Tuesday, January 27, 2009

என் தேவதை

தேவதைகள் கோபப்படுவார்களா ??, தேவதைகள் பொய் பேசுவார்களா??, தேவதைகள் மற்றவர்களை கேலி செய்வார்களா??, தேவதைகள் மற்றவர்களை வெறுப்பார்களா??. இந்த கேள்விகள் அனைத்தையும் அவளை பார்க்கும் முன் என்னிடம் யாராவது கேட்டு இருந்தால், கண்டிப்பாக பதில் சொல்ல திணறி இருப்பேன். இப்பொழுது இந்த கேள்விகள் அனைத்துக்கும் ஒரே பதில் "ஆம்". ஆம், என் தேவதை அழகாக கோபபடுவாள், என் தேவதை சின்ன சின்ன ரசனையான பொய்கள் பேசுவாள், என் தேவதை கேலி செய்வாள், என் தேவதை என்னை வெறுப்பாள் !!!!.

என்னுடைய பாட்டி எனக்கு சொன்ன கதைகளில் வரும் தேவதைகள் அழகானவர்கள், ஏழைகளுக்கு வரங்களை வாரி இழைப்பவர்கள். ஆனால் என் தேவதை கதை சற்று வித்தியாசமானது. ஒரு எதிர்பாராத விபத்தில் என் தேவதை எனக்கு முதல் காட்சி அளித்தாள். பழகிய சில நாட்களிலேயே நன்றாக பேச தொடங்கினாள். எனக்கு சந்தோஷம் என்ற வரத்தை போதும் போதும் என்கின்ற அளவுக்கு தந்தாள். இதுவரை பாலைவனமாக சென்ற என் வாழ்வில் மிகவும் சந்தோஷமான நாட்கள் அவை. தேவதை கதைகளில் வருவது போல் இந்த சந்தோஷம் எனக்கு கொஞ்ச நாட்கள் தான் நிலைத்தது.

வரங்கள் தருகின்ற தேவதையிடம், வரமாக அவளையே கேட்கலாமா ??. பேராசை யாரை விட்டது. ஒரு நாள் தேவதையை வரமாக கேட்டேன்.

நான் கேட்டவுடன் தேவதை முடியாது என்று ஒரே வார்த்தையில் சொல்லியிருக்கலாம் அல்லது என்னை திட்டி இருக்கலாம்,. ஆனால் தேவதையோ அழுது கொண்டே சென்று விட்டாள். தேவதையை அழ வைத்த பாவியல்லாவா நான்.

இப்பொழுது என் தேவதை என்னிடம் பேசுவது இல்லை. நான் எதிரில் சென்று மன்னிப்பு கேட்டாலும் என் தேவதை என்னை மன்னிப்பதாக இல்லை. நான் மன்னிக்க கூடிய குற்றமா செய்து உள்ளேன். என் தேவதை என்னை வெறுக்கிறாள்.

ஆம் மீண்டும் சொல்லுகிறேன், தேவதைகள் கோபபடுவார்கள், பொய் பேசுவார்கள், மற்றவர்களை வெறுக்க கூட செய்வார்கள்.

Friday, January 16, 2009

புதிர் போட்டி
மேலே உள்ள படத்தில் இருப்பது யார்?

a) மங்கள பாண்டே "அமிர் கான்"
b) விவேகானந்தர்
c) வில்லு "விஜய்"
d) இதில் யாரும் இல்லை.

பின்குறிப்பு:
==========

கேள்வியை பார்த்துவிட்டு அதிர்ச்சி அடையவேண்டாம். இந்த கேள்விக்கு பின்னால் பல கதைகள் இருக்கிறது.
கதை சுருக்கம்:

இந்த படத்தை எனது செல்போனின் Wallpaper'ஆக கடந்த ஒரு மாதமாக வைத்து இருக்கிறேன். இதை பார்த்துவிட்டு எனது வடமாநில நண்பர் என்னிடம் கேட்ட கேள்வி " Is It Mangal Pandey Aamir Khan". "No, Its Bharathi" என்றேன். அவன் கேட்ட அடுத்த கேள்வி " Who is Bharathi??".. சரி அவனுக்கு புரிகின்ற மாதிரி சொல்வோம் என்று " The Great Patriotic Tamil Poet. He wrote Vanthey Matharam in Tamil" என்றேன். உடனே அவன் " In tamil What he translated for Vanthey Matharam ??" என்றான். "Same... Vanthey Matharam only" என்றேன். நான் சொன்னது சரி தானே??...

கதை சுருக்கம் 2:

வில்லு படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு என் நண்பன் என்னிடம் சொன்னது " மச்சி, டிரைலர் கடைசியில் தலைவர் விவேகானந்தர் வேடத்தில் வருகிறார் டா"... இவன் தான் சார் உண்மையான தமிழன்.

கதை சுருக்கம் 3:

இரண்டு நாட்களுக்கு முன்னால் என் போனில் உள்ள Wallpaper'யை பார்த்துவிட்டு ஆபிஸில் உள்ள ஒருவர் என்னிடம் கேட்டது " என்னங்க விஜய் படம் எல்லாம் வச்சிருக்கிங்க... நீங்கள் விஜய் ரசிகரா ?? "... " விஜய் ரசிகரா?? " என்று அவர் கேட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் நான் மீளவில்லை.

