Thursday, December 24, 2009

அவள் Virgin பா !!

அலுவலகத்தில் இருந்து அறைக்கு பேருந்தில் சென்றுகொண்டு இருந்தேன்.

570'ல் உட்கார இடம் கிடைப்பதே கஷ்டம், அதிலும் பக்கத்தில் ஒரு பெண் உட்கார்ந்து இருந்தால், எனது அதிர்ஷ்டத்தை நீங்களே கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

பார்ப்பதற்க்கு அந்த பெண் அழகாக இருந்தாள். ( " டேய் நீ இதுவரை எதாவது ஒரு பெண்ணையாவது அழகில்லை என்று சொல்லி இருக்காயா ?? " என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. " என்ன செய்ய, பார்க்கின்ற என்ன பெண்களும் அழகாக தெரிகிறார்கள் " )

எல்லா பெண்களை போல இவளும் உட்கார்ந்தது முதல் போனில் பேசிக்கொண்டே இருந்தாள். A/C பேருந்து என்பதால், அவள் என்னதான் மெதுவாக பேசினாலும், சில வார்த்தைகள் என் காதில் விழுந்துக்கொண்டுதான் இருந்தது. நடுவில் சத்தமாக சிரிப்பது, அப்புறம் " ம் " என்று சொல்வது, அப்புறம் " இல்ல பா " என்று சொல்வது என்று எதோ பேசிக்கொண்டே இருந்தாள். நான் எதையும் கண்டு கொள்ளாதது போல , வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தேன்.

அவள் பேசிய ஒரு வார்த்தை, சட்டென்று என்னை அவள் பக்கம் திரும்ப வைத்தது. அது " யேய், அவள் Virgin பா " என்பதுதான்.

நான் என்னை அறியாமல் அவள் முகத்தை திரும்பி பார்த்து விட்டேன். " சத்தமாக பேசிவிட்டோமே!! " என்று அவள் கவலைப்பட்டு இருப்பாள் என்று நினைக்கிறேன்.
" நான் அப்புறம் பேசுறேன் " என்று சொல்லி போனை வைத்துவிட்டாள்.

" பெண்கள் எல்லாவற்றையும் எவ்வளவு Casual'ஆக பேச தொடங்கிவிட்டனர் " என்று நினைத்துக்கொண்டே, நான் எதுவும் நடக்காதது போல, மீண்டும் வேடிக்கை பார்க்க தொடங்கினேன். ஆனால்,அவள் முகத்தில் ஒரு சின்ன மாற்றம் தெரிந்தது.

மீண்டும் அவள் செல்போனை எடுக்கவே இல்லை.

அவள் வடபழனியில் இறங்கிவிட, நான் C.M.B.T'யில் இறங்கி, D70 பிடித்து அறைக்கு வந்து சேர்ந்தேன்.

நான் அறைக்குள் நுழைந்தவுடன், அங்கு பேப்பர் படித்துக்கொண்டு இருந்த குமார், என்னிடம் கேட்டது " மச்சி, Virgin'ல Incoming வந்தா, நம்ம கணக்குல நிமிடத்திற்க்கு 10 பைசா ஏறுமாமே ??. உண்மையா டா??? ".

Wednesday, December 23, 2009

சிலுவையை சுமப்பவர்கள்

உங்களுக்கான சிலுவையை எப்பொழுதும்
இயேசுதான் சுமக்கவேண்டும் என்று
எதிர்பார்காதீர்கள்

உங்கள் தோழர்களோ
அம்மாவோ, அப்பாவோ
அண்ணனோ, தங்கையோ
பழைய காதலனோ, காதலியோ
மனைவியோ, கணவரோ
தெரிந்தவரோ, தெரியாதவரோ
இப்படி
இவர்களில் யாரோ ஒருவர்
உங்களுக்கான சிலுவையை
சுமந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

முன்னவர் அனைவரிடமும் சொல்லிவிட்டு சுமந்தார்,
இவர்கள் சொல்லாமல் சுமக்கிறார்கள்.
அந்தளவே வித்தியாசம்.

Monday, December 14, 2009

நிராகரிக்கப்பட்ட பரிசுப்பொருள்

ஏற்க மறுக்கபட்ட பரிசுப்பொருளை
வைத்துக்கொண்டு என்னதான் செய்வது

தூக்கி எறியவோ
மற்றவர்களுக்கு கொடுக்கவோ முடியாது,
அது ஒரு பழிவாங்கும் செயல்.

நாம் உபயோகப்படுத்தவும் கூடாது,
அது ஏற்க மறுத்தவரை நினைவு செய்து
மேலும் வெறுப்பை உண்டாக்கும்.

நிராகரிக்கப்பட்டவர்கள் போலவே,
நிராகரிக்கப்பட்ட பொருட்களும்
தனிமையையே விரும்புகின்றன.

இரண்டாவது காதலியால்
மறுக்கபட்ட ஒரு புத்தகம்,
நினைவுப்பொருளாய்
என் வீட்டு அலமாரியின் இடது ஓரத்தில்
இருந்துக்கொண்டு,
என்னை
தினமும் பயமுறுத்துகிறது.

“நீ பரிசுப்பொருள் என்கின்ற
ஒரே காரணத்தால், நிராகரிக்கப்பட்டாய்”
என்ற உண்மையை,
நிராகரிக்கப்பட்ட பொருட்கள்
எந்த காலத்திலும் நம்ப போவதுமில்லை.

Sunday, November 29, 2009

புரியாத கதைகள்

கண்டிப்பாக விரைவில் அவள் என்னிடம் காதலை சொல்லிவிடுவாள். சில நாட்களாகவே அவள் பேச்சில் எதோ ஒரு மாற்றம் தெரிந்தது. ஒவ்வொரு முறையும் எதோ ஒன்றை என்னிடம் சொல்ல நினைத்து, பின் அதை மறைத்துவிடுகிறாள். விரைவில் அவள் என்னிடம் காதலை சொல்லிவிடுவாள். அவள் காதலை சொல்லும் பொழுது எப்படி நான் பதில் அளிக்க வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை ஒத்திகை பார்க்க தொடங்கினேன்.அவள் முகத்தை பார்த்துத்தான் பேச வேண்டும். " எனக்கு இந்த காதல் மீது எல்லாம் நம்பிக்கை இல்லை" என்றுதான் பேச தொடங்க வேண்டும்.

சசி எப்பொழுதும் என்னிடம் சொல்வான் " இந்த காதல், கவிதை எழுதுவதற்க்கு வேண்டுமானால் உதவியாக இருக்கும், மற்றபடி எதற்க்கும் இது உதவி செய்யாது. அவள் எங்கே சென்றாலும் பின்னாடியே சென்று, அவள் கேட்பதை எல்லாம் வாங்கிதந்து, அது ஒரு நாய் பிழைப்பு ".

கண்டிப்பாக அவள் காதலை ஒத்துக்கொள்ள கூடாது. அவள் முகத்தை அலட்சியமாக பார்க்க வேண்டும். நான் அவளிடம் பேசுவதை போல் மனக்கண்ணில் ஓட்டி பார்த்தேன். நான் காதலை மறுத்தவுடன் , அவள் அழுதுக்கொண்டு இருந்தாள். " இந்த அழுகைக்கு எல்லாம் எமாந்தவன் நான் இல்லை ".

காட்சி 1:
----------

அசோக் எதிர்பார்த்ததை போல், அவள் காதலை உடனே சொல்லவில்லை. ஒரு மாதம் சென்றுவிட்டது. ஆனால், அவள் பேச்சில் எதோ ஒரு மாற்றம் தெரிந்தது. அசோக், ஒவ்வொரு நாளும் அவன் பேச வேண்டியதை நடித்து பார்த்து கொண்டே இருந்தான். சில வாக்கியங்களை குறைத்தும், சில வாக்கியங்களை கூட்டியும் பல மாற்றங்கள் செய்துவிட்டான்.

அவன் எதிர்பார்த்ததை போல அந்த நாளும் வந்தது. சாந்தி காலணி Creamy inn'ல் உட்கார்ந்து இருக்கும் போது அவள் சொன்னாள் " அசோக், நான் உன்னை காதலிக்கிறேன் என்று நினைக்கிறேன். நாம் இருவரும் கடைசி வரை சேர்ந்து வாழ்ந்தால் என்ன??".

இப்படி காதலை கொஞ்சம் கூட கவிநயம் இல்லாமல், தட்டையாக சொன்னது அசோக்கிற்க்கு கோபத்தை உண்டு பண்ணியது. தான் எழுதி வைத்து இருப்பதை அவளிடம் சொல்ல தயாரானான். முதலில் அவள் முகத்தை பார்த்து பேச வேண்டும்.

அசோக் அவள் முகத்தை நேராக பார்த்தான். அவன் என்ன பதில் சொல்ல போறான் என்ற ஏக்கம் அவள் கண்ணில் தெரிந்தது. " இதுவரை அசோக் அசோக் என்று சிரித்துக்கொண்டு இருந்தவளை அழ வைப்பதா, இவள் மனது தாங்குமா??. ஒரு நாய்குட்டி ரோட்டில் அடிபட்டதை பார்ததற்கே அழுதவள் ஆயிற்றே இவள் ". பக்கத்து டேபிளில் அமர்ந்து இருந்த குழந்தையின் மீது கவனத்தை குவித்தான்.

"அசோக், யோசித்தது போதும். எனக்கு எதோ மாதிரி இருக்கு. பதிலை சீக்கிரம் சொல்லு" என்று மவுனத்தை கலைத்தாள்

அசோக்கிற்க்கு எழுதிவைத்தது எல்லாம் மறந்துவிட்டது. அவனை அறியாமலயே " இதை எப்படி சொல்வது என்று தெரியாமல்தான், இத்தனை நாள் நானும் காத்துக்கொண்டு இருந்தேன். Me too Love you " என்றான். தூரத்தில் Akon'ன் "Lonely" பாடல் ஒலித்துக்கொண்டு இருந்தது.

காட்சி 2:
-----------

அசோக் இவ்வளவு சீக்கிரம இது நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை, அசோக் ஒத்திகை பார்த்த அடுத்த நாளே இது நடந்தது. " அசோக், உன்னிடம் கொஞ்சம் தனியாக பேசவேண்டும். காபி குடிச்சுக்கிட்டே பேசலாமா ? " என்று அவள் அழைத்தபோது தான் எழுதி வைத்ததை மீண்டும் ஒரு முறை ஒத்திகை பார்த்துக்கொண்டான்.

கேண்டினில், இரண்டு நிமிட அமைதிக்கு பிறகு அவள் பேச தொடங்கினாள். "உன்னிடம் முன்னாடியே சொல்லலாம் என்று இருந்தேன். ஆனால் எப்படி சொல்றதுனு தெரியல, அதான் சொல்லல. அந்த தேவ் இருக்கான்'ல, அவன் எனக்கு propose பண்ணினான். நான் " எங்க வீட்ல இதுலாம் ஒத்துக்க மாட்டாங்கள் " அப்படி எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்க மாட்டேங்கிறான். நானே வந்து வீட்ல பேசுறேன் அப்படினு இப்படினு சொல்றான். எனக்கு கோபமா பேசவும் பயமா இருக்கு, செத்து போயிடுவேனு பயமுறுத்துறான். எனக்கு என்ன பண்றதுனே தெரியல " என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்.

அசோக்கிற்க்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவனுடைய கற்பனை கோட்டை முற்றிலும் உடைந்தது போல தோன்றியது.

" தேவ்'யை உனக்கு எத்தனை நாளா தெரியும், சும்மா இப்படிதான் பயமுறுத்துவான். முடியாதுனு சொல்லிடு" என்றான்.

"இல்ல, தேவ் நல்ல பையந்தான். அவன் அப்பா அம்மாவை பார்த்து இருக்கேன். நல்லவங்கதான்".

"அப்பறம் என்ன?, சரினு சொல்லிடு".

"வீட்ல அம்மா அப்பாவை நினைத்தால்தான் பயமா இருக்கு"

"இதோ பாரு, இன்னும் கொஞ்ச நாள் நல்லா யோசிச்சு பாரு. உனக்கு எது சரினு தோணுதோ அதை மட்டும் செய். எனக்கு என்னமோ இந்த " தற்கொலை செய்துக்கொள்வேன் " என்று சொல்ற பசங்களை நம்ப கூடாதுனு தோணுது,"

"ம்..."

"உன் வாழ்க்கை, நீதான் தீர்மாணிக்க வேண்டும். நல்லா யோசி, ஒரு நல்ல முடிவு கிடைக்கும். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, நான் இப்ப கிளம்புறேன். சாரி, இதைபத்தி அப்புறமா நாம் பேசுவோம்" என்று சொல்லிவிட்டு அசோக் விரைவாக அந்த இடத்தைவிட்டு சென்றுவிட்டான்.

அன்று இரவு, அசோக்கும் சசியும் தண்ணியடிக்கும் போது, " இந்த பொண்ணுகளயே நம்ப கூடாது மச்சான். எல்லாமே பச்ச dash'டா " என்று அசோக் புலம்பிக்கொண்டே இருந்தான். பக்கத்தில் இருந்த ஸ்பிக்கரில் Eminem ஒரு பாட்டில் F'ல் அரம்பிக்கும் கெட்ட வார்த்தையால் யாரையோ திட்டிக்கொண்டு இருந்தான்.

Monday, November 16, 2009

படித்ததில் பிடித்தது.

"மற்றவர்களின் மீது இரக்கம் கொள்வது பச்சையான அயோக்கியத்தனம். இப்படிச் சொல்வதற்காக நீங்கள் என்னை நேரில் சந்திக்கும் போது என்னை ஒரு அறையாவது அறைந்து கொள்ளுங்கள். பேசாமல் வாங்கிக் கொள்கிறேன். ஆனால் இப்போது நான் உண்மையைப் பேசியாக வேண்டும். இப்படி மற்றவர்கள் மீது இரக்கும் கொள்வது பச்சையான அயோக்கியத்தனம்தான். சந்தேகமே இல்லை. இப்படி இரக்கம் கொள்வதன் மூலம் நீங்கள் மற்றவர்களை விட ஒரு உயர்ந்த இடத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்கிறீர்கள். அந்த ‘உயர்ந்த இடத்தில் ’ இருந்துதான் இது போன்ற மனிதாபிமான வார்த்தைகள் சொல்லப்படுகின்றன. "

- சாரு நிவேதிதா

http://www.charuonline.com/Nov2009/Suvaasika.html

Friday, November 6, 2009

சில பல

சமீபத்தில் ஆபிஸ் நண்பர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அதில் இருந்து அவர் போனும் கையுமாய் சுற்றிக்கொண்டு இருக்கிறார். இதைப் பற்றி அவரிடம் கேட்டதற்க்கு அவர் சொன்ன பதில் " நாம பேசலனா வேற எவனாவது பேசிக்கிட்டு இருப்பான், சரவணா".

**********************************************************************************

போன வாரம் ஞாயிற்றுக்கிழமை, நானும் செல்வாவும் அறையை மதியானமே பூட்டிவிட்டு Sky Walk, Spencer plaza, மாலையில் கமலாவில் பேராண்மை திரைப்படம், அப்பறம் மெரீனா என்று சுற்றிவிட்டு இரவு 11 மணிக்குதான் அறைக்கு திரும்பினோம். நான் எனது செல்போனை அறையிலேயே மறந்து வைத்துவிட்டேன். எனக்கு வரும் ஒரே போன் ஆபிஸ் Cab Driver'யிடம் இருந்துதான், அதுவும் Missed Call. Sky walk'ல் புதிதாக திறந்து உள்ள கடைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும்பொழுதுதான் அறையிலேயே போனை மறந்துவைத்தது நினைவில் வந்தது. சரி, நமக்கு யாரு போன் செய்ய போறா என்று நானும் அதைப்பற்றி வருத்தபடவில்லை.

இரவு பதினோரு மணிக்கு நாங்கள் அறைக்குள் நுழையவும், என்னை தேடிக்கொண்டு ஆபிஸ் நண்பன் நரேன் வருவதற்க்கும் சரியாக இருந்தது. இந்த இரவு நேரத்தில் தேடிக்கொண்டு வந்து இருக்கிறானே என்ன அவசரமோ என்று நரேனிடம் கேட்டபோது " இல்ல சரவணா, உனக்கு மத்தியத்தில் இருந்து போன் பண்ணிட்டு இருக்கிறேன். நீ போனை எடுக்கவே இல்லை. அதான் எனக்கு பயமா போச்சு, சரி ஒரு தடவை நேரில் பார்த்துவிட்டு வந்துடலாம் கிளம்பி வந்தேன்" என்றான்.

பி.கு 1: நரேனின் அறை இருப்பது வேளச்சேரியில், எனது அறை இருப்பது அண்ணா நகரில்.

பி.கு 2: நானும் நரேனும் அறிமுகமாகி நான்கு மாதங்கள்தான் இருக்கும்.

**********************************************************************************

நேற்று நானும் குமாரும் பேசிக்கொண்டு இருக்கும்பொழுது, குமார் என்னிடம் " உனக்கு சின்ன வயசுல திக்குவாய் இருந்துச்சா??" என்று கேட்டான். என்னதான் நாம் சில விஷயங்களை மறைத்தாலும், அது சிலருக்கு மட்டும் தெரிந்துவிடுகிறது.

**********************************************************************************

பத்தாவதில் என்னுடன் ஒன்றாக படித்தவன் ரவி. இவனுக்கு வகுப்பில் பட்டப்பெயர் " கேள்விக்கு பிறந்தவன் ". எதாவது கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பான். எங்கள் அறிவியல் வாத்தியார் மிகவும் கண்டிப்பானவர். ஒவ்வொரு அடியும் மின்னல் போல் விழும்.

தனக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது என்று சொல்லி, அவர் வகுப்பில் உள்ள அனைவருக்கும் இனிப்பு தந்தார். " குழந்தையின் பெயர் " என்று ஒரு மாணவன் கேட்டான். அவர் பெயர் சொன்னவுடனே, ரவி கேட்ட அடுத்த கேள்வி,

"சார், குழந்தைக்கு இனிசியல் என்ன?? ". அதன்பிறகு அவனுக்கு தனியாக விருந்து நடந்தது.

**********************************************************************************

வலைப்பதிவு எழுத தொடர்ந்து ஊக்கம் அளித்துவரும் அருண் என்னிடம் சொன்னது " மச்சி, தயவுசெய்து இனிமேல் கவிதை மட்டும் எழுதாதே டா ".

**********************************************************************************

நேற்று நானும் நண்பனும் பேராண்மை திரைப்படத்துக்கு சென்றோம். கம்யூனிச கருத்துக்கள் படம் முழுவதும் வரும் ஒரே காரணத்திற்காக எல்லாரும் இதை தலையில் தூக்கிவைத்து எழுதுகிறார்கள் என்று தோன்றுகிறது. படத்தில்வரும் கம்யூனிச கருத்துகளுக்கு ஒரு சபாஷ் சொன்னாலும் என்னை பொருத்தவரை இது ஒரு " கற்பனை மிகுதியான, மாசாலா தூவிய வழக்கமான தமிழ் திரைப்படம் ".

படம் பார்த்த பின் என் நண்பன் என்னிடம் சொன்னது " ஒரு காடு, ஐந்து பெண்கள், ஒரு ஹீரோ. இதை மட்டும் செல்வராகவனிடம்தந்து இருந்தால் என்னமா விளையாடி இருப்பார் ".

Thursday, November 5, 2009

காதல் தோல்வி - II

வழக்கம்போல்
எல்லா ஆதாரங்களையும் அழித்துவிட்டேன்
இந்த முறை
சற்று ஜாக்கிரதையாகவே செயல்பட்டேன்.

முதலில் அந்த காகிதங்களை கிழித்து
பின், அவற்றை தீயில் எரித்துவிட்டேன்.

நினைவு பொருள் என்று என்னிடம்
இருந்த ஒரேஒரு பேனாவையும் உடைத்து
கடல் நீரில் தூக்கி எறிந்துவிட்டேன்.

இ-மெயில் உரையாடல்களை மொத்தமாக
இன்பாக்ஸில் இருந்து நீக்கிவிட்டேன்.

நினைவுகளை அழிக்க கையில்
எப்பொழுதும் ஒரு ஸ்காட்சை
வைத்து உள்ளேன்.

இனி ஒரு தடயமும் இல்லை.

யாராலும் சந்தேகிக்க முடியாது
யாராலும் கண்டுபிடிக்க முடியாது
யாராலும் நீருபிக்க முடியாது

நீருபித்தாலும்

எங்கள் பிரிவை உங்களால்
தடுக்க முடியாது

இந்த முறை சற்று உரக்கமாகவே
சொல்கிறேன்
எல்லா ஆதாரங்களையும் அழித்துவிட்டேன்.

Thursday, October 29, 2009

என்னை துரத்திய வாசனை

எனக்கு எந்த நாளில் இருந்து என்று சரியாக ஞாபகம் இல்லை. சூரியன் அஸ்தமிக்கும் ஒரு மாலை பொழுதில், அவள் எனது அருகில் நின்று பேசிக்கொண்டு இருக்கும் பொழுது முதல்முதலாக அவளிடம் இருந்து அந்த வாசனைவந்ததாக ஞாபகம். நன்றாக ஆறிய பாலையும் ரோஜாவையும் சேர்த்து நுகரும் பொழுது ஒரு வாசனை வருமே, அப்படி ஒரு வாசனை. திடீர் என்று அந்த வாசனை வந்ததால், நான் அவளிடம் அதைப்பற்றி ஒன்றும் கேட்கவில்லை. அவள் அந்த இடத்தைவிட்டு விலகி சென்றவுடன், அந்த வாசனையும் விலகி சென்றது.

அடுத்த இரண்டு நாட்கள் அவள் அருகில் வரும்பொழுது எல்லாம் அந்த வாசனையும் வந்தது. ஒவ்வொரு முறையும் அந்த வாசனை தீவிரம் அடைந்து வருவது போலவே எனக்கு தோன்றியது. மூன்றாவது நாள் அவளிடமே கேட்டுவிட்டேன், "என்ன perfume use பண்ணுகிறாய் ?" என்று. நான் எதிர்பார்த்ததை போல, அவளிடம் இருந்து ஒரு முறைப்பு மட்டும் பதிலாக வந்தது. அருண் எப்பொழுதும் சொல்வான், இந்த உலகத்தில் இரண்டு வகையான பெண்கள் மட்டுமே உண்டு, கண்ணகி போல் வாழாதவர்கள் - கண்ணகி போல நடிப்பவர்கள். இவள் இரண்டாம் வகையை சேர்ந்தவள்.

அடுத்தநாள், நான் நரேன் கேபினில் அமர்ந்து அவனிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது, நரேனிடம் சந்தேகம் கேட்க அவள் அங்கே வந்தாள். முந்தைய நாளை விட இன்று வாசனை கொஞ்சம் அதிகமாகவே வந்தது. நான் நரேனிடம் மெதுவாக " உனக்கு எதாவது வாசனை வருகிறதா ?" என்றேன்.

"இன்னைக்கு, தம் அடித்த பின் Halls போட மறந்துவிட்டோம்" என்று சொல்லிவிட்டு அவளிடம் பேசுவதில் தீவிரமானான்.

இப்படியே இரண்டு வாரங்கள் சென்றன. எனக்கு அந்த வாசனை சந்தேகம் மட்டும் போகவே இல்லை. இப்பொழுது எல்லாம், நூறு அடிக்கு அப்பால் அவள் கடந்து சென்றால் கூட, அவள்தான் நடந்து செல்கிறாள் என்று வாசனையை வைத்துசொல்ல முடிந்தது.

மீண்டும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவளிடமே கேட்டு விடுவது என்று முடிவு செய்தேன். இந்தமுறை " என்ன சோப் use பண்ணுகிறாய் ?" என்று சற்று வித்தியாசமாக கேட்டேன்.

"Johnson Baby Soap" என்று முறைத்துக்கொண்டே சொன்னாள்.

இதுவரை அவள் பொய் சொல்லி நான் பார்த்தது இல்லை. எனவே அதுதான் உண்மை என்று முடிவு செயது, அடுத்தநாள் நானும் Johnson Baby Soap'ல் குளித்து பார்த்தேன். அதில் ஒருவிதமான பால் வாசனை வந்தாலும், அவளிடம் இருந்த வாசனைக்கும் இதற்க்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருந்தன.

அறை நண்பன் அருணிடம் இதை பற்றி கூறினேன். " இந்த உலகத்தில் எல்லா மனிதர்களுக்கும் தனி தனியா வாசனை இருக்கு டா " என்றான்.

"இல்லை எனக்கு அவளிடம் இருந்து மட்டும்தான் வாசனை வருகிறது" என்றேன். அருண் என்னை ஒருமாதிரி பார்த்தான்.

சில நாட்களில், அவள் இல்லாத போதும் அந்த வாசனை என்னை தொடர்வது போலவே இருந்தது. என் அறைகளில், என் தலையனைகளில் கூட அந்த வாசனை வர தொடங்கியது. அவள் அருகில் இருக்கும் நேரம் மட்டும் வாசனை சற்று அதிகமாக இருக்கும்.

இப்படியே சென்றால், எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் என்று தோன்றவே ஒரு வாரம் விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊரான நாகபட்டினத்திற்கு சென்றேன்.

ஊரின் கடற்கரை மணலை பார்த்தவுடனே, என்னை சுற்றி இருந்த வாசனை முற்றிலும் மறைந்தது போல தோன்றியது. ஆனால் வீட்டில் நுழைந்தவுடனே மீண்டும் அந்த வாசனை என்னை வந்து அப்பிக்கொண்டது.

வீட்டில் அம்மாவும் அக்காவும் " ஏன் டா, பேய் அடிச்சமாதிரி வந்துருக்க?" என்று கேள்விகளால் துளைத்து எடுத்தனர். எப்படி அவர்களிடம் சொல்வது " என்னை ஒரு வாசனை துரத்திக்கொண்டு வருகிறது" என்று.

அன்று மாலை அக்கா அறையில் அமர்ந்து அக்காவிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அப்பொழுது Ponds Powder அருகில் இருந்த ஒரு வெள்ளை நிற பாட்டில் என் கண்ணில்பட்டது. எதோ ஒரு பொறி தட்ட, அந்த பாட்டிலை எடுத்து முகர்ந்து பார்த்தேன். அதே வாசனை, என்னை இத்தனை நாட்களாக துரத்திக்கொண்டு இருந்த அதே பெண்ணின் வாசனை. அதில் "Palmolvi Milk Moisturizers Cream" என்று எழுதியிருந்தது.

கடைசியில் வாசனையை கண்டுபிடித்துவிட்ட சந்தோஷத்தில், அக்காவிடம் " இதை நீயும் போட ஆரம்பிச்சிட்டியா ?" என்றேன்.

அக்கா " இரண்டு வருடங்களாக Use பண்ணிகிட்டு இருக்கேன் " என்றாள்.

இரண்டு வருடங்களாக இல்லாமல், என் இப்பொழுதும் மட்டும் இந்த வாசனை புதிதாக தெரிகிறது என்று யோசிக்க அரம்பித்த என்னிடம் " உனக்கு எதோ ஆயிடுச்சு" என்று அக்கா சொல்லிவிட்டு போனாள்.

Saturday, October 10, 2009

உண்மையை சொல்

கடவுள் என் முன்னால் நின்றுக்கொண்டு இருந்தான்.

"உண்மையை சொல், நீ யார்?" என்றான்.

சாதித்து விட்ட மகிழ்ச்சியில், அவனை பார்த்து ஏளனமாக சிரித்துக்கொண்டு இருந்தேன்.

"புலியை படைத்து பயமுறுத்துவேன்" என்றான்.

"புலி இனத்தை அழித்தவர்கள் நாங்கள்" என்றேன்.

கொதிக்கும் எண்ணெய் கொப்பரையை காட்டி பயம் காட்டினான்."சென்னையில் வெயில் இதோடு அதிகம்" என்றேன் சிரித்துக்கொண்டே. என் சிரிப்பு மேலும் அவனுக்கு கோபத்தை எற்படுத்தியது.

என்னிடம் இருந்து உண்மையை வரவழைக்க அவனும் பல வழிகளை கையாண்டான். நான் அவனை பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தேன்.

கடைசியில் ஒரு மனிதனை உருவாக்கி என் கண் முன்னே நிறுத்தினான்.

நான் சகமனிதனை பார்த்த பயத்தில் "நான்தான் இந்த உலகத்தின் கடைசி மனிதன்" என்ற உண்மையை உரக்கக் கத்தினேன்.

Monday, September 28, 2009

காற்று ஒரே இடத்தில் நிற்காது

என் முகத்தை கண்ணாடியில் பார்க்கும்போது, எனக்கே வெறுப்பாக இருந்தது. அறையில் இப்பொழுது யாருமே இல்லை, இந்த தனிமை என்னை மிகவும் பாதித்தது. செல்வா,அருண்,சசி,நரேன் எல்லாரும் எங்கே போனார்கள்??. ஒரு புதிய திரைப்படத்திற்க்கு போக போவதாக நேற்று செல்வா சொன்னது நினைவில் வந்தது. பேசாமல் நானும் சென்று இருக்கலாம். "தீடிர் என்று தற்கொலை செய்துக்கொள்ளலாமா??" என்ற எண்ணம் வந்தது. செல்போன் ஒலித்துக்கொண்டே இருக்கிறது, நான் எடுக்கவில்லை. கண்டிப்பாக அது அவள்தான். இப்பொழுது எனக்குள் என்ன நடந்துக்கொண்டுயிருக்கிறது என்று எனக்கே தெரியவில்லை.

இன்னும் சிறிது நேரம் இங்கு இருந்தால், கண்டிப்பாக தற்கொலை செய்துக்கொள்வேன் என்று தோன்றியது. அறையை பூட்டிவிட்டு வெளியில் வந்தேன். இந்த இரவு நேரத்தில் எங்கே போவது. அருகில் இருக்கும் பூங்கா நினைவில் வந்தது. நானும் நரேனும் ஒரு ஆறு மாதங்கள் முன்னால் இதே பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தது ஞாபகம் வருகிறது. வசந்தமான நாட்கள் அவை.

பூங்கா பூட்டியிருந்தது. ஒரு வாட்ச்மேன் மட்டும் வெளியில் தூங்கிக்கொண்டு இருந்தான். மீண்டும் அறைக்கே திரும்ப எண்ணி, பின் ஏதோ ஒரு தைரியத்தில் பூங்கா சுவர் ஏறி உள்ளே குதித்தேன். நானும் நரேனும் அமர்ந்து இருந்த அதே பெஞ்சில் அமர்ந்தேன்.

எண்ணங்கள் எங்கெங்கோ அலைந்துக்கொண்டு இருந்தது. "சாய்ந்துக்கொள்ள தோள்கள் இல்லாத மனிதன் பைத்தியமாகிறான்" என்ன உண்மையான வரிகள் இவை. நான் சாய்ந்துக்கொள்ள தோள்கள் பல உள்ளன், ஆனால் எனக்குத்தான் சாய்ந்துக்கொள்ள தெரியவில்லை.

எனக்கு எதிரே ஒரு செடி ஆடிக்கொண்டு இருந்தது. என்ன செடி என்று பெயர் சரியாக தெரியவில்லை. அந்த செடி என்னிடம் பேசுவது போல இருந்தது. இல்லை இல்லை, அந்த செடி என்னிடம் தான் பேசுகிறது. அந்த பச்சை இழைகள் என்னை நோக்கி திரும்புகின்றன். "நான் உன்னிடம் பேசவில்லை, காற்றுடன் பேசிக்கொண்டு இருக்கிறேன்" என்றது அந்த செடி.

"காற்றுக்கு பேச தெரியுமா??" என்றேன்.

"ஏன், செடிகள் உன்னிடம் பேசும் பொழுது, காற்று எங்களிடம் பேசக்கூடாதா??" என்றது அந்த செடி.

