Friday, August 10, 2012

சுதந்திர தின வாழ்த்துகள்

இன்னும் நான்கு நாட்களே உள்ளன. Facebook'ல் இந்திய கொடியை போட்டு அதற்கு கீழே "Proud to be Indian" என்று எழுதுவதற்கு. கொடியை மட்டும் போடாமல் கூடவே இந்தியாவின் வரலாற்றையும் சாதனைகளையும் சேர்த்து போட்டால் கண்டிப்பாக ஒன்று இரண்டு லைக்குகளாவது வரும். சுதந்திர தினத்தன்று குறுஞ்செய்திகளுக்கு ஒரு ரூபாய் எடுக்கவில்லை என்றால், "Wish u happy independance Day" என செல்போனில் இருக்கும் அனைத்து நம்பர்களுக்கும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பலாம். ஒருவேளை ஒரு ரூபாய் எடுத்தாலும், பெண் தோழிகளுக்கு மட்டும் வாழ்த்து செய்தி அனுப்பி நமது நாட்டுப்பற்றை நிலைநாட்டிக்கொள்ளலாம். நீங்கள் இந்த குறுஞ்செய்தி அனுப்பும் வேலையை "இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக" என்று காட்டப்படும் எதாவது ஒரு திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டே கூட செய்யலாம்.

முன்னொரு காலத்தில் சுதந்திர தினம் என்பது "மிட்டாய்" கிடைக்கும் நாள், அதுவும் ஆரஞ்சு மிட்டாய். ஆரஞ்சு மிட்டாய்களின் மவுசு குறைந்த இந்த காலத்தில், சுதந்திர தினம் என்பது "ஒரு விடுமுறை நாள்".

வெள்ளையர்களை விரட்டி வாங்கிய சுதந்திரம், உண்மையாகவே நமக்கு தேவைதானா??. அந்நியர்களை விரட்டிவிட்டு, இப்பொழுது அவர்களுக்கு தானே நமது பூமியை கொஞ்சம் கொஞ்சமாக அடகு வைத்துக்கொண்டு இருக்கிறோம். இதற்காகவா நாம் சுதந்திரம் பெற்றோம்.

எல்லா துறைகளிலும் அந்நிய முதலீட்டை வரவேற்கிறோம். முதலில் 25 சதவீதம், பின்னர் 49%, 51% என்று போய் இப்பொழுது 100 சதவீத அந்நிய மூதலீட்டிற்கு நமது அரசாங்கம் ஏற்பாடுகளை  செய்துக்கொண்டு இருக்கிறது. கேட்டால் இதற்கு உலகமயமாக்கல் என்று பெயர் வேறு.

அரசாங்கத்தை மட்டும் சொல்லி குற்றம் இல்லை. இது நமது அனைவரின் குற்றம். நான் வேலைப் பார்க்கும் கம்பெனி அமெரிக்க கம்பெனி என்று சொல்லிக்கொள்ளதானே நமக்கும் ஆசை. இது என்னையும் சேர்த்துதான்.

Wednesday, July 11, 2012

நான் ஈ ( ஒரு மவுத் டாக் )

இரண்டு வாரங்களுக்கு முன்:

"அது என்னடா 'நான் ஈ' படத்துக்கு இவ்வளவு விளம்பரம் பண்றாங்க?? யாருடா ஹீரோ??"

"தெரியலடா.. சந்தானம் போஸ்டர் பார்த்தேன். சந்தானம் தான் ஹீரோனு நினைக்கிறேன்."

"இல்ல இல்ல. இது தெலுங்கு படம். தமிழில் டப்பிங். வேற யாரோ, தெலுங்கு ஹீரோ."

"ஓ.. டப்பிங் படத்துக்கே இவ்வளவு சீன்'னா"

"தயாரிப்பு PVP குரூப் டா. பெரிய பணம் பார்ட்டி. பணத்தை வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம அலச்சுட்டு இருக்காங்கலாம். விக்ரம் வச்சு ஒரு மொக்கை படம் தந்தாங்களே, அந்த குரூப் தான்"

"பில்லா-2 ரெண்டு வாரம் லேட்டுல, அதான் இந்த படத்தை ரீலிஸ் பண்றாங்கனு நினைக்கிறேன்"

வியாழன்: (05/07/12)

"மச்சி, பில்லா அடுத்த வாரம் ரீலிஸா?? கன்ஃபார்ம் ஆயிடுச்சா??"

"ஆமாம் பா, அடுத்த வாரம் எங்க தலைக்கு ஓபனிங்'கை மட்டும் பாரு. தமிழ்நாடே அதிர போகுது"

"ம். நாளைக்கு என்ன படம் ரீலிஸ் ஆகுது??"

"அந்த 'நான் ஈ" ரீலிஸ்"

"இவுங்க தொல்லை தாங்க முடியலயே... ஏதோ ஈ தான் ஹீரோ'வாம். வில்லனை பழிவாங்குமாம்"

"கார்ட்டூன் படமா??"

திங்கள்: (09/07/12)

"என்ன மச்சி 'நான் ஈ' படம் நல்லாயிருக்காம். நிறைய பேரு சொல்றாங்க"

"ஆமாம் டா. ஆபிஸ் பசங்களும் சொன்னாங்க.  எஸ்.எஸ்.ராஜமெளலி தான் இயக்குநர். அந்த "மாவீரன்" படம் எடுத்தாருல அவருதான்"

"இந்த வாரம் பில்லா வேற வருது, தேவையில்லாமல் இப்ப ரீலிஸ் பண்ணிடாங்க. முன்னாடியே ரீலிஸ் செய்திருந்தால், கொஞ்சமாவது ஓடி இருக்கும்"

"சரி, இன்னைக்கு நைட் ஷோ போலாமா??"

படம் இடைவேளை: (11:00 PM)

"படம் நல்லாதான் இருக்கு மச்சி. ஒரு 'ஈ' வச்சு என்ன ஆட்டம் காட்டுறாங்க பாரேன்"

"மச்சி, கிராபிக்ஸ் சூப்பரா பண்ணியிருக்காங்க டா. இது மாதிரி கிராபிக்ஸ் பண்றப்ப கொஞ்சம் சொதப்பினாலும் காமெடியா மாறிடும். ஆனால் இதுல சூப்பரா பண்ணியிருக்காங்க"

"செலவே இல்லை'ல??. ஒரு 'ஈ' வச்சே ஒட்டுறாங்க"

"டேய், இந்த படத்துக்கு மொத்தம் 30 கோடி செலவாம்"

" 30 கோடியா?? சரி வா, உள்ளே போவோம். பில்லா டிரய்லர் போடுவாங்க"

படம் முடிந்தவுடன்: (12:30 AM)

"ஏன் மச்சி?? இந்த படத்தால பில்லா ஓபனிங் கொஞ்சம் குறையுமோ??"

"டேய் அதுக்குலாம் வாய்ப்பே இல்ல. எல்லா தியேட்டரலையும் பில்லா படத்தை ஏற்கனவே வாங்கிட்டாங்க. ஒரு வேளை பில்லா படம் நல்லா இல்லைனா. கொஞ்ச நாள் கழிச்சு திரும்ப "நான் ஈ" படத்தையே போட வாய்ய்பு இருக்கு"

"ம்"

"நாளைக்கு அக்கா, மாமா, அம்மா எல்லாரையும் அழைச்சுகிட்டு வந்து திரும்ப 'நான் ஈ'  பார்க்கனும் மச்சி"

Thursday, April 19, 2012

கண்காணிப்பு கேமரா

கண்காணிப்பு கேமராக்களைப் பார்க்கும் போதேல்லாம் தேவையில்லாமல் பதற்றம் அடைகிறேன். எனக்கும் என் முகத்துக்கும் சம்மந்தம் இல்லாத ஒரு சிரிப்பை வரவழைக்கிறேன். ஒரு கையால் தலையை கோதுகிறேன். நான் கண்காணிப்பு கேமராவை பார்ததை வேறு யாராவது பார்த்தார்களா? என்று ஒருமுறை சுற்றி முற்றி பார்க்கிறேன். அதே இடத்தில் நிற்பதா அல்லது வேறு இடத்திற்கு சென்று விடுவதா என்று ஒரு முறை யோசிக்கிறேன்.



ஒரு கண்காணிப்பு கேமராவை பார்க்கும் போது உங்களுக்கு என்னவிதமான எண்ணங்கள் உதிக்கும் என்பது எனக்கு தெரியாது. ஒருவேளை அந்த கேமரா உங்களை எந்தவீதத்திலும் பாதிக்காமல் இருக்கலாம், அப்படி இருந்தால் நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டம் செய்தவர். நானும் உங்களை போல்  இருக்கதான் ஆசைப்படுகிறேன், ஆனால் முடியவில்லை. யாரோ ஒருவர் கேமராவில் நம்மை பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்பதை நினைக்கும் போதே, நெஞ்சு கொஞ்சம் அதிகமாக துடிக்க தொடங்கிவிடுகிறது.

கண்காணிப்பு கேமராவின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே போகிறது. கடைகள் என்றில்லாமல் இப்பொழுது தெருவுக்கு தெரு கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. நான் போகும் இடமெல்லாம், என்னைப் சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் வைக்கிறார்களோ? என்று எனக்கு ஒரு மாயை. எப்பொழுதுமே, என் ரகசியங்களை யாருக்கும் தெரியாமல் பாதுகாத்துக்கொண்டு இருக்கும் எனக்கு, இந்த கேமராக்கள் ஒரு பயத்தை உண்டு பண்ணுகின்றன. ரகசியங்களை பாதுகாப்பது என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். எனது விருப்பங்களை இந்த கேமராக்கள் நிராகரிக்கின்றன. ஒரு தனிமனித சுதந்திரத்தை இந்த கேமராக்கள் அழிக்கின்றன. சில நேரங்களில் என் வீட்டிற்கு உள்ளே கூட நான் கண்காணிக்கப்படுகிறேனோ என்ற அச்சம் தோன்றுகிறது.

யாருக்கு தெரியும், என் படுக்கையறையில் கூட கண்காணிப்பு கேமராக்கள் இருக்கலாம், "என் படுக்கையறையில் யாரோ ஒழிந்து இருக்கிறார்கள்" என்று மனுஷ்ய புத்திரன் எழுதியது போல்.

சமீபத்தில் நடந்த வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கி சூட்டில், அவர்களை எந்தவிதமான கேள்வியும் கேட்காமல் கொலை செய்தமைக்கு போலீஸ் சொல்லும் ஆதாரம், கண்காணிப்பு கேமராவில் அவன் முகம் பதிவானது என்பதுதான். ஒருவேளை அந்த நேரத்தில் நான் அந்த வங்கிக்கு சென்று கொஞ்சம் முழித்து இருந்தால், நானும் அந்த லிஸ்டில் சேர்ந்து இருப்பேனோ?? என்று பயமாக உள்ளது.

"இது எல்லாம் தேவையில்லாத பயம். இதற்கெல்லாம் பயந்தால் இப்படியே பயந்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான்" என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. ஆனால், கண்காணிப்பு கேமராக்களை பார்க்கும் போதேல்லாம் பதற்றம் அடையும் ஒருவனால் பின் வேறு எப்படி எழுத முடியும்.

Thursday, March 29, 2012

உங்களுக்கு இதைப்போல் இன்னும் எத்தனையோ கவிதைகள் கிடைக்கலாம்


தோழிகள் அவர்களின் காதலர்களைப் பற்றி பேசும்போது
எந்தவிதமான முகபாவனைகளை நான் தருவது என்று
கொஞ்சம் குழம்பிதான் போகிறேன்.

வாசகர்களே, கொஞ்சம் பொறுங்கள்
ஒரு கவிதைக்கான முதல் வரி கிடைத்ததுபோல் தெரிகிறது
இந்த வரிகளை வைத்துக்கொண்டு, ஒரு முழு கவிதையை எழுதுவதற்காக
எனது இரண்டு தோழிகளை இந்த கவிதையில் இணைக்கிறேன்.

ஒருத்தி அவளின் கணவனைப் பற்றியும்
மற்றொருத்தி அவளின் காதலனைப் பற்றியும்
என்னிடம் பேசுவாள் என்று சொல்லும் போதே
ஒரு தோழிக்கு திருமணம் முடிந்துவிட்டதை
குறிப்பால் வாசக்ர்களுக்கு உணர்த்துகிறேன்.

அந்த இரண்டு தோழிகளில்
ஒருத்தியை நான் மிகவும் தீவிரமாக நேசித்தேன். என்பதின் மூலம்
நான் காதலித்தவளுக்கு திருமணம் முடிந்துவிட்டதா? என்ற குழப்பத்தை
வாசகர்களாகிய உங்களுக்கு எற்படுத்துகிறேன்.

அதில் ஒரு தோழியின் பெயர் கவிதா என்று எழுதுகிறேன்.
இதை படித்தவுடன் எனது நெடுநாளைய வாசகர்கள் முகத்தில்
ஒரு சிறு புன்னகையையும்
புதிய வாசகர்களுக்கு இது ஒரு கதையின் தொடர்ச்சி என்ற மாயத்தையும்
உருவாக்குகிறேன்.

இதற்குமேல் இந்த கவிதையை எப்படி தொடர்வது என்று தெரியவில்லை
வாசகர்களின் வாசிப்பு இன்பத்திற்காக
எந்த ஒரு விபரீத முடிவையும் இப்பொழுது எடுக்கபோவதில்லை.

உங்களுக்கு இதைப்போல் இன்னும் எத்தனையோ கவிதைகள் கிடைக்கலாம்
ஆனால், எனக்கு அப்படியல்ல.

Tuesday, March 27, 2012

.

    எனக்கு தெரிந்த எல்லா வழிகளையும் அடைத்துவிட்டீர்கள்

இனி நீங்கள் காட்டும் வழியில்தான் நான் செல்லவேண்டும்
வழி காட்டுவதற்கு நன்றி.

    என் குரலின் ஓசையினை மறக்க செய்தீர்கள்

என் வாழ்நாள் முழுவதும் எனக்காக குரல் கொடுத்துக்கொண்டும்,
இனி கொடுக்கவும் செய்யும் உங்களுக்கு
மீண்டும் என் மனமார்ந்த நன்றி.

    எனது கனவின் மேலோட்டத்தை அழித்துவிட்டீர்கள்

இதுவே
நான் கண்ட கனவு
என்று நம்பவைக்க முயற்சிக்கிறீர்கள்,
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    எனது சுயகருத்துக்கள் அனைத்தும் போலியானவை
    என என்னை நம்பவைத்தீர்கள்.

இருந்தும் என் அடிமனதில் சில வார்த்தைகள்
கேட்டுக்கொண்டே இருக்கிறது

    "நான் செய்வது அனைத்தும் தவறாகவோ, முட்டாள்தனமாகவோ
      இருந்துவிட்டு போகட்டுமே"

நான் உங்களை போல்தான்
பேசவேண்டும்,
அழவேண்டும்,
சிரிக்கவேண்டும்,
நடிக்கவேண்டும்
என்றால்

பின் நான் எதற்கு.

Saturday, March 17, 2012

மூன்று புத்தகங்கள்


இரண்டு வாரத்துக்கு பத்து பதிவுகள் என்ற காலம் போய், இப்பொழுது இரண்டு மாதத்துக்கு ஒரு பதிவு என்று வந்துவிட்டது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை என்று ஒன்று சொல்வார்களே, அது இதுதான். ஏதாவது ஒன்றில் தீவிரமாக இருந்தால் இதுதான் பிரச்சனை, ஒரு கட்டத்துக்கு மேல் அலுத்துவிடும். நான் சொல்வது எல்லாவற்றிக்கும் சேர்த்துதான். (குறிப்பு: எல்லாவற்றிக்கும்)

போன மாதம் ஆரம்பத்தில் என் கண் மருத்துவர் கண்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கவும் என்று அறிவுரை சொன்ன பின், கண்களுக்கு எப்படி ஓய்வு கொடுப்பது என்று தீவிரமாக யோசித்ததில் கன்னி பயன்பாட்டினை மன்னிக்கவும் கணினி பயன்பாட்டினை குறைந்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். அலுவலகத்தில் நாம் கணினியை உபயோகபடுத்துவதே இரண்டு மணிநேரம்தான், அதையும் குறைத்துக்கொண்டால் நம்மை வேலையை விட்டு தூக்குவது உறுதியாகிவிடும். அதான் கொஞ்ச நாட்களுக்கு வலைப்பதிவுக்கு டாட்டா காட்டலாம் என்று முடிவு செய்தேன்..

தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்திக்கூட கண்களுக்கு ஓய்வு தரலாம்தான், நான் தொலைக்காட்சியில் பார்க்கும் ஒரே நிகழ்ச்சி இசையருவி நித்யா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் மட்டுமே. அதுவும் இந்த நித்யா இசையருவியை விட்டு விலகிய பின், நான் தொலைக்காட்சி பக்கம் தலைவைத்துக்கூட படுப்பதில்லை. அக்கா வீட்டுக்கு போகும் போது மட்டும் இது பொருந்தாது.  42 அங்குல LEDயில் ஆங்கில திரைப்படங்களை HD தொழில்நுட்பத்தில் சப்டைட்டிலுடன் பார்க்கும் சுகம் இருக்கிறதே, அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

கண் மருத்துவர் சொன்ன ஒரு வார கால ஓய்வு முடிந்த பின்னர் கூட, வலைப்பதிவில் எழுதுவதற்கு மனது இடம் கொடுக்கவில்லை. ஆனாலும் கடந்த ஒரு மாதத்தில் நான் படித்த மூன்று புத்தகங்களைப் பற்றி இங்கு எதாவது கிறுக்கியே தீர வேண்டும். அந்த மூன்று புத்தகங்கள் எஸ்.ராவின் உபபாண்டவம், யுவனின் ஏற்கனவே மற்றும் பா.வெங்கடேசனின் ராஜன் மகள் (இன்னும் ராஜன் மகளை முழுதாக படித்து முடிக்கவில்லை, இரண்டு கதைகள் மீதம் உள்ளது)

எஸ்.ராவின் உபபாண்டவம், நம் அனைவருக்குமே தெரிந்த மகாபாரத கதைதான். எஸ்.ராவுக்கே உள்ள மொழிநடையில் சொல்லியுள்ளார். மகாபாரத கதை இப்பொழுது நடந்துக்கொண்டு இருப்பது போலவும், அங்கு சென்றே கதை சொல்வது போலவும் எழுதப்பட்டுள்ளது. எஸ்.ராவின் எழுத்தை படிக்கும் போது எல்லாம், எனக்கு வீத வீதமான கனவுகள் வரும். அதே போல் உபபாண்டவத்தை படித்த அந்த இரண்டு வாரங்களில், நானும் கனவுலகில் படைகளுக்கு நடுவில் யாரிடமோ சண்டையிட்டு கொண்டு இருந்தேன். புத்தகத்தில் - ஒரு கதாபாத்திரத்தை, ஒரே பக்கத்தில் உள்ள ஒரே பத்திக்குள் பத்துக்கும் மேற்பட்ட பெயர்களை சொல்லி அழைக்கிறார். இது பல நேரங்களில் குழப்பத்தை தருகிறது.

அடுத்து படித்தது யுவனின் "ஏற்கனவே" சிறுகதை தொகுதி. நான் படிக்கும் யுவன் சந்திரசேகரின் முதல் புத்தகம் இது, மாய எதார்த்த கதைகள் எழுதுவதில் வல்லவர் இவர் என்று கேள்விபட்டு இவரின் மூன்று புத்தகங்களை வாங்கி அதில் முதலில் படித்த புத்தகம் இது. கிருஷ்ணா என்ற கதாபாத்திரம் வாழ்க்கையை சந்திக்கும் நபர்களைப் பற்றி ஒவ்வொரு கதையிலும் சொல்லப்படுகிறது. நாம் தினமும் வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள் பற்றிதான் ஒவ்வொரு கதையும் சொல்கிறது, ஆனால் அதை யுவன் சொல்லும் வீதம் புதிது. ஒவ்வொரு கதைக்குள்ளும் எத்தனையோ கிளை கதைகள் ஒழிந்து உள்ளன. யுவனின் மாய எதார்த்த நடை இதில் இல்லை என்றாலும் அற்புதமான கதை தொகுப்பு.

அடுத்து கடைசியாக படித்துக்கொண்டு இருப்பது, பா.வெங்கடேசன் எழுதிய "ராஜன் மகள்". மொத்தம் நான்கு குறுநாவல்கள் கொண்ட தொகுப்பு இது. இதில் முதல் இரண்டு கதைகளைதான் தற்பொழுது படித்து உள்ளேன். முதல் கதையான் "மழையின் குரல் தனிமை"யை இரண்டு முறை படித்து விட்டேன். ஓசூரில் இருக்கும் மழை வீட்டினை சுற்றியே கதை செல்கிறது. ஆரம்பத்திலேயே இதுதான் கதை என்று தெரிந்துவிடுகிறது, அதன் பின் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்கிறது. இனி நான் ஓசூர் பக்கம் எப்பொழுது போனாலும், இந்த மழை வீடுதான் ஞாபகம் வரும்.

இரண்டாவது குறுநாவல் "ஆயிரம் சாரதா". மனிதர்களின் மன ஓட்டத்தைப் பற்றி அற்புதமாக சொல்லப்படுகிறது. கதையினை படிக்கும் போதே, மனதில் திரைப்படமாக ஓடுவது போல் ஒரு எண்ணம்.

"ராஜன் மகள்" புத்தகத்தினை காலச்சுவடு 2001 ஆம் ஆண்டு வெளியீட்டு உள்ளது, விலை 110 ரூபாய். எழுத்துக்கள் மிகவும் அருகில் அருகில் இடைவேளியில்லாமல் எழுதப்பட்டே மொத்தம் 250 பக்கம் வருகிறது. இரண்டாவது பதிப்பாக இனி எதாவது பதிப்பகம் வெளியீட்டால், கண்டிப்பாக விலையினை 300 ரூபாய் வரை சொல்வார்கள். இரண்டு பாகமாக போட்டாலும் ஆச்சரியம் அடைவதற்கில்லை.

கொஞ்சம் பெரிய பதிவாக போய்விட்டது. மீண்டு சந்திப்போம்.

நன்றி.

Friday, March 16, 2012

ஒரு சின்ன உரையாடல்

"மச்சி, ரயில்வே பட்ஜெட்டைப் பற்றி ஒரு மெயில் அனுப்பி இருந்தேனே. பார்த்தியா??"

"ம்.. பார்த்தேன்"

"சென்னையிலிருந்து பெங்களூருக்கு இரண்டு மணிநேரத்தில் போகலாமா, புதுசா ரயில் விட போறாங்களாம்"

"ம்"

"இனிமேல், பெங்களூர் ஆபிஸ்ல எதாச்சும் மீட்டிங் என்றால், இதுலயே போய்டலாம். காலையில் ஆறு மணிக்கு கிளம்பினா, எட்டு மணிக்கு அங்கே போய்டலாம். செமல"

"ஆனால், டிரயின் காலை ஆறு மணிக்கு கிளம்பனுமே?? இன்னும் டைம்லாம் ஒன்னும் சொல்லலே.. அதுவும் இதுக்கு தனியா ரயில்வே டிராக் போடனுமாம்.. எப்படியும் நாலு வருஷம் ஆகும்"

"அதுலாம் சீக்கிரமா போட்டுருவாங்க பாரேன். சென்னை. பெங்களூர் இரண்டுமே முக்கியமான ஊருல"

"எங்க ஊருல, மாயவரத்துல இருந்து திருவாரூர் வர நான்கு மணிநேரம் ஆகுது. காரில் வந்தால் ஒரு மணிநேரத்துக்குள் வந்துடலாம். டிரயின் கும்பகோணம், தஞ்சாவூரு, நீடாமங்கலம் எப்படி சுற்றி வருது. திருவாரூர் , மாயவரம் பாதையை மீட்டர் கேஜிலிருந்து ப்ராட்கேஜ் மாற்ற ஆரம்பித்து பத்து வருஷம் முடிய போகிறது. இன்னும் மாற்றி முடிக்கல"

"அது லோக்கல் ஊரு மச்சி, இது மெட்ரோல"

"அப்ப லோக்கல் ஊரு இருக்குறவனாம், மனுசன் இல்லையா??"

"அதானே பார்த்தேன். எல்லாவற்றிக்கும் எதிர்ப்பு தெரிவிப்பியே.. இந்த இரண்டு மணிநேர ரயிலைப் பற்றி ஒன்னும் சொல்லலேயேனு"

"இல்ல மச்சி, அப்ப அந்த ஊரு மக்கள் மட்டும் என்ன பாவம் செச்சாங்க?? முன்னேற்றம் என்பது சம அளவில் இருக்க வேண்டும். இல்லைனா அது ஊனம்"

"உங்கிட்ட மனுசன் பேச முடியாது. சரி கூடங்குளம் போகனும்'னு சொன்னியே என்ன ஆச்சு"

"இப்ப போகல. நேரம் இல்லை"

"உங்களை மாதிரி ஆளுக, வாய்கிழியேப் பேச மட்டும்தான் லாய்க்கு" 

Wednesday, March 7, 2012

.

நீ என் பயத்தை போக்கவில்லை தேவி,
என் பயத்தின் வேரினை மட்டுமே நீக்கினாய்.

விருட்சமாகிய என் உடலில்
பயம் இன்னும் எங்கோ ஒரு இடத்தில்
ஒளிந்துக்கொண்டுதான் இருக்கிறது.

அது எப்பொழுது வேண்டுமானாலும் விழித்துவிடும்
என்ற எண்ணமே என்னை
இன்னும் பயம் கொள்ள செய்கிறது.

இப்பொழுது என்னிடம்
"அன்பு, பாசம், காதல், நட்பு, காமம், மகிழ்ச்சி"
என்று எதுவுமில்லை தேவி.

பயம் மட்டுமே தங்கியிருக்கிறது.

அடுத்தமுறையும்
என் முட்டாள்தனமான
வேண்டுகோளுக்கு
செவி சாய்த்து
என் பயத்தை நீக்க வந்தால்,
என் பயத்தை நீக்காதே தேவி,
என் பயமிகுந்த உயிரினை நீக்கிவிடு..

Thursday, January 26, 2012

படித்ததில் பிடித்தது

குழந்தைகள் பற்றி பேயோன் எழுதிய ஒரு கவிதை:

குட்டி இளவரசன்

கொஞ்ச வருபவர்களையெல்லாம் திட்டுகிறான்
பிரிய பொம்மைகளை வீசியெறிகிறான்
அதட்டுபவர்களையும் அப்படியே
இந்தக் குழந்தைக்கு ஏன் இவ்வளவு குரோதம்
என யாருக்கும் கேட்கத் தோன்றவில்லை
குழந்தைதானே என்கிறார்கள்
உரிமம் தருகிறார்கள்
ஒரு கையால் கும்மாங்குத்து குத்தினாலும்
இன்னொரு கையால் நம்மை கெட்டியாகப்
பிடித்துக்கொண்டுதானே இருக்கிறது என்கிறார்கள்
குழந்தைக்குக் கொஞ்சல்களும் கைதட்டல்களும்
தேவைப்படும் வரை தொடரும் நமக்கு தர்ம அடிகள்.

பேயோனின் இணையத்தளத்தில் படிக்க:
http://www.writerpayon.com/2012/01/26/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/

Tuesday, January 24, 2012

பெண்னை மயக்கி காதலிப்பது எப்படி?

ப்ளாக்கரில் உள்ள Stats'யை பயன்படுத்தி, எனது வலைப்பதிவுக்கு வந்தவர்கள், போனவர்கள் பட்டியலை நோட்டமிடுவது எனக்கு மிகவும் பிடித்தமான செயல்களில் ஒன்று. இந்த Stats மூலம் அறிந்துக்கொண்டது, எனது வலைப்பதிவை என்னை தவிர இன்னும் பத்து பேர் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய அதிசயம்?? இதைவிட அதிசயமான ஒன்று ஐ-பேட் மூலமாக கூட எனது வலைப்பதிவை சிலர் படிக்கிறார்கள்.

சரி, இதைலாம் விடுங்கள். இந்த Stats'யில் மிகவும் குஜாலான பகுதி எது தெரியுமா?? எந்தந்த வார்த்தைகளை தேடி, நமது வலைப்பதிவுக்கு வருகிறார்கள் என்பதை பார்ப்பதுதான்.

நேற்று, கூகுளில் யாரோ ஒருவர் "பெண்னை மயக்கி காதலிப்பது எப்படி" என்று தேடி, அதன் மூலம் எனது வலைப்பதிவுக்கு வந்துள்ளார். பாவம் அவர், எத்தனை எதிர்பார்பில் வந்து இருப்பார்.

ஒருவேளை, "பெண்னை மயக்கி காதலிப்பது எப்படி" என்ற கேள்விக்கான பதிலை இன்னும் அவர் கண்டுபிடிக்காமல், மீண்டும் கூகுளில் தேடி எனது வலைப்பதிவுக்கு அவர் வர நேர்ந்தால், அவருக்கு ஒன்றே ஒன்றை மட்டும் நான் சொல்லிக்கொள்ளுகிறேன், "பெண்னை மயக்கி காதலிப்பது எப்படி? என்று எனக்கு தெரிந்திருந்தால், நான் எதற்காக சார் இந்த பதிவை மாங்கு மாங்கு என்று டைப் செய்துக்கொண்டு இருக்கிறேன்?"


Monday, January 23, 2012

வார்த்தைகளோடு அலைபவன் சொல்லும் கதைகள்


4.தலையணை கதைகள்

உங்களுக்கு எற்கனவே தெரிந்திருக்கும், நீங்களும் முன்னரே கேள்விப்பட்டு இருப்பீர்கள். "ஒருவன் தலையணைக்கும் அவன் கனவுகளுக்கும் சம்மந்தம் உள்ளது" என்பதை, "அழுக்கான தலையணைகள்" துர்கனவுகளை உருவாக்கும் என்பதை.

அவன் அறையில் அவன் உபயோகப்படுத்துவதற்காகவே மூன்று தலையணைகளை வைத்துள்ளான். அந்த தலையணைகளை உபயோகப்படுத்த வேறு யாரையும் இதுவரை அவன் அனுமதித்தது இல்லை. அவன் நண்பன் ஒருவன் மூன்று நாள் தூக்கமில்லா பயணத்தில் அவனைப் பார்க்க வந்த ஒரு இரவில, நண்பன் உறங்குவதற்கு அவன் தலையணைகளை எதையும் தரவில்லை, கடைசியில் அவன் நண்பன் கைகளை உபயோகித்து தான் தூங்கினான்.

