Thursday, December 30, 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்

என்னை பொருத்த வரை 2010 மிகவும் மோசமான ஆண்டு. எப்படியோ முடிந்துவிட்டது. அதுவரை சந்தோஷம். இனி வரும் வருடமும் இதைவிட மிகவும் மோசமாக இருக்கும் என்றே நம்புகிறேன்.

இந்த ஆண்டாவது, பல நாட்களாக எனது புத்தகப்பையில் தூங்கிக்கொண்டு இருக்கும் "Kafka, Fyodor Dostoevsky" ஆகியோரின் புத்தகங்களை முடித்தாக வேண்டும். இனி எவன் பேச்சை கேட்டும் ஆங்கில புத்தகங்கள் மட்டும் வாங்கவேகூடாது என்ற முடிவோடு இருக்கிறேன். அவர்கள்தான் சொன்னார்கள் என்றால் எனக்கு எங்கே போனது புத்தி, எனது ஆங்கில புலமைதான் எனக்கு நன்றாக தெரியுமே.

தமிழிலேயே எத்தனை அழகான புத்தகங்கள் இருக்கின்றன், முதலில் அவற்றை படிப்போம். அதற்கே இந்த ஆயுள் பத்தாது.

சரி சார், வரும் நான்காம் தேதி முதல் " 34வது சென்னை புத்தகக் கண்காட்சி " தொடங்க இருக்கிறது. நாம் தேடும் எல்லா புத்த்கங்களும் கிடைக்கும். கண்டிப்பாக அங்கே சந்திப்போம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.


Sunday, December 26, 2010

மூன்று திரைப்படங்கள்

எதாவது எழுதியாக வேண்டும். நானே எதிர்பாராமல் இந்த இடைவெளி விழுந்துவிட்டு. ஆனால், எதைப்பற்றி எழுதுவது என்று இன்னும் சரியாக தெரியவில்லை.

நான் சமீபத்தில் எழுதுவது எதுவுமே புரியவில்லை என்கிறான் நண்பன் ஒருவன். அதுவும் நல்லதுதான். நாம் எழுதுவது யாருக்காவது புரிந்தால்தான் பிரச்சனையே.

இதோ அலுவலக வேலையாக பெங்களூர் வந்து இன்றோடு பத்து நாட்கள் முடியப் போகிறது. அப்படி என்ன வேலை எனறு கேட்காதீர்கள். அது தெரியாமல்தான் நானே முழித்துக்கொண்டு இருக்கிறேன்.  அறை எடுத்துக்கொடுத்து நான் பெங்களூரில் வெட்டியாக உட்கார வேண்டும் என்று அலுவலகத்தில் ஆசைப்படுகிறார்கள், அதற்க்கு நான் என்ன செய்வது. (இது எல்லாம் சும்மா ஒரு பேச்சுக்குதான் பாஸ், உண்மையாகவே இங்கு பயங்கர வேலை பாஸ் !!!). "இதுவரை வாழ்க்கையில் எப்பொழுதாவது வாங்குற சம்பளத்துக்கு வேலை பார்த்திருக்கியா??. இப்பொழுது நல்லா அனுபவி" என்கிறாள் தோழி ஒருத்தி.

"மன்மதன் அம்பு" திரைப்படத்தை நேற்றுதான் பார்த்தேன். கமலும், கே.எஸ்.ரவிக்குமாரும் மீண்டும் இணைந்து திரைப்படம் பண்ணாமல் இருக்க இறைவனை ஒருமுறை வேண்டிக்கொண்டேன். "நீ நீலவானம் " என்ற பாடலை எடுத்திருக்கும் அழகுக்காக, திரைப்படத்தை கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம். காட்சிகள் எல்லாம் பின்நோக்கி நகரும் போது, கமலின் உதடு அசைவுகள் பாடலை சரியாக பாடுவது அருமை. ஒரு பாடலை பின்நோக்கி பாடுவது அந்தளவு சுலபமில்லை.

போன வாரமே பார்த்த இன்னொரு திரைப்படம் "ஈசன்". திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் யாருமே தாங்கள் செய்வது தவறு என்று நினைக்கவில்லை. திரைப்படத்தை இயக்கிய சசிக்குமாரும் கூட!!!!. "பருத்திவீரன்" வெற்றியை தொடர்ந்து, ஒரு ரேப் சீன் இருந்தால் மட்டும் திரைப்படம் வெற்றி அடையும் என்று நம்ப தொடங்கிவிட்டார்கள். ஒரு மணிநேரத்தில் சொல்லவேண்டியதை சுருக்கமாக சொல்லி, ஒரு மிக சிறந்த திரைப்படமாக எடுத்திருக்கலாம். ஆனால், சொல்லவந்ததை மீண்டும் மீண்டும் சொல்லி 3 மணிநேர திரைப்படமாக எடுத்ததால், மிக மிக சுமாரான திரைப்படமாக அமைந்துவிட்டது.

நான் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் அடுத்த திரைப்படம் வெற்றிமாறனின் "ஆடுகளம்".  பாடல்கள் ஏற்கனேவே நன்றாக வந்துள்ளது.  முக்கியமாக "அய்யய்யோ" மற்றும் "ஒத்த சொல்லால" ஆகிய பாடல்கள். நீங்களே ஒருமுறை கேட்டு பாருங்கள். என்னுடயை அடுத்த டயல் டோன் "ஒத்த சொல்லால" பாடல்தான்.

Thursday, December 16, 2010

அருணின் கடிதம்

அருண் (பேரின்பா), ஏன் இப்பொழுது எல்லாம் எதுவுமே எழுதுவதில்லை என்று தெரியவில்லை.

சமீபத்தில் சாருவின் புத்தக வெளியீட்டு விழா பற்றி சாருவுக்கு அருண் எழுதிய கடிதம் (சாருவின் வலைப்பதிவிலிருந்து).

( குறிப்பு : எனக்கும் இந்த புத்தக வெளியீட்டு விழா பற்றி எழுத ஆசைதான். என்ன செய்ய, எனது இலக்கிய ஆர்வம் அருண் சொல்வது போல் "சமோசா சாப்பிடணும்னா சாப்ட்டு வா” என்பதிலேயே முடிந்து விடுகிறது. )

சாருவுக்கு,

நேற்றைய விழா பற்றி ஒன்றும் பேசாமல் இருந்தால் பழநிமலை முருகன் என்னை கோபித்துக் கொள்வான்.  நான் எம்.பி.ஏ.  படிக்கிறேன். நேற்று எனக்கு Corporate Finance பரிட்சை. இரவு தூங்குவதற்கு மூன்று மணி ஆகிவிட்டது. பரிட்சை முசுவில் காலையில் சாப்பிடவில்லை. தூக்கமில்லாமல் படிப்பதால் சமயங்களில் பரிட்சை ஹாலில் தூக்கம் வந்து விடுகிறது; அதனால் காலையில் சாப்பிடுவதில்லை.  மதியம் இங்கே  நல்ல சோறு கிடைப்பதில்லை என்பதால் ப்ரெட்டும் ஜாமும் மட்டும் சாப்பிட்டுவிட்டு ஒரு மணி நேரம் கண்ணயர்ந்து விட்டுக் கிளம்பலாம் என்று படுக்கையில் விழுந்தேன்.  மொபைலை சார்ஜ் போட்டுவிட்டுப் படுத்தவன் கண் விழித்த போது மணி ஐந்து!

வெளியீட்டு விழா பற்றி என் தோழியிடம் ஒரு மாதமாக சொல்லி வந்திருக்கிறேன். அவளும் என்னை எழுப்புவதற்கு  ஆறு முறை போன் செய்திருக்கிறாள். எனக்கு அது காதில் விழவில்லை. அப்படி ஒரு தூக்கம்.  நான் இருக்கும் அம்பத்தூர் OTயில் இருந்து மவுண்ட் ரோடு வர  ஒன்றரை மணி நேரம். அதுவும் நான் இருக்கும் இடத்தில் இருந்து அம்பத்தூர் OT வரவே 15 நிமிடம். என் நண்பனுக்கு பெட்ரோல் போட்டுக் கொள்ள 30 ரூபாய் கொடுத்து அம்பத்தூரில் கொண்டு விடச் சொன்னேன். வண்டி பாதியிலேயே நின்று விட்டது. வழியில் என் தோழி நான் வண்டியில் போவதை பார்த்திருக்கிறாள் போலும்; “Formals போட்டியே.. பெல்ட் போட்டியா?” என்று கேட்டு எஸ்ஸெம்மெஸ் அனுப்பினாள்.

சரவணன் வழியில் போன் செய்து தான் ஆபீஸில் இருந்து அப்போதுதான் வந்ததாகவும், வழியில் சேர்ந்து கொள்வதாகவும் சொன்னான். அதனால் திருமங்கலத்தில் இறங்கி அவனுக்காகக் காத்திருந்து இருவரும் வந்து சேர்ந்தோம். அங்கு வரும் போது மணி 6 45 ஆகிவிட்டது. அரங்கம் நிரம்பியிருக்க வேண்டும் என்பதே எங்கள் இருவரின் கவலை. முக்கால்வாசிக்கும் சற்று கம்மியாக இருந்தது. பரவாயில்லை;  கொஞ்சம் சிறிய ஹாலில் வைத்திருந்தால் சிரமம் என்று பேசிக் கொண்டோம். கடும் பசி. புத்தகம் வாங்கிவிட்டு வந்த சரவணன் “சமோசா சாப்பிடணும்னா சாப்ட்டு வா” என்றான். அப்போதுதான் எனக்கு உயிர் வந்தது.  காது கேட்க ஆரம்பித்தது.

புத்தக வெளியீட்டைப் பற்றி நான் சொல்லப் போவதில்லை. நான் கண்டது, கேட்டது, பார்த்தது எல்லாம் அனைவரும் பார்த்தது; அனைவரும் உணர்ந்தது. அனைவரும் உண்மையாய் இருந்த தருணத்தில் நானும் இருந்தேன் என்பதே மிகப் பெரிய சந்தோஷம்.  நான் உங்களின் ‘கலகம் காதல் இசை’ மட்டுமே முழுமையாய்ப் படித்திருக்கிறேன். மற்றும் உங்கள் வலைமனையின் தீவிர வாசகன். உங்களைப் பின் தொடர்பவன். அவ்வளவே. ஒருகாலத்தில் உங்களை வசை பாடியிருக்கிறேன். அது என் காதுகளும் கண்களும் மூடியிருந்த காலம்.  மாற்றுக் கருத்துக்களை விரும்பாத காலம். உங்களை என்னால் மறுக்கமுடியாமல் கொண்டு செல்வது எது என்று புரியவில்லை. ஒருவேளை நேற்று மதன் சொன்னது போல் உங்களின் நேர்மையான எழுத்தாக இருக்கலாம்..

விழா முடிந்து இரவு 10:30 மணிக்கு நானும் சரவணனும் ஜெமினி வரை நடந்து,  ஓடிப் பிடித்து ஆவடி பஸ்சில் ஏறினோம். அதை விட்டால் அவ்வளவு தூரம் போக இன்னும் நேரமாகிவிடும் என்பதால் ஏறிவிட்டோம். 11 30 மணிக்கு அம்பத்தூரில் எல்லா கடைகளும் மூடப்பட்டிருந்தது. அன்று மதியம் முதல் இன்று காலை வரை நீங்கள் கொடுத்த சமோசாதான் என்னை காப்பற்றியது.  ஆதலால் சமோசாவுக்கும், காப்பிக்கும் உங்கள் நண்பர்களுக்கும், உங்களுக்கும் நன்றி.

அன்புடன்,
அருண். T.
http://perinba.wordpress.com/

Friday, December 10, 2010

நண்பனின் வலைப்பதிவு

சிலர் எழுதுவதைப் படிக்கும் போது எப்படியெல்லாம் எழுதுகிறார்கள் என்று தோன்றும், சிலர் எழுதுவதைப் படிக்கும் போது இப்படியும் எழுதலாம் போல என்று தோன்றும்.

சிலரின் எழுத்துக்கள் பிடிக்காவிட்டாலும் அவரை தொடர்ந்து படித்துக்கொண்டே இருப்போம். சிலரின் எழுத்துக்கள் பிடித்தாலும், படிக்காமல் இருக்கவே முயற்சிபோம். சிலரின் எழுத்தைப் படிக்கும் போது நாமெல்லாம் எழுதவேண்டுமா?? என்று தோன்றும். சிலரின் எழுத்தைப் படிக்கும் போது நாமெல்லாம் ஏன் எழுதகூடாது?? என்று  தோன்றும். சிலரின் எழுத்தைப்படிக்கும் போது, நம்மைப்போலவே எழுதுகிறார்கள் என்று தோன்றும், இன்னும் சிலரின் எழுத்தை படித்தால், நாம் எழுதியதையே எழுதியிருக்கிறார்கள் என்று  தோன்றும். 

சிலரின் எழுத்துக்கள் படித்தவுடனே புரிந்துவிடும். சிலரின் எழுத்துக்கள் பலமுறை படித்தால் மட்டுமே புரியும். சிலரின் எழுத்துக்கள ஒவ்வொருமுறை படிக்கும்போது வெவ்வேறு அர்த்தம் தரும். இன்னும் சிலரின் எழுத்துக்கள் எத்தனைமுறை படித்தாலும் புரியாது.


சிலர் எழுதுவதைப் படிக்கும்போது, ஏன் இவர்கள அரிதாக எழுதுகிறார்கள்?? என்று தோன்றும். இன்னும் சிலர் எழுதுவதைப் படிக்கும் போது, இவர் அரிதாகவே எழுததும் என்று தோன்றும்.

என்ன சார், ரொம்ப குழப்புறேனா??.. விடுங்க சார், கொஞ்ச நாட்களாக நானே ரொம்ப குழம்பிப் போய்தான் இருக்கேன்.

நான் இங்கு சொல்ல வந்த விசயமே வேறு. அதைத்தவிர மற்றவற்றை பேசிக்கொண்டு  இருக்கிறேன். சமீபத்தில் சகா ராகுல் தொடர்ந்து நன்றாக எழுதிவருகிறான். அவனுடைய ஒரு பதிவு கிழே,

I resign...

Being loved is greatest
And now am great
Want to became the greatest by you

I don’t have enough courage
To hear, you saying “NO”
And hence, I resign...

Let me reside in your cover
And love you for ever
Or else free me to resign
And leave this region

I don’t have enough tears
to shed, on hearing “NO”
And hence, I resign...

Accept me as a whole
Take my heart and soul
If not…
Let me, stop here and cry
Atleast, give me to die.

I don’t have enough power
to change you to say “YES”
And hence, I resign...

You made me love-coward
You gave me fear-of –rejection
And hence, … … …
-ராகுல்

ராகுலின் வலைப்பதிவு முகவரி:

http://truepages.blogspot.com/

Saturday, November 20, 2010

புரிந்தும் புரியாமலும் - III

என் சுதந்திரத்தை என்னிடமே விட்டுவிடுங்கள். எனக்கு தெரியும், இந்த சதுரங்க ஆட்டத்தில் எனது ராஜாவை எப்பொழுது நகர்த்த வேண்டும் என்று. எனக்கு தெரியும், ஒரு மந்திரியின் உதவியை எப்பொழுது நாட வேண்டும் என்று, எனது குதிரைகளை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று, ராணி எப்பொழுது எனக்கு தேவைப்படும் என்று. என் சுதந்திரத்தை என்னிடமே விட்டுவிடுங்கள்.

நீங்கள் ஒரு பார்வையாளர் மட்டும்தான். ஒரு பார்வையாளனுக்கு எல்லாவித சலுகைகளும் இருக்கிறது. அதற்காக எனது படைவீரர்களை நகர்த்தும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது??. என்னிடம், என்னைப்பற்றி சொல்லிக்கொள்ள என் சுதந்திரம் மட்டுமே மிச்சம் இருக்கிறது, தயவு செய்து அதையும் பறித்துக் கொள்ளாதீர்கள்.

உங்கள் சொல்படித்தான் நான் கட்டங்களில் நகர வேண்டும் என்றால், எது சரி, எது தவறு என்பதை நீங்கள்தான் உறுதிப்படுத்துவீர்கள் என்றால்,. பின் நான் எதற்கு, ”நான்” என்ற வார்த்தைத்தான் எதற்கு??.

என் பாதையை நானே தேர்வு செய்துக்கொள்கிறேன். நீங்கள் அமைதியாக வேடிக்கை பார்த்தால் மட்டும் போதும்.

என் சுதந்திரத்தை என்னிடமே விட்டுவிடுங்கள். 

Sunday, November 7, 2010

ஒரு ரகசியம் உருவாகியது

என்னைப் பற்றிய ஒன்று
உங்கள் அனைவருக்கும்
தெரிந்தேயிருந்தது.

நான் அதை
மிகவும் பாதுகாப்பாகவே வைத்திருந்தேன்
அல்லது
அப்படி நினைத்துக்கொண்டிருந்தேன்.

அதைப்பற்றி
இதுவரை ஒரு வார்த்தைக்கூட
நான் எழுதியதில்லை
அல்லது
அப்படி நம்பிக்கொண்டிருந்தேன்.

எப்படியோ, அதைப்பற்றி
உங்கள் அனைவருக்கும் தெரிந்திருந்தது.

நம் சந்திப்பில்
அதைப்பற்றி பேசாமல் இருக்கவே
முயற்சிதேன்.

நீங்கள் அதைப்பற்றி கேட்கும் போதேல்லாம்
மிகுந்த பதற்றத்தோடு நமது பேச்சை
திசை திருப்பினேன்.

ஆனால்,
நீங்கள் எப்பொழுதும்
அதைப்பற்றிய
சிறிய துணுக்கை சிதறவிட்டு
என் முகபாவங்களை
புகைப்படம் எடுத்தீர்கள்.

என்னுடைய பதற்றம்
உங்களை புன்னகைக்க செய்தது.

என்னுடைய தவிப்பு
உங்களை சந்தோஷப்படுத்தியது.

இதற்காகவே
நாம் சந்திப்பதை தவிர்த்தேன்,
உங்கள் அழைப்புகளை நிராகரித்தேன்,
உங்கள் குறுஞ்செய்திகளை படிக்காமல் அழித்தேன்.

கடைசியில்
என்னை போலவே, நீங்களும்
அதை ஒரு ரகசியம் என்று
நம்பதொடங்கினீர்கள்.

Saturday, November 6, 2010

வ குவாட்டர் கட்டிங்

”மச்சி, படம் முழுவதும் டைமிங் காமெடி'டா, செமயா இருக்கு. கண்டிப்பாக போய் பாரு” என்று செல்போனில் நண்பன் சொன்னான். இவன் நம்ம சரத் மாதிரி எல்லாம் இல்லை, இவன் இதுவரை சில படங்களை மட்டுமே நல்ல திரைப்படம் என்று சொல்லியிருக்கிறான். ஆனால், சரத் இவனுக்கு முற்றிலும் நேர்மார். இதுவரை எந்த படத்தையும் “மொக்கை” என்று சொன்னது கிடையாது. “நல்லா தான் இருக்கு, ஒரு முறை பார்க்கலாம்” எல்லா திரைப்படத்திற்க்கும் அவன் சொல்லும் ஒன்லைன் விமர்சனம் இதுதான். “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தை மட்டும் சொஞ்சம் அதிகமாக புகழ்ந்தான். காரணம், நீங்கள் நினைப்பது தான்.

