Wednesday, June 30, 2010

நீங்கள் அவனை கடவுள் என்பீர்கள்

இந்த உலகத்தில் எதிரிகள் இல்லாதவன் அதிர்ஷ்டம் இல்லாதவன். அவனுக்கான எதிரிகளை அவனே உருவாக்கிக்கொள்ள வேண்டும். எனக்கு எதிரி என்று ஒருவன் இருக்கிறான். அவன் எப்பொழுதும் எனக்கான எல்லா கதவுகளையும் மூடியே வைத்து இருக்கிறான். ஒரு கரிய இருளில் என்னை அடைத்து வைத்து இருக்கிறான். அந்த இருட்டில் என்னால் கதவுகளின் சாவி துவாரங்களை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. நான் ஒவ்வொரு முறையும் கதவு என்று நினைத்து சுவர்களில் முட்டிக்கொண்டு கிழே விழும் போது எல்லாம், அவன் என்னை பார்த்து சிரிக்கிறான். மற்றவர்களையும், என்னை பார்த்து சிரிக்க வைக்கிறான். இறைவன் அதைதான் விரும்புகிறான்.

மனுஷ்யபுத்திரனின் கவிதை ஒன்றில் வரும் வரிகள், "எனக்கான நேரம் வரும்போது மட்டும், கடவுள் கொஞ்சமாகவே புன்னகைக்கிறான்". அந்த வரிகள் எனக்கு முற்றிலும் பொருந்தும். இது வரை அவன் எனக்கு எதையும் கொடுத்தது இல்லை. ஒரே ஒரு முறை ஒரு கதவை திறந்து ஒளியை காட்டினான், ஆனால் அதில் நான் வெளியேறும் முன்பே கதவை அடைத்துகொண்டான்.

நான் கடவுளின் இருப்பை பலமுறை சந்தேகபட்டு இருக்கிறேன். அந்த சந்தேகம் அதிகம் அடையும் போது எல்லாம், அவன் சிறு ஒளியை காட்டிவிட்டு ஒளிந்துகொள்கிறான். கண்ணில் தெரியாத ஒருவனிடம் எப்படி சண்டையிடுவது என்று எனக்கு தெரியவில்லை.

அவனை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால், என் தோல்வியை அவனிடம் ஒத்துக்கொள்ள வேண்டும். அவனுக்கு என் மீது இன்னும் சிறிதளவாவது கருணை இருந்தால், என் மனதில் நிங்காமல் இருக்கும் தோல்வியின் நினைவுகளை அழிக்க சொல்லவேண்டும்.

இல்லை, இல்லை.

அவனை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால், அவன் எனக்கு செய்த அநீதிகளுக்கு நியாயம் கேட்க வேண்டும். என் கனவுகளுக்கு இடையூரு தருவதால் அவனுக்கு அப்படி என்ன இன்பம் என்று கேட்க வேண்டும்.அவனின் அன்பு, பாசம், கருணை இவை எப்பொழுதுமே எனக்கு தேவை இல்லை என்று சூளுரைக்க வேண்டும். எத்தனை தோல்விகள் கண்டாலும் எழுந்து நிற்கும் என்னை பார்த்து அவன் பொறாமை கொள்ள வேண்டும்.

கொஞ்சம் பொருங்கள், ஏதோ ஒரு கதவு திறக்கபடும் ஓசை கேட்கிறது. அது எனக்கான கதவா?? என்று பார்த்துவிட்டு வருகிறேன்.

Saturday, June 26, 2010

Hey Ya!-Karthik Calling Karthik

ஏதற்க்காக இந்த பாடல் பிடிக்கும் என்று மட்டும் கேட்காதீர்கள்.......அந்த வரிகள் இன்னும் காதில் ஓலித்து கொண்டே இருக்கின்றன....

