Monday, February 28, 2011

புரிந்தும் புரியாமலும் - IV


  நான் எழுத வேண்டும், உன்னைப் பற்றி மிகவும் உயர்வாக.

உன்னைப் பற்றி எழுதும் போதெல்லாம், நான் நூறு முறையாவது யோசித்துதான் எழுதுகிறேன். எழுதியதை மீண்டும் மீண்டும் படித்து பார்க்கிறேன். நான் எழுதியது, உன்னைப் பற்றிய தவறான எண்ணத்தை  ஏற்படுத்திவிடுமோ என்று கவலைப்படுகிறேன். நான் எழுதியதுமேல் எனக்கே திருப்தியில்லாமல், எழுதியதை அழித்துவிட்டு, ஒரு சில சிறந்த வாக்கியங்களின் உதவியால் உன்னைப் பற்றி மீண்டும் எழுதுகிறேன். மீண்டும் அதே யோசனை, அதே எண்ணம், அதே கவலை, மீண்டும் மீண்டும் அழித்துவிட்டு, திரும்ப திரும்ப எழுதிப்பார்க்கிறேன்.

இதை தொலைவிலிருந்து பார்க்கும் ஒருவன் "என்னைப் பைத்தியம்" என்கிறான். எனக்கு அதைப் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லை, நான் எழுத வேண்டும், உன்னைப் பற்றி மிகவும் உயர்வாக. அவனுக்கு என்ன தெரியும் உன்னைப்பற்றி??. ஆனால், அவன் பார்க்கும் எல்லாரிடமும் சொல்கிறான் "நான் பைத்தியம்" என்று. உன்னிடம் கூட அவன் பலமுறை சொல்லியிருக்கலாம். அவன் எதையும் தெளிவாக செய்கிறான், பயமில்லாமல் செய்கிறான், அனைவரும் நம்பும்படி செய்கிறான். அவனை எல்லாரும் நம்ப தொடங்கினார்கள். ஏன்?, அதை நீ கூட நம்பியிருக்கலாம். மீண்டும் சொல்கிறேன், எனக்கு அதைப் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லை, நான் எழுத வேண்டும், உன்னைப் பற்றி மிகவும் உயர்வாக. அவனுக்கு என்ன தெரியும் உன்னைப்பற்றி?

எனக்கு நம்பிக்கை இருக்கிறது, நான் உனக்காக படைப்பேன் - உலகின் மிகச் சிறந்த காவியங்களை, உலகின் மிகச் சிறந்த அதிசயங்களை, உலகின் மிகச் சிறந்த இதிகாசங்களை. ஆனால், அதற்கு சில வருடங்கள் ஆகலாம், சில நூற்றாண்டுகள் ஆகலாம்,  ஏன், சில யுகங்கள் கூட ஆகலாம். உன்னால் அது வரை காத்திருக்க முடியுமா?? எதையும் என்னால் தெளிவாக சொல்ல முடியாது, நான் சொல்வதை நீருபிக்க கூட என்னால் முடியாது. இப்பொழுது சொல், அதுவரை உன்னால் காத்திருக்க முடியுமா??.

எனக்கு பயமாக இருக்கிறது. காரணமில்லாத பயம் அது, என்னை நானே கேட்கும் ஓராயிரம் கேள்விகளால் ஏற்பட்டப் பயம். அந்த கேள்விகள் உன்னைப் பற்றியே, அந்த கேள்விகளுக்கான பதிலை நீ சொல்வதாக நினைத்து எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்.

'உன் பதில் என்ன என்பது எனக்கு தெரியும். அந்த பதில், என்னை எந்த விதத்திலும் மகிழ்ச்சி அடைய செய்யபோவதில்லை என்பதும் எனக்கு தெரியும்."

எடுத்துக்கொள் எல்லாவற்றையும். என்னிடம் எனக்காக ஒன்றுமே இல்லை. எனக்கு உன் அன்பின் மீது எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை. நான் கைவிடப்பட்டவன். இன்று இல்லையென்றாலும் என்றோ ஒரு நாள், யாரோ ஒருவரால் நீயும் கைவிடப்படுவாய். அப்பொழுது எனக்காக நீ வருத்தப்படலாம் அல்லது என் நினைவுகள் உன்னிடம் அழிந்திருக்கலாம். எனக்கு அதைப் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லை. நான் எழுத வேண்டும், உன்னைப் பற்றி மிகவும் உயர்வாக.

இனிது இனிது

என்னதான் எல்லா திரைப்படங்களையும் முதல் வாரமே பார்த்தாலும், சில திரைப்படங்கள் மட்டும் தப்பித்துவிடுகின்றன. அப்படி தப்பித்த ஒரு திரைப்படத்தை நேற்று விஜய் டி.வி'யில் பார்க்க நேர்ந்தது. அந்த திரைப்படம் "இனிது இனிது" , இதன் ஒரிஜினல் காப்பி "Happy Days"யை நண்பன் ஒருவன் அடிக்கடி புகழ்வான், ஆனால் "Happy Days"யை இன்னும் நான் பார்க்கவில்லை.  

"இனிது இனிது" அப்படி ஒன்றும் சிறந்த திரைப்படம் இல்லைதான், ஆனால் கண்டிப்பாக நமது கல்லூரி வாழ்க்கையைத் திரும்பி பார்க்கவைக்கும் திரைப்படம். உங்களை திரும்பி பார்க்க வைத்ததோ, இல்லையோ,  என்னை திரும்பி பார்க்கவைத்தது. சமீபத்தில் வந்த "ஈசன்" திரைப்படத்தில் ஒரு கல்லூரி வாழ்க்கையை எந்தளவு மோசமாக காட்ட முடியுமோ அந்தளவு மோசமாக காட்டியிருப்பார்கள். ஆனால், எந்த கல்லூரி மாணவர்களிடம் இருந்தும் ஈசன் திரைப்படத்திற்க்கு எதிர்ப்பு வரவில்லை. வழக்கம் போல் இதையும் ஜாலியாக எடுத்துக்கொண்டிருப்பார்கள் என்று நம்புவோம். "ஈசன்" திரைப்படம் நன்றாக ஒடவில்லை என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி. இந்த திரைப்படம் மட்டும் வெற்றி அடைந்திருந்தால் அவ்வளவுதான், இன்னேரம் ஒரு பத்து திரைப்படமாவது இதைப்போல் வெளிவந்திருக்கும். நான் சொன்னதற்க்கு சிறந்த எடுத்துக்காட்டு "பருத்தி வீரன்". இந்த திரைப்படத்தின் கடைசியில் வந்த அந்த கொடூரமானக் காட்சியின் பாதிப்பில் இதுவரை எத்தனைத் திரைப்படங்கள் வந்துவிட்டன், "ஈசன்"  திரைப்படம் கூட அதன் ஒருவகையானப் பாதிப்புதான்.

"ஒரு கொடூரமானத் திரைப்படம் மட்டுமே சிறந்த திரைப்படமாக மாற முடியும்" என்று  நம் தமிழ் இயக்குனர்கள் நம்பத் தொடங்கிவிட்டார்கள். "நடுநிசி  நாய்கள்" போன்ற திரைப்படம் தமிழ் சமூகத்தில் எந்தவிதமான மோசமானப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வழக்கம்போல் எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டேன். எல்லாருடைய வாழ்க்கையைப் போலவே என்னுடைய கல்லூரி வாழ்க்கையும் மிகவும் இனிமையாது. அதை அசை போட வைத்த "இனிது இனிது" திரைப்படத்திற்க்கு நன்றி, அந்த நான்கு வருடங்களைக் கண்டிப்பாக மறக்க முடியாது. எத்தனை விதமான மனிதர்கள், எத்தனை விதமான நண்பர்கள். எனக்கு எப்பொழுதும் நண்பர்கள் எண்ணிக்கை அதிகம், சொல்லப்போனால் நான் அவர்களுக்காக ஒன்றுமே செய்திருக்கமாட்டேன். ஆனால், அவர்கள் எனக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். இது இன்றுவரை தொடர்கிறது. இதை நான் கண்டிப்பாக மிகைப்படுத்தி சொல்லவில்லை, இதற்க்கு ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன்.

கல்லூரி மூன்றாம் வருடம், வழக்கம் போல் நான் எதையோ காமெடியாக சொல்ல போக, நண்பன் ஒருவன் சும்மா என்னை ஒரு தட்டு தட்டினான். இதை பார்த்த இன்னொரு நண்பன் என்னை எப்படி அவன் அடிக்கலாம், என்று அவன் கண்ணத்தில் 'பளார்' என்று அறைந்துவிட்டான். இந்தப் பிரச்சனை பெரிதாகி அன்று மாலை கல்லூரி பின்புறம் இரண்டு கேங்குக்கிடைய சண்டையாக மாறிவிட்டது. இந்த சண்டை  நடந்துக்கொண்டிருந்த அந்த மாலைப்பொழுதில் நான் கல்லூரி கேண்டினில் ஒரு பெண்கூட அமர்ந்து 'சமோசாவும் பானி பூரி'யும் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.

இதைப்போல் எத்தனையோ உதாரணம் சொல்லிக்கொண்டே போகலாம். அப்பறம் இன்னொரு நண்பனைப் பற்றி கண்டிப்பாக சொல்ல வேண்டும். அவன் பெயர் "போனி". அவனிடம் எல்லாவற்றிக்கும் பதிலிருக்கும் ஆனால் அதை  வெளியில் காட்டிக்கொள்ள மாட்டான். "இகனாமிக்ஸ் தொடங்கி, உலகத்திரைப்படம், உலக ஆரசியல், தீவிரவாதம், பூட்பால்" என்று எல்லாவற்றையும் தெரிந்துவைத்திருப்பான். நீங்களே அவனிடம் அதைப்பற்றி பேசினால் தவிர அவன் எதைப்பற்றியும்  வாய்திறக்க மாட்டான். நானும் அவனும் பேசிக்கொள்ளாத விசயங்களே இல்லை என்று சொல்லலாம்.

இப்படி எத்தனையோ விதமான நண்பர்கள், எத்தனையோ விதமான் அனுபவங்கள். யாரையும் மறக்க முடியாது. கையில் அப்பொழுது 50 ரூபாய் இருந்தாலே அதிகம், அதையும் அப்பொழுதே காலி செய்துவிடுவோம், அடுத்த நாளைப் பற்றிய கவலை எங்கள் யாருக்குமே இல்லை. கல்லூரி அருகில் உள்ள ஹோட்டலில் ஒருவனுக்கு மட்டுமே அக்கவுண்ட் இருக்கும்,  அதில் நாங்கள் ஒரு பத்து பேராவது சாப்பிடுவோம். கல்லூரி வாழ்க்கையை பற்றி எழுதினால், ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு சொல்லிக்கொண்டே போகலாம். ஆகவே, இத்துடன் இந்தப் பதிவை முடித்துக்கொள்கிறேன்.

Monday, February 14, 2011

தன்னிரக்க கவிதை

ஒரு தன்னிரக்க கவிதையை
யாராலும் அவ்வளவு எளிதில்
எழுதி விடமுடியாது,

அதற்க்கு நீங்கள் பல ஏமாற்றங்களை
சந்தித்திருக்க வேண்டும்.

முக்கியமாக, ஒரு பெண் உங்கள் காதலை
நிராகரித்திருக்க வேண்டும்.

நம்பிக்கை துரோகம் பற்றி நண்பன்
ஒருவன் கற்பித்திருக்க வேண்டும்.

யாரை இனி பார்க்கவே கூடாது
என்று நினைத்தீர்களோ,
அவர் வீட்டு கதவை
நீங்கள் தட்டியிருக்க வேண்டும்.

குறைந்தபட்சம், இரண்டு முறையாவது
தற்கொலைக்கு முயற்சி செய்திருந்தால்
இன்னும் உசிதம்.

தோட்டத்தில் புதிதாக பூத்த பூ,
எதிர்வீட்டு குழந்தையின் புன்சிரிப்பு,
சாலையில் ஊதுபத்தி விற்க்கும் குருடன்,
ஓஷோ புத்தகங்கள்,
என்று தன்னம்பிக்கை தரும்
எல்லாவற்றையும் சில நாட்கள்
பார்க்கவே கூடாது.

முடிந்தால்
கவிதையின் முடிவில்
இது ஒரு தன்னிரக்க கவிதை
என்று முடியுங்கள்.

கதாபாத்திரங்களின் உரையாடல் - II


என்னுடைய "கதாபாத்திரங்களின் உரையாடல்" கதையில் காணாமல் போன மூன்றாவது குமாரை கண்டுபிடித்து மீண்டும் உயிர் கொடுக்கும் முயற்சிகளை செய்துக்கொண்டு இருக்கிறேன். நேற்று நண்பன் ஒரு விசயத்தை நினைவுப்படுத்தியதற்க்கும், நான் இன்று மூன்றாவது குமாரை தேடத் தொடங்கியதற்க்கும் ஒரு முக்கியமான சம்மந்தம் இருக்கிறது. " ஒரு காலத்தில் சரவண வடிவேல் என்கின்ற நான் வலைப்பதிவில் கதைகள் எழுதிக்கொண்டிருந்தேன் " இதுதான் நண்பன் எனக்கு நினைவுப்படுத்தியது. நான் உடனே என் கதைகளில் வருகின்ற கதாபாத்திரங்களை தேடத் தொடங்கினேன்.

கிட்டத்தட்ட கதைகள் எழுதி நான்கு மாதங்கள் மேலானதால், அவர்களை தேடிக்கண்டுபிடிக்க ரொம்ப கஷ்டமாகவே இருந்தது. சிலர் என்னை மறந்தே விட்டனர். நான்தான் உங்களை உருவாக்கினேன் என்பதை  சொன்னபோது, அவர்கள் என்னைப்பார்த்து சிரிக்கவே செய்தனர். அவர்கள் என்னை மறந்ததால், நானும் அவர்களை மறந்துவிட முடியுமா என்ன??.

