாராட்டுக்களை பார்க்கும் போது, அந்த படத்தைப் பற்றி சிலவற்றை மேலோட்டமாக சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன். எனென்றால், வரலாறு மிகவும் முக்கியம் அல்லவா??இந்த திரைப்படத்தைப் பாராட்டுபவர்கள் சொல்லும் காரணங்கள்.... காதல் காட்சிகள் மற்றும் அந்த பேருந்து விபத்து.

எனக்கு "எங்கேயும் எப்போதும்" ஒரு "நாளைய இயக்குநர்" வகை திரைப்படம் போல்தான் தோன்றுகிறது. முதலிலேயே அந்த பேருந்து விபத்து எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு அதற்கு தகுந்தால் போல், கதையை நகர்த்தி உள்ளனர்.

ஒரு கொடூரமான காட்சியை வைத்தால் திரைப்படம் வெற்றி பெற்று விடும் என்ற பிம்பத்தை இந்த திரைப்படம் உருவாக்க அதிக வாய்ப்புள்ளது. ஆங்கில சினிமாக்களில் "Saw, Hostel மற்றும் Final Destination" போன்ற திரைப்படங்கள் மூலம் எற்கனவே இந்த பிம்பத்தை உருவாக்கிவிட்டார்கள்.  தமிழ்சினிமாவில், "பருத்திவீரன்" தந்த பாதிப்பு "ஈசன்" திரைப்படம் வரை தொடர்ந்து வந்ததை நாம் அனைவருமே பார்த்தோம்.

அடுத்து காதல் காட்சிகள் பற்றி, உண்மையாகவே நிஜவாழ்வில் காதல் இப்படிதான் இருக்குமா??, எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும்.

மொத்தத்தில் என்னைப் பொறுத்த வரை "எங்கேயும் எப்போதும்" ஒரு சுமாரான திரைப்படம் மட்டுமே, நீங்கள் சொல்வது போல் "தமிழ்சினிமாவை மாற்றியமைக்க ஒரு புது முயற்சி" என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

கடைசியாக,

எதற்கும் உங்கள் மனதை தயார் படுத்திக்கொள்ளுங்கள், கொடூரமான காட்சிக் கொண்ட திரைப்படங்கள் இனி வரிசையாக தமிழ் சினிமாவில் வரலாம்.

Sunday, September 25, 2011

எதற்காக என்னை பின் தொடர்கிறாய்??

இந்த பதிவு உயிரோசையில் வெளிவந்துள்ளது.
http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4870  

யாரப்பா நீ?? எதற்காக என்னை பின் தொடர்கிறாய்??. என்னிடம் எதை எதிர்ப்பாக்கிறாய் நீ??. என்னிடம் உனக்கு தருவதற்கு என்று எதுவும் இல்லை.

சரி, ஆம். என்னிடம் தருவதற்கு என்று சில இருக்கிறது, ஆனால் நான் அதை உனக்கு தருவதாக இல்லை. வேண்டுமானால், என் புத்தக அலமாரியில் பல நாட்களாக தூங்கிக்கொண்டு இருக்கும் பாரதியின் கவிதை புத்தகத்தை எடுத்துக்கொண்டு போ. உனக்கு பிடித்தவன்தான் பாரதி என்றாலும், நீ அந்த புத்தகத்தை விரும்பமாட்டாய் என்பது எனக்கு நன்றாக தெரியும். இப்பொழுது மலிவு விலையில் பாரதி எல்லா கடைகளிலும் கிடைக்கிறான். ஒரு மலிவு விலை புத்தகத்துக்காக'வா என்னை இத்தனை நாட்களாய் நீ பின்தொடர்ந்து இருப்பாய்?? கண்டிப்பாக இருக்காது.