அவனுடைய மூன்று தலையணைகளும் மூன்று விதமான கனவினை தர கூடியவை. உங்களை போல்தான் அவனும் இதை முதலில் நம்பவில்லை,  நூறு நாட்கள் சோதனையின் பின்தான் அவன் இதை நம்பத் தொடங்கினான். தலையணைகளின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக கனவுகளின் விதங்களும் அதிகமாகும் என்பதாலும் மேலும் இந்த மூன்று விதமான கனவுகளுக்கே அவன் அடிமையாகிவிட்டான் என்பதாலும் மேலும் நான்காவதாக ஒரு தலையணை வாங்க முடிவு செய்யும் நாட்களில் வரும் கனவுகளில் எல்லாம்  "நான்காவதாக வாங்கிய தலையணையில் உள்ள பஞ்சுகள் தனி தனியாக பிரிந்து பல கோடி எறும்புகளாக மாறி அவன் உடலை அரித்து கொல்வது போல் கனவு கண்டதாலும்", நான்காவது தலையணை வாங்கும் எண்ணத்தை அவன் கைவிட்டான்.

மூன்று விதமான தலையணைகளை தரும் மூன்று விதமான கனவினை அவன் சோதனை செய்த அந்த நூறு நாட்களில், ஒவ்வொருநாளும் தூக்கம் கலைந்து எழுந்தவுடன், அன்றைக்கு அவன் பார்த்த கனவினை நினைவில் கொண்டுவர முயற்சிப்பான். கனவுகள் நினைவுக்கு வந்தவுடன் அந்த கனவினை அந்த தலையணைகளுக்கான டைரியில் எழுதிவிடுவான், இதற்காகவே மூன்று வண்ணங்களில் டைரிகள் வைத்திருந்தான். சிவப்பு, ஊதா, பச்சை என்ற மூன்று வண்ணங்களில் இருந்த மூன்று தலையணைகளுக்கு மூன்று விதமான டைரிகள். பல நேரங்களில் அந்த கனவுகள் உடனே நினைவுக்கு வராது, அன்றைய நாள் முழுவதும் அந்த கனவினைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருப்பான். கடைசிவரை நினைவுக்கு வராத கனவுகளும் உண்டு. நாற்பத்தி ஐந்து நாட்களில் முடிய வேண்டிய சோதனை இதன் காரணமாகவே நூறு நாட்கள் நீடித்தது. இப்படி நூறு நாட்களுக்கு அவன் செய்த சோதனைக்கு பின்னரே அவனுடைய மூன்று தலையணைகள் மூன்று விதமாக கனவினை தருகிறது என்பதை நம்ப தொடங்கினான்.

அதன் படி,

சிவப்பு நிற தலையணை, தற்கொலை கனவுகளை தர கூடியது
ஊதா நிற தலையணை, கடவுளைப் பற்றிய் கனவினை தர கூடியது
பச்சை நிற தலையணை, அவன் கதைகளைப் பற்றிய கனவினை தர கூடியது

இனி அவன் தலையணைப் பற்றியும், அவன் கனவினைப் பற்றியும் இங்கே பார்ப்போம்.



Saturday, January 21, 2012

புத்தகப் பட்டியல்



* துருக்கிக்தொப்பி - கீரனூர் ஜாகிர்ராஜா
* உப பாண்டவம் - எஸ்.ரா
* ஆத்மநாம் படைப்புகள் - ஆத்மநாம்
* கணையாழி கடைசிப் பக்கங்கள் - சுஜாதா
* ஸ்ரீரங்கத்து தேவதைகள் - சுஜாதா
* Notes from the Underground - Fyodor Dostoyevsky
* சிலுவையின் பெயரால் - ஜெயமோகன்
* திசை காட்டிப் பறவை - பேயோன்
* என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் - மனுஷ்ய புத்திரன்
* கரிசல் காட்டுக் கடுதாசி - கி.ரா
* ஜே.ஜே. சில குறிப்புகள் - சு.ரா
* The Trial - Kafka
* பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா
* தோட்டியின் மகன் - சு.ரா
* எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் பேன்சி பனியனும் - சாரு நிவேதிதா
* ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா

இவை எல்லாம் புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் அல்ல. என்னிடமிருந்து நண்பர்கள் கடனாக வாங்கி இது வரை என் கைக்கு திரும்பி வராத புத்தகங்களின் பட்டியல். இது ஒரு பகுதி மட்டுமே. கடனாக தந்த பல புத்தகங்களின் பெயர்களை மறந்து விட்டதால், என்னால் முழுமையான பட்டியலை தயார் செய்ய முடியவில்லை.

"அப்பாடி, நான் கடனாக வாங்கிய புத்தகம் தப்பியது" என்று நண்பர்கள் யாரும் சந்தோஷமாகயிருந்து விட வேண்டாம். ஏனென்றால், நான் கடனாக கொடுத்த புத்தகங்களின் பெயர்கள் நினைவில் வர வர இந்த பதிவில் அந்த புத்தகங்களின் பெயர்களை சேர்த்துக் கொண்டேயிருக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

இந்த பதிவை எழுதி பதிவிடும் போது, ஏழு புத்தகங்களே இருந்தது, இப்பொழுது எத்தனை புத்தகங்கள் உள்ளது என்பதை நீங்களே ஒரு முறை எண்ணி சரி பார்த்துக்கொள்ளவும். உங்களுக்கு நான் கடனாகக் கொடுத்த புத்தகத்தின் பெயர் கூட, ஒருநாள் இந்த பட்டியலில் சேரலாம். ஆகவே, என் வலைப்பதிவில் உள்ள இந்த பதிவை மட்டும் தொடர்ந்து சரி பார்த்துக்கொண்டேயிருக்கவும். ஒருவேளை உங்களுக்கு நான் கடனாகக் கொடுத்த புத்தகத்தின் பெயரைக் கடைசி வரை என்னால் நினைவில் கொண்டு வர முடியவில்லை என்றால், உங்கள் மனசாட்சியின் படி நீங்களே அந்த புத்தகத்தை என்னிடம் திரும்ப கொடுத்துவிடவும்.