"உன் பெயர் என்ன??"

"உன்னைபோல் மனிதர்கள்தான் தங்களுக்குள் பெயர்வைத்து தங்களை பிரித்துக்கொள்வார்கள். உங்கள் பிரிவினையே இந்த பெயர்களில் இருந்துதான் அரம்பிக்கிறது." என்றது.

சிறிது நேரம் செடி அமைதியாக இருந்தது.

"என்ன, மாநாட்டில் பேசுவது போல் ஆரம்பித்த உன் பேச்சை உடனே நிறுத்துவிட்டாய்" என்றேன்.

"நான் உன் அமைதியை கெடுப்பதாக இந்த காற்று சொல்கிறது"

"அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால் காற்றின் பேச்சை என்னால் கேட்க முடியவில்லையே"

"அதற்க்கு நீ செடியாக மாற வேண்டும்"

உடல் எங்கும் ஒரு குளிர்ச்சி பரவியது. உடல் எங்கும் பச்சைவண்ணாம் அப்பிக்கொண்டது. நரம்புகள் வேர்களை போல வளர்ந்து மண்ணை பற்றிக்கொண்டது. நான் இப்பொழுது செடியாக மாறிவிட்டேன்.

"நான் செடியாக மாறிவிட்டேன்" என்று உரக்க கட்டினேன்.

"என் கத்துகிறாய், அருகில் காவல்காரன் தூங்கிக்கொண்டுயிருக்கிறான்" என்று காற்று என் காது அருகில் சொல்லிசென்றது. அந்த குரலில் அப்படி ஒரு இனிமை.

"இப்பொழுது நீ காற்றின் குரலை கேட்க முடிகிறதா??" என்றது அந்த செடி.

"ஆம், மிகவும் இனிமையான குரல். அந்த காற்றை கூப்பிடு, மீண்டும் பேசலாம்"

"அந்த காற்று சென்றுவிட்டது. நம்மால் மீண்டும் அதோடு பேச முடியாது."

"அது பறந்துவிட்டது, என்னிடம் பேசுங்கள்" என்றது இப்பொழுது வந்த காற்று. ஆனால் அந்த பழைய காற்றின் இனிமையான குரல் இதனிடம் இல்லை.

"அந்த காற்றின் குரல் இனிமையாக இருந்தது" என்றேன்.

"ஆம், இனிமையாகத்தான் இருந்தது. நானும் இப்படி ஒரு குரலை இதுவரை கேட்டதுயில்லை. நீ வரும் வரை அதனிடம்தான் பேசிக்கொண்டுயிருந்தேன். உன் முகம் வாடிப்போய் இருப்பதாக அது என்னிடம் கூறியது" என்று செடி என்னை பார்ர்த்து பேசியது.

"அப்படி என்றால், அந்த காற்றை கூப்பிடு நாம் பேசுவோம்" என்றேன்.

"காற்று எப்பொழுதும் ஒரே இடத்தில் நிற்காது. அது பறந்துக்கொண்டே இருக்கும். அதுதான் அதன் சுபாவம். நம்முடைய நலனுக்காக அதை தடுத்து நிறுத்த நினைப்பது தவறு".

திடுக்கிட்டு எழுந்தேன். காலை வெயில் ஜன்னல் வழியாக அறைக்குள் நுழைந்துக்கொண்டு இருந்தது. அருகில் நரேன், செல்வா தூங்கிக்கொண்டு இருந்தார்கள்.

அருகில் இருந்த செல்போனை எடுத்தேன். அவளிடம் இருந்து "GM" என்று ஒரு SMS வந்துயிருந்தது.

ஆகவே கேள்வி கேளுங்கள்

ஏதாவது கேளுங்கள்
சிறுபிள்ளைத்தனமாக
அல்லது அறிவாழித்தனமாக
ஏதாவது கேளுங்கள்

கேள்வி கேட்காதவன் முட்டாளாகிறான்
கேள்வி கேட்காதவன் அடிமையாகிறான்
கேள்வி கேட்காதவன் ஏமாளியாகிறான்
ஆகவே கேள்வி கேளுங்கள்

உங்கள் இருப்பை
இந்த உலகிற்க்கு காட்டுவதற்க்கு
உங்கள் கேள்வி துணையிருக்கும்
ஆகவே கேள்வி கேளுங்கள்.

உங்களுக்கு பதில் தெரிந்தாலும் கேளுங்கள்
அது இன்னொருவனுக்கு
கேள்வி கேட்க ஊன்றுகோலாய்
இருக்கலாம்

எல்லா கேள்விகளுக்கும்
பதில் இருக்கிறது
ஆகவே கேள்வி கேளுங்கள்

Monday, September 7, 2009

பேசத் தெரியவில்லை

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லை

தந்தையிடம் மகன் என்ற உரிமையுடன்
பேசத் தெரியவில்லை

அக்காவிடம் தம்பி என்ற பாசத்தோடு
பேசத் தெரியவில்லை

நண்பனிடம் நட்போடும், காதலியிடம் காதலோடும்
தோழியிடம் தோழமையோடும் பேசத் தெரியவில்லை

தெரியாதவர்களிடம் வழிப்போக்கனைப் போலவும்,
நன்கு அறிந்தவர்களிடம்
கடைசி சந்திப்பை நினைவு கூர்ந்தும்
பேசத் தெரியவில்லை

வெற்றி பெற்றவனை பாராட்டியும்
தோல்ல்வி அடைந்தவனுக்கு ஊக்கம் அளித்தும்
அழுகின்றவனை சந்தோஷ படுத்தியும்
பேசத் தெரியவில்லை

முதலாளியிடம் அடிமையை போலவும்,
அடிமையிடம் முதலாளி போலவும்
பேசத் தெரியவில்லை

எனக்கு யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லை

ஆம், இவை எல்லாம் நீங்கள் என்னிடம் சொன்னது.

Friday, August 14, 2009

எனக்கு பிடிக்காத நாவல்

சமீபத்தில் நண்பர் ஒருவர் தன் மகளை இவளை போல் வளர்க்க வேண்டும் என்று ஒரு பெண்ணை சுட்டிக்காட்டினார், எனக்கு உடனே சுஜாதாவின் "பிரிவோம் சந்திப்போம்" நாவல்தான் நினைவில் வந்தது. அதன் முன்னுரையில் இப்படிவரும் " இந்த நாவல் தொடர்கதையாக வந்த சமயத்தில், பல அப்பாக்கள் தன் குழந்தைக்கு மதுமிதா என்று பெயர்வைத்தார்கள். தன் மகளை மதுமிதா போல் வளர்க்க ஆசைபட்டார்கள்".

"பிரிவோம் சந்திப்போம்" நாவலை படித்து இரண்டு வருடங்கள் மேல் இருக்கும். பலருக்கு பிடித்த புத்தகம் நமக்கு பிடிக்காமல் போகலாம். அப்படி எனக்கு சிறிதும் பிடிக்காத நாவல் பிரிவோம் சந்திப்போம். காரணம் எனக்கு சரியாக சொல்ல தெரியவில்லை. மதுமிதாவின் முதிர்ச்சியில்லா கதாபாத்திரம் எனக்கு ஒருவிதமான வெறுப்பைதான் உண்டுபண்ணியது. ரகுபதி, கோவிந்தராஜ், ரத்னா போன்ற கதாபத்திரங்களை விட மதுமிதாவிற்கு முன்னுரையில் கூடுத்த முக்கியத்துவம்தான், எனக்கு இந்த நாவல் பிடிக்காமல் போனதற்க்கு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்.

நேற்று "பிரிவோம் சந்திப்போம்" நாவலை தேடி கண்டுபிடித்து மிண்டும் படிக்க தொடங்கினேன். இந்தமுறை முன்னுரையை படிக்கவில்லை. இப்பொழுதும் மதுமிதா கதாபாத்திரம் எனக்கு வெறுப்பைதான் உண்டு பண்ணியது. முழுவதும் படித்த பிறகு மதுமிதாவைவிட ரகுபதியை நினைக்கும் போதுதான் பாவமாய் இருந்தது.

யாருக்கு தெரியும் இன்னும் சில வருடங்களுக்கு பிறகு, மிண்டும் இந்த நாவலை படிக்கும்போது எனக்கு மதுமிதா கதாபத்திரம் பிடித்துபோகலாம். என் குழந்தைக்கு மதுமிதா என்றுகூட பெயர்வைக்கலாம்!!!!

Thursday, August 13, 2009

வத்ஸலா

எனக்கு அவளை பிடித்து இருக்கிறது. மூன்றாவது கேபினில் அமர்ந்து இருக்கும் குமார் சொல்கிறான் "அவள் character சரியில்லையாம்". ஆமாம் இவன் பெரிய உத்தமன் மற்றவர்களை பற்றி பேசவந்துவிட்டான். குமார் பற்றி என்னிடம் நூறு கதைகள் இருக்கிறது. அத்தனையும் உண்மை கதைகள். சாருவே இவனை பார்த்துதான் "ராஸ லீலா" எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன்.


இது அவளை பற்றிய கதை, ஆகவே குமாருக்கு இந்த intro போதும். எனக்கு அவளை பிடிக்க பல காரணங்கள் இருக்கின்றன. முதலில் அவள் பெயர். ஓ சாரி, இன்னும் அவள் பெயரை சொல்லவில்லை. பெயர் வத்ஸலா. பெயரை உச்சரிக்கும் போது "வ-த்-ஸலா" என்றுதான் உச்சரிக்க வேண்டும். இது அவளே என்னிடம் சொன்னது. ஒருமுறை வத்ஸலா பற்றி அருணிடம் சொன்னபோது, "அது என்னடா பெயர் வத்தலா?? " என்றான் அருண். இதுவரை வத்ஸலாவை இவன் நேரில் பார்த்தது இல்லை, பார்த்து இருந்தால் இப்படி வத்தலா என்று கேட்டு இருக்கமாட்டான்.


இரண்டாவதாக பிடித்தது அவள் அழகு.சும்மா கும்கானு இருப்பாள். அது என்ன கும்கா என்கிறீர்களா?? ஒரு பெண்ணை பார்த்தவுடன் மனசுல ஒரு feelings வந்துச்சுன்னா, அது கும்கா figure என்று அர்த்தம். இந்த வார்த்தையை எனக்கு முதலில் அறிமுகம் செய்தது நரேன். அவன் வீடு இருப்பது ஸ்ரீ-நகர் காலணியில். இது சைதாப்பேட்டை கோர்ட் பின்புறம் உள்ளது. மிகவும் அமைதியான, ரம்மியமான் ஏரியா. அண்ணநகர், அடையாறு எல்லாம் தோற்றுவிடும்.


அடுத்து வத்ஸலாவிடம் எனக்கு பிடித்தது. இதை சொல்வதற்க்கு முன்னால் என்னை பற்றி ஒரு உண்மையை உங்களிடம் சொல்லவேண்டும். மற்றவர்கள் எதாவது சாதனை செய்தால், என் நம்மால் அதே சாதனையை செய்யமுடியாதா?? என்ற எண்ணம்தான் எனக்குவரும். நானும் செய்ய துணிந்து, அது முடியாமல் போகும் போது எனக்கே என் மீது கோபமாகவரும். inferiority complex என்பார்களே அது எனக்கு நிறையவே உண்டு. அப்படிபட்ட என்னிடம், என்னைப்பற்றி புகழ்ந்து பேசினால் எப்படியிருக்கும். இது என்மீது எனக்கே எரிச்சலைத்தான் உண்டு பண்ணியது. என்னை புகழ்ந்து பேசும் கூட்டம் என்னை எப்பொழுதும் சுற்றிக்கொண்டே இருக்கிறது. "நீங்கள் புகழும் அளவுக்கு நான் எதுவும் செய்யவில்லை" என்று சொன்னாலும் யாரும் கேட்பதாக இல்லை. உனக்கு தன்னடக்கம் அதிகம் என்று அதற்க்கும் புகழ்ச்சி. ஆனால் வத்ஸலா இதுவரை ஒருமுறைக்கூட என்னை புகழ்ந்து பேசியது இல்லை. நான் அவளிடம் பாராட்டை பேருவதற்க்கு எத்தனையோ வழிகளை கையாண்டேன். ஆனால் அனைத்திலும் தோல்விதான். இந்த தோல்வி எனக்கு மிகவும் பிடித்துஇருந்தது. "நான் புதுசா Blog update செய்து இருக்கேன், படிச்சு பாரேன்" என்றேன். அதற்க்கு வத்ஸலா சொன்ன பதில் " போடா நீயும், உன் Blog'ம்" என்றாள்.


ஒரு கையில் காபியும், மறுகையில் செல்போனையும் வைத்துக்கொண்டு பேசும் அழகு, "போடா பக்கி" என்று திட்டுவது, ஒரு விரலால் தலைமுடியை கோடும் ஸ்டைல், இரவு ஒருமணிக்கு போன் செய்து போனை எடுத்தவுடம் " இன்னும் தூங்கலையா" என்று கேட்கும் குறும்பு, என்று எனக்கு அவளிடம் பிடித்தவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்.


இப்பொழுது வத்ஸலாவின் நடவடிக்கை சரியில்லை என்று குமாரை போல் பலர் என்னிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். எனக்கு அது பற்றி கவலையில்லை. மற்றவர்கள் எது சொன்னாலும் பரவாயில்லை, தனக்கு சரி என்று தெரிவதை செய்யும் வத்ஸலாவை எனக்கு இன்னும் அதிகமாக பிடித்துவிட்டது

When they kept on questioning him, he straightened up and said to them, "If any one of you is without sin, let him be the first to throw a stone at her." - John 8:7

Wednesday, August 12, 2009

காதல் தோல்வி

இனி நான் என்
மூன்றாவது காதலியை தேட வேண்டும்.

முதல் காதலியை அழகில்லை என்றார்கள்
இரண்டாவது காதலியை அறிவில்லை என்றார்கள்

அழகோடும் அறிவோடும்
மூன்றாவது காதலியை தேட வேண்டும்.

அவளுக்கு கறுப்பு உடைகள்
பிடிக்காமல் போகலாம்

இனி என் நடை உடை ரசனைகளை
மாற்றிக்கொள்ள வேண்டும்

எனனை யாரும் இனி
தொந்தரவு செய்ய வேண்டாம்

எனக்கு வேலை இருக்கிறது, என்
மூன்றாவது காதலியை தேட வேண்டும்.

Saturday, July 25, 2009

என் கதைகள்

என் கதைகள், உங்களுக்கு

மற்றவர்களின் ரகசியங்களை அறிந்துகொள்ள
உதவும் ஒரு டைரி.

என்னை பார்த்து சிரிப்பதற்கான
ஒரு கேலிப்பொருள்.

உண்மைக்கும் பொய்க்கும் நடுவில் இருக்கும்
ஒர் பிம்பம்.

கையாலாகதவனின் அர்த்தமில்லா
எண்ண கிறுக்கல்கள்.

எனது எழுத்துப்பிழைகளை கண்டுபிடிக்கும்
சதுரங்க விளையாட்டு.

என் கதைகள், எனக்கு மட்டும்
"தினமும் நான் உயிர் வாழ
உதவும் ஒர் டானிக்".

Thursday, July 16, 2009

பைத்தியங்களின் உரையாடல்

"டேய், ஏன்டா அவனுக்கு பத்து ரூபாய் போட்ட??"..

"பாவம்டா, கண்ணு தெரியாதவன். காலையிலயிருந்து இரவுவரை சிக்னல்ல பிச்சை கேட்குறான்"..

"நீ கொடுத்த பத்து ரூபாய் அவனுக்கு போகும்னு கீறியா ??.. கண்டிப்பாக போகாது. அந்த கண்ணு தெரியாதவனை அழைத்துக்கிட்டு போறானே அவனுக்கும், வேன் டிரைவருக்கும்தான் போகும்".

"ஏன்டா, இந்த சின்ன Matter'க்கு இந்தளவு emotion ஆகுற??"..

"எது சின்னவிசயம், அந்த கண்ணு தெரியாதவனை வச்சு இவர்கள் வியாபாரம் பண்ணுறாங்க. இவர்களை ரோட்டுல நிக்கவச்சு அடிக்கனும்"..