உன்னுடைய எதிர்பார்ப்பில் ஒரு நியாயம் இருக்கிறது, ஆனால் உனக்கு நான் எதுவும் தருவதாக இல்லை. இதுவே என்னுடைய சுபாவம். இதற்காக நான் உன்னிடம் மன்னிப்பு கேட்க போவதும் இல்லை. இதுவரை என்னை பின் தொடர்ந்தவர்களுக்கு நான் என்ன, என்ன? கொடுமைலாம் செய்து இருக்கிறேன் என்பது உனக்கு தெரிய வந்தால், நீ என் முகத்தில் காரி உமிழ்ந்து விட்டு சென்றுவிடுவாய். என்னுடன் பல வருடங்களாக பழகிய தோழி ஒருத்தி தற்கொலை செய்து கொண்டதற்கு நான்தான் காரணம் என்பது உனக்கு தெரியுமா?? என்னுடைய கல்லூரி நண்பன் ஒருவன், ஒவ்வொரு அம்மாவாசை அன்றும் வெறிபிடித்த மிருகமாக மாறுவதற்கு நான்தான் காரணம் என்பதாவது உனக்கு தெரியுமா?? உன்னை போலவே என்னிடம் ஒன்றும் பேசாமல் பல நாட்களாக பின்தொடர்ந்த ஒருவன், நடுரோட்டில் மயங்கி தண்ணீர், தண்ணீர் என்று அலறிய போது, அவனை பார்க்காதவன் போல் விலகி சென்றவன் நான் என்பதாவது தெரியுமா??

இவை எல்லாம் நான் உன்னை எமாற்ற செய்யும் நாடகம் போல் தோன்றலாம். உன்னை எமாற்றுவதால் எனக்கு ஒன்றும் கிடைக்க போவதில்லை. வேண்டுமானால் உனக்காக வேறு ஒன்றை தருகிறேன். அது காப்காவின் சிறுகதை அடங்கிய புத்தகம். நீயே வைத்துக்கொள். நீ நினைப்பது போல் இது ஒன்றும் மலிவு விலை புத்தகம் அல்ல. ஒரு மிக சிறந்த சிறுகதை எழுத்தாளரின் மிக சிறந்த சிறுகதைகள் அடங்கிய புத்தகம். நான் இன்னும் படிக்கவில்லை, அனைவரும் சொல்வதால் நானும் சொல்கிறேன். மிக சிறந்த எழுத்தாளர்.

உனக்கு அதுவும் வேண்டாமா?? எனக்கு தேவைபடாதவற்றை உனக்கு தருவதாக நீ நினைத்துக்கொள்ளலாம். ஆனால், அதுதான் உண்மை. எனக்கு தேவையானவற்றை எதற்காக உனக்கு தர வேண்டும். நீ என்னை பின் தொடர்வது உன் குற்றமே தவிர, என்னுடைய குற்றம் இல்லை. நானா உன்னை பின் தொடர சொன்னேன். இப்பொழுது கூட ஒன்றும் கெட்டுவிடவில்லை, என்னை பின் தொடர்வதை நிறுத்துக்கொள். நான் உனக்கு எதாவது வகையில் உதவி செய்வேன் என்ற நம்பிக்கையில் மீண்டும் என்னை பின் தொடராதே.

இதுதான் நான். இதுவே நான். இதுவும் நான்.

ஒரு சின்ன உரையாடல்

"நியாயமா பார்த்தா இந்த சத்யபிரகாஷ் தான் ஏர்டெல் சூப்பர் சிங்கரை வாங்கியிருக்கனும். சாய்சரணுக்கு போய் கொடுத்தாங்க'டா.  நீ என்ன மச்சி நினைக்கிற??"

"ரெண்டு பேருக்குமே தந்து இருக்க கூடாது மச்சி, பேசாம எதாச்சும் பொண்ணுக்கு தந்து இருக்கலாம்"

"ஓ, நீ பூஜா ரசிகனா??"

