Friday, December 26, 2008

சாரு நிவேதிதாவின் பத்து புதிய புத்தகங்கள்

ஜனவரி பத்தாம் தேதி முதல் சென்னை புத்தக கண்காட்சி தொடங்க இருக்கிறது. மிகுந்த எதிர்பார்புடன் காத்துக்கொண்டு இருக்கிறேன். அதற்கு முக்கிய காரணம் சாரு நிவேதிதாவின் பத்து புதிய புத்தகங்களை உயிர்மை பதிப்பகம் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடுகிறது. நான் மிகவும் விரும்பி படிக்கும் எழுத்தாளர்களில் ஒருவர் சாரு நிவேதிதா.

2008'ம் ஆண்டு நடுவில் இருந்து தான் சாருவின் எழுத்துக்களை படிக்க தொடங்கினேன். அவரின் இனையதளத்தில் ( http://www.charuonline.com/ ) இருந்து தான் எனக்கு அவரின் எழுத்துக்கள் அறிமுகம் ஆனது. சாரு என் ஊர்காரர் என்று தெரிந்த பின்னர் அவரின் எழுத்துக்கள் மீது ஒரு தனி ஈடுபாடு உருவானது.

சாருவின் பழைய கதைகள் எதுவும் தெரியாமல் தான் அவரின் எழுத்துக்களை படிக்க தொடங்கினேன். அதனால் அவரின் எழுத்துக்கள் முதலில் எனக்கு பயங்கர அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அனைவரும் பேசவே வெட்கபடுகின்ற, பயப்படுகின்ற விஷயங்களை சாருவால் மிகவும் சாதாரன முறையில் எழுத முடிகின்றது. சிறிது சிறிதாக அவரை பற்றியும், அவருடைய பழைய கதைகளையும் படித்த போது எனக்குள் உருவான சாருவின் பிம்பம் எனக்கு பயத்தை உண்டு பண்ணியது. அவருக்கு மனநோய் எதாவது இருக்கலாம் என்று கூட நான் பயந்தது உண்டு.

சாரு தன் வாசகர்களுக்கு சொல்வது " உனக்கு பிடித்து இருந்தால் படி, இல்லை என்றால் படிக்காமல் விட்டுவிடு ". சாருவுக்கு தெரியும் தன் எழுத்தை ஒருமுறை படித்தவன் பிடிக்கின்றதோ இல்லையோ தொடர்ந்து படிப்பான் என்று. இதன் காரணமாக தான் சாருவின் எழுத்துக்கள் அதிக அளவு விமர்சிக்கப்படுகின்ற என்று நினைக்கிறேன்.

இப்பொழுது உள்ள சாரு, சுஜாதா விட்டு சென்ற இடத்தை பிடிக்க முயற்சிப்பதாக தெரிகிறது. அதற்காக தான் ஒரே நேரத்தில் பத்து புத்தக்ங்களை வெளியிடும் முயற்சி என்று நினைக்கிறேன். சாருவின் எழுத்துக்கள் எக்ஸிஸ்டென்ஷியலிசம் (Existentialism) சார்பான எழுத்துக்கள் என்று கேள்விபட்டு அதைபற்றி இன்டர்நெட்டில் தேட ஆரம்பித்தேன். ஆனால் அதை பற்றி இன்று வரை சரியான பதில் கிடைக்கவில்லை, அதற்கு பதிலாக பின்நவீனத்துவம், postmodernism என்று புதிய கேள்விகள் தான் முளைத்து உள்ளது.

ஸீரோ டிகிரி புத்தகத்தில் கடைசி 30 பக்கங்களில் சாரு தன் மகளுக்கு எழுதி இருக்கும் கவிதைகள் படித்த அனைவரும் கண்டிப்பாக கண்ணிர் சிந்தி இருப்பார்கள்.

சாருவின் மன்னிக்கவும் பெருமாளின் "குட்டிக் கதைகள் நூற்றியெட்டு " புத்தகமாக வெளிவர இருக்கிறது. இந்த தமிழின் முதல் இன்டர்நெட் தொடர்கதையை எற்கனேவே அவரின் வலைபதிவில் படித்து விட்டேன், இருந்தாலும் இந்த புத்தகத்தை வாங்கி ஒரே முச்சில் படித்து முடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. இப்படி தான் சாரு தன் வாசகர்கள் அனைவரையும் தன் எழுத்தால் கட்டிப்போட்டு இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

குட்டிக் கதைகள் நூற்றியெட்டில் 38வது கதை படித்துவிட்டு நானும் என் நண்பனும் இரவு 12 மணிக்கு கண்டிப்பாக ஒரு குவார்ட்டர் போட வேண்டும் என்று ஒவ்வொரு டாஸ்மார்க் கடையாக அலைந்தது ஒரு தனிக்கதை.

எனக்கும் என் நண்பனுக்கும் சாருவின் கதைகளில் உள்ள நம்பகதன்மை பற்றி எப்பொழுதும் விவாதம் நடந்து கொண்டே இருக்கும். அவரின் எழுத்தில் எது உண்மை, எது பொய், எது கற்பனை என்று விவாதித்து கொண்டே இருப்போம். "குட்டிக் கதைகள் நூற்றியெட்டில்" வருகின்ற ஜெஸ்ஸியும், பெருமாளின் மகளும் எத்திராஜ் கல்லூரியில் படிக்கிறார்கள் என்று வரும். அது உண்மைதானா என்று தெரிந்து கொள்ள என் நண்பன் அவனுக்கு தெரிந்த எத்திராஜ் கல்லூரி மாணவிகளிடம் எல்லாம் "குட்டிக் கதைகள் நூற்றியெட்டு" கதையை சொல்லி விசாரித்து இருக்கான் (அவனுக்கு நண்பர்கள் வட்டம் அதிகம் ). அதில் ஒர் பெண் இவனை கொலை செய்யவே வந்து விட்டாள்.

அதே "குட்டிக் கதைகள் நூற்றியெட்டின்" முடிவுரையில் இந்த கதையால் தன் குடும்பத்தில் பிரச்சனை உண்டாகி உள்ளது என்று சாரு எழுதிய போது, இது எந்த அளவு உண்மை என்ற கேள்வி தான் எனக்கு உருவாகியது.

சாருவின் புதிய புத்தகங்களை வாங்கி படித்துவிட்டு மிண்டும் உங்களை இங்கு சந்திக்கிறேன்.

பின்குறிப்பு:
==========

இது வரை வலைபதிவிலும், இ-மெயிலிலும் மட்டுமே பேசி கொண்டு இருக்கும் நானும் தோழி வனிதாவும் இந்த சென்னை புத்தக கண்காட்சியில் சந்திக்கலாம் என்று இருக்கிறோம். நான் சென்னை புத்தக கண்காட்சியை அவலுடன் எதிப்பார்க்க இதுவும் ஒரு காரணம்.