"நல்லா நிக்கவச்சு அடி, யாரு வேண்டாம்னு சொன்னா ??"...

"அது என்னால் முடியலயே ??"...

"அப்ப சும்மா வேடிக்கை பாரு"

"அதுவும் முடியலயே"

"டேய், இப்ப என்னதான் உன் பிரச்சனை ??"..

"தெரியலடா, இப்பலாம் இந்த ஊரே எனக்கு பிடிக்கலடா, எதை பார்த்தாலும் தப்பாவே தோணுது, எதை பார்த்தாலும் வெருப்பா இருக்கு. பார்க்கிறவன் எல்லாருடைய கன்னத்துலயும் பளார்னு அறையனும்னு தோணுது. A.C காருல ஜாலியா போறவன், Pizza'வை 500 ரூபாய்க்கு சாப்பிட்டு ரோட்டோரம் கடையில் பத்து ரூபாய் பொருளை 5 ரூபாய்க்கு கேட்கிறவன், இரண்டு ஆயிரம் ரூபாய் Jean போட்டுக்கிட்டு கம்யுனிசம் பற்றி பேசுறவன், சொந்த ஊரைவிட்டு இங்கவந்து வேலைக்கு அலைகிறவன், இப்படி எவனை பார்த்தாலும் அடிக்கனும் தோணுது"..

"டேய், 'கற்றது தமிழ்' ஜீவா மாதிரி பேசுற??"'..

"எனக்கு என்ன பிரச்சனைனு, எனக்கே தெரியலடா. பேசாமா செத்து போயிடலாம்னு தோணுது"

"நீ Serious'தான் பேசுறியா, இல்லை Comedy'க்கு சொல்றியா??"..

"இப்படிதான் நான் எது பேசினாலும், எல்லாரும் அதை Comedy'னு சொல்றாங்க !!""..

"சரி வா, நாம எதாவது நல்ல psychologist பார்க்கலாம் ??"..

"அதுலாம் தேவையில்லடா, நீ ஒரு Officer's Choice Whisky வாங்கிதந்தா எல்லாம் சரியாயிடும். 10 Downing Pub'க்கு போலாமா??"...

"அடப்பாவி, இன்னைக்கு நீ Build-up தரும்போதே கொஞ்சம் சந்தேகபட்டேன். சரி வா போலாம் ".

Friday, June 26, 2009

மூன்று சம்பவங்கள்

சம்பவம் - 1

வலைப்பதிவு தோழி ஒருத்தி, பெயர் காவ்யா. அவளுடைய வாழ்க்கையில் தினமும் நடக்கும் நிகழ்ச்சிக்களை தனது வலைப்பதிவில் எழுதி வருபவள். அவளுடைய காதல் சமீபத்தில் Break ஆகிவிட்டது. இது காவ்யாவின் இரண்டாவது காதல். காவ்யாவின் முதல் காதலனுக்கு ஒரு வருடம் முன்னர் திருமணம் நடந்துவிட்டது. காவ்யா தனது வலைப்பதிவில் கடைசியாக எழுதி இருப்பதின் சுருக்கம் "என்னுடைய முதல் காதலனை நேற்று Facebook'யில் பார்த்தேன். Online'யில் ஒரு மணிநேரம் பேசிக்கொண்டோம். என்னுடைய காதல் தோல்வியை அவனிடம் பகிர்ந்துக்கொண்டேன், ஏதோ என் மனப்பாரம் குறைந்தது போல ஒரு எண்ணம். பிறகு போனில் இரவு முழுவதும் எதை பற்றியோ பேசிக்கொண்டு இருந்தோம். வரும் ஞாயிறு மாலை சந்திப்பதாக முடிவு செய்து உள்ளோம். அவனை கடைசியாக பார்த்து ஒரு வருடம் மேலாகிவிட்டது. நான் செய்வது தவறு என்று எனக்கு தெரியும்."

சம்பவம் - 2

என்னுடைய கல்லூரி நண்பன் ஒருவன், பெயர் குரு. குருவும் ஒரு பெண்ணும் மிகவும் தீவிரமாக காதலித்தனர். அந்த பெண் வீட்டில் அவளை கட்டாயபடுத்தி வேறு ஒரு பையனுடன் கல்யாணம் செய்து வைத்தனர். இது நடந்து ஒரு வருடம் மேல் இருக்கும். அந்த பெண்ணின் கணவர் ஒரு பெரிய கம்பேனியில் Sales Department'ல் வேலை செய்பவன். Meeting Meeting என்று எதாவது ஊருக்கு அலைந்துக்கொண்டு இருப்பான். குரு கடந்த சில மாதங்களாக தன் பழைய காதலியுடன் போனில் இரவு முழுவது பேசிக்கொண்டு இருக்கிறான். இதை பற்றி அவன் என்னிடம் சொன்னது "மச்சி, நான் செய்றது சரியா, தப்பானு எனுக்கு தெரியல டா??"

சம்பவம் - 3

கர்ணாவிற்கு திருமணம் நட்ந்து இரண்டு குழந்தைகள் இருக்கிறது. குழந்தைகள் இரண்டுமே பயங்கர சுட்டி. கர்ணாவின் மனைவி Income-Tax Department'ல் நல்ல வேலையில் இருக்கிறாள். சமீபகாலமாக கர்ணாவின் பழக்கவழக்கத்தில் மாற்றம் தெரிந்தது. ஒரு பெண்ணுடன் ஊர் சுற்றுவதாக எனக்கு செய்தி வந்தது. நேற்று E.C.R'யில் கர்ணாவும் ஒரு பெண்ணும் கட்டிப் பிடித்துக்கொண்டு பைக்கில் போவதை பார்த்தேன். இதை பற்றி அவனிடம் விசாரித்தபோது அவன் சொன்ன பதில் "இதுல என்ன தப்பு இருக்கு சரவணா??".

Sunday, June 21, 2009

நூலும் இல்லை, வாலும் இல்லை, வானில் பட்டம் விடுவேனா...

கல்லூரியில் மூன்று ஆண்டுகள் முடிந்து நான்காவது ஆண்டில் காலடி எடுத்து வைத்த நேரம். எவனை பார்த்தாலும் Campus Interview’யை பற்றித்தான் பேசிக்கொண்டு இருந்தான். நான்காம் ஆண்டு ஆரம்பத்திலேயே Placement’ம் தொடங்கிவிட்டது (நான் சொல்வது 2007ம் ஆண்டு).

இதுவரை பத்து கேம்பஸ் இண்டர்வியூ போயும் ஒன்றில் கூட Select’ஆகவில்லை. அப்பொழுது மறைமலை நகரில் தங்கியிருந்தேன். இண்டர்வியூ நடப்பது எல்லாம் சத்யபாமா, ஜோசப், ஜேப்பியார். வெங்கடேச்வரா போன்ற கல்லூரிகளில். காலையில் ஜந்து மணிக்கு எழுந்து, ஆறு மணி பஸ்யை பிடித்து ஏட்டு மணிக்கு Interview நடக்கும் கல்லூரிக்கு போனால், “வாடா மச்சி, ஏண்டா லேட்?” என்று உரிமையுடன் கேட்க ஒரு கூட்டம் இருக்கும். “உனக்கு என்னடா, இந்த தடவை கண்டிப்பாக செலக்ட் ஆயிடுவ!!!” என்று புகழ்ச்சி வேறு, பத்து இண்டர்வியூவில் ஆறு தடவைக்கு மேல் Written Exam பாஸ் செய்தவன் என்பதால் எனக்கு இந்த வஞ்சபுகழ்ச்சி அணி.

இண்டர்வியூ நடப்பது ஜோசப், ஜேப்பியார் போன்ற கல்லூரி என்றால் எங்கள் அனைவருக்கும் ஒரே சந்தோசமாக இருக்கும், ஏன்னென்றால் மதியானம் கண்டிப்பாக பிரியாணி உண்டு அதுவும் இலவசமாக (அப்பொழுது எல்லாம் ஜேப்பியார் கடவுளை போல காட்சியளிப்பார்). அதிர்ஷ்டம் இருந்தால் காலையில் இட்லிக்கே சிக்கன் கிடைக்கும்.

அன்று Mindtree'யின் கேம்பஸ் இண்டர்வியூ சத்யபாமா கல்லூரியில் நடந்தது. Written Test’ல் Clear அடுத்து Group Discussion'க்காக ஒரு அறையில் பதினைந்து நபர் உட்கார்ந்து இருந்தோம். எனக்கு கண்டிப்பாக தெரியும் நான் Clear செய்ய போவதுயில்லை என்பது. வலது பக்கத்தில் ஒரு பெண் உட்கார்ந்து இருந்தாள். அவள் முகத்தை வேறு பக்கம் திருப்பியிருந்ததால் முகத்தை தவிர வேறு அனைத்தையும் பார்க்க முடிந்தது. சீ..எங்கு வந்து எதை பார்த்துக்கொண்டு இருக்கிறேன் என்று நினைத்து நானும் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டேன். G.D தொடங்கியது தலைப்பு “இன்றைய இளையர்களுக்கு தேசபக்தி இருக்கிறதா??”. அனைவரும் ஏதோ ஏதோ பேச தொடங்கினர், இதுவே தமிழில் இருந்தால் நான் பக்கம் பக்கமாக பேசி இருப்பேன் என்றி நினைத்துக்கொண்டு அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன்.

G.D’யை நடத்திக்கொண்டு இருந்தவன் தீடிர் என்று “Saravana, U can speak" என்றான். இந்த தீடிர் தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத நான் எனது அங்கிலத்தில் ஏதோ பேசினேன். அதுவரை வலது பக்கத்தில் அமைதியாக உட்கார்ந்து இருந்தவள் “I am agree with saravana" என்று தொடங்கி பேச தொடங்கினாள், இவளுக்கு எப்படி என் பெயர் தெரியும் என்று யோசனை செய்துக்கொண்டு இருக்கும் போதே G.D முடிந்துவிட்டது. நான் எதிர்பார்த்தது போலவே செலக்ட் ஆகவில்லை. என்னுடைய வருத்தம் எல்லாம் அவளுடைய ரிசல்ட் பற்றித்தான்.

இரண்டு நாட்கள் கழித்து Tech Mahindra’வின் கேம்பஸ் இண்டர்வியூ ஜோசப் கல்லூரியில் நடந்தது. இதிலும் Written Test’ல் Clear செய்து, Technical Interview’க்காக அமர்ந்து இருந்தேன். என்ன அச்சரியம் மீண்டும் அவள், என் அருகில் காலியாக இருந்த சீட்டில் உட்கார்ந்து “Hi" என்றாள். நான் மீண்டும் "Hi" சொல்லிவிட்டு அமைதியாக உட்கார்ந்து இருந்தேன். (நான் பெண்களிடம் பேச தொடங்கியதே சமீபகாலமாகத்தான், கல்லூரி நாட்களில் எந்த பெண்ணிடமும் நான் பேசியது கிடையாது. இரண்டு வாரங்களுக்கு முன்னால் மாயாஜாலில் நான்கு வருடங்கள் ஒரே வகுப்பில் என்னுடன் படிதத ஸ்வேதா ரூபாவை பார்த்து “ ஹாய் “ என்றேன். பதிலுக்கு அவள் “ r u from S.R.M ??" என்றாள். நாம் இருவரும் ஒரே வகுப்பு என்று சொல்லியும் அவள் முதலில் நம்பவில்லை. பின்னர் அரைமணி நேரம் நன்றாக சிரித்து பேசினாள். அவள் அருகில் நின்று கொண்டு இருந்த ஒருவன் என்னை முறைத்து பார்த்தான். அவளிடம் அவன் யார் என்று நானும் கேட்கவில்லை அவளும் சொல்லவில்லை.)

ம்... எங்கே விட்டேன்???. "Hi" சொல்லிவிட்டு அமைதியாக உட்கார்ந்து இருந்தேன். சிறிது நேரம் கழித்து ஒரு Puzzle சொல்லி விடைத்தெரியுமா என்றாள். சகுந்தலா தேவியின் புத்தகத்தில் அதை படித்து இருந்தபடியால் நான் உடனே விடையை சொன்னேன். அச்சரியத்துடன் என்னை பார்த்துவிட்டு “ I am Madana" என்று கையை நீட்டினாள். அன்றுதான் என் வாழ்க்கையில் முதல்முதலாக ஒரு பெண்ணிற்க்கு கைகொடுக்கிறேன். புண்ணியவான்கள் அன்று எங்களை ஒரு மணிநேரத்திற்க்கு மேல் Interview’க்காக காக்கவைத்து விட்டார்கள். அந்த ஒரு மணிநேரத்தில் மதனா தன்னை பற்றி எல்லாவற்றையும் ஒப்பித்தாள். அந்த ஒரு மணிநேரத்தில் பத்து நிமிடம் மட்டும்தான் நான் பேசியிருப்பேன். போன் நம்பர்களை கேட்டு வாங்கிக்கொண்டோம்.

நான் Interview'க்கு உள்ளே சென்றுவிட்டு வெளியே வந்து பார்த்த போது அவள் அங்கு இல்லை, வழக்கம் போல் நான் செலக்ட் ஆகவில்லை. நான் மீண்டும் பஸ் பிடித்து மறைமலை நகர் வந்துகொண்டு இருக்கும் போது, அவளுக்கு “Selected ah?" என்று ஒரு SMS அனுப்பினேன். அவளிடம் இருந்து போன் வந்தது. H.R Interview'க்கு காத்துயிருப்பதாக.

அன்று முதல் அவளிடம் போனில் தொடர்ந்து பேச தொடங்கினேன். ஆனால் முக்கால்வாசி அவள்தான் பேசிக்கொண்டு இருப்பாள். நான் இந்த பக்கம் ”அப்படியா, அப்படியா” என்று கேட்டுக்கொண்டு இருப்பேன். ஆறு மாதங்கள் இப்படி சென்று இருக்கும். நான் ஒரு முறை ஏதோ போனில் சொல்லிவிட அன்றுமுதல் அவளிடம் இருந்து போனில் பேசுவது நின்றுவிட்டது. செல்வா என்னிடம் “உனக்கு மற்றவர்களிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லை” என்று சொல்வான், அது சரிதான் போல.

கடந்த மூன்று மாதங்களாக மீண்டும் ஒரு பெண்ணிடம் போனில் அடிக்கடி பேச தொடங்கினேன். இங்கு நான் சொன்ன அடிக்கடி என்ற வார்த்தைக்கு முழு அர்த்தம் “வாரத்திற்கு ஒருமுறை அல்லது வாரத்திற்கு இரண்டு முறை” அவ்ளவுதான். அப்பொழுதே அருண் என்னிடம் சொன்னான் “இதுலாம் நமக்கு சரிபட்டு வராதுடா”. ஒருமுறை அவளிடம் போனில் “ என்ன Timepass’க்கு கால் பண்றீயா?” என்று நான் கேட்க அன்றுமுதல் அவள் எனக்கு போன் செய்வதுயில்லை.

If u wann to walk with me
come and walk, with me
if u wann to cry with me
come and cry, with me
if u wann to laugh with me
come and laugh, with me
if u wamn to die with me
come and die, with me
if u wann to talk with me
sorry, I'm not the one
you are searching for.

Thursday, June 11, 2009

கதை கேளு கதை கேளு

அண்ணாநகர் Coffee Day'யில் நான் அவளுக்குகாக காத்துக்கொண்டு இருந்தேன். அண்ணாநகர் Coffee Day என்றவுடன் அனைவருக்கும் சாந்தி காலணி அருகில் இருக்கும் Coffee Day'தான் நினைவில்வரும், ஆனால் நான் சொல்லும் Coffee Day திருமங்கலம் சிக்னல் அருகில் உள்ளது.

L.C.D T.V' யில் Akon'னின் Beautiful பாடல் ஓடிக்கொண்டு இருந்தது. Beautiful என்ற வார்த்தையை Akon'யை தவிர வேறுயாராலும் இந்தளவு Beautiful'ஆக சொல்லமுடியாது.