நண்பன் ஒருவனுக்கு போன் செய்து நான் கடனாக கொடுத்த புத்தகங்களைப் பற்றி கேட்ட போது, " அய்யோ, மறந்துவிட்டேன் மச்சி.. இப்பொழுதே பார்சலில் உனது வீட்டுக்கு அனுப்பிவிடுகிறேன்" என்றான். ஆகவே அவனுக்கு கடனாக தந்த நான்கு புத்தகங்களின் பெயர்களை இங்கே சேர்க்கவில்லை. அவன் சொல்லி ஒரு மாதம் முடிய போகிறது, நேரிலேயே ஒருமுறை சந்தித்தும் விட்டோம். இன்னும் புத்தகங்கள் கைக்கு வந்த வழியைக்கானோம்.

நானும் பலரிடமிருந்து புத்தகங்களை கடனாக வாங்கி மீண்டும் அவர்களிடம் கொடுக்காமல் சமாளிப்பு போடுபவன் என்ற முறையில், ஒன்றை மட்டும் என்னால் தெளிவாக சொல்ல முடியும். "அவன் தான் இந்த புத்தகத்தை படித்துவிட்டானே, பின் எதற்கு அவனுக்கு மீண்டும் தர வேண்டும்" என்ற எண்ணமே பலரும் புத்தகத்தை திரும்பக் கொடுக்காமல் இருக்க காரணம். இந்த காரணம் எனக்கும் சேர்த்துதான்.

(நண்பர்களுக்கு முக்கிய அறிவிப்பு: "இந்தந்த புத்தகம் இந்தந்த நண்பரால் கடனாகப் பெறப்பட்டு இன்னும் திரும்ப தராமல் நிலுவையில் உள்ளது" என்ற பட்டியலை விரைவில் எனது வலைப்பதிவில் வெளியிட முடிவு செய்துள்ளேன்) 

Wednesday, January 18, 2012

ஒரு ஆட்டோகிராப் ப்ளிஸ்

புத்தகக் கண்காட்சியில் புதுப்புனல் பதிப்பகத்தில் எம்.ஜி.சுரேஷ் எழுதிய இரண்டு நாவலை வாங்கினேன். "அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேனீரும்" மற்றும் "அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்" ஆகிய இரண்டு நாவல்கள். இதன் மொத்த விலை ரூபாய் 365 (115+ 250). இதே புத்தகங்களின் புதிய பதிப்பு அடையாளம் பதிப்பகத்தில் கிடைப்பதால், ஸ்டாக் காலி செய்வதாக சொல்லி ரூபாய் 110'க்கு தந்தார்கள். மேலும், என்னைப் பார்த்தால் அவர்களுக்கு கல்லூரி மாணவன் போல் தோன்றியிருக்கும் போல, "கல்லூரி நண்பர்களுக்கும் சொல்லவும். எம்.ஜி.சுரேஷின் அனைத்து புத்தகங்களும் குறைந்த விலைக்கு தருகிறோம்" என்றார்கள்.

இப்பொழுது அது அல்ல பிரச்சனை. சொல்ல போனால் பிரச்சனை என்று எதுவும் இல்லைதான்.

"அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேனீரும்" புத்தகத்தை வீட்டில் வந்து பிரித்து முதல் பக்கத்தைப் பார்த்த போது,  எம்.ஜி.சுரேஷ் கையெழுத்து போட்டு சொக்கலிங்கம் என்பவருக்கு இந்த புத்தகத்தை தந்திருப்பது தெரியவந்தது. கையெழுத்து போட்ட தேதி 16.02.2000. ஆனால் புத்தகம் புதியது போலதான் உள்ளது. போல அல்ல, புதியதே தான். ஒருவேளை கையெழுத்து போட்டபின் புத்தகத்தை சொக்கலிங்கம் வாங்கமால் திரும்ப கொடுத்து இருக்கலாம். இந்த கையெழுதுக்கு பின்னால் கண்டிப்பாக எதாவது ஒரு கதை இருக்கும். அந்த கதை என்னவாகயிருக்கும் என்பதைப் பற்றிதான் இப்பொழுது யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.


Tuesday, January 10, 2012

வசந்தகாலத்தில் ஒருநாள்

என் வாழ்நாளின் வசந்தகாலத்தில் வாழத்தொடங்கி இருக்கிறேன்.  இந்த வசந்தகாலத்தில் என் ஜன்னலோரத்தில் எனக்காக மட்டுமே, எப்பொழுதும் எனது மழைச்சாரல் பொழிந்துக்கொண்டே இருகிறது. அதன் சாரலில் பனித்துளிகள் உருவாகி என் முகத்தினை தடவி என் தூக்கத்தை கலைக்கின்றது. என் தூக்கத்தை கலைக்கும் இந்த பனித்துளியின் மீது எனக்கு எந்தவீதத்திலும் கோபம் ஏற்படுவதில்லை, மாறாக அதன் மீது ஒருவீத காதலே எற்படுகிறது. வசந்தகாலத்தில் உருவாகும் பனித்துளிகளின் முரணினை யோசித்துக்கொண்டே சாலைகளில் நடக்க தொடங்குகிறேன். நான் சாலையில் பார்த்த முதல் நபரே என்னைப் பார்த்து புன்னகைக்கிறார். அந்த புன்னகைக்கு பதிலாக என்னுள் நேற்று இரவிலிருந்தே ஒட்டிக்கொண்டு இருக்கும் சந்தோஷ கீற்றுக்களில் சிலவற்றை அவரிடம் தந்துவிட்டு மீண்டும் நடக்க தொடங்குகிறேன். ஒரு இளம் வெயிலும் என்னை பின் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது.

இந்த வசந்தகாலத்தில், எனக்கு உண்டான சந்தோஷத்தை சாலையில் போவோரிடம் எல்லாம் பகிர்ந்துக்கொள்கிறேன். அவர்களுக்கும் வசந்தகாலத்தின் மீது ஒருவீத காதல் வந்துவிடுகிறது. தேவையில்லாமல், ஒரு குழந்தையை தூக்கி கொஞ்சுகிறேன், ஒரு முதியவருக்கு சாலையினை கடக்க உதவுகிறேன், எப்பொழுதுதோ இறந்து போன் கணவனைப் பற்றி ஒரு மூதாட்டியிடம் விசாரிக்கிறேன், என்னைப் பார்த்து புன்னகைக்கும் என் அலுவலக பெண் ஒருத்திக்கு ரோஜாப்பூ ஒன்றினை பரிசாக தருகிறேன்.