Wednesday, December 24, 2008

அசோக்கின் டைரியில் இருந்து சில பக்கங்கள்.

நாள் : 19-12- 2008

இதோ சத்தியம் தியேட்டர் வாசலில் காத்துக்கொண்டு இருக்கிறேன். போனை எடுத்து நேரத்தை பார்த்தேன், இப்பொழுது தான் மணி 5:45 ஆகியிருக்கிறது. திரைப்படம் 6:30க்கு தான் ஆரம்பிக்க போகிறது. அது வரை இப்படி தான் தியேட்டர் வாசலில் உள்ள குட்டி சுவரில் உட்கார்ந்து இருக்க வேண்டும். டிக்கெட்டும் என்னிடம் இல்லை, சிவாவிடம் தான் இருக்கிறது. சிவா கண்டிப்பாக படம் ஆரம்பிக்க ஒரு ஐந்து நிமிடம் முன்னால் தான் வருவான். அதுவரை இப்படி தான் உட்கார்ந்து இருக்க வேண்டும். பேசாமல் Landmark கடையில் இன்னும் ஒரு அரைமணி நேரம் செலவழித்து இருக்கலாம். ஆனால் எவ்வளவு நேரம் தான் அந்த ஒரே ஓர் அடுக்கில் இருக்கும் தமிழ் புத்தகங்களை பார்த்து கொண்டு இருப்பது. ஏன் Landmark'ல் தமிழ் புத்தகங்கள் இன்னும் கொஞ்சம் வாங்கி வைத்தால் தான் என்ன்??..

இந்த மாலை நேரத்தில் இப்படி சத்தியம் தியேட்டர் வாசலில் உட்கார்ந்து கலர் கலராய் பார்த்துக் கொண்டு இருப்பதும் நன்றாக தான் இருக்கிறது. அப்படியே என் கண்கள் அங்கும் இங்கும் அலைய தொடங்கின. எனக்கு எதிரில் ஒரு ஜோடி நின்று கொண்டு இருக்கிறது, ஏன் அவன் அவளை இப்படி இறுக்கமாக அனைத்துக்கொண்டு இருக்கிறான் ??.. நடுவில் சிறிது இடைவெளி இருந்தாலும் இன்னொருவன் வந்து அவளை தள்ளிக்கொண்டு போய் விடுவான் என்ற பயமா??.. எனக்கு அவனை நினைக்க நினைக்க சிரிப்பாக வந்தது.

என்னை போல சிலர் தான் தனியாக நின்று கொண்டு இருந்தார்கள். மற்ற அனைவரும் ஒரு Group'கவோ அல்லது ஜோடியாகவோ தான் இருக்கிறார்கள். எனக்கு வலது பக்கத்தில் ஒரு பெண் தனியாக நின்று கொண்டு இருக்கிறாள். Low Hip ஜீன்ஸ் பேண்டடும், டி-சர்ட்டும் நல்ல பொருத்தமாக தான் அணிந்து இருந்தாள். கண்டிப்பாக வயது 20'யை தாண்டி இருக்காது. நான் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்ததை அவள் பார்த்து விட்டாள். ஆனால் அவளிடம் எந்த ஒரு Reaction'ம் இல்லை. இதே போல் எத்தனை பேரை அவள் பார்த்து இருப்பாள். இப்பொழுது அவளை பொறுத்தவரை நான் பெண்களை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் ஒரு பொம்பளை பொறுக்கி.

இந்த எண்ணமே எனக்கு என் மீது எரிச்சலை உண்டு பண்ணியது. நான் வேறு பக்கம் திரும்பி கொண்டேன். அய்யோ இந்த பக்கமும் ஒரு பெண். ஏன் இன்று சத்தியம் தியேட்டர் வாசலில் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் ??. இல்லை என் கண்கள் பெண்களை மட்டும் தான் பார்க்கிறதா ??...இப்பொழுது எல்லோரும் என்னையே பார்ப்பது போல் எண்ணம் உருவானது. என்னை இங்கு காக்க வைத்த சிவாவின் மீது கோபமாக வந்தது. நான் இந்த எண்ணங்களில் இருந்து வெளிய வர, போனை எடுத்து சசிக்கு போன் செய்தேன்.

போனில் சசியிடம் சத்தியம் தியேட்டரில் இருப்பதாக கூறியவுடன், அவன் கேட்டது " என்ன மச்சி ?.. பிகரா கலக்கு...". நான் பதிலுக்கு " உன்னை மாதிரிலாம் இல்ல மச்சி " என்றேன். நானும் அவனும் இதுவரை எந்த ஒரு பெண் கூடவும் ஒரு T,V Show கூட பார்த்தது இல்லை என்பது எங்கள் இரண்டு பேருக்குமே நன்றாக தெரியும். சசிக்கு ஆபிஸில் வேலை இருப்பதாகவும், அவனே திரும்பி அழைப்பதாகவும் சொல்லிவிட்டு அவன் போனை வைத்துவிட்டான்.

அடுத்து சிவாவிற்கு போன் செய்தேன். வண்டியில் வந்து கொண்டு இருப்பான் போல, போனை எடுக்கவில்லை,. மணி இப்பொழுது 6:10, இன்னும் 20 நிமிடத்தை கழித்தாக வேண்டும். அந்த Low Hip ஜீன்ஸ் பெண் அங்கேயே தான் நின்று கொண்டு இருந்தாள். அவள் இப்பொழுது என்னை முறைப்பது போல் இருந்தது. அவளுடன் இப்பொழுது புதிதாக இன்னொருவள் சேர்ந்து இருந்தாள். வந்தவள் நீல நிற பாட்டியலாவும் வெள்ளை நிற மேல்சட்டையும் அணிந்து இருந்தாள். நீல நிற பாட்டியலாவை பார்த்தவுடன் எனக்கு கவிதாவின் ஞாபகம் வந்தது.

கவிதாவுக்கு பிடித்தமான டிரஸ்களில் அதுவும் ஒன்று, அதில் அவள் தேவதையை போல் இருப்பாள். கடைசியாக அவளை நேற்று அண்ணா டவர் பார்க்கில் பார்த்த போது கூட அவள் நீல நிற பாட்டியலா தான் அணிந்து இருந்தாள்.

பின்னால் இருந்து யாரோ அழைப்பது போல இருந்தது, என் எண்ணங்களில் இருந்து விடுப்பட்டேன். சிவா வந்து விட்டான். சிவா சொஞ்சம் லேட்டாக வந்து இருக்கலாம் என்று தோன்றியது. மணி இப்பொழுது 6:20, நேரத்தை சரியாக கடைப்பிடிக்க சிவாவிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். சிறிது நேரம் பேசிவிட்டு, நானும் சிவாவும் சத்தியம் உள்ளே நுழைந்தோம். திரும்பி பார்த்தேன், Low Hip ஜீன்ஸ் பெண்ணுடன் இப்பொழுது நான்கு,ஐந்து பேர் நின்று கொண்டு இருந்தார்கள். அதில் அந்த நீல நிற பாட்டியலா பெண் மட்டும் தனியாக தெரிந்தால்.

