Friday, December 26, 2008

சாரு நிவேதிதாவின் பத்து புதிய புத்தகங்கள்

ஜனவரி பத்தாம் தேதி முதல் சென்னை புத்தக கண்காட்சி தொடங்க இருக்கிறது. மிகுந்த எதிர்பார்புடன் காத்துக்கொண்டு இருக்கிறேன். அதற்கு முக்கிய காரணம் சாரு நிவேதிதாவின் பத்து புதிய புத்தகங்களை உயிர்மை பதிப்பகம் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடுகிறது. நான் மிகவும் விரும்பி படிக்கும் எழுத்தாளர்களில் ஒருவர் சாரு நிவேதிதா.

2008'ம் ஆண்டு நடுவில் இருந்து தான் சாருவின் எழுத்துக்களை படிக்க தொடங்கினேன். அவரின் இனையதளத்தில் ( http://www.charuonline.com/ ) இருந்து தான் எனக்கு அவரின் எழுத்துக்கள் அறிமுகம் ஆனது. சாரு என் ஊர்காரர் என்று தெரிந்த பின்னர் அவரின் எழுத்துக்கள் மீது ஒரு தனி ஈடுபாடு உருவானது.

சாருவின் பழைய கதைகள் எதுவும் தெரியாமல் தான் அவரின் எழுத்துக்களை படிக்க தொடங்கினேன். அதனால் அவரின் எழுத்துக்கள் முதலில் எனக்கு பயங்கர அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அனைவரும் பேசவே வெட்கபடுகின்ற, பயப்படுகின்ற விஷயங்களை சாருவால் மிகவும் சாதாரன முறையில் எழுத முடிகின்றது. சிறிது சிறிதாக அவரை பற்றியும், அவருடைய பழைய கதைகளையும் படித்த போது எனக்குள் உருவான சாருவின் பிம்பம் எனக்கு பயத்தை உண்டு பண்ணியது. அவருக்கு மனநோய் எதாவது இருக்கலாம் என்று கூட நான் பயந்தது உண்டு.

சாரு தன் வாசகர்களுக்கு சொல்வது " உனக்கு பிடித்து இருந்தால் படி, இல்லை என்றால் படிக்காமல் விட்டுவிடு ". சாருவுக்கு தெரியும் தன் எழுத்தை ஒருமுறை படித்தவன் பிடிக்கின்றதோ இல்லையோ தொடர்ந்து படிப்பான் என்று. இதன் காரணமாக தான் சாருவின் எழுத்துக்கள் அதிக அளவு விமர்சிக்கப்படுகின்ற என்று நினைக்கிறேன்.

இப்பொழுது உள்ள சாரு, சுஜாதா விட்டு சென்ற இடத்தை பிடிக்க முயற்சிப்பதாக தெரிகிறது. அதற்காக தான் ஒரே நேரத்தில் பத்து புத்தக்ங்களை வெளியிடும் முயற்சி என்று நினைக்கிறேன். சாருவின் எழுத்துக்கள் எக்ஸிஸ்டென்ஷியலிசம் (Existentialism) சார்பான எழுத்துக்கள் என்று கேள்விபட்டு அதைபற்றி இன்டர்நெட்டில் தேட ஆரம்பித்தேன். ஆனால் அதை பற்றி இன்று வரை சரியான பதில் கிடைக்கவில்லை, அதற்கு பதிலாக பின்நவீனத்துவம், postmodernism என்று புதிய கேள்விகள் தான் முளைத்து உள்ளது.

ஸீரோ டிகிரி புத்தகத்தில் கடைசி 30 பக்கங்களில் சாரு தன் மகளுக்கு எழுதி இருக்கும் கவிதைகள் படித்த அனைவரும் கண்டிப்பாக கண்ணிர் சிந்தி இருப்பார்கள்.

சாருவின் மன்னிக்கவும் பெருமாளின் "குட்டிக் கதைகள் நூற்றியெட்டு " புத்தகமாக வெளிவர இருக்கிறது. இந்த தமிழின் முதல் இன்டர்நெட் தொடர்கதையை எற்கனேவே அவரின் வலைபதிவில் படித்து விட்டேன், இருந்தாலும் இந்த புத்தகத்தை வாங்கி ஒரே முச்சில் படித்து முடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. இப்படி தான் சாரு தன் வாசகர்கள் அனைவரையும் தன் எழுத்தால் கட்டிப்போட்டு இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

குட்டிக் கதைகள் நூற்றியெட்டில் 38வது கதை படித்துவிட்டு நானும் என் நண்பனும் இரவு 12 மணிக்கு கண்டிப்பாக ஒரு குவார்ட்டர் போட வேண்டும் என்று ஒவ்வொரு டாஸ்மார்க் கடையாக அலைந்தது ஒரு தனிக்கதை.

எனக்கும் என் நண்பனுக்கும் சாருவின் கதைகளில் உள்ள நம்பகதன்மை பற்றி எப்பொழுதும் விவாதம் நடந்து கொண்டே இருக்கும். அவரின் எழுத்தில் எது உண்மை, எது பொய், எது கற்பனை என்று விவாதித்து கொண்டே இருப்போம். "குட்டிக் கதைகள் நூற்றியெட்டில்" வருகின்ற ஜெஸ்ஸியும், பெருமாளின் மகளும் எத்திராஜ் கல்லூரியில் படிக்கிறார்கள் என்று வரும். அது உண்மைதானா என்று தெரிந்து கொள்ள என் நண்பன் அவனுக்கு தெரிந்த எத்திராஜ் கல்லூரி மாணவிகளிடம் எல்லாம் "குட்டிக் கதைகள் நூற்றியெட்டு" கதையை சொல்லி விசாரித்து இருக்கான் (அவனுக்கு நண்பர்கள் வட்டம் அதிகம் ). அதில் ஒர் பெண் இவனை கொலை செய்யவே வந்து விட்டாள்.

அதே "குட்டிக் கதைகள் நூற்றியெட்டின்" முடிவுரையில் இந்த கதையால் தன் குடும்பத்தில் பிரச்சனை உண்டாகி உள்ளது என்று சாரு எழுதிய போது, இது எந்த அளவு உண்மை என்ற கேள்வி தான் எனக்கு உருவாகியது.

சாருவின் புதிய புத்தகங்களை வாங்கி படித்துவிட்டு மிண்டும் உங்களை இங்கு சந்திக்கிறேன்.

பின்குறிப்பு:
==========

இது வரை வலைபதிவிலும், இ-மெயிலிலும் மட்டுமே பேசி கொண்டு இருக்கும் நானும் தோழி வனிதாவும் இந்த சென்னை புத்தக கண்காட்சியில் சந்திக்கலாம் என்று இருக்கிறோம். நான் சென்னை புத்தக கண்காட்சியை அவலுடன் எதிப்பார்க்க இதுவும் ஒரு காரணம்.

Wednesday, December 24, 2008

அசோக்கின் டைரியில் இருந்து சில பக்கங்கள்.

நாள் : 19-12- 2008

இதோ சத்தியம் தியேட்டர் வாசலில் காத்துக்கொண்டு இருக்கிறேன். போனை எடுத்து நேரத்தை பார்த்தேன், இப்பொழுது தான் மணி 5:45 ஆகியிருக்கிறது. திரைப்படம் 6:30க்கு தான் ஆரம்பிக்க போகிறது. அது வரை இப்படி தான் தியேட்டர் வாசலில் உள்ள குட்டி சுவரில் உட்கார்ந்து இருக்க வேண்டும். டிக்கெட்டும் என்னிடம் இல்லை, சிவாவிடம் தான் இருக்கிறது. சிவா கண்டிப்பாக படம் ஆரம்பிக்க ஒரு ஐந்து நிமிடம் முன்னால் தான் வருவான். அதுவரை இப்படி தான் உட்கார்ந்து இருக்க வேண்டும். பேசாமல் Landmark கடையில் இன்னும் ஒரு அரைமணி நேரம் செலவழித்து இருக்கலாம். ஆனால் எவ்வளவு நேரம் தான் அந்த ஒரே ஓர் அடுக்கில் இருக்கும் தமிழ் புத்தகங்களை பார்த்து கொண்டு இருப்பது. ஏன் Landmark'ல் தமிழ் புத்தகங்கள் இன்னும் கொஞ்சம் வாங்கி வைத்தால் தான் என்ன்??..

இந்த மாலை நேரத்தில் இப்படி சத்தியம் தியேட்டர் வாசலில் உட்கார்ந்து கலர் கலராய் பார்த்துக் கொண்டு இருப்பதும் நன்றாக தான் இருக்கிறது. அப்படியே என் கண்கள் அங்கும் இங்கும் அலைய தொடங்கின. எனக்கு எதிரில் ஒரு ஜோடி நின்று கொண்டு இருக்கிறது, ஏன் அவன் அவளை இப்படி இறுக்கமாக அனைத்துக்கொண்டு இருக்கிறான் ??.. நடுவில் சிறிது இடைவெளி இருந்தாலும் இன்னொருவன் வந்து அவளை தள்ளிக்கொண்டு போய் விடுவான் என்ற பயமா??.. எனக்கு அவனை நினைக்க நினைக்க சிரிப்பாக வந்தது.