அரைமணி நேரம் கழித்துத்தான் வந்தாள். வந்தவள் "Sorry'டா லேட் ஆயிடுச்சு" என்றாள். சுஜாதா சொல்வது போல, அழகான பெண்கள் செய்யும் தவறுகள் மட்டும் உடனே அனைவராலும் மன்னிக்கபடுகின்றன.

அவள் கையில் ஒரு வெள்ளை துணி இருக்க,

"என்னது கையிலே ?"

"துப்பட்டா" என்றாள்.

"அது என் கையில் வைத்து இருக்கிறாய்?"

" வெயில் அதிகமாக இருக்குல, அதான் தலையில் போட்டுக்கொண்டு வந்தேன்".

நல்லவேளை இப்பொழுது எல்லாம் நான் பெண்களின் கழுத்தைப்பார்த்து பேசுவது கிடையாது.

Compass'யை வைத்து குத்தினால் போல நேற்றியில் ஒரு பொட்டு, கையில் போட வேண்டிய வளையலை காதிலும், கலுத்தில் போட வேண்டிய செயினை கையிலும் அணிந்துயிருக்கிறாள். இதை அவளிடம் சொல்ல நினைத்து பின் ஏன் வம்பு என்று நிறுத்திவிட்டேன்

டேய் போதும் கதைக்கு வா என்கிறீர்களா. யார் சொன்னது இப்பொழுது கதை எழுதபோறேன் என்று. ஏன் பா, நீங்க என்னை ஒரு கதையாவது நிம்மதியா எழுதவிடுறீங்களா ?. எது எழுதுனாலும் அதில் ஒரு குற்றம் சொல்லவேண்டியது. இதுல மதி சொல்றான் நான் எல்லா கதையையும் Romantic'காக முடிக்கவேண்டுமாம். செல்வாவோ நான் எழுதுறது எல்லாம் "cut n copy" என்கிறான். நரேனுக்கும், மதனுக்கும் அவர்களின் கதாபாத்திர பெயர் குறித்து பிரச்சனை. சுப்புரமணி தனது வலைப்பதிவில் என்னைப்பற்றி கதை எழுதபோவதாக கங்கனம் கட்டிகிட்டு அலைகிறான். "கடவுளே கணபதி" பதிவை நீக்கவேண்டும் என்று ஒரு பெண்ணிடம் இருந்து கொலை மிரட்டல் வேறு.

மேலும், எனக்கு இதுவரை தொடர்ந்து Comments எழுதிவந்த ரீ-மதி புதிதாக வேலையில் சேர்ந்து உள்ளதால், எனக்கு இப்பொழுது Comments'கள் எழுதுவதுயில்லை. நான் கடைசியாக எழுதிய இரண்டு பதிவுகளுக்கும் இதுவரை Zero Comments. (சுப்புரமணிக்கு SMS செய்து " எதாவது Comments எழுதவும் " என்று சொல்லியும் இதுவரை " No Response ")

இப்பொழுது சொல்லுங்கள் இப்படிபட்ட இந்த " So Called " readers'க்காக நான் ஏன் தொடர்ந்து எழுதவேண்டும் (உன்னை யாருடா எழுத சொன்னா ? என்கிறீர்களா). ஆனால், நான் உங்கள் உயிரை எடுக்கும்வரை தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் இருப்பேன். அருணை போல என் பதிவும் உயிரோசையில் வரும்வரையாவது நான் எழுதுவதை நிறுத்துவதாக இல்லை. அதுவரை என் பதிவை தொடந்து படித்துக்கொண்டு இருக்கும் நீங்கள் ஆறு பேரும், என் பதிவை தொடர்ந்து படித்து ஆதரவு அளிக்கும்மாறு வேண்டிவிரும்பி கேட்டுக்கொள்கிறேன்!!!!!!!!! Plz...

Tuesday, June 9, 2009

உயிரோசையில் அருண்

அருணின் " வெள்ளைக்கார பச்சைத் தமிழர்: பெர்னார்ட் " என்ற கட்டுரை இந்த வார உயிரோசையில் வெளிவந்து உள்ளது. அதன் முகவரி http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=1508 .

அருணின் வலைப்பதிவு முகவரி http://perinba.wordpress.com/ .

வாழ்த்துக்கள் அருண்.

Monday, June 8, 2009

கனவு

கடந்த மூனறு நாட்களாக ஓரே கனவு மீண்டும் மீண்டும் வந்துக்கொண்டு இருக்கிறது. முதல் நாள் கனவில் நான் இருட்டில் நடந்து வந்துக்கொண்டு இருக்கிறேன், எதிரில் ஒரு உருவம் என்னை நோக்கி வந்துக்கொண்டு இருக்கிறது. நாங்கள் இருவரும் எதிரெதிரே நடந்து வந்தாலும், எங்களுக்குள் இருந்த இடைவெளி குறையவேயில்லை. கடைசிவரை அந்த உருவத்தை முழுமையாக பார்க்க முடியவில்லை.

இரண்டாம் நாள் கனவில் நான் நடந்து சென்று கொண்டு இருக்கிறேன். என்னை பின்னால் ஒரு உருவம் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. நான் திரும்பி அந்த உருவத்தை பார்க்கிறேன், இருட்டில் முகத்தை முழுமையாக பார்க்க முடியவில்லை.

மூன்றாம் நாள் கனவில், நான் அந்த உருவத்தை பின் தொடர்ந்து செல்கிறேன். எப்படியாவது முகத்தை பார்த்துவிடும் எண்ணத்தில், நான் வேகமாக நடந்தால் அந்த உருவமும் வேகமாக நடக்கிறது. கடைசிவரை எனக்கு அந்த உருவத்திற்க்கும் இடைவெளி குறையவேயில்லை.

எனோ இந்த கனவுகள் என்னை எதோ ஒரு விதத்தில் பாதித்தது. எப்பொழுதும் அந்த உருவத்தின் பற்றிய எண்ணமாகவே இருந்தது. சிவாவிடம் இந்த கனவுகளை பற்றி சொன்னவுடன் அவன் கேட்ட முதல் கேள்வி " அது ஆணா, பெண்ணா ??" . மேலும் கனவுகளை தொடர்ந்து ஏழு நாட்கள் ஒரு டைரியில் எழுதிவந்தால் கனவுகளே வராது என்றான்.

எப்படியும் அந்த உருவத்தை பார்த்துவிடுவது என்று முடிவுசெய்து, கொஞ்சம் விரைவாகவே அன்று படுக்கசென்றேன். படுக்கை அருகில் பேனாவும், ஒரு டைரியும் வைத்து இருந்தேன், கனவில் இருந்து விழித்தவுடன் அதனை பற்றி எழுதுவதற்கு.

மீண்டும் கனவில் அந்த உருவம் வந்தது. ஆனால் இப்பொழுது இருள் அல்ல, பனி விழும் ஒரு அதிகாலை பொழுது. நானும் அந்த உருவமும் ஒன்றாக நடந்துக்கொண்டு இருக்கிறோம். எனக்கு நிமிர்ந்து அந்த உருவத்தை பார்க்க பயம். " என் முகத்தை பார்க்க பயமா ?" என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது. நான் நிமிர்ந்து பார்க்கிறேன், அது ஒரு பெண்ணின் முகம். அழகான முகம், எங்கேயோ பார்த்த முகம், இல்லை இல்லை நான் எப்பொழுதும் அருகில் பார்க்கும் ஒரு முகம். ஆனால் அது யாரின் முகம் என்று சரியாக சொல்லமுடியவில்லை.

தைரியத்தை வரவழைத்துக்கொண்டு " நீ யார் ?" என்றேன். " நான்தான் உன் காதல் ' என்றாள் அந்த பெண். " கடந்த நான்கு நாட்களாக நான் உன் கூடவே வந்துக்கொண்டு இருக்கிறேன், ஏன் என்னிடம் நீ பேசவில்லை " என்று உரிமையுடன் கேட்டாள். என் கையில் இருந்த பேனாவையும், டைரியையும் பார்த்தாள்.

" இனியும் நான் உன்னை தொடர்வதாக இல்லை, இப்பொழுதே நான் உன்னைவிட்டு பிரிந்து போகிறேன் " என்று சொல்லிவிட்டு உடனே மறைந்து போனாள். கனவும் கலைந்தது.

இப்பொழுது எல்லாம் கனவுகள் வருவது இல்லை. ஆனால் நான் எப்பொழுதும் படுக்கை அருகில் பேனாவும், டைரியும் வைத்து உள்ளேன், கனவுகளை எழுதுவதற்க்கு,

Friday, June 5, 2009

அன்புள்ள நண்பனுக்கு

அன்புள்ள நண்பனுக்கு,

வணக்கம், இதை படிக்கும் நீ யார் என்று எனக்கு தெரியாது. நீ ஆணா, பெண்ணா என்று எனக்கு தெரியாது. கடிதங்கள் மூலமாக மட்டுமே நம்முடைய உண்மையான ஏக்கங்கள், ஆசைகள் ஆகியவற்றை பகிர்ந்துக்கொள்ள முடியும் என்று நம்புவதால் உனக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன். நீ கண்டிப்பாக இதை படித்துவிட்டு எனக்கு பதில் எழுதவேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் நீ பதில் எழுதினால் நான் கண்டிப்பாக சந்தோஷம் அடைவேன். குறைந்தபட்சம் இந்த கடிதத்தை முழுமையாக படித்துப்பார் (நீ விரும்பினால் மட்டும், நான் இதுவரை யாரையும் கட்டாயபடுத்தியது இல்லை).

நான் கடைசியாக எழுதிய கடிதம், என் நண்பனுக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் போது, இப்பொழுது எட்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் கடிதம் எழுதுகிறேன்.

"உனது ஆசைகள் பேராசையாக இருந்தால், உனது ஆசைகள் நிறைவேறும்" , "அனைத்துக்கும் ஆசைபடு". இவை எல்லாம் ஆனந்த விகடனில் எப்பயோ படித்தது. எத்தனையோ வாக்கியங்கள் படித்தாலும் நம் வாழ்வோடு சம்பந்தம் உள்ள சிலவை மட்டும் நம் நினைவில் அப்படியே நின்றுவிடும். அப்படி நின்றவைதான் நான் மேலே சொன்ன இரண்டு வாக்கியங்கள்.

எனக்கு எப்பவுமே ஒரு எண்ணம் உண்டு, "நான் ஆசைபட்டால் அது கண்டிப்பாக நட்க்காது". ஒரு சின்ன பென்சிலில் இருந்து Apple Ipod வரை இதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுக்களை சொல்லலாம். ஆனால் நான் தொடர்ந்து ஆசைபட்டு கொண்டுத்தான் இருக்கிறேன். இவை எதுவுமே நடக்காது என்று தெரிந்தும் ஆசைபடுகிறேன்.

உனக்கு தோல்விக்கும் வெற்றிக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா? " என்ன கேள்வி இது, தோல்விக்கும் வெற்றிக்கும் வித்தியாசம் தெரியாமல் யாராவது இருப்பார்களா? " என்றுதானே நீ கேட்கிறாய். எனக்கு தோல்விக்கும் வெற்றிக்கும் வித்தியாசம் தெரியாது, என்னென்றால் எனக்கு தோல்வி எது வெற்றி எது என்றே புரியவில்லை. சில நேரங்களில் நான் வாழ்க்கையில் தோல்வியே அடைந்தது இல்லை என்று எண்ணுகிறேன், சில நேரங்களில் நான் வாழ்க்கையில் வெற்றியை பார்த்ததே இல்லை என்று நினைக்கிறேன்.

உண்மையில் நான் வெற்றி அடைகிறேன் என்று நினைத்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் தோல்வி அடைந்துக்கொண்டு இருக்கிறேன். சந்தோஷ் சுப்பிரமணியத்தில் ஒரு வாக்கியம்வரும் " கேட்டதை விட அதிகமாக் கிடைக்கும் போது வருகின்ற சந்தோஷத்தை விட, கேட்டது கிடைக்கும்போது வருகின்ற சந்தோஷம்'தான்பா உண்மை".
அதைபோலத்தான் எனக்கும், எனக்கு எப்பொழுதும் கேட்பதைவிட அதிகமாக கிடைத்துக்கொண்டு இருக்கிறது.

எனக்கு இப்பொழுது எல்லாம் தீடிர் என்று ஒரு பயம், "நம்மால் சிறு தோல்வியைக்கூட தாங்கிகொள்ள முடியாமல் போய்விடுமோ" என்று. இதற்காகவே நான் எனக்கு நானே தோல்விகளை உருவாக்குகிறேன். ஆனால் அந்த தோல்விகள் எல்லாம், மீண்டும் எனக்கு நானே உருவாக்குகின்ற வெற்றிகளைக்போல காட்சியளிக்கிறது.

நான் இன்னும் உன்னிடம் பலவற்றை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் அவைகளை எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை, நான் சொல்லவருவதை தவறான அர்த்தத்தில் சொல்லி, எங்கே நம் முதல் சந்திப்பே கடைசி சந்திப்பாக மாறிவிடுமோ என்று பயமாக இருக்கிறது.

இதுவரை இதை பொறுமையாக படித்ததற்கு நன்றி. முடிந்தால் நீ எனக்கு பதில் கடிதம் எழுது, என் முகவரி saravana338@gmail.com. எனக்கு கடிதங்களை எப்படி முடிப்பது என்று தெரியவில்லை, அதனால் கடிதத்தை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

இப்படிக்கு நட்புடன்,
அசோக்.

Monday, May 18, 2009

என்னை பார்த்தால் பாவமாய் இல்ல???

அசோக் வேலைக்கு சேர்ந்த புதிது. மொத்தம் இருபது பேர் அவனுடம் வேலைக்கு சேர்ந்து இருந்தார்கள். அனைவருமே Freshers. சேர்ந்த முதல் வாரத்திலேயே அசோக்கிற்கு ஒரு நண்பர் கூட்டம் கிடைத்துவிட்டது. அசோக், நரேன், ராஜா, மதன், விமலா, கீதா என்று ஆறு பேர் அந்த கூட்டணியில். இவர்கள் அனைவரும் ஒரே கல்லூரி என்ற போதிலும், கல்லூரியில் ஒருமுறைக் கூட பேசிக்கொண்டது இல்லை.

அடுத்த சில வாரங்களில் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பெசன்ட் நகர், சத்தியம் சினிமாஸ், சிட்டி செண்டர், ஸ்பென்சர் என்று சுற்ற ஆரம்பித்தனர். ஞாயிறு மாலை வேளைகளில் கண்டிப்பாக இவர்களை பெசன்ட் நகர் கடற்கரையில் சந்திக்கலாம். மதனிடம் மட்டும் அப்பொழுது பைக் இருந்தது. அவனுக்கு பைக் என்றால் உயிர்.

இந்த விமலாவிற்கு ஊர் சற்றுவது மிகவும் பிடித்த பொழுதுப்போக்கு. இதற்காகவே அவளுக்கு அவள் அப்பா ஒரு மாருதி 800 வாங்கி தந்து இருந்தார். அடுத்த இரண்டு மாதங்கள் சம்பளத்தை சேமித்து Loan’ல புதிதாக Santro வாங்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வாள்.

அன்று கடற்கரையில் அரட்டை அடித்துக்கொண்டு இருந்த போது, விமலா மதனிடம் கேட்டால் “ டேய் வாடா, பைக்’ல ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வரலாம்”. இப்படி விமலா கேட்பது முதல்முறை அல்ல. க்டற்கரைக்கு வரும் ஒவ்வொரு முறையும் விமலா மதனிடம் கேட்பது இதைத்தான். மதன் உடனே O.K சொல்லமாட்டான் மாட்டான். மதன் கொஞ்சம் யோசனை செய்ய தொடங்கியவுடன் விமலா முகத்தை சோகமாய் வைத்துக்கொண்டு ” என்னை பார்த்தால் பாவமாய் இல்ல??” என்பாள்.

அன்றும் அப்படித்தான் மதன் முடியாது என்றான். விமலா ” என்னை பார்த்தால் பாவமாய் இல்ல??” என்றாள். இப்பொழுது அவள் முகத்தை பார்த்து முடியாது என்று சொல்பவன் கண்டிப்பாக கல் நெஞ்சக் காரனாகத்தான் இருப்பான்.