இந்த வசந்தகாலத்தில் கவிதைகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. என் கவிதைகளில் என்னையறியாமல் வந்துவிடும் சாம்பல் நிற பூனைகளைப் பற்றி இப்பொழுதெல்லாம் அதிகம் கவலைப்படுவதில்லை. அந்த பூனைகளை அதன் போக்குக்கு விட்டுவிடுகிறேன். அவை, எனது கவிதைகளின் ஆரம்ப வரி முதல் இறுதி வரை ஆட்டம் போடுகின்றன. வசந்த காலத்தில் என்னுள் புகுந்துக்கொண்ட ஆனந்தத்தை பகிர்ந்துக்கொள்ள யாரும் இல்லாத போது, இந்த பூனைகளிடம் பேசத்தொடங்குகிறேன். எத்தனை யுகங்கள் ஆனாலும் இந்த கவிதைகளுக்குள் அழியாமல் இருக்க போகும் இந்த பூனைகள், அந்த கவிதையில் உள்ள வார்த்தைகளை உண்டே உயிர் வாழ்வதாக சொல்லுகின்றன. அதனிடம் சில நேரங்களில் நகுலன் வீட்டு பூனைகளைப் பற்றியும் விசாரிக்கிறேன். என்னுடைய வசந்தகால இன்பம் அவைகளுக்கும் தொற்றிக்கொள்கிறது, ஒரு பூனை எப்பொழுதோ படித்த பாரதியின் கவிதை ஒன்றை மிகவும் சத்தமாக வாசிக்கிறது.

பின்னர், எனக்காக மட்டுமே எழுதிக்கொண்டு இருக்கும் ஒரு எழுத்தாளனை சந்தித்தேன். அவனுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. அவனுடைய ஒரே வாசகன் நான்தான் என்று சொல்லி அவனின் வசந்தகாலத்தினை அழிக்க விரும்பாததால், தவறான முகவரிக்கு வந்துவிட்டதாக சொல்லி சென்றேன்.

இந்த வசந்தகாலத்தில், என் புனைவு உலகிற்கு எப்படி நுழைவது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த பெண்ணொருத்தியை, அரைப் பக்கமே எழுதிய ஒரு பத்திக் கதை அல்லது கட்டுரை மூலம் என் கதை உலகிற்கு அழைத்துவந்தேன். இந்த வசந்தகாலத்தில் ஒரு அபலை பெண்ணுக்கு வாழ்வு கொடுத்தது என் வசந்தகாலத்தை இன்னும் மகிழ்ச்சிப்படுத்தியது.

இரவினூடே வந்து சென்ற ஒரு ரயிலின் உதவியுடன், என் கனவுலகிற்கு பயணப்பட்டேன். அங்கு எனக்கு மிகவும் பிடித்த என் பள்ளிக்கால பெண்ணை சந்திக்க நேர்ந்தது. அவள், அவளின் கணவனையும், குழந்தையையும் அறிமுகம் செய்தாள். அவளின் கணவனுடன் தேநீர் அருந்தும் போது, அவனும் ஒரு ரயில் மூலமாகவே இந்த கனவுலகிற்கு வந்ததாகச் சொன்னான். நாங்கள் தேநீர் அருந்திக்கொண்டிருப்பது அவன் கனவினால். அல்லது என் கனவினால் என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போதே - இந்த வசந்தகாலத்தில் என் ஜன்னலோரத்தில் எனக்காக மட்டுமே பொழியும் மழைச்சாரலால் உருவான பனித்துளிகள் என் முகத்தினை தடவ, நான் தூக்கத்திலிருந்து எழுந்தேன்.

Tuesday, January 3, 2012

ஒரு பின்னூட்டம்

எனது பழையப் பதிவுகளை புதிய டெம்ப்ளேட்டில் பார்த்தால் எப்படி இருக்கும் என்ற ஆசையில், பழையப் பதிவுகளை மேய்ந்துக்கொண்டு இருந்தேன். அப்பொழுது பேரின்பா எனது பதிவு ஒன்றுக்கு எழுதிய ஒரு பின்னூட்டத்தை படிக்க நேர்ந்தது. 

பேரின்பாவின் பின்னூட்டம் கீழே.....
என் வரையில் கவிதையை நான் ரகம் பிரிப்பதில்லை. அது நல்லது அல்லது லாயக்கற்றது என்பதை அடுத்த கவிதை எழுதும் போதுதான் தீர்மானிக்கிறேன். எழுத்துப்பிழை இல்லாமல் இருப்பதில்லை. கவிதையை அதுபாட்டுக்கு நடை பழகவிட்டுவிடுவதே என் வழக்கம். “இந்த கவிதை புரியவேயில்லை” என்பது, “அவனுக்கு கோர்வையாக பேசத்தெரியாது“ என்பதைப் போன்றது.

வார்த்தைகளை கைபிடி அளவே பயன்படுத்துவது கவிதையின் அடிநாதம். ஒருவன் சொல்லவந்த விஷயத்தை அவன் பார்வைக்கே சென்று பார்ப்பது மேலோங்கிய ரசனை. எழுதிய அத்தனை கவிதைகளும் அனைவருக்கும் புரிவதில்லை. ‘இதுதான் என் கவிதையின் சாரம்‘ என பிரச்சார வார்த்தைகளைக் கொண்டு புனைவது கவிதையாகாது என்பது என் சார்பு.

என்றோ நான் பார்த்த என் அம்மாயி வீட்டின் திண்ணையை நான் கவிதையாய் சொல்லும்போது அது காட்சி விவரிப்பில் அம்சமானதாக இருப்பினும் , வாசிப்பவர் மனது என்றோ தான் பார்த்த அழுக்கு கிராமத்துத் திண்ணையை ஞாபகப்படுத்திக்கொள்ளும். நான் பார்த்த திண்ணை இப்படித்தான் இருந்தது என்பதை விவரிக்கிறேன். அவர்கள் கற்பனையில் அது வேறு ஒரு திண்ணை. வேறுபாடு வந்தேதீரும். அதை எற்றுக்கொள்ளும் மனம் என்னிடமுண்டு.

-பேரின்பா