Saturday, December 20, 2008

ஏழு காரணங்கள்

அசோக் திடிர் என்று ஒரு நாள் வேலையை ரிசைன் செய்து விட்டான். மற்றவர்களை போல மாதம் ஒரு கம்பேனியாக வேலைக்கு போகும் ஆள் அவன் இல்லை. கடந்த ஒரு ஆண்டாக அவன் அந்த கம்பேனியில் தான் வேலை செய்கிறான். அவன் செய்கின்ற மொக்கை வேலைக்கு அந்த கம்பேனியை தவிர வேறு யாரும் இந்த அளவு சம்பளம் தர மாட்டார்கள் என்று அவனே பல முறை சொல்லி இருக்கிறான். இந்த காலத்தில் IT கம்பேனில வேலை கிடைப்பதே அரிதாக இருக்கும் போது அவன் வேலையை விட்டது அவன் Roomates எல்லாருக்கும் ஆச்சர்யத்தை உண்டு பண்ணியது. அசோக் வேலையை ரிசைன் செய்ததற்கு அவன் சொல்லும் ஏழு காரணங்கள்,

1) அசோக் அலுவலகத்தில் வெள்ளி, சனியை தவிர அனைத்து நாட்களும் formal dress தான் போட வேண்டும், ஆனால் அசோகிற்கு எந்த ஒரு formal dress'ம் match ஆகாததால்.

2) அவன் வேலை பார்க்கும் கம்பேனி 24*7, ஆகவே அவன் எப்பொழுதும் cab'ல தான் ஆபிஸ் போவான். cab'ல் கூட வருகிற சிலர், சிலரை impress செய்ய மொக்கை காமெடி சொல்லி சிரிப்பதால்.

3) அசோக் அலுவலகத்தில் security violation என்று சொல்லி website அனைத்தும் தடை செய்யப்பட்டு உள்ளது. Internet'ல் company internal site மட்டும் தான் open செய்து பார்க்க முடிவதால்.

4) அசோக் cabin'க்கும் அடுத்த cabin'ல் உட்கார்ந்து இருக்கும் பெண், தினமும் முகம் முழுவதும் make-up போட்டு கொண்டு முகத்தை அவன் அருகில் காட்டி பயமுறுத்துவதால்.

5) மதியம் உணவிற்கு எப்பொழுதும் அசோக் Non-Veg தான் விரும்பி சாப்பிடுவான். ஆனால் ஆபிஸ் canteen மதிய உணவில் non-veg item எதுவும் இல்லாததால்.

6) ஆபிஸில், எல்லா வெள்ளிகிழமை மாலை வேளைகளிலும் அந்த நேரத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கும் மற்றவர்களை பற்றி
எல்லாம் கவலைப்படாமல், பாட்டு போட்டி, டான்ஸ் போட்டி, கண்ணாமுச்சி போட்டி என்று மொக்கை போட்டிகளை நடத்துவதால்.

7) ஆபிஸில் தண்ணீர் குடிக்கும் இடத்தில் cost-cutting என்று சொல்லி பேப்பர் கப்புக்கு பதிலாக எவர்சில்வர் டம்ளருக்கு மாறியதால்.


அசோக் வேலையை ரிசைன் பண்ணியதற்கான காரணங்களை பார்க்கும் போது, அவன் செய்தது சரி என்று தான் தோன்றுகிறது. உங்களுக்கு?????......


” நீ எதையாவது சகித்து கொண்டு வாழ்கிறாய் என்றால், நீ அடிமையாக வாழ்கிறாய் என்று அர்த்தம் ”

“ சகிப்புத்தன்மை என்பது அடிமைத்தனம் ”


Wednesday, December 10, 2008

காதல் கடிதம்

நான் இது வரை யாருக்கும் காதல் கடிதம் எழுதியது இல்லை. இது தான் என் முதல் காதல் கடிதம். கடிதத்தை எப்படி ஆரம்பிக்கவேண்டும் என்று கூட எனக்கு தெரியவில்லை. அன்புள்ள என்று ஆரம்பித்து இருக்கலாம், ஆனால் அப்படி ஆரம்பித்தால் அது அனைவராலும் எழுதப்பட கூடிய ஒரு சாதாரண கடிதம் ஆகியிருக்கும். முதல் வரியை படித்தவுடனே இது காதல் கடிதம் என்று தெரியவேண்டாமா??.. ஏன் உயிரே என்று ஆரம்பிக்கலாமா?? வேண்டாம் இது திரைப்பட பாடல் போல உள்ளது. சரி கடிதத்தை எப்படி தான் ஆரம்பிப்பது. அதை உன்னிடமே விட்டு விடுகிறேன். நீயே உனக்கு பிடித்தது போல் கடிதத்தை ஆரம்பித்துக்கொள். அதற்குமுன் இது ஒரு காதல் கடிதம் என்பதை மனதில் வைத்துக்கொள்.

நான் எல்லோரையும் போல காதல் கடிதத்தில் கவிதைகளை எழுதுவதாக இல்லை. அப்படி எழுதினால் நீ இந்த கடிதத்தை உடனே கிழித்துவிடுவாய் என்று எனக்கு தெரியும். உன்னை பற்றி நினைத்தவுடனே தமிழில் உள்ள வார்த்தைகள் எல்லாம் எனக்கு மறந்துவிடுகின்றது. இந்த கடித்தை எழுதும் போது தமிழ் வார்த்தைகளுக்கு கூட பஞ்சம் எற்படுகின்றது. இந்த கடிதத்தை நீ படிக்கும் போது என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் நீ நினைத்துக் கொள்ளலாம், அதற்கு உனக்கு உரிமை உண்டு. இந்த ஒன்றரை மாதத்தில் உனக்கு எத்தனையோ முறை தர நினைத்த இந்த கடிதம், இப்பொழுது தான் உயிர் பெற்று உன் கைக்கு வந்து இருக்கிறது.

உன்னிடம் கடந்த ஒன்றரை மாதங்களாக நான் வைத்து இருக்கும் காதலை கண்டிப்பாக இந்த இரண்டு பக்க கடிதத்தில் என்னால் சொல்ல முடியாது. உன்னை காதலிக்கிறேன் என்பது ஏன் இந்த ஒன்றரை மாதத்தில் ஒரு முறைக்கூட உனக்கு தெரியாமல் போனது. அல்லது தெரிந்தும் தெரியாதது போல இருக்கிறாயா??. எப்பொழுதும் மற்றவர்கள் கண்களை பார்த்தே பேசும் நான், உன் கண்களை நேரடியாக பார்க்க தைரியம் இல்லாமல் எத்தனை முறை தவித்து இருக்கிறேன் தெரியுமா??