Hey ya, I wanna get closer to you
Hey you, I need to be closer to you
Hey ya, I got to tell you how I feel
Hey ya, oh baby you are the only one for me

Thursday, June 24, 2010

கதாபாத்திரங்களின் உரையாடல்

இந்த கதை உயிரோசையில் வெளிவந்துள்ளது. http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=3115


இப்பொழுதுதான் அவன் ஜெயமோகன், எஸ்.ரா. மனுஷ்ய புத்திரன் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறான். கல்லூரி நாட்களில் அவனுக்குத் தெரிந்த எழுத்தாளர்கள், கல்கியும், தபூ சங்கரும் மட்டுமே. அதுவும் அப்பொழுது அவன் காதலில் திளைத்துக்கொண்டு இருந்த தருணம், தபூ சங்கரின் கவிதை வரிகள் எப்பொழுதும் அவன் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். முதல் முதலில் அவள் கை உடம்பில் பட்ட போது ஏற்பட்ட ஒருவித உஷ்ணம், அந்தக் காதலைச் சொல்லும்போது அவனுக்குள் எற்பட்ட ஒரு பயம், பல நாட்கள் கேட்டு எதிர்பாராமல் ஒருநாள் அவள் கொடுத்த முத்தம். இப்படி எல்லா தருணங்களிலும் தபூ சங்கர் கவிதை மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும். கல்லூரி நாட்களில் உலக சினிமா மீதும் அவனுக்கு ஈடுபாடு இருந்தது. எப்படி ‘ஆனந்த விகடன்’ மூலம் தபூ சங்கர் பரிச்சயம் ஆனாரோ, அதைப் போல், போனியின் மூலம்தான் அவனுக்கு உலக சினிமா பரிச்சயம் ஆனது.

முக்கிய அறிவிப்பு:
"அவன்" என்று எழுதுவதால் இந்தக் கதையின் உண்மைத் தன்மை மீது, உங்களுக்கு சந்தேகம் வர வாய்ப்பு இருக்கிறது. ஆகவே "அவன்", "நான்" என்று மாற்றப்படுகிறது.

"பாரஸ்ட் கம்ப்" (இங்கு "Forrest Gump" என்று ஆங்கிலத்தில் இருந்தால்தான் படிக்க நன்றாக இருக்கும். ஆங்கிலம் உபயோகித்தால் இந்தக் கதை உயிரோசையில் வெளிவருவது சந்தேகமே. ஆகவே பாரஸ்ட் கம்ப் என்று தமிழிலேயே படிக்கவும்) இந்த திரைப்படத்தை என்னால் மறக்கவே முடியாது. கல்லூரி நாட்களில் இந்தத் திரைப்படத்தைப் பலமுறை பார்த்து இருப்பேன். நானும் போனியும் கடைசி பென்சில் அமர்ந்து அதன் வசனங்களை ஒன்று விடாமல் சொல்லிக்கொண்டு இருப்போம். " My name's Forrest, Forrest Gump. You want a chocolate? " இந்த வசனத்தை போனி அடிக்கடி சொல்வான், அவன் சொல்லும் விதமே அழகாக இருக்கும். அந்தக் கதாபாத்திரமாகவே நாங்கள் மாற ஆசைப்பட்டோம். அப்பொழுது எல்லாம் எனக்கு என் மீதே கோபம் என்றால் நான் செய்யும் முதல் காரியம், "Forrest Gump" திரைப்படத்தில் எதாவது ஒரு காட்சியைப் பார்ப்பதுதான். கல்லூரிக் காதல் தோல்வியின்போது ஒரு வாரத்திற்ககு அந்த திரைப்படத்தை தொடர்ந்து பார்த்தேன்.

நிற்க. இதுவும் புனைவுகதைதான். இங்கு "நான்" என்று சொல்லக் காரணம் கதையோடு படிப்பவர்களை ஒன்றாக்கவே!!.. ஆனால் இதன் காரணமாகவே என் மீது தப்பான அனுமானம் ஏற்படுவதால், "நான்" என்பது "அசோக்" என்று மாறும் கட்டாயம் ஏற்படுகிறது. அதற்காக எனக்கு இந்த "Forrest Gump" திரைப்படம் பிடிக்காது என்று அர்த்தம் இல்லை. ஆனால், எனக்கும் அசோக்கிற்கும் பல வித்தியாசங்கள் உண்டு. (எ.டு) எனக்கு யார் மீதோ கோபம் என்றால் நான் செய்யும் காரியம் புத்தகங்களைப் படிப்பது, அந்த நேரத்தில் ஏதாவது மொக்கையான புத்தகத்தைத் தந்தால் கூட ஒரே மூச்சில் படித்து முடித்துவிடுவேன். ஆனால், படித்தது எதுவும் மனதில் நிற்காது, மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும். இப்படித்தான் ஒரு கோபத்தில் "Notes from the Underground" புத்தகத்தை ஒரே இரவில் படித்துமுடித்தேன். அடுத்த நாள் தான் எனக்கு நினைவில் வந்தது, எனக்கு ஆங்கிலமே படிக்கத் தெரியாது என்ற விஷயம்.