Friday, January 2, 2009

2009ம் ஆண்டின் முதல் கிறுக்கல்

எப்படியோ ஒரு வழியாக 2008ம் ஆண்டு முடிந்து விட்டது. அனைத்து தொலைக்காட்சிகளிலும் ”2008ம் ஆண்டு ஒரு பார்வை” என்று உயிரை வாங்கி கொண்டு இருக்கிறார்கள். இந்திய பங்குசந்தை, இந்திய ஆரசியல் ஆகியவற்றுக்கு இது மோசமான ஆண்டு என்ற சர்வே வேறு. எப்படி தான் இந்த செய்தி சேனல்களுக்கு மட்டும் எதாவது பேச செய்திகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன என்று தெரியவில்லை.

என்னால் நண்பர்களிடம் கூட தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் மேல் பேசுவது கடினமாக இருக்கின்றது. இரண்டு நிமிடங்கள் பேசினாலே தமிழில் உள்ள வார்த்தைகள் அனைத்தும் தீர்ந்து போனது போல் ஒரு எண்ணம். நண்பர்களிடம் போனில் பேசும் போது மூன்றாவது நிமிடமே ”Bye" சொல்லும் பழக்கத்தை நானும் நிறுத்த பார்த்தால் அது இன்று வரை முடியவில்லை. யாரிடமாவது அதிகமாக பேசும் போது தேவையில்லாதவை பற்றி பேசுகிறோமோ என்று சிறிய ஐயம் எப்பொழுதும் இருந்துக்கொண்டே இருக்கிறது. சன் மியுசிக், இசையருவி ஆகியவற்றில் காம்பியரிங் பண்ணுபவர்களை, அதுவும் நேரடி ஒளிபரப்பில் பேசுபவர்களை கண்டிப்பாக பாராட்டிய ஆக வேண்டும். ஒரு நான்கு, ஐந்து பேர் உள்ள கூட்டத்தில் எனக்கு தெரிந்த விசயத்தை பற்றி பேசினால் கூட ஏனோ அவர்களுடன் “Involve" ஆக மனது மறுக்கிறது. எங்கேயும் எப்பொழுதும் என்னை நான் தனிமை படுத்திக்கொள்ளவே நான் விரும்புகிறேன்.

நான் இப்படி இன்று அதிகமாக பேசுவதற்கு காரணம் லா.சா.ரா’வின் சிந்தாநதி புத்தகம் படித்ததன் பாதிப்பு என்று நினைக்கிறேன். அந்த புத்தகத்தின் முன்னுரையில் லா.சா.ரா சொல்வது,,

“புரிந்தது, புரியாதது இந்த இரண்டு நிலைகளுக்கும் உண்மையிலேயே என்ன வித்தியாசம் இருக்கிறது? இரண்டுமே தற்காலிக நிலைகள். ஒருவருக்கு ஒருவிதமாகப் படுவது, அடுத்தவருக்கு வேறு விதமாகப் படுகிறது. அதே ஆளுக்கே வேறு சமயத்தில் வேறு விதமாகப் புரிகிறது. அட, கடைசிவரை, புரியாமல் இருந்தால்தான் என்ன? இருந்துவிட்டுப் போகட்டுமே!!!!!!!”

உங்களுக்கு எதாவது புரிகிறதா. இன்னும் ஒரு முறை படித்து பாருங்கள் கண்டிப்பாக புரியும்.....

புரியாமல் இருந்தால்தான் என்ன? இருந்துவிட்டுப் போகட்டுமே!


2008ல் நான் செய்த ஒரே நல்ல காரியம் வலைப்பதிவு எழுத ஆரம்பித்தது தான் ( ஏன் தான் எங்க உயிரை வாங்குற ?? என்று நீங்கள் சொல்வது எனக்கு தெரிகிறது ). வலைபதிவில் என்ன எழுதுவது என்று தெரியாமல் எதை எதையோ எழுதி கொண்டு இருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறை எழுதும் போது ஒரு வித சந்தோஷத்தை உணர்கிறேன். அந்த சந்தோஷம் தான் என்னை தொடர்ந்து கிறுக்க செய்கிறது.

இனி எல்லாம் சேனல்களிலும் வருவது போல் 2008ம் ஆண்டு ஒரு பார்வை.


2008’ல் பிடித்த திரைப்படம் : அஞ்சாதே....
பிடித்த பாடல் : கண்ணும் கண்ணும் திரைப்படத்தில் வரும் “ அன்பே அன்பே தான் வாழ்க்கையில்”..
வைரமுத்துவின் “பால் கொண்ட காபியில் இப்பொழுது பாசத்தை கலந்தது யார்” என்கின்ற வரிகளுக்காவே இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.
விரும்பி படித்த புத்தகம் : ஆதவனின் “என் பெயர் ராமசேஷன்”
மிகவும் பாதித்த சம்பவம் : ஈழ தமிழர்களுக்கு பணம் அனுப்புகிறோம் என்று சொல்லி தமிழ் அரசியல் கட்சிகள் தமிழகத்தில் நடத்திய நாடகங்கள்.
விரும்பி படித்த இனையதளம் : www.sramakrishnan.com, www.charuonline.com

இவை போது என்று நினைக்கிறேன். கண்டிப்பாக மீண்டும் சந்திப்போம்......!!!!!