Friday, June 5, 2009

அன்புள்ள நண்பனுக்கு

அன்புள்ள நண்பனுக்கு,

வணக்கம், இதை படிக்கும் நீ யார் என்று எனக்கு தெரியாது. நீ ஆணா, பெண்ணா என்று எனக்கு தெரியாது. கடிதங்கள் மூலமாக மட்டுமே நம்முடைய உண்மையான ஏக்கங்கள், ஆசைகள் ஆகியவற்றை பகிர்ந்துக்கொள்ள முடியும் என்று நம்புவதால் உனக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன். நீ கண்டிப்பாக இதை படித்துவிட்டு எனக்கு பதில் எழுதவேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் நீ பதில் எழுதினால் நான் கண்டிப்பாக சந்தோஷம் அடைவேன். குறைந்தபட்சம் இந்த கடிதத்தை முழுமையாக படித்துப்பார் (நீ விரும்பினால் மட்டும், நான் இதுவரை யாரையும் கட்டாயபடுத்தியது இல்லை).

நான் கடைசியாக எழுதிய கடிதம், என் நண்பனுக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் போது, இப்பொழுது எட்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் கடிதம் எழுதுகிறேன்.

"உனது ஆசைகள் பேராசையாக இருந்தால், உனது ஆசைகள் நிறைவேறும்" , "அனைத்துக்கும் ஆசைபடு". இவை எல்லாம் ஆனந்த விகடனில் எப்பயோ படித்தது. எத்தனையோ வாக்கியங்கள் படித்தாலும் நம் வாழ்வோடு சம்பந்தம் உள்ள சிலவை மட்டும் நம் நினைவில் அப்படியே நின்றுவிடும். அப்படி நின்றவைதான் நான் மேலே சொன்ன இரண்டு வாக்கியங்கள்.

எனக்கு எப்பவுமே ஒரு எண்ணம் உண்டு, "நான் ஆசைபட்டால் அது கண்டிப்பாக நட்க்காது". ஒரு சின்ன பென்சிலில் இருந்து Apple Ipod வரை இதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுக்களை சொல்லலாம். ஆனால் நான் தொடர்ந்து ஆசைபட்டு கொண்டுத்தான் இருக்கிறேன். இவை எதுவுமே நடக்காது என்று தெரிந்தும் ஆசைபடுகிறேன்.

உனக்கு தோல்விக்கும் வெற்றிக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா? " என்ன கேள்வி இது, தோல்விக்கும் வெற்றிக்கும் வித்தியாசம் தெரியாமல் யாராவது இருப்பார்களா? " என்றுதானே நீ கேட்கிறாய். எனக்கு தோல்விக்கும் வெற்றிக்கும் வித்தியாசம் தெரியாது, என்னென்றால் எனக்கு தோல்வி எது வெற்றி எது என்றே புரியவில்லை. சில நேரங்களில் நான் வாழ்க்கையில் தோல்வியே அடைந்தது இல்லை என்று எண்ணுகிறேன், சில நேரங்களில் நான் வாழ்க்கையில் வெற்றியை பார்த்ததே இல்லை என்று நினைக்கிறேன்.

உண்மையில் நான் வெற்றி அடைகிறேன் என்று நினைத்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் தோல்வி அடைந்துக்கொண்டு இருக்கிறேன். சந்தோஷ் சுப்பிரமணியத்தில் ஒரு வாக்கியம்வரும் " கேட்டதை விட அதிகமாக் கிடைக்கும் போது வருகின்ற சந்தோஷத்தை விட, கேட்டது கிடைக்கும்போது வருகின்ற சந்தோஷம்'தான்பா உண்மை".
அதைபோலத்தான் எனக்கும், எனக்கு எப்பொழுதும் கேட்பதைவிட அதிகமாக கிடைத்துக்கொண்டு இருக்கிறது.

எனக்கு இப்பொழுது எல்லாம் தீடிர் என்று ஒரு பயம், "நம்மால் சிறு தோல்வியைக்கூட தாங்கிகொள்ள முடியாமல் போய்விடுமோ" என்று. இதற்காகவே நான் எனக்கு நானே தோல்விகளை உருவாக்குகிறேன். ஆனால் அந்த தோல்விகள் எல்லாம், மீண்டும் எனக்கு நானே உருவாக்குகின்ற வெற்றிகளைக்போல காட்சியளிக்கிறது.

நான் இன்னும் உன்னிடம் பலவற்றை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் அவைகளை எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை, நான் சொல்லவருவதை தவறான அர்த்தத்தில் சொல்லி, எங்கே நம் முதல் சந்திப்பே கடைசி சந்திப்பாக மாறிவிடுமோ என்று பயமாக இருக்கிறது.

இதுவரை இதை பொறுமையாக படித்ததற்கு நன்றி. முடிந்தால் நீ எனக்கு பதில் கடிதம் எழுது, என் முகவரி saravana338@gmail.com. எனக்கு கடிதங்களை எப்படி முடிப்பது என்று தெரியவில்லை, அதனால் கடிதத்தை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

இப்படிக்கு நட்புடன்,
அசோக்.

No comments: