Saturday, November 6, 2010

வ குவாட்டர் கட்டிங்

”மச்சி, படம் முழுவதும் டைமிங் காமெடி'டா, செமயா இருக்கு. கண்டிப்பாக போய் பாரு” என்று செல்போனில் நண்பன் சொன்னான். இவன் நம்ம சரத் மாதிரி எல்லாம் இல்லை, இவன் இதுவரை சில படங்களை மட்டுமே நல்ல திரைப்படம் என்று சொல்லியிருக்கிறான். ஆனால், சரத் இவனுக்கு முற்றிலும் நேர்மார். இதுவரை எந்த படத்தையும் “மொக்கை” என்று சொன்னது கிடையாது. “நல்லா தான் இருக்கு, ஒரு முறை பார்க்கலாம்” எல்லா திரைப்படத்திற்க்கும் அவன் சொல்லும் ஒன்லைன் விமர்சனம் இதுதான். “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தை மட்டும் சொஞ்சம் அதிகமாக புகழ்ந்தான். காரணம், நீங்கள் நினைப்பது தான்.

”செமயா இருக்கு. கண்டிப்பாக போய் பாரு” என்று நண்பன் சொன்னவுடன் எனக்கு பெரிய அதிர்ச்சி. ஏனென்றால், இப்பொழுதுதான் இரண்டு நண்பர்களுக்கு நானே போன் செய்து ”படம் வேஸ்ட், போகாதீங்க” என்று சொல்லியிருந்தேன். ட்வீட்டரில் எழுத ஒரு பஞ்ச் லைன் கூட தயாராக வைத்திருந்தேன். எனக்கும் தயாநிதி அழகிரிக்கும் வாய்க்கால் தகராறு, அதன் காரணமாகத்தான் இந்த மாதிரி புரளிகளை செய்கிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம். தீபாவளியன்று முதல் ஷோ’வில் திரைப்படத்தை பார்த்த பின்தான், இந்த முடிவுக்கு வந்தேன். இந்த முடிவை நான் மட்டும் எடுக்கவில்லை. என்னுடன் திரைப்படம் பார்த்த, திரையரங்கில் அமர்ந்திருந்த அனைவருமே இதைத்தான் சொன்னார்கள். திரையரங்கில் மொத்தம் ஆறுபது பேர் இருந்தோம். நான் சொல்வது அதிகம் என்று நினைக்கிறேன். டிக்கெட் கிழித்து கொடுத்தவருக்குத்தான் உண்மையான எண்ணிக்கை தெரியும்.

சரி, எல்லாரும் மைனாவிற்க்கும், உத்தமபுத்திரனுக்கும் போய் விட்டார்கள் என்று நினைத்து, அந்த திரைப்படங்களுக்கு சென்றிருந்த நண்பர்களுக்கு போன் செய்து விசாரித்தேன். அங்கேயும் இதே ஆறுபது, எழுபது எண்ணிக்கைத்தான் என்றார்கள். நானும் என் நண்பனும், எங்க ஊரில் ஒரு மல்டிபிளக்ஸ் கட்டலாம் என்ற ஐடியாவை ஒருமுறை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்தேன். “மச்சி, எல்லாரும் டி.வி’யில் சிறப்பு நிகழ்ச்சி பார்த்துக்கிட்டு இருப்பாங்க டா,  நாளைக்கு பாரு கூட்டம் அல்லும்” என்றான் அருகில அமர்ந்திருந்த என் பிசினஸ் பாட்னர். அடுத்து ஏதோ சொல்ல அவன் தொடங்கியவுடன்,  திரைப்படம் ஆரம்பித்து விட்டார்கள். நல்லவேளை நான் தப்பித்தேன்.

யாரோ ஒருவன், நாலு குவாட்டரை ஒன்றாக அடித்துவிட்டு ”சவுன்ட் கம்மியாக இருக்கு” என்று சொல்லியிருப்பான் போல, வால்யூம் "1000 டெசிபலை" தொட்டது. திரைப்படத்தில் என்ன பேசுகிறார்கள் என்று ஒன்றுமே புரியவில்லை. என் தலைக்குமேல், ஒரு ஸ்பீக்கர் கத்திக்கொண்டு இருந்தது, எங்கே தலையில் விழுந்துவிடுமோ என்ற பயத்தில் அதையே பார்த்துக்கொண்டு இருந்தேன். அதற்க்குள் இடைவேளை போட்டுவிட்டார்கள். திரையரங்கில் இருந்தயாருக்குமே ஒரு வார்த்தைக்கூட புரியவில்லை என்று அறிந்தபோது எனக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது.