என்னை போல சிலர் தான் தனியாக நின்று கொண்டு இருந்தார்கள். மற்ற அனைவரும் ஒரு Group'கவோ அல்லது ஜோடியாகவோ தான் இருக்கிறார்கள். எனக்கு வலது பக்கத்தில் ஒரு பெண் தனியாக நின்று கொண்டு இருக்கிறாள். Low Hip ஜீன்ஸ் பேண்டடும், டி-சர்ட்டும் நல்ல பொருத்தமாக தான் அணிந்து இருந்தாள். கண்டிப்பாக வயது 20'யை தாண்டி இருக்காது. நான் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்ததை அவள் பார்த்து விட்டாள். ஆனால் அவளிடம் எந்த ஒரு Reaction'ம் இல்லை. இதே போல் எத்தனை பேரை அவள் பார்த்து இருப்பாள். இப்பொழுது அவளை பொறுத்தவரை நான் பெண்களை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் ஒரு பொம்பளை பொறுக்கி.

இந்த எண்ணமே எனக்கு என் மீது எரிச்சலை உண்டு பண்ணியது. நான் வேறு பக்கம் திரும்பி கொண்டேன். அய்யோ இந்த பக்கமும் ஒரு பெண். ஏன் இன்று சத்தியம் தியேட்டர் வாசலில் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் ??. இல்லை என் கண்கள் பெண்களை மட்டும் தான் பார்க்கிறதா ??...இப்பொழுது எல்லோரும் என்னையே பார்ப்பது போல் எண்ணம் உருவானது. என்னை இங்கு காக்க வைத்த சிவாவின் மீது கோபமாக வந்தது. நான் இந்த எண்ணங்களில் இருந்து வெளிய வர, போனை எடுத்து சசிக்கு போன் செய்தேன்.

போனில் சசியிடம் சத்தியம் தியேட்டரில் இருப்பதாக கூறியவுடன், அவன் கேட்டது " என்ன மச்சி ?.. பிகரா கலக்கு...". நான் பதிலுக்கு " உன்னை மாதிரிலாம் இல்ல மச்சி " என்றேன். நானும் அவனும் இதுவரை எந்த ஒரு பெண் கூடவும் ஒரு T,V Show கூட பார்த்தது இல்லை என்பது எங்கள் இரண்டு பேருக்குமே நன்றாக தெரியும். சசிக்கு ஆபிஸில் வேலை இருப்பதாகவும், அவனே திரும்பி அழைப்பதாகவும் சொல்லிவிட்டு அவன் போனை வைத்துவிட்டான்.

அடுத்து சிவாவிற்கு போன் செய்தேன். வண்டியில் வந்து கொண்டு இருப்பான் போல, போனை எடுக்கவில்லை,. மணி இப்பொழுது 6:10, இன்னும் 20 நிமிடத்தை கழித்தாக வேண்டும். அந்த Low Hip ஜீன்ஸ் பெண் அங்கேயே தான் நின்று கொண்டு இருந்தாள். அவள் இப்பொழுது என்னை முறைப்பது போல் இருந்தது. அவளுடன் இப்பொழுது புதிதாக இன்னொருவள் சேர்ந்து இருந்தாள். வந்தவள் நீல நிற பாட்டியலாவும் வெள்ளை நிற மேல்சட்டையும் அணிந்து இருந்தாள். நீல நிற பாட்டியலாவை பார்த்தவுடன் எனக்கு கவிதாவின் ஞாபகம் வந்தது.

கவிதாவுக்கு பிடித்தமான டிரஸ்களில் அதுவும் ஒன்று, அதில் அவள் தேவதையை போல் இருப்பாள். கடைசியாக அவளை நேற்று அண்ணா டவர் பார்க்கில் பார்த்த போது கூட அவள் நீல நிற பாட்டியலா தான் அணிந்து இருந்தாள்.

பின்னால் இருந்து யாரோ அழைப்பது போல இருந்தது, என் எண்ணங்களில் இருந்து விடுப்பட்டேன். சிவா வந்து விட்டான். சிவா சொஞ்சம் லேட்டாக வந்து இருக்கலாம் என்று தோன்றியது. மணி இப்பொழுது 6:20, நேரத்தை சரியாக கடைப்பிடிக்க சிவாவிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். சிறிது நேரம் பேசிவிட்டு, நானும் சிவாவும் சத்தியம் உள்ளே நுழைந்தோம். திரும்பி பார்த்தேன், Low Hip ஜீன்ஸ் பெண்ணுடன் இப்பொழுது நான்கு,ஐந்து பேர் நின்று கொண்டு இருந்தார்கள். அதில் அந்த நீல நிற பாட்டியலா பெண் மட்டும் தனியாக தெரிந்தால்.