”செமயா இருக்கு. கண்டிப்பாக போய் பாரு” என்று நண்பன் சொன்னவுடன் எனக்கு பெரிய அதிர்ச்சி. ஏனென்றால், இப்பொழுதுதான் இரண்டு நண்பர்களுக்கு நானே போன் செய்து ”படம் வேஸ்ட், போகாதீங்க” என்று சொல்லியிருந்தேன். ட்வீட்டரில் எழுத ஒரு பஞ்ச் லைன் கூட தயாராக வைத்திருந்தேன். எனக்கும் தயாநிதி அழகிரிக்கும் வாய்க்கால் தகராறு, அதன் காரணமாகத்தான் இந்த மாதிரி புரளிகளை செய்கிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம். தீபாவளியன்று முதல் ஷோ’வில் திரைப்படத்தை பார்த்த பின்தான், இந்த முடிவுக்கு வந்தேன். இந்த முடிவை நான் மட்டும் எடுக்கவில்லை. என்னுடன் திரைப்படம் பார்த்த, திரையரங்கில் அமர்ந்திருந்த அனைவருமே இதைத்தான் சொன்னார்கள். திரையரங்கில் மொத்தம் ஆறுபது பேர் இருந்தோம். நான் சொல்வது அதிகம் என்று நினைக்கிறேன். டிக்கெட் கிழித்து கொடுத்தவருக்குத்தான் உண்மையான எண்ணிக்கை தெரியும்.

சரி, எல்லாரும் மைனாவிற்க்கும், உத்தமபுத்திரனுக்கும் போய் விட்டார்கள் என்று நினைத்து, அந்த திரைப்படங்களுக்கு சென்றிருந்த நண்பர்களுக்கு போன் செய்து விசாரித்தேன். அங்கேயும் இதே ஆறுபது, எழுபது எண்ணிக்கைத்தான் என்றார்கள். நானும் என் நண்பனும், எங்க ஊரில் ஒரு மல்டிபிளக்ஸ் கட்டலாம் என்ற ஐடியாவை ஒருமுறை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்தேன். “மச்சி, எல்லாரும் டி.வி’யில் சிறப்பு நிகழ்ச்சி பார்த்துக்கிட்டு இருப்பாங்க டா,  நாளைக்கு பாரு கூட்டம் அல்லும்” என்றான் அருகில அமர்ந்திருந்த என் பிசினஸ் பாட்னர். அடுத்து ஏதோ சொல்ல அவன் தொடங்கியவுடன்,  திரைப்படம் ஆரம்பித்து விட்டார்கள். நல்லவேளை நான் தப்பித்தேன்.

யாரோ ஒருவன், நாலு குவாட்டரை ஒன்றாக அடித்துவிட்டு ”சவுன்ட் கம்மியாக இருக்கு” என்று சொல்லியிருப்பான் போல, வால்யூம் "1000 டெசிபலை" தொட்டது. திரைப்படத்தில் என்ன பேசுகிறார்கள் என்று ஒன்றுமே புரியவில்லை. என் தலைக்குமேல், ஒரு ஸ்பீக்கர் கத்திக்கொண்டு இருந்தது, எங்கே தலையில் விழுந்துவிடுமோ என்ற பயத்தில் அதையே பார்த்துக்கொண்டு இருந்தேன். அதற்க்குள் இடைவேளை போட்டுவிட்டார்கள். திரையரங்கில் இருந்தயாருக்குமே ஒரு வார்த்தைக்கூட புரியவில்லை என்று அறிந்தபோது எனக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது.

“நான் அப்பவே சொன்னேன், தேவிக்கு போகலாம்’னு” என்றான் நண்பன். எஙகள் ஊரில் இருக்கும் ஒரே ஏ.சி திரையரங்கம் தேவி மட்டும்தான். அதுவும் ஒரு ஆறு மாதங்களுக்கு முன்னால்தான் ஆரம்பித்தர்கள். அங்கு இன்னும் எந்திரன்’தான் ஒடிக்கொண்டு இருக்கிறது. என் நண்பன் ரஜினியின் தீவிர பித்தன். “எந்திரன்” திரைப்படததை தமிழ், ஹிந்தி, தெலுங்கு என்று எல்லா மொழியிலும் பார்த்துவிட்டான். எப்படியாவது எந்திரன் திரைப்படத்தை மலையாளத்தில் பார்க்க வேண்டும் என்பதுதான் அவனுடைய தற்பொழுதைய லட்சியம்.

இடைவேளை முடிந்து மீண்டும் திரைப்படம் ஆரம்பித்து இருந்தார்கள். வழக்கம் போல் ஸ்பீக்கர் அலறிக்கொண்டிருந்தது. நாங்கள் பாதியிலேயே கிளம்பி வந்துவிட்டோம். நாங்கள் வரும்போது திரையரங்கில ஒரு முப்பது பேருக்கு குறைவாகத்தான் இருந்தார்கள்.

இது நடந்து ஒரு மணிநேரம் கழித்துத்தான் மற்றொரு நண்பன் திருச்சியிலிருந்து போன் செய்தான். “மச்சி, படம் முழுவதும் டைமிங் காமெடி டா, செமயா இருக்கு. கண்டிப்பாக போய் பாரு” என்றான். இதற்குள் நான் கொஞ்ச பேருக்கு போன் செய்து “திரைப்படம் நல்லாயில்லை, ஓடாது” என்று சொல்லிருந்தேன்.

அந்த கொஞ்ச பேரில் நீங்களும் ஒருவராக இருந்தால், தயவுசெய்து நான் சொன்னதை மனதில் வைத்துக்கொள்ளாமல், திரைப்படத்தை ஒருமுறை நல்ல திரையரங்கில் பார்க்கவும். மீண்டும் உங்களுக்கு போன் செய்து இதை உங்களிடம் சொல்லமுடியாத நிலையில் இருக்கிறேன், ஏனென்றால், நிறைய வேலையிருக்கிறது, ”மைனா, உத்தமபுத்திரன், வல்லக்கோட்டை” போன்ற படங்களை பார்த்தாக வேண்டும். இதற்க்கு பின் நேரம் கிடைத்தால் “வ குவாட்டர் கட்டிங்” திரைப்படத்தை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும்.

Wednesday, November 3, 2010

.

நாளை தீபாவளியாம்,
காலியாகிறது சென்னை
மிகவும் சுத்தமாக.

Monday, November 1, 2010

ஆசிரியர் குழுவின் கடிதம்

மதிப்பிற்குரிய அசோக்கிற்க்கு,

நீங்கள் நேற்று அனுப்பிய சிறுகதையை கிடைக்கப் பெற்றோம். இதைப்போல், நீங்கள் வாரம் வாரம் அனுப்பும் எல்லா படைப்புகளும் எங்கள் மின்னஞ்சலுக்கு நல்லபடியாக வந்து சேர்ந்துக்கொண்டு இருக்கிறது. நீங்கள் நேற்று அனுப்பிய சிறுகதையில் "இது உங்களுக்கு அனுப்பும் 50வது கதை" என்று எழுதியுள்ளீர், ஆனால் எங்கள் கணக்கின்படி இது உங்களின் 35வது கதையாகும். ஒரே கதையை தலைப்பு மட்டும் மாற்றி இரண்டு முறை அனுப்பி இருந்தீர்கள். அதையும் சேர்த்தால் கூட கணக்கில் 36'தான் வருகிறது.

இதுவரை  உங்கள் படைப்புகள் எதையும் நாங்கள் வெளியிடாமல் போனதுக்கு முதலில் "நிகழ்காலம்"  சிற்றிதழின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.  உங்கள் அனைத்து படைப்புகளையும் படித்த பின்னரே எங்கள் ஆசிரியர் குழு இந்த கடிதத்தை எழுதுகிறது. எங்கள் கடிதம் உங்களுக்கு மகிழ்ச்சியையும், பெரிய ஆச்சர்யத்தையும் கொடுக்கும் என்று நம்புகிறோம். இதுவரை "நிகழ்காலம்" ஆசிரியர் குழு சார்பில்  எந்த எழுத்தாளருக்கும் கடிதம் எழுதியது இல்லை, இதுவே முதல்முறை. இதற்காக நீங்கள் கண்டிப்பாக சந்தோஷம் அடையலாம்.

முதலில் எங்கள் ஆசிரியர் குழு சார்பில் சிலவற்றை உங்களுக்கு தெளிவுப்படுத்த விரும்புகிறோம். எங்கள் "நிகழ்காலம்" மாதம் ஒருமுறை மட்டுமே வெளிவரும் சிற்றிதழ். இதுவரை இரண்டு இதழ்கள் மட்டுமே வந்துள்ளது. அதற்குள் நீங்கள் 35 கதைகள் அனுப்பியது எங்களுக்கு வியப்பை அளிக்கிறது. முக்கியமாக எங்கள் முதல் இதழில், எங்கள் ஆசிரிய குழுவை சேர்ந்த சோம்பன் எழுதிய "சூர்ப்பனகை பல்லாக்கில் போனாள்" என்ற கதையின் தலைப்பை மட்டும் மாற்றி மீண்டும் எங்களுக்கே அனுப்பியதன் காரணம் என்னவோ???.

நாங்கள் உங்களை  குறைசொல்கிறோம் என்று தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம். எங்கள் சிற்றிதழுக்கு ஆயுள் சந்தா கட்டிய ஒரே ஆள் என்ற முறையில் உங்களுக்கு எல்லா  உரிமையும் இருக்கிறது. உங்கள் இலக்கிய ஆர்வம் எங்களை  தொடர்ந்து பிரமிக்க வைக்கிறது. நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்றே நாங்களும் ஆசைப்படுகிறோம். உங்கள் நண்பர் ஒருவர் எங்கள் இதழுக்கு ஆயுள் சந்தா செலுத்த இருப்பதாக சொன்னீர்களே, அது என்னவானது??. ஒன்றும் அவசரமில்லை, உங்களுக்கு ஒருமுறை ஞாபகப்படுத்தினோம். அவ்வளவுதான்.

எங்கள் ஆசிரியர் குழுவில் உங்களைப் பற்றி பேசும் போது,உங்களை நாங்கள் "பின்நவீனத்துவத்தின் ராஜா" என்றே அழைக்கிறோம். உங்கள் எழுத்து, உலகம் முழுவதும் சென்று அடையவேண்டும். அது ஒரு சிறிய மக்களுக்குள் நின்றுவிடகூடாது. கண்டிப்பாக உலகம் முழுவதும் பரவ வேண்டும். உங்கள் கதைகளை  இப்போழுதே நிகழ்காலம் சிற்றிதழில் வெளியிட்டால், அது கொஞ்ச மக்களுக்கே சென்று சேரும். சில நாட்கள் ஆகட்டும், நமது நிகழ்காலம் சிற்றிதழ் எல்லா மக்களையும் சென்றடைந்தவுடன் நீங்கள் தான் நமது இதழின் ஆஸ்தான எழுத்தாளர்.

அடுத்த இதழ் வெளியிட சுமார் பத்தாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. எங்கள் ஆசிரிய குழுவில் அனைவரும் பணத்தை ஏற்பாடு செய்ய முயன்றுக்கொண்டுதான் இருக்கிறோம்.  எப்படியாவது இந்த மாத இதழை மட்டும் வெளியிட்டால் போதும், அடுத்த மாத இதழுக்கு கண்டிப்பாக விளம்பரம் கிடைத்துவிடும். ஏற்கனவே முதல் மட்டும் கடைசி பக்க விளம்பரங்களுக்கு ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். ஆகவே, இன்னும் ஒரு இதழை வெளீயிட்டால் போதுமானது. அதன் பின் எல்லாம் தானாகவே நடுந்துவிடும். எல்லாம் இறைவன் செயல்.

இப்படிக்கு,
"நிகழ்காலம்" ஆசிரியர் குழு.

Sunday, October 31, 2010

Animal Farm (விலங்குப் பண்ணை) - by George Orwell

நான் ஆங்கில புத்தகங்கள் அதிகம் படிப்பதில்லை. சமீபத்தில் மற்றொரு புத்தகத்தை தேடி சென்றபோது, கையில் கிடைத்தது "Animal Farm". ஏற்கனவே கேள்விப்பட்ட நாவல் என்பதைவிட அதன் ஸீரோ சைஸ் என்னை ஈர்த்தது. (மொத்தம் 90 பக்கங்கள்தான்).

முதலில் கிழே உள்ள ஒரு மேலோட்டக் கதையை படியுங்கள்.

"அரசாட்சி நடக்கும் நாடு. ஒரு நாள், ஒரு வயதானவர் அங்கு உள்ள மக்கள் அனைவருக்கும்  கம்யூனிசம் பற்றி விளக்குகிறார். "எல்லாருக்கும் சுதந்திரம், நம் உழைப்பு நமக்காவே, நாமே ராஜா  நாமே மந்திரி" என்று அவர் சொல்ல சொல்ல மக்கள் அனைவரும் சுதந்திர கனவினைக் காண தொடங்குகிறார்கள். அடுத்த சில நாட்களில் அந்த வயதானவர் இறந்து விடுகிறார். நாடு முழுவதும் புரட்சி வெடிக்கிறது. மக்கள் அனைவரும் ஒற்றுமையாக போராடுகிறார்கள். அரசன் பயந்து நாட்டை விட்டு ஒடுகிறான். அவர்கள் நாடு சுதந்திரம் அடைகிறது. மக்கள் சந்தோஷத்தில் குதுகலம் அடைகிறார்கள். மக்கள் பிரதிநிதியாக இருக்க இருவர் முன்வருகிறார்கள். அவர்கள் மக்கள் நலனுக்காக புதிய திட்டங்களை உருவாக்குகிறார்கள். மக்களாட்சி ஆரம்பமாகிறது. எங்கும் கம்யூனிசம். மக்கள் ஒருவரை ஒருவர் "காம்ரேட்" என்று அழைத்துக்கொள்கிறார்கள்."

"நாடு செழிப்பாக மாறுகிறது. பக்கத்து நாட்டில் உள்ள அரசர்கள் இதை பார்த்து போராமை கொள்கிறார்கள். போருக்கு வருகிறார்கள். ஆனால், மக்கள் ஒற்றுமையாக போராடுவதால் எதிரி நாட்டு அரசர்கள் தோல்வியடைகிறார்கள். போரில் இறந்தவர்கள் தியாகிகள் என்று அறிவிக்கபடுகிறது. மக்கள் பிரதிநியாக தேர்தேடுக்கப்பட்ட இருவருக்குள் எப்பொழுதும் கருத்து வேறுபாடு இருந்துக்கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் அது உச்சத்துக்கு போக, ஒருவனை மற்றொருவன் படைவீரர்கள் வைத்து கொன்றுவிடுகிறான். அதன் பின், அவன் கொஞ்ச கொஞ்சமாக சர்வதிகாரியாக மாறுகிறான். எதிர்த்து பேசினால் மரணம் நிச்சயம் என்பதால், மக்கள் அனைவரும் பயத்துடன் வாழ்கிறார்கள். முன்னர், அரசாட்சியில் இருந்ததை விட அவர்களின் நிலைமை மோசமாக இருக்கிறது. ஆனால், முன்னரை விட இப்பொழுது சந்தோஷமாகவும், சுதந்திரமாகவும் இருப்பதாக நம்ப தொடங்கினர்."

மேலே சொன்ன மேலோட்டக் கதையை, குழந்தைக்களுக்கும் புரிவது போல், தெளிவாகவும், விரிவாகவும், மனிதர்களுக்கு பதிலாக மிருகங்களை வைத்து சொன்னால் எப்படி இருக்கும், அதுதான் George Orwell எழுதிய "Animal Farm".

"ஒரு பண்ணையில் வாழும் மிருகங்கள் அனைத்தும், அந்த பண்ணை உரிமையாளரை  விரட்டிவிட்டு, மிருகங்களின் அரசாங்கத்தை அமைக்கின்றன. வெள்ளை பன்றிகள் தலைமை பொருப்பை ஏற்கின்றன. மிருகங்களின் அரசாங்கம் என்ற போக்கு மாறி, கொஞ்ச கொஞ்சமாக பன்றிகளின் சர்வதிகார ஆட்சியாக மாறுகிறது. இதுதான் Animal Farm‘ன் ஒன்லைன் ஸ்டோரி.George Orwill இந்த கதையை  எழுதியது 1935‘களில். அதாவது உலகம் முழுவதும் கம்யூனிசம் என்ற புதிய சித்தாந்தம் சுடர்விட்டு எரிய துவங்கிய காலம். கம்யூனிசத்திற்க்காக பலர் தங்கள் உயிர்களை கூட துறக்க தயாராக இருந்தனர். கவிஞர்கள் புதிய புரட்சி கவிதைகளை எழுதி குவித்த நாட்கள். வருமையின் பிடியில் சிக்கிக்கொண்டு எதாவது மாற்றம் வருமா?? என்று மக்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருந்ததனர். இந்த காலக்கட்டத்தில் தான், கம்யூனிசத்தை பற்றி George Orwill இந்த நாவலை எழுதினார்.

இதனை கம்யூனிச எதிர்ப்பு நாவல் என்று சொல்லி நிராகரித்துவிட முடியாது. கம்யூனிசத்தின் எழுச்சி மற்றும் தோல்வி ஆகிய இரண்டை பற்றியும் இந்த நாவல் சொல்கிறது. ஒரு முழுமையான கம்யூனிச ஆய்வு நாவல் என்று இதை சொல்லலாம்.

கதையில் வரும் இரண்டு பன்றிகள் Nepoleon,Snowball ஆகியவை  ஸ்டாலின், லெனின் ஆகியோரை குறிக்கிறது என்பதை அனைவராலும் சுலபமாக ஊகித்து விடமுடியும். முதல் முதலாக சுதந்திரத்தை பற்றி பேசும் Old Major என்ற கதாபாத்திரமும் Karl Marx‘தான் என்பது சுலபமாக புரிந்துவிடுகிறது. இப்படி ரஷ்யா, அமெரிக்கா, அந்த காலத்து புகழ் பெற்ற கவிஞர்கள், போர் தளபதிகள் என்று அனைவருமே இந்த Animal Farm நாவலில் இருக்கிறார்கள்.

விலங்குகள் சுதந்திரம் அடைந்தவுடன், அவர்கள் தங்களுக்குள் கொண்டுவரும் ஏழு கட்டளைகள்,

1. Whatever goes on two legs is an enemy.
2. Whatever goes on four legs, or has wings, is a friend.
3. No animal shall wear clothes.
4. No animal shall sleep in a bed.
5. No animal shall drink alcohol.
6. No animal shall kill any other animal.
7. All animals are equal.

இந்த கட்டளைகள் சிறிது சிறிதாக மாற்றப்பட்டு இப்படி முடிகிறது,

1. No animal shall sleep in a bed. with sheets
2. four legs good, two legs better
3. No animal shall drink alcohol. to excess
4. No animal shall kill any other animal. without cause
5. All animals are equal. but some animals are more equal than others

கம்யூனிசம் பற்றி புரிந்துக்கொள்ள கண்டிப்பாக இந்த நாவல் உதவும். அனைவரும் படிக்க வேண்டிய நாவல்.

பின்குறிப்பு: "விமர்சன கட்டுரைகள் எழுதுவதற்கு நீ லாய்க்கற்றவன்" என்று நண்பன் ஒருவன் என்னிடம் சொல்கிறான். இது எனக்கும் தெரிந்ததுதான். என்ன செய்ய?? நமக்கு வராது என்று தெரிந்த ஒன்றைத்தானே எப்பொழுதும் செய்ய ஆசைப்படுகிறோம். 

Friday, October 29, 2010

Kikujiro, மிஷ்கின், நந்தலாலா

Question: Is Nandalala inspired from a Japanese film?

Mysskin: Now, I cannot answer this question and convince anyone. When my film is released, you can take the DVD of the Japanese film and then compare and say. Of course, I am an ardent fan of Takeshi Kitano. In fact, you can call him my guru. In a way his Kikujiro stimulated me to take Nandalala but Nandalala is not Kikujiro. You can tell me this after you see the film.

முழு பேட்டிக்கு இங்கு கிளிக் செய்யவும்: http://www.behindwoods.com/features/Interviews/interview-5/director/mysskin-01.html
 
மேலே உள்ள மிஷ்கினின் பேட்டியை ரொம்ப நாட்களுக்கு முன்னாலேயே படித்திருக்கிறேன், இந்த பேட்டியை படித்த பின் தான் "Mystic Rivers" திரைப்படத்தை தேடிபிடித்து பார்த்தேன். (இனையம் வந்த பிறகு இந்த தேடிபிடித்து என்ற வார்த்தைக்கே அர்த்தம் இல்லாமல் போய்விட்டது. Mystic Rivers திரைப்படத்தை தேடிபிடிக்க எனக்கு 2 நிமிடங்களே தேவைப்பட்டது. டவுன்லோட் செய்வதற்க்கு தான் நான்கு மணிநேரமாகியது). இனிமேல் யாராவது "அஞ்சாதே" திரைப்படம் Mystic Rivers’ன் காப்பி என்று சொன்னால், அவர்களை கொலை செய்யாமல் விடுவதாகயில்லை.

இதே பேட்டியில்தான் மிஷ்கின்  "Kikujiro" திரைப்படத்தைப் பற்றி பேசியிருந்தார். ஏனோ, அப்பொழுது அந்த திரைப்படத்தை  பார்க்கும் ஆவல் சுத்தமாக இல்லை. பின், அப்படியே மறந்துவிட்டேன். சமீபத்தில் "நந்தலாலா" பற்றி நான் எழுதிய ஒரு பதிவுக்கு, பின்னூட்டம் எழுதிய நண்பர் ஒருவர் Kikujiro பற்றி சொல்லியிருந்தார். Kikujiro திரைப்படத்தின் விளம்பரத்தை பார்த்தவுடனேயே பார்க்க தூண்டியது. வழக்கம் போல், இந்த திரைப்படத்தையும் கஷ்டப்பட்டு தேடிபிடித்து பார்த்தேன். (இந்தமுறை 3 நிமிடம் தேவைப்பட்டது).

ஒரு சிறு பையன் அவன் அம்மாவை தேடி பல நூறு மைல் தூரம் இருக்கும் ஊருக்கு போகிறான். அந்த பையனுக்கு துணையாக பக்கத்து வீட்டில் வசித்த பெண், தன் கணவனை அனுப்புகிறாள். அந்த பெண்ணின் கணவன் ஒரு ரவுடி. அவனும் அந்த பையனும் பயணம் செய்யும் போது சந்திக்கும் மனிதர்களை பற்றியதுதான் இந்த படம். நந்தலாலா திரைப்படத்தின் கதையும் இதுதான், ஆனால் இதில் பையனுக்கு உதவுபவன் ஒரு மனநோயாளி என்று மிஷ்கின் ஒருமுறை சொன்னதாக ஞாபகம். ஆகவே கண்டிப்பாக நந்தலாலா திரைப்படம் ஒரு முழு காப்பி அல்ல என்று நம்பலாம். அப்படி காப்பியாக இருந்தாலும் கூட ஒரு பிரச்சனையும் அல்ல, ஒரு நல்ல திரைப்படம் தமிழுக்கு வருவது நல்லது தானே???

Kikujiro திரைப்படம் ஒரு குழந்தையின் பார்வையிலேயே முழுவதும் சொல்லப்படுகிறது. குழந்தைகளின் உலகம் வித்தியாசமானது, அவர்களை பொறுத்தவரை கெட்டவர்கள் என்று யாருமே இல்லை. இந்த திரைப்படத்திலும் கெட்டவர்கள் என்று யாரும் இல்லை (பூங்காவில் சிறுவனை வன்புணர்ச்சி செய்யமுயலும் ஒருவனை தவிர. அவனும் சில நிமிடங்கள்தான் வருகிறான்). மற்றபடி படம் மிகவும் அமைதியாகவே செல்கிறது, ஒரு தெளிந்த நீரோடை போல.

நம் தமிழ் திரைப்படங்களில் குழந்தைகள் என்றாலே, அவர்கள் மிகவும் புத்திசாலியாக இருக்கவேண்டும், தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள். அஞ்சலியில் மணிரத்னம் ஆரம்பித்து வைத்த டிரண்ட் என்று நினைக்கிறேன். ஆனால் இந்த திரைப்படத்தில் Masao என்ற கதாபாத்திரத்தில் வரும் சிறுவன் அதிகம் பேசுவதில்லை, அதிகமாக அவன் சொல்வது "ம்" மட்டும்தான். அதேபோல் மெல்லிய காமெடி திரைப்படம் முழுவதும் மறைந்திருக்கிறது.

கேமராவை பற்றி கண்டிப்பாக சொல்லவேண்டும், பல காட்சிகளை கேமராவை Constant’ஆக  ஒரே இடத்தில் நிற்கவைத்து எடுத்திருக்கிறார்கள், இதே போன்ற கேமரா கோணங்களை  "அஞ்சாதே" திரைப்படத்திலும் பார்க்கலாம். Backround’ல் வரும் அந்த டீம் மியுசிக்கும் அருமை.  

வழக்கம் போல் விக்கிப்பீடியாவில் தேடிபிடித்ததில் கிடைத்த சில தகவல்கள் (இந்த முறை 1 நிமிடத்துக்கும் குறைவாகவே)

திரைப்படம் பெயர்: Kikujirô no natsu
டைரக்டர் பெயர்: Takeshi Kitano
Masao காதாபாத்திரம்: Yusuke Sekiguch
Kikujiro காதாபாத்திரம்: Takeshi Kitano
மேரா: Yangijima Katsumi

நந்தலாலா "Kikujiro" திரைப்படத்தின் காப்பியா?? என்பதை, நந்தலாலா திரைப்படத்தை பார்த்த பின்தான் முடிவு செய்யவேண்டும். இப்பொதைக்கு இது தேவையில்லாத ஒன்று, அப்படியே Kikujiro திரைப்படத்தை பார்த்து நந்தலாலா’வை எடுத்திருந்தாலும், நம் அமீரை போல் மிஷ்கின் கொலை செய்திருக்க மாட்டார் என்று சத்தியமாக நம்பலாம்.
 
(எனக்கு ஏற்கனவே தமிழ் வராது. ஆகவே பெயர்களை அனைத்தையும் ஆங்கிலத்திலேயே எழுதிவிட்டேன்)

Wednesday, October 27, 2010

பாரதியின் கதைகள்

கீழே உள்ள புகைப்படத்தில் இருப்பது யார் என்று தெரிகிறதா?? நன்றாக பாருங்கள், நமக்கு மிகவும் தெரிந்தவர்தான்.


அவர் வேறு யாரும் இல்லை, நம் "மகாகவி பாரதியார்" தான். என்ன வியப்பாக இருக்கிறதா?? அதே போன்ற ஒரு வியப்பைத்தான், அவரின் "காக்காய் பார்லிமெண்ட்" என்ற கதையை படிக்கும்போது நான் உணர்ந்தேன். புதுமைப்பித்தன் கதைகளில் இருக்குமே ஒரு நையாண்டி கலந்த நகைச்சுவை எழுத்து, அதே போன்றுதான் இந்த கதையும் உள்ளது. பகடி கலந்த புனைவு என்றுகூட சொல்லலாம்.

புதுமைப்பித்தன் எழுத்துக்கே பாரதியார்தான் முன்னோடி என்று நான் பலமுறை கேள்விப்பட்டது உண்டு, ஆனால் அதை முதல் முறையாக இப்பொழுது உணர்கிறேன்.

பாரதியார் கவிதை எழுதுவதில் மட்டும் இல்லாமல், கதை எழுதுவதிலும் வல்லவராக இருந்து உள்ளார். பின், ஏன் அவர் தொடர்ந்து கதைகள் எழுதவில்லை?? என்று தெரியவில்லை.

நம்மை பொருத்தவரை  பாரதியார் என்றால் அவர் கவிதைகள்தான் நினைவில் வரும். எனக்கு பிடித்த கவிஞர்களில் முதலில் இருப்பவர் பாரதியார். பாரதியாரிடம் எல்லாவற்றிக்கும் கவிதை இருக்கும். "நீங்கள் ஒரு யுத்தத்தில் வெற்றி அடையும் போது, காதலியை பிரியும் போது, காதலியுடன் இனையும் போது, கடவுளை  வேண்டும்போது, தாய் மண்ணை நினைக்கும் போது" இப்படி எல்லாவற்றிக்கும் கவிதை  எழுதிருக்கிறார்.

"காக்காய் பார்லிமெண்ட்" என்ற அந்த கதையை நீங்கள் இங்கு படிக்கலாம்.

http://azhiyasudargal.blogspot.com/2010/10/blog-post_27.html

காக்காய் பார்லிமெண்ட் கதை தற்பொழுதைய காலத்துக்கும் தகுந்தால் போல் உள்ளது. இப்பொழுது படிக்கும்போது, ஏதோ நம் தமிழ்நாட்டு முதல் அமைச்சரையும், அவர் குடும்பத்தையும் பகடி செயவது போல் இருக்கிறது. இந்த கதையில் அவர் "காக்காவின் பாஷை" அகராதியைப் பற்றி சொல்லும் போது சிரிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதே போல் கீழே உள்ள வரிகளை படித்து பாருங்கள்,

"நான் சொல்வதுதான் சரியான பிரயோகம் என்பதற்கு போகர் இலக்கணத்தில் ஆதாரமிருக்கின்றது. “போகர் இலக்கணம் உமக்கு எங்கே கிடைத்தது?” என்று கேட்கலாம். அதெல்லாம் மற்றொரு சமயம் சொல்லுகிறேன்."

இதே போன்ற எழுத்தை புதுமைப்பித்தன் கதைகளிலும் காணலாம்.

இந்த கதையை  முடிக்கும் போது, "இது நிஜமாக நடந்த விஷயமில்லை. கற்பனைக் கதை" என்று முடித்து உள்ளார். அந்த கடைசி வரி மட்டும் தேவையில்லாத ஒன்று என்று தோன்றுகிறது. ஒருவேளை, அந்த காலத்தில் இது போன்ற கதைகள் ஒரு புதிய முயற்சி என்பதால், மக்களுக்கு புரியும் பொருத்து, அந்த வரியை எழுதியிருக்கலாம்.

இந்த வார இறுதியில் பாரதியாரின் கதைகள் தொகுப்பை வாங்கி எல்லா கதைகளையும் படிக்கலாம் என்று இருக்கிறேன். "அவரின் கவிதை தொகுப்பை  போல், கதை தொகுப்பையும் யாராவது வெளியிட்டு இருக்கிறார்களா என்ன??".

Tuesday, October 26, 2010

ஒரு செவிவழிக் கதை

"என்னப்பா, நம்ம சொந்தத்திலேயே அழகா ஒரு அஞ்சு பொண்ணுங்க இருக்கு. அதுல ஒன்ன பார்த்து உனக்கு  முடிச்சிடலாமா??".

இப்படித்தான் அசோக்கின் தாத்தா, அவனிடம் பேச ஆரம்பித்தார். தாத்தா, அசோக்கை தனியாக கூப்பிடும் போதே, இதில் ஏதோ வில்லங்கம் இருக்கு என்று அசோக்கிற்கு தெரிந்துவிட்டது.

"உன் அப்பன்கிட்ட பேசித்தேன். இந்த காலத்து பசங்க யாரையும் நம்ப முடியாது, நீங்களே அசோக்கிடம் பேசி ஒரு முடிவுக்கு வாங்கனு சொல்லிட்டான். ஏன்டா?? உன் மனசுல எதாச்சும் இருந்தா இப்பவே சொல்லிடு" என்றார்.

"அதுலாம் ஒன்னும் இல்ல தாத்தா. இப்ப என்ன கல்யானத்துக்கு அவசரம். கொஞ்ச நாள் ஆகட்டும்"

"பொண்ணை பார்த்து, நாளைக்கே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறமாதிரி பேசுற. இப்ப பார்க்க ஆரம்பித்தால்தான், ஒரு வருடத்தில் கல்யாணம் முடியும்" என்றார்.

இப்படிதான் ஒரு சுபயோக சுபதினத்தில் அசோக்கிற்கு பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்தது. "சொந்தத்திலேயே அழகா ஒரு அஞ்சு பொண்ணுங்க இருக்கு" - இதில் அசோக்கிற்கு சந்தேகம், அது யாருடா  நமக்கு தெரியாம, அழகா ஐந்து பொண்ணுங்க என்று. "நம்ம குடும்பத்திலேயே இதுவரை  அழகு’னா அது யசோதாதான்" என்று ஒருமுறை தாத்தாவே சொல்லியிருக்கிறார். யசோதா பிறந்த வருடம் 1938. இதை அவர் யசோதா பாட்டியின் கருமாரியின் போது சொன்னார்.

அசோக்கும் கடந்த நான்கு வருடமாக எல்லா திருமண விழாவிலேயும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான், இதுவரை அவர்கள் சொந்தத்தில் ஒரு பெண்ணைக்கூட பார்த்தது இல்லை. பின் எப்படி இந்த தாத்தாவால் மட்டும் ஐந்து பெண்களை கண்டுபிடிக்க முடிந்தது!! அதுவும் அழகாக!!

அடுத்த வரியை தாத்தா சொன்ன போதுதான் அந்த "அழகான அஞ்சு பொண்ணுங்க" என்ற வார்த்தையின் உள்ளர்த்தம் அசோக்கிற்கு புரிந்தது. "உனக்கும் பொருத்தமாக" என்றார். அன்று இரவு அசோக்கின் அப்பா, அசோக்கிடம் "இது உன் வாழ்க்கை. எல்லாம் உன் இஷ்டம், யோசித்து முடிவு எடு" என்றார்.

அடுத்த நாள், கோயில் திருவிழாவில் அசோக்கிடம் அவன் தாத்தா ஒரு பெண்ணை காட்டினார்.  "இப்ப நம்ம ரவி பொண்ணு எடுத்திருக்கான்’ல அவுகளோட சித்தப்பா  பொண்ணு" என்றார். பார்ப்பதற்கு மிகவும் அழகாக, "ஜெயங்கொண்டான்"  திரைப்படத்தில் வரும் பாவனா’வை போல் இருந்தாள். அசோகிற்கு ஒரே சந்தோஷம், அன்று இரவு அவன் கனவில் வெள்ளை நிற தேவதைகள் வந்து வந்து போனார்கள்.

ரவியின் மூலம் அந்த பெண்ணின் அப்பாவிற்கு தாத்தா செய்தி அனுப்பினார். "பொண்ணு இன்னும் படிக்க போகுது, அதனால் ஒரு இரண்டு வருடமாகும்" என்று பதில் வந்தது. தாத்தாவிற்கு இந்த பதிலால் எந்த ஒரு மனவருத்தமும் ஏற்படவில்லை. கடந்த இருபது வருடங்களாக சொந்தங்கள் எல்லாருக்கும் திருமணம் செய்து வைத்துக்கொண்டு இருக்கிறார். இந்த பதிலை அவர் பலமுறை பலரிடம் கேட்டு இருந்தார்.

ஆனால் அசோக்கிற்குதான் அந்த இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. கனவில், கரும் இருளில் தனியாக உட்கார்ந்து இருந்த அவனை பார்த்து தேவதைகள் சிரித்துவிட்டு போயின. சில நாட்களுக்கு கழித்து "அந்த பொண்ணையும், அசோக்கையும் சேர்த்து வைத்து பார்த்தால், கருப்பு வெள்ளை டி.வி’யை பார்த்தமாதிரி இருக்கும்" என்பதால்தான் அந்த பெண்ணின் அப்பா சம்மதிக்கவில்லை என்று அறிந்தபோது, கொஞ்சம் அதிகமாகவே அசோக் வருத்தப்பட்டான். அசோக்கின் தாத்தாவுக்கும் இந்த விஷயம் தெரிந்தே இருந்தது, ஆனால் தெரிந்ததுபோல் காட்டிக்கொள்ளவில்லை.

"பார்த்த முதல் பெண் தடைப்பட்டு விட்டால், பின் அந்த பையனின் திருமணம் ரொம்ப நாட்கள் தள்ளிப்போகும்" என்று கண்ணன் மாமா, அசோக்கிடம் ஒருநாள் சொன்னார்.

இதற்குள் அசோக்கின் தாத்தா அவனுக்கு இரண்டாவது பெண்ணை பார்த்திருந்தார். இந்த முறை அசோக் பெண்ணை பார்க்கவில்லை. ஆனால், அழகாக இருப்பாள் என்று அக்காவின் மூலம் கேள்விப்பட்டான். ஆனால், இதிலேயும் ஒரு பிரச்சனை வந்தது. அந்த பெண் பிறந்த வருடம் 1991. கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் வித்தியாசம். இவ்வளவு சின்ன பொண்ணு வேண்டவே வேண்டாம் என்று அசோக் சொல்லிவிட்டான். அசோக்கின் அப்பாவும், "எல்லாம், அவன் இஷ்டம்" என்று சொல்லிவிட்டார். அம்மாவுக்கும், தாத்தாவுக்கும்தான் கொஞ்சம் வருத்தம் "இப்படி நல்ல பொண்ணை வேண்டாம்’னு சொல்லிடானே" என்று.

மூன்றாவது பெண்ணை, அசோக் பார்த்த போது இந்த முறை எல்லாம் சரியாகவே நடக்கும் என்று நினைத்தான். ஆனால், பெண்ணின் தம்பி மூலம் பிரச்சனை வந்தது. "விசாக நட்சத்திர பையன், தம்பி இருக்கும் பெண்ணை மணந்தால், அது அந்த தம்பியை அடித்துவிடும்" என்று ஒரு சோதிடக்காரன், வேலையில்லாத ஒரு மாலை வேளையில் சொல்லிவிட்டான். இதனால், அந்த பெண்ணின் வீட்டில் எல்லாரும் பயந்துவிட இந்த பெண்ணும் அசோக்கிற்கு கிடைக்காமல் போய்விட்டது.

இந்த மூன்று சம்பவத்தால், மனதளவில் அசோக் பாதிக்கப்பட்டான். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இதைப்பற்றி பேச வேண்டாம் என்று வீட்டில் கறாராக சொல்லிவிட்டான். ஆனால், அசோக்கின் தாத்தா மறைமுகமாக ஒரு பெண்ணை பார்த்தார். அந்த பெண் "தான் ஒரு பையனை காதலிப்பதாகவும், அவனைத்தான் திருமணம் செய்வேன்" என்று வீட்டில் அடம்பிடித்ததால், இந்த பெண்ணும் இல்லாமல் போனது. அதன் பின், அசோக்கின் தாத்தாவும் பெண் பார்க்கும் படலத்தை ஒத்திவைத்தார்.

ஆனால் இது நடந்து ஒரு ஆறு மாதங்கள் பிறகும், அசோக்கின் தேவதை கனவுகள் மட்டும் நிற்கவே இல்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமான  தேவதைகள் கனவில் வந்துக்கொண்டே இருந்தனர்.

Tuesday, October 19, 2010

படித்ததில் பிடித்தது

முத்தம்

கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும்
ஒரு காப்பி சாப்பிடலாம் வா

- தேவதேவன்

Monday, October 11, 2010

பெண்களின் கால்கள்

இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் - IV 

வணக்கம் சார். எப்படி சார் இருக்கீங்க??. எல்லா பதிவையும் இதே மாதிரி ஆரம்பிக்கிறது எனக்கே அலுப்பா இருக்கு சார். எழுதுற எனக்கே அலுப்பு'னா, படிக்கிற உங்களுக்கு??. கவலைப்படாதீங்க சார் அடுத்ததடவை மலையாளத்தில் ஆரம்பிக்கிறேன். இப்பொழுதுதான் ஒரு அழகான பெண் மலையாளம் சொல்லி தர ஆரம்பித்து இருக்காள், எப்படியாவது மலையாளத்தை பிக்கப் பண்ணிடலாம்'னு நினைக்கிறேன்.

அழகான பெண் என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் என்ன சார்??. பெண் என்றாலே அழகு தானே. ஒரு பெண்ணை அழகு, அழகில்லை என்று எதை வைத்து எடை போடுகிறார்கள். குமார் சொல்வான் " நேருக்கு நேர்" படத்தில் வரும் சிம்ரன்தான் உண்மையான உலக அழகி என்று. இவன்தான் ஒருமுறை  "அலைகள் ஓய்வதில்லை" திரைப்படத்தை  பார்த்துவிட்டு, தூக்கத்தில் அன்று இரவு முழுவதும் "அமலா", "அமலா" என்று புலம்பிக்கொண்டு இருந்தான், நான் அவனை எழுப்பிவிட்டு அது "அமலா"   இல்லை, "ராதா"  என்றேன். அவன் "பெயரில் என்ன இருக்கிறது" என்று சொல்லி மீண்டும் கனவுகான தொடங்கிவிட்டான்.

அவன் சொல்வது சரிதான் சார். பெயரில் என்ன இருக்கிறது. எல்லாமே உடையிலும் நடையிலும்தான் இருக்கிறது.

நீங்கள் பெண்களின் கால்களை  கவனித்து இருக்கிறீர்களா??. நான் எல்லா பெண்களிடமும் முதலில் பார்ப்பது அவர்கள் கால்களைத்தான். பின்புதான் மற்றவை எல்லாம். பெண்களின் கால்விரல்கள்தான் எத்தனை அழகு!!, அதுவும் அந்த சுண்டுவிரல்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.  "விண்ணைத்தாண்டி வருவாயா" திரைப்படத்தில் கூட சிம்பு, திரிஷாவின் சுண்டுவிரலைத்தான் முதலில் பிடிப்பான்.

பெண்கள் தங்கள் முகத்தை போலவே கால்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். கால்களை  அழகாக வைத்துகொள்ள எப்பொழுதும் விரும்புகிறார்கள். அதற்காக ஏதோ, ஏதோ மருந்துகள் எல்லாம்  கால்களில் போட்டுக்கொள்கிறார்கள். முகத்தில் தேமல் வந்தால் கூட அதிகம் கவலைப்படாத பெண்கள், கால்களில் வெடிப்பு வந்தவுடன், ஏதோ தங்கள் அழகே போய்விட்டது போல் வருத்தப்படுகிறார்கள்.

சார், நீங்கள் கால்களிள் மருதாணி வைத்திருக்கும் பெண்களை  பார்த்து இருக்கிறீர்களா??. அவள் கையில் இருக்கும் மருதாணியைவிட காலில் இருக்கும் மருதாணி அழகாகயிருக்கும். எதற்காக பெண்கள் தங்கள் கால்களை எப்பொழுதும் அழகாக வைத்திருக்க ஆசைப்படுகிறார்கள்?? ஒருவேளை என்னைப்போலவே பெண்களின் கால்களை ரசிப்பவர்கள் பல பேர் இருக்கிறார்களா??

"நாம் ஒருவனால் கவனிக்கப்படுகிறோம் என்ற விஷயத்தை பெண்களின் ஆழ்மனது சுலபமாக கண்டுக்கொள்கிறது". யாரவது பார்க்கும்போது, தானாகவே பெண்ணின் கைகள் அவள் ஆடையை சரிசெய்யும். அது போல, நாம் பெண்ணின் கால்களை பார்க்கும் போது, தானாகவே எதன் பின்னாலாவது அவள் கால்களை மறைத்துக்கொள்கிறாள்.   

நான் பெண்களின் கால்களை ரசிக்க தொடங்கியது எப்பொழுது இருந்து என்று சரியாக ஞாபகம் இல்லை சார். கண்டிப்பாக கடந்த இரண்டு வருடங்களாகதான். ஒருவேளை மனுஷ்யபுத்திரனின் "கால்களின் ஆல்பம்" கவிதையின் பாதிப்பாகக்கூட இருக்கலாம்.

குமாரிடம் இதைப்பற்றி கேட்டேன் சார், " நீ பெண்களில் கால்களை பார்ப்பியா??" என்று, "நம்மை  செருப்பால் அடிப்பார்களோ??, என்று சந்தேகம் வரும்பொழுது மட்டும் பார்ப்பேன்" என்றான்.

ஒரு பெண், தனது கால்களில் அணிந்திருக்கும் காலணியை பார்த்தே அவளைப்பற்றி முழுமையாக அறிந்துக்கொள்ளலாம் சார். இது உண்மை சார். நீங்களே வேண்டுமானால் சோதித்து பாருங்கள், ஹை ஹீல்ஸ் அணிந்திருக்கும் எல்லா  பெண்களும் ஒரே மாதிரி இருப்பார்கள். போன வாரம் எங்கள் அலுவலகத்தில் இலவசமாக கொடுத்த டீ-சர்ட் large Size'ல் இருந்ததால் மாற்ற போயிருந்தேன் சார். அப்பொழுது அங்கே வந்த பொண்ணு ஒண்ணு, அவள் கையில் மடித்து வைத்திருந்த புதிய டீ-சர்டை விரித்து காட்டி, "I am having large, but I want small" என்றாள். அப்பொழுதுதான் அவள் கால்களை பார்த்தேன் எவ்வளவு பெரிய ஹை ஹீல்ஸ் தெரியுமா??

சரி சார், மீண்டும் அடுத்த பதிவில் இதைப்போல் நாட்டுக்கு தேவையான கருத்துகளுடன் சந்திப்போம்.

Saturday, October 9, 2010

இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் - III

 Love the way you lie

வணக்கம் சார். இந்த புதுமை புதுமை என்ற வார்த்தை இருக்கிறதே, அது மீது எனக்கு ஒருவித மோகம் சார். யாருக்கு தான் புதுமை மீது ஆசை இல்லை என்கிறீர்களா??. என்னை பொருத்தவரை எதாவது புதிதாக செய்துக்கொண்டே இருக்கனும் சார். புதிதாக செய்தால் நம்மை அனைவரும் திரும்பி பார்ப்பார்கள், அதனால் தான் நான் புதுமை மீது ஆசைக் கொள்கிறேன் என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. எனக்கு எப்பொழுதும் பத்தோடு பதினொன்றாக இருக்கவே பிடிக்கும். அந்த பதினொன்றாவது நபராக இருந்துக்கொண்டு நம்மால் முடிந்த புதுமையை செய்துக்கொண்டே இருக்கவேண்டும், இது தான் என் ஆசை. என்னை பொருத்தவரை எப்பொழுதும் நான் தனியாக தெரிய கூடாது. எனக்கு அது ஒரு லஜ்ஜையை ஏற்படுத்தும். (இங்கு என்ன வார்த்தையை உபயோகப்படுத்த வேண்டும் என்று எனக்கு தெரியல சார்).

சரி, நீ இதுவரை புதுமையாக என்ன செய்துயிருக்காய் ?? என்று கேட்டீர்கள் என்றால், அதற்கு என் பதில் “ஒன்றும் இல்லை” என்பதுதான். ஆனால், எதாவது புதிதாக செய்யவேண்டும் என்ற வெறி மட்டும் எனக்குள் இருந்துக்கொண்டே இருக்கிறது சார். ஏதாவது புதிதாக செய்ய வேண்டும். அட்லீஸ்ட் எழுத்திலாவது புதுமை செய்ய வேண்டும், நம்ம பேயோனை போல. ஆனால், இப்பொழுது நூற்று கணக்கான போலி பேயோன்கள் நாடு முழுவதும் உருவாகிவிட்டார்கள். போகிறபோக்கில் பார்த்தால், நம் சொந்த பெயரில் எழுதுவதுகூட புதிய முயற்சியாக மாறிவிடும் போல் இருக்கிறது. ஏன்னென்றால், இப்பொழுது பல பேர் பேயோனை போல வேறு பெயர்களில்தான் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.

நீங்கள் போன வாரம் சரவணாவின் வலைப்பதிவை படித்தீர்களா சார்?? ஒரு கதை எழுதியிருந்தான். “சாவின் நடுவில் கதையும் அதற்க்கு வந்த இருபது பின்னூட்டங்களும்”. இதுதான் சார் அந்த பதிவின் தலைப்பு. “அதாவது ஒரு கதைக்கு வந்த பின்னூட்டங்களை மையமாக வைத்து ஒரு புனைவுகதை எழுதியிருக்கிறான்”. என்னமா யோசிக்கிறாங்க சார். இது மாதிரிதான் புதுமையாக யோசிக்கனும் சார். இவன மாதிரி ஆள்தான் நாட்டுக்கு ரொம்ப முக்கியம் சார்.

எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை சார், ஒரு நாடகம் போட வேண்டும். கதைகூட ரெடி சார். எஸ்.ராவின் “கடவுளின் குரலில் பேசி” என்ற கதையிருக்கு’ல அதை மையமாக வைத்து நான் ஒரு நாடகத்தை உருவாக்கியிருக்கேன். போன வருடம் எங்கள் ஊர் திருவிழாவில் போடலாம் என்று நண்பர்கள் பலரிடம் எவ்வளவோ சொல்லி பார்த்தேன், யாருமே ஒ.கே சொல்லல சார். நான் எழுதிய நாடகம் யாருக்கும் புரியவில்லையாம்.

என் எழுத்தையும் மதிக்கும் சில பேரு இருக்கதான் செய்கிறார்கள் சார். எனக்கு தெரிந்த கிறித்தவ பொண்ணு ஒன்னு இருக்கு சார். போன வருடம், அது என்னையும் மதித்து ஒரு நாடகம் எழுதி கேட்டுச்சு சார். அவர்கள் சர்சில் கிறிஸ்துமஸ் தினம் அன்று நடிப்பதற்க்கு, சின்ன குழந்தைகள் நடிக்கும் நாடகம் அது. இந்த பொண்ணுதான் நாடகம் போடுவதற்க்கு Organizer (இதற்க்கு தமிழ் வார்த்தை என்ன சார்??). நானும் எழுதி கொடுத்தேன், ஏசு உண்மையாக எங்கு பிறந்தார் எனபதைப்பற்றி “மத்தேயு, மார்க்கு, யோவான், லூக்கா” ஆகியோருக்குள் நடக்கும் வாக்குவாதம்தான் நாடகம்.

இந்த நால்வரும் தாங்கள் எழுதிய நற்செய்தி நூல்களை வைத்து ஏசுவின் பிறப்பை பற்றி விவாதிக்கிறார்கள். இது சிறுவர்களுக்கான நாடகம் என்பதால், ஏசுவின் பிறப்பை பற்றி அதிகமாக பேசாமல் கொஞ்சம் காமெடியாக எழுதிக்கொடுத்தேன். இந்த நாடகத்துக்கு சர்சில் பலர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவளே நாடகத்தில் கொஞ்சம் மாற்றங்கள் செய்து அந்த நாடகத்தை வெற்றிகரமாக நடத்தி காட்டிவிட்டாள். என்ன ஒன்று, நான் எழுதியது வேறு, அங்கு நடந்த நாடகம் வேறு. ஆனால், மேடையில் நாடகத்தை எழுதியவர் என்று என் பெயர் படிக்கப்பட்டது.

இப்ப சொல்லுங்க சார், இந்த உலகத்தில் எந்த மாதிரி புதுமையை நான் செய்ய முடியும்??. இங்கு யாருமே புதுமையை விரும்பவில்லை. எற்கனவே ஒருவன் வகுத்த வாழ்க்கை எல்லைக்குள் சொகுசாக வாழ நினைக்கிறார்கள். முக்கியமாக அவர்களுக்கு புதுமை என்றால் என்னவென்று புரிவதில்லை. ஏதோ அது ஒரு சமூக நோய் என்று நினைக்கிறார்கள்.

இருந்தாலும் ஒரு சிலர் அவர்கள் துறைகளில் புதுமை செய்துக்கொண்டு இருக்கதான் செய்கிறார்கள். அவர்களை பார்க்கும் போதுலாம், எனக்கு ஒருவித வியப்புதான் வருகிறது. EMINEM சமீபத்தில் Recovery என்று ஒரு ஆல்பம் வெளியீட்டு உள்ளார். அதில் உள்ள ஒரு பாடலின் தலைப்பு “Untiltle". என்ன ஒரு புதுமையான பெயர்??. EMINEM’ன் எல்லா பாடல்களுமே புதுமையாக இருக்கும். “The Real Slim Shady" என்று ஒரு பாடல், தன்னைப்போல் போலியாக உருவாகி கொண்டிருக்கும் Rap பாடகர்களைப்பற்றி பாடுவதுதான் மையக்கருத்து. இப்படி EMINEM’ன் எல்லா பாடல்களுமே கொஞ்சம் different'ஆக இருக்கும். தமிழில் பரத்வாஜ் இசையில் வந்த “உனக்கென்ன உனக்கென்ன, தம்பி உனக்கென்ன ” பாடலை இந்தவகையில் கொஞ்சம் different'ன பாடல் என்று சொல்லலாம்.

அய்யோ, எங்கேயோ ஆரம்பித்து கடைசியில் இசைக்கு வந்தாச்சு சார். நீங்கள் தமிழ்நாட்டில் இசையை தவிர்த்து வேறு எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசலாம். இசைப்பற்றி எழுதும் ஷாஜியின் நிலைமை உங்களுக்கே தெரியும். விஜய் டி.வி’யின் புண்ணியத்தால், இப்பொழுது வீட்டுக்கு வீடு பாடகர்கள் உருவாகிவிட்டார்கள். தமிழ்நாட்டில் தடுக்கிவிழுந்தால் நீங்கள் ஒரு பாடகர் தோளில்தான் விழ வேண்டும். அந்ததளவு பாடகர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. ஆனால், சிறந்த பாடகரை தேர்வு செய்யும் நடுவர் இன்னும் ஒரு மலையாளி தான். போனவாரம் விஜய் டி.வியில் ஒரு நடுவர் சொல்கிறார் “நீங்கள் உங்கள் Face Expression 'னை இன்னும் அதிகமாக்கனும்” அடப்பாவிங்களா, பாடுறதுக்கும், முகபாவனைக்கும் என்னையா சம்மந்தம் ??. ஒருவேளை உங்களுக்கு தெரியுமா சார்.

சரி, இந்த முறை பதிவு கொஞ்சம் பெரிசா போச்சு சார். நாம் மீண்டும் அடுதத முறை சந்திப்போம்.

கடைசியாக ஒன்று சார்,

EMINEM Recovery ஆல்பத்தில் Rihanna ஒரு பாடல் பாடியுள்ளார். அதான் சார் "Unfaithful Rihana", ”காதலில் விழுந்தேன்” படத்தில் கூட நம்ம சுனைனாக்கா பாடுவாங்களே “உனக்கென நான், எனக்கென நீ, நினைக்கையில் இனிக்குதே" என்று, அந்த பாடலின் Orginal Track’யை பாடியவர். இவர் இந்த Recovery ஆல்பத்தில் EMINEM கூட சேர்ந்து "Love the way you lie" என்ற பாடலை பாடியுள்ளார். என்னமா இருக்கு தெரியுமா சார், நீங்களே ஒருமுறை கேட்டுப்பாருங்கள். அதன் லீங்க் கீழே,

நந்தலாலா

“அங்காடித்தெரு” திரைப்படத்தை அடுத்து நான் மிகவும் எதிர்பார்த்த படம், மிஷ்கினின் “நந்தலாலா”. திரைப்படம் முழுவதும் தயாராகியும், கிட்டத்தட்ட கடந்த ஒன்றரை வருடங்களாக திரைக்கு வரமுடியாத நிலையில் இருந்தது. கடைசியாக வரும் 20ம் தேதி வெளிவர இருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றது.


”அஞ்சாதே” திரைப்படத்தை குறைந்தது ஆறு முறையாவது முழுமையாக பார்த்திருப்பேன். நான் எந்த திரைப்படத்தையும் ஒரு முறைக்கு மேல் பார்ப்பது இல்லை. ஆனால், அஞ்சாதே திரைப்படம் என்னுல் ஏற்படுத்திய அதிர்வு, என்னை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டியது. ”திரைப்படத்தில் வரும் மொட்டை வில்லன், பூ விற்க்கும் கிழவி, எப்பொழுதும் சித்தியை திட்டிக்கொண்டு இருக்கும் குருவி, ஒயின் ஷாப்பில் வேலைப்பார்க்கும் அந்த சிறுவன், மனைவியின் தலையை வெட்டி காவல்நிலையத்துக்கு எடுத்துவரும் கணவன், அப்பாவிடம் “என்னை பார்க்காதீங்க பா” என்று சொல்லும் கைலியோடு நடுரோட்டில் நிற்க்கும் பெண், என்கவுண்டருக்காக தன் விரலை தானே சுட்டுக்கொள்ளும் போலிஸ்” இப்படி சின்ன சின்ன கதாபாத்திரங்களுக்கு மிஷ்கின் தந்த முக்கியத்துவமே என்னை மீண்டும் திரைப்படத்தை பார்க்க தூண்டியது. அந்த பூ விற்க்கும் கிழவியை கண்டிப்பாக யாராலும் மறக்க முடியாது.

சமீபத்தில் ஒரு ஹிந்தி நண்பர் “இது வரை தமிழில் எதாவது சீரியஸ் திரைப்படம் வந்துயிருக்கா??” என்று கேட்டார். நான் சிறிதும் யோசிக்காமல் சொன்ன பதில் “அஞ்சாதே”. ஏனோ அந்த நேரத்தில் ”கற்றது தமிழ்” திரைப்படம் கூட நினைவுக்கு வரவில்லை.
மிஷ்கினுக்கு புத்தகங்கள் மிகவும் பிடிக்கும் என்று அறிந்தபோது, அவர் மீது இருந்த மதிப்பு கொஞ்சம் அதிகமாகிவிடட்து. புத்தகங்களை (இலக்கிய புத்தகங்களை) படிக்கும் தமிழ் இயக்குனர்கள் மிகவும் குறைவு, விரல் விட்டு எண்ணிவிடலாம்.

மிஷ்கினின் பேச்சை இரண்டு முறை நேரடியாக கேட்டு இருக்கிறேன். இரண்டுமே புத்தக வெளியீட்டு விழா. ஒரு விழாவில் “நல்ல புத்தகங்கள் பற்றியும், நல்ல திரைப்படங்கள் பற்றியும் தொடர்ந்து எல்லாரிடமும் பேசுங்கள். அப்பொழுதுதான் அது எல்லாருக்கும்,சென்று அடையும்” என்றார். மற்றோரு முறை “Wolf Tottem" புத்தகத்தைப்பற்றி புகழ்ந்து பேசினார், ஏனோ என்னால் அந்த புத்தகத்தை இருபது பக்கங்கள் தாண்டி படிக்க முடியவில்லை.

தினமலர் வாரமலரில் மிஷ்கின் ஒரு தொடர் கட்டுரை எழுதி வந்தார். இது திருச்சி பதிப்பில் வெளிவந்தது. அதில் படித்த ஒன்று இன்னும் என் நினைவில் இருக்கிறது “சித்திரம் பேசுதடி படத்தில் வரும் அப்பா கேரக்டர் எப்பொழுதும் எதையாவது துடைத்துக்கொண்டு இருப்பார். அவர் மனதில் அழுக்கு இருந்தது, அதை சுத்தம் செய்வதற்க்காகவே அவர் எப்பொழுதும் துடைத்துக்கொண்டு இருப்பது போல் உருவாக்கியிருந்தேன்”.

எத்தனை இயக்குனர்கள் இதை போல் கதாபாத்திரஙகளை கூர்மையாக உருவாக்குகிறார்கள்??. போன வாரம் நான் பார்த்த ஒரு திரைப்படத்தில் “சந்தானமும், கருனாஸும்” விஞ்ஞானிகள். கொஞ்சமாவது விஞ்ஞானி போல அவர்கள் கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கலாம். அப்படி இருந்தும் அவர்கள் ஒன்றும் நடிக்க தெரியாத நடிகர்கள் அல்ல. அவர்கள் என்ன செயவார்கள் பாவம், இயக்குனர் என்ன சொல்கிறாறோ அதைப்போல்தானே நடிக்க முடியும்.  

நான் இதுவரை எதிர்பார்த்து போன எந்த திரைப்படமும் நன்றாக இருந்ததில்லை. “நந்தலாலா” வெற்றி அடைய வாழ்த்துவதை தவிர, வேறு என்ன என்னால் செய்ய முடியும்??.

வாழ்த்துக்கள்.

Thursday, October 7, 2010

இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் - II

ஒர் எதிர்வினை

வணக்கம் சார். என் பெயர்தான் அசோக். " மிகவும் பயம் கொண்ட, தன்னம்பிக்கையற்ற, ராசியில்லாத, தெளிவாக பேசத்தெரியாத ஒரு மனிதன்" என்று போன பதிவில் சரவணா எழுதியிருந்தானே, அது என்னைப்பற்றிதான்.

அவன் என்ன சார் சொல்றது. நான் சொன்றேன் சார். "நான் மிகவும் பயம் கொண்ட, தன்னம்பிக்கையற்ற, ராசியில்லாத, தெளிவாக பேசத்தெரியாத ஒரு மனிதன்". இப்படி சொல்வதில் எனக்கு எந்த ஒரு வெட்கமும் இல்லை சார். யாரு சார், இங்கே பயப்படல, இந்த சென்னையில் இருக்கிற எல்லாருமே எப்பொழுதும் பயந்துக்கொண்டுதான் இருக்காங்க. அவர்கள் கண்களின் எப்பொழுது ஒரு பயம் தெரிகிறது. ஒருவனின் கண்களை வைத்தே அவன் சென்னைவாசியா?? இல்லையா?? என்று கண்டுப்பிடித்து விடலாம். நம்பிக்கையில்லை என்றால், உங்கள் கண்களை நீங்களே ஒருமுறை  கண்ணாடியில் பாருங்கள். கண்ணாடியில் தெரியும் உங்கள் பிம்பத்தைக்கூட, உங்கள் கண்கள் சந்தேகித்து பார்க்கும். சந்தேகம் தான் சார், பயத்திற்க்கு முதல் காரணம்.

என்னைப்பற்றி தொடர்ந்து பத்து பதிவுகள் எழுதபோவதாக சரவணா சொல்லியிருக்கான். அவன் யாரு சார், என்னைப்பற்றி எழுதுவதற்க்கு. நான் எழுதுகிறேன் என்னைப்பற்றி, எந்தவொரு மிகையும் இல்லாமல், உள்ளது உள்ளபடி. ஒன்றை  மிகைப்படுத்தி எழுதுவதற்க்கு சரவணாவிற்கு நிகர் சரவணாவேதான். சென்ற பதிவில்கூட பாருங்கள், ஒரு ரூபாய்காக கண்டக்டரை  வில்லன் போல் சித்தரித்துவிட்டான்.  நான் சொல்றேன் சார், அன்னைக்கு உண்மையாக என்ன நடந்து என்று.

கலெக்டர் நகரில் இருந்து சி.ம்.பி.டி'க்கு டிக்கெட் விலை, நான்கு ஐம்பது. மீதி ஐம்பது காசு அவர் எனக்கு தரவேண்டும். கண்டக்டரும் பை முழுவதும் தேடிப்பார்த்தார், ஐம்பது காசு நாணயமே இல்லை, எல்லாம் ஐந்து ரூபாய் நாணயம்தான். நம்ம கவர்மெண்ட் இந்த ஐம்பது காசு நாணயத்தையே இப்பொழுது அடிப்பதில்லை  போல இருக்கு. கண்டக்டர் தேடி பார்த்து கிடைக்காதால், நானும் சில்லரையை கேட்காமல் விட்டுவிட்டேன். இதுதான் சார் நடந்தது.

இதை எப்படிலாம் மிகைப்படுத்த வேண்டுமோ அப்படிலாம் மிகைப்படுத்தி இந்த சரவணா  எழுதிவிட்டான்.

இதைப்பற்றி அவனிடம் கேட்டால், அவன் சொல்வான் "இப்படி எழுதுனாதான் படிக்க நல்லாயிருக்கும் டா". ஙோத்தா, அதற்க்கு என்னைப்பற்றியா எழுதவேண்டும். சாரி சார், என்னை  அறியாமல் கெட்டவார்த்தை சொல்லிவிட்டேன்.

நீங்கள் ஒன்றை நோட் செய்தீர்களா, எங்கே எல்லாம் அவனைப்பற்றி எழுதுகிறானோ அப்பொழுது எல்லாம் ஏதோ அவன் மட்டும்தான் இந்த உலகத்தில் நல்லவன் என்பதுபோல் எழுதிவிடுவான். சரிவிடுங்கள், கொஞ்சம் பேரின் எண்ணங்கள் அப்படி. இந்த உலகத்திலேயே அவர்கள் மட்டும்தான் நல்லவர்கள் என்ற நினைப்பு.

சரி சார், உங்கள் நேரத்தை நான் இதற்குமேல் சோதிக்கவிரும்பவில்லை. மீண்டும் அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Wednesday, October 6, 2010

இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன்

"மிகவும் பயம் கொண்ட, தன்னம்பிக்கையற்ற, ராசியில்லாத, தெளிவாக பேசத்தெரியாத ஒரு மனிதன்". அசோக்கைப் பற்றி இதற்குமேல் சுறுக்கமாக சொல்ல முடியாது. இது அசோக்கை பற்றிய கதை. இப்படி எந்த ஒரு சுவராசியம் இல்லாத அவனைப்பற்றி எப்படி ஒரு கதை  எழுத முடியும் என்று கேட்கிறீர்களா??. நீங்கள் கேட்கலாம். உங்களுக்கு அந்த உரிமை  இருக்கிறது. கேள்வி கேட்பது நம் உரிமை. ஆனால் அசோக்குக்கு தான் கேள்வி கேட்கவே தெரியாது. இன்று பஸ்ஸில் கூட நான்கு ரூபாய் டிக்கெட்க்கு அசோக் ஐந்து ரூபாய் கொடுத்தான், மீதி ஒரு ரூபாயை கண்டக்டர் தரவில்லை. அப்பொழுது கண்டக்டர், ஒரு பயணியிடம் ஏதோ ஒரு காரணத்திற்க்காக வாக்குவாதம் செய்துக்கொண்டு இருந்தார். பஸ் ரொம்ப கூட்டமாக வேறு இருந்ததால் பாவம் என்று அவனும் கேட்கவில்லை. ஆனால். இந்த பாவம் எல்லாம் நம்மை  நாமே சமாதானம் செய்துக்கொள்ளதான். அவன் அந்த இடத்தில் மீதி ஒரு ரூபாய் கேட்டு இருக்க வேண்டும். எங்கே கண்டக்டர் எதாவது சொல்லிவிடுவாரோ என்ற பயம் அவனுக்கு. 

என்னடா??, என்ன என்னமோ எழுதுறான். ஆனால் இப்படி பயந்தவனா இருக்கான் என்று நினைக்கிறீர்களா???.  உண்மையாகவே இதுதான் அசோக். இந்த தைரியம் எல்லாம் எழுத்தில் மட்டும்தான். அங்குதான் அவனை யாரும் கேள்வி கேட்க முடியாதே??. (அசோக் ஒரு வலைப்பதிவில் எழுதிக்கொண்டு இருக்கிறான் என்பதை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்)

அவனின் Orkut Profile'லும் இப்படிதான். கொஞ்சம் Terror'ஆக தமிழில் எழுதியிருப்பான். இதைப்பார்த்த அவன் நண்பனின்  நண்பன் ஒருவன், அசோக்கை கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்று ஒன்றைக்காலில் நின்று இருக்கிறான். நண்பனும் அவனிடம் "அசோக் எல்லாம் அந்தளவு worth இல்லை" என்று எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லையாம். அவனை  கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று ஒரே முடிவில் இருந்திருக்கிறான். ஒரு சேகுவரா படத்தை Orkut'ல் போட்டது தப்பாக போய்விட்டது.

சென்ற முறை நாகூர் சென்றபோது, அசோக்கிடம் அவன் நண்பன் அவனை அறிமுகம் செய்து வைத்தான். ஒரு பத்து நிமிடம்தான் பேசியிருப்பான், அதற்குள் ஒரு இருபது தடவையாவது அவன் அசோக்கிடம் கேட்டுவிட்டான் "நீங்கள்தான் உண்மையாகவே அந்த Orkut Profile ஓனரா??" என்று. அந்த பத்து நிமிட உரையாடலோடு அவர்கள் நட்பு முடிந்துவிட்டது. அதன்பிறகு அவன் அசோக்கின் நண்பனிடம் ரொம்ப வருத்தப்பட்டு இருப்பான் போல. "அசோக்கை ரொம்ப நம்பியதாக".

இதற்க்கு எல்லாம் அசோக் என்ன சார் செய்ய முடியும். அவன் சின்னவயதில் இருந்தே வளர்ந்தது அப்படி. இப்பொழுது உங்கள் வீட்டு முன்னால் ஒரு கொலை  நடக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்வீர்கள். அட்லீஸ்ட் போலீஸ்'காவது ஒரு போன் செய்து சொல்வீர்கள அல்லவா. ஆனால் அசோக்கின் அப்பா அப்படி இல்லை, வீட்டை பூட்டி உள்ளேயே இருந்துக்கொள்வார், பின்னால் போலிஸ் வந்துகேட்டால் கூட, அந்த நேரத்தில் நாங்கள் குடும்பத்தோடு முருகன் கோயிலுக்கு போயிருந்தோம் என்று சொல்லிவிடுவார். இது உண்மையாக நடந்தது.  அப்பொழுது அசோக் பனிரெண்டு'டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தான். ஒருவன் கத்தியால் குத்தப்பட்டு ரோட்டில் விழுந்தது இன்னும் ஏதோ ஒரு கனவை போல் அவன் நினைவில் இருக்கிறது. மாடியில் இருந்த ஜன்னலோரமாக அசோக் அதைப்பார்த்துக்கொண்டு இருந்தான்.

அப்பறம் இன்னொன்று, ஒருவன் தமிழில் எழுதினால், அவன் தமிழ் பித்தன், தமிழ் தீவிரவாதி என்று படிப்பவர்களே பெயர் வைத்து ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அசோக்  தமிழில் எழுதுவதற்க்கு உண்மையான காரணம் என்னவென்றால், அவனுக்கு சுட்டுப்போட்டாலும் அங்கிலம் வராது. தமிழும் அரைக்குறைதான். ஏதோ இப்பொழுதுதான், கொஞ்சம் கொஞ்சமாக எழுத்துப்பிழை  இல்லாமல் எழுத ஆரம்பித்து உள்ளான்.

இப்படிபட்ட அசோக்கைப்பற்றிதான் தொடர்ந்து ஒரு பத்து பதிவுகள் எழுதலாம் என்று இருக்கிறேன். இந்த பதிவில் அவனின் பயத்தைப்பற்றி பார்த்துவிட்டோம், இனி அடுத்தப்பதிவில் அவன் ராசியைப்பற்றி  பார்ப்போம்.

Tuesday, October 5, 2010

எந்திரன் & Peepli live

"என்ன, எந்திரன் படத்தைப்பற்றி இன்னும் எழுதல??" என்று கேட்ட நண்பனுக்காக இதை எழுதவேண்டியதாக போயிற்று. ஏதோ நம் வலைப்பதிவை படிப்பவர்களே, நம் நண்பர்கள் மட்டும்தான், அவர்கள் ஆசையைக்கூட நிறைவேற்றவில்லை என்றால், பின் எதற்க்காக இந்த வலைப்பதிவு??.

போன சனிக்கிழமை காலை ஆறு மணிக்கு நானும் நண்பனும் சேர்ந்து ஒரு திரைப்படம் பார்த்தோம். அங்கில படத்திற்கு நிகரான பிரமாண்டம், திரைப்படம் முழுவதும் வழிந்து ஓடியது. டைட்டில் கார்டில் "எந்திரன்" என்று பெயர் போட்டார்கள்.

திரையரங்கில் நுழைந்த போது, எனக்கு ஒரு இனம் புரியாத எதிர்ப்பார்ப்பு இருந்தது உண்மைதான். திரையில் "ரஜினிகாந்த்" தோன்றியபோது என் முகத்தில் நூறு வாட்ச் வெளிச்சம் அடித்தது உண்மைதான். திரைப்படம் முடியும்வரை, என் உடம்பு முழுவதும் ரத்தம் ஒரு புதுவேகத்தில் ஓடியது உண்மைதான். அதற்காக, இவை அனைத்தையும் வைத்துக்கொண்டு எந்திரன் ஒரு சிறந்தப்படம் என்று சொல்லிவிடமுடியாது.

இன்னும் ஒரு நான்கு மாதங்களுக்கு பிறகு இதே படத்தை பார்த்தால் கண்டிப்பாக நமக்கு ஒரு ஏமாற்றம்தான் மிஞ்சும். எந்திரன், தற்பொழுதைய "Hyperworld"க்கு ஏற்ற ஒரு சாதாரண கமர்ஷியல் திரைப்படம். இன்னும் ஒரு வருடம் கழித்து பார்த்தால், நம்மை அறியாமல் நமக்கு ஒரு சிரிப்புதான் ஏற்படும், பழைய ராமராஜன் படங்களை பார்க்கும்போது ஒரு சிரிப்புவருகிறதே, அதேபோல்.

"Over Excitemnet" காரணமாக இந்த திரைப்படத்தை அனைவரும் கொஞ்சம் அதிகமாக புகழ்கிறார்கள். கடைசி 40 நிமிடங்களில் சங்கர் என்ன சொல்லவருகிறார் என்றே புரியவில்லை. திரைமுழுவதும் ரஜினியை காட்டினாலே போதும், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துவிடுவார்கள் என்று சங்கர் நினைத்து இருப்பார்போல. ஆனால், அதுதான் உண்மை. ஒரு சினிமா பார்வையாளனைப் பற்றி, சங்கரை தவிர வேறுயாராலும் இந்தளவு சரியாக புரிந்துக்கொள்ள முடியாது.

***************************************************************************
இந்தவாரம் நான் பார்த்த இன்னொரு படம் "Peepli live". அங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு, Black Humour. தமிழில் பகடி என்று சொல்லலாம். "Peepli Live" ஒரு பகடி திரைப்படம். தற்பொழுதைய அரசியலையும், தொலைக்காட்சிகளையும், ஊடகங்களையும் இதற்க்குமேல் கிண்டல் செய்ய முடியாது.

"தற்கொலை செய்துக்கொண்டால் ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும் என்று கேள்விப்படும் ஒரு விவசாயி, தற்கொலை செய்துக்கொள்ள முடிவு செய்கிறான். அந்த கிராமத்தில் இடைத்தேர்தல் நடக்க இருப்பதால், அந்த செய்தி எந்தளவு முக்கியத்துவம் பெறுகிறது. அதை  வைத்து எத்தனைப்பேர் லாபம் சம்பாதிக்கிறார்கள். கடைசியில் அந்த விவசாயி தற்கொலை செய்துக்கொண்டானா?? " இதுதான் கதை.

தற்பொழுதைய Reality Show'களுக்கும், T.V News'க்கும் எந்த ஒரு வேற்றுமையும் இல்லாமல் போய்விட்டது. எல்லாவற்றிலும் நம் மக்கள் ஒருவித மசாலாவை எதிர்ப்பார்க்கிறார்கள். எல்லாவற்றிக்கும் ஒரு Opinion Poll. அது ஒரு தற்கொலையாக இருந்தாகும் கூட. இவை அனைத்தையும் இந்த திரைப்படம் முழுவதும் பகடி செய்துக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்தப்படத்தை தயாரித்து இருப்பது அமீர்கான். நம் தமிழ் ஹீரோக்கள், இதைப்போல் ஒரு திரைப்படம் தயாரிக்க முன்வருவார்களா??

Sunday, September 26, 2010

சிறிய அன்பு

ஒரு சிறிய அன்பிற்காக இனியும்
நான் காத்துக்கொண்டு
இருக்க தேவையில்லை.

காலையில் பார்த்த எதிர்வீட்டு
குழந்தையின் கையசைப்பில்
அது நிறைந்து வழிந்தது.

பேருந்தின்
பக்கத்து இருக்கை
பயணியின் புன்னகையில்
அது எட்டி பார்த்தது.

ஒரு மூதாட்டிக்கு நடைப்பாதை
கடக்க உதவிய போது
அவள் கண்களில்
அது தெளிவாக தெரிந்தது..

முகம் தெரியாத யாரோ
ஒருவர் எழுதிய பின்னூட்டத்தில்
கூட அது இருந்தது.

சிறிய அன்பின் உண்மையான
இருப்பிடத்தை இப்பொழுது
கண்டுக்கொண்டேன்.

இனியும் அந்த சிறிய அன்பிற்காக
அவளிடம்
கைக்கட்டி நிற்க தேவையில்லை,

அந்த சிறிய அன்பு என்னைச்சுற்றி
எல்லா இடத்திலும்
நிறைந்திருக்கிறது.

நேற்று நான் குடித்த மதுவின்
கடைசி துளியில்
அது ஒளிந்துக்கொண்டு இருந்தது  போல.

Saturday, September 25, 2010

கடவுளே கணபதி - மீள்பதிவு

அசோக்கின் அலுவலகத்தில் ஆறு மாதங்களுக்கு முன்னால்தான் அவள் வேலைக்கு சேர்ந்தாள். பார்ப்பதற்கு அழகாக இருந்தாள். முகத்தில் எப்பொழுதும் ஒரு பிரகாசம் இருக்கும். பெளர்ணமி அன்று பிறந்து இருப்பாள் போல.

ஒரு முறை பார்த்தால் இன்னொருமுறையும் பார்க்க தூண்டும் முகம். முகமாவது ஒருமுறைதான் பார்க்க தூண்டும், மற்றவைலாம் அவளை தொடர்ந்துப் பார்த்துக்கொண்டே இருக்க வைக்கும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் 30-28-32 என்று சொல்லலாம். ஊர் ஏதோ மதுரை பக்கம். மதுரை தியாகராஜா கல்லூரியில் B.E முடித்துவிட்டு, campus interview'வில் வேலைக்கு சேர்ந்து இருந்தாள். பார்ப்பதற்கு அமைதியான பெண்னை போல் காட்சியளித்தாள்.

அடுத்த ஒரு மாதத்திற்கு அலுவலகத்தில் இருந்த முக்கால்வாசி ஆண்கள் அவளைப் பற்றிதான் விசாரித்துக் கொண்டு இருந்தார்கள். அசோக்கின் குரூப்பில், சதிஷ் தான் அவளிடம் முதலில் பேசத் தொடங்கினான். பேசிய அடுத்த நாளே அசோக்கிடம் சதிஷ் சொன்னது “ ரொம்ப நல்ல பொண்ணுடா, நல்லா பேசுது, அப்பா Hydrabad'ல வேலை செய்கிறாராம் “.

அடுத்து அவளிடம் பேச தொடங்கியவன் பிரதாப். பிரதாப் கொஞ்சம் ஸ்டைலான ஆள். எப்பொழுதும் ipod'ல எதாவது pop பாடலை கேட்டுக்கொண்டே இருப்பான். பிரதாபும் அவளும் ஒரு நாள் Cafeteria’ல பேசிக்கொண்டு இருப்பதை அசோக் பார்த்தான். அடுத்த நாள் பிரதாப் அசோக்கிடம் சொன்னது “ டேய் அவளுக்கும் Akon பாட்டுத்தான் பிடிக்குமாம். ‘ Sorry - Blame it on me ' பாட்டை அப்படியே பாடுறாடா, ரொம்ப நல்ல பொண்ணுடா “.

இப்படி அசோக்கின் நண்பர்கள் ஒவ்வொருவரும் அவளிடம் பேசுவதில் தீவிரமாக இருந்தனர். ஏனோ அசோக்கிற்கு அவளிடம் பேசும் சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை. எற்கனேவே அசோக் சில பிரச்சனைகளில் இருந்ததால் அவன் அவளிடம் பேச எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

பிரதாபும், சதிஷ்’ம் தொடர்ந்து அவளிடம் பேசிக்கொண்டு இருந்தார்கள். அடுத்த மூன்று மாதத்தில் அவர்களுக்குள் சணடையே வந்துவிட்டது யார் அவளிடம் பேசுவது என்று. பிரதாப்’ம் சதிஷ்’ம் ஒவ்வொரு முறை பார்த்துக்கொள்ளும் பொழுதும் பகைவர்களை போல் பார்த்துக்கொண்டார்கள்.

அடுத்த சில நாட்களில் சதிஷ் அசோக்கிடம் சொன்னான் “ மச்சி, நேற்று நானும் அவளும் Delhi-6 படத்திற்க்கு போனோம்’டா, அதை எப்படியோ இந்த பிரதாப் தெரிச்சுக்கிட்டு அவளுக்கு போன் செய்து டிஸ்டர்ப் செய்றான்’டா. பார்த்துக்கிட்டே இரு, இந்த பிரதாப் ஒரு நாள் என்கிட்ட நல்லா வாங்க போறான்.”

பிரதாப்பிடம் அசோக் இதை பற்றி கேட்ட போது, பிரதாப் சதிஷ் மேல் புகார்களை அடுக்கிக்கொண்டே போனான். அசோகிற்க்கு இந்த போட்டியில் பிரதாப்'தான் வெற்றி பெறுவான் என்று தோன்றியது.

இது நடந்த இரண்டு மாதங்களில் அவள் இந்த இரண்டு பேரிடமும் பேசுவதை குறைத்துக்கொண்டாள். சொல்ல போனால் அவள் இவர்களிடம் பேசுவதே கிடையாது. அவள் தற்பொழுது telecom Project'ல இருக்கும் அரவிந்தனுடம் சுற்றிக்கொண்டு இருப்பதாக அனைவரும் பேசிக்கொண்டனர். அரவிந்தனும் அவளும் காதலிப்பதாக சிலர் சொல்ல அசோக் கேள்விபட்டான்.

இன்று அசோக், பிரதாப், சதிஷ் எல்லாரும் பாரில் உட்கார்ந்து தண்ணியடித்துக் கொண்டு இருந்த போது, சதிஷ் சொன்னான் “ மச்சி, உங்களுக்கு matter தெரியுமா?? அரவிந்தனும், அவளும் நேற்று மாகாபலிபுரம் போய் இருக்காங்க. நான் அப்பவே அவளைப் பற்றி சந்தேகப்பட்டேன். இப்பொழுது conform ஆயிடுச்சு” என்றான்.

இதை கேட்ட பிரதாப் “ ஆமாம்’டா சதிஷ், நான் கூட அவளுடைய college பொண்ணு பவித்ராகிட்ட விசாரித்தேன். அவள் college'லயும் இப்படிதானாம். நமக்குதான் தெரியாம போச்சு.”

ஆறு மாதங்களுக்கு முன்னால் இதே பாரில் சதிஷும், பிரதாப்பும் அவளை தேவதை என்று புகழ்ந்து பேசியது ஞாபகம் வந்தது. அசோக் சிரித்துக்கொண்டான்.

சிறிது நேர அமைதிக்கு பிறகு சதிஷ் மீண்டும் அரம்பித்தான் “சரி பிரதாப், இந்த பவித்ரா எப்படி ??”.

கடவுளே கணபதி!!!!!!!

Sunday, September 19, 2010

Operation Green Hunt

செய்தி 1:

நாள்: 2 Jul 2010

நாமக்கல் அருகே உள்ள ஈஸ்வரமூர்த்தி மலைப்பகுதியில்  "பிளாட்டினம்" இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதால் இந்திய புவியியல் ஆய்வுத்துறை மற்றும் கனிமவளத்துறை ஆய்வு மேற்கொண்டுள்ளது.

செய்தி 2:

நாள்: 6 Apr 2010

சத்தீஷ்கரில் தண்டேவாடே மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 73 சி.ஆர்.பி.எஃப் படையினர் கொல்லப்பட்டனர்.

விளக்கம்:

இந்த இரண்டு செய்திகளுக்கும் உள்ள தொடர்பை அறிந்துக்கொள்வதற்க்கு, முதலில் சத்தீஷ்கரின் தண்டேவாடே மாநிலத்தைப்பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும்.

தண்டேவாடே மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று. இங்கு பின்தங்கிய என்றால், படிப்பறிவு சதவீதம் மிகவும் குறைவான, காடுகள் நிறைந்த வனப்பகுதி என்று சொல்லாம். அந்த பகுதி மக்களை மேம்படுத்த அரசாங்கம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. " அந்த பகுதி மக்களுக்குப் படிப்பறிவை வளர்பதுதான் அந்த திட்டம் " என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் கண்டிப்பாக இந்திய நாட்டில் வசிக்கும் தமிழராக இருக்க முடியாது.

தண்டேவாடே மாவட்ட மக்களுக்காக அறிமுகம் செய்த திட்டத்தின் பெயர் "Operation Green Hunt". அதாவது அந்த மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியான சுமார் " 74 ஆயிரத்து 836 ஏக்கர் " நிலத்தை தனியார் நிறுவனங்களுக்கு (டாடா மற்றும் எஸ்ஸார்) கொடுப்பது. தனியார் நிறுவனங்கள் அந்த நிலத்தில் தங்களுக்கு தேவையான் தொழில்சாலைகள் அமைத்து அந்தப் பகுதி மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். இந்த 74 ஆயிரம் ஏக்கர் தவிர்த்து மிச்சம் உள்ள இடத்தில் அந்த பகுதி மக்கள் சந்தோஷமாக இருக்கலாம். இதுதான் "Operation Green Hunt".

சரி, அந்த வனப்பகுதியில் ஏன் தொழில்சாலைகள் அமைக்க வேண்டும்??. ஏனென்றால் அந்த பகுதிதான் கனிம வளம் நிறைந்த பகுதியாகும்.

அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் எல்லாம், பழங்குடி மக்கள். அதாவது காலம் காலமாக அங்கேயே வாழ்பவர்கள். நம் சென்னைவாசிகள் போல் அல்ல இவர்கள், ஒரு லட்சம் ரூபாய் அதிகமாகக் கிடைத்தால் நிலத்தை விற்றுவிட்டு போக.

74 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை பழங்குடியினரிடம் இருந்து கைப்பற்ற அரசால் முடியவில்லை. 5 சதவீத இடம்தான் அரசால் கையகப்படுத்த முடிந்தது. இதுவே அரசாங்கம் வழு கட்டாயமாக கைப்பற்றியதுதான். தங்களை கொடுமைப்படுத்திய அரசுக்கு எதிராக பழங்குடியினர் துப்பாக்கி எடுத்தனர். இதற்க்கு  மாவோயிஸ்டுகள் உதவி செய்தனர். தற்பொழுது அந்தப்பகுதியில் மாவோயிஸ்டுகளாக இருக்கும் முக்கால்வாசி பேர் பழங்குடியினரே, அவர்கள் யாரும் பிறக்கும்போதே மாவோயிஸ்டுகளால பிறக்கவில்லை. தங்களையும், தங்கள் நிலத்தையும் பாதுகாக்க அவர்களுக்கு வேறு வழிகள் தெரியவில்லை.

முடிவுரை:

விரைவில், இந்திய அரசாங்கத்துக்கு ஒரு விசயம் தெரிய வரலாம். அதாவது நாமக்கல் அருகே உள்ள ஈஸ்வரமூர்த்தி மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் பின்தங்கி உள்ளனர் என்று. அரசு அவர்களை மேம்படுத்த "Operation Green Hunt - 2" என்ற திட்டத்தை கொண்டுவரும். தமிழக அரசாங்க குடும்பத்திற்க்கு இது ஒரு 'ஜாக்பாட்' பரிசுதான், இதன்மூலம் "எந்திரன்" போல இன்னும் பல சமுதாய அக்கறைக்கொண்ட படங்கள் எடுக்கலாமே!!.

ஆனால் இப்படி எல்லாம் நடந்தால், ஏற்கனேவே கொந்தளித்து இருக்கும் தமிழர் சிலர் சும்மா இருக்க மாட்டார்கள். தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் உருவாகும் நாள் மிக தொலைவில் இல்லை.

பின்குறிப்பு 1:

1854 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ·ப்ராங்க்லின் பியர்ஸ் செவ்விந்திய நிலப்பகுதியை வாங்குவதற்காக ஆட்களை அனுப்பினார். அப்பொழுது செவ்வியந்தியத் தலைவன் ஸியட்டில் சொன்ன பதில், (தமிழில் : சுகுமாரன் - உயிர்மை)

"நான் ஒரு காட்டுமனிதன்; என்னால் வேறு வகையில் புரிந்துகொள்ள முடியவில்லை. புல்வெளிகளில் செத்து அழுகும் ஆயிரக்கணக்கான எருமைகளை நான் பார்த்திருக்கிறேன். பாய்ந்து ஓடும் ரயிலிருந்து வெள்ளைக்காரனால் சுட்டுக்கொல்லப்பட்டவை உயிர் வாழ்வதற்காக மட்டுமே நாங்கள் கொல்லும் எருமைகளை விட, புகை கக்கும் இரும்புக் குதிரைகள் எப்படி முக்கியமானவை என்று எனக்குப் புரியவில்லை. நான் ஒரு காட்டு மனிதன்.

விலங்குகள் இல்லாமல் என்ன மனிதன்? எல்லா விலங்குகளும் இந்த பூமியிலிருந்து போய்விடுமானால், பிசாசுத் தனிமையில் மனிதன் இறந்து போவான். விலங்குகளுக்கு நேர்வதுயாவும் தாமதமின்றி மனிதனுக்கும் நேரிடும். எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை.

எங்கள் காலடியில் உள்ள நிலம் எங்களுடைய மூதாதையரின் சாம்பல் என்பதை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும். எனில் அவர்கள் நிலத்தை மதிப்பார்கள். எங்களுடைய உடன்பிறந்தவர்களின் வாழ்க்கையால் வளமாக்கப்பட்டது இந்த பூமி என்று உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லுங்கள். இந்த பூமி எங்கள் தாய் என்று எங்களுடைய குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்திருந்தோம் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். பூமிக்கு எது நேர்ந்தாலும், அது பூமியின் பிள்ளைகளுக்கும் நேரிடும். நிலத்தின் மீது துப்பும்போது மனிதன் தனது உடம்பின் மீதே துப்பிக் கொள்கிறான்.

எங்களுக்குத் தெரியும் இது: பூமி மனிதனுக்கு உரிமையானதல்ல; மனிதன் பூமிக்கு உரிமையானவன். எங்களுக்குத் தெரியும் இது : ரத்தம் ஒரு குடும்பத்தை ஐக்கியப் படுத்துவதுபோல எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. பூமிக்கு எது நேர்ந்தாலும் அது பூமியின் பிள்ளைகளுக்கு நேரிடும். வாழ்க்கை வலையை நெய்தவன் மனிதனல்ல. அவன் அதில் வெறும் கண்ணி. வலைக்குச் செய்வது எதுவாயினும் அவன் தனக்கே செய்து கொள்கிறான்"


இதன் முழுக்கட்டுரைக்கு இங்கே செல்லவும்.

பின்குறிப்பு 2:

கிழே உள்ள புகைப்படம் சமீபத்தில் நண்பன் திருமணத்திற்காக பொன்னமராவதி சென்றபோது எடுத்தது. இந்தப் புகைப்படத்தில் உள்ளது போல "சாவி வாங்கிக்கொண்டு திருடும் திருட்டுதான் இங்கு நடந்துக்கொண்டு இருக்கிறது".

Thursday, September 16, 2010

படித்ததில் பிடித்தது

உங்கள் அனைவருக்குமே தெரியும் நான் சாரு நிவேதிதாவின் தீவிர ரசிகன் என்று. என்னூல் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் சாரு, அந்தவகையில் அவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். அவருடைய எத்தனையோ பதிவுகளை "படித்ததில் பிடித்தது" என்று இந்த வலைப்பதிவில எழுதிவிட்டேன். இனிமேல் அவரைப் பற்றி எழுதவே கூடாது என்றுதான் முடிவு செய்திருந்தேன். ஆனால் என்ன செய்ய??. "தான் சொல்லவருவதை அவரைவிட யாராலும் இந்தளவு தெளிவாகவும் ஆணித்தரமாக எழுதமுடியாது."

அவருடைய சமீபத்திய "அராத்து, கருந்தேள், கேள்வி பதில்" போன்ற பகுதிகள் ஒருவித சலிப்பைத்தான் எனக்கு தந்தது. "அனைவரும் சொல்வதுபோல், நம் சாரு உண்மையாகவே மாறிவிட்டாரா??" என்று ஒரு சந்தேகம் கூட வந்தது. எது எப்படியோ, அவர் தற்பொழுது எழுதியிருக்கும் "என்ன நடந்து கொண்டிருக்கிறது இங்கே?" என்ற பதிவுக்காகவே அவரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடலாம்.

சாருவின் "என்ன நடந்து கொண்டிருக்கிறது இங்கே?" பதிவில் இருந்து சிலவரிகள் கீழே,

(இது சாரு கட்டுரையின் ஒரு பகுதியே, தயவு செய்து அந்த கட்டுரை முழுவதையும் இங்கு கிளிக் செய்துப்படிக்கவும். நானும் ரஜினியின் ரசிகன் என்பதையும்  இங்கே சொல்லிக்கொள்கிறேன்)

"தன் மகள் திருமணத்துக்கு ரஜினிகாந்த் இதுவரை அவரைத் திட்டிய அரசியல் தலைவர்களுக்கெல்லாம் நேரில் போய் பத்திரிகை கொடுத்திருக்கிறார். ஆனால் தன் ரசிகர்களை மட்டும் திருமணத்துக்கு வர வேண்டாம் என்று சொல்லி விட்டார். அவரை எதிர்த்த திருமாவளவனோடும் பாமக தலைவர்களோடும் சிரித்துக் கொண்டு போஸ் கொடுக்கிறார். ”அப்படியானால், அப்போது அந்தக் கட்சித் தொண்டர்களோடு மல்லுக்கு நின்ற எங்கள் நிலை என்ன?” என்ற அதிர்ச்சி அலை ரசிகர்களிடையே எழுந்தது. உடனே ரஜினியும் தன் ரசிகர்களை தனியாக அழைத்து, அவர்களுக்குத் தனியாக விருந்து வைக்க விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார். ரஜினி ரசிகர்களுக்கு இதை விட வேறு அவமானம் வேண்டாம்.

ரஜினி என்றுமே தன் ரசிகர்களை மதித்தது கிடையாது. அப்படி இருக்கும் போது ரசிகர்கள் ஏன் அவரை மதிக்க வேண்டும்?  ரஜினியின் படம் வந்தால் எல்லோரையும் போல் பார்த்து விட்டுப் போக வேண்டியதுதானே? ஏன் சொந்தக் காசை செலவழித்து ரசிகர் மன்றம் வைக்க வேண்டும்?  அவர் படம் வெளிவந்தால் ஏன் அவருக்கு 100 அடி உயர கட் அவுட் வைத்து பீர் அபிஷேகம் செய்ய வேண்டும்?  ரஜினி ’என் வீட்டுக்குத் திருமணத்துக்கு வராதே’ என்று சொல்வது போல், ’நாங்களும் உங்கள் படத்தைப் பார்க்க மாட்டோம்’ என்று கூட சொல்ல வேண்டாம்; குறைந்த பட்சம், படம் வந்த உடனே 500 ரூ. டிக்கட் கொடுத்துப் பார்க்காமல் இரண்டு வாரம் கழித்து 50 ரூ. கொடுத்துப் பார்க்கலாமே?  நம் மாமனோ மச்சானோ தன் வீட்டுத் திருமணத்துக்கு அழைக்காவிட்டால் அடுத்து அவர்கள் வீட்டு விசேஷத்தை ‘பாய்காட்’ செய்கிறோம் அல்லவா?  இதே ரோஷத்தை ரஜினியிடம் காட்டினால் என்ன?

லட்சக் கணக்கான ரசிகர்களை சமாளிக்க முடியாது என்று அவர் சொல்ல முடியாது.  அரசியல்வாதி கூட தன் தொண்டர்களை ’வாருங்கள் வாருங்கள்’ என்று அழைத்து பிரம்மாண்டமாய் கூட்டம் கூட்டி பிரியாணி பொட்டலம் கொடுக்கிறார்.  அரசியல்வாதிக்கு செல்வாக்கு இருக்கிறது, செய்கிறார் என்று பார்த்தால் ஆன்மீகவாதியும் பல்லாயிரக் கணக்கான பக்தர்களை ஒரே இடத்தில் கூட்டுகிறார். அப்படியிருக்கும் போது ரஜினியால் மட்டும் ஏன் முடியாது?  காரணம், மனம் இல்லை.  மனமிருந்தால் மார்க்கமுண்டு.

இன்னொரு கொடுமை.  நக்சலைட்டுகள் நான்கு போலீஸ்காரர்களைக் கடத்தி வைத்துக் கொண்டு, அதில் ஒரு போலீஸ்காரரைக் கொன்று போட்டிருக்கிறார்கள். அதே நாளில் இந்தியாவின் ஹோம் மினிஸ்டர் இங்கே சென்னையில் எந்தப் பதற்றமும் இல்லாமல் ரஜினி வீட்டுக் கல்யாணத்தில் விருந்து சாப்பிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்."


 (இது சாரு கட்டுரையின் ஒரு பகுதியே, தயவு செய்து அந்த கட்டுரை முழுவதையும் இங்கு கிளிக் செய்துப்படிக்கவும்)

Friday, September 10, 2010

ஒரு கிறுக்கல்

அவளுக்கு நான் ஒரு முத்தம் கொடுக்கவேண்டும். மீண்டும், மீண்டும் எனது காதலை, சொற்களால் அவளுக்கு புரியவைக்க விரும்பவில்லை. ஒரே ஒரு முத்தம் போதும், அந்த ஒரு முத்தத்தில் எனது காதல் முழுவதையும் அவளுக்கு புரியவைத்து விட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

முதலில் அந்த முத்தத்திற்கு அவளை சம்மதிக்க வைக்கவேண்டும். ஒரு முத்தத்தால் அவள் கற்புக்கு எந்த ஒரு பாதிப்பும் வந்துவிடாது என்பதை அவளுக்கு தெளிவுபடுத்த வேண்டும். ஒரு முத்தத்தால, கருவில் குழந்தை உருவாகிவிடும் என்று நம் தமிழ்சினிமாக்கள் உருவாக்கியிருக்கும் மாய தோற்றத்தை அவளிடம் இருந்து உடைக்க வேண்டும்.

எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒரே முத்தத்தால் என் காதலை அவளுக்கு புரியவைக்கமுடியும் என்று. என்னையே அவளுக்கு முழுவதுமாக தந்துவிட முடியும் என்று. என்னை அவள் புரிந்துக்கொள்ள முடியும் என்று. எப்படி ஒரே முத்தத்தில் இவை எல்லாம் சாத்தியம் என்று கேட்கிறீர்களா??. நான் இதைபற்றி ஒரு நொடிகூட சந்தேகப்படவில்லை. ஆகவே அதை பற்றி நான் யோசிக்கவே விரும்பவில்லை.

அந்த முத்தத்தை எங்கே, எப்பொழுது, எப்படி தரவேண்டும் என்பதை நான் முன்கூட்டியே முடிவு செய்துவிட்டேன். ஒரு நாடகத்தின் ஒத்திகையை போல அவை என் மனக்கண்ணில் எப்பொழுதும் இருக்கிறது. அந்த முத்தம் இதுவரை எந்த ஒரு காதலனும் தன் காதலிக்கு தராத ஒன்றாக இருக்கும்.