இப்பொழுது என்னிடம் இன்னொரு கெட்ட பழக்கமும் சேர்ந்து இருக்கிறது, அது சோகமாக இருக்கும்போது "Eminem" பாடல்கள் கேட்பது. அதுவும் முக்கியமாக அந்த "mockingbird" பாடல். இதுவும் என்னைப் பற்றியது இல்லை,அசோக்கைப் பற்றியதுதான் என்று எழுதியிருக்க முடியும். ஆனால் பாவம் அசோக், ஏற்கனவே என்னால் பல கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டு இருக்கிறான்.

இதுவரை எந்தப் பெண்னுடன் சேர்ந்து "ஷேர் ஆட்டோ"வில் கூட பயணம் செய்யாத அசோக்கிடம், இப்பொழுதுதான் ஒரு பெண் "நாளைக்கு சினிமாவுக்கு போகலாமா??" என்று கேட்கின்ற அளவு நட்பாகி இருக்கிறாள். என் வலைப்பதிவைப் படித்துவிட்டு அவள் அசோக்கிடம் "யாருடா அவள், என்னிடம் மட்டும் சொல்லு" என்று நச்சரித்துக்கொண்டு இருக்கிறாள். பாவம் அசோக், வழக்கம்போல பல சில சமாளிப்புகளைப் போட்டுகொண்டு இருக்கிறான். அவர்கள் சினிமாவுக்குப் போவது வேறு ஏதாவது காரணங்களால் தடைபட்டால் கூட, நான் அசோக்கிடம் தர்மஅடி வாங்கப் போவது நிச்சயம்.

இனிமேல் அசோக்கைப் பற்றி எழுதுவதை நிறுத்திவிட்டு குமாரைப் பற்றி எழுதலாமா என்றுகூட சிலமுறை நினைக்கத் தோன்றும். ஆனால் எந்தக் குமாரைப் பற்றி எழுதுவது என்றுதான் குழப்பம். மொத்தம் முன்று குமார்களை எனக்குத் தெரியும். ஒரு சின்னக் கதையின் மூலம் இந்த முன்று குமார்களையும் அறிமுகப்படுத்துகிறேன்.

அசோக்கும் மூன்று குமார்களும் ஆபீஸ் கேன்டீனில் அமர்ந்து சாப்பிட்டுக் கொன்டு இருந்தார்கள். அசோக்தான் ஆரம்பித்தான்.

அசோக் "அடுத்தவாரம் நம்ம டீமில் யாரு மச்சி நைட் ஷிப்ட்?".

"ரகுவும், ஆனந்தும்" என்றான் முதலாவதாக அமர்ந்து இருந்த குமார்.

"உனக்கு அடுத்து அவள்தானே நைட் ஷிப்ட் வரணும், ஏன் ரகு வரான்??".

"இல்லடா, எப்பொழுதும் மூன்றாவது வாரம் அவள் நைட் ஷிப்ட் வர மாட்டாள்" இதுவும் முதல் குமார்தான் சொன்னான்.

இதுவரை இட்லியில் கவனம் செலுத்திக்கொண்டு இருந்த இரண்டாவது குமார் "நைட் ஷிப்ட் வருவதற்கெல்லாமா, இவள் ராசி பார்ப்பாள்?" என்றான்.

அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருந்தான் மூன்றாவது குமார்.

அடுத்தவாரம் அதே இடத்தில் அமர்ந்து நாங்கள் பேசிக்கொண்டு இருந்தபோது, மூன்றாவது குமார் முதல் குமாரிடம் கேட்டது "டேய், ஏதோ அவள் மூன்றாவது வாரம் வரமாட்டான்னு சொன்ன, இப்ப வந்துருக்கா?"

இதற்கு மேல் இவர்களைப் பற்றி தெளிவாக விவரிக்க முடியாது. இப்பொழுது சொல்லுங்கள், எந்தக் குமாரைப் பற்றி எழுதலாம்?.