"யாருப்பா அந்த பூஜா, எனக்கு தெரிஞ்ச ஒரே பூஜா,  என் பழைய ஆபிஸில் வேலைப்பார்த்த பொண்ணுதான். அவ முழு பெயர் பூஜா அகர்வால். அவளுடைய தீவிர ரசிகன் நான். என்ன'மா இருப்பா தெரியுமா??"

"டேய், அப்பறம் எதுக்கு பொண்ணுக்கு தந்திருக்கனும் சொல்ற?? ஃபைனலில் இருக்கும் ஒரே பொண்ணு பூஜா மட்டும் தான்".

"என்ன?? ஃபைனலில் ஒரே ஒரு பொண்ணுதானா?? எவன் மச்சி இதை Organize பண்ணுறது, கொஞ்சம் கூட டேஸ்டே இல்லாதவனா இருப்பான் போல. சரி, மாளவிகானு ஒரு பொண்ணு இருந்துச்சே அது என்னாச்சு?? என் பழைய ஆபிஸில் அந்த பெயரிலும் ஒரு பொண்ணு இருந்துச்சு, முழு பெயர் மறந்துருச்சு. அவளும் என்னமா இருப்பா தெரியுமா??"

"மியூசிக்கை பற்றி ஒன்னுமே தெரியாத உன்னிடம் பேச வந்தேன் பாரு.. என்னை அடிக்கனும் மச்சி"

Wednesday, September 14, 2011

சார், இது கொஞ்சம் சீரியஸான பதிவு


ஏர்டெல் சூப்பர் சிங்கரில் யார் வெற்றி பெறுவார் என்று தீவிரமாக சிந்தித்துக்கொண்டு இருந்த நாம், முக்கியமாக பேச வேண்டிய மூன்று விசயங்களை மறந்து விட்டோம்.

அவை::

1) பரமக்குடியில் நடந்த தூப்பாக்கி சூடு
2) கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து இரண்டு கிராமங்கள் நடத்தும் உண்ணாவிரதம்
3) 2G வழக்கில் TRAI சொல்லியிருக்கும், "அனைத்துமே அரசியல் சட்டப்படிதான் நடந்து உள்ளது, யாரையும் குற்றம் சொல்ல முடியாது" என்ற வாதம்.


இதில் முதலாவதாக பரமக்குடி சம்பவம். இதை கலவரம் என்று சொல்வதா அல்லது தூப்பாக்கி சூடு என்று சொல்வதா என்று தெரியவில்லை. இரண்டு சமூகத்துக்குள் பிரச்சனை என்பது பரமக்குடி பக்கம் எப்பொழுதும் நடப்பதுதான். என்னுடைய சித்தப்பா ஒருவர், அங்கே உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக வேலைப் பார்க்கிறார் என்ற முறையில் அந்த இரண்டு சமூகத்துக்குள் நடக்கும் பிரச்சனைகள் பலவற்றை நான் கேட்டிருக்கிறேன். இமானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் ஒரு மாணவனின் மரணம் இரண்டும் அடுத்தது நடந்ததுதான் இவ்வளவு பெரிய பிரச்சனைக்கு மூலக் காரணம் என்கிறார்கள். ஆனால், இது முன்னரே திட்டமிட்டு நடைப்பெற்ற ஒரு வன்முறை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

முத்துராமலிங்க தேவரின் நினைவு நாளை குரு பூஜை என்று சொல்லி கொண்டாதுவது போல, இமானுவேல் சேகரின் நினைவுநாளையும் கொண்டாட அந்த சமூக மக்கள் முடிவு செய்ததையும், இதை பிடிக்காத சிலர் திட்டமிட்டு நடத்தியதுதான் இந்த கலவரம் என்பதும் ஊர் அறிந்த ரகசியங்களில் ஒன்று. இந்த கலவரம் தமிழ் நாடு முழுவதும் பரவாமல் இருக்க இறைவனை வேண்டிக்கொள்வதுதான் நம்மால் இப்பொழுது செய்ய முடிந்த ஒன்று.