“நான் அப்பவே சொன்னேன், தேவிக்கு போகலாம்’னு” என்றான் நண்பன். எஙகள் ஊரில் இருக்கும் ஒரே ஏ.சி திரையரங்கம் தேவி மட்டும்தான். அதுவும் ஒரு ஆறு மாதங்களுக்கு முன்னால்தான் ஆரம்பித்தர்கள். அங்கு இன்னும் எந்திரன்’தான் ஒடிக்கொண்டு இருக்கிறது. என் நண்பன் ரஜினியின் தீவிர பித்தன். “எந்திரன்” திரைப்படததை தமிழ், ஹிந்தி, தெலுங்கு என்று எல்லா மொழியிலும் பார்த்துவிட்டான். எப்படியாவது எந்திரன் திரைப்படத்தை மலையாளத்தில் பார்க்க வேண்டும் என்பதுதான் அவனுடைய தற்பொழுதைய லட்சியம்.

இடைவேளை முடிந்து மீண்டும் திரைப்படம் ஆரம்பித்து இருந்தார்கள். வழக்கம் போல் ஸ்பீக்கர் அலறிக்கொண்டிருந்தது. நாங்கள் பாதியிலேயே கிளம்பி வந்துவிட்டோம். நாங்கள் வரும்போது திரையரங்கில ஒரு முப்பது பேருக்கு குறைவாகத்தான் இருந்தார்கள்.

இது நடந்து ஒரு மணிநேரம் கழித்துத்தான் மற்றொரு நண்பன் திருச்சியிலிருந்து போன் செய்தான். “மச்சி, படம் முழுவதும் டைமிங் காமெடி டா, செமயா இருக்கு. கண்டிப்பாக போய் பாரு” என்றான். இதற்குள் நான் கொஞ்ச பேருக்கு போன் செய்து “திரைப்படம் நல்லாயில்லை, ஓடாது” என்று சொல்லிருந்தேன்.

அந்த கொஞ்ச பேரில் நீங்களும் ஒருவராக இருந்தால், தயவுசெய்து நான் சொன்னதை மனதில் வைத்துக்கொள்ளாமல், திரைப்படத்தை ஒருமுறை நல்ல திரையரங்கில் பார்க்கவும். மீண்டும் உங்களுக்கு போன் செய்து இதை உங்களிடம் சொல்லமுடியாத நிலையில் இருக்கிறேன், ஏனென்றால், நிறைய வேலையிருக்கிறது, ”மைனா, உத்தமபுத்திரன், வல்லக்கோட்டை” போன்ற படங்களை பார்த்தாக வேண்டும். இதற்க்கு பின் நேரம் கிடைத்தால் “வ குவாட்டர் கட்டிங்” திரைப்படத்தை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும்.

5 comments:

மதுரை சரவணன் said...

படத்தின் போரிலே குமட்டல் வருகிறது... பகிர்வுக்கு நன்றி .வாழ்த்துக்கள்

புருனோ Bruno said...

Va quarter cutting was boring for me also . . . May be i could not understand the sub text or sync with timing . .

தனி காட்டு ராஜா said...

// ”மைனா, உத்தமபுத்திரன், வல்லக்கோட்டை” போன்ற படங்களை பார்த்தாக வேண்டும்.//

மைனா நல்லா இருக்கு :)

சரவண வடிவேல்.வே said...

@ கோபி,

நானும் மைனா பார்த்தேன் கோபி. எனக்கு பிடிக்கவில்லை. ஏதோ, திரைப்படம் முழுவதும் செயற்கைத்தனம் மிகுதியாக இருந்தது போல் தோன்றியது. முக்கியமாக, அந்த குழந்தை பருவ காட்சிகள்.

பருத்திவீரன் போல் முடிவு இருக்ககூடாது என்று திரையரங்கில் கடவுளிடம் வேண்டிக்கொண்டு இருந்தது, தனிக்கதை.

தமிழகழ்வன் said...

இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க?
படம் புரியலங்கற குழப்பத்துல, ரொம்பவே நொந்து எழுதி இருக்கீங்க'னு தெரியுது.