Saturday, December 20, 2008

ஏழு காரணங்கள்

அசோக் திடிர் என்று ஒரு நாள் வேலையை ரிசைன் செய்து விட்டான். மற்றவர்களை போல மாதம் ஒரு கம்பேனியாக வேலைக்கு போகும் ஆள் அவன் இல்லை. கடந்த ஒரு ஆண்டாக அவன் அந்த கம்பேனியில் தான் வேலை செய்கிறான். அவன் செய்கின்ற மொக்கை வேலைக்கு அந்த கம்பேனியை தவிர வேறு யாரும் இந்த அளவு சம்பளம் தர மாட்டார்கள் என்று அவனே பல முறை சொல்லி இருக்கிறான். இந்த காலத்தில் IT கம்பேனில வேலை கிடைப்பதே அரிதாக இருக்கும் போது அவன் வேலையை விட்டது அவன் Roomates எல்லாருக்கும் ஆச்சர்யத்தை உண்டு பண்ணியது. அசோக் வேலையை ரிசைன் செய்ததற்கு அவன் சொல்லும் ஏழு காரணங்கள்,

1) அசோக் அலுவலகத்தில் வெள்ளி, சனியை தவிர அனைத்து நாட்களும் formal dress தான் போட வேண்டும், ஆனால் அசோகிற்கு எந்த ஒரு formal dress'ம் match ஆகாததால்.

2) அவன் வேலை பார்க்கும் கம்பேனி 24*7, ஆகவே அவன் எப்பொழுதும் cab'ல தான் ஆபிஸ் போவான். cab'ல் கூட வருகிற சிலர், சிலரை impress செய்ய மொக்கை காமெடி சொல்லி சிரிப்பதால்.

3) அசோக் அலுவலகத்தில் security violation என்று சொல்லி website அனைத்தும் தடை செய்யப்பட்டு உள்ளது. Internet'ல் company internal site மட்டும் தான் open செய்து பார்க்க முடிவதால்.

4) அசோக் cabin'க்கும் அடுத்த cabin'ல் உட்கார்ந்து இருக்கும் பெண், தினமும் முகம் முழுவதும் make-up போட்டு கொண்டு முகத்தை அவன் அருகில் காட்டி பயமுறுத்துவதால்.

5) மதியம் உணவிற்கு எப்பொழுதும் அசோக் Non-Veg தான் விரும்பி சாப்பிடுவான். ஆனால் ஆபிஸ் canteen மதிய உணவில் non-veg item எதுவும் இல்லாததால்.

6) ஆபிஸில், எல்லா வெள்ளிகிழமை மாலை வேளைகளிலும் அந்த நேரத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கும் மற்றவர்களை பற்றி
எல்லாம் கவலைப்படாமல், பாட்டு போட்டி, டான்ஸ் போட்டி, கண்ணாமுச்சி போட்டி என்று மொக்கை போட்டிகளை நடத்துவதால்.

7) ஆபிஸில் தண்ணீர் குடிக்கும் இடத்தில் cost-cutting என்று சொல்லி பேப்பர் கப்புக்கு பதிலாக எவர்சில்வர் டம்ளருக்கு மாறியதால்.


அசோக் வேலையை ரிசைன் பண்ணியதற்கான காரணங்களை பார்க்கும் போது, அவன் செய்தது சரி என்று தான் தோன்றுகிறது. உங்களுக்கு?????......


” நீ எதையாவது சகித்து கொண்டு வாழ்கிறாய் என்றால், நீ அடிமையாக வாழ்கிறாய் என்று அர்த்தம் ”

“ சகிப்புத்தன்மை என்பது அடிமைத்தனம் ”