அடுத்து, கூடங்குளம் அணுமின் நிலையம். அன்னா ஹாசாரேயின் உண்ணாவிரதத்தை பாராட்டி பேசிக்கொண்டு இருக்கும் பலருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து இரண்டு கிராமங்கள் உண்ணாவிரதம் செய்துக்கொண்டு இருக்கிறார்கள் என்ற விசயமே தெரியாது என்று நினைக்கிறேன். அப்படி தெரிந்து இருந்தாலும் அதைப்பற்றி இங்கே யாரும் கருத்து சொல்ல மாட்டார்கள். ஏனென்றால், அன்னா ஹாசாரேயின் உண்ணாவிரதத்தைப் பற்றி பேசுவது என்பது Intellectual சமமந்த விசயம். ஆனால், கூடங்குளம் பற்றி பேசினால், உங்களை நாட்டுபுரத்தான் என்று கருதிவிடுவார்கள்.

ஜப்பானில் அனுமின் நிலையங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் முழுமையாக சரி செய்யப்படவில்லை, 1986 ஆம் வருடம் Chernobyl நட்ந்த அனுமின் விபத்தால் இன்னும் அந்த இடத்திற்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

சரி அப்படியே நம்மூரில் அனுமின் நிலையம் வந்து, அதனால் எதாவது பாதிப்பு நடந்தால், நம் இந்திய அரசாங்கம், எப்படி அதை சரி செய்யும். சுமார் இருபது வருடங்களுக்கு முன்னால் போபாலில் நடந்த விபத்துக்கே இன்னும் சரியான முறையில் தீர்வு சொல்லவில்லை. விஷ வாயுவால் பாதிக்கப்பட்டோர் இன்னும் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் செய்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

கடைசியாக 2G வழக்கு. இந்த பதிவை நீங்கள் படித்துக்கொண்டு இருக்கும் இந்நேரம், ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறையில் இருப்போர் ஒருவர் பின் ஒருவராக ஜாமினில் வெளிவர வாய்ப்புகள் அதிகம். கடநத ஒரு வருடமாக, C.B.I, CAG போன்றார் செய்த கடின உழைப்பு வீணாக போக போகிறது. கடைசி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய இந்நேரத்தில் TRAI புதிதாக ஒரு குண்டைப் போட்டு உள்ளது. " ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு அனைத்துமே அரசியல் சட்டப்படிதான் நடந்து உள்ளது" என்று TRAI  சொல்லியுள்ளது.

எல்லாமே சட்டப்படிதான் நடந்து உள்ளது என்றால், பின் இந்த வழக்கே தேவையில்லாத ஒன்று என்றாகிவிடும். இதுவரை சிறையில் இருந்தவர்கள் அரசின் மீது மானநஷ்ட வழக்கு கூட பதிவு செய்யலாம்.

சரி இதையெல்லாம் விடுங்க, ஏர்டேல் சூப்பர் சிங்கரில் யார் வெற்றி பெற்றார்கள்??. ஏதோ, புதிய "சரவணா மீனாட்சி" என்ற தொடரில் வரும் மீனாட்சி சூப்பர் என்று என் நண்பன் சொல்கிறான், உண்மையாகவா??

இசையருவியில் எனக்கு பிடித்த "நித்யா" காம்பியரிங் செய்ய வந்துள்ளார், பார்த்துவிட்டு மீண்டும் வந்து இந்த பதிவை தொடர்கிறேன்.

Sunday, September 11, 2011

நாம் வசிக்கும் பூமியின் வரலாறு என்னும் கட்டுக்கதை

இந்த பதிவு உயிரோசையில் வெளிவந்துள்ளது.
http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4808

 அசோக் பாதி எழுதி அறையில் வைத்திருந்த கதையை, அவனுக்கு தெரியாமல் திருடி, அந்த கதையை முழுதாக எழுதி இங்கே பதிவு செய்துள்ளேன். இதுவரை இந்த வலைப்பதிவில் எழுதியவை அனைத்துமே மற்றவர்களிடமிருந்து திருடியதுதான் என்பதால், அசோக்கின் கதையை திருடி இங்கே எழுதுவது என்னை எந்த வீதத்திலும் பாதிக்கவில்லை என்பதை மிகவும் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்.