விமலாவும், மதனும் பைக்கில் சென்றவுடன் அவர்கள் தங்கள் அரட்டையை தொடர்ந்தார்கள். அனைவருக்குமே தெரியும், கண்டிப்பாக சென்றவர்கள் இப்பொழுது திரும்பமாட்டாட்கள் என்று.

விமலா “ நான் பாவம்’ல், நான் பாவம்’ல “ என்று சொல்லியே E.C.R Tollgate வரைக்கும் அவனை அழைத்து சென்றுவிடுவாள்.

தினமும் ஒரு பாக்கெட் சிகரட் பிடிக்கும் மதனுக்கும், விமலாவிற்கும் ஒரு பந்தயம் “ ஒரு வாரத்திற்கு மதன் சிகரட் பிடிக்காமல் இருந்தால் ஒரு Temptation Chocolate”. இதில் முதல் இரண்டு வாரம் மதன் வெற்றியும் பெற்றுவிட்டான். பேசாமல் நாமும் சிக்ரெட் பிடிக்க கற்றுக்கொள்ளலாம் என்று அசோக்கும், நரேனும் பேசிக்கொண்டார்கள்.

ஒரு வருடத்தில் விமலா வேறு கம்பெனியில் வேலை கிடைத்து சென்றுவிட்டால், இருந்தாலும் ஞாயிறு சந்திப்பு மட்டும் மாறவே இல்லை ஆனால்,.கடந்த இரண்டு மாதமாக மதனும், விமலாவும் கடற்கரைக்கு வராமல் எதோ காரணம் சொல்லிக்கொண்டு இருந்தனர்.

கீதா சொன்னால் “போன வாரம் Ascendas Food Court'ல இவர்கள் மூவரும் சந்தித்து பேசிய போது கூட மதனும், விமலாவும் பேசிக்கொள்ளவில்லையாம். கீதா எத்தனையோ முறை உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டும், அவர்கள் ஒன்றும் சொல்லவில்லையாம்”

தீடிரென மதன், போன வாரம் சத்தியம்’ல அனைவருக்கும் ’அயன்’ டிக்கேட் புக் செய்தான். விமலாவும் வருகிறாள் என்றான்.

சத்தியம் திரையரங்கு வெளியில் அவர்கள் அனைவரும் விமலாவிற்க்கு காத்துக்கொண்டு இருக்க, அவள் “ முக்கியமான Meeting இருப்பதால் தன்னால் வர முடியாது ” என்று மதனிடம் போனில் சொல்லிக்கொண்டு இருந்தாள்.

மதன் போனில் “ என்னை பார்த்தால் பாவமாய் இல்லயா??? “ என்று கேட்டுக்கொண்டு இருந்தான். அப்பொழுது மதனை பார்க்க உண்மையாகவே பாவமாய் இருந்தது.

பின்குறிப்பு:
===========

என்னுடைய அனைத்து கதைகளை போலவே இந்த கதையும் கற்பனைத்தான்.

நம்புங்க பா.. “ என்னை பார்த்தால் பாவமாய் இல்ல??? “

சென்ற மாத உயிர்மை இதழில் மனுஷ்யபுத்திரன் எழுதிய ”சிநேகிதிகளின் கணவர்கள்” என்ற கவிதையின கடைசி வரிகள்,


நான் குழப்பமடைவதெல்லாம்
சிநேகிதியை பெயர் சொல்லாமல்
எப்படி அழைப்பது என்று

அல்லது பெயர்களை
வெறும் பெயர்களாக மட்டும்
எப்படி உச்சரிப்பது என்று

ஒரு சிநேகிதியை
‘ சிஸ்டர்’ என்று அழைக்கும்
ஒரு ஆபாச கலாச்சாரத்திலிருந்து
எப்படித் தப்பிச் செல்வது என்று

- மனுஷ்ய புத்திரன்

என் நாடும் என் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்

நேற்று நண்பன் கனடாவில் இருந்து போன் செய்து “ பிரபாகரன் செத்து போய்விட்டார் என்று CNN-IBN Website’ல வந்துயிருக்கிறது. செய்தி உண்மையா?? “ என்றான். நானும் CNN-IBN Website'ல செய்தியை பார்த்து உறுதி செய்துவிட்டு தொலைக்காட்சியில் ஒவ்வொரு செய்தி சேனலாக மாற்ற ஆரம்பித்தேன்.

எல்லா செய்தி சேனல்களிலும் புதிய மக்களவையில் யார் யாருக்கு என்ன அமைச்சர் பதவி என்பதை பற்றிதான் செய்திகள் வெளியிட்டுக்கொண்டு இருந்தனர். அவர்களுக்கு நமது அண்டை நாட்டில் நடுக்கும் பிரச்சனைகள் பற்றி அக்கறை இல்லை. ஏன் என்றால் இப்பொழுது மக்களவை செய்திக்குத்தான் விளம்பரம் கிடைக்கும்.

ஆங்கில செய்தியாவது பரவாயில்லை, கலைஞர் மற்றும் சன்’னில் ” திமுக கூட்டணிக்கு கிடைத்த் வெற்றி தமிழ்மக்களுக்கு கிடைத்த வெற்றி “ என்று ஒவ்வொரு தலைவர்களும் பேட்டி தந்துக்கொண்டு இருந்தனர்.

பாவம் அவர்கள் அனைவருக்கும் இலங்கை தமிழர் என்ற வார்த்தையே மறந்துவிட்டது. சீமானை நினைக்கும் போது பாவமாய் இருந்தது. தமிழக மக்கள் தி.மு.க கூட்டணிக்கு 28 இடங்களில் வெற்றி வாங்கித்தந்து இருக்கிறார்கள். நம் தமிழனுக்கு தனது சகோதரன் இலங்கையில் துயரம் அடைவது பற்றி சிறிதும் வருத்தம் கிடையாது, தன் ஒட்டுக்கு பணம் வந்தால் போதும். கற்றது தமிழ் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி “இன்னைக்கு நாற்பது ஆயிரம் பணத்திற்காக பெயரை மாற்றுவாய், நாளைக்கு 5 லட்சம் பணம் தந்தால்...”

வேறு என்ன நான் சொல்ல “ என் நாடும் என் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் ”

Sunday, May 17, 2009

கடவுளே கணபதி

மஞ்சள் வெயில்
-------------------

எளிய மனிதர்களுக்கு
எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது

எளிய முறையில்
எளிய தீர்வுகளை நோக்கிச் செல்கிறார்கள்

அவர்களுக்குப்
புரியவேயில்லை
நகரம் மஞ்சள் வெய்யிலில்
குளித்துக்கொண்டிருந்த
ஓரு மாலையில்
ஓரு மனிதனுக்கு
தீடிரென ஏன்
பைத்தியம் பிடிக்கிறதென்று

- மனுஷ்ய புத்திரன் (12.10.2002)
மணலின் கதை புத்தகம்


பின்குறிப்பு:
===========

சில காரணங்களால் இங்கு இருந்த கதை நீக்கப்பட்டுவிட்டது.

Monday, April 6, 2009

அயன்


எல்லா திரைப்படங்களை போல Disco'வில் ஒரு பெண் நடனம் ஆடிக்கொண்டு இருக்கிறாள். Backround'ல பாடல் ஒலிக்கிறது. வில்லன் ஒரு பதினாறு வயதுமிக்க ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு வருகிறான். அவளுக்கு Pepsi'யில் மயக்கமருந்து கலந்துக்கொடுக்கிறான். இதை எல்லாம் தொலைவில் இருந்து நம் ஹீரோ பார்க்கிறான். இப்பொழுது நம் ஹீரோ என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள், ஹீரோ அந்த பெண்ணை காப்பாத்த வேண்டும். இது தானே நம் திரைப்பட கலாச்சாரத்தின் பண்பாடு. ஆனால் நம் ஹீரோ அதை செய்யவில்லை, வில்லன் அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதை நம் ஹீரோ வீடியோ படம் எடுத்து, அதை CD'யில் அந்த பெண்ணின் அப்பாவிற்கே காண்பிக்கிறான். இதன் காரணமாக அந்த அப்பா மனம் திருந்தி (!!!!) அந்த வில்லனுக்கு எதிராக கோர்ட்டில் சாட்சி சொல்ல சம்மதிக்கிறார்.

மேலே உள்ளது எதோ ஒரு ஆங்கில படம் என்று நினைக்கவேண்டாம். அயன் படத்தில் வரும் ஒரு காட்சித்தான் அது. ( இப்பொழுது உள்ள முக்கால்வாசி பெண்கள் சூர்யாவின் ரசிகைகள் என்பதை அவர் மறந்துவிட்டார் போல ). அடுத்த காட்சியில் நம் ஹீரோ வில்லனை அடித்து நொருக்குகிறார், உடனே திரையரங்கில் விசில் சத்தம் பறக்கிறது. நம் தமிழ்நாட்டு மக்களின் திரைப்பட ரசனை எந்த அளவு மட்டமாக சென்றுக்கொண்டு இருக்கிறது என்பதற்க்கு இது ஒரு உதாரணம்.

கே.வி.ஆனந்த் பல திரைப்படங்களின் DVD'யில் இருந்து ஒவ்வொரு காட்சியாய் எடுத்து இந்த அயன் படத்தை எடுத்து இருக்கிறார். ம்... அப்புறம், நம் சூர்யா நன்றாக நடிக்கிறார், நன்றாக சண்டை செய்கிறார், நன்றாக dance செய்கிறார், நன்றாக Romance செய்கிறார். ஆனால் எனக்கு ஏனோ இந்த திரைப்படம் பிடிக்கவில்லை.

Thursday, March 26, 2009

சோகக் கதை

நேற்று இரவு போதையில் அருண் என்னிடம் சொன்னது " நீ என்னத்தான் சொன்னாலும் உன்னால் சோகமான கதை எதையும் எழுத முடியாது டா. நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விசயம்தான் எழுத்தாக வெளிவருகிறது. உன்னை பொருத்தவரை உனக்கு அதிகபட்சம் கவலை தரக்கூடிய அல்லது வருத்தப்பட வைப்பது என்றால் அது "எதாவது ஒரு பெண் உன்னை பார்த்து சிரிக்கவில்லை என்பதுதான்". இதை உன் blog'ல எழுதுனா கண்டிப்பாக அது படிப்பவர்களுக்கு சோகக் கதை இல்லை, அது நகைச்சுவை கதை. துக்கம் என்பது நாம் எழுதுகிற எழுத்து ஒவ்வொன்றிலும் கூடவே வரவேண்டும்." என்று அருண் சொல்லிக்கொண்டே போனான். அருண் இன்னைக்கு அடித்த சரக்குக்கு நான் உருகாய் போல் மாட்டிக்கொண்டேன். இந்த மாதிரி குடிமகனிடம் இருந்து தப்பித்து கொள்வதற்காவது தினமுன் நானும் சரக்கு அடிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

அருண் தொடர்ந்து பேசிக்கொண்டே போனான் " ஒரு தகப்பன் மகளை இழந்த சோகமும், ஒரு கணவன் மனைவியை இழந்த சோகமும் கண்டிப்பாக ஒன்று அல்ல. அதை எழுதிகின்ற போது மரண சோகம் என்று ஒரே வரியில் எழுதலாம், ஆனால் அப்படி எழுதக்கூடாது. ஒரு துக்கமான விசயத்தை படிக்கும் போது அதை படிப்பவனும் கண்டிப்பாக அழ வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அந்த துக்கத்தின் ஆழமாவது தெரியவேண்டும்"

எனது வாய் சும்மா இல்லாமல் நடுவில் பேசியது " நீ சொல்கின்ற மாதிரி நானும் ஒரு சோகமானக் கதை எழுதுறேன் டா" என்றேன்.

"சோகம்'னா எதைப் பற்றி எழுதபோற"

"ம்... இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி"

"இலங்கை தமிழர் பற்றி எழுதுனா அது கதை இல்ல, ஒரு உண்மை சம்பவம் பற்றிய கட்டுரை". என்றான் அருண்.

"சரி, வேற எதை பற்றி எழுதுவது அதை நீயே சொல்"

"கதை எனபது நம் வாழ்க்கையில் நடந்த ஒன்றாக இருக்க வேண்டும், அப்பொழுதுதான் நன்றாக இருக்கும். நீ கடைசியாக எப்பொழுது அழுதாய் அதை கதையாக எழுது"

நான் கடைசியாக அழுதது எப்பொழுது சிறிது நேரம் யோசித்தேன். ஆம் போன வாரம் விடுமுறையில் வீட்டில் இருந்த போது, அம்மா வெங்காயம் வெட்டிக்கொண்டு இருந்தாள். அதை அருகில் இருந்து பார்த்த எனக்கு கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

இந்த கண்ணீர் கதையை அருணிடம் சொல்வதற்குள் அவன் போதை மயக்கத்தில் தூங்கி போனான்.

பின்குறிப்பு:
----------

மேலே உள்ள சோகக் கதையை ஒரு கையால் வெங்காயத்தை உரித்துக்கொண்டே படிக்கவும், அப்பொழுதுதான் அருண் சொன்னது போல் படிக்கும்போது feelings வரும்.

Friday, March 20, 2009

யாருப்பா அது!!!!!

இனி அசோக் blog எழுதக் கூடாது என்று முடிவு எடுத்து இருக்கிறான். அவன் தனது வலைப்பதிவில் " அசோக்கின் அத்தைமகள் " என்ற பெயரில் சமீபத்தில் ஒரு கதை எழுதியிருந்தான். அதை படித்தவர்கள் அனைவரிடமும் சத்தியமாய் அது கதைதாங்க என்று அசோக் சொல்லியும் யாரும் நம்புவதாக இல்லை. அது அசோக்கின் உண்மை கதை என்று அனைவரும் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் அசோக்கிற்கு இன்னொரு பிரச்சனை. Orkut'ல அசோக்கும் ஒரு account வைத்து உள்ளான். அவனுடைய profile'ல தனது வலைப்பதிவு முகவரியையும் இனைத்து இருக்கிறான்.

அசோக்கின் உண்மையான அத்தை மகள் லலிதா Orkut'ல எப்படியோ இவனை தேடி கண்டுபிடித்து, வலைப்பதிவையும் படித்துவிட்டாள். உண்மையில் லலிதா இப்பொழுது மதுரையில உள்ள கலைக்கல்லூரி ஒன்றில் Bsc. Computer Science இரண்டாம் ஆண்டு படித்துவருகிறாள்.

வலைப்பதிவை படித்தவுடன் அசோக்கிற்கு போன் செய்த லலிதா " டேய், அந்த அத்தை பெண் நான் இல்லைல?? யாருப்பா அந்த கவிதா?? எப்பல இருந்து இது நடந்துக்கொண்டு இருக்கிறது. சத்தியம் சினிமாவுக்கு பையன் கூட போனியா, இல்ல கவிதா கூட போனியா?? அது என்னப்பா பாட்டியாலா டிரஸ், நீ தான் வாங்கிகொடுத்தியா?? மாமாவுக்கு இந்த matter எல்லாம் தெரியுமா, உன்னை ரொம்ப நல்ல பையன் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். உங்க அம்மாவுக்கு போன் செய்து கவிதாவை பற்றி விசாரிக்க சொல்றேன்." என்று அவள் பேசிக் கொண்டே போனாள்.

சொந்தகார பையன் குமாருடன் லலிதா மதுரையை சுற்றிக்கொண்டு இருப்பதாக நண்பன் ஒருவன் சொன்னதை, அசோக் லலிதாவிடம் கேட்க நினைத்து பின் எதற்காக பிரச்சனை என்று கேட்காமலே போனை வைத்துவிட்டான்.

Tuesday, March 3, 2009

நானும் செய்தித்தாளும்

இப்பொழுது எல்லாம் Newspaper மன்னிக்கவும் செய்தித்தாள்களை படிக்கவே வெறுப்பாக இருக்கிறது. எந்த செய்தித்தாள்களை பிரித்தாலும் எழுத்துக்கள் கொட்டிக்கிடப்பது போல் ஒரு தோற்றத்தைத்தான் தருகின்றன. படிக்கவே பிடிக்கவில்லை. இந்த எண்ணம் எல்லாம் கடந்த ஒரு மாதமாகதான்.