நீ என்னை எப்பொழுதும் “ என்ன உளறுகிறாய்?, என்ன உளறுகிறாய்? ” என்று சொல்வாயே அது உண்மையாக தான் இருக்கிறது. ஒரு பக்கம் எழுதியும் காதல் கடிதத்தை என்னால் ஆரம்பிக்க கூட முடியவில்லை. சரி போதும் இத்துடன் கடிதத்தை முடித்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன், என்னடா ஆரம்பிக்கவே இல்லை அதற்குள் முடிக்க போகிறான் என்று பார்க்கிறாயா. நான் உன்னை காதலிக்கிறேன் என்பதை சொல்ல தானே இந்த கடிதம், அதான் சொல்லிவிட்டேனே. மேலும், உன்னுடைய பொன்னான நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை. காதல் கடிதத்தை எப்படி முடிப்பது. நல்ல வாக்கியங்களை சேர்த்து கடிதத்தை ஆரம்பித்த உனக்கு முடிக்கவா தெரியாது?? நீயே உனக்கு பிடித்த வாக்கியங்களை சேர்த்து இந்த கடிதத்தை முடித்துக்கொள்.

இப்படிக்கு காதலுடன்,
அசோக்.


பின்குறிப்பு::
---------------

மேலே உள்ள கடிதத்தை அவளுடைய ஆபிஸ் இ-மெயில் முகவரிக்கு அனுப்பி விட்டு பதிலுக்காக அசோக் காத்துக்கொண்டு இருந்தான். அவளிடம் இருந்து வந்த பதில் “ அசோக், கடிதம் நன்றாக இருந்தது. யாருடா அந்த பெண் ???”. எல்லாம் சும்மா கற்பனை தான் என்று சொல்லி அசோக் சமாளித்துவிட்டான். அசோக் செய்த ஒரே தவறு கடிதத்தில் எங்கேயும் அவள் பெயரை சொல்லாதது தான்.

Friday, November 14, 2008

பொய்

எனக்கு உள்ள சில கெட்ட பழக்கங்களில் ஒன்று நிறைய பொய் பேசுவது. இந்த உலகில் யார் தான் பொய் பேசவில்லை. ஒருவருக்கு பொய்யாக தெரியும் ஒரு விஷயம் மற்றவருக்கு உண்மையாக தெரியலாம். என்னை பொருத்தவரை ஒரு மோசமான உன்மைக்கு பதிலாக ஒரு அழகான பொய்யை தைரியமாக சொல்லாம். பொய் பேசுவதில் உள்ள நல்ல விஷயம் எதை வேண்டுமானாலும் அழகாக சொல்லலாம். பொய் எப்படி உருவாகிறது.... ஒரு உண்மையை மறைக்கும் போது தானாகவே ஒரு பொய் உருவாகிவிடுகிறது. " நான் சரவணா இல்லை " என்று நான் கூறினால் அது பொய்யா??. நான் சரவணா என்பது நான் சொல்லிதானே உங்களுக்கு தெரியும், அதை நானே இல்லை என்று சொல்லும் போது நான் பொய் சொல்கிறேன் என்று அர்த்தமா??...

தமிழ்நாட்டில் உள்ள விநாயகருக்கு மனைவி கிடையாது, ஆனால் வடமாநில கோயில்களில் உள்ள விநாயகருக்கு மனைவி உண்டு. இதில் " எது உண்மை எது பொய் " என்று உங்களால் கூற முடியுமா ??. இந்த உலகில் நாம் உண்மை என்று நம்புகின்ற எல்லாமே யாரோ ஓருவர் கண்டுபிடித்த பொய் தான்.

என் பெயர் சரவணா என்பது, எனது பெற்றோர் ஆரம்பித்து வைத்த பொய். 2+2=4 இது கணிதத்தில் யாரோ ஒருவன் சொன்ன பொய். ஆக, ஒரு பொய் திரும்ப திரும்ப சொல்லப்பட்டு அது அனைவராலும் ஏற்றுக்கொள்ளும் போது அது உணமையாக மாறிவிடுகிறது.

எல்லாராலும் உண்மை என்று நம்பபட்டவை சில நேரங்களில் கால மாற்றத்தால் பொய்யாக மாறலாம். solarsytem'ல் உள்ள ஓன்பதாவது கிரகம் pluto என்று எனக்கு பள்ளியில் சொல்லித்தந்தார்கள், ஆனால் இன்று pluto ஒரு கிரகமே இல்லை என்று முடிவு செய்துவிட்டார்கள். அப்படி என்றால் நான் பள்ளியில் ஒரு பொய்யை தான் படித்தேனா??..

பொய் என்பது நாம் சொல்லும் வாக்கியங்களை வைத்து முடிவு செய்யபடவில்லை, அந்த வாக்கியங்களால் ஏற்படும் பாதிப்பை வைத்து தான் முடிவு செய்யபடுகிறது. நாம் ஒருவரை புண்படும்படி பேசும் ஒவ்வொரு சொல்லும் பொய் தான்.

சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஒரு காட்சி. தலையில் ஒரு தடவை முட்டினால் கொம்பு வளரும் என்று ஜெனிலியா சொல்ல, கவுசல்யா "சந்தோஷ் இதை எல்லாமா நம்புவான் ?" என்பாள். ஜெனிலியா கூறும் பதில் "நல்லா இருக்குல". அதை மாதிரி நல்லா இருக்கிற பொய்களை நாம் நம்புவதில் நமக்கு ஒன்றும் நஷ்டம் இல்லையே.

Saturday, November 1, 2008

அசோக்கின் ரகசியங்கள் - சிறுகதை

( இது சோதனை முயற்சி தான். தயவு செய்து தவறுகள் இருந்தால் சொல்லவும், என்னை திருத்திக்கொள்கிறேன் )


அசோக் இப்பொழுது DVD'ல் "Jaane Tu Ya Jaane Na" திரைப்படம் பார்த்துக் கொண்டு இருக்கிறான். விடுமுறையில் ஊருக்கு வந்த இந்த ஒரு வாரத்தில் அந்த திரைப்படத்தை ஏழு, எட்டு முறையாவது பார்த்து இருப்பான். நாம் நினைப்பது போல் அந்த " Kabhi Kabhi Aditi Zindagi" பாடலுக்காகவோ அல்லது நட்பும் காதல் ரசமும் சொட்டுகின்ற காட்சிகளுக்காகவோ அசோக் அந்த திரைப்படத்தை பார்க்கவில்லை. சொல்லபோனால் அசோக் அந்த படத்தை ஒரு முறைக் கூட முழுமையாக பார்த்தது கிடையாது. அவனுக்கு அந்த திரைப்படத்தில் பிடித்தது எல்லாம் 58வது நிமிடத்தில் வரும் அந்தக் காட்சி மட்டும் தான்.

அந்தக் காட்சியில் ஜெனிலியாவும் அவள் தம்பியும் மனம் விட்டு பேசிக் கொள்வார்கள். சிறுவயதில் தங்களுக்குள் இருந்த நட்பு எப்படி காணாமல் போனது என்பது பற்றி. அவள் தம்பி ஐந்தாம் வகுப்பில் ஜெனிலியா கூடப் படித்த நண்பர்களின் பெயர்களைக் கூறி, அவர்களை பற்றி விரிவாக சொல்லிக் கொண்டே போவான். பிறகு ஜெனிலியாவிடம் தன்னுடன் படித்த நண்பர்களின் பெயர் எதையாவது ஒன்று மட்டும் கூறும்மாறு சொல்வான். ஆனால் ஜெனிலியாவாள் ஒரு பெயரைக் கூட ஞாபகபடுத்த முடியாது. அதற்கு ஜெனிலியா தம்பி கூறும் பதில் " எனக்கு இருந்த ஒரே நண்பன் நீ மட்டும் தான் ".

இது தான் அசோக்கிற்கு அந்த திரைப்படத்தில் பிடித்த காட்சி. அசோக் சிறுவயதில் படித்தது எல்லாம் தஞ்சையில் தான். வீட்டில் அவனுக்கு அம்மா,அப்பாவிடம் செல்லம் அதிகம், இருந்தாலும் அவனை " நல்லா படி, நல்லா படி" என்று சொல்லிக் கொண்டே இருப்பதால் அவனுக்கு அம்மா,அப்பாவை பார்க்கவே பயமாக இருக்கும். அதனால் அசோக் வீட்டில் அதிகம் பேசுவது என்றால் அது அவன் அக்காவிடம் தான். அசோக் தொடர்ந்து அக்காவிடம் எதாவது பேசிக் கொண்டே இருப்பான், அக்கா அதை பொருமையாக கேட்டுக் கொண்டே இருப்பாள். அம்மாவே பலமுறை " அக்காவும் தம்பியும் அப்படி என்ன தான் ரகசியம் பேசுவீங்களோ?? " என்று கேட்டு இருக்கிறாள். அசோக் தினமும் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன், பள்ளியில் நடந்த விசயங்களை அனைத்தையும் ஒன்று விடாமல் அப்படியே அக்காவிடம் சொல்வான். அவன் முக்கியமாக கூறுவது அவனுக்கு மட்டும் தெரிந்த ரகசியங்களை. " நாளை english sir வரமாட்டார்", " வரும் சனிக்கிழமை school off-day" என்பது போன்ற ரகசியங்களை. இவனுக்கு மட்டும் எப்படி இது எல்லாம் தெரியும் என்று அக்காவே பலமுறை வியந்து இருக்கிறாள். அசோக் அந்த வியப்புக்காகவே பல ரகசியங்களை சேகரித்து அக்காவிடம் சொல்வான்.

நாட்கள் கடந்தன. பள்ளிப் படிப்பை முடித்து மதுரையில் உள்ள பொறியியல் கல்லூரியில் சேர்ந்தாள் அசோக்கின் அக்கா. மாதத்திற்கு ஒருமுறை மட்டும் வரும் அக்காவிடம் சொல்வதற்காக ரகசியங்களை சேகரிக்க தொடங்கினான் அசோக். தான் யாரிடமும் பேசாத ஒவ்வொரு வார்த்தையும் ரகசியம் என்று நம்பினான். மற்றவர்களிடம் பேசுவதை குறைத்துக் கொண்டான். மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறாமல், அந்த கேள்விக்கான பதிலை ரகசியமாய் பாதுகாக்க தொடங்கினான். இப்படி பாதுகாத்த அனைத்து ரகசியத்தையும் விடுமுறையில் வரும் அக்காவிடம் கூறுவான். ஆனால் அசோக்கின் அக்காவோ, அவன் பேச்சு முழுவதையும் கேட்காமல் செல்போனை எடுத்துக் கொண்டு வீட்டில் எங்காவது உட்கார்ந்து கொண்டு செல்போனில் பேச தொடங்கிவிடுவாள்.

இப்படி தான் அசோக்கிற்கும் அவன் அக்காவிற்கும் முதல் இடைவெளி தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக அசோக்கும் அவன் அக்காவும் பேசி கொள்வது குறைந்தது. அவனும் அவன் அக்காவும் பிரியக் காரணமாக இருந்த செல்போனை அவன் வெறுத்தான்.

ஆனால் அவன் ரகசியங்களை சேமிப்பதை நிறுத்தவே இல்லை. அவன் ரகசியங்களை கேட்க ஆட்கள் இல்லாததை பற்றி அவன் வருத்தபடவே இல்லை. அசோக் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்த பிறகும் இந்த பழக்கத்தை நிறுத்தவில்லை. கல்லூரியில் கண்டிப்பாக மற்றவர்களிடம் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டது, அந்த நேரங்களில் அவன் பொய் சொல்ல தொடங்கினான். தான் மறைத்த ஒவ்வொரு உண்மையும் ஓர் ரகசியம் என்று நம்பினான். இன்னும் இரண்டு மாதத்தில் அசோக்கின் அக்கா திருமணம் ஆகி அமெரிக்கா சென்று விடுவாள். ஆனால் அசோக்கின் ரகசியங்கள் ???.....

Friday, October 31, 2008

Globalization'னும் கணேஷ் பீடியும்



இப்பொழுது எல்லாம் எந்த செய்தி சேனலை எடுத்தாலும் நாம் கேட்கும் வார்த்தை Globalization (உலகமயமாக்கல்). அது என்னங்க Globalization??. நான் எற்கனவே blog'ல் Globalization பற்றி சில புகைப்படங்களை பதிவு செய்து இருந்தேன். அதன் link கீழே...

http://saravanaidea.blogspot.com/2007/11/blog-post.html


சரி, இனி Globalization என்றால் என்னவென்று பார்ப்போம், நான் சொல்ல போவது..." நான் Globalization பற்றி என்ன அறிந்துக் கொண்டு உள்ளேன் " என்பதை மட்டுமே, இது சரியா, தவறா எனபதைப் நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்.

"World Is Flat" என்கின்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு தான் Globalization உருவாகி உள்ளது. World Is Flat என்பதை உலகில் அனைவருக்கும் அனைத்தும் சமம் என்ற பொருளில் நாம் எடுத்துக்கொள்ளலாம், அதாவது அமெரிக்கா white house'ல் வசிக்கும் ஜார்ஜ் புஷ்ம், இங்கு அக்கரைப்பேட்டையில் வசிக்கும் குப்புச்சாமியும் சமம் என்ற பொருள்.