Wednesday, December 10, 2008

காதல் கடிதம்

நான் இது வரை யாருக்கும் காதல் கடிதம் எழுதியது இல்லை. இது தான் என் முதல் காதல் கடிதம். கடிதத்தை எப்படி ஆரம்பிக்கவேண்டும் என்று கூட எனக்கு தெரியவில்லை. அன்புள்ள என்று ஆரம்பித்து இருக்கலாம், ஆனால் அப்படி ஆரம்பித்தால் அது அனைவராலும் எழுதப்பட கூடிய ஒரு சாதாரண கடிதம் ஆகியிருக்கும். முதல் வரியை படித்தவுடனே இது காதல் கடிதம் என்று தெரியவேண்டாமா??.. ஏன் உயிரே என்று ஆரம்பிக்கலாமா?? வேண்டாம் இது திரைப்பட பாடல் போல உள்ளது. சரி கடிதத்தை எப்படி தான் ஆரம்பிப்பது. அதை உன்னிடமே விட்டு விடுகிறேன். நீயே உனக்கு பிடித்தது போல் கடிதத்தை ஆரம்பித்துக்கொள். அதற்குமுன் இது ஒரு காதல் கடிதம் என்பதை மனதில் வைத்துக்கொள்.

நான் எல்லோரையும் போல காதல் கடிதத்தில் கவிதைகளை எழுதுவதாக இல்லை. அப்படி எழுதினால் நீ இந்த கடிதத்தை உடனே கிழித்துவிடுவாய் என்று எனக்கு தெரியும். உன்னை பற்றி நினைத்தவுடனே தமிழில் உள்ள வார்த்தைகள் எல்லாம் எனக்கு மறந்துவிடுகின்றது. இந்த கடித்தை எழுதும் போது தமிழ் வார்த்தைகளுக்கு கூட பஞ்சம் எற்படுகின்றது. இந்த கடிதத்தை நீ படிக்கும் போது என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் நீ நினைத்துக் கொள்ளலாம், அதற்கு உனக்கு உரிமை உண்டு. இந்த ஒன்றரை மாதத்தில் உனக்கு எத்தனையோ முறை தர நினைத்த இந்த கடிதம், இப்பொழுது தான் உயிர் பெற்று உன் கைக்கு வந்து இருக்கிறது.

உன்னிடம் கடந்த ஒன்றரை மாதங்களாக நான் வைத்து இருக்கும் காதலை கண்டிப்பாக இந்த இரண்டு பக்க கடிதத்தில் என்னால் சொல்ல முடியாது. உன்னை காதலிக்கிறேன் என்பது ஏன் இந்த ஒன்றரை மாதத்தில் ஒரு முறைக்கூட உனக்கு தெரியாமல் போனது. அல்லது தெரிந்தும் தெரியாதது போல இருக்கிறாயா??. எப்பொழுதும் மற்றவர்கள் கண்களை பார்த்தே பேசும் நான், உன் கண்களை நேரடியாக பார்க்க தைரியம் இல்லாமல் எத்தனை முறை தவித்து இருக்கிறேன் தெரியுமா??

நீ என்னை எப்பொழுதும் “ என்ன உளறுகிறாய்?, என்ன உளறுகிறாய்? ” என்று சொல்வாயே அது உண்மையாக தான் இருக்கிறது. ஒரு பக்கம் எழுதியும் காதல் கடிதத்தை என்னால் ஆரம்பிக்க கூட முடியவில்லை. சரி போதும் இத்துடன் கடிதத்தை முடித்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன், என்னடா ஆரம்பிக்கவே இல்லை அதற்குள் முடிக்க போகிறான் என்று பார்க்கிறாயா. நான் உன்னை காதலிக்கிறேன் என்பதை சொல்ல தானே இந்த கடிதம், அதான் சொல்லிவிட்டேனே. மேலும், உன்னுடைய பொன்னான நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை. காதல் கடிதத்தை எப்படி முடிப்பது. நல்ல வாக்கியங்களை சேர்த்து கடிதத்தை ஆரம்பித்த உனக்கு முடிக்கவா தெரியாது?? நீயே உனக்கு பிடித்த வாக்கியங்களை சேர்த்து இந்த கடிதத்தை முடித்துக்கொள்.

இப்படிக்கு காதலுடன்,
அசோக்.


பின்குறிப்பு::
---------------

மேலே உள்ள கடிதத்தை அவளுடைய ஆபிஸ் இ-மெயில் முகவரிக்கு அனுப்பி விட்டு பதிலுக்காக அசோக் காத்துக்கொண்டு இருந்தான். அவளிடம் இருந்து வந்த பதில் “ அசோக், கடிதம் நன்றாக இருந்தது. யாருடா அந்த பெண் ???”. எல்லாம் சும்மா கற்பனை தான் என்று சொல்லி அசோக் சமாளித்துவிட்டான். அசோக் செய்த ஒரே தவறு கடிதத்தில் எங்கேயும் அவள் பெயரை சொல்லாதது தான்.