Friday, June 18, 2010

ராவணன்

"ராவணன்", எதற்காக இந்த டைட்டிலை வைத்தார்கள் என்று எனக்கு புரியவில்லை. இராமாயணத்தின் கதையைதான் எடுக்க வேண்டும் என்று நினைத்து இருந்தால், அந்த கதையை முழுமையாக சொல்லி இருக்கலாமே?? இராமயணத்தின் முக்கிய அம்சமே ராவணன் சீதை மேல் கொண்ட மோகம்தான். அதை இந்த படத்தில் இப்படி சொதப்பி இருக்கவேண்டாமே. சரி, இராமாயணத்தை வெளிப்படையாக சொல்லவில்லை என்றால், அந்த அனுமான் கதாபாத்திரம் எதற்க்கு. அதுவும் கட்டிய சேலையுடன் மட்டும் இருக்கும் ஐஸ்வர்யாவிடம் “உங்களை சந்திதற்க்கு சாட்சியாக எதாவது பொருள் தாருங்கள்” என்று கார்த்திக் கேட்கும் காட்சி, இது மணிரத்னம் திரைப்படமா?? என்று சந்தேகம் அடைய செய்தது.

கதை, திரைக்கதை, வசனம் எல்லாமே நன்றாகதான் இருக்கிறது. ஆனால், இதே போன்ற திரைப்படத்தை யாராலும் எடுக்க முடியும், ”மணிரத்னம் உங்களிடம் இருந்து ஒரு புதிய, மாறுபட்ட திரைப்படத்தை அல்லவா எதிர்பார்கிறோம்”.

விக்ரம், ஐஸ்வர்யா எப்பொழுதுமே நன்றாக நடிப்பார்கள் . சந்தோஷ் சிவன் கேமரா எப்பொழுதுமே நன்றாக இருக்கும், ஏ.ஆர் ரஹ்மானின் இசையை பற்றி யாருக்கும் அறிமுகம் தேவை இல்லை. இவர்கள் வழக்கம் போல் இந்தபடத்திலும் ஒரு படி மேலே செல்கிறார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்.

திரைப்படத்தில் குறைசொல்வதற்க்கு ஒன்றும் இல்லை, ஒரு வித்தியாசமான திரைப்படத்தை எதிர்பார்த்து சென்றேன், அது கிடைக்கவில்லை அவ்வளவே!!

”ராவணன்” ஹிந்தியிலும் வந்து இருக்கிறது. ஹிந்தியிலும், தமிழிலும் ஒரே மாதிரி எடுத்து இருக்கிறார்கள் என்று கேள்வி. ஒருவேளை ஹிந்தியில் இந்த திரைப்படம் ஒரு மாறுபட்ட திரைப்படமாக இருக்கலாம். ஏனென்றால் “குரு” திரைப்படமும் அப்படிதான் இருந்தது. “ராவணன்” ஹிந்தியில் ஒரு மாபெறும் வெற்றிபடமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன்.

மணிரத்னத்தின் நேரடியான ஒரு தமிழ் திரைப்படத்திற்க்குகாக காத்துக்கொண்டு இருக்கிறேன். அது நடக்குமா???.

---------------------------------------------------------------------------------

”உசிரே போகுதே” பாடல், திரைப்படம் ஆரம்பத்திலேயே வந்துவிடுகிறது. அந்த காட்சியில்தான் விக்ரமிற்க்கு, ஜஸ்வர்யா மீது முதல் முறையாக ஒரு ஈர்ப்பு வருகிறது. ஆனால், அந்த பாடல் வரிகளோ காதலின் உச்சியில்,மோகத்தில் பாட வேண்டிய பாடல் வரிகள் அவை,

"ஒடம்பும் மனசும் தூரம் தூரம் ஒட்ட நெனைக்க ஆகல,
மனசு சொல்லும் நல்ல சொல்ல மாய ஒடம்பு கேக்கல,
தவியா தவிச்சி, உசிர் தடங்கெட்டு திரியுதடி,
தைலான் குருவி என்னை தள்ளி நின்னு சிரிக்குதடி"


நடராஜர் சிலை முன்னால் விக்ரம் பேசும் போது, வந்து இருக்க வேண்டிய பாடல். எப்பொழுதும் பாடல்களை, காட்சிகளோடு சரியாக பொருத்தும் மணிரத்னம் இந்த பாடலை எப்படி தவறவிட்டார்!!!!!

Wednesday, June 16, 2010

பேயோன்

கடந்த சில நாட்களாக அவரின் வலைப்பதிவை மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டு இருக்கிறேன். அப்படி ஒன்றும் உலகமகா கருத்துகள் எதுவும் அவர் சொல்லவில்லை. சொல்லபோனால் அவர் பதிவில் கருத்துகள் என்று ஒன்றுமே இல்லை, கதைகளும் இல்லை, கவிதைகளும் இல்லை, கட்டுரைகளும் இல்லை. ஆனால் எதோ ஒன்று அவரின் எழுத்துகளை மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது. அவர் "எழுத்தாளர் பேயோன்". பேயோன் அதுதான்யா அவர் பெயர். அது என்ன பெயர் பேயோன் என்கிறீர்களா, உலகமகா எழுத்தாளர்கள் இப்படிதான் பெயர் வைத்துக்கொள்வார்களாம். இதுவும் அவர் சொன்னதுதான்.

அவர் வலைப்பதிவு முகவரி:http://www.writerpayon.com/

சில மாதஙகளுக்கு முன்னால், பா.ரா தான் இவரை பற்றி பதிவு எழுதி எனக்கு அறிமுகப்படுத்தினார். பேயானின் உண்மையான பெயர், வயசு, இருப்பிடம் போன்றவை யாருக்குமே தெரியாது. அதனால்தான், அவரால் இந்தளவு கேலியாகவும், கற்பனையாகவும் எழுத முடிகிறது.

பேயோன் twitter'மூலம்தான் முதலில் அனைவருக்கும் அறிமுகமானார். இவரின் 1000 ட்விட்கள் புத்தகமாக வந்து இருக்கிறது.

இவர் சோதனை முயற்சிக்காக எழுதுகிறாரா ?? இல்லை, இதுதான் அவர் எழுத்து நடையா என்று எதுவும் புரியவில்லை.

அவரைபற்றி ஒன்றும் அதிகமாக நான் புகழவில்லை. நீங்களே இந்த கவிதையை படித்துபாருங்கள். பின்னூடம் பார்த்துதான் எனக்கே இது கவிதை என்பது தெரியும்.

Thursday, June 3, 2010

Reality Show

"Reality Show", எனக்கு பிடிக்காத டி.வி நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. இங்கு "இதுவும் ஒன்று" என்ற வார்த்தையை ஒரு சம்பிரதாயத்துக்காக பயன்படுத்தியிருக்கிறேன். இப்பொழுது எந்த சேனலை பார்த்தாலும் "Reality Show'கள்" மட்டும்தான் நடந்துக்கொண்டு இருக்கின்றன.

"நீயா, நானா?, சூப்பர் சிங்கர், மானாட மயிலாட" என்று பட்டியலை பெரியதாக்கிக்கொண்டே போகலாம் (எனக்கு பலவற்றின் பெயர்கள் கூட நினைவில் இல்லை).

சென்ற வாரம், ஒரு நிகழ்ச்சியில் " Dance Competition " என்று சொல்லி மேடையில் அமைத்த கொட்டும் அருவியில் இருவர் ஜல்சா பண்ணிக்கொண்டு இருந்தார்கள். சனிக்கிழமை இரவு 12க்கு வசந்த் டி.வி.யில் கூட இந்தளவு தெளிவாக காட்டமாட்டார்கள். நம்பாவிட்டால் நீங்களே ஒரு சனிகிழமை இரவு வசந்த் தொலைக்காட்சியை பாருங்கள்.

"Airtel Junior Super singer" என்று இன்னொரு அபத்தம். இந்த நிகழ்ச்சியால் எப்படி குழந்தைகள் மனதளவால் பாதிப்பு அடைகிறார்கள் என்பது, குழந்தைகள் வலைப்பதிவு எழுத தொடங்கினால் மட்டுமே நமக்கு புரியும்.

"நீயா, நானா?" நிகழ்ச்சியை பற்றி சாரு தனது வலைப்பதிவில் தெளிவாக எழுதி இருக்கிறார். எப்பொழுதும் எதைபற்றியும் கவலைப்படாமல், தனது மனதில் தோன்றியதை தெளிவாக எழுதும் சாரு, இதைபற்றியும் தெளிவாக சொல்லியிருக்கிறார்.

அதன் முகவரி http://charuonline.com/blog/?p=594

Reality Show'வை பற்றி Jim Carrey நடித்து "truman show" என்ற திரைப்படம் 1998'ல் வெளிவந்தது. நேரம் கிடைத்தால் பாருங்கள்.