உலகம் தட்டை என்ற கோட்பாட்டின் மூலம், ஒரு பொருளின் விலை உலகம் முழுவதும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது. அனைத்து நாடுகளுக்கும் சமமான export,import வரி ( சுங்க வரி) இருக்க வேண்டும். எந்த கம்பேனி வேண்டுமானாலும் அவர்களின் தயாரிப்புகளை எந்த நாட்டுக்கும் கொண்டு செல்லலாம். அமெரிக்காவில் இருக்கும் "Wall Mart" இந்தியாவில் எல்லா இடங்களிலும் கடைகளை விரிக்கலாம். நம் "Reliance"ம் உலகம் முழுவதிலும் எங்கு வேண்டுமானாலும் புதிய "Factory, Mall, Retail Stores" என்று தொடங்கலாம். இப்படி வெளிப்படையாகப் பார்த்தால் பல நல்ல விசயங்கள் இருப்பது போல் காட்சியளிப்பது Globalization.

Globalization'னை ஓர் example'வுடன் பார்ப்போம். நம் தமிழகத்தில் பிரபலமான கணேஷ் பீடி மதுரையில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு கட்டு பீடி 5 ரூபாய்க்கு விற்பனையாகிறது. உலகமயமாக்கல் வந்ததன் காரணமாக வெளிநாட்டு பீடி கம்பெனிகள் பல இந்தியாவிற்கு வருகின்றன. இதன் காரணமாக கணேஷ் பீடி விற்பனை குறைகிறது. நமது கணேஷ் பீடி owner தந்திரமாக யோசனை செய்து கணேஷ் பீடியை வெளிநாடுகளுக்கு export செய்கிறார். கணேஷ் பீடி உலகம் எங்கும் கிடைக்கின்றது. அமெரிக்காவில் கணேஷ் பீடி ஓர் கட்டு 1/2 டாலருக்கு (half dollar) விற்பனை செய்யப்படுகிறது. "World Is Flat" என்கின்ற வீதிப்படி அதன் தமிழ்நாடு விலையும் 1/2 டாலர் (25 ரூபாய்) என்று நிர்ணயம் செய்யப்படுகிறது.

இப்படி 5 ரூபாய்க்கு கிடைக்ககூடிய பொருளை 25 ரூபாய்க்கு மாற்றுவது தான் Globalization. கணேஷ் பீடிக்கு பதிலாக ஓர் விவசாயியை வைத்து பார்த்தால் இதன் உக்கிரம் நமக்கு புரியும்.

மேலே சொன்ன உதாரணம் உலகமயமாக்கலின் ஓர் பகுதி தான். இதை போல் எத்தனையோ உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். நீங்கள் மேலும் Globalization'னை பற்றி அறிந்துக் கொள்ள கீழே உள்ள link'யை பார்க்கலாம்.

http://en.wikipedia.org/wiki/Globalization

http://www.globalization101.org/

பின்குறிப்பு:
=======

நான் கடந்த சில நாட்களாக சிறுகதை எழுதலாம் என்று முயற்சி செய்தேன். வீட்டில் குப்பைகள் தான் அதிகமாகிறதே தவிர சிறுகதை வளர்ந்த மாதிரி தெரியவில்லை.கடைசியில் எதாவது ஹிந்தி சிறுகதையை ரிமேக் செய்யலாம் என்று முடிவு எடுத்து உள்ளேன்.

இதை டைப் அடிக்கும் போது எனக்கு தோன்றிய தத்துவம்,

எழுத்து என்பது சைக்கிள் மாதிரி,
நீங்கள் என்ன தான் மிதித்தாலும்… handlebar இருக்கும் பக்கம் தான் சைக்கிள் செல்லும்.

:-)................

Tuesday, October 21, 2008

இரண்டு புத்தகங்கள்




சமிபத்தில் இரண்டு புத்தகங்களை படிக்க நேர்ந்தது. ஒன்று Chetan Bhagat எழுதிய "One Night at Call Center" என்ற புத்தகம், மற்றொன்று நடிகர் சூர்யாவின் "இப்படிக்கு சூர்யா' என்ற புத்தகம்.


1) ONE NIGHT AT CALL CENTER:

"FROM INDIA'S BEST SELLING ENGLISH NOVEL WRITER" என்கின்ற தலைப்புடன் வந்திருக்கும் புத்தகம் இது. 2005ல் வெளிவந்த புத்தகம். Chetan Bhagat இதற்கு முன் "Five Point Someone" என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். நான் இன்னும் அந்த புத்தகத்தை படிக்கவில்லை. "One Night at Call Center" புத்தகத்தை நண்பன் ஒருவன் மிகவும் நல்ல புத்தகம் என்று கூறிக் கொடுத்தான். நானும் மிகவும் எதிர்பார்புடன் வாங்கிப் படித்தேன். புத்தகம் ஆரம்பம் முதல் இறுதி வரை வேறும் அபத்தங்கள்.

இப்படி தான் கதை ஆரம்பிக்கின்றது, ஓர் train compartment'ல் Chetan'னும் ஓர் இளம்பெண்ணும் தனியாக பயணம் செய்கிறார்கள். (!!!!!!...). அந்த பயணத்தில் அந்த இளம்பெண் ஓர் உண்மை கதையைச் சொல்ல சம்மதிக்கிறாள், ஆனால் அந்தக் கதையை அடுத்தப் புத்தகமாக எழுத வேண்டும் என்ற condition'வுடன். இப்படி புத்தகம் ஆரம்பத்திலேயே ஓர் சினிமாத்தனம். இந்த சினிமாத்தனம் புத்தகம் முழுவதும் தொடர்கிறது. கிளைமாக்ஸில் கடவுள் வந்து அவர்களிடம் போனில் பேசும் போதும், அடுத்து பிளான் செய்து project manager'யை ஏமாற்றும் போதும், chetan அங்கிலப் படங்களை மிஞ்சி விடுகிறார்.

IT கம்பெனியில் வேலைப் பார்பவர்கள் அனைவரும் அவர்களுடைய manager'யை வெறுக்கிறார்கள் என்ற ஓர் point'யை வைத்துக்கொண்டு கதையை நகர்த்தி இருக்கிறார் chetan. ஷியாம், பிரியங்கா, ராதிகா, வரூண், மிலிட்டரி அங்கிள், இஷா என்று இந்த கதையில் ஆறு முக்கியக் கதாபாத்திரங்கள். ஆனால் யாரை பற்றியும் முழுமையாக சொல்லவில்லை. கால்சென்டரில் வேலை செய்பவர்களை முழுமையாக அறிந்து கொள்ளாமல் இந்த புத்தகத்தை எழுதி உள்ளார் Chetan. ஓர் ஆங்கிலப் படத்திற்கு தேவையான Romance, Comedy, Sex, Twist என்று சகலமும் இதில் உள்ளது. ஓருவேளை இவை தான் இந்த புத்தகத்தை வெற்றியடைய செய்ததா என்று தெரியவில்லை. இப்பொழுது இந்த கதை "Hello" என்ற பெயரில் படமாக வெளிவந்து உள்ளது. என்ன கொடுமை சார் ???...

