Saturday, March 17, 2012

மூன்று புத்தகங்கள்


இரண்டு வாரத்துக்கு பத்து பதிவுகள் என்ற காலம் போய், இப்பொழுது இரண்டு மாதத்துக்கு ஒரு பதிவு என்று வந்துவிட்டது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை என்று ஒன்று சொல்வார்களே, அது இதுதான். ஏதாவது ஒன்றில் தீவிரமாக இருந்தால் இதுதான் பிரச்சனை, ஒரு கட்டத்துக்கு மேல் அலுத்துவிடும். நான் சொல்வது எல்லாவற்றிக்கும் சேர்த்துதான். (குறிப்பு: எல்லாவற்றிக்கும்)

போன மாதம் ஆரம்பத்தில் என் கண் மருத்துவர் கண்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கவும் என்று அறிவுரை சொன்ன பின், கண்களுக்கு எப்படி ஓய்வு கொடுப்பது என்று தீவிரமாக யோசித்ததில் கன்னி பயன்பாட்டினை மன்னிக்கவும் கணினி பயன்பாட்டினை குறைந்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். அலுவலகத்தில் நாம் கணினியை உபயோகபடுத்துவதே இரண்டு மணிநேரம்தான், அதையும் குறைத்துக்கொண்டால் நம்மை வேலையை விட்டு தூக்குவது உறுதியாகிவிடும். அதான் கொஞ்ச நாட்களுக்கு வலைப்பதிவுக்கு டாட்டா காட்டலாம் என்று முடிவு செய்தேன்..

தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்திக்கூட கண்களுக்கு ஓய்வு தரலாம்தான், நான் தொலைக்காட்சியில் பார்க்கும் ஒரே நிகழ்ச்சி இசையருவி நித்யா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் மட்டுமே. அதுவும் இந்த நித்யா இசையருவியை விட்டு விலகிய பின், நான் தொலைக்காட்சி பக்கம் தலைவைத்துக்கூட படுப்பதில்லை. அக்கா வீட்டுக்கு போகும் போது மட்டும் இது பொருந்தாது.  42 அங்குல LEDயில் ஆங்கில திரைப்படங்களை HD தொழில்நுட்பத்தில் சப்டைட்டிலுடன் பார்க்கும் சுகம் இருக்கிறதே, அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

கண் மருத்துவர் சொன்ன ஒரு வார கால ஓய்வு முடிந்த பின்னர் கூட, வலைப்பதிவில் எழுதுவதற்கு மனது இடம் கொடுக்கவில்லை. ஆனாலும் கடந்த ஒரு மாதத்தில் நான் படித்த மூன்று புத்தகங்களைப் பற்றி இங்கு எதாவது கிறுக்கியே தீர வேண்டும். அந்த மூன்று புத்தகங்கள் எஸ்.ராவின் உபபாண்டவம், யுவனின் ஏற்கனவே மற்றும் பா.வெங்கடேசனின் ராஜன் மகள் (இன்னும் ராஜன் மகளை முழுதாக படித்து முடிக்கவில்லை, இரண்டு கதைகள் மீதம் உள்ளது)

எஸ்.ராவின் உபபாண்டவம், நம் அனைவருக்குமே தெரிந்த மகாபாரத கதைதான். எஸ்.ராவுக்கே உள்ள மொழிநடையில் சொல்லியுள்ளார். மகாபாரத கதை இப்பொழுது நடந்துக்கொண்டு இருப்பது போலவும், அங்கு சென்றே கதை சொல்வது போலவும் எழுதப்பட்டுள்ளது. எஸ்.ராவின் எழுத்தை படிக்கும் போது எல்லாம், எனக்கு வீத வீதமான கனவுகள் வரும். அதே போல் உபபாண்டவத்தை படித்த அந்த இரண்டு வாரங்களில், நானும் கனவுலகில் படைகளுக்கு நடுவில் யாரிடமோ சண்டையிட்டு கொண்டு இருந்தேன். புத்தகத்தில் - ஒரு கதாபாத்திரத்தை, ஒரே பக்கத்தில் உள்ள ஒரே பத்திக்குள் பத்துக்கும் மேற்பட்ட பெயர்களை சொல்லி அழைக்கிறார். இது பல நேரங்களில் குழப்பத்தை தருகிறது.

