Thursday, October 29, 2009

என்னை துரத்திய வாசனை

எனக்கு எந்த நாளில் இருந்து என்று சரியாக ஞாபகம் இல்லை. சூரியன் அஸ்தமிக்கும் ஒரு மாலை பொழுதில், அவள் எனது அருகில் நின்று பேசிக்கொண்டு இருக்கும் பொழுது முதல்முதலாக அவளிடம் இருந்து அந்த வாசனைவந்ததாக ஞாபகம். நன்றாக ஆறிய பாலையும் ரோஜாவையும் சேர்த்து நுகரும் பொழுது ஒரு வாசனை வருமே, அப்படி ஒரு வாசனை. திடீர் என்று அந்த வாசனை வந்ததால், நான் அவளிடம் அதைப்பற்றி ஒன்றும் கேட்கவில்லை. அவள் அந்த இடத்தைவிட்டு விலகி சென்றவுடன், அந்த வாசனையும் விலகி சென்றது.

அடுத்த இரண்டு நாட்கள் அவள் அருகில் வரும்பொழுது எல்லாம் அந்த வாசனையும் வந்தது. ஒவ்வொரு முறையும் அந்த வாசனை தீவிரம் அடைந்து வருவது போலவே எனக்கு தோன்றியது. மூன்றாவது நாள் அவளிடமே கேட்டுவிட்டேன், "என்ன perfume use பண்ணுகிறாய் ?" என்று. நான் எதிர்பார்த்ததை போல, அவளிடம் இருந்து ஒரு முறைப்பு மட்டும் பதிலாக வந்தது. அருண் எப்பொழுதும் சொல்வான், இந்த உலகத்தில் இரண்டு வகையான பெண்கள் மட்டுமே உண்டு, கண்ணகி போல் வாழாதவர்கள் - கண்ணகி போல நடிப்பவர்கள். இவள் இரண்டாம் வகையை சேர்ந்தவள்.

அடுத்தநாள், நான் நரேன் கேபினில் அமர்ந்து அவனிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது, நரேனிடம் சந்தேகம் கேட்க அவள் அங்கே வந்தாள். முந்தைய நாளை விட இன்று வாசனை கொஞ்சம் அதிகமாகவே வந்தது. நான் நரேனிடம் மெதுவாக " உனக்கு எதாவது வாசனை வருகிறதா ?" என்றேன்.

"இன்னைக்கு, தம் அடித்த பின் Halls போட மறந்துவிட்டோம்" என்று சொல்லிவிட்டு அவளிடம் பேசுவதில் தீவிரமானான்.

இப்படியே இரண்டு வாரங்கள் சென்றன. எனக்கு அந்த வாசனை சந்தேகம் மட்டும் போகவே இல்லை. இப்பொழுது எல்லாம், நூறு அடிக்கு அப்பால் அவள் கடந்து சென்றால் கூட, அவள்தான் நடந்து செல்கிறாள் என்று வாசனையை வைத்துசொல்ல முடிந்தது.

மீண்டும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவளிடமே கேட்டு விடுவது என்று முடிவு செய்தேன். இந்தமுறை " என்ன சோப் use பண்ணுகிறாய் ?" என்று சற்று வித்தியாசமாக கேட்டேன்.

"Johnson Baby Soap" என்று முறைத்துக்கொண்டே சொன்னாள்.

இதுவரை அவள் பொய் சொல்லி நான் பார்த்தது இல்லை. எனவே அதுதான் உண்மை என்று முடிவு செயது, அடுத்தநாள் நானும் Johnson Baby Soap'ல் குளித்து பார்த்தேன். அதில் ஒருவிதமான பால் வாசனை வந்தாலும், அவளிடம் இருந்த வாசனைக்கும் இதற்க்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருந்தன.

அறை நண்பன் அருணிடம் இதை பற்றி கூறினேன். " இந்த உலகத்தில் எல்லா மனிதர்களுக்கும் தனி தனியா வாசனை இருக்கு டா " என்றான்.

"இல்லை எனக்கு அவளிடம் இருந்து மட்டும்தான் வாசனை வருகிறது" என்றேன். அருண் என்னை ஒருமாதிரி பார்த்தான்.

சில நாட்களில், அவள் இல்லாத போதும் அந்த வாசனை என்னை தொடர்வது போலவே இருந்தது. என் அறைகளில், என் தலையனைகளில் கூட அந்த வாசனை வர தொடங்கியது. அவள் அருகில் இருக்கும் நேரம் மட்டும் வாசனை சற்று அதிகமாக இருக்கும்.

இப்படியே சென்றால், எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் என்று தோன்றவே ஒரு வாரம் விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊரான நாகபட்டினத்திற்கு சென்றேன்.

ஊரின் கடற்கரை மணலை பார்த்தவுடனே, என்னை சுற்றி இருந்த வாசனை முற்றிலும் மறைந்தது போல தோன்றியது. ஆனால் வீட்டில் நுழைந்தவுடனே மீண்டும் அந்த வாசனை என்னை வந்து அப்பிக்கொண்டது.

வீட்டில் அம்மாவும் அக்காவும் " ஏன் டா, பேய் அடிச்சமாதிரி வந்துருக்க?" என்று கேள்விகளால் துளைத்து எடுத்தனர். எப்படி அவர்களிடம் சொல்வது " என்னை ஒரு வாசனை துரத்திக்கொண்டு வருகிறது" என்று.

அன்று மாலை அக்கா அறையில் அமர்ந்து அக்காவிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அப்பொழுது Ponds Powder அருகில் இருந்த ஒரு வெள்ளை நிற பாட்டில் என் கண்ணில்பட்டது. எதோ ஒரு பொறி தட்ட, அந்த பாட்டிலை எடுத்து முகர்ந்து பார்த்தேன். அதே வாசனை, என்னை இத்தனை நாட்களாக துரத்திக்கொண்டு இருந்த அதே பெண்ணின் வாசனை. அதில் "Palmolvi Milk Moisturizers Cream" என்று எழுதியிருந்தது.

கடைசியில் வாசனையை கண்டுபிடித்துவிட்ட சந்தோஷத்தில், அக்காவிடம் " இதை நீயும் போட ஆரம்பிச்சிட்டியா ?" என்றேன்.

அக்கா " இரண்டு வருடங்களாக Use பண்ணிகிட்டு இருக்கேன் " என்றாள்.

இரண்டு வருடங்களாக இல்லாமல், என் இப்பொழுதும் மட்டும் இந்த வாசனை புதிதாக தெரிகிறது என்று யோசிக்க அரம்பித்த என்னிடம் " உனக்கு எதோ ஆயிடுச்சு" என்று அக்கா சொல்லிவிட்டு போனாள்.

Saturday, October 10, 2009

உண்மையை சொல்

கடவுள் என் முன்னால் நின்றுக்கொண்டு இருந்தான்.

"உண்மையை சொல், நீ யார்?" என்றான்.

சாதித்து விட்ட மகிழ்ச்சியில், அவனை பார்த்து ஏளனமாக சிரித்துக்கொண்டு இருந்தேன்.

"புலியை படைத்து பயமுறுத்துவேன்" என்றான்.

"புலி இனத்தை அழித்தவர்கள் நாங்கள்" என்றேன்.

கொதிக்கும் எண்ணெய் கொப்பரையை காட்டி பயம் காட்டினான்."சென்னையில் வெயில் இதோடு அதிகம்" என்றேன் சிரித்துக்கொண்டே. என் சிரிப்பு மேலும் அவனுக்கு கோபத்தை எற்படுத்தியது.

என்னிடம் இருந்து உண்மையை வரவழைக்க அவனும் பல வழிகளை கையாண்டான். நான் அவனை பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தேன்.

கடைசியில் ஒரு மனிதனை உருவாக்கி என் கண் முன்னே நிறுத்தினான்.

நான் சகமனிதனை பார்த்த பயத்தில் "நான்தான் இந்த உலகத்தின் கடைசி மனிதன்" என்ற உண்மையை உரக்கக் கத்தினேன்.