2) இப்படிக்கு சூர்யா

Landmark புத்தகக்கடையில் பல மாதங்களாக நான் பார்த்தப் புத்தகம் "இப்படிக்கு சூர்யா". ஓர் நடிகனால் என்ன எழுத முடியும் என்ற எண்ணத்தில் இந்த புத்தகத்தை தொட்டு கூட பார்த்தது இல்லை. தவிர்க்கமுடியாத மற்றும் சொல்லமுடியாத சில காரணங்களால் இந்த புத்தகம் என் கைக்கு வந்தது. ஓர் கோபத்தில் தான் இந்த புத்தகத்தை படிக்க தொடங்கினேன். ஆனால் அந்த புத்தகத்தின் வந்த முதல் அத்தியாயமே என்னை படிக்க தூண்டியது.

"கடல் வேண்டாம்என்று துப்புகிற கிளிஞ்சல்களைக்கூட திறமையாக பொறுக்கத் தெரியவில்லையே என்கின்ற தாழ்வு மனப்பான்மைத்தான் என் ஓரே சொத்து" என்பது தான் முதல் அத்தியாயம். நாம் நினைப்பது போல் சூர்யா ஓர் ஹீரோவாகவே பிறந்து விடவில்லை. அவருடைய பள்ளி நாட்களில் தன்னால் ஓன்றும் முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையில் தவித்து இருக்கிறார். எல்லோரும் தன் தம்பியிடம் பாசமாக இருப்பதை பார்த்து தம்பியை வெறுத்து இருக்கிறார். ஏழாம் வகுப்பில் "FAIL" ஆனதால் வேறு பள்ளியில் ஏட்டாம் வகுப்பு பயில்கிறார். இவை அனைத்தும் மிகவும் யதார்தமாகவே கூறப்பட்டு உள்ளது.

மேலே கூறியவை எல்லாம் முதல் 80 பக்கங்களில் முடிந்து விடுகின்றன். அடுத்து வரும் பக்கங்கள் சூர்யாவின் சினிமா வாழ்க்கையை பற்றி சொல்கின்றன். இவற்றை படிக்கும் போது ஓர் சலிப்பு உண்டாகிறது. முதல் 80 பக்கங்களை மட்டும் வைத்துப் பார்த்தால், இது கண்டிப்பாக ஓர் சிறந்த "SELF MOTIVATION" புத்தகம். என்னால் 130 பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை.



பின்குறிப்பு:
=======

அருண் தனது வலைபதிவில் கவிதைகள் எழுதி வருகிறான். அதன் முகவரி ::: http://www.perinba.wordpress.com/

அந்த கவிதைகளை படித்தவுடன் எனக்கு தோன்றிய கவிதை........................

தெருமுனை டீக்கடையில்
படிக்கிறேன் தினத்தந்தி

தயவு செய்து கவிதை எங்கே என்று மட்டும் கேட்காதீங்க.... முடிந்தால் முடிவில் "கன்னித்தீவு தொடர்கிறது" என்று சேர்த்துப் படிக்கவும்.

கீழே மறந்தமிழனின் கவிதை....

என் தேவைகளுக்காக
ஓர் தேவதையைத் தேடினேன்
அவளும் தேவதையாகத் தான் இருந்தால்
அவள் தேவைகள் முடியும் வரை.


என்னை அடிக்க எதையோ தேடுவது போல தெரிது????/

Tuesday, October 7, 2008

மஜ்னு

நண்பர்களுக்கு போன், sms, Orkut Scrap ஆகியவற்றின் மூலம் என்னுடைய முதல் பதிவை பற்றி அறிவித்து விட்டு feedback க்காக காத்துக்கொண்டு இருந்தேன்.

முதலில் நரேன் போன் செய்தான், என்னுடைய பதிவு நன்றாக இருப்பதாகவும் சில தமிழ் பிழைகள் இருப்பதாகவும் கூறினான். நரேன் இதுவரை எதையும் நன்றாக இல்லை, இது waste என்று சொன்னது இல்லை. அவன் கதிரவன் ஹோட்டல் உணவையே நன்றாக இருக்கு என்று சொன்னவன். யார் மனதையும் காயப்படுத்தக் கூடாது என்ற எண்ணம் அவனுக்கு.

அடுத்து செல்வா பேசினான் "இனிமேல் நீ தமிழில் blog எழுதினா முகப்பேர் வந்து உன்னை அடிப்பேன்" என்றான். சங்கர் போன் செய்து எனது பதிவில் சந்திப்பிழை இருப்பதாக கூறி அரைமணி நேரம் பேசினான், ஆனால் கடைசிவரை சந்திப்பிழை என்றால் என்னவென்று அவன் சொல்லவில்லை. பள்ளியிலும் கல்லூரியிலும் french'யை second language ஆக படித்த கவிதா எனது பதிவில் உள்ள பிழைகளை கூறியவுடன், என்து தமிழ் புலமை மிது எனக்கு சிறிது சந்தேகம் வர அரம்பித்தது.

நான் தமிழில் கடைசியாக் எழுதியது பிளஸ் 2 examக்கு என்று ஞாபகம். அதன் பிறகு நான் தமிழ் புத்தகங்கள் பலவற்றைப் படித்தாலும் நான் இது வரை தமிழில் எழுதுவதற்கு முயற்சி செய்தது கிடையாது. அதனால் தான் எனது பதிவில் பல தவறுகள் உள்ளன என்று பொய் சொல்ல மாட்டேன்.

எனக்கு சிறுவயதில் இருந்தே தமிழ் இலக்கணம் என்றால் ஆகாது. எனக்கு பள்ளியில் வந்த ஆசிரியர்கள் அப்படி. ஒருவேளை நல்ல அழகான தமிழ் டிச்சர் யாராவது வந்து இருந்தால் நான் இந்நேரம் ஓர் தமிழ் வித்வான் ஆகியிருக்கலாம். என் எல்லா பள்ளியிலும் கணிணி ஆசிரியர்கள் மட்டும் அழகாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

நான் எட்டாவது படிக்கும் போது ஓர் நாள் தமிழ் வகுப்பில் என் நண்பனிடம் "ஏன்டா நேருவை எல்லோரும் மாமா மாமானு சொல்றாங்களே, அவரு மாமா வேலை ............... " அப்படினு கேட்க, அந்த உத்தமபுத்திரன் அப்படியே தமிழ் டிச்சரிடம் சொல்லிவிட்டான். அந்த period மூமுவதும் நான் நிற்க வைக்கபட்டேன். இதன் காரணமாகவே நான் வைராக்கியமாக இரண்டு மூன்று மாதங்கள் தமிழ் புத்தகத்தை தொடாமல் இருந்தேன். அப்புறம் அப்பாவிடம் பல அடிகள் வாங்கி படித்தது தனி கதை.இப்படி தமிழுக்கும் எனக்கும் உள்ள பினைப்பு பல சண்டை சச்சரவுகளை உடையது.