அடுத்து படித்தது யுவனின் "ஏற்கனவே" சிறுகதை தொகுதி. நான் படிக்கும் யுவன் சந்திரசேகரின் முதல் புத்தகம் இது, மாய எதார்த்த கதைகள் எழுதுவதில் வல்லவர் இவர் என்று கேள்விபட்டு இவரின் மூன்று புத்தகங்களை வாங்கி அதில் முதலில் படித்த புத்தகம் இது. கிருஷ்ணா என்ற கதாபாத்திரம் வாழ்க்கையை சந்திக்கும் நபர்களைப் பற்றி ஒவ்வொரு கதையிலும் சொல்லப்படுகிறது. நாம் தினமும் வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள் பற்றிதான் ஒவ்வொரு கதையும் சொல்கிறது, ஆனால் அதை யுவன் சொல்லும் வீதம் புதிது. ஒவ்வொரு கதைக்குள்ளும் எத்தனையோ கிளை கதைகள் ஒழிந்து உள்ளன. யுவனின் மாய எதார்த்த நடை இதில் இல்லை என்றாலும் அற்புதமான கதை தொகுப்பு.

அடுத்து கடைசியாக படித்துக்கொண்டு இருப்பது, பா.வெங்கடேசன் எழுதிய "ராஜன் மகள்". மொத்தம் நான்கு குறுநாவல்கள் கொண்ட தொகுப்பு இது. இதில் முதல் இரண்டு கதைகளைதான் தற்பொழுது படித்து உள்ளேன். முதல் கதையான் "மழையின் குரல் தனிமை"யை இரண்டு முறை படித்து விட்டேன். ஓசூரில் இருக்கும் மழை வீட்டினை சுற்றியே கதை செல்கிறது. ஆரம்பத்திலேயே இதுதான் கதை என்று தெரிந்துவிடுகிறது, அதன் பின் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்கிறது. இனி நான் ஓசூர் பக்கம் எப்பொழுது போனாலும், இந்த மழை வீடுதான் ஞாபகம் வரும்.

இரண்டாவது குறுநாவல் "ஆயிரம் சாரதா". மனிதர்களின் மன ஓட்டத்தைப் பற்றி அற்புதமாக சொல்லப்படுகிறது. கதையினை படிக்கும் போதே, மனதில் திரைப்படமாக ஓடுவது போல் ஒரு எண்ணம்.

"ராஜன் மகள்" புத்தகத்தினை காலச்சுவடு 2001 ஆம் ஆண்டு வெளியீட்டு உள்ளது, விலை 110 ரூபாய். எழுத்துக்கள் மிகவும் அருகில் அருகில் இடைவேளியில்லாமல் எழுதப்பட்டே மொத்தம் 250 பக்கம் வருகிறது. இரண்டாவது பதிப்பாக இனி எதாவது பதிப்பகம் வெளியீட்டால், கண்டிப்பாக விலையினை 300 ரூபாய் வரை சொல்வார்கள். இரண்டு பாகமாக போட்டாலும் ஆச்சரியம் அடைவதற்கில்லை.

கொஞ்சம் பெரிய பதிவாக போய்விட்டது. மீண்டு சந்திப்போம்.

நன்றி.

1 comment:

T.N.MURALIDHARAN said...

"ஏதாவது ஒன்றில் தீவிரமாக இருந்தால் இதுதான் பிரச்சனை, ஒரு கட்டத்துக்கு மேல் அலுத்துவிடும். நான் சொல்வது எல்லாவற்றிக்கும் சேர்த்துதான்"
நச்சுன்னு சொன்னீங்க