எனக்கு செய்தித்தாளுக்கும் உள்ள பந்தம் மிகவும் பெரியது. நான் செய்தித்தாள்களை படிக்க ஆரம்பித்தது எனது ஜந்தாம் வகுப்பில் இருந்துத்தான். எனது ஐந்தாம் வகுப்பு ஆசிரியை பெயர் சரியாக ஞாபகம் இல்லை. காலையில் முதல் வகுப்பு ஆரம்பித்தவுடனே மாணவர்கள் அனைவரும் ஸ்கூல் டைரியை அந்த ஆசிரியரிடம் காட்ட வேண்டும். ஸ்கூல் டைரியில் அன்றைய பாடத்தை பையன் வீட்டில் படித்தான் என்பதற்கு சான்றாக பெற்றோர்களின் கையெழுத்தும், அன்றைய செய்தித்தாள்களின் முக்கிய செய்திகளும் இருக்க வேண்டும். பெற்றோர்களின் கையெழுத்து இல்லை என்றால் கூட அந்த ஆசிரியர் விட்டுவிடுவார், ஆனால் முக்கிய செய்திகளை அதில் எழுதவில்லை என்றால் அந்த மாணவன் செத்தான்.

என்ககு இப்படித்தான் செய்தித்தாள்கள் படிக்கும் ( முதல் பக்கத்தை மட்டும் ) பழக்கம் ஆரம்பித்தது . எனக்கு அப்பொழுது எல்லாம் செய்திகளின் தீவிரம் தெரியாது. தினமலர் முதல் பக்கத்தில் உள்ளதை அப்படியே பார்த்து எழுதிக் கொண்டு போவேன்.

ஆறாம் வகுப்பு வேறு பள்ளியில் சேர்ந்தவுடன் தினமும் செய்தித்தாள் படிக்கும் பழக்கம் நின்றுவிட்டது. எங்கள் வீட்டில் காலையில் எழுந்தவுடன் என் அப்பா " பேப்பர் வந்துருச்சா??" என்று கேட்டுக் கொண்டே வீட்டு வாசலுக்கு போவதும், ஒரு கையில் பேப்பரும் மறுகையில் காபியும் வைத்துக்கொண்டு ஸ்டைலாக பேப்பர் படிப்பது இன்னும் என் நினைவில் இருக்கிறது. இது தான் என்னை மீண்டும் செய்தித்தாள்ளை படிக்க தூண்டியது. நானும் அப்பாவை போல் கையில் காபியுடம் செய்திதாள்களை எடுத்து படம் பார்த்துக்கொண்டு இருப்பேன். நான் படம் மட்டும்தான் பார்க்கிறேன் என்று தெரிந்தும், என்னிடம் இருந்து பேப்பரை என் அப்பா வாங்க மாட்டார். நானே தரும்வரை காத்துக்கொண்டு இருப்பார்.

டெய்லர் மாமாவின் கடை, மூடி வெட்டும் சலூன் கடை என்று எங்கு சென்றாலும் நான் உடனே எடுத்து படிப்பது "சிந்துப்பாத்" படக்கதையைதான். சிந்துப்பாத கதையை ஒரு வருடம் இடைவெளி விட்டு படித்தாலும், கதை நாம் விட்டுச் சென்ற இடத்தில் இருப்பது போலதான் இருக்கும். இது தான் சிந்துப்பாத் கதையில் சிறப்பு..:)

ஒன்பதாம் வகுப்பில் இருந்துதான் செய்திகளை தீவிரமாக படிக்க தொடங்கினேன் என்று ஞாபகம். பள்ளி வகுப்பில் நானும் பிரகாஷும் தினமும் அன்றைய செய்திகளை பற்றி விவாதிப்போம். பிரகாஷுக்கு என்னை விட ஞாபகசக்தி அதிகம். எல்லா செய்திகளையும் துள்ளியமாக சொல்வான். எனக்கோ பிரிட்டனின் புதிய ஜனாதிபதி பெயரை எத்தனை முறை படித்தாலும் நினைவில் தங்காது.

கல்லூரி விடுதியில் சேர்ந்தவுடனே நான் பார்த்த முதல் நண்பன் " The Hindu " செய்தித்தாள்தான். பின்னர் Bonny'யுடன், இந்த Bonny'யை பற்றி தனியாக பதிவே போடலாம் அந்த அளவு வித்தியாசமானவன். என்னுடைய Role-Model அவன். எங்கே விட்டேன்,,ம், பின்னர் Bonny'யுடன் எற்பட்ட பழக்கத்தினால் New Indian Express, Economic Times என்று படிக்கும் செய்தித்தாள்களின் எண்ணிக்கை அதிகரித்தது. Bonny'யில் ரூமில் எப்பொழுதும் கண்டிப்பாக மூன்று விதமான செய்தித்தாள்களாவது இருக்கும். அவன் எப்பொழுது அதை எல்லாம் படிப்பான், அல்லது எற்கனவே படித்து முடித்து விட்டானா என்பது யாருக்குமே தெரியாது. ஆனால் எல்லாம் செய்திகளையும் புட்டுப் புட்டு வைப்பான்.

இப்படி எனக்கும் செய்தித்தாளுக்கும் உள்ள உறவை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் திடீர் என்று கடந்த ஒரு மாதமாக செய்தித்தாள்களை பார்க்கவே வெறுப்பாக இருக்கிறது. செய்தித்தாள் என்று இல்லை, எவை எல்லாம் முன்னால் பிடித்ததோ அவை எல்லாம் எனக்கு இப்பொழுது வெறுப்பை தருகின்றன். ஒரு வேளை ஒரு பெண் என் மனதை டிஸ்டர்ப் செய்வது தான், இதற்கு எல்லாம் காரணம் என்று நினைக்கிறேன்.

பின்குறிப்பு:
============

" என்னடா இந்த பதிவில் பெண் என்ற வார்த்தையே இல்லையே " என்று நண்பன் கேட்டதால் கடைசியில் அந்த வரியை சேர்க்க வேண்டியதாய் போயிற்று. நம்புங்க பா....

Saturday, February 28, 2009

விடுங்க பாஸ்

ராகுல் எங்கள் ரூம்க்கு வந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. அவனுக்கு எங்க ரூமில் இருந்த எல்லா விசயங்களும் வியப்பாக இருந்தது. " எப்பொழுதும் சிகரெட் பிடித்துக் கொண்டு Orkut'ல் இருக்கும் வினோத், இரவு முழுவதும் இணையத்தில் எதாவது மேய்ந்துக் கொண்டு இருக்கும் அருண், எப்பொழுதும் எதாவது படித்துக் கொண்டு இருக்கும் ராம், சினிமா செய்திகளை மட்டும் விரும்பி படிக்கும் சசி, மதியம் 12 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து ஆபிஸ் போகும் பிரதீப் " என்று அனைத்து விசயங்களும் ராகுலுக்கு வியப்பாக இருந்த்து.

ரூமில் நானும் அருணும் ஒரு நாள் " Trade " என்ற Mexican திரைப்படத்தை பார்த்துக் கொண்டு இருந்தோம். அப்பொழுது வந்த ராகுல் " என்னடா Mexican படம் எல்லாம் பார்க்கிறீர்கள். Mexican மொழி எல்லாம் தெரியுமா?? " என்றான்.

அருண்::::: " English படமும் தான் பார்க்கிறோம், அதனால் எங்களுக்கு English தெரியும்னு அர்த்தமா.... விடுங்க பாஸ்... எங்களுக்கு English படம், Mexican படம் எல்லாம் ஒன்று தான் பாஸ் ".


பின்குறிப்பு:
==========


இந்த " Trade " திரைப்படம் English cum Mexican படம். மெக்சிகோவில் வசிக்கும் ஒருவன் கடத்தபட்ட தன் தங்கையை தேடி கண்டுப்பிடிப்பது தான் கதை. சூப்பர் படம். நேரம் கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள்.

Thursday, February 26, 2009

விளக்கம்

என் பதிவை படிப்பவர்கள் அனைவரும் ( இந்த எண்ணிக்கை ஐந்தை தாண்டாது என்பது முக்கியம் ) என்னிடம் கேட்கும் முதல் கேள்வி " என் எப்பொழுதும் காதல், பெண்கள், தேவதை, அழகி என்றே எழுதுகிறாய் " என்பது தான். நான் அவர்களிடம் எல்லாம் சொல்ல விரும்பும் ஒரே பதில் " சாருவின் ரசிகன் நான். அவர் எழுத்தை பார்த்து தான் இந்த வலைப்பதிவை எழுத தொடங்கினேன், அப்படி பட்ட என்னிடம் நீங்கள் வேறு எந்த மாதிரி எழுத்தை எதிர்பார்க்க முடியும். சாருவின் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் ' I Hate Men '".

Saturday, February 14, 2009

அசோக்கின் அத்தை மகள்

"காபியா, டீயா" எனறு கேட்டாலே பதில் சொல்ல திணறும் அசோக்கிடம் ஒருவன், "இதுவரை எந்த பெண்னை'யாவது பார்த்து காதலிக்க வேண்டும் என்று தோன்றியிருக்கா??" என்று கேட்டால் எப்படி இருக்கும். அசோக் வழக்கம் போல ஒரு புண்ணகையுடம் நிறுத்தி கொண்டான்.

அசோக்கிற்கே சந்தேகம் " இதுவரை நமக்கு இப்படி எதாவது தோன்றியிருக்கிறதா என்று ?? ". சொல்ல போனால் தனக்கு பிடித்த பெண்கள் என்று அசோக் ஒரு பட்டியலே வைத்து இருக்கான், இதில் Latest "Delhi 6" சோனம் கபூரும் அடங்கும். அப்படி பார்த்தால் இந்த பட்டியலில் இருக்கும் எல்லாம் பெண்களையுமே காதலிக்க வேண்டுமே. அந்த பட்டியலை இங்கு வெளியிட்டால் அப்பறம் அசோக்கிடம் தற்பொழுது " Hi, Bye " சொல்லிக் கொண்டு இருக்கும் ஒண்ணு ரெண்டு பெண்களும் பேசாது.

அசோக்கிற்கு அத்தை பெண் ஒருத்தி உண்டு. அசோக்கிற்கும் அவளுக்கும் இரண்டு வயது தான் வித்தியாசம். சின்ன வயதில் இருந்தே இருவரும் எங்காவது வெளியில் போனால் "ஜோடியா மாப்பிள்ளையும் பெண்ணும் எங்கே கிளம்பிட்டிங்க??" என்று ஊரில் உள்ள அனைத்து பெருசுகளும் கேட்கும். எதாவது கல்யாண வீட்டிற்கு சென்று விட்டால், அசோக்கையும் அவன் அத்தை பெண்ணையும் பற்றி பேசவே ஒரு பெருசு கூட்டம் தயாராக இருக்கும். அதுவும் மதுரை பெருசுகளை பற்றி சொல்லவே வேண்டாம்.

இதன் காரணமாகவே அந்த பெண்ணை தனக்கு தான் கல்யாண செய்து வைப்பார்கள் என்ற எண்ணம் அசோக்கிற்கு வந்துவிட்டது. அத்தை பெண்ணும் பார்ப்பதற்கு அழகாக இருப்பாள். அவள் அழகை பற்றி அசோக்கிடம் கேட்டால் அசோக் ஒரு நாள் முழுவதும் அவள் அழகை பற்றி வர்ணிப்பான்.

சில நாட்களுக்கு முன்னால் அசோக்கின் அம்மா அசோக்கிற்கு போன் செய்து, அசோக்கின் அத்தை பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்து இருப்பதாக சொன்னாள். மாப்பிள்ளை CA படித்துவிட்டு எதோ ஒரு வெளிநாட்டில் இருக்கிறானாம். அந்த மாப்பிள்ளையின் பெயர் கூட அசோக்கின் நினைவில் தங்கவில்லை. இந்த கல்யாணத்திற்கு தன் அம்மாவிடம் இருந்து எதிர்ப்பு வரும் என்று அசோக் எதிர்பார்த்தான். ஆனால் அம்மாவோ அசோக்கின் அத்தையை விட மும்முரமாக இந்த கல்யாணத்தை முடிப்பதில் தீவிரமாக இருந்தாள். அசோகின் அப்பாவோ இதை போல் ஒரு வரன் எங்கு தேடினாலும் கிடைக்காது என்று மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்லி கொண்டு இருந்தார்.

பேசாமல் நாமே போய் மாமாவிடம் பெண் கேட்டுவிடலாம் என்று கூட அசோக் நினைத்தான். சின்ன வயதில் பேசிய பெருசுகள் எல்லாம் இப்பொழுது உயிருடன் கிடைத்தால், கொதிக்கும் எண்ணையில் போட்டு எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறான்.

தீடிர் என்று கல்யாண எற்பாட்டில் ஒரு தடை. அசோக்கின் அத்தை பெண் மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டது, அப்படியும் மாப்பிள்ளை பார்ப்பதற்கு அழகாக தான் இருந்தான். ஆனால் பிடிக்காமல் போனதற்கு காரணம் " அந்த பெண் ஒருவனை விரும்புகிறாளாம்". அசோக்கிற்கு ஒரு நப்பாசை " ஒருவேளை அந்த பையன் தான் தானோ என்று ?? ". பாவம் அசோக்கிற்கு கண்ணாடியில் தன் முகத்தை பார்க்கும் பழக்கம் இல்லை.

வீட்டில் உள்ள பெரியோர்கள் எல்லாம் எப்படி எப்படியோ பேசி கடைசியாக அந்த பெண்ணை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைத்துவிட்டர்கள். இதில் அசோக்கின் அம்மாவிற்கு முக்கிய பங்கு உண்டு.

மீண்டும் அசோக்கின் ஆசையில் மண் விழுந்தது மன்னிக்கவும் பாராங்கல்லு விழுந்தது. ஆனால் அசோக் இன்னும் ஒரு முடிவோது தான் இருக்கிறான். கல்யாண மணவறையில் மாப்பிள்ளைக்கு பெண்ணின் காதல் விசயம் தெரிய வந்து, மாப்பிள்ளை கல்யாணம் செய்து கொள்ள மறுத்துவிட்டாள், உடனே அதே மணவறையில் தன் அத்தை பெண்ணிற்கு தானே ஒரு தாலி கட்டி தன் அத்தை பெண் மானத்தையும், குடும்ப மானத்தையும் காக்க வேண்டு என்பது தான் அந்த முடிவு. என்னதான் இருந்தாலும் இதை போல் ஒரு நல்ல மனசு அசோக்கை தவிர யாருக்கும்மே இருக்காது.

பின்குறிப்பு:
===========

மேலே உள்ள கதையில் இந்த வாக்கியங்களை சேர்த்துக் கொள்ளவும்.

"அசோக்கிற்கும் அவளுக்கும் இரண்டு வயது தான் வித்தியாசம். ஆம் அசோக்கை விட அவன் அத்தை மகள் இரண்டு வயது மூத்தவள் !!!!!" :)

Friday, February 13, 2009

பிப்ரவரி 14

இன்று காதலர் தினம். நண்பர் ரீ-மதி தன் வலைபதிவில் சொன்னது போல " காதலை கொண்டாட 365 நாட்களும் இருக்கும் போது எதற்காக இந்த காதலர் தினம் ".


நேற்று நானும் என் நண்பனும் "மெளனம் பேசியதே" திரைப்படம் பார்க்கும் போது பேசிக்கொண்டது.

நான்.." டேய் அருண், நம்மள மாதிரியே சூர்யாவிற்கும் காதல்'னா பிடிக்காது போல".

அருண்... " மச்சி, அவனுக்கு காதலிக்க பிடிக்காது, நம்மக்கு காதலிக்க தெரியாது".