என்ன காரணம் என்றே தெரியாமல் என்னை தவிர்க்க தொடங்கிய ஒரு பெண்னை மறக்க முடியாமல்,  தினமும் இரவில் முழித்துக்கொண்டு எதாவது புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். அப்படிப்பட்ட நான், எப்படி என் கதாபாத்திரங்களை மறக்க முடியும். என் கதாபாத்திரங்கள் மீது நான் அக்கரைக்காட்டவில்லை என்றால், பின் யார்தான் அவர்களுக்கு அக்கரைக்காட்டுவது.

அசோக்கை பற்றி விசாரிப்பதுதான் எனக்கு மிகவும் சிக்கலாக இருந்தது. உங்களை பற்றி நீங்களே மற்றவர்களிடம் விசாரிக்கும் போது, அவர்கள் உங்களை பைத்தியம் என்று எண்ணக்கூடும். இப்பொழுது அசோக் முன்னர்போல் இல்லை, தினமும் ஒரு குவாட்டர் அடித்து பின்னர்தான் தூங்க செல்கிறான். அவனது அறையில் புதிதாக இரண்டு உதவி இயக்குனர்கள் சேர்ந்திருப்பதால், எல்லா திரைப்படங்களையும் முதல் நாளே பார்க்கவேண்டியதாயிருக்கிறது. இனிமேல் அந்த இரண்டு உதவி இயக்குனர்களையும் என் கதையில் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு பெயர் கூட முடிவுசெய்துவிட்டேன்.  ஒருவன் பெயர் அரவிந்த், இன்னொருவன் நாகு. பெயர் பிடிக்காதவர்கள் என்னிடம் தனியாக போன் செய்து சொல்லலாம்.

இதைப்போல்,  சில கதாபாத்திரங்களை தேடிக்கண்டுபிடித்த போது, அவர்களுடன் இன்னும் சிலரும் புதிதாக சேர்த்துக்கொண்டார்கள்.  (எ.டு) காவ்யாவிற்க்கு  இப்பொழுது கல்யாணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது. நான்கு மாத இடைவெளியில் எப்படி குழந்தை பிறக்கும் என்ற அறிவுபூர்வமான கேள்வியை நீங்கள் கேட்பீர்கள் என்றால், தயவு செய்து இந்த பாராவுடன் படிப்பதை நிறுத்திவிட்டு, என் வலைப்பதிவை மூடிவிடுங்கள். " வாசகர்கள் என்னைவிட அறிவாளியாக இருப்பதை நான் ஒருபொழுதும் விரும்புவதில்லை ".

நான் அசோக்கை பார்த்துவிட்டு திரும்பிய போது, "இனி தன்னைப் பற்றி எதுவும் எழுத வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டான். வேண்டுமானால், இந்த நாகு, அரவிந்த, பேரின்பா இவர்களைப்பற்றி எழுதிக்கொள் என்கிறான்.

இப்படி எல்லாரையும் தேடி கண்டுபிடித்தும், அந்த மூன்றாவது குமாரை மட்டும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அவனைப் பற்றி விசாரித்த போது,  அது போல் ஒருவனே இல்லை அது ஒரு கற்பனை என்றாள் கவிதா. கவிதாவே ஒரு கற்பனைத்தானே, அவள் மட்டும் இருக்கும் போது எப்படி மூன்றாவது குமார் காணாமல் போக வாய்ப்பிருக்கிறது???.  ஆனால், இந்த கவிதாவையும் நம்ப முடியாது,  இவள்தான் ஒருமுறை என்னிடம் கூறினாள், "உன் கதையில் வரும் பெண் யார் என்று எனக்கு தெரியும்", இவள் இப்படி சொல்லியபின் எனக்கு எதாவது ஒருவகையில் உதவுவாள் என்று நினைத்தேன். ஆனால்..... சரி அதை விடுங்கள், அது அசோக்கின் சொந்த பிரச்சனை.

எனக்கு, மூன்றாவது குமாரை காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்க ஆசையில்லை. ஆகவே அவனை எப்படி மீண்டும் கொண்டுவருவது என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் மூன்றாவது குமாருடன் சந்திக்கிறேன்.

Wednesday, February 2, 2011

டைரக்டர் ராமின் பேட்டி

எனக்கு பிடித்த டைரக்டர்களில் "கற்றது தமிழ்" ராமும் ஒருவர். எனக்கு எப்பொழுதுமே ஞாபகச்சக்கி கொஞ்சம் கம்மி, ஆனால் "கற்றது தமிழ்" படத்தின் அனைத்து வசனங்களும் எனக்கு நினைவில் இருக்கிறது. என்னை பொறுத்தவரை எனக்கு இது ஒரு ஆச்சர்யமான விசயம்.


டைரக்டர் ராம் மனோன்மனியம் சுந்தரனார் கல்லூரியில் பேசியதின் ஒரு பகுதி. கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய வீடியோ.