என்ன தான் இருந்த போதும் நான் தமிழில் blog எழுதுவதை நிறுத்துவதாக இல்லை. தமிழ் இலக்கணத்திற்கு எதாவது நல்ல website இருந்தால் எனக்கு இ-மெயில் அனுப்பவும்.

என்னிடம் பேசுபவர்கள் எல்லாரும் இப்பொழுது என்னிடம் கேட்கும் முதல் கேள்வி யார் அந்த கவிதா ??, யாரும் என்னிடம் உனக்கும் சாருவுக்கும் எப்படி பழக்கம் என்று கேட்காததை நினைத்து எனக்கு வருத்தம் தான்.

பின்குறிப்பு::
==========
இதை எழுதி முடிக்கும் பொழுது மணி 2.25 AM. ரேடியோ மிர்ச்சியில் வைரமுத்துவின் வரிகளில் 'மஜ்னு' பட பாடல் ஒலித்து கொண்டு இருந்தது,

"இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும்,என்னையும் கவிஞன் ஆக்காதே!என்னையும் கவிஞன் ஆக்காதே!"

சரத் அவன் கம்பெனியில் வேலை பார்க்கும் ஓர் பெண்ணிடம் அவள் பெயரை கேட்ட அன்றே "இந்த வாரம் சினிமாவுக்கு போலாமா " என்று கேட்டு இருக்கிறான். அதற்கு அவள் " சினிமாவுக்கு போயிற்று, அடுத்தது beach-க்கு போலாம் என்றால் நான் வருகிறேன்" என்று சொல்லியிருக்கிறாள். சரத் கடந்த மூன்று நாட்களாக பைக்கை துடைத்து கொண்டு இருக்கிறான்.

ரேடியோ மிர்ச்சியில் இன்னும் அந்த பாடல் ஒலித்து கொண்டு இருக்கிறது.

"ஏற்கனவே மனம் எரிமலை தானே,ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்..?ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்..?"

Saturday, October 4, 2008

என் முதல் பதிவு

"ஏன்டா நீ தயிருக்கு உப்பு போட்டுக்கல ?" என்று வினோத் கேட்டவுடன் எனக்கு உப்பு போட மறந்த விசயம் ஞாபகம் வந்தது. தயிர் சாதத்தை முடிக்க போகிறேன், இனிமேல் உப்பு போட்டாலும் பயன் இல்லை. நான் எப்பொழுதுமே உப்பு கம்மியா தான் போட்டு சாப்பிடுவேன்.

நான் சுயநினைவில் தான் இருக்கிறேன் என்பதை உணர்த்துவதற்காக கடை பையனிடம் அருணுக்கு ஒர் சாப்பாடு பார்சல் சொல்லிவிட்டு, "எப்பொழுதும் தயிருக்கு உப்பு போட்டுக்க மாட்டேன்" என்று வினோத்திடம் கூறினேன்.

"அதனால் தான் உனக்கு கோபமே வர மாட்டேங்குது" என்றான் வினோத்.

இதை கேட்டவுடன் எனக்கு சுறுக்கு என்றது. ஆம் நான் எப்பொழுது கடைசியாக் கோவபட்டேன், எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. அப்படி என்றால் எனக்கு கோபமே வருவது இல்லையா. நான் எப்பொழுதும் cool ஆகவே இருக்கிறேனா?? இது எவ்வளவு நல்ல விசயம். எனக்கு எப்பொழுதும் கோபம் வருவது இல்லை. நான் எல்லா பிரச்சினையின் போதும் சிரித்து தான் பேசுகிறேன். நான் கோபமே படுவது கிடையாது.

நான் கோபமே படுவது கிடையாது என்பது பொய். நான் வீட்டுக்கு போகும் போது எல்லாம் கண்டிப்பாக அம்மாவிடமோ அப்பாவிடமோ கோபமாக ஒர் வார்த்தையாவது பேசி விடுவேன். அப்படி என்றால் இந்த சென்னை என்னை கோபம் இல்லாதவனாக மாற்றி விட்டதா ??. எப்பொழுதும் பிரியமானவர்களிடம் தான் நம் கோபத்தை காட்ட முடியும் என்று எங்கோ படித்தது ஞாபகம் வந்தது.

அப்படினா, இங்கு யாருமே எனக்கு நெருக்கமானவர்கள் இல்லையா??. நேற்று ஹிந்து பேப்பர்ல கிறிஸ்தவ மதத்தினர் கொடுமைப்படுத்த படுகிறார்கள் என்று படித்தவுடன் கோபம் வந்ததே.

இந்த மாதிரி நினைத்து கொண்டு இருக்கும் போது, வினோத் சொன்னான் " மச்சி, உனக்கு கோபமே வராது என்பது எல்லாம் பொய். நீ கோபத்தை மறைக்கிற, எப்பொழுதும் கோபத்தை வெளியில் காட்டனும் இல்லைனா blood pressure, stress, tension இப்படி எல்லாமே வரும்" என்றான்.

அவன் சொன்னது எனக்கு பயத்தை உண்டாக்கியது. இனிமேல் கண்டிப்பாக கோவபடனும் என்று முடிவு செய்தேன். நாளைக்கு அருணை சாப்பிட கூப்பிடும் போது orkutல உட்காந்து கொண்டு " மச்சி எனக்கு பார்சல் என்பான்" அப்ப அவன் கன்னத்தில் பளார் பளார்னு விடனும்.

Friday, October 3, 2008

என் தனி மனித தேடல்

நான் என்பது நான் மட்டுமே. இந்த உலகில் நான் எப்பொழுதும் தனியாகவே பயணம் செய்கிறேன். இங்கு என் கண்ணீரையோ சிரிப்பையோ பகிர்ந்து கொள்ள யாரும் இல்லை. நான் வாழ்வது எதோ ஒர் கற்பனை உலகில் என்று எண்ணி கொள்ள வேண்டாம். நானும் உங்களோடு இந்த உலகில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். திசைகள் அற்று தனியாக பயணம் செய்யும் எறும்பை போல தனியாக பயணம் செய்கிறேன். எனக்கு திசை காட்டவோ துணைக்கோ யாரும் தேவை இல்லை, என்னோடு பயணம் செய்ய சக பயணியை தான் தேடுகிறேன்.