Saturday, February 7, 2009

நான் கடவுள்

"Evil Dead" படத்தை தியேட்டரில் தனியாக உட்கார்ந்து பார்பவருக்கு ஒரு லட்சம் பரிசு என்று அறிவிக்கபட்டது போல, "நான் கடவுள்" படத்தை கண் மூடாமல் பார்பவருக்கு ஒரு லட்சம் பரிசு என்று அறிவிக்கலாம்.

மனதில் பல பிரச்சனைக்கு நடுவில் கொஞ்ச நேரம் சந்தோஷமாக இருக்கலாம் என்று திரைப்படத்திற்கு போய். மனதில் இன்னும் அதிகமான பாரத்தோடு திரும்பி வந்தேன். கண்டிபாக இந்த படம் இதயம் பலவீனம் ஆனவர்களுக்கு அல்ல ( என்னையும் சேர்த்து தான் ).

பாலா சார், ஒரு கொடூரமான திரைப்படத்தை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் நாங்க உங்களிடம் இருந்து அனைவரும் ரசிக்கும் படியான திரைப்படத்தை எதிபார்கிறோம். காசியில் கதை ஆரம்பிக்கும் போது இருந்த பிரம்மிப்பு கொஞ்சம்கொஞ்சமாக கதை செல்ல செல்ல ஒரு அருவருப்பாக மாறியது. ஒர் உண்மையை தான் சொல்லியிருக்கிறேன் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அதை திரைப்படத்தில் சொல்லும் பொழுது மக்கள் ரசிக்கும் படி சொல்ல வேண்டியது அவசியம். இந்த படத்தில் மூலம் தமிழ் திடைப்படங்களை நீங்கள் அடுத்த பரிணாமத்திற்கு கொன்டு சென்றதாக கொஞ்ச மக்கள் சொல்லலாம். அவர்களிடம் "பசி, சோறு" போன்ற படங்களை பார்க்க சொல்ல வேண்டும்.

இந்த படத்தின் பல காட்சிகளை நான் பார்க்காமல் கண்களை மூடிக்கொண்டேன். ஆகவே இந்த படத்தை பற்றி முழுமையாக விமர்சனம் செய்ய நான் தகுதியற்றவன் ஆகிறேன்.

பாலா, ஜெயமோகன், ஆர்யா, பூஜா, இளையராஜா, கவிஞர் விக்கிரமாதித்யன் என்று இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இந்த படம் ஒரு மைல்கல். ஆனால் இந்த படத்தை நான்கு வருடமாக தாயாரித்த தயாரிப்பாளருக்கு????


பின்குறிப்பு:
-------------

இந்த திடைப்படத்தை பார்த்த அந்த இரவு சரியாக தூங்க முடியவில்லை, பல நினைவுகள் என்னை சூழ்ந்துக் கொண்டு இருந்தன. ஒருவேளை இது தான் இந்த திரைப்படத்தின் வெற்றியா???.

Wednesday, February 4, 2009

நல்லவன் எனக்கு நானே நல்லவன்

மங்களூரில் ஸ்ரீ ராம சேனாவை சேர்ந்தவர்கள் Pub'ல் வன்முறை தாக்குதல் நடத்திய மறுநாள், ஆபிஸில் ஒரு நண்பர் சொன்னது " நேற்று டிவியில அந்த அடியை எல்லாம் பார்த்தியா? தலையில் நச்சு நச்சு வச்சான் பாரு.. செம அடி. வரிசையா எல்லா பெண்களையும் நிக்க வைத்து அடிச்சான். எல்லாம் Teen- age பொண்ணுங்க தான். இந்த Pub, Disco'வுக்கு வர பெண்களை எல்லாம் பார்த்து இருக்கியா?? பார்க்கவே ஒரு மாதிரி இருக்கும். அதுவும் தண்ணியடிச்சு அதுங்க அடிக்கிற ஆட்டம் இருக்கே. வரது எல்லாம் முக்கால்வாசி Pair'ஆ தான் வரும். எல்லாம் பணம் இருக்கிற திமிர். இதுங்கள எல்லாம் இப்படி தான் அடிக்கனும். இனிமே கொஞ்ச நாள் எவனும் Pub, Disco'னு போகமாட்டான் பாரு. இன்னும் ரெண்டு சாத்து சாத்தி இருக்கனும்."

கம்யூனிஸ்ட் தோழன் ராகுல் சில நாட்களுக்கு முன்னால் என்னிடம் சொன்னது ஞாபகம் வந்தது. "இப்ப இருக்கிற எல்லா பிரச்சனைக்கும் காரண்ம் உங்கள மாதிரி I.T பீப்பிள் தான்டா. எல்லாம் உட்கார்ந்த இடத்தில் பணம் சம்பாரிக்கும் திமிர்டா. உங்கள் யாருக்காவது உடல் உழைப்பு என்றால் என்னவென்று தெரியுமாடா?? என்னைக்காவது வேர்வை சிந்தி சம்பாரித்து இருக்கிங்களா. சும்மா இல்லாம ஊருல அமைதியா வேலை பார்க்கிற்வனையும் I.T பக்கம் வாடானு சொல்லி உசுப்பு எத்துறது. நீங்கள் எல்லாம் 1000 ரூபாய் வாடகை வீட்டை 5000 ரூபாய் தந்து பிடிச்சா, நாங்க எல்லம் எங்கடா போறது??. இப்ப எல்லாரும் விவசாயம் என்பதையே மறந்து போய்ட்டீங்க, இப்படியே போனா சாப்பிடற அரிசிக்கு என்ன பண்ணுவீங்க பார்போம். ஏன்டா எவனோ முகம் தெரியாத அமெரிக்கனுக்கு வேலை பார்க்க வெட்கமா இல்லை. பணம் தந்தா எதையும் செய்வீங்களா. I.T கம்பேனி'ல வேலை பார்க்கிற எல்லாரையும் நடுரோட்டில் நிக்க வைச்சு அடிக்கனும்."

Tuesday, January 27, 2009

என் தேவதை

தேவதைகள் கோபப்படுவார்களா ??, தேவதைகள் பொய் பேசுவார்களா??, தேவதைகள் மற்றவர்களை கேலி செய்வார்களா??, தேவதைகள் மற்றவர்களை வெறுப்பார்களா??. இந்த கேள்விகள் அனைத்தையும் அவளை பார்க்கும் முன் என்னிடம் யாராவது கேட்டு இருந்தால், கண்டிப்பாக பதில் சொல்ல திணறி இருப்பேன். இப்பொழுது இந்த கேள்விகள் அனைத்துக்கும் ஒரே பதில் "ஆம்". ஆம், என் தேவதை அழகாக கோபபடுவாள், என் தேவதை சின்ன சின்ன ரசனையான பொய்கள் பேசுவாள், என் தேவதை கேலி செய்வாள், என் தேவதை என்னை வெறுப்பாள் !!!!.

என்னுடைய பாட்டி எனக்கு சொன்ன கதைகளில் வரும் தேவதைகள் அழகானவர்கள், ஏழைகளுக்கு வரங்களை வாரி இழைப்பவர்கள். ஆனால் என் தேவதை கதை சற்று வித்தியாசமானது. ஒரு எதிர்பாராத விபத்தில் என் தேவதை எனக்கு முதல் காட்சி அளித்தாள். பழகிய சில நாட்களிலேயே நன்றாக பேச தொடங்கினாள். எனக்கு சந்தோஷம் என்ற வரத்தை போதும் போதும் என்கின்ற அளவுக்கு தந்தாள். இதுவரை பாலைவனமாக சென்ற என் வாழ்வில் மிகவும் சந்தோஷமான நாட்கள் அவை. தேவதை கதைகளில் வருவது போல் இந்த சந்தோஷம் எனக்கு கொஞ்ச நாட்கள் தான் நிலைத்தது.

வரங்கள் தருகின்ற தேவதையிடம், வரமாக அவளையே கேட்கலாமா ??. பேராசை யாரை விட்டது. ஒரு நாள் தேவதையை வரமாக கேட்டேன்.

நான் கேட்டவுடன் தேவதை முடியாது என்று ஒரே வார்த்தையில் சொல்லியிருக்கலாம் அல்லது என்னை திட்டி இருக்கலாம்,. ஆனால் தேவதையோ அழுது கொண்டே சென்று விட்டாள். தேவதையை அழ வைத்த பாவியல்லாவா நான்.

இப்பொழுது என் தேவதை என்னிடம் பேசுவது இல்லை. நான் எதிரில் சென்று மன்னிப்பு கேட்டாலும் என் தேவதை என்னை மன்னிப்பதாக இல்லை. நான் மன்னிக்க கூடிய குற்றமா செய்து உள்ளேன். என் தேவதை என்னை வெறுக்கிறாள்.

ஆம் மீண்டும் சொல்லுகிறேன், தேவதைகள் கோபபடுவார்கள், பொய் பேசுவார்கள், மற்றவர்களை வெறுக்க கூட செய்வார்கள்.

Friday, January 16, 2009

புதிர் போட்டி
மேலே உள்ள படத்தில் இருப்பது யார்?

a) மங்கள பாண்டே "அமிர் கான்"
b) விவேகானந்தர்
c) வில்லு "விஜய்"
d) இதில் யாரும் இல்லை.

பின்குறிப்பு:
==========

கேள்வியை பார்த்துவிட்டு அதிர்ச்சி அடையவேண்டாம். இந்த கேள்விக்கு பின்னால் பல கதைகள் இருக்கிறது.
கதை சுருக்கம்:

இந்த படத்தை எனது செல்போனின் Wallpaper'ஆக கடந்த ஒரு மாதமாக வைத்து இருக்கிறேன். இதை பார்த்துவிட்டு எனது வடமாநில நண்பர் என்னிடம் கேட்ட கேள்வி " Is It Mangal Pandey Aamir Khan". "No, Its Bharathi" என்றேன். அவன் கேட்ட அடுத்த கேள்வி " Who is Bharathi??".. சரி அவனுக்கு புரிகின்ற மாதிரி சொல்வோம் என்று " The Great Patriotic Tamil Poet. He wrote Vanthey Matharam in Tamil" என்றேன். உடனே அவன் " In tamil What he translated for Vanthey Matharam ??" என்றான். "Same... Vanthey Matharam only" என்றேன். நான் சொன்னது சரி தானே??...

கதை சுருக்கம் 2:

வில்லு படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு என் நண்பன் என்னிடம் சொன்னது " மச்சி, டிரைலர் கடைசியில் தலைவர் விவேகானந்தர் வேடத்தில் வருகிறார் டா"... இவன் தான் சார் உண்மையான தமிழன்.

கதை சுருக்கம் 3:

இரண்டு நாட்களுக்கு முன்னால் என் போனில் உள்ள Wallpaper'யை பார்த்துவிட்டு ஆபிஸில் உள்ள ஒருவர் என்னிடம் கேட்டது " என்னங்க விஜய் படம் எல்லாம் வச்சிருக்கிங்க... நீங்கள் விஜய் ரசிகரா ?? "... " விஜய் ரசிகரா?? " என்று அவர் கேட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் நான் மீளவில்லை.

Friday, January 2, 2009

2009ம் ஆண்டின் முதல் கிறுக்கல்

எப்படியோ ஒரு வழியாக 2008ம் ஆண்டு முடிந்து விட்டது. அனைத்து தொலைக்காட்சிகளிலும் ”2008ம் ஆண்டு ஒரு பார்வை” என்று உயிரை வாங்கி கொண்டு இருக்கிறார்கள். இந்திய பங்குசந்தை, இந்திய ஆரசியல் ஆகியவற்றுக்கு இது மோசமான ஆண்டு என்ற சர்வே வேறு. எப்படி தான் இந்த செய்தி சேனல்களுக்கு மட்டும் எதாவது பேச செய்திகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன என்று தெரியவில்லை.

என்னால் நண்பர்களிடம் கூட தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் மேல் பேசுவது கடினமாக இருக்கின்றது. இரண்டு நிமிடங்கள் பேசினாலே தமிழில் உள்ள வார்த்தைகள் அனைத்தும் தீர்ந்து போனது போல் ஒரு எண்ணம். நண்பர்களிடம் போனில் பேசும் போது மூன்றாவது நிமிடமே ”Bye" சொல்லும் பழக்கத்தை நானும் நிறுத்த பார்த்தால் அது இன்று வரை முடியவில்லை. யாரிடமாவது அதிகமாக பேசும் போது தேவையில்லாதவை பற்றி பேசுகிறோமோ என்று சிறிய ஐயம் எப்பொழுதும் இருந்துக்கொண்டே இருக்கிறது. சன் மியுசிக், இசையருவி ஆகியவற்றில் காம்பியரிங் பண்ணுபவர்களை, அதுவும் நேரடி ஒளிபரப்பில் பேசுபவர்களை கண்டிப்பாக பாராட்டிய ஆக வேண்டும். ஒரு நான்கு, ஐந்து பேர் உள்ள கூட்டத்தில் எனக்கு தெரிந்த விசயத்தை பற்றி பேசினால் கூட ஏனோ அவர்களுடன் “Involve" ஆக மனது மறுக்கிறது. எங்கேயும் எப்பொழுதும் என்னை நான் தனிமை படுத்திக்கொள்ளவே நான் விரும்புகிறேன்.

நான் இப்படி இன்று அதிகமாக பேசுவதற்கு காரணம் லா.சா.ரா’வின் சிந்தாநதி புத்தகம் படித்ததன் பாதிப்பு என்று நினைக்கிறேன். அந்த புத்தகத்தின் முன்னுரையில் லா.சா.ரா சொல்வது,,

“புரிந்தது, புரியாதது இந்த இரண்டு நிலைகளுக்கும் உண்மையிலேயே என்ன வித்தியாசம் இருக்கிறது? இரண்டுமே தற்காலிக நிலைகள். ஒருவருக்கு ஒருவிதமாகப் படுவது, அடுத்தவருக்கு வேறு விதமாகப் படுகிறது. அதே ஆளுக்கே வேறு சமயத்தில் வேறு விதமாகப் புரிகிறது. அட, கடைசிவரை, புரியாமல் இருந்தால்தான் என்ன? இருந்துவிட்டுப் போகட்டுமே!!!!!!!”

உங்களுக்கு எதாவது புரிகிறதா. இன்னும் ஒரு முறை படித்து பாருங்கள் கண்டிப்பாக புரியும்.....

புரியாமல் இருந்தால்தான் என்ன? இருந்துவிட்டுப் போகட்டுமே!


2008ல் நான் செய்த ஒரே நல்ல காரியம் வலைப்பதிவு எழுத ஆரம்பித்தது தான் ( ஏன் தான் எங்க உயிரை வாங்குற ?? என்று நீங்கள் சொல்வது எனக்கு தெரிகிறது ). வலைபதிவில் என்ன எழுதுவது என்று தெரியாமல் எதை எதையோ எழுதி கொண்டு இருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறை எழுதும் போது ஒரு வித சந்தோஷத்தை உணர்கிறேன். அந்த சந்தோஷம் தான் என்னை தொடர்ந்து கிறுக்க செய்கிறது.

இனி எல்லாம் சேனல்களிலும் வருவது போல் 2008ம் ஆண்டு ஒரு பார்வை.


2008’ல் பிடித்த திரைப்படம் : அஞ்சாதே....
பிடித்த பாடல் : கண்ணும் கண்ணும் திரைப்படத்தில் வரும் “ அன்பே அன்பே தான் வாழ்க்கையில்”..
வைரமுத்துவின் “பால் கொண்ட காபியில் இப்பொழுது பாசத்தை கலந்தது யார்” என்கின்ற வரிகளுக்காவே இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.
விரும்பி படித்த புத்தகம் : ஆதவனின் “என் பெயர் ராமசேஷன்”
மிகவும் பாதித்த சம்பவம் : ஈழ தமிழர்களுக்கு பணம் அனுப்புகிறோம் என்று சொல்லி தமிழ் அரசியல் கட்சிகள் தமிழகத்தில் நடத்திய நாடகங்கள்.
விரும்பி படித்த இனையதளம் : www.sramakrishnan.com, www.charuonline.com

இவை போது என்று நினைக்கிறேன். கண்டிப்பாக மீண்டும் சந்திப்போம்......!!!!!