இது எத்தனையோ அங்கிலப் படங்களை பார்த்து உருவாக்கிய முத்தம் அல்ல. முற்றிலும் என் உணர்ச்சிகளால், என் உண்மையான காதலால் உருவாக்கபட்ட முத்தம்.

அந்த முத்தத்தை அவள் உதட்டில்தான் தரவேண்டும். அதுவும் முக்கியமாக கீழ் உதட்டில். நாங்கள் முத்தம் தரும்போது, அவள் கைகள் என் பின்தலை முடிகளை கோதிக் கொண்டு இருக்கும். நான் என் ஒரு கையால் அவள் பின்தலையையும், மற்றொரு கையால் அவள் இடுப்பையையும் பிடித்துக்கொள்வேன். அவள் அன்று புடவை அனிந்துவந்தாள், இன்னும் உத்தமம். அப்பொழுதுதான் என் கைகளால் அவள் இடுப்பு பகுதியை முழுமையாக தொட முடியும். இதனால் கைகளுக்கும், இடுப்புக்கும் ஒரு உஷ்னம் பரவும். தோல்கள் உரசும் போதுதான் உண்மையான காதல் வெளிப்படும் என்று நம்புகின்றவன் நான். நீங்கள் நினைப்பது போல் இந்த முத்தத்தை ஒரு விநாடியோ, ஒரு நிமிடமோ, ஒரு மணிநேரமோ தரப்போவது இல்லை. யுகங்கள், யுகங்களாக தர வேண்டும். எதைப்பற்றியும் கவலைப்படாமல், விண்வெளியில், ஆகாயத்தில், மேக கூட்டத்தின் நடுவில், பனிவிழும் மலைகளில், கடல்நீருக்கு அடியில், காற்றில் என்று எல்லா இடங்களிலும், யுக யுகங்களாக தரவேண்டும்.

இது காதல் இல்லை காமம் என்கிறீர்களா?, எனக்கு அதைப்பற்றி கவலையில்லை. காமம் இல்லாத காதல் ஏது??. காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தமே காமம்தானே??. இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், காதலுக்கும் காமத்திற்க்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்துகொள்ள வேண்டியது. அதை பற்றி முழுமையாக தெரிந்துக்கொண்டு என்னிடம் வாருங்கள், என் முழுக்கதையையும் உங்களிடம் சொல்கிறேன். அதுவரை என் காதல், அவளைப்போலவே உங்களுக்கும் புரியாது.

Tuesday, September 7, 2010

ஒரு மனிதன் வாழ்வதற்க்கு தன்னம்பிக்கையை தாருங்கள், பிச்சையை அல்ல

“இந்த பதிவை யார் மனதையையும் புண்படுத்தும் நோக்கில் எழுதவில்லை”
இரண்டு மாதங்களுக்கு முன்னால், வலையில் மேய்ந்து கொண்டு இருந்தபோது. ஒரு பெண் வலைப்பதிவாளர் எழுதிய ஒரு பதிவை படிக்க நேர்ந்தது. அதன் சுருக்கம்

“ கற்றது தமிழ் படத்தின் கதாநாயகன் போல் உண்மையில் யாராவது இருக்கிறார்களா என்று பல நாட்களாக சந்தேகம் இருந்தது. ஆனால், அவரை பார்த்தவுடன் அந்த சந்தேகம் தீர்ந்துவிட்டது. கிட்டத்தட்ட அவர் கற்றது தமிழ் ஜீவா மாதிரியே இருப்பார். சொந்தக்கார பையந்தான். சில நாட்கள் மனநல காப்பகத்தில் கூட வைத்து இருந்தார்கள். இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறார். அவரைப் பார்ப்பதற்கே பாவமாக இருக்கும். தினமும் போனில் அவருடன் பேசிக்கொண்டு இருக்கிறேன். சில நாட்கள் வேலை காரணமாக நான் போன் செய்ய மறந்தால் கூட, அவரே போன் செய்து “என் இன்று போனில் பேசவில்லை” என்று விசாரிக்கிறார். முன் எல்லாம் அவருடன் ரோட்டில் தனியாக நடக்கவே பயமாக இருக்கும். இப்பொழுது எல்லாம் அப்படி இல்லை. ”

இதுதான் அவர் எழுதி இருந்தது. சொன்னால் நம்ப மாட்டீர்கள் ” இந்த பதிவுக்கு நான் பார்த்த போதே 30 பின்னுட்டம் . இப்பொழுது எத்தனை என்று தெரியவில்லை”. அந்த பின்னுட்டம் எல்லாம் இப்படிதான் இருந்தது “ ஒரு மனிதனை திருத்தியதற்க்கு வாழத்துக்கள்” “ சூப்பர்” என்று. அதில் சில அறிவுஜீவிகள் சந்தேகம் வேறு கேட்டு இருந்தார்கள்.

நான் படித்தவுடன் அந்த வலைப்பதிவின் முகவரியை கூட பார்க்காமல் அப்படியே மூடிவிட்டேன்.

நீங்கள் இதைப்படிக்கும் போது உங்களுக்குள் என்னவிதமான எண்ணங்கள் உதிக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், சத்தியமாக எனக்கு தோன்றியது “ அந்த பதிவை எழுதியவரையும், அதற்கு பின்னுட்டம் எழுதியவர்களையும் ஒன்றாக நிற்க்கவைத்து கன்னத்தில் பளார் என்று அறையவேண்டும் ”.

ஒருவர் ஒருவனை தற்கொலைக்கு தூண்டுகிறார். அதற்க்கு பலர் பின்னுட்டம் எழுதுகிறார்கள். இதுதான் எனக்கு தோன்றியது.

நான் இப்படி சொல்வதற்க்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. கண்டிப்பாக ஒரு நாள் அவருக்கும் தெரியவரும், நம் மீது இரக்கப்பட்டு தான் அனைவரும் அன்பு காட்டுகிறார்கள் என்று. அது தெரியவரும்போது அவர் மீண்டும் பழைய நிலையைவிட மோசமாக போக வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் யார் மீதாவது இரக்கப்பட்டு அன்பு செலுத்துகிறீர்கள் என்றால், அது ஒரு பிச்சைக்கு சமம். ஒரு மனிதன் வாழ்வதற்க்கு தன்னம்பிக்கையை தாருங்கள், பிச்சையை அல்ல.

Monday, September 6, 2010

கதைகள்

கடந்த ஒரு மாதமாக எதுவும் எழுத முடியவில்லை. எதைப்பற்றி எழுத ஆரம்பித்தாலும் முதல் வரியை தாண்ட முடியாமல் தள்ளாடுகிறேன். இப்படி கடந்த ஒரு மாதத்தில் எழுத முடியாமல் நின்று போனவையின் எண்ணிக்கை கண்டிப்பாக நாற்பதை தாண்டி இருக்கும். எனக்குள் ஒரு பயமே வந்துவிட்டது, இனி நம்மால் எதுவும் புதிதாக எழுத முடியாதா என்று. அந்த ஒரு பயத்தில் எழுதியதுதான் கடந்த பதிவு. ஏதாவது எழுதியாக வேண்டும், என்று எழுதியது.

அது ஒரு சாதாரணப் பதிவாக இருந்த போதும்,. என்னால் தொடர்ந்து எழுத முடியும் என்ற நம்பிக்கையை எனக்கு அது தந்தது. இப்படி எல்லாவற்றிக்கும் நமபிக்கை ஏற்படுத்த, ஏதோ ஒன்று நமக்கு தேவைப்படுகிறது.

இந்த உலகமே கதைகளால் உருவாக்கபட்டது. ஆதி மனிதன் ஆதாமிடம் தொடங்கியது நமது கதைகள். இந்த உலகத்தின் முதல் கதையின், முதல் கதாநாயகன் அவன். அதன் பின் வந்த ஒவ்வொரு மனிதனுக்கும் நாம் ஒரு கதையை உருவாக்கி வைத்துள்ளோம். ஏன், உங்கள் தாத்தா, பாட்டி பற்றிக் கூட, யாரோ ஒருவர், யாரிடமோ கதை சொல்லிக்கொண்டு இருக்கலாம்.

ஒவ்வொரு மனிதனிடமும், அவனுக்கு மட்டுமே தெரிந்த, அவனைப்பற்றிய கதை ஒன்று இருக்கிறது. அதை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று ஒரு பக்கம் ஏங்குகிறான். இன்னொரு பக்கம், அது யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்று பயப்படுகிறான்.

உங்களுக்கே தெரியாமல், உங்களைப்பற்றி வெளியில் ஒராயிரம் கதைகள் உலாவிக்கொண்டு இருக்கின்றன. நீங்கள் பெண் என்றால், இந்த எண்ணிக்கை லட்சத்தை தாண்ட கூட வாய்ப்பு இருக்கிறது.

கதைகளை போலவே புரளிகளுக்கும் நமக்கு பஞ்சம் இல்லை. புரளிகள் ஒரு கூறிப்பிட்ட காலக்கட்டத்தில் அழிந்துவிடுகிறது. ஆனால், கதைகள் அப்படி அல்ல, அது கால் முளைத்து, கை முளைத்து அந்த காலகட்டத்துக்கு தகுந்தால்போல் தனனை மாற்றிக்கொள்கிறது,

“ தியான வகுப்பில் சேர போகிறேன்” என்று விளையாட்டாக ஒருவனிடம் நான் சொல்ல, கொஞ்ச நாடகளில் “அவன் சாமியாராக மாறி, இப்பொழுது வெள்ளியங்கிரி மலையில் இருக்கிறான்” என்று ஒரு கதை உருவாகி என்னிடமே வந்தது. என்னைப்பற்றி நன்கு அறிந்த சிலர், இந்தக்கதையை எபபடி நம்பினார்கள் என்று இன்னும் எனக்கு வியப்பாகவே இருக்கிறது.

கதைகளை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம். ஒரு கதையை உருவாக்குவதற்க்கு எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை.

இரண்டாம் வகுப்பு படிக்கும் பக்கத்துவீட்டு பையன்கூட, என்னிடம் சொல்ல ஒரு கதை வைத்து இருக்கிறான். “ டோரா ஒரு நாள் காட்டுக்கு போச்சா. அங்கே காணாமல் போச்சு” இப்படித்தான் தொடங்குகிறது அவன்சொல்லும் கதைகள்.

இப்பொழுது என்னிடம் முதல் வரியை மட்டுமே கொண்ட நாற்பதுக்கும் மேற்பட்டக்கதைகள் இருக்கின்றன. இனி அவற்றை வார்த்தைகளால் நிரப்ப வேண்டும். என்னை சுற்றி உள்ள மனிதர்களோடு அந்த கதைகளை இனைக்க வேண்டும். சில உண்மைகளையும், பல பொய்களையும் சொல்லி படிப்பவர்களை கவர வேண்டும். தேவைப்பட்டால், எஸ்.ரா, சாரு, ஆதவன் போன்றோரின் வரிகளை திருடி எனது கதைகளில் இனைக்க வேண்டும். இதை சொல்வதற்க்கு எனக்கு எந்த ஒரு வெட்கமும் இல்லை. யாராலும் சொந்தமாகக் வார்த்தைகளை நிரப்பி, கதைகளை எழுத முடியாது, கண்டிப்பாக யாரோ ஒருவரின் உதவி தேவைப்படுகிறது. இதுதான் உண்மை.

Saturday, September 4, 2010

புரிந்தும் புரியாமலும் - II

”ஹலோ,

“ம். சொல்லு”

“இப்பத்தான் டா, உன் ப்ளாக்’யை படித்தேன். உண்மையாவே அந்த பொண்ணுகிட்ட ‘I Love You” சொல்லிட்டியா??”.

“ஆமாம்”

“அடப்பாவி, அந்த பொண்ணு என்ன சொன்னுச்சு??”

“அதான் எழுதியிருந்தேன்’ல!!, அதைத்தான் சொன்னுச்சு”

”சரி, இதைலாம் ப்ளாக்’ல எழுதுவியா?? உனக்கு அறிவே இல்லையா?? அந்த பொண்ணு படிச்சா, உன்னைப்பற்றி என்ன நினைப்பாள்”

“அவளாம் என் ப்ளாக்’யை படிக்க மாட்டா. படிச்சாலும் அவளுக்கு நான் யாரைப்பற்றி எழுதியிருக்கேனு தெரியாது. அவளை பொருத்தவரை, நான் தினமும் ஒரு பொண்ணுக்கு ’ ‘I Love You’ சொல்றவன்”.

“ஏன்டா, இப்படி ரொம்ப vex ஆகி பேசுற!!.. சரி, நாளைக்கு வீட்டுக்கு வா?. அம்மா வரச்சொன்னாங்க”

“யே, அம்மாகிட்ட எதாச்சும் இதைப்பற்றி சொல்லிட்டியாடி”

”ஹா, ஹா.. ஏன்டா, இந்த பயம் இருக்குதுல, அப்பறம் என் இதைலாம் எழுதுற!!. நான்லாம், அம்மாகிட்ட ஒன்னும் சொல்லல. நீ நாளைக்கு வந்து ஒன்னும் உளறாமல் இருந்தா சரி”

“எனக்கு என்னமோ உன் மீது சந்தேகமா இருக்கு. நான் அடுத்த ஞாயிற்று கிழமை வரேன். நாளைக்கு பசங்க’கூட வெளியில போலாம்னு இருக்கேன்”

”அதுலாம் எனக்கு தெரியாது. ஒழுங்கா, நாளைக்கு மத்தியானம் சாப்பிட வர. சிக்கன் பிரியாணி. அப்பறம் பின்னாடி வருத்தபடுவ”

”யே, புரிஞ்சுக்கோ. அடுத்த வாரம் வரேன். அம்மாகிட்ட எதாவது சொல்லி நீ சமாளி”

“அடுத்த வாரம்’லாம் உனக்கு வீட்ல ‘No Entry’. என்னை பெண் பார்க்க வராங்க”

“துரோகி, சொல்லவே இல்ல. மாப்பிள்ளை யாரு. ஏதோ MEPZ பக்கத்துல வீடு, Infosys’ல வேலை பார்க்கிறானு ஒரு தடவை அம்மா சொன்னாங்கல. அவனா??”

“நாளைக்கு வீட்டுக்க்கு வா, அம்மா ‘Full Detail’ சொல்லுவா. நான் இப்ப ரொம்ப பிஸி பா”

“சரி பொழைத்து போ. நாளைக்கு வீட்டுக்கு வரேன்”

“ம், அந்த பயம். சரி, நான் உன்கிட்ட அப்பறம் பேசுறேன். Bye Bye”

“யே, அப்படியே என் ப்ளாக்’ல கொஞ்சம் Comments எழுது பா”

“டேய், நீ திருந்தவே மாட்டியா. சரி. Will try. Bye bye.”

“Bye”

Tuesday, August 31, 2010

பிரிவு

என் பிரிவு உன்னில்
எந்தவொரு அதிர்வையும்
ஏற்படுத்தப்போவது இல்லை
என்பதை அறிந்தே இருந்தேன்.

எனது இருப்பைப் போலவே
எனது பிரிவும்
உன்னை
எந்த விதத்திலும் பாதிக்கப்போவது இல்லை.

அந்த பிரிவின் கடைசி சந்திப்பில்

நீ

சிறிதாவது பேசியிருக்கலாம்,
சிறிதாவது வருத்தப்பட்டுயிருக்கலாம்,
சிறிதாவது அழுது இருக்கலாம்,
சிறிதாவது சிரித்திருக்கலாம்.

சிறிதாவது நடித்திருக்கலாம்.

அப்படி அமைதியாக இருந்திருக்க
தேவையில்லை.

இனி எப்பொழுதும், உனக்கு
நான் தேவையில்லை
என்பதையே மீண்டும் நிரூபித்தாய்.

உனக்கு தெரியும்,
எனது இருப்பை எப்படி எல்லாம்
நிரூபிக்க முயற்சித்தேன் என்று.

எனக்கு தெரியும்,
உண்மையாகவே
நான் மரித்துப்போவதையே நீ
விரும்பினாய் என்று.

Thursday, August 26, 2010

படித்ததில் பிடித்தது

"அழும்போது அழகாக இருக்கும் பெண்கள்" - மனுஷ்ய புத்திரன்

அழும்போது
அழகாக இருக்கும் பெண்ணை
அதற்காகவே
அழவைக்கத் தொடங்கினேன்

அவள் காரணமின்றி
அழுகிறாள் என்றே
எல்லோரும் நினைத்தார்கள்

அவளது நண்பர்கள்
அவளது கண்ணீரைத் துடைக்க
எவ்வளவோ முயன்றார்கள்

அவளது காதலர்கள்
ஒவ்வொருமுறை அவள் அழும்போது
அவளை அணைத்துக்கொண்டார்கள்

அவை ஹார்மோன்களின் குழப்பம் என்றோ
அழமான மன அழுத்தம் என்றோகூட
அதைப் புரிந்துக்கொண்டார்கள்

அது இழந்த காதல்களின் கண்ணீர் என்றோ
உடைந்த மனோரதங்களின் கேவல்கள் என்றோ
சந்தேகித்தார்கள்

நான் அவளுக்கு
விதவிதமான அழுகைகளை
கற்றுக் கொடுத்தேன்
ஒவ்வொரு அழுகைக்கும்
வேறு வேறு அழகினை
அவள் வெளிப்படுத்துகிறாள்

படுக்கையில் படுத்தபடி
படிக்கட்டுகளில் அமர்ந்தபடி
பேருந்தில் ஜன்னலோர இருக்கையிலிருந்தபடி
கழிவறையில் தாழிட்டுக்கொண்டபடி
தெய்வத்தின்முன் கைகூப்பியபடி
திரையரங்க இருளிலிருந்தபடி
கடற்கரையில் நடந்தபடி
வேலை செய்வதுபோல நடித்தபடி
எல்லாப் பின்புலங்களிலும்
அவளது அழுகை
வெகு நேர்த்தியாக பொருந்திப் போகிறது

அழும்போது
அழகாக இருக்கும் பெண்ணிற்கு
எங்கே அழவேண்டும்
எங்கே அழக்கூடாது என்கிற
கட்டுப்பாடுகள் இல்லை

மழைபெய்வதைப் பார்க்கும்போது
ஒரு எளிய கவிதைப் படிக்கும் போது
ஒரு அர்த்தமற்ற பாடலைக் கேட்கும்போது
பாதிப் புணர்ச்சியின்போது
பாதிக் கனவின்போது
கைகளைப் பற்றிக் கொள்ளும்போது
கைகளை விடுவித்துக்கொள்ளும்போது
விருந்தினர்கள் வரும்போது போகும்போது
யாரையாவது நினைத்துக்கொள்ளும்போது
யாரையுமே நினைத்துக் கொள்ளாதபோது
ஏற்கப்படும்போதும்
மறுக்கப்படும்போதும்
அன்னியர்கள் இருக்கும்போது
அழுகிற யாரையாவது பார்க்கும்போது

எல்லா சந்தர்ப்பங்களையும்
பயன்படுத்துகிறாள்
அழும்போது
அழகாக இருக்கும் பெண்

ஒரே ஒரு பிரச்சனை
உண்மையாகவே
அழுவதற்கான காரணங்கள் வரும்போது
எப்படி அழவேண்டும் என்று தெரியாமல்
குழப்பமடைந்துவிடுகிறாள்.

- மனுஷ்ய புத்திரனில் "அதீதத்தின் ருசி" புத்தகத்தில் இருந்து

Wednesday, August 11, 2010

சமந்தா


"மாஸ்கோவின் காவேரி". என்ன ஒரு அழகான தலைப்பு. பெயருக்காகவே இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. கதாநாயகி "சமந்தா", சே.. என்ன அழகு. பழைய காதலிகளை எல்லாம் கொஞ்ச நாட்களுக்கு ஓரம் கட்டிவிட்டு சமந்தாவை புதிதாகக் காதலிக்க வேண்டும்.வரும் வெள்ளிக்கிழமை "வம்சம்" திரைப்படம் வேறு வெளிவருகிறது. "பசங்க" பாண்டிராஜ் இயக்கம். இந்த திரைப்படத்தையும் பார்த்தாக வேண்டும். மனிதனுக்கு எத்தனை கவலை.

"ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்".

Friday, August 6, 2010

leggings ஆடை அணிவது எப்படி? (அல்லது) ஒரு பிஸினஸை தொடங்குவது எப்படி?

கதை சுருக்கம்:
எனக்கு ரொம்ப நாட்களாகவே சந்தேகம், "இந்த பெண்கள் leggings ஆடைகளை எப்படி அவ்வளவு டைட்டாக அணிகிறார்கள் ??". "பேண்டை தைத்து போடுகிறார்கள் ??, இல்லை அப்படியே காலோடு சேர்த்து தைத்து விடுகிறார்களா??" என்று. leggings போட்டுக்கொண்டு பெண்கள் குனியும் போது நமக்கே பயமாக இருக்கும், எங்கே கிழிந்து விடுமோ?? என. இந்த சந்தேகம் எனக்கு எப்படி தீர்ந்தது என்பது பற்றித்தான் இந்த கதை. இது'லாம் ஒரு கதை, இதற்க்கு ஒரு கதை சுருக்கமா என "தூ" என்று துப்புவர்கள், "நான் எந்த பெண் ஆடையையும் இனி பார்க்க மாட்டேன்" என்று தங்கள் வருங்கால மனைவி மீது சத்தியம் செய்துவிட்டு, இந்த கதையை படிக்காமல் சென்றுவிடலாம். நிகழ்கால மனைவி உள்ளவர்கள் தங்கள் வருங்கால காதலி மீது சத்தியம் செய்யுங்கள்.

எனக்கு இந்த கதை சுருக்கம் எழுதி இதுவரை பழக்கம் இல்லை. ஏனென்றால், எனது கதைகளே சுருக்கமாகத்தான் இருக்கும். எனது கதைகள் படித்துக்கொண்டு இருக்கும்போதே சீக்கிரம் முடிந்துவிடுகிறது என்று சில பேர் வருத்தமும், பல பேர் சந்தோஷமும் அடைகிறார்கள். அதனால்தான் இந்தமுறை இப்படி ஒரு ஏற்பாடு, "கதையின் முடிவை முன்னாடியே சொல்லிவிட்டு அதை நோக்கி கதையை நகர்த்துவது என".

எங்களால் அதை நம்பவே முடியவில்லை. எப்படி நாங்கள் மறந்தோம் என்று. நாங்கள் என்பது "என்னை, செல்வாவை, சிவாவை, அருணை" என்று நால்வரையும் சேர்த்துத்தான். நாங்கள் கடந்த ஒரு வருடமாகவே சொந்தமாக ஒரு பிஸினஸ் தொடங்கவேண்டும் என்ற முடிவோடு அழைந்துக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் யோசிக்காத பிஸினஸ் எதுவுமே இல்லை. "ஜூஸ் கடை, ஐஸ்கிரீம் கடை, ஹோட்டல், சூப்பர் மார்கெட், பிரைடு சிக்கன்" என்று பல பிஸினஸ்களைப் பற்றி யோசித்து விட்டோம், ஆனால் எதுவும் செட் ஆகவில்லை. "Hollow bricks" ஆரம்பிக்கலாம் என்று ஒருமுறை கும்மிடிபூண்டி அருகில் இடம் எல்லாம் பார்த்து, அட்வான்ஸ் தரும் சமயம் நின்றுவிட்டது. பின் ஒருமுறை, நண்பன் ஒருவன் துணையுடன் பட்டாபிராம் அருகில் "Export Business" அரம்பிக்க எல்லா ஏற்பாடு செய்துக்கொண்டு இருந்தபோது நண்பன் பாதியிலேயே பிரிய, அதுவும் நின்றுவிட்டது. இப்படி நாங்கள் கால் வைக்காத பிஸினஸ் என்று எதுவும் இல்லை. அம்பானி பிரதர்ஸ் கூட இத்தனை துறைகளில் கால் வைத்து இருக்க மாட்டார்கள்.

ஒரு நிமிடம், கதைசுருக்கம் இரண்டாம் பாராவிலேயே முடிந்துவிட்டது. இப்பொழுது கதையைதான் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள். "இதை, ஏன் சொல்கிறேன்?" என்றால், பல பேர் என் கதை முழுவதையும் படித்துவிட்டு கதை எங்கே என்று கேட்கிறார்கள்.

ம், எங்கே விட்டேன். அம்பானி பிரதர்ஸ் கூட இத்தனை துறைகளில் கால் வைத்து இருக்க மாட்டார்கள். ஒரு முறை அண்ணாநகரில் "சக்தி மசாலா ஷோரூம்" ஆரம்பிக்க ஒரு புரோக்கர் நாயாய் பேயாய் அலைந்து சாந்தி காலணியில் ஒரு இடத்தை பார்த்துக்கொடுத்தார். இப்பொழுது அவர் எங்களை கொலைவெறியில் தேடிக்கொண்டு இருக்கிறார்.

நாங்கள் தீவிரமாக செயல்படவில்லை அதனால்தான், எல்லாமே நின்றுவிட்டது என்று நினைக்க வேண்டாம். நாங்கள் எந்தளவு கஷ்டப்பட்டோம் என்று எங்களுக்குதான் தெரியும். சிவா இரண்டாயிரம் ரூபாய் பணம் கட்டி Export வகுப்புக்குலாம் போனான். செல்வா இதற்காகவே "High performance interpreter" புத்தகத்தை வாங்கிபடித்தான். தினமும் இரவு, படித்ததை எங்களுக்கு கதையாக சொல்வான். ஆனால், அந்தக்கதை சொல்லும் நேரத்தில் அவன் செல்போனுக்கு பத்து குட்நைட் மெசேஜ் வந்துவிடும். அதுவும் வேற வேற பெண்களிடம் இருந்து. பாவம், செல்வாவிற்கு குட்நைட் சொல்லவில்லை என்றால், அந்த பெண்களுக்கு தூக்கம் வராது போல. நானும் சிவாவும் எங்களுக்குள் மாற்றி மாற்றி குட்நைட் மெசேஜ் அனுப்பிக்கொண்டால்தான் உண்டு.

உயிர்மையை போல ஒரு பதிப்பகம ஆரம்பிக்கலாம் என்றான் அருண். இப்படி பல பிஸினஸ்களை பற்றி யோசித்த நாங்கள் எப்படி இந்த "ரெடிமேட் ஷோரூமை" மட்டும் மறந்தோம் என்று தெரியவில்லை. கடைசியாக ஒரு ரெடிமேட் ஷோரூம் ஆரம்பிக்க முடிவு செய்தோம். எந்தமாதிரி ஆரம்பிப்பது என்று குழப்பம்.

இப்பொழுது புதிதாக திறந்து இருக்கும் 'Express mall'ல், லீ, லீவைஸ் போல ஏதாவது கம்பெனி ஷோரூம் ஆரம்பிக்கலாம் என்றான் அருண். ஆனால், விசாரித்து பார்த்தபோது அதை ஆரம்பிக்கும் செலவில் எங்கள் ஊரில் ஒரு கல்யாண மண்டபமே கட்டிவிடலாம் என்பது தெரியவந்தது. அதுவும் "இந்தமாதிரி கம்பெனி ஷோரூம் எல்லாம் வேலைக்கே ஆகாது" என்றும், "லாபத்தைவிட நஷடமே அதிகமாக வரும்' என்றும், ஏற்கனவே ஷோரூம் நடத்திக்கொண்டு இருந்தவர்கள் சொன்னார்கள்.

கல்லூரியில் என் கூட படித்த பாலாவின் நினைவு அப்பொழுதுதான் வந்தது, அவன் அடையாறில் ஒரு ரெடிமேட் கடை வைத்து உள்ளான். பாலா என்றால் பல பேருக்கு தெரியாது. அவன் முழுப்பெயர் பாலசுப்புரமணிய சண்முகசுந்தரம். கொஞ்ச பேர் அவனை பாலா என்பார்கள், கொஞ்ச பேர் அவனை சுப்பு என்பார்கள், கொஞ்ச பேர் அவனை சண்முகம் என்பார்கள், நீங்கள் அவனை எந்த கெட்டவார்த்தை வைத்தும் அழைக்கலாம்.

நான் பாலாவிடம் ரெடிமேட் ஷோரும் பற்றி விசாரிக்க அவன் கடைக்கு சென்று இருந்தேன். ஒரு பெண் leggings,லாங் டாப்ஸ், மற்றும் ஒரு பெல்ட் வாங்கிக்கொண்டு போனாள். " இது தான் இப்பொழுது பேஷன், பேஷன்க்கு தகுந்தார்போல் புதிய ஆடைகளை விற்கவேண்டும். leggings வாங்கினால், கண்டிப்பாக லாங் டாப்ஸும், பெல்ட்டும் வாங்குவார்கள். இதில் எதாவது ஒன்று இல்லை என்றால் கூட எதையுமே வாங்கமால் சென்றுவிடுவார்கள்" என்றான்.

அவனைப் பார்த்து பேசியதில் பலவற்றை தெரிந்துக்கொண்டேன். அவற்றில் சில "இப்பொழுது பிராண்ட் டிரஸ்கள் மீதுதான் மக்கள் அதிக ஆசைப்படுகிறார்கள். ஆனால், அவ்வளவு விலை கொடுத்து வாங்க மக்கள் விரும்பவில்லை. முக்கால்வாசி பிராண்ட் துணிகள், திருப்பூரில்'தான் தயாரிக்கப்படுகிறது. திருப்பூரில் நேரிடையாக வாங்கி, இங்கே விற்றால் அதிகம் லாபம் பார்க்கலாம். அந்த துணிகளில் பிராண்ட் பெயரும் இருப்பதால் அதிக விலைக்கு விற்கமுடியும்."

மேலும் " குழந்தைகளுக்கான ஆடைகளில்தான் அதிக லாபம் பார்க்கமுடியும். ஏனென்றால், குழந்தைகளுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய பெற்றோர் தயாராக இருக்கிறார்கள். இருப்பதிலேயே அதிக தலைவலி தரும் வேலை, பெண்கள் ஆடைகள் விற்பதுதான். இரண்டு மணிநேரம் கடையில் இருக்கும் எல்லா ஆடைகளையும் கலைத்து போட்டுவிட்டு, கடைசியில் ஒரு கர்சீப்பை வாங்கிவிட்டு போவார்கள். புடவை, சுடிதார், பட்டியாலா எல்லாம் அந்த காலம். இப்பொழுது ஜீன்ஸ், குர்தா, மிடி, டாஸ், சோளி , Ghagra, leggings போன்ற ஆடைகள்தான் அதிகம் விற்பனையாகிறது. Ghagra'வில் இரண்டு வகையான ஆடைகள் இருக்கின்றன. இடுப்பு தெரிவது போல அணிவது ஒருவகை, இடுப்பை மறைத்து அணிவது இன்னொருவகை. தமிழ் பெண்கள் இரண்டாவது வகையைத்தான் அதிகம் விரும்புகிறார்கள்."

என்ன, இன்னும் நான் leggings எப்படி அணியவேண்டும் என்று சொல்லவில்லையா??. ஒரு பிஸினஸை ஆரம்பிப்பது போலவே, leggings ஆடை அணிவதும் கடினமாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். இதை பற்றி நன்கு தெரிந்தவர்கள் எனக்கு உதவலாம்.

Sunday, July 25, 2010

புரிந்தும் புரியாமலும்

"ஸ ஏவ ஸர்வம் யத்பூதம் யச்ச பவ்யம் ஸனாதனம்
ஞாத்வா தம் ம்ருத்யு மத்யேதி நான்ய: பந்தா விமுக்தயே"

இதுவேதான் அவன், இப்போதும் முன்பும், வருங்காலத்திலும், நிரந்தரமானவன் - அவனைத்தெரிந்துகொள்பவன் மரணத்தை வெல்கிறான்! மோக்ஷத்துக்கு வழி இதைத் தவிர வேறெதுவுமில்லை.
1
இந்த புரளி, புரளி சொல்வாங்களே, அதை இன்றுதான் நேரில் பார்த்தேன். "இந்த யோகா வகுப்புல சேரலாம்னு இருக்கேன். அசைவம்'லாம் இப்ப சாப்பிடுறது இல்லை". இவ்வளவுதான் நான் காலையில் சொன்னது. மாலைக்குள் இதுவரை நான்கு பேர் போன் செய்துவிட்டார்கள். "என்னடா, சாமியார் ஆகப்போறியாமே!!!!!!!!!" என்று. நல்லவேலை யாரும் "என்ன, இமயமலை'ல இருக்கியா??" என்று கேட்கவில்லை. அதுவரை எனக்கு சந்தோஷமே.

2
எனக்கு அருணை அறிமுகம் செய்துவைத்தது என் அறை நண்பன்தான். இருவரும் ஒரே கம்பேனியில் வேலை பார்க்கிறார்கள். சில பேரின் முகம், முதல் தடவை பார்த்தவுடனே நம் நினைவில் அப்படியே நின்றுவிடும். அப்படி ஒரு முகம் அருணுக்கு . அவன் முகத்தில் சோம்பலை பார்க்கவே முடியாது. கம்ப்யூட்டர் அறிவில் அவனை அடித்துக்கொள்ள யாராலும் முடியாது. "Informatica,Unix,Pherl" என்று எல்லாவற்றையும் தெரிந்து வைத்து இருந்தான். எதை பற்றி கேட்டாலும் பொருமையாக சொல்லித் தருவான்.

3
கொஞ்ச நாட்களாக'வே சசியின் நடவடிக்கைகள் மாறிக்கொண்டு இருப்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக அறையில் ஒன்றாக தங்கியிருக்கிறார்கள். கடந்த இரண்டு மாதங்களாக சசியின் நடவடிக்கை எதுவுமே சரி இல்லை. முதலில் ஈஷா'வில் ஏதோ யோகா வகுப்பு என்று சொல்லி சனி, ஞாயிறு மட்டும் போய்க் கொண்டு இருந்தான். பின்னர், ஒரு தடவை கோவையில் உள்ள கோயில் ஒன்றுக்கு சென்றான். அதில் இருந்துதான் இந்த மாற்றம். திடீர், திடீர் என்று மணிக்கணக்கில் அறையிலேயே தியானம் செய்ய தொடங்கி விட்டான்.

4
அவனுக்கு உள்ள பிரச்சனையை பற்றி ஒரு நாள் என்னிடம் சொன்னான். "அதிகமாக அவன் யோசிக்க கூடாதாம். அப்படி செய்தால், மூளையில் உள்ள நரம்பு ஒன்றில் இரத்தம் பாய்வது நின்றுவிடும். அதை அப்பொழுதே சரி செய்யாவிட்டால், அவன் உயிருக்கே ஆபத்து" என்றான். இதை ஒரு நாள் நேரிலேயே பார்த்தேன். ரூபிக் கியூப்'யை கையில் வைத்து விளையாடி கொண்டு இருக்கும் போதே, அருணின் முகம் முழுவதும் சிகப்பு நிறமாக மாறியது. நானும் நண்பனும் அவனை பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தோம். மூன்று நாட்கள் அவன் மருத்துவமனையில் இருந்தான், அதன் பிறகே அவனுக்கு சரியானது.

5
தியானம் முடித்த பிறகு சசியின் முகத்தைப் பார்க்க வேண்டுமே. அப்படி ஒரு பிரகாசமாக இருக்கும். எதையோ சாதித்த மகிழ்ச்சி அந்த முகத்தில் தெரியும். ஒரு வெள்ளிக்கிழமை இரவு, "சசி தொடர்ந்து ஆறு மணிநேரம் தியானம் செய்ததாக" அறை நண்பன் ராகுல் செல்வாவிடம் சொன்னான். சசிக்குள் ஏதோ ஒரு மாற்றம் எற்பட்டுவிட்டது என்பதுமட்டும் அவர்களுக்கு நன்றாக தெரிந்தது.

6
இது எல்லாவற்றுக்கும் காரணம் இந்த செல்வாதான். என் மீது அவனுக்கு அப்படி என்ன கொலைவெறி என்று தெரியவில்லை. இதைபோல் அவன் எனக்கு செய்வது, இது இரண்டாவது முறை. அந்த "சாமியார்" என்ற வார்த்தையை இன்னும் என்னால் சீரணிக்க முடியவில்லை. எனக்கு போன் செய்த நான்கு பேரில், ஆனந்தும் ஒருவன். "ஏதோ புக்ஸ் படிக்கிற, ப்ளாக்'லாம் எழுதறேன் பார்த்தா, இப்படி மாறிட்டியே'டா" என்றான். அடப்பாவிங்களா, "புக் படிக்கிறவன் எல்லாம் சாமியாரா??". இப்பொழுது நான் படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம் "சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும்". இந்த புத்தகத்தின் ஏதாவது ஒரு பக்கத்தை மட்டும் ஆனந்த் படித்து இருந்தால் " ஏன்டா, இப்படி போர்னோ அடிக்ட்'டாக மாறிவிட்டாய்" என்று கேட்டு இருப்பான் போல.

7
சசி ஒரு நாள் தன் வேலையை விட்டுவிட்டதாக சொன்னான். செல்வாவும் ராகுலும் அதை முதலில் நம்பவே இல்லை. சசி ஏதோ ஏதோ புத்தகங்கள் படித்தான். அவை தமிழ் புத்தகங்களா? என்பதே செல்வாவிறகு சந்தேகம். அந்த காலத்து பழந்தமிழில் கிறுக்கப்பட்ட புத்தகங்கள். "நான்தான் சிவன், எனக்கான அறம் காத்துக்கொண்டு இருக்கிறது, நான் விரைவில் செல்ல வேண்டும்" என்று ஒருநாள் சசி சொன்னபோதுதான், இது வேறு எங்கேயோ போய் கொண்டு இருப்பதை செல்வாவும் ராகுலும் உணர்ந்தார்கள். அடுத்த நாள் காலையில் இருந்தே சசி'யை காணவில்லை. கடந்த ஒரு வாரமாக செல்வா, ராகுல், சசியின் பெற்றோர் என அனைவரும் அவனைத் தேடிக்கொண்டு இருக்கிறார்கள், ஆனால் சசி கிடைக்கவே இல்லை.

8
செல்வா மீது எனக்கு சரியான கோபம். போன் செய்தே கேட்டுவிட்டேன் " நான் எப்படா, சாமியாரா போகப்போறேனு சொன்னேன்". அவன் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் "நீதான சொன்ன, ஈஷா'ல சேர போறேன்னு. ஏற்கனவே நண்பன் ஒருவன் இப்படி சொல்லித்தான் சாமியாரா மாறிட்டான்" என்றான்.

9
மீண்டும் ஒரு வாரம் கழித்து அவன் முகத்தில் அதே பிரகாசம். அருணுக்கு இந்த பிரச்சனை சின்ன வயதில் இருந்தே இருப்பதாக சொன்னான். இதை முழுமையாக குணப்படுத்த மருந்து எதுவும் இல்லை என்றான். சின்ன வயதில் இருந்தே அவன் தியானம் செய்வதாகவும், அதன் காரணமாகவே அவனால் இந்த வியாதியில் இருந்து தப்பித்து வாழ முடிகிறது என்றான். பின்னர், அவன் தியானத்தை பற்றியும், ஈஷா வகுப்புகள் பற்றியும் அரை மணிநேரம் பேசினான். என்னையும் என் நண்பனையும் அந்த தியான வகுப்பில் சேர சொன்னான். அவன் பேசிக்கொண்டு இருந்த போது, எனக்கு அவனின் சிகப்பு நிற முகமே நினைவில் வந்துக்கொண்டு இருந்தது.

பின்குறிப்பு:
---------------
"இந்த கதையை 168357249 என்று படித்தால் புரியலாம். இல்லை என்றால், 329172564 என்று கூட படிக்கலாம். யாருக்கு தெரியும்."