நாம் வசிக்கும் பூமியின் வரலாறு என்னும் கட்டுக்கதை

தெற்கு பகுதியில் வசிக்கும் மக்களின் வரலாற்றைப் பற்றி ரகு ஆராய்ச்சி செய்ய தொடங்கிய சில நாட்களிலேயே, தெற்கு பகுதியில் எப்பொழுதோ வசித்த பழுப்பு நிற மனிதர்களைப் பற்றியும் அவனுக்கே தெரியாமல் ஆராய்ச்சி செய்ய தொடங்கிவிட்டான். பழுப்பு நிற மனிதர்கள் ஒரு காலத்தில் அங்கு ஆட்சி செய்தார்கள் என்ற செய்தி அவனுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. ஏனென்றால், ஒன்பது வருடங்களுக்கு முன்னால் ஜெர்மனியில் நடந்த ஒரு கருத்தரங்கில் பேசிய ஜார்ஜ் பிட்டரியன் ருஸ்ட் என்ற ஆராய்ச்சியாளர், பழுப்பு நிறம் கொண்ட மனிதர்கள் ஜெர்மனியில் உள்ள வடக்கு பகுதியில் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக சொல்லியிருந்தார். மேலும் அவர், ஒரு காலத்தில் பழுப்பு நிற மனிதர்கள் மொத்தமாக ஜெர்மனியை விட்டு வெளியேறியதாகவும், பின்பு அவர்கள் எங்கு சென்றார்கள் என்பதைப் பற்றிய செய்தி குறிப்புகள் இதுவரை எந்த புத்தகத்திலும் கிடைக்கவில்லை என்றும், இதற்காக அவர் பல ஆராய்ச்சிகள் செய்தும் இதுவரை எந்த பலனும் இல்லை என்றும் பேசியிருந்தார்.

பொதுவாகவே நியாபக மறதி அதிகம் உள்ள ரகுவுக்கு, அன்று ஜார்ஜ் பிட்டரியன் பேசியது இப்பொழுதும் அவன் நினைவில் நிற்பதற்கு காரணம், அவன் கலந்துக்கொண்ட முதல் கருத்தரங்கம் என்பதால் மட்டும் அல்ல. ஜார்ஜ் பிட்டரியன் அந்த கருத்தரங்கில் பேசிக்கொண்டு இருந்த போதுதான், அவன் முதல் முதலாக அனாரியாவை நேரில் சந்தித்தான். இது இந்த கதைக்கு சற்றும் சம்மந்தம் இல்லாத விசயம் என்பதால், அந்த சந்திப்பின் போது ரகுவுக்கும், அனாரியாவுக்கும் நடந்த நட்பு கலந்த காதல் சம்பாஷனைகளை இந்த கதையிலிருந்து நீக்கிவிட்டேன்.

ஜெர்மனியில் வாழ்ந்த பழுப்பு நிற மக்கள் எப்படி இங்கே உள்ள தெற்கு பகுதிக்கு வந்தார்கள் என்று ரகு ஆராய்ச்சி செய்ய தொடங்கினான். பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஜெர்மனியிலிருந்து இங்கே நடைப்பயணம் மூலமாக மட்டுமே வருவது என்பது முற்றிலும் சாத்தியமில்லாத ஒன்று. அப்படியே நடைப்பயணமாக வந்திருந்தாலும், வரும் வழியில் கண்டிப்பாக பல ராஜ்ஜியங்களை தாண்டியே வந்திருக்க வேண்டும். ஆனால், எந்த நாட்டிலும் இந்த பழுப்பு நிற மனிதர்கள் பற்றிய குறிப்புகள் இல்லை. 

அனாரியாவின் உதவியுடன் ஜெர்மனியில் உள்ள நூலகத்தில் ஜார்ஜ் பிட்டரியன் எழுதிய நூல்களை தேடிப்பார்த்ததில், ரகுவுக்கு சில குறிப்புகள் கிடைத்தது. அதன்படி பழுப்பு நிற மனிதர்கள் ஜெர்மனியிலிருந்து கப்பலில் போனதாக ரகுவுக்கு தெரியவந்தது. சுமார் நாற்பது ஆயிரம் மக்கள் ஒரே நேரத்தில் கிளம்பியதாகவும், அந்த மக்கள் எதற்காக ஜெர்மனி நாட்டை விட்டு வெளியேறினார்கள் என்று தெரியவில்லை என்றும் ஜார்ஜ் பிட்டரியன் எழுதியிருந்தார். கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ள பழுப்பு நிற மக்கள், ஒருவேளை எதாவது அபச குணங்களை பார்த்து பயந்திருக்கலாம் என்றும், இந்த வெளியேற்றத்திற்கு சில ஆண்டுகள் முன்னர் ஜரோப்பாவில் ஏற்பட்டதாக சொல்லப்படும் மிக பெரிய நிலநடுக்கம் கூட காரணமாக இருக்கலாம் என்றும் ஜார்ஜ் பிட்டரியன் எழுதியிருந்தார்.

ஜார்ஜ் பிட்டரியனை நேரில் சந்தித்தால் பழுப்பு நிற மனிதர்களைப் பற்றி மேலும் விவரங்கள் கிடைக்கும் என்று அனாரியாவும், ரகுவும் முடிவு செய்துபோது, அவர்களுக்கு கிடைத்த செய்தி அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த கருத்தரங்கம் முடிந்த இரண்டாவது மாதமே லண்டனில் ஜார்ஜ் பிட்டரியன் ஏதோ ஒரு விஷ பூச்சி கடித்து மரணம் அடைந்துவிட்டதாகவும், அவர் மரணம் அடைந்தபொழுது அவர் உடல் முழுவதும் பழுப்பு நிறத்தில் இருந்ததாகவும் ஜார்ஜ் பிட்டரியனின் மனைவி கூறினார்.

அன்று இரவு ரகு தனது பழுப்பு நிற மனிதர்களின் ஆராய்ச்சி பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தான். வலைப்பதிவில் எழுதப்படும் கதைகள் ஒரு பக்கத்தை தாண்டியிருக்க கூடாது என்ற காரணத்தால், இந்த ஆராய்ச்சியை இத்துடன் முடித்துக்கொள்ள முடிவு செய்தான். இதன்படி, தனது ஆராய்ச்சியின் முடிவை எழுதி எனக்கு மெயில் செய்திருந்தான். அந்த மெயிலில் இப்படிதான் எழுதியிருந்தது.

"நாம் வசிக்கும் பூமியின் வரலாறு என்னும் கட்டுக்கதை"

Sunday, September 4, 2011

படித்ததில் பிடித்தது

"Don't you see that the whole aim of Newspeak is to narrow the range of thought? In the end we shall make thoughtcrime literally impossible, because there will be no words in which to express it. Every concept that can ever be needed, will be expressed by exactly one word, with its meaning rigidly defined and all its subsidiary meanings rubbed out and forgotten. Already, in the Eleventh Edition, we're not far from that point. But the process will still be continuing long after you and I are dead. Every year fewer and fewer words, and the range of consciousness always a little smaller." - George Orwell

கடந்த சில நாட்களில் மிகவும் பிரபலமடைந்த வாக்கியங்களில் மேலே உள்ளதும் ஒன்று. இது 1984 என்ற நாவலில் George Orwell எழுதியது. இந்த நாவலை அவர் எழுதிய வருடம் 1949. ஏற்கனவே George Orwell எழுதிய "Animal Farm" என்ற நாவலைப் பற்றி இங்கு ஒரு முறை எழுதியிருக்கிறேன்.  (Animal Farm (விலங்குப் பண்ணை) - by George Orwell)

மீண்டும் ஒரு முறை மேலே உள்ள வாக்கியங்களைப் படித்து பாருங்கள். நாட்கள் செல்ல செல்ல வார்த்தைகளின் தேவை முற்றிலுமாக அழிந்துவிடும் என்கிறார். ஒருவேளை, இந்த புத்தகம் வெளிவந்த 1950'களில் இவர் எழுதியதைப் பார்த்து சிலர் சிரித்தாலும் சிரித்திருக்கலாம். ஆனால், இப்பொழுது அவர் சொன்னவை எல்லாம் உண்மையாகவே நடந்துக்கொண்டிருக்கிறது.

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, புத்தகம் என்பது கண்டிப்பாக 1000 பக்கம் குறையாமல் இருக்க வேண்டும். நமது இதிகாசங்கள் இதற்கு சிறந்த உதாரணம். மகாபாரதம், ராமாயணம் போன்றவற்றை சொல்லலாம். அதன் பிறகு சிறுகதைகள் வரத்தொடங்கின. கதைகளின் பக்கங்களும் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. தமிழில் புதுமைப்பித்தன் இது போல் சுறுக்கமாக கதைகள் எழுதும் முறையை அறிமுகம் செய்தார்.

பின்னர், இணையம் வந்த பிறகு, வலைப்பதிவில் எழுதுபவர்கள் ஒரு பக்கத்துக்கும் குறைவாகவே பதிவுகளை எழுதினார்கள். இப்பொழுது டிவிட்டரில், 140 எழுத்துகளில் தாங்கள் சொல்லுவதை தெளிவாக சொல்லிவிட்டு கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் அடுத்த ட்விட்டைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். FaceBook'ல் இதை விட சுலபம், நீங்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்துக்கொண்டிருக்க தேவையில்லை, வெறும் LIKE பட்டனை அழுத்தினாலே போதும்.

இவற்றைதான் George Orwell தனது 1984 நாவலிலும் சொல்கிறார். வருடங்கள் செல்ல செல்ல வார்த்தைகள் குறைந்துக்கொண்டே போகும் என்று. அதே 1984 நாவலில் வரும் இன்னொரு வாக்கியம்.

In the end the whole notion of goodness and badness will be covered by only six words -- in reality, only one word.

அந்த ஒரு வார்த்தை எது என்பதை, இப்பொழுது நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

கடைசியாக இன்னும் சில வாக்கியங்கள் (Google Plus'யை நினைத்துக்கொள்ளவும்).....

Take "good", for instance. If you have a word like "good", what need is there for a word like "bad"? "Ungood" will do just as well -- better, because it's an exact opposite, which the other is not. Or again, if you want a stronger version of "good", what sense is there in having a whole string of vague useless words like "excellent" and "splendid" and all the rest of them? "Plusgood" covers the meaning, or "doubleplusgood" if you want something stronger still.

Saturday, September 3, 2011

கடவுளின் கோரிக்கை

இந்த முறை கடவுள் ஒரு கோரிக்கையுடன் என் முன்னால் வந்து நின்றான். கோரிக்கையுடன் இதுவரை எந்த கடவுளையும் நான் பார்த்ததில்லை என்பதால், நான் கொஞ்சம் விக்கிதான் போனேன். பிறகு சுதாரித்து கொண்டு, அவன் கோரிக்கையை நான் திட்டவட்டமாக மறுத்தேன்.

கடவுளின் கோரிக்கை மிகவும் சுலபமான ஒன்றுதான். அது "நான் அவனுக்காக ஒரு கதை எழுதி தர வேண்டும்".  இதுவரை எனக்காக எதுவும் செய்யாத கடவுளிடம் எனக்கு ஒருவித பகைமை உணர்வு எற்பட்டது உண்மையே.  அதுவே அவன் கோரிக்கையை நான் நிராகரித்தற்கு காரணம் என்று நினைக்கிறேன்.

அவன் பிடிவாதமாக இருந்தான். அவன் கோரிக்கையை ஏற்கும் வரை, எனது அறையை விட்டு வெளியேற போவதில்லை என்றான். இன்னும் சிறிது நேரத்தில் எனது தோழி வரும் நேரம் அது. அவள் வரும்பொழுது இவன் இங்கு இருந்தால் அது தேவையில்லாத பல பிரச்சனைகளை உருவாக்கும், நான் பல பொய்களை அவளிடம் சொல்ல நேரிடும். ஆகவே, அவள் வருகையின் போது, இவனின் இருப்பை நான் விரும்பவில்லை. எனது பெட்டியில் பல நாட்களாக உறங்கும் கதை ஒன்றை அவனுக்கு தர சம்மதித்தேன். என்னுடைய காதல் தோல்வியின் முதல் நாளில் எழுதிய நான்கு பக்க கதை அது. நான்கு பக்கங்களில் ஒரு பக்கம் முழுவதும் அவளின் பெயர் மட்டுமே இருக்கும்.

ஆனால், பழைய கதைகளை அவன் விரும்பவில்லை. ஒரு புதிய கதையை உடனே தனக்கு எழுதி தரும்படி வற்புறுத்தினான். கதைகளை உடனே எழுதிவிட முடியாது என்றும் அதற்கு பல நாட்களாகலாம் என்றும் விளக்கினேன். பரவாயில்லை, அதுவரை எனது அறையிலேயே காத்திருப்பதாக கூறினான். அவன் கட்டளையிடும் தோனியில் சொல்லவில்லை. அவனுக்கு தெரியும், என்னை கட்டளைகள் மூலம் அடிபணிய வைக்க முடியாது என்று.

நான் எவ்வளவு சொல்லியும் அவன் எனது அறையை விட்டு வெளியேறுவதாக இல்லை. இப்பொழுது இவனை எனது அறையிலிருந்து வெளியேற்றுவது மிகவும் முக்கியமான ஒன்று. அவனிடம் எனது தோழியின் வருகையைப் பற்றி கூறினேன். இந்த சந்திப்பை ஏற்பாடு செய்ய நான் பல நாட்கள் போராட வேண்டியிருந்தது என்றேன். அவன் அமைதியாக என்னைப் பார்த்து சிரித்தான். என்னை திருத்தவே முடியாது என்றான். என்னுடைய கவலை புரிகிறது என்றான். ஆனால், ஒரு சிற்றிதழ் ஆசிரியருக்கு கதையுடன் வருவதாக வாக்கு அளித்ததாகவும், இந்த அறையை விட்டு வெளியேறுவது என்பது, அது கதையுடன் மட்டுமே சாத்தியம் என்றான். கடவுள்களின் விதி 1810'ன்** கீழ், கோரிக்கைகளுடன் போகும் எந்த கடவுளும் கோரிக்கை நிறைவேறும் வரை திரும்ப கூடாது என்பதை மீண்டும் ஒரு முறை எனக்கு நினைவுப்படுத்தினான். 

கடைசியில் அவன் விருப்பத்திற்கு ஏற்ப அவனுக்காக ஒரு கதை எழுத தொடங்கினேன். அது இப்படி தொடங்கியது.

"இந்த முறை கடவுள் ஒரு கோரிக்கையுடன் என் முன்னால் வந்து நின்றான். கோரிக்கையுடன் இதுவரை எந்த கடவுளையும் நான் பார்த்ததில்லை என்பதால், நான் கொஞ்சம் விக்கிதான் போனேன். பிறகு சுதாரித்து கொண்டு, அவன் கோரிக்கையை நான் திட்டவட்டமாக மறுத்தேன்............"

குறிப்பு:
********
**விதி எண் 183 என்பதிலிருந்து 1810 என்று மாற்றப்பட